PDA

View Full Version : நம்பிக்கை....



பாரதி
12-05-2005, 04:33 PM
தேதியில்லா குறிப்புகள்

நம்பிக்கை....
இம்முறை ஒரு பேருந்து பயணம்... ஒரு நாள் மாலை நேரம்... மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். பேருந்தில் அதிகம் கூட்டமில்லை. பேருந்து பந்தல்குடியை நெருங்கிக் கொண்டிருந்தது.

பேருந்தில் பின்பக்கம் இருந்த சிலர் " கண்டக்டரே.. என்னமோ வாசன அடிக்குது... என்னான்னு கொஞ்சம் பாருங்க" - என்றார்கள். அவர் கண்டு கொள்ளவே இல்லை.

சில நிமிடங்கள் கழித்து, பேருந்து எதன் மீதோ ஏறி இறங்கியது போன்று ஒரு சத்தம். ஓட்டுநர் எதைப்பற்றியும் கவலைப்படாதவராக பேருந்தை ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தார்.

திடீரென்று பேருந்தின் பின்புறமிருந்து ஒரு கூக்குரல்... "ய்யோவ்.... டீசல் டேங்க் அங்கன கெடக்குது.. அது மேல வண்டிய ஏத்திப்பிட்டீங்களே...!"

பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர். பேருந்திலிருந்து இறங்கிப்பார்த்தால் நசுங்கிப்போன உருளை போல, சாலையின் நடுவில் "டீசல் டேங்க்" கிடந்தது.

ஆளுக்காள் பேருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்தும், சோதனைகள் குறித்தும் பலவிதமாக பேசிக்கொண்டே இறங்கினர். முன்கூட்டி சொல்லியும், சரியாக கவனிக்காத ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் வார்த்தை அபிசேகம் நடந்தது.

மீதி பயணத்துக்கான பணத்தை நடத்துநரிடம் இருந்து பெற்றுக்கொள்ள பெரும்பாலோர் விரும்பினர். ஆகவே அவரும் பயணத்தூரத்திற்கான கட்டணம் போக மீதியை அனைவருக்கும் வழங்கினார்.

நேரமும் இரவு ஏழு மணியைப் போல ஆனதால், வெளிச்சமும் நன்றாக குறைந்து விட்டது. அங்கேயே நிற்பதை விட, பந்தல்குடி அருகில்தான் இருந்தது; அவ்வழியே வரும் பேருந்துகள் பெரும்பாலும் "ஹோட்டல் லக்கி"யில் இளைப்பாறித்தான் ( ! ) செல்லும் என்பதால் அங்கு சென்று விடலாம் என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர் பயணிகள்.

நானும் நடக்க ஆரம்பித்தேன். அப்போது சற்று அழுக்கான ஆடை அணிந்த ஒரு இளம்வயது நபர் என்னிடம் பேச முற்பட்டார். அவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது தோற்றத்தால் புலனானது. அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய மஞ்சள்பையைத் தவிர அவரிடம் வேறொன்றுமில்லை.

ஹிந்தியில் கேட்டார் - "தூத்துக்குடி செல்ல எங்கு பேருந்து கிடைக்கும்?"

ஒரே நாட்டில் இருக்கும் சக மனிதர்களிடம் உரையாட ஒரு பொது மொழி தேவை. ஒரு வேளை நாட்டில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு தமிழ் தெரிந்திருக்கும் எனில் மீதம் இருக்கும் மக்களிடம் கண்டிப்பாக தமிழின் அவசியத்தை வலியுறுத்தி, தமிழைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என் கருத்து. அதே போல தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் ஹிந்தி பெரும்பான்மையாக பேசப்படுவதால் தமிழர்களும் ஒரு தொடர்பு மொழியாக ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்தேன் நான். அதன் காரணமாக வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில், ஓரிரு வருடங்கள் மாலையில் கற்பிக்கப்படும் வகுப்புகளில் சொல்லித்தரப்பட்ட ஹிந்தியை வைத்துக்கொண்டு.. அவர் பேசியதை சற்று புரிந்து கொண்டு பதிலளிக்க முற்பட்டேன்.

என்னுடைய அரைகுறை ஹிந்தியை கேட்டு அவர் மகிழ்ந்தார். என்றாலும் என் பேச்சை அவர் நம்பவில்லை என்பது தெரிந்தது. எதற்காக அந்த வடநாட்டவர் வந்திருப்பார் என்று எனக்கு விளங்கவில்லை. அவருக்கு புரியும் படி அல்லது அவருக்கு புரியும் என்று நான் நினைத்துக்கொண்டதை கூறி விட்டு, பந்தல்குடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

லக்கி உணவகத்தை அடைந்த நேரம்; அங்கு நின்ற கொண்டிருந்த ஒரு வேன் எட்டையாபுரத்திற்கு உடனே செல்வதாகவும், பேருந்து பயணக்கட்டணம் எவ்வளவோ அதைத் தந்தால் போதும் எனவும் அதிலிருந்த ஓட்டுநர் தெரிவித்தார். விரைவில் செல்லலாம் என்கிற நம்பிக்கையில் நானும் ஏறிக்கொண்டேன். அப்போதுதான் அந்த வடநாட்டைச்சேர்ந்தவரும் என்னைப்பின் தொடர்ந்திருக்கிறார் என்று தெரிந்தது.

அவரை அழைத்து விபரம் சொன்னேன்... அவருக்கு நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. பயணக்கட்டணம் குறித்து அழுத்திக்கேட்டார். மிகுந்த தயக்கத்திற்கு பின்னர் ஏறிக்கொண்டார். என் அருகிலேயே அமர்ந்தார். வாகனம் செல்லும் போது அவருடன் நானாக பேச்சு கொடுக்க முற்பட்டேன். என்னுடைய அரைகுறை ஹிந்தியைத் தொடர்ந்தேன்.

நான் பார்த்திருந்த வெகுசில வடநாட்டு திரைப்படங்களைப்பற்றியும், அதில் வந்த பாடல்களைப்பற்றியும் பேச ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அவரும் என்னுடன் தயக்கமில்லாமல் உரையாட ஆரம்பித்தார். மொழிப்பிரச்சினை காரணமாக ஒவ்வொரு கேள்வியை கேட்பதிலும், பதில் அளிப்பதிலும் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

எட்டையாபுரம் வந்து சேர்ந்தோம். அப்போது பேருந்து நிலையத்தின் எதிரே இருந்த கூட்டுறவு பால்பண்ணையின் தேநீர் விடுதி மிகவும் பிரபலமாக இருந்தது. அங்கு உண்மையாகவே பால் நன்றாக இருக்கும். அங்கு பால் சாப்பிட அவரையும் அழைத்தேன். அவர் மறுத்து விட்டார்.

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்து சாலையில் வந்து நின்றது. நாங்களும் அதில் ஏறிக்கொண்டோம். எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே நான் சென்ற வடநாட்டு சுற்றுப்பயணத்தைக் குறித்தும், அதில் நான் கண்ட இடங்களைப்பற்றியும் கதையளக்க ஆரம்பித்தேன். ஒரிசாவில் இருக்கும் புவனேஸ்வரில் இருப்பதாகவும், தூத்துக்குடியில் உள்ள ஒரு நபரை சந்திக்க செல்வதாகவும் கூறினார். கதைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

தூத்துக்குடி நகரை பேருந்து நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர் வந்த நோக்கத்தை சொன்னார். தூத்துக்குடியில் உப்பு வாங்க வந்திருப்பதாக சொன்னார். வழக்கமாக அவர் தந்தை வருவார் என்றும், அவருக்கு உடல்நலமில்லாததால் அவர் வந்திருப்பதாகவும் சொன்னார். அடுத்த தினம் சம்பந்தப்பட்ட உப்பு விற்பனையாளரிடம் பேசி முடித்து விட்டால், புகைவண்டி மூலம் ஒரிசாவிற்கு உப்பு வந்து விடும் என்கிற விபரத்தை விளக்கினார். ஹோட்டல் அசோக்பவனில் தங்க அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார். இதை ஏன் முன்னரே சொல்லவில்லை என்று வினவினேன். அதற்கு அவர் யாரையும் தெரியாமல் நம்பக்கூடாது என்பதால் முழு விபரத்தையும் சொல்லவில்லை என்றார்.

பேருந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்தை அடைந்தது. அதிலிருந்து இருவரும் இறங்கினோம். தமக்கு உதவியதற்காக நன்றி கூறிய அவர் தனது பெயர் பிருத்விராஜ் அகர்வால் என்றும், தமது தந்தையார் பெயர் கியான்சந்த் அகர்வால் என்றும் விபரம் கூறினார். முகவரியைத் தந்து புவனேஸ்வர் வந்தால் தம்மை அவசியம் சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பழைய புகைவண்டி நிலையத்தின் அருகே உள்ள கடைவீதியில் யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள் என்றும் மேலதிக விபரம் சொன்னார். அவர்கள் பணக்காரர்களா என்று வினவினேன். ஆம் என்று சொல்லும் விதமாக தலையசைத்தார்.

கையிலிருந்த பழைய பையைப் பார்த்து அவருடைய உடைகள் வைத்திருக்கிறாரா என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, ஒரு பாதுகாப்பு காரணமாக அந்த கோலத்தில் வந்ததாக சொன்ன அவர் அடுத்து சொன்னார் - "உப்பு வாங்குவதற்காக இதில் மூன்று லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன்". அவர் ஆரம்பத்தில் என்னை நம்பாததற்கான காரணம் எனக்கு இப்போது விளங்கியது.


-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்

அன்புரசிகன்
06-01-2008, 04:41 PM
சில எளிமையான நடப்புக்கள் பாதுகாப்பை தானாகவே தோற்றுவிக்கும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இவ்வகையான முன்னெச்சரிக்கைகளை முன்பும் நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். பகிர்வின் முறை அசத்தல்....

இளசு
06-01-2008, 07:30 PM
உப்புப்பெறாத விஷயத்தைக் கூடச் (!) சுவையாகச் சொல்ல வல்ல பாரதி..
உப்பு வாங்க வந்த லட்சாதிபதியின் ஜாக்கிரதை கோலம் +நடத்தையை
இத்தனை சுவையாகச் சொன்னதில் வியப்பில்லை..

வாழ்வின் அடிநாத சேதிகள் சொல்லும் இந்தத் தேதியில்லா குறிப்புகள்
வளர்பிறை மட்டும் கண்டு வளர வாழ்த்துகள் பாரதி!

இளந்தமிழ்ச்செல்வன்
06-01-2008, 07:55 PM
தலைப்புதான் என்னை ஈர்த்தது. கடைசியில்தான் பொருள் விளங்கியது.
சுவாரஸ்யமாக சொன்னீர்கள்.

யவனிகா
07-01-2008, 03:23 AM
நாம் தினமும் காணும் மனிதர்களில் சிலர் மிகவும் சுவாரசியமான கதாபாத்திரங்களாக அமைந்து விடுகிறார்கள்...சில நேரம் மிகச் சாதரணமானவர் தானே...என்று நினைத்து பேச ஆரம்பிப்பவர்கள்...சில நிமிடங்களில் மனதில் ஒரு பிரம்மாண்டத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.இன்னும் சிலரைப் பற்றிப் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி விடுகிறது. எந்த ஒரு அனுமானமுமின்றி யாரிடமும் பழக முடிவதில்லை. மனம் அதற்கே உரிய வேகத்துடன் சரியோ தவறோ எதிரில் இருப்பவரை நம் அனுமதியின்றே அனுமானித்து அதை புத்தியிலும் ஏற்றி வைத்து விடுகிறது.

எல்லோருடன் எடுத்தவுடனேயே ஈஸியாகப் பழகவும், சகஜ நிலையை ஏற்படுத்தவும் கண்டிப்பாக ஒரு திறமை வேண்டும்.

பிருத்திவி ராஜ், அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப்பட்டது தெரியாமலேயே இன்னும் உப்பு வாங்க வருகிறாறோ என்னவோ....இல்லை அவரது மகன் அழுக்குப் பையில் லட்சங்களை...அடையாளங்களே இல்லாமல் சுமந்து வர ஆரம்பித்திருப்பானோ...

பாரதி
07-01-2008, 03:35 PM
சில எளிமையான நடப்புக்கள் பாதுகாப்பை தானாகவே தோற்றுவிக்கும் என்பது இதிலிருந்து புலனாகிறது. இவ்வகையான முன்னெச்சரிக்கைகளை முன்பும் நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். பகிர்வின் முறை அசத்தல்....
உண்மைதான் அன்பு. எளிமை அதே சமயம் திறமையும் இருக்கிறது. இதை ஒரு சிலர் அசட்டுத்தைரியம் என்று எண்ணக்கூட வாய்ப்பிருக்கிறது. மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கும், மேலெழுப்பியமைக்கும்.


உப்புப்பெறாத விஷயத்தைக் கூடச் (!) சுவையாகச் சொல்ல வல்ல பாரதி..
வாழ்வின் அடிநாத சேதிகள் சொல்லும் இந்தத் தேதியில்லா குறிப்புகள்
வளர்பிறை மட்டும் கண்டு வளர வாழ்த்துகள் பாரதி!
அண்ணா... ஏன் காய்ச்சுகிறீர்கள்.! எப்போதையும் போல உங்களின் அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன்..? இப்போதைக்கு தேய்பிறை காலத்தில் இருக்கிறது குறிப்பு.. ஹஹஹா...


தலைப்புதான் என்னை ஈர்த்தது. கடைசியில்தான் பொருள் விளங்கியது.
சுவாரஸ்யமாக சொன்னீர்கள்.
இனிய பின்னூட்டத்திற்கு நன்றி இ.த.செ.


நாம் தினமும் காணும் மனிதர்களில் சிலர் மிகவும் சுவாரசியமான கதாபாத்திரங்களாக அமைந்து விடுகிறார்கள்...சில நேரம் மிகச் சாதரணமானவர் தானே...என்று நினைத்து பேச ஆரம்பிப்பவர்கள்...சில நிமிடங்களில் மனதில் ஒரு பிரம்மாண்டத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.இன்னும் சிலரைப் பற்றிப் போட்ட கணக்கு தப்புக் கணக்காகி விடுகிறது. எந்த ஒரு அனுமானமுமின்றி யாரிடமும் பழக முடிவதில்லை. மனம் அதற்கே உரிய வேகத்துடன் சரியோ தவறோ எதிரில் இருப்பவரை நம் அனுமதியின்றே அனுமானித்து அதை புத்தியிலும் ஏற்றி வைத்து விடுகிறது.

எல்லோருடன் எடுத்தவுடனேயே ஈஸியாகப் பழகவும், சகஜ நிலையை ஏற்படுத்தவும் கண்டிப்பாக ஒரு திறமை வேண்டும்.

பிருத்திவி ராஜ், அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதப்பட்டது தெரியாமலேயே இன்னும் உப்பு வாங்க வருகிறாறோ என்னவோ....இல்லை அவரது மகன் அழுக்குப் பையில் லட்சங்களை...அடையாளங்களே இல்லாமல் சுமந்து வர ஆரம்பித்திருப்பானோ...

அருமையான பின்னூட்டம் யவனிகா..! மிக்க நன்றி. நீங்கள் கூறி இருப்பது உண்மைதான். மன்றத்தில் இருக்கும் பலரிடமும் பழகுவதற்கு முன் இருந்த எண்ணம், பல தடவை மாறி இருக்கிறது. எண்ணியதை விடவும் எளிமையாய், இனிமையாய், திறமையாய் இருக்கும் உறவுகளைக் கண்டு புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன்.

தன்னம்பிக்கையை மனதில் சுமந்து வருபவர்களின் அழுக்குப்பையிலும் ஆயிரங்கள் இருக்கக்கூடும். நீங்கள் கூறிய படியே அந்த சம்பவங்கள் இன்னும் நடக்கிறதோ என்னவோ..! நன்றி உங்கள் கருத்துக்கு.