PDA

View Full Version : நிச்சயமாக கனவு இல்லை..!



பாரதி
12-05-2005, 04:19 PM
தேதியில்லா குறிப்புகள்


நிச்சயமாக கனவு இல்லை..!


இது நிச்சயமாக கனவு இல்லை. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருக்கும். பெரும்பாலும் நள்ளிரவில் வலைத்தளங்களில் உலாவுவது என் வழக்கம். அப்போதெல்லாம் ஏதாவது "அரட்டை அறை"களுக்கு சென்று யாருடனாவது புனைப்பெயர்களில் கதைப்பது என்பதும் நடைமுறையில் இருந்து வந்தது.

ஒரு நாள் நள்ளிரவு அல்லது அதிகாலை இரண்டு மணி இருக்கும். "தமிழ்மூவீஸ்ஆன்லைன்" வலைத்தளத்தின் அரட்டை அறை என்று எண்ணுகிறேன். வழக்கம் போல வலைத்தளங்களைப் பார்வையிட்டுக்கொண்டே அரட்டை அறையிலும் இருந்தேன்.

ஒரு நபர் தானாக பேச அழைத்தார். அவரது பெயர் ஒரு பெண்பாலாக இருந்தது. அவரது உரையாடல் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை - ஒரு வேளை "சாதனா"வாக இருக்கக்கூடும். அவர் சரளமாக உரையாட ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த தட்டச்சு உரையாடலை என் நினைவிலிருப்பதைக்கொண்டு தமிழில் சொல்கிறேன்.

அவர் : நலமா...? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இந்த நேரத்தில்?

நான்: நலம். நீங்கள் யார்?

அவர்: நான் ரம்பாலி நாயக். (அல்லது ராம்பலி நாயக் ) உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா...?

நான்: எனக்கு நம்பிக்கை எல்லாம் இல்லை.

ரம்பாலி நாயக்: ஏன் அப்படி?

நான்: எந்த ஒரு விசயத்தையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ரம்பாலி நாயக்: ஜோதிடமும் ஒரு விஞ்ஞானம்தான்.

நான்: என்னால் முழுமையாக நம்ப முடியாது.

ரம்பாலி நாயக்: உங்களை பற்றி சொல்லவா..?ம்ம்.. உங்கள் பெயர்...

நான்: என் பெயர் ................

ரம்பாலி நாயக்: ஏன் அவசரப்பட்டீர்கள்...? நானே உங்கள் பெயரைச்சொல்லி இருப்பேனே... சரி..பரவாயில்லை.

நான்: அப்படியா...?

ரம்பாலி நாயக்: உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று சொல்லவா..?

நான்: சொல்லுங்கள்.

ரம்பாலி நாயக்: உங்களுக்கு மூன்று குழந்தைகள்.. முதல் குழந்தை கருவில் தங்கி இருக்காது.

நான்: (உண்மையிலேயே ஆச்சரியத்துடன் ) ஆமாம்.

ரம்பாலி நாயக்: மற்ற இருவரும் ஆண்குழந்தைகள்தானே..

நான்: ஆமாம்.

ரம்பாலி நாயக்: இப்போது நீ வேலை பார்க்கும் இடத்தில் உனக்கு திருப்தி இருக்காதே..?

நான்: ஆமாம்.. என்ன செய்யலாம்? எவ்வளவுதான் உண்மையாக வேலை செய்தாலும் மதிப்பே இல்லை. நம்புபவர்களும் இல்லை.

ரம்பாலி நாயக்: வேறு புதிய வேலையை தேட முயற்சி செய். கிடைக்கும்.

நான்: எங்கு வேலை தேடலாம்?

ரம்பாலி நாயக்: மத்தியகிழக்கு...ம்ம்... ஜோர்தான் அல்லது சிங்கப்பூர்.

நான்: கிடைக்குமா..?

ரம்பாலி நாயக்: முதலில் முயற்சி செய்.

நான்: இங்கேயே வேலையைத் தொடர்ந்தால் என்ன?

ரம்பாலி நாயக்: தொடரலாம். ஆனால் மரியாதை இருக்காது. உடனே வேறு வேலையில் சேர முயற்சி செய். கண்டிப்பாக கிடைக்கும்.

நான்: எனக்கு அமைதியில்லாமல் இருக்கிறது... நெருங்கிய நண்பர்கள் யாரும் அருகில் இல்லை... அடிக்கடி கோபம் வருகிறது.

ரம்பாலி நாயக்: குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்..?

நான்: நலமாக இருக்கிறார்கள்.. அவர்களின் எதிர்காலம் எப்படி?

ரம்பாலி நாயக்: அவர்கள் முத்துகளாக வருவார்கள். அவர்களை ஒன்றும் சொல்ல வேண்டாம். படிப்பதற்கு மட்டும் வழிகாட்டினால் போதும். பிற்காலத்தில் நட்சத்திரங்கள் போல ஒளிவீசுவார்கள்.

நான்: நீங்கள் யார்..?

ரம்பாலி நாயக்: நான் ரம்பாலி நாயக்.

நான்: எங்கு இருக்கிறீர்கள்?

ரம்பாலி நாயக்: இப்போது புதுதில்லியில்

நான்: உங்கள் தொலைபேசி எண் என்ன?

ரம்பாலி நாயக்: உனக்கு அது தேவை இல்லை.

நான்: ஏன் என்னுடன் பேசுகிறீர்கள்?

ரம்பாலி நாயக்: எனக்கு இடப்பட்ட கட்டளை.

நான்: யார் இட்டது?

ரம்பாலி நாயக்: சொல்ல எனக்கு அனுமதி இல்லை.

நான்: உங்களை நான் எப்படித் தொடர்பு கொள்வது?

ரம்பாலி நாயக்: தேவைப்பட்டால் நானே வருவேன்.

நான்: உங்கள் உதவி தேவை என்று அஞ்சல் அனுப்ப விரும்பினால்..மின்னஞ்சல் முகவரியாவது கொடுங்கள்.

ரம்பாலி நாயக்: உனக்குத் தேவையில்லை.

நான்: தயவு செய்து கொடுங்கள்.

ரம்பாலி நாயக்: என்னை சங்கடப்படுத்தாதே... சரி. ரம்பாலிநாயக்@யாஹ.காம்

நான்: ஒரு வேளை எனக்கு மிகவும் அவசரம் எனில் எங்களை எப்படித்தொடர்பு கொள்ள..?

ரம்பாலி நாயக்: உனக்கு தேவைப்படாது. தேவைப்படும் சமயத்தில் நான் அங்கிருப்பேன்.

நான்: நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.

ரம்பாலி நாயக்: ம்ம்.. தேவையில்லை. உடன் பதில் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இந்த நேரத்தில் இணையத்தொடர்பு துண்டிக்கப்பட அவசர அவசரமாக மீண்டும் இணைப்புக்கு முயற்சி செய்து வலைத்தளத்திற்கு வந்தேன்.

என்னுடன் உரையாடிய அந்த பெயர் அங்கேயே இருந்தது.. அப்பாடா.. நல்ல வேளை... இன்னும் நிறைய பேசலாம் என்று முயற்சித்தால்...! அதே பெயரில் இப்போது வந்த நபரின் உரையாடல் முற்றிலும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.. மொழி நடையும், உச்சரிப்பும்...(தட்டச்சில் ) மிகவும் வேறுபட்டிருந்தது. மீண்டும் மீண்டும் என் கேள்விகளைத் தொடுக்க அந்த நபர் "மன்னிக்கவும். நீங்கள் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உரையாடுகிறீர்கள்" என்று கூறி என்னுடன் உரையாடுவதைத் தவிர்த்து விட்டார்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அன்று என்னால் உறங்கவே முடியவில்லை. அவர் சொன்ன முகவரிக்கு பெயருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அது பிழையான முகவரி என்று வந்தது! தொடர்ந்து சில தினங்கள் அந்த அரட்டை அறைக்கு சென்று பார்த்தேன். ஆனால் ரம்பாலி நாயக் வரவே இல்லை. சில மாதங்களில் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.

அந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்குப் பின்னர் சென்னை - அடையாரில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த ஒரு நேர்முகத்தேர்வு - "வெயின் பார்மசூட்டிக்கல்ஸ்" என்கிற அமெரிக்க நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்காக நடைபெற்றது. ஒரு சீனர் என்னை நேர்காணல் செய்தார். ஐந்து நிமிட பேட்டிக்கு பிறகு என்னை தேர்வு செய்திருப்பதாக தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் தேர்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில், சில தவணைகளில் இந்திய மதிப்பில் கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய், வேலையில் இணைந்த பின்னர், தேர்வு செலவுக்காக கட்ட வேண்டும் என்று நேர்காணல் தேர்வுக்கு அழைத்திருந்த மனித வள நிறுவனம் சொன்னதும் எனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. அத்தொகை எனக்கு மிகவும் அதிகமானதாக இருந்தது. பணம் கொடுத்துதான் வேலையில் சேர வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. ஆகவே அந்த வேலையில் சேர முடியாமல் ஆனது.

சில மாதங்களுக்குப் பின்னர் ரமதான் மாதத்தின் ஒரு நாளில், அபுதாபியில் பிரபல அரசு எண்ணெய் நிறுவனமான "ஜாட்கோ" (ஜாக்கும் டெவலப்மெண்ட் கம்பெனி )-வில் நடைபெற்ற ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். நேர்முகத்தேர்வுக்காக அபுதாபி சென்று ஓரளவுக்கு நல்ல முறையில் தேர்வில் பதிலளித்தேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அங்கு வேலையிலும் சேர்ந்தேன். ஆனால் உடனடியாக ரம்பாலிநாயக்கின் நினைவு எனக்கு வரவில்லை.!

எப்போதாவது ரம்பாலிநாயக்கின் நினைவு வரும் போது, மன்றத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பியது இன்றுதான் கைகூடி இருக்கிறது.

என் மனதில் இந்நிகழ்ச்சி சற்று குழப்பத்தை உண்டு பண்ணியது. இன்று வரை இதை என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்க முடியவில்லை...! உங்களில் சிலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?


-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்

மதுரகன்
22-01-2007, 05:23 PM
ஆச்சரியப்படக்கூடிய சம்பவம்தான்...

leomohan
22-01-2007, 05:29 PM
ஹா. ஆச்சர்யம் தான்.

இளசு
22-01-2007, 07:25 PM
பாரதி

சட்டென இதைத் 'தற்செயல்' என ஒதுக்கவும் இயலவில்லை.
அமானுஷ்ய சக்தி கொண்டவர்கள் இணைய ஊடகத்தைப் பயன்படுத்தி
தம் சக்தியை வெளிப்படுத்தினார் என ஒப்பவும் இயலவில்லை..

சில விஷயங்கள் வாழ்வின் இறுதிவரை அவிழ்க்கப்படாத புதிராகவே..

(இதை இன்னொரு தேதியில்லா குறிப்புக்கும் சொல்லியிருக்கிறேன்)

விரைவில் உன் இணையவசதியும், படைப்பு உந்தும் சேர்ந்து
உன் பல்வகை, பல்சுவைப் பதிவுகளைத் தொடரவேண்டும் என்பது என் ஆசைக்கட்டளை..

(நானும் அறிவியல் மைல்கற்களை மீண்டும் நடத் தொடங்கவேண்டும்.)

மேலெழுப்பிய மதுரகனுக்கு நன்றி.

அறிஞர்
22-01-2007, 10:01 PM
வித்தியாசமான அனுபவங்கள்...

சிலருக்கு.... இது மாதிரியாக செயல்களை, காரியங்களை குறிப்பிடுவது சதாரண விசயம்.

ஆன்மீக வல்லமையால், சரியாக கணித்து கூறும் பலரை.. நான் கண்டிருக்கிறேன்..

farhan mohamed
23-01-2007, 09:01 AM
நம்பமுடியாத அதிசயம்தான் !!

மனோஜ்
23-01-2007, 09:05 AM
எதிர்பார்த்து நடப்பதல்ல கடவுள் செயல்
என் நடந்தது செல்லமுடியாது
எப்படி நடந்து தொரியாது ?
இதுவே இதன் பதில்கள் இல்லையா.... பாரதி அவர்களே

ஷீ-நிசி
23-01-2007, 10:26 AM
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனசு அப்படியே ஒரு மாதிரி பிசைகிறது. கைகளின் ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன. எனக்கு இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

ஓவியா
23-01-2007, 03:02 PM
அடியாத்தி, மிகவும் அதிசயமா தான் இருக்கு

Narathar
23-01-2007, 04:28 PM
உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம்.................

ஓவியன்
26-02-2007, 05:58 AM
இதனை எப்படி எடுத்துக் கொள்வதென்றதெரியவில்லை?

ஆனாலும் நீங்கள் சொல்வதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

என்ன இருந்தாலும் உங்களுக்கு நன்மை தானே நடந்தது எனவே கவலைப் படவேண்டியதில்லை தானே!

பாரதி
26-03-2007, 06:20 PM
தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.

மேலெழுப்பி கருத்துக்கள் தந்த மதுரகன், மோகன், அண்ணா, அறிஞர், பர்ஹான் மொஹம்மட், மனோஜ் அலெக்ஸ், ஷீ-நிசி, ஓவியா, நாரதர், ஓவியன் - அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இப்பதிவு குறித்து பல கருத்துக்கள் பழைய திஸ்கி மன்றத்திலேயே உள்ளன.

நண்பர்களே, உங்களில் யாருக்கேனும் இப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்தது உண்டா..??

அன்புரசிகன்
06-01-2008, 04:31 PM
அதிசயம் ஆனால் உண்மை என்பார்களே... அது இதுதான். என் வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் இதுவரை நிகழவில்லை. ஆனால் ஒருவிடையம் உண்டு. அந்த காலக்கெடுவிற்குள் நிகழ்ந்தால் கூறுகிறேன். :D

பாரதி
07-01-2008, 04:25 PM
என் வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் இதுவரை நிகழவில்லை. ஆனால் ஒருவிடையம் உண்டு. அந்த காலக்கெடுவிற்குள் நிகழ்ந்தால் கூறுகிறேன். :D

ஆஹா..! சொல்லுங்க அன்பு. இப்போது சொல்லுங்களேன் _ அந்தக்கால கெடுவிற்குள் நடக்கிறதா இல்லையா என்று நாங்களும் காண்போமே..! தொடர்ந்து பல பதிவுகளை மேலெழுப்பியதற்கு மிக்க நன்றி.

rocky
08-01-2008, 05:49 AM
அன்புள்ள பாரதி அண்னா,

நீங்கள் கூறியிருப்பதை நான் நம்புகிறேன், காரணம் என் வாழ்வில் நான் இரண்டு முறை இவ்வாறு அதிசயமாக நிக்ழ்திருக்கிறது, அதைக் கூறும்முன் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதையும் கூறிவிடுகிறேன், காரணம் நான் கூறுவதையும் சேர்த்து பார்க்கும் பொழுது இது ஒரு மூடத்தனமாக தோன்றினாலும் தோன்றலாம். எனக்கு ஜோசியத்திலும் நம்பிக்கை இல்லை, அத்ற்கு காரணம் என் படிப்பு அதனால்தான் நிருத்தப்பட்டது, பத்தாம் வகுப்பு இருதித்தேர்வுக்கு ஒரு மாதம் முன்பு வரை நான் ஒரு சாதாரண மாணவன் (Avarage Student) அதுவரை என் மதிப்பென் நாற்பது முதல் அதிக பட்சமாக அருபது விழுக்காடுதான், என் வகுப்பு ஆசிரியருக்கு என்மேல் ஒரு தனி பிரியம் உண்டு காரணம் மற்ற பாடங்களில் நான் சுமாராக இருந்தாலும் கணக்கில் நல்ல மாணவன், வகுப்பிலும் தேர்விலும் முதலில் கண்க்கை முடித்துவிடுவேன், அது தவிர அவரிடம் தனியாக கணினி வகுப்பிற்கு சென்றிருக்கிறேன், அப்பொழுதே அவர் நடத்தும் கணினி வகுப்பை நான் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பேன், இந்த காரணங்கலினால் அவர் இருதித் தேர்விற்கு ஒரு மாதத்திற்கு முன் என்னைத் தனியாக அழைத்து நீ ஒரு பாடத்தில் மட்டும் நன்றாக படித்தால் போதாது, இறுதித்தேர்வில் குறைந்தது நாநூறு மதிப்பெண்களாவது எடுக்க முயற்சிசெய், அடுத்து பாலிடெக்னிக்கில்
டெக்ஸ்டைல் டையிங் பிராஸஸிங் (Textile Dyeing Processing ) படித்தால் திருப்பூரில் நல்ல வாய்ப்புகள் உண்டு என்று கூறினார்.

நானும் கடைசி ஒரு மாதத்தில் படித்து 385 மதிப்பெண் பெற்றேன். அடுத்த நாள் கோவையில் உள்ள பாலிடெக்னிகிற்கு சென்று வின்னப்பப் படிவம் வாங்குவதாக இருந்தது, ஆனால் என் அம்மா அதற்குள் ஒருமுறை ஜோசியம் பார்த்துவிடலாம் என்று சென்று பார்த்தார், அவனோ இந்தப்பையனுக்கு படிப்பு வராது, என்னதான் படித்தாலும் ஒரு பாடத்திலாவது தேறமுடியாது, இரும்பு சம்மந்தப்பட்ட தொழிலே இவனுக்கு பொருந்தும் என்று சொல்லிவிட்டார். அதனால் நான் வீட்டில் எவ்வளவு போராடியும் என்னால் தொடந்து படிக்க முடியவில்லை, வெரும் பத்தாம் வகுப்போடு என் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். இங்கு நான் இதைப்பற்றி சொன்னதன் காரணம் நீங்களும் அவர் ஜோசியம் சொன்னார் என்று கூறியதால்தான்.
ஜோசியம் உண்மையா பொய்யா என்று கூறுமளவு எனக்கு அனுபவமில்லை, ஆனால் ஜோசியர்கள் பொய்யாக இருக்கலாம். கடவுளுக்கும் இதே நிலைதான் ஒருவேளை கடவுள் என்ற ஒருவர் இருந்தாலும் இங்கு உள்ள போலிகள் மத்தியில் தன்னால் அவரை நீருபிக்க மிகவும் போராடவேண்டிவரும் என்றே நினைக்கிறேன். சரி இனி என் அனுபவத்தை சொல்கிறேன்,

1. நானும் என் அம்மாவும் பெருந்துறையில் உள்ள மாமாவீட்டுப் பொங்களுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டிற்கு வண்டியில் வந்துகொண்டிருந்தேன்,என் அப்பாவும் என் வண்டியை ஓட்டுவார், அதனால் ஊரில் அவர் வண்டியை எடுத்து எங்கோ சுற்றிவிட்டு என்னிடம் சொல்லாமல் விட்டுவிட்டார்,நானும் வண்டியில் உள்ள எரிபொருளை (Petrol) கவணிக்காமல் எடுத்து வந்துவிட்டேன், இரவு ஒன்பது மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் நடு ரோட்டில் வண்டி
நின்றுவிட்டது, வண்டி இழுத்துக்கொண்டே நின்றதை எதிரில் வந்த ஒரு சிறுவன் பார்த்துவிட்டு என்ன அண்னா பெட்ரோல் தீந்துடுச்சா அந்த பெட்டிக்கடையிலவிப்பாங்க வாங்கிக்கங்கனு சொல்லிவிட்டு சென்றுவிட்டான். உண்மையில் அவன் மட்டும் அன்று சொல்லாவிட்டால் என் அம்மாவுடன் குறைந்தது ஆறு ஏலு கிலோமீட்டர் என்னுடைய வண்டியை தள்ளிக்கொண்டுதான் வந்திருக்க வேண்டும், என்னுடைய வண்டியே 150 கிலோ இருக்கும் ஓட்டுவது சுகம்தான் ஆனால் தல்ளுவது மிகவும் சிரமம், அதோடு மட்டுமல்லாது இரு பெரிய பைகள் முழுவதும் பழங்கள் துனிகள் மற்றும் வேர்க்கடலை போன்ற சுமையும் இருந்தது,
சமயத்தில் உதவிய சிறுவனுக்கு நன்றி கூட சொல்லவில்லை, எனக்கு இது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, அடுத்து

2. இரண்டாம் முறை எனக்கு நடந்த அதிசயம், அடுத்த நாள் எனக்கிருக்கும் ஒரே தோழியின் பிறந்தநாள் கையில் சுத்தமாக காசில்லை, அப்போது நான் மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதித்தாலும் முழு சம்பளத்தையும் வீட்டில் கொடுத்துவிட்டு பத்து ரூபாய் மட்டுமே பெற்றுக்கொள்ளும் அளவு நல்ல பையன், என் அம்மாவிடம் கேட்டால் நிச்சயம் கொடுப்பார், ஆனால் அப்போது அவரிடமும் இல்லாமலிருந்தது, அப்பாவிடம் நான் இதுபோன்ற செலவுகளுக்கு பணம் கேட்க்கமாட்டேன். அவருக்கு நிச்சயமாக ஏதெனும் செய்யவேண்டும் ஏனென்றால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்தான் என் பிறந்தநாளுக்கு அவரே கேக் வாங்கி வைத்து அலுவலகத்தில் வெட்டுமாறு கொடுத்து என் பிறந்தநாளை கொண்டாடினார், குறைந்தது ஒரு பரிசாவது கொடுக்கவேண்டுமே என்று வருந்திக்கொண்டிருந்தேன், அப்போது என் நண்பர் (வயதில் பெரியவர்) இப்போது என் முதளாளி . என்னைப் அவர் வீட்டிற்க்கு அழைத்தார், சென்றபோது என் கையில் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தார், எதற்கு என்று கேட்டத்ற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்தில் பணி அதிகமாக இருந்தது அதனால் என்னை அழைத்து சில டிசைன்களை செய்து தருமாறு சொன்னார், நானும் ஒருநாள் மட்டும் அத்கப்ட்சமாக ஒரு மணி
நேரத்தில் அவருடைய வேளைகளை முடித்துக் கொடுத்தேன், அப்போதே பணம் தர முன்வந்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன். திடீறெண்று அன்று அழைத்து டிசைனெல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு ரொம்ப சீக்கிரமா முடிச்சுட்டியே இங்கயே வேளைக்கு வர்ரியான்னு கேட்டார், நான் அப்போது முடியவில்லை என்று சொல்லிவிட்டேன், சரி அப்படியானால் கண்டிப்பாக இந்த பணத்தை வாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமென்று கொடுத்தார். அந்த நேரத்தில் அவரிடமிருந்து எனக்கு பணம் வரவேண்டிய அவசியமேயில்லை, ஆனால் அவராக அழைத்துக்கொடுத்தார். இதுவும் நான் ஆச்சர்யப்பட்ட
விசயம். சில ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுது அவரிடம் தான் பணிபுரிகிறேன்.

இவையிரண்டும் படிப்பவர்களுக்கு ஒருவேளை சின்ன விஷயமாகத் தோன்றலாம், ஆனால் அந்த சூல்நிலையில் இருந்த எனக்கு இவையிரண்டும் மிகப்பெரிய உதவிகள், இத்தனைக்கும் நான் உதவியவர்கள் செய்திருந்தால் அது பெரிய விஷயமல்ல, அனால் முதல்லாமவன் முகம் கூட எனக்கு நியாபகம் இல்லை. சமயத்தில் கிடைக்கப்பெற்ற உதவிகள். இது சம்மந்தமாக நான் படித்த ஒரு நிகழ்ச்சியும் எனக்கு நியாபகம் உண்டு ஆனால் இதுவே பெரும் பதிப்பாக ஆகிவிட்டது அதனால் அதை இடவில்லை, நீங்கள் விரும்பினால் அதையும் பதிக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு
என்னிடம் ஒரு மாறுதல் உள்ள்து, அது நாம் மற்றவர்களுக்கு தேவைப்படும் போது உதவும் பொழுது நிச்சயம் நன் தேவைகளின் போது உதவிகள் கிடைக்கும் ஆனால் அது நாம் உதவியவிர்கள்தான் செய்ய வேண்டும் என்பதல்ல யார்மூலம் வேண்டுமானாலும் வரலாம் வரும். இது நாம் செய்யும் தீமைகளுக்கும் பொருந்தும். இது கடவுளின் செயலோ இயற்கையின் செயலோ என்ற ஆராய்ச்சி தேவையற்றது, இதை அறிவியலாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். (Every action has its same Opposite reaction) நாம் செய்யும் எல்லா காரியங்களுக்கும் தகுந்த எதிர்காரியங்கள் நிச்சயம் நடக்கும். இது விதி (அறிவியல் விதி).
அனைவருக்கும் நன்றி,

பாரதி
08-01-2008, 06:29 AM
அன்பு ராக்கி,
நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி! இந்தப்பதிவை திஸ்கி மன்றத்தில் இட்ட பின்னர் வலைப்பூவிலும் இட்டேன். அப்போது சகோதரர் முத்துவும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததுண்டு என்று அவர் வலைப்பூவில் இட்டார். பின்னர் ஜோதிடம் குறித்து ஒரு தொடரையும் அவர் மன்றத்தில் இட்டார்.

இதை நம்புவதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, ஏன் இவ்விதம் நிகழ்ந்தது? மற்றவர்களுக்கும் அது போல ஏதேனும் நடந்திருக்கிறதா? அப்படியெனில் அவர்களில் யாரேனும் அதற்கு விடை கண்டிருக்கிறார்களா.. என்பதைக் காணவே, மனதில் இருந்த சந்தேகத்தை மன்ற உறவுகளிடம் கூறினேன். உங்களைப் போன்றே மேலும் சிலரும் தங்கள் அனுபவங்களைக் கூறக்கூடும். நீங்கள் கூறிய இரு சம்பவங்களும் தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறதென்றாலும் அந்த நேரத்தில் இவ்விதம் நடந்ததற்கு காரணங்களை தேட விரும்பினீர்களா..? இதற்கும் விஞ்ஞான விளக்கம் கண்ட உங்கள் வார்த்தைகள் வியப்பளிக்கிறது.

மேலும் என்ன சொல்ல..? சில விடயங்களை சிந்தித்தாலும் தீர்வு மட்டும் கிட்ட மாட்டேன் என்கிறது. நடப்பவை நன்மையாய் இருந்தால் சரி என்று மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

சிவா.ஜி
08-01-2008, 06:59 AM
ஆச்சர்யமாக இருக்கிறது.நேரில் பார்க்கும்போது முகம் தெரியா யாரோ ஒருவர் இப்படி சொல்லியிருந்தாலும் ஆளைப் பார்த்து,முகம் படித்து சொல்லும் கலை தெரிந்தவர் என்று நினைக்கலாம்.ஆனால் இது இணையவழி நிகழ்ந்திருக்கிறது எனும்போது உண்மையிலேயே ஆச்சர்யத்தை தவிர்க்க முடியவில்லை.
எனக்கு சுத்தமாக ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை.ஒருமுறை கிருஷ்ணகிரியிலிருந்து என் மகன் தங்கி படித்துக்கொண்டிருந்த பள்லி இருக்கும் ஊதங்கரைக்கு இரு சக்கர வாகணத்தில் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தேன்.(போக வர 110 கிலோமீட்டர்கள்)இடையில் ஒரு ஊரில் வண்டியை நிறுத்தி டீ சாப்பிட கடையில் நின்றுகொண்டிருந்தேன்.அப்போது ஒரு மூதாட்டி மிகவும் பலவீனமாக நின்றிருந்தார்.நான் தேநீர் குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தவரிடம் டீ வேணுமா பாட்டி என்ன்று கேட்டதும் மகராசனா இருப்பே பசியா இருக்குப்பா என்றார்.டீயும் கொஞ்சம் திண்பண்டமும் வாங்கிக் கொடுத்தேன்.சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென்று என் கையை நீடச் சொல்லி ரேகை படித்தார்.பின் என் முகத்தைப் பார்த்தார்.தொடர்ந்து என்னை நீ வெளிநாட்டுலதான வேலை செய்யுறே என்று கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது.(நான் எப்போதுமே ஆடம்பர ஆடைகள் நகைகள் அணியாதவன்.அதனால் எப்படி வெளிநாட்டில் வேஎலை செய்கிறேன் என்று கண்டுபிடித்தார் என்ற ஆச்சர்யம்)ஆமாம் என்றத்ஹும்...இப்போது இருக்கும் இடத்தை விட்டு வேறு இடம் போகும் வாய்ப்பு இருக்கிறது.தற்சமயம் வாங்கிக்கொண்டிருக்கும் சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது என்று சொன்னதோடு கூடிய விரைவில் நீ வெகு நாளாய் ஆசைப் பட்ட ஒரு விஷயம் நல்ல முறையில் நடந்து முடியும் என்றார்.
நானும் நான் வாங்கிகொடுத்த டீக்கும்,திண்பண்டத்துக்கும் நன்றியாக ஏதோ நல்ல சொல் சொல்கிறாரென்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் சொன்னதைப் போலவே வீட்டுக்கு வந்ததும் எனக்கு சொந்தமான கடைக்குப் பக்கத்துக் கடைக்கு சொந்தக்காரர் வீட்டில் இருந்தார்..அவருடையகடையை எனக்கு விற்காலாமென்றிருப்பதாகச் சொன்னார்.நான் நீண்ட நாளாக ஆசைப் பட்ட விஷயம்.ஆந்த கடை மூலையில் இருந்ததால் இரு சாலைகளிலும் தெரியுமாறு நல்ல பார்வையில் இருந்தது.அதையும்வாங்கினால் ஒரு காம்ப்ளக்ஸாக அந்த கட்டிடத்தை மாற்ற முடியுமென்று நினைத்திருந்தேன்.பலமுறை முயற்சித்தும் அவர் விற்பதாக இல்லை.ஆனால் இப்போது அவராகவே வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறாரென்றால்....வியந்தேன்.
அதேபோல விடுமுறை முடிந்து போவதற்கு ஒரு வாரம் இருக்கும்போது எப்போதோ விண்ணப்பித்திருந்த வேலைக்கான உத்தரவு வந்தது.வேறு நாடு மிக நல்ல சம்பளம்......எப்படி என்னால் ஆச்சர்யப் படாமல் இருக்க முடியும்.
இதை என்னவென்று சொல்வது?

பாரதி
09-01-2008, 03:52 PM
உங்கள் வாழ்வில் நடந்தவற்றையும் நினைவு கூர்ந்தமைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சிவா. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் இப்படியான சம்பவம் ஏதாவது நடந்திருக்க வாய்ப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது!