PDA

View Full Version : செல்வதாஸ்பாரதி
12-05-2005, 04:10 PM
தேதியில்லா குறிப்புகள்

செல்வதாஸ்
"எவம்லே அது.... இவன எல்லாம் பேசவிட்டா எல்லாரையும் கிறுக்கனாக்கிருவாம்ல...."

"பேசாத... ஒக்காருலே..."

"இவம்பேசி கேக்கணுமோ...?"

" பேசுனா ஒண்ணுமே புரியாது... உக்காரு.... பேசாதே...."

இப்படி ஒரே சத்தம்தான் அந்தப்பொதுக்குழுக்கூட்டத்தில்.... நிறுவனத்தில் பயிற்சியாளனாக பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப்பிறகு, தொழிற்சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பின்னர் தொழிற்சங்கம் கூட்டிய அந்தக்கூட்டத்தில்தான் மேலேயுள்ள நான் கேட்ட அமைதியற்ற குரல்கள்.....

இப்படி யாரைச் சொல்கிறார்கள் என்பதைக் காண முடியாதபடி நிறைய உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆர்வமிகுதியில் "யாரது" என்று கேட்டேன்.

"எல்லா அவந்தாம்லே... செல்வதாசு..." என்றார் அருகில் இருந்தவர்.

சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் என்றாலும் பெரும்பாலும் நான் இருந்த மின்துறைக்கு சம்பந்தப்பட்டவர்களையும், என்னுடன் பணிக்கு ஒரே நேரத்தில் இணைந்த அந்த (என்ஜீனியரிங் சபார்டினேட் சர்வீஸ் என்று அழைக்கப்பட்ட) எட்டாவது குழு நண்பர்களை மட்டுமே நான் அறிந்திருந்தேன். இயல்பாகவே நான் யாருடனும் பேச அதிகம் கூச்சப்படுவேன். பெரும்பாலோனாரால் இகழப்பட்ட அந்த செல்வதாசை அன்று பார்க்க இயலவில்லை. என்றாலும் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டானது. ஆனாலும் அதற்காக எந்த முயற்சியையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் "ஆபரேசன்" துறையில் பணிபுரிகிறார் என்கிற விபரம் மட்டும் எனக்குத் தெரிந்தது.

சில வாரங்களுக்குப்பிறகு ஒரு நாள் வருகைப்பதிவை பதிவு செய்யும் டைம் ஆபிஸில் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. செல்வதாசை அடையாளம் காட்டினான் ஒரு நண்பன்.

சராசரிக்கும் குறைவான உயரம்... தூத்துக்குடிப் பகுதிக்கே உரிய உழைப்பாலும் வெயிலாலும் உண்டான கருப்பு நிறம்.... கூரிய சிறிய கண்கள்... படர்ந்த நெற்றி.... எண்ணெய் வாரி சீவப்பட்ட முடி... சற்றே நுனியில் முறுக்கிவிடப்பட்ட மீசை... இவ்வளவுதான்.. எந்த வித்தியாசமும் இல்லை...

வருகையை பதிவு செய்யும் கருவியில் அட்டையை வைத்து, கைப்பிடியை அழுத்தி வருகையை பதிவு செய்து அதை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு இரண்டு கையையும் வீசி நடக்க ஆரம்பித்தார் அவர்.

அநேகமாக எல்லோரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நடந்து செல்லும் அவர் எனக்கு சற்றே வியப்பை ஊட்டினார். அவரைப்பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் சில மாதங்கள் கடந்தன... நான் "பேகிங்" என்று அழைக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட உரம் மூட்டைகளில் அடைக்கப்படும் பகுதிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டேன். அங்குதான் செல்வதாஸம் பணிபுரிந்து வந்தார்.

ஆரம்பத்தில் ஜெனரல் ஷிப்ட் என்றழைக்கப்பட்ட காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்தரை மணி வரையான வேலைக்குத்தான் சென்று கொண்டிருந்தேன். எப்போதாவது அவரைப்பார்த்தால் மெதுவாக புன்முறுவல் அவரிடமிருந்து வரும்.

நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தோம். தனக்கு பிடித்தவர், பிடிக்காதவர் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பேசக்கூடியவராகத்தான் இருந்தார். ஆனால் அவரிடம் பேசுபவர்கள் எப்போதும் அவரைப்பற்றி முன்கூட்டியே திட்டமிட்டு பேசுவது போல எனக்குத்தோன்றியது. இன்னும் சொல்லப்போனால் பல நேரங்களில் அவருடைய துறை மேலாளர் கூட அவரிடம் பேசுவதை தவிர்ப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் நான் பேசுவது அதிகமானதற்கு காரணம் அங்கே பணிபுரிந்து வந்த மரியாதைக்குரிய சந்தானம் அண்ணாச்சி, செவ்வேள் உள்ளிட்ட சில நண்பர்கள் காரணம். "பேகிங்" பகுதியில் பணி புரிந்து வந்த மற்றவர்களை பற்றி பேச இது சமயமில்லை.

எப்போதும் வட்டார வழக்கு மொழியைக்கற்றுக்கொண்டு அதிலேயே பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் சொந்த ஊரின் "அண்ணே".. என்பதை விடுத்து, செல்வதாஸை "அண்ணாச்சி" என்று அழைப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. அவர் என்னைக்காட்டிலும் பல வயது மூத்தவர். ஆனால் அவரும் என்னை 'அண்ணாச்சி' என்றே அழைப்பார். அவர் அப்படி அழைக்கும் போது மிகவும் கூச்சமாக இருக்கும். ஆனால் நாளாக நாளாக வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

சில மாதங்களுக்குப் பின் "ஷிப்ட்" முறை பணிக்கு வர பணிக்கப்பட்டேன். அதன்பின்னர் எங்களிடையே ஆன நெருக்கம் கொஞ்சம் அதிகமானது.

அவரது நேரிடையான பேச்சு, ஆழ்ந்த சிந்தனை, அறிவு எனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அவரை ஏன் எல்லோரும் இகழ்ந்து பேசுகிறார்கள் என்று அப்போது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அவரது உருவம் ஒருவேளை காரணமாக இருக்குமோ என்று மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம்.

அவருக்கு எப்போதும் சமூகத்தின் மீதான அக்கறை அதிகமாக இருக்கும். மனித நேயத்துடன் கூடிய அவருடைய பார்வையில் எந்த ஒரு விசயத்தையும் அக்குவேறு ஆணிவேராக அலசிப்பார்க்கும் திறமையைக் காண முடியும்.

வாரத்தின் ஆறு வேலை நாட்களில் மூன்று நாட்கள் அவரும் நானும் ஒரே நேரத்தில் வேலைக்கு வருவதாக அமைந்திருந்தது. அவருடைய பணியும் என்னுடைய பணியும் வேறு வேறு என்றாலும் வேலை இல்லாத சமயங்களிலும், ஓய்வு நேரங்களிலும், சாப்பிடும் நேரங்களிலும் அவருடன் இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

வெறுமனே திரைப்படங்கள், புத்தகங்கள் என்று ஆரம்பத்தில் பேச ஆரம்பித்தது தொழிற்சங்கத்தைப் பற்றி பேசுவது அதிகம் என்றாகிவிட்டது. தன்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு நல்லதே செய்ய வேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் கொஞ்சமாக என்னையும் தொற்றிக்கொண்டது.

சாதாரணமாக ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பித்தால் என்ன என்கிற கேள்வி பிறந்தது.

அப்போது வேறு சில நண்பர்கள் "ஸ்வரங்கள்" என்கிற கையெழுத்துப்பிரதியை நடத்திக்கொண்டிருந்தார்கள். கையெழுத்துப்பிரதி என்றால் என்ன என்பதையே நான் அப்போதுதான் அறிந்தேன். ஒரு முறை பிரதீப்பின் உதவியால் அந்த ஸ்வரங்கள் என்கிற கையெழுத்துப் பத்திரிக்கையை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

பலவண்ண காகிதங்களில் கலர் கலராக ஓரளவுக்கு அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த அதைப் பார்த்ததும் வியப்பும் சந்தோசமும் ஏற்பட்டது.

இப்படியெல்லாம் கூட பத்திரிக்கைகள் உண்டா.. என்கிற ஆச்சரியமும் உண்டானது. ஆனால் அப்போது நாமே ஒரு கையெழுத்துப்பிரதி நடத்த வேண்டும் என்கிற எண்ணம் உண்டானதே இல்லை.

செல்வதாஸடன் உரையாடிய போது கையெழுத்துப்பிரதி குறித்த கேள்விக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்தது.

ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டுமெனில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீவிரமாக பேச ஆரம்பித்தோம். பத்திரிக்கையின் குறிக்கோள், பத்திரிக்கையின் உள்ளடக்கம், எத்தனைப்பக்கங்கள், என்று வெளிவருவது, எப்படி வெளியிடுவது, பத்திரிக்கை நடத்துவதில் என்ன என்ன சிரமங்கள் வரக்கூடும்... என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடந்தது. எந்த நேரமும் அதைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி நின்றது.

ஓரளவுக்கு மேலே கூறப்பட்ட விசயங்கள் இறுதியானதும், முக்க்யமான ஒன்றுக்கு... கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் இரவுப்பணியில் இருந்த போது வேலை இல்லாத நேரங்களில் எல்லாம் பேசியதுமான புத்தகத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரே சர்ச்சை.
சர்ச்சை என்றால் வேறு விதமாக விளங்கிக்கொள்ள வேண்டாம். இருவரும் அவரவர்களுக்கு தோன்றிய பெயர்களை எல்லாம் எழுதுவது... எழுதிய பெயர்களை ஏன் வைக்கலாம்.. வைக்கக்கூடாது என்று சார்பாக எதிர்ப்பாக எல்லாம் பேசி.. கடைசியில் நான் சொன்ன "விழி" என்கிற பெயரை வைக்கலாம் என்று முடிவானது. விழி என்பது சமூகத்தை பார்க்கின்ற பார்வையாகவோ அல்லது அறியாமையில் இருக்கும் மனிதர்களை எழுப்ப முயற்சிக்கும் குரலாகவோ இருக்கும் என்பதால் அது சரியானதாக இருக்கும் என்கிற என் வாதத்தை அவர் ஏற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

மற்ற பத்திரிக்கைகளைப் போல ஐந்திலிருந்து பத்து பத்திரிக்கைகள் வரை கையிலேயே எல்லாவற்றையும் எழுதுவது கடினமான காரியமாக தோன்றியதால் ஒரு பத்திரிக்கையை மட்டும் கையால் எழுதுவது என்றும், தேவைப்படும் பத்திரிக்கைகளை நகல் எடுத்துக்கொள்வது என்றும் முடிவானது. நகல் எடுத்தால் வண்ணங்கள் இல்லாமல் கருப்பு வெள்ளையாக தோன்றினாலும், தரப்படும் விசயங்கள் மட்டுமே முக்கியம்- அதுவே போதுமானது என்று எண்ணினோம்.

சாதாரண மையினால் எழுதினால் போதும் என்று நான் நினைத்தேன். செல்வதாஸ் "இந்தியன் இங்க்" எனப்படும் அடர்கருப்பு மையினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நான் முன்பேயே வெவ்வேறு வகையான எழுத்துக்களை எழுதுவதற்காக பலவகையான பேனாநுனி(நிப்பு)களை ஒரு முறை சென்னைக்கு சென்றிருந்த போது, தீவுத்திடலில் வாங்கி வைத்திருந்தேன். அவை இப்போது உபயோகப்பட்டன.

எனது கையெழுத்து ஓரளவுக்கு அழகாகவே இருக்கும். சிறு வயதில் எனக்கு அதில் கொஞ்சம் கர்வம் கூட உண்டு.

பெரும்பான்மையான பகுதிகளை நான் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் பலவிதமான கையெழுத்துக்கள் இருந்தால் அது ஒரு செய்தியில் இருந்து மற்றவற்றை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பதால் யாரை தேர்வு செய்யலாம் என்று பேசினோம்.

எழுதுவதற்கு உதவி கேட்டவுடன் சுரேந்திரனும் ரங்கராமனுஜமும் விருப்பத்துடன் முன் வந்தனர்.

கையெழுத்துப்பிரதி என்றாலும் அதில் படங்களும் இருந்தால்தான் நன்றாக இருக்கும்..இல்லையா...? எனவே யாருடைய உதவியைக் கேட்கலாம் என்று யோசித்த போது கண்ணனின் நினைவு வந்தது. அவன் ஏற்கனவே விஜயன் திருமணத்திற்காக வரைந்த பென்சில் ஓவியத்தை நான் பார்த்திருந்தேன். உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு தொழில்முறை ஓவியரின் படம் போலத்தான் இருந்தது.

இதற்கிடையில் அது வரை ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த "இந்தியா டுடே" என்கிற பிரபலமான பத்திரிக்கை தமிழில் வர ஆரம்பித்திருந்தது. அதில் முதன் முறையாக ஒரு குறுக்கெழுத்துப்போட்டியை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அது வழக்கமாக இருக்கும் பொதுவான கேள்விகளில் இருந்து மாறி, அந்தப்புத்தகத்தை முழுவதும் நன்கு படித்தால் மட்டுமே எழுத முடியும் என்பதாக அது அமைந்திருந்தது. அப்போது இருந்த ஆர்வத்தில் விடாமல் எல்லாவற்றையும் படித்து குறுக்கெழுத்துப்போட்டியில் கேட்டிருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டுபிடித்து விட்டேன். ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இரண்டு விடைகள் வந்தன. இரண்டுமே சரியானதாகவும் தோன்றியது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எந்தவிடையை தேர்ந்தெடுக்கலாம் என்று செல்வதாஸிடம் ஆலோசித்தேன்.

அவர் விடையை சொல்லும் முன்பாக " அண்ணாச்சி.. ஒரு வேள பரிசு கெடச்சா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க..?" என்றார்.

எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவர் மெதுவாக சிரித்தார்.

அப்போதுதான் எனக்கு பிடிபட்டது..." அண்ணாச்சி... ஒரு வேள பரிசு கெடச்சா... அது முழுசும் நம்ம "விழி" பத்திரிக்கை நடத்துறக்கு ஆற செலவுக்குத் தர்றேன்..." என்றேன்.

அவருடைய மகிழ்ச்சியை உணர முடிந்தது. அவர் சொன்ன விடையை எழுதி போட்டிக்கும் அனுப்பி விட்டேன்.

விழி பத்திரிக்கை குறித்து தொடர்ந்து பேசினோம். கண்ணனும் படம் வரைய முழுமனதுடன் ஒத்துக்கொண்டான்.

"விழி" என்கிற புத்தகப்பெயரை எப்படி எழுதுவது என்பதை தீர்மானிக்க இயலவில்லை. பலவித முறைகளில் விதவிதமாக கிறுக்கிப் பார்த்தேன். பலவிதமாக கிறுக்கியதில் ஒரு வடிவம் மிகவும் பிடித்துப்போனது அவருக்கு. அதே போல வரைய பலமுறை முயன்றாலும் முதலில் இருந்ததுதான் சிறப்பானதாக தோன்றியது. முதல் எழுத்தான "வி" எழுத்து முடிவதையே "ழி"யின் தொடக்கமாக கொள்வதாக அமைந்திருந்தது அது.

அதையே புத்தகத்திற்கான அடையாளமாக வட்ட வடிவில் எழுதிவிட வேண்டும் என்றும் பேசிக்கொண்டோம். முகப்பு அட்டையில் என்ன படம் வர வேண்டுமென்பதை செல்வதாஸ் முடிவு செய்தார். எந்த ஒரு மலையாளப் பத்திரிக்கையிலோ வந்த ஒரு படத்தை கொடுத்து அதை வரைந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விரும்பினார். அலையடிக்கும் கடல், சூரிய உதயம்... இன்னும் என்று ஒரு நவீன ஓவியமாக அது இருந்தது. ஆனால் மிக எளிமையான படமாகவும் இருந்தது.

எல்லாவற்றையும் நாமே சொந்தமாக எழுதுவது என்பது இயலாது என்பதால் சில விபரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதையும் இணைத்துக்கொள்வது என்றும் முடிவு செய்தோம்.

மக்களால் அதிகம் அறியப்படாத மிகச்சிறந்த கவிஞர், அன்பு நண்பர் செல்வராஜை ஒரு கவிதை எழுதித்தர வேண்டினேன். சில தினங்களில் அருமையான கவிதை ஒன்றை அளித்தார் அவர். அதற்கு மேலும் மெருகூட்டும் விதமாக தமிழகத்தில் பஞ்சம் நிலவிய போது எடுக்கப்பட்ட ஒரு மிகப்பழைய புகைப்படத்தை இணைத்தோம்.

மக்கள் கவிஞர் என்று வட இந்தியாவில் அறியப்பட்ட "ஷப்தர் ஹஷ்மி" என்கிற தெருமுனை நாடகக்கலைஞர் சில மாதங்களுக்கு முன் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டிருந்தார். அவரை நினைவு கூறும் வண்ணம் ஒரு செய்தியை தொகுத்து எழுதினோம். மேலும் தேவகிப்பிரியனின் ஒரு அறிவியல் பார்வையும் இடம் பெற்றது. மேலும் ஒரு நண்பரின் கதையும் எங்களுக்கு கிடைத்தது. அறிமுகப்பகுதியில் மனித நேயத்தைக் குறித்து மிக அருமையான ஒரு கருத்தை வலியுறுத்தி செல்வதாஸ் எழுதினார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் ஓரளவுக்கு நல்ல முறையில் எழுதிவிட்டோம். ஒரு நகல் அலுவலகத்தில் கொடுத்து ஐந்து பிரதிகள் எடுத்தோம். பத்திரிக்கையின் இறுதியில், படிப்பவர்கள் கருத்து அல்லது விமர்சனம் செய்வதற்காக சில வெற்றுப்பக்கங்களையும் இணைத்தோம்.

ஏப்ரல் - 14ம் தேதி பத்திரிக்கையை கொண்டுவந்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

முன்பு எதிர்பார்த்திருந்தாலும் சற்று மறந்து விட்ட "இந்தியா டுடே" பத்திரிக்கையின் முதல் குறுக்கெழுத்துப் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்திருப்பதாக அந்தப் பத்திரிக்கையில் இருந்து ஒரு கடிதம் வந்தது..!!

பத்திரிக்கை வெளியானதும் முதலில் அங்கேயே இருந்த சில நண்பர்களிடம் கொடுத்து படித்துப்பார்க்க சொன்னோம். சில நண்பர்கள் நன்றாக இருப்பதாகவும், மற்ற நண்பர்களிடம் கொடுத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி..!

"விழி" நன்றாக பிரபலம் அடைந்து விடும்.. எல்லோரும் அதைப்பற்றியே பேசுவார்கள் என்று எண்ணத்தொடங்கி விட்டேன்...

சில தினங்கள் கழித்து வாசகர்களின் கருத்தறிய பிரதிகளை சேகரித்துப்பார்ப்போம் என்று முயற்சித்தால்.... ஒரு பிரதியைக் கூட திரும்ப பெற இயலவில்லை..! கடைசியாக யாரிடம் போய் சேர்ந்தது என்பதைக்கூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஓரிரு பிரதிகள் எங்கு போய் சேர்ந்திருக்கும் என்பதை அனுமானிக்க மட்டுமே முடிந்தது. முதல்பிரதி மட்டும் ஒரு வழியாக கைக்கு வந்தது...

அவரிடம் ஒரு "புல்லட்" இரு சக்கர வாகனம் இருந்தது. ஆனால் அதை அவர் உபயோகித்துப்பார்த்தது மிகவும் அபூர்வமே..! அதே போல யாருடைய இரு சக்கரவாகனத்திலாவது பின் அமர்ந்து சென்றிருக்கிறாரா என்றால் அதுவும் அபூர்வமே. என்னுடன் மட்டும் அவ்வப்போது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வர ஒப்புக்கொள்ளுவார்.

இரு சக்கர வாகனம் பற்றி காரணம் கேட்டதற்கு " ஒரு நாளு நைட் டவுன்லேருந்து வந்துகிட்டிருந்தேனா... அப்ப ஓடை பக்கத்துல மேம்பாலம் இருக்குல்ல.. அதுல வந்தேனா... "சடார்"ன்னு ஏதோ நெத்தியில அடிச்சுச்சு அண்ணாச்சி. என்னான்னே தெரியல... அப்படியே கீழ விழுந்தேன்.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்தான் நெனவு வந்திச்சு. எப்படியோ வீட்டுக்கு வந்து சேந்தேன். அன்னைல இருந்து வண்டிய எடுக்கணும்னா பயமா இருக்கு அண்ணாச்சி.. மீறி வண்டி எடுத்தாலும் ஏதோ படபடன்னு வருது." என்றார்.

அந்தப்பகுதிகளில் இரவு நேரங்களில் கழுகுகள் இரு சக்கர வாகனங்களின் விளக்கை (ஒரு வேளை இரையாக கருதுமோ..?) நோக்கி வேகமாக பறந்து வரும். அந்த நேரத்தில் அந்தப்பறவைகள் நம் மீது வேகமாக மோதவும் கூடும். எனக்கும் கிட்டத்தட்ட அதே அனுபவம் ஒரு முறை பின்னர் ஏற்பட்டிருக்கிறது.

அவருடைய குடும்பத்தைப்பற்றி அவர் ஒரு போதும் என்னுடன் கதைத்ததில்லை. காரணத்தை நானும் கேட்டதில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு "நமக்கெல்லாம் அது சரிப்படாது அண்ணாச்சி" என்றார்.

பெரும்பான்மையான சமயங்களில் அவர் ஒரு முடிவெடுத்தார் என்றால் அதில் தீர்மானமாக இருப்பார். அப்போது தொழிற்சங்கத்தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. (தேர்தல் குறித்து சொல்வேனேயானால் அது ஒரு பெரிய தொடர்கதையாகி விடக்கூடும் என்பதால் மிகவும் சுருக்கி சொல்கிறேன்.)

எப்போதும் ஒரு குறிப்பிட்ட "தலை"வரே குறிப்பிட்ட கால இடைவெளியில் மகத்தான வெற்றிகளைத் தொடர்ந்து பெற்று வந்த காலம் அது.. ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்காக புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. வழக்கம்போல "அவர்" அந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

தொழிற்சங்கத்தின் தலைவராக புன்னைவனராசனும், பொதுச்செயலராக செல்வதாஸம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்..! தேர்தல் நடந்திருந்தால் முடிவு என்ன என்பது வேறு கதை. உடன் பிரபாகரனும் நிர்வாகக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் புன்னைவனராசனும், பிரபாகரனும் மிகச்சிறந்த படைப்பாளிகள். புன்னைவனராசனின் கதைகள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பல வார, மாதப் புத்தகங்களில் பிரபாகரன் கதைகளுக்காக பரிசு பெற்றிருக்கிறார்.

எப்போதும் போல அன்றி, அந்தக்குழு உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு குறித்து சரியான விசயங்களை அளித்து வந்தது என்பது என் அசைக்க முடியாத கருத்து. தொழிலாளர்களும் அடிக்கடி அதைப்பற்றி விவாதித்து வந்தனர். மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது.

தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான பேச்சு வார்த்தை நடந்து கொண்டே.......... இருந்தது. பேச்சுவார்த்தை முடிவடையாமல்..... ஒரு கட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கிடையேயான முரண்பாடுகள் ஒரு பொதுக்குழுவில் வெளிப்படையாக தெரிந்தது.

'மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கத்தயாராக இல்லை' என்று ஒரு நிர்வாகி சொல்ல... கடுமையான வாக்குவாதம் மூண்டது.

ஒரு காலத்தில் ஓரிரு வார்த்தைகளை கூட பேச விடாமல் தடுத்த அதே அரங்கில், அதே தொழிலாளர்கள் அன்றைக்கு சுமார் இரண்டு மணி நேரமாக செல்வதாஸின் தங்கு தடையற்ற பேச்சைக்கேட்டு மூச்சு விட மறந்திருந்தார்கள்...! செல்வதாஸின் சொல்வன்மையைக் கண்டு அனைவரும் திகைத்துப் போனார்கள்.

செல்வதாஸின் திறமையைக் கண்ட பின்னர் "குறிப்பிட்ட சிலர்" எரிச்சலடைந்தனர். அவருடன் விவாதத்தில் ஈடுபட்டு அவரை வெல்வதென்பது அநேகமாக நடக்காத காரியமாக மாறி விட்டிருந்தது.

அதன்பின்னர் நடந்த பல்வேறு விசயங்களில் செல்வதாஸ் மிகுந்த மனவேதனை அடையும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை நினைவுகூரவும் எனக்கு விருப்பமில்லை. மீண்டும் நடந்த தொழிற்சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். அவரது தோல்வியை முதலில் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

விழிக்காக "காயம்" என்கிற கதையை அவர் இரண்டு பாகங்களாக எழுதிக்கொடுத்தார். முதல் பாகம் ஒரு விழி இதழில் வெளிவந்தது.

அதன் பின்னர் அவர் எப்போதும் ஒரு சோர்வுடனே காணப்பட்டார். அடிக்கடி " அண்ணாச்சி.. எனக்கென்னமோ இனி ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு தோணுது. நீங்கதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்" என்று சொல்வார். முதலில் அது பற்றி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவர் திரும்பவும் சொல்லும் போது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்தது.

சந்தானம் அண்ணாச்சியுடன் பேசும் போது அவரும் இதைக்குறிப்பிட்டார். " என்னா..இது..? இப்டியே பேசுதாப்ல... எல்லாரும் ஒரு நா போயி சேர வேண்டியதுதா.. இது ஒரு விசயம்னு..." என்று சற்று கோபத்துடன் சொன்னார்.

மேலும் சில வாரங்கள் உருண்டோடின. பால்ராஜுடன் ராஜ் திரையரங்கில் காலைக்காட்சியாக ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது தூத்துக்குடியை நோக்கி சில நெருங்கிய நண்பர்கள் வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இத்தனை நபர்கள் ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றனர் என்று முதலில் புரியவில்லை. மேலும் ஒரு வாகனத்தில் இரு நண்பர்கள் வந்ததைக் கண்டு அவர்களை நிறுத்தி விசாரித்தேன்.

அந்த அதிர்ச்சி தரும் தகவலை சொன்னார்கள் அவர்கள்... செல்வதாஸ் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கேள்விப்பட்டதும் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளானேன்.

உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு சென்றோம். அதிகாலை நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் பேருந்தை நிறுத்தி ஏற முயற்சி செய்த போது, தவறி விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் அவரது வயிற்றில் ஏறி விட்டதாகவும் அதனால் அங்கேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல் சொன்னார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை. பிரேத பரிசோதனைக் கிடங்கில் சில நிமிடங்களுக்கு மேல் "அண்ணாச்சி"யைக் காண என்னால் முடியவில்லை. எப்போதும் போல வெள்ளைச்சட்டையும் கருப்பு கால்நிற சட்டையும்தான் அவர் அணிந்திருந்தார்.

செல்வதாஸ் அண்ணாச்சியை தொழிற் சங்க கட்டடதிற்கு கொண்டு வந்த பின்னர் அனைவரும் மரியாதை செலுத்தினர். துயில் கொண்டது போல இருந்தார் அண்ணாச்சி. நெற்றியில் மட்டும் ஒரு சிறிய கீறல் இருந்தது. அங்கிருந்து குடியிருப்பு வாயில் வரை, அது வரை யாருமே பார்த்திராத அளவுக்கு சாலையை நிறைத்து அனைவரும் மெளனமாக நடக்க, அண்ணாச்சி அவரது சொந்த ஊருக்கு மீளாத்துயில் கொள்ள புறப்பட்டார்.

எளிமையான எத்தனையோ பெரிய தலைவர்களைப்பற்றி பலமுறை படித்திருக்கிறேன். ஆனால் நேரில் கண்டதில்லை. ஆனால் செல்வதாஸ் அண்ணாச்சியுடன் வாழ்ந்த அந்த சில காலம் என்னால் எப்போதும் மறக்க முடியாதது. இவை தேதியில்லா குறிப்புகள் என்றாலும் அண்ணாச்சி பிரிந்த அந்த நவம்பர் 17 எப்போதும் என் மனதை உறுத்திக்கொண்டேதான் இருக்கும்.

ஒரு முறை அவர் வாழ்ந்த வீட்டுக்கு அவரைக் காண்பதற்காக சென்றிருந்தேன். பொதுவாக அங்கு வாழ்ந்த எத்தனையோ நண்பர்களின் வீடுகள் ஆடம்பரப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை மட்டுமே பார்த்தவன் அவர் வீட்டைக் கண்டு அயர்ந்து போனேன்.

அவரது வீட்டில் நான் பார்த்தவை :- தூங்குவதற்கு ஒரு கோரைப்பாய், இரண்டு வெள்ளைச்சட்டைகள், இரண்டு கருப்பு நிற கால்சட்டைகள், ஒரு துண்டு, ஆலையில் பணிபுரியும் போது அணிய வேண்டிய சீருடை, காலணி,காலணியுறைகள், ஒரு மேசை, ஒரு நாற்காலி (இவை இரண்டும் தொழிற்சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சங்க அலுவலுக்கு தேவைப்பட்டதால் அவர் சொந்தமாக வாங்கியவை), சில வெண்குழல் பாக்கெட்டுகள்... இவை மட்டுமே...!

எளிமையை எனக்கு உணர்த்திய அன்பு அண்ணாச்சியை, எப்போதும் மனிதத்துவத்தை உணர்த்திய அந்த அன்பு உள்ளத்தை நினைவில் குறித்துக்கொள்வதை விட, மனத்தில் என்றும் இருத்திக்கொள்வதே நான் செய்த பேறு.
----------------------------------------------------------------------
விழி இதழுக்காக தலையங்கம் போல செல்வதாஸ் அண்ணாச்சி எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு:

மனிதகுலம் வரலாற்றின் வழி நெடுகிலும் எதிர்கொண்டு அனுபவித்த இன்னல்கலையெல்லாம் களைந்து மேம்பாடடைவதற்கும், அதனுடைய வளர்ச்சிப்படிகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கும், மனிதகுலம் நினைவில் நிறுத்தியுள்ள மாமனிதர்களோடு அவர்களது முயற்சியிலும் உழைப்பிலும் தங்கலது சொந்த வியர்வையையும் இரத்தத்தையும் ஒன்றிணைத்துக்கொண்ட 'முகம் தெரியாத' 'மனிதர்கள்' நூறாயிரக்கணக்கிலே. இவர்களையெல்லாம் 'மனிதகுல நல்வாழ்வுக்காக' வியர்வையும் இரத்தமும் சிந்தி உழைக்க வைத்தது எது?

நிச்சயமாக ....அது -

பாடுகளில் சிக்கி உழன்று, தவிக்கின்ற மனிதனை நேசிக்கின்ற - மனிதம் ஆட்சி செய்யும் மனிதகுல வாழ்க்கையைப் படைக்கத் துடிக்கின்ற ' மனிதர்களின் அன்பு' மனித நேயம் அல்லவா..!

இந்த மனித நேயம் என்பது -

- எந்த வகையான எல்லைகளுக்கும் அல்லது வரையறைகளுக்குள்ளும் தன்னை முடக்கிக்கொள்வதில்லை.

- அடக்கி ஆளும் ஆதிக்க வெறியின் அச்சுறுத்தல்களுக்கு அடங்கிப்போவதுமில்லை.

- இதன் இயல்பான பிரசவத்தை நிர்ப்பந்தங்கள் கருச்சிதைவு செய்யப் பொறுத்துக் கொண்டிருப்பதுமில்லை.... அப்போது

- பொங்கிச்சீறியெழுந்து போர் தொடுக்கும் போர்க்குணமிக்கது.

எனினும் -

இந்த மனித நேயம் பட்சமானது அல்லது சார்புடையது.

- உண்மையைச் சார்ந்து நிற்கும் - பொய்மையின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போரிடும்.

- மனித வாழ்க்கையை, அதன் மேம்பாட்டை; மனித குல முன்னேற்றத்தை மறுக்கின்ற அல்லது தடுக்கின்ற எந்தச் சக்தியையும் முறியடிக்க அணி திரளும்.

இந்த மனித நேயப் போர்ப்படையணிகளின் வரிசையில் நமது விழியும் அதன் இயக்கமும் ஒன்றிணையட்டும்.

இது உண்மையின் வெற்றியைக்கோரி தொடுக்கின்ற போர்!
இது மனிதகுல உயர்வு வேண்டி தருகின்ற உழைப்பு!

நீங்களும் பங்களிப்பீர்..! நாம் நமது முயற்சிகளையும் உழைப்பையும் ஒன்றிணைத்துக்கொள்வோம்!!

"இனி மனிதகுல உயர்வுக்கும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளவைகளே நம் இலக்கு. அவைகளின் நிர்மூலமே நாம் வேண்டுவது."

- ஆசிரியர் குழு.


-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்

ஓவியன்
22-11-2007, 04:02 PM
ஒரே மூச்சில் படித்தேன்....
படித்து முடித்ததும் என்ன எழுதுவதென்று தெரியவில்லை பாரதி அண்ணா...!!

செல்வதாஸ் அண்ணாச்சி அப்படியே என் முன்னே நிற்பது போல ஒரு பிரமை....
பெரும்பாலான நல்லவர்களின் வாழ்க்கையே இப்படித்தானோ போராட்டங்களுடன் கழிந்து விடுகதை போன்று தோற்றமளித்து விடை தெரியும் முன்னரே முடிந்துவிடுகிறது.....

இளசு
22-11-2007, 09:24 PM
அன்பு பாரதி,

மீண்டும் தேதியில்லாக் குறிப்புகள்..
குறிப்பிட்ட தேதி - நவம்பர் பதினேழுடன்..

செல்வதாஸ் அண்ணாச்சியைப்பற்றி ஒரு தத்ரூப எழுத்தோவியம்..

நீ அவர் ஆடையை விவரிப்பதற்கு முன்னமேயே
கருப்புக் கால்சட்டை, வெள்ளைச் சட்டையை மனக்கண்ணில் கண்டுவிட்டேன்.

எளிமை, தனிமை, சகமனிதர் தாண்டிய மீள்பார்வையுடன்
இப்படியான சமூக விஞ்ஞானிகள் இப்போதும் நம்மிடையே இருக்கத்தான் செய்வார்கள்..

ஆனால் உன்னைப்போல் அருகிருந்து, அவதானித்து, ஆதரித்து..
அந்த தலையங்கத்தை இத்தனை நாள் காத்து, இங்கே அளித்து
தலையாய கௌரவம்.. அதிலும் இப்படி ஒரு அக்மார்க் நேரிய எழுத்தில்
தர தோழர்கள் அமைவார்களா?

தலைவர்கள் என எத்தனையோ பேர் எட்டாத உயரம் போகமுடியும் சமூகம் நமது..
பதர்களை கோபுரத்தில் வைத்து பிரலாபிக்கும் கூட்டம் நமது..
தலைமைப்பண்புள்ள எளிய மனமுடையோரை ஏகடியம் செய்யும்
இழிபண்பு நமக்கு எப்போது வந்தது????

இவன் தெளிவானவன்.. இவன் வழிநடப்பது நல்லது என்ற
அடிப்படை பாதுகாப்பு ,வளர்வுணர்ச்சி அருகிய சமுகம்
மெல்லக் கருகிவிடுமோ??

அண்ணாச்சி இருத்தியதுபோல் நீயும் குறிப்பாய் இக்குறிப்புகளால்
என் நெஞ்சில் இருப்பாகினாய்..

வாழ்க நீ பாரதி!

தங்கவேல்
23-11-2007, 05:12 AM
பாரதி ... மனசு கனக்கச் செய்கின்றது. உங்களது செல்வதாஸ் பதிவு. உலகெங்கும் எத்தனையோ அண்ணாச்சிகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மனித நேயம் இன்னும் மரத்துப்போகாமல் இருப்பதால் தான் எத்தனையோ அனாதை இல்லங்களும் நடந்து வருகின்றன.

இன்று காலையில் என் மகனை பள்ளியில் விட அழைத்து சென்றபோது, குழந்தையுடன் சென்ற ஒரு பைக் காரர் ஒரு இளம் நாய் குட்டியின் காலில் வண்டியை ஏற்றி விட்டு சென்றார். அது கதறியதை பார்க்கையில் கொண்ட வேதனை இருக்கிறதே... இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது. இவர்களை போன்றவர்களால் தான் அக்கிரமங்கள் நடக்கின்றன.

paarthiban
23-11-2007, 04:54 PM
கொஞ்சம் அழுதுவிட்டேன்.

பாரதி
25-11-2007, 05:08 PM
இந்த நவம்பரில் என்னுடன் நினைவுகூற இன்னும் சில மன்ற உறவுகள்! என்ன சொல்வது...? வாழ்க செல்வதாஸ் அண்ணாச்சி.

அன்புரசிகன்
06-01-2008, 04:17 PM
பிரமிப்பான தலமை உங்க அண்ணாச்சி.... அவரின் இறுதிக்கால பேச்சு... அவரின் மனமுதிர்ச்சியை காட்டுவதாக எனக்கு தோன்றுகிறது...

பாரதி
07-01-2008, 03:44 PM
பிரமிப்பான தலமை உங்க அண்ணாச்சி.... அவரின் இறுதிக்கால பேச்சு... அவரின் மனமுதிர்ச்சியை காட்டுவதாக எனக்கு தோன்றுகிறது...
மேலெழுப்பியதற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அன்பு.