PDA

View Full Version : குற்றாலம்பாரதி
12-05-2005, 04:05 PM
தேதியில்லா குறிப்புகள்
குற்றாலம்
நைட் எட்டு மணிக்கு தாமோதரன் மெஸ்ல சாப்புடுற அப்பத்தான் அந்த பேச்சு வந்துச்சு. எலுமிச்ச சாதம், உருளக்கெழங்கு சிப்ஸன்னு எல்லாரும் ருசிச்சு சாப்புட்டுகிட்டு இருந்தாங்க.

நிஜாம்தான் ஆரம்பிச்சாப்ல ... "குற்றாலத்துல தண்ணி வருதாம்ல.. பேப்பர்ல போட்டுருக்கான்.."

குத்தாலம்.. பச்சப்பசேல்ன்னு செடிக..மரங்க... பச்சயும் நீலமும் கலந்த கலர்ல மலை.. அந்த மலைல வெள்ளிய காச்சி ஊத்துன மாதிரி அங்க அங்க அருவிங்க... காத்துல வர்ற குளுமை, ஒடம்பு நனயாம அடிக்குற சாரல்... இப்படின்னு அருவியில குளிக்கப் போறதுக்கு முன்னாலயே மனசு ரெக்க கட்டி பறக்குற மாதிரி இருக்கும்.

சீசன் தொடங்குறதுக்கு முன்னாடி போனா கொஞ்சம் நல்லா இருக்கும். சீசன் டைம்ல போனா குளிக்கவே முடியாது. கூட்டம்னா கூட்டம்... அவ்ளோ கூட்டம் இருக்கும்.

மொதல்ல மாதிரியில்லாம் இப்ப இல்ல.. சும்மா வெறும் முழங்கால் அளவு தண்ணி தேங்குற அளவுக்கு இருக்குற பள்ளத்துல கொஞ்ச தூரம் நடந்து போயி அருவில அவ்வளவு பேரும் ரொம்ப சந்தோசமா குளிப்பாங்க... ஆனா இப்பல்லாம் அப்படியா...? எல்லாத்தையும் சிமிண்டால கட்டி வச்சிருக்காங்க.. ஆம்பளங்களுக்கும் பொம்பளங்களுக்கும் தனியா குளிக்கிற மாதிரி நடுவுல காங்கிரீட்ல ஒரு திண்டு வேற கட்டி வச்சிருக்காங்க. பிடிச்சு குளிக்க பெரிய பெரிய பைப் வேற...ம்ம்... என்னதான் இருந்தாலும் முத முதல்ல அருவிய பாத்த மாதிரி இல்ல. நாளு ஆக ஆக மனுசன் தான் மாறுறது மட்டுமில்லாம பாக்குறத எல்லாம் வேற மாத்திப்புடுறான். அட.. நல்லா இருந்தா பரவாயில்ல... எல்லாத்துலயும் காசு பாக்குறதுலதான கண்ணா இருக்கான்.

அப்படித்தான் ஒரு தடவ சீஸனப்ப போயி அருவில ரெண்டு மூணு நிமிசம்தான் நின்னுருப்போம். திண்டு மேலே வெரட்ட போலீஸ்காரன் ரெடியா நிக்குறான். ஒரு தடவ சொல்லுவான். கேக்கல... அவ்வளவுதான்... அப்புறம் அவன் கைல இருக்குற குச்சிதான் பேசும். குளிக்குறத விட எப்ப போலீஸ்காரன் போகச்சொல்லுவானோ அப்டீங்குறதுலதான் கவனம் பூராவும் இருக்கும்.... அப்புறம் என்ன...? அடச்சே..ன்னு ஆகிப்போகும்... இங்க குளிக்க வந்தமா..இல்ல அடி வாங்க வந்தமா...ன்னு.. அப்ப மட்டும் போலீஸ் மேல கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும்.. அவன் மட்டும் நாள் பூரா யாரும் விரட்டாம அருவில குளிச்சுகிட்டு நிக்கிறானேன்னு...

அப்புறம் ஒடம்பு பூராவும் எண்ணெய தேச்சுகிட்டு வர்ற ஆளுங்க மேல ஒரசுறதுல ஒடம்பு பூரா மறுபடி ப்சுபிசுங்கும்... மறுபடியும் குளிக்கணும் போல இருக்கும்.

கொஞ்சம் திமிர் பிடிச்ச தெனாவெட்டு ஆளுங்க... உள்ள சரக்க நல்லா ஊத்திகிட்டு மாடு மாதிரி குளிச்சுகிட்டு இருக்குறவங்க மேல வந்து விழுவாங்க... அப்பயும் ஏண்டா குளிக்க வந்தோம்னு இருக்கும்.

வெளியூர்ல இருந்து வர்றவங்க குளிக்கிற பழய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி,சிற்றருவி... கொஞ்சம் சிரமப்பட்டு போற செண்பகா தேவி அருவி... எல்லா அருவிலயும் குளிச்சே ஆகணும்னு நெனக்கிற எளவட்டங்க மட்டும் போற தேனருவி... கவர்மெண்ட் ஆளுங்க பணக்காரங்க குளிக்கிற பழத்தோட்ட அருவி ... இன்னும் அங்கங்க சின்ன சின்னதா நெறய பேருல அருவிங்க..... இப்படி குற்றாலத்துல எங்க பார்த்தாலும் மனசு எல்லாம் உருகிப்போற மாதிரி இருக்கும்... சும்மா..சில்லுன்னு அடிக்கிற காத்துல முதல்ல கொஞ்சம் ஒடம்பு குளுரத்தான் செய்யும்... ஆனா அருவில புகுந்துட்டோம்னு வைங்க... அடடா..... அந்த சுகத்தயெல்லாம் வார்த்தையில் சொல்லி வெளங்க வைக்க முடியாதப்பு...

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்கிட்டிருக்கேன் பாருங்க...ம்ம்.. இது மாதிரி அடிக்கடி சுத்துப்பிரயாணத்த எல்லாம் நெனச்சுப்பாத்தாலே வயசெல்லாம் குறஞ்சிட்ட மாதிரி இருக்கு... நேரம் கெடைக்கும் போது சொல்லப்பாக்குறேன்...

ரெண்டு வருசமா அருவில தண்ணி சரியா வரல. அதனால குத்தாலத்துக்கு போகல...

நிஜாம் சொன்னவுடனே மெஸ்ஸில சாப்பிட்டுகிட்டு இருந்த அத்தன பேருக்கும் ஒரே சந்தோசம்...

இந்த வாட்டி கண்டிப்பா போய்ர வேண்டியதுதான்...

நெறய வண்டியில போகணும்...

சும்மா வேலக்கி போயி அலுத்துப்போச்சுப்பா...

இப்படி ஆளுக்காளு பேச எனக்கும் சந்தோசம்...

ஒரு மூணு நாலு வாட்டி குத்தாலத்துக்கு போயிட்டு வந்திருக்கேன். ட்ரெயினியா இருக்குறப்ப ஒரு தடவ... அப்புறம் ஜிம்கானாவுல போனது.. பசங்க கூட வண்டில போனது... இப்படி...

ஆனா ஒரு தடவ கூட தேனருவிக்கு போனது கெடயாது. இந்தத்தடவ போனா கண்டிப்பா போகணும்னு நெனச்சுகிட்டேன்.

பேச்சு எப்படியோ தெச மாறிப்போச்சு... ஒருத்தன் அடுத்தவன குத்தம் சொல்ற மாதிரி ஆகிப்போச்சு...

போன வருசம் கூப்பிட்டனே வந்தியாலே..?

சும்மா சொல்றீங்கடா... எல்லாம் வெட்டியா பேசுறீங்க....

கூப்பிட்டா ஒருத்தனும் வரமாட்டானுங்க...

இப்படியா பேச்சு முத்தி யாரு சொன்ன சொல்ல காப்பாத்துறங்குற அளவுக்கு ஆயிப்போச்சு...

சத்தியமோகன் சொன்னான்... எலே... இப்பவே கிளம்ப நான் ரெடி... கூட யாரு வர்றீங்க..?

நெறய பேரு கப்சிப்புன்னு வாயடச்சிட்டாங்க...

எனக்கு ரோசம் பொத்துகிச்சு.. நானும் ரெடிதான்னு சொன்னேன்... எப்படியும் பிரதீப்பையும் கூட்டிகிட்டு போயிரலாம்ணு தெரியும். நிஜாமும் வர்றதுக்கு ரெடின்னு சொன்னாப்ல.

ரமேஷ், சீனு, பால்ராஜா, தமிழு எல்லாம் வரமுடியலன்னு சொன்னாங்க.

சரி.. யாரு வந்தாலும் வரலன்னாலும் கண்டிப்பா உடனே கெளம்பிற வேண்டியதுதான்னு ஒரு தீர்மானமாகிப்போச்சு.

அடுத்த ஒரு அரமணி நேரத்துல கெளம்புறதுக்கு ரெடியாய்ட்டோம் - செலவுக்கு பணம், ஒரு செட் மாத்துத்துணி, துண்டு, அருவில குளிக்க டவுசர் அவ்வளவுதான. அடுத்தநாள் ஞாயித்துக்கெழமங்கிறதுன்னால வசதியாப்போச்சு. ஒரு வேள சீசன் நல்லா இருந்துச்சுன்னா திங்கக்கெழமயும் குத்தாலத்துலேயே தங்கி இருந்துட்டு வர்றதுக்கு வசதியா கம்பெனில ஈ.எம்.எல் சொல்லிறணும்னு ரமேஷ்கிட்ட சொல்லியாச்சு. . என்னோட வெஸ்பா வண்டியயும் நிஜாமோட வெஸ்பா வண்டியயும் கொண்டு போகலாம்ணு தீர்மானமாச்சு.

என்கூட பிரதீப்பும்... நிஜாம் கூட சத்தியமோகனும் வந்தாங்க... நைட்ல வண்டி ஓட்ற சுகமும் அலாதிதான்.. வண்டிங்க அவ்வளவா இருக்காது. என்ன.. பள்ளம் மேடு சரியா தெரியாது.. கொஞ்சம் சூதானமா வண்டிய ஓட்டணும்.

முத்தையாபுரம் பல்க்-ல பெட்ரோல போட்டுகிட்டு கெளம்புனோம். தூத்துக்குடி பைபாஸ் ரோட்டு வழியா தூத்துக்குடி-திருநெல்வேலி ஹைவே ரோட்ட பிடிச்சு, அளவான வேகத்துல போனோம்..
பாளயங்கோட்ட பக்கத்துல போகும் போது... நேரா போனா ஒன்வே ரோடு... அதனால மெடிக்கல் காலேஜ் வழியா சுத்தி திருநெல்வேலி போகணுமே..ன்னு யோசன...

பிரதீப்பும் சத்தியமோகனும் அடிச்சு சொன்னாங்க... ஒம்போது மணி வரைக்குந்தான் ஒன்வே.. அதுக்கப்புறம் ஒன்வே கெடயாது.. இப்பதான் மணி ஒம்போதர ஆயிப்போசுல்ல... தாராளமா போலாம்....அப்டீன்னு.

சரிதான்னு முருகன்குறிச்சி வழியா நேரா பஸ்ஸ்டாண்ட் பாத்து போனமா...? மேம்பாலத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நின்னுகிட்டு இருந்தார்...!

எங்கள பாத்ததும் கைய காமிச்சு நிறுத்தச்சொன்னார். ஓரமா வண்டிய நிறுத்திட்டு வந்தோம்...

எங்கேருந்து வர்றீங்க...?

தூத்துக்குடிலேருந்து சார்...

அதெல்லாம் சரி... பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க... நீங்களே இப்படி பண்ணுனா எப்படி...?

என்ன சார் ப்ராப்ளம்...?

ஆர்.சி.புக், லைசென்ஸ் எல்லாம் இருக்கா...?

இருக்கு சார்... எடுக்கவா..?

இருக்கட்டும்... இருக்கட்டும்... அதெல்லாம் பத்திரமா இருக்கட்டும்...

எங்களுக்கு ஒண்ணும் புரியல...

ஒன்வேல வரலாமா....?

சத்தியமோகன் கொஞ்சம் சமாளிக்கலாம்னு... அப்பிடியா சார்... சரியா கவனிக்கல... அப்டீன்னான்.

ஒரு இடம்னா பரவால்ல... சமாதானபுரத்துல இருந்து ஒன்வே அப்டீன்னு பதினெட்டு எடத்துல போர்டு வச்சிருக்கமே... கவனிக்கலன்னு சொன்னா எப்படீ...?

சார்... டைம்தான் ஒம்போதரைக்கு மேலே ஆச்சே...

அதனால... ஒங்க இஷ்டத்துக்கு ஒன்வேல வருவீகளோ... எப்படீ..?

எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல.. அந்த நேரம் பாத்து நாங்க வந்த அதே வழியா ஒரு வேன் வந்துச்சு... அதயும் ஓரங்கட்டுனாரு அவரு. வேன்ல இருந்து டிரைவர் குதிச்சு வெளிய வந்தாரா... நேரா கான்ஸ்டபிள் கைய பிடிச்சு குலுக்குனாரு... மறுபடி வண்டியில ஏறி உக்காந்துகிட்டு வேன ஸ்டார்ட் செஞ்சு கெளம்பி போயிட்டாரு...!!

இப்பத்தான் எங்களுக்கு வெசயம் புரிஞ்சுச்சு.

அவரு "சம்திங்க்" கேக்காருடே... கிசுகிசு குரலில் நிஜாம்.

இத்தன வருசத்துல அப்படி எதுவும் தந்ததே இல்ல.. இப்ப ஏன் தரணும் அப்டீங்கிற நெனப்பு உள்ள ஓடுச்சு.

என்ன யோசிக்கிறீங்க.. எதையாவது தந்துட்டு கெளம்பலாம்ல...சத்யமோகன் சொல்லிட்டே சட்டப்பைல கைய விட்டு இருந்ததை எடுத்தான்.. இருவது ரூவாதான் இருக்கு... அப்டீன்னு சொன்னான். உடனே கான்ஸ்டபிள் அட..குடுத்துட்டு இடத்த காலி பண்ணுங்க சார்..ன்னு அவசரப்பட்டார். காரணம் என்னன்ன.. மறுபடியும் ரெண்டு மூணு வண்டி அந்த ரோட்ல வந்துகிட்டு இருந்துச்சே.. வசூல் பண்றதுல குறியா இருக்காருங்கிறது ரொம்ப தெளிவா தெரிஞ்சுச்சு.

கோபமும் எரிச்சலும் இருந்தாலும் சீக்கிரம் குத்தாலம் போகணுமே அப்டீகிறதுதான் ரொம்ப முக்கியமா இருந்துச்சு... சரீன்னு கெளம்புனோம். திருநவேலில டீத்தண்ணி குடிச்சுட்டு குத்தாலம் ரோட்ட பிடிச்சு ஒரே வெரட்டுதான்..

எப்பவாச்சும் எதிர்ல வர்ற வண்டிங்க போற சத்தம்... சில்வண்டுகளோட சத்தம்.... ஸ்கூட்டரோட எஞ்சின் சத்தம்... இது மாத்ரம்தான்... வண்டி ஓட்ட ரொம்ப சுகமா இருந்துச்சு.

ஆலங்குளத்த தாண்டுன உடனே காத்து மாறிப்போச்சு... குளுகுளுன்னு ஏ.சி. போட்ட மாதிரி இருந்துச்சு... தென்காசி வரும் போது லேசா சாரல் வேற... ஆனா நல்ல வேளையா மழ விழல... ஒரு வழியா ஒரு பன்னெண்டு... பன்னெண்டர மணி இருக்கும்... குத்தாலம் வந்து சேந்தோம்.

மெயின் அருவி போற ரோட்டு முக்குல ஒரு காப்பிக்கட இருந்துச்சு. சுடச்சுட காப்பி... ரொம்ப நல்லா இருந்துச்சு..

விடிஞ்சிட்டா கூட்டம் வந்துரும்.. சரியா குளிக்க முடியாது... அதனால நைட்லேயே குளிக்கலாம்னு எல்லாரும் சொன்னாங்க.

நெனச்ச மாதிரியே மெயின் அருவில கூட்டமே இல்ல.. தண்ணியும் நல்லா விழுந்துகிட்டு இருந்துச்சு. ஆச தீர நல்லா குளிச்சோம். ரொம்ப நாளக்கி அப்புறமா இப்படி குளிக்கிறது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நைட் ஒரு மணிக்கு அருவில குளிச்சமா..ன்னு இப்ப நெனச்சா கூட சிரிப்புத்தான் வருது...
சொன்னா நம்ப மாட்டீங்க...அருவில குளிக்கும் போது கொஞ்சம் கூட குளுரவே இல்ல...!

அங்க ஒரு முக்கா மணி நேரம் குளிச்சிருப்போம். வெளிய வந்தா ... கைல வெளங்கு எல்லாம் போட்டு ஒரு பத்து பேருகிட்ட இருக்கும்... இரும்பு சங்கிலியில கட்டி வரிசையா கூப்பிட்டு போறது தெரிஞ்சது. மனசு பாதிச்சவங்களுக்கு அங்க இருக்குற வைத்தியருங்க கொடுக்குற ட்ரீட் மெண்டாம். ஏதோ குத்தவாளிங்கள கூட்டிட்டு போற மாதிரி... இப்படியெல்லாமா வைத்தியம்னு யோசன...மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு.

சரி...அதோட விட்டமா...? அங்க குளிச்ச கையோட அஞ்சருவிக்கு கெளம்பியாச்சு. வண்டிதான் இருக்குல்ல... ரொம்பல்லாம் யோசிக்கல... அஞ்சருவிலயும் தண்ணி நல்லா வந்துகிட்டு இருந்துச்சு... பெரிய சோடியம் வேப்பர் பல்ப் போட்டிருந்ததால இருட்டால்லம் ஒண்ணும் இல்ல. இங்க கொஞ்ச பேரு குளிச்சிட்டு இருந்தாங்க... இங்கயும் ரொம்ப சுகமான குளியல். அதுலயும் வலதுகை பக்கமா விழுற அருவில கொஞ்சம் சந்து போல இருக்கும். அதுக்குள்ள போயி நின்னா வெளிய வர மனசே வராது. மூச்சு முட்டுற அளவுக்கு நிப்போம். அருவித்தண்ணி தலலயும் முதுகுலயும் விழுறது சும்மா.. மசாஜ் பண்ற மாதிரி இருக்கும். இங்கயும் ஆனந்தக்குளியல்...

ரெண்டரை மணிக்கு மேல இருக்கும். நல்லா பசிக்க ஆரம்பிச்சுச்சு. இப்பக்கொஞ்சம் குளுர வேற ஆரம்பிச்சிருச்சு. மறுபடியும் காப்பிக்கடக்கி போயி சூடா பால மட்டும் குடிச்சோம்.

சரிதான்.. நேரம் ஆச்சு... ஏதாவது லாட்ஜ்ல ரூம் போட்டுட்டு தூங்குவோம்னு முடிவு பண்ணுனோம்.
குத்தாலத்துல இருக்குற லாட்ஜ் ஒண்ணொன்னா தேடிப்போனமா.... நெறய இடத்துல கதவயே தெறக்கல... தெறந்த இடங்கள்ளயும் கெடச்ச பதிலு 'இடமில்ல' அப்டீங்கிறதுதான்..

குத்தாலத்துல இருக்குற எல்லா லாட்ஜயும் பாத்துட்டோம்... ஒரு லாட்ஜ்ல கூட ரூம் காலி இல்ல....!

எல்லாருக்கும் ஒரே எரிச்சல். குத்தாலத்துல இடமில்லன்னா என்ன...? தென்காசிக்கு போயிரலாம்னு தீர்மானமாச்சு.

திரும்பி தென்காசிக்கு வண்டிய விட்டோம்... அங்க போயி பாத்தா... என்னத்த சொல்ல... எங்க நேரம்.. சொல்லி வச்ச மாதிரி ஒரு லாட்ஜ்லயும் இடமில்லன்னு சொல்லிட்டாங்க...

எங்களுக்குன்னா ஒரே கடுப்பு.... என்னடா இது... இப்படி சோதனயா இருக்கேன்னு.. ஆனாலும் எல்லாருக்கும் ஒரே வைராக்கியம்... என்னன்னா... இத எப்படியும் விடக்கூடாது .... எப்படியாவது தூங்கிறணும்கிறதுதான்... தென்காசில இல்லன்னா விட்ருவமா...? கொஞ்சம் யோசன பண்ணிட்டு, செங்கோட்ட போயி பாக்கலாம். எப்படியும் ரூம் கெடைக்க வாய்ப்பிருக்குன்னு... முடிவாச்சு.

தெங்காசிலேருந்து நேரா செங்கோட்டக்கி போக வழி இருக்குன்னு வழியில சொன்னாங்களா...? சரீன்னு அந்த வழியா போனோம். இலஞ்சி..அப்டீங்கிற ஊரு வழியில இருந்ததுன்னு நெனவு.

செங்கோட்டைக்கி போய் சேரும் போது நல்லா விடிஞ்சி போச்சி... ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மேல ரூம் தேடி அலஞ்சிக்கிட்டிருக்கோமேன்னு அப்பதான் தெரிஞ்சது. அந்த ஊர்ல போயி லாட்ஜ் இருக்கான்னு கேட்டா ஒரே ஒரு லாட்ஜ்தான் இருக்கு... பஸ்ஸ்டாண்டுக்குள்ள இருக்கு..ன்னு சொன்னாங்க.

போயி கேட்டா ஒரே ஒரு சிங்கிள் ரூம்தான் காலியா இருக்கு.!. அப்டீன்னாரு அங்க இருந்தவரு.

அய்யா சாமி... பரவால்ல..குடுங்க... நாங்க பாத்துக்குறோம்.... சொல்லி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துட்டு ரூமுக்கு போய் சேந்தோம். எல்லாருக்கும் நல்ல அலுப்பு. நைட் பூரா வண்டி ஓட்டுனது.. அருவில குளிச்சதுன்னு... எப்படா கீழ விழுவோம்னு இருந்துச்சு.

அந்த ரூம்ல ஒரு சின்ன கட்டுலு மாத்திரம்தான் இருந்துச்சு. எல்லாரும் துண்ட விரிச்சு கீழயே படுத்துட்டோம். அடிச்ச போட்ட மாதிரி தூக்கம்.

திடீர்னு முளிப்பு வந்துச்சு. கபகப..ன்னு ஒரே பசி... காலைல மணி ஒரு பத்து இருக்கும். சாப்புடுறதுக்காக எல்லாரையும் எழுப்புனேன். பக்கத்துலேயே ஒரு சின்ன ஹோட்டல் இருந்துச்சு. கேரளாவுல இருந்து வர்ற லாரி டிரைவர் எல்லாம் அங்கதான் சாப்பிடுவாங்களாம்.

புட்டு, ஆப்பம், தோச இருக்குன்னு சொன்னாங்க. நான் சைவம்கிறாதால தோச மாத்திரம் சொன்னேன். நிஜாமும் பிரதீப்பும் தோச மாத்திரம் போதும்னு சொன்னாங்களா...சத்தியமோகன் தோசயோட ஒரு ஆம்லேட் ஆர்டர் கொடுத்தான். அந்த சர்வர் கொஞ்சம் வயசானவரு... "ஆம்லேட் தாரா..?" என்று மலையாளம் கலந்த தமிழில் கேட்க இவனும் "ஆமா.. ஆமா.. ஆம்லேட் தாங்க"ன்னு சொன்னான்.

எல்லாருக்கும் கேட்டது வந்துச்சு. தோச கொஞ்சம் சுமாரா இருந்துச்சு. ஆம்லேட் நல்லா பெரிசா இருந்துச்சு. சத்தியமோகனுக்கு ஒரே சந்தோசம்.... அங்கெல்லாம் ஏமாத்துராங்க. இங்க பாரு... இதயே ரெண்டு ஆம்லேட்ன்னு சொல்லி காச தீட்டிருவாங்க... அப்டீன்னு சொல்லிகிட்டே சாப்பிட்டான்.

ரெண்டு வாய் சாப்புட்டதுக்கு அப்புறம் அவனுக்கு லேசா ஒரு சந்தேகம்.. ஏதோ வாட அடிக்குதுன்னு... சர்வர கூப்பிட்டு கேட்டான்... ஆம்லேட் டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு... அவரு கஷ்டப்பட்டு வெளங்க வச்சதுக்கப்புறந்தான் தெரிஞ்சது தாரா..ன்னா வாத்து..ன்னு!! ம்.. அப்டீயும் அவன் விடலயே... முழுசா சாப்புட்டான்.

கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ண பின்னாடி... புரோகிராம் படி தேனருவி பாக்கப் போகணுமே.. மத்த எல்லாத்தையும் வச்சுட்டு சட்ட, டவுசர், துண்டோட கெளம்பினோம். செங்கோட்ட - குத்தாலம் ரூட்ல போனோம்.. அட.. அட... அந்த வழில வரும்போது மலை எல்லாம் பாக்க பாக்க கொள்ள அழகா இருந்துச்சு...

எல்லாத்தையும் ரசிச்சுகிட்டே வந்தோம். வர்ற வழில ரோட்டுலயே இளநி வெட்டி வித்துகிட்டு இருந்தாங்க... அதயும் ஒரு கை பாத்தோம். என்னா ருசி... என்னா ருசி...!

சிற்றருவி...ல சின்னதா ஒரு குளியல் போட்டுட்டு... தேனருவிய பாக்க கெளம்புனோம். அப்ப எனக்குத் தெரியாது... இப்டியெல்லாம் நடக்க போகுதுன்னு...

எலே... மேல போகும் போது வழுக்குமே.. செருப்ப எல்லாம் வண்டியில வச்சிட்டு போலாமே...ன்னு சத்தியமோகன் அபிப்பிராயப்பட்டான். ஆனா நாங்க மத்த மூணு பேரும் சும்மா செருப்போட போகலாம்ணு சொன்னோம். மெஜாரிட்டி சொன்ன பின்னாடி அப்புறம் என்ன..? செருப்பு போட்டுகிட்டேதான் போனோம்.

மேல போகுற வழியல அங்க அங்க சின்ன சின்னதா அருவி மாதிரி இருக்குற இடத்துல் எல்லாம் ஆளுங்க குளிச்சிட்டுகிட்டிருந்தாங்க..

செண்பகா தேவி அருவிக்கு போய் சேந்தோம். வசதியா அருவில குளிக்கணும்னு நெனக்கிறவங்களுக்கும் சரி... குளத்துல குளிக்கணும்னு நெனக்கிறவங்களுக்கும் சரி.. கிணத்துல குளிக்கணும் நெனக்கிறவங்களுக்கும் சரி.... அது ரொம்ப அருமையான இடம். ஏன்னா அருவி விழுற இடத்துல நின்னு வசதியா குளிக்கலாம். கொஞ்சம் தள்ளி பெரிய கிணறு மாதிரி அருவித்தண்ணி தேங்கி அப்புறமா போற இடம் இருக்கும். நல்ல ஆழத்துல இருந்து நின்னு குளிக்கிற அளவு ஆழம் வரைக்கும் தண்ணி இருக்கும். துணிச்சலா மேல இருந்து "டைவ்" அடிக்கிறவங்களுக்கும் அங்க ரொம்ப வசதிதான்...

எப்பயும் இருக்குறத விட இந்தத்தடவ கூட்டம் கொஞ்சம் கூடத்தான் இருந்துச்சு...!

நேரம் வேற ஆயிட்டிருக்கு... கீழ வரும் போது பாத்துக்கலாம்னு அதுக்கு மேல போக ஆரம்பிச்சோம்.

போற வழியில அங்க அங்க பாறைங்க இருந்துச்சா... செருப்போட நடந்து போறது கொஞ்சம் செரமமா இருந்துச்சு. கொஞ்ச தூரம் கைல செருப்ப தூக்கிட்டு நடந்தமா... அப்புறமா யோசன பண்ணி.... ஏதாவது ஒரு இடத்துல செருப்ப எல்லாம் ஒளிச்சி வச்சிட்டுப் போலாம்.. வர்றப்ப எடுத்துக்கலாம்னு...

ஒரு இடத்த அடையாளம் பாத்துகிட்டு செருப்ப எல்லாம் வச்சோம். சத்தியமோகனுது மட்டும் சாதாரண சிலிப்பர். மத்தவங்களுது எல்லாம் "பாட்டா".

மேல போக போக கொஞ்சம் கொஞ்சமா ஆள் நடமாட்டம் குறைய ஆரம்பிச்சிருச்சு. இருந்தாலும் ரெண்டு பேரு... மூணு பேருண்ணு அங்க அங்க ஆளுங்க வந்துகிட்டு இருந்தாங்க.

சின்ன வயசுல படிச்ச குற்றாலக்குறவஞ்சி நினைவுக்கு வந்துச்சு... கொரங்குக வேற அங்க அங்க உர்..உர்..னு சத்தம் போட்டுகிட்டு கூட்டமா சுத்திகிட்டு இருந்துச்சுங்க.

தூறல் வேற லேசா விழுந்துகிட்டே இருந்துச்சு.. தேனருவிய பாக்கப் போகணுங்கிறதுல இருந்ததால நேரம் போறதே தெரியல.. வெயிலே தெரியாத அளவுக்கு மோடம் போட்டிருந்துச்சு.

போய்கிட்டு இருக்கும் போது கொஞ்ச கொஞ்சமா ஒரு பத்து பேருகிட்ட சேர்ந்துட்டோம். வரிசையா பேசிகிட்டே போனோம். ஒரு இடத்துல சின்ன ஓடை மாதிரி இருந்துச்சு. அது தாண்டிப் போறதுக்காக கட்டுன பாலம் ஒடஞ்சி போயி இருந்ததால, அந்த ஓடைக்கு அந்தப்பக்கம் போகணும்னா ஓடையில நடந்துதான் போகணும். நாம நடக்குற இடத்துல ஒரு பெரிய பாற இருந்துச்சு. அதுக்கு மேல கணுக்கால் அளவுக்கு தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சு. அந்தப் பாற ஒரு ஆறு ஏழடி இருக்கும். அதுல கால் வச்சதுமே தண்ணி "சர்"ன்னு இழுக்குற மாதிரி இருந்துச்சு. ஆழமில்லாட்டி கூட ஆள இழுத்துரும் போல இருந்துச்சு.

ஒரு வழியா அதத் தாண்டி மேல போக ஆரம்பிச்சோம். மேல இருந்து ஆளுங்க எல்லாம் கீழ வந்துகிட்டு இருந்தாங்க...

போற வழியில எல்லாம் ரொம்ப பெரிய பெரிய பாறைங்க.... குரங்குக குடும்பம் நடத்துறதுக்கு வசதியா பாறைகளுக்கு கீழ பெரிசா இடம் இருந்துச்சு.

தேனருவிய பாக்குறதுக்கு வழுக்குப்பாறைகள்..ல எல்லாம் கவனமா சர்க்கஸ் வேல செஞ்சி போனாதாம் பாக்க முடியும்.

ரொம்ப கஷ்டப்பட்டு தேனருவிய பாக்க முடிஞ்சது.... தேனருவி.... நல்ல உயரத்துல மலை உச்சியிலிருந்து விழுந்துகிட்டு இருந்துச்சு. ஒரு ஆளு கட்டிப்பிடிச்சா எந்த அளவு இருக்குமோ அந்த அளவுல "திமுதிமு"ன்னு தண்ணி விழுந்துகிட்டு இருந்துச்சு. மத்த அருவி மாதிரி இந்த அருவில போய் தலய காட்ட முடியாது... ஆள அமுக்கிப்பூடும்ல... மேல இருந்து விழுற வேகத்துல பக்கத்துல கூட போக முடியாது... தூரத்துல இருந்துதான் குளிக்கணும்.

பக்கதுல இருந்த ஆளு சொன்னான்... என்ன இவ்ளோ தண்ணி விழுது.. எப்பயும் குழாயில வர்ற கணக்காதான தண்ணி விழும்...!..ன்னு..

அந்த ஆளு சொல்லிகிட்டிருக்கும் போதே அங்க குளிச்சிகிட்டிருந்த ஆளுங்க எல்லாம் விழுந்தடிச்சிகிட்டு மேலே ஏறி வந்துகிட்டு இருந்தாங்க. என்னன்னு விசயம் கேட்டப்ப " லெவல் கூடிகிட்டே இருக்கு...தண்ணி கலர் மாறுறது தெரியலயா..."ன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருந்தாங்க...

அப்பதான் புரிஞ்சது... முதல்ல வெள்ள வெளேர்னு விழுந்துகிட்டு இருந்த அருவித்தண்ணி இப்ப செம்பட்ட கலர்ல விழுகுது....! மேல விழுந்த மழைல தண்ணி வரத்து எக்கச்சக்கமா கூடியிருக்குன்னு..... ஹம்..தேனருவிய ஆசயோட பார்த்ததோட சரி... குளிக்கணும்கிறத எல்லாம் மறந்துட்டு கீழே போயே ஆகணும்னு ஆகிப்போச்சு...

புதுசா வந்தவங்கள தவிர எல்லாரும் வேகமா இடத்த காலி பண்ணிகிட்டு இருந்தாங்க... எங்களுக்கும் வேற வழியில்ல... அவசரமா வெளிய போறதுல ஒரு வழுக்குப்பாறைல பிரதீப் வழுக்கி விழ... லேசான செராய்ப்போட தப்பிச்சாப்புல...

வேக வேகமா கீழ வந்தா..... எங்களுக்கு முன்னாடி ஒரு "க்யூ". வரும் போது ஒரு இடத்துல ஓடய தாண்டி வந்தோம்ல.. அங்கதான்... கணுக்கால் அளவுக்கு இருந்த தண்ணி இப்ப முழங்கால் அளவுக்கு மேல ஓடிகிட்டு இருக்கு...!!

முன்னாடி நின்ன ஆளு அதுல நடந்து போக ரொம்ப பயப்பட்டாப்ல. அந்த க்ரூப்ல வந்த கொஞ்ச பேரு அந்தப்பக்கமா போயிட்டாங்க... அதுல ஒரு ஆளு அந்தப்பக்கத்துல இருந்து ஒரு நீளமான துண்ட தூக்கிப்போட்டு எங்க பக்கமா இருந்த ஆள பிடிச்சுகிட்டு வர சொன்னாரு. இவரும் துண்ட பிடிச்சிகிட்டு தண்ணியில ஒரு எட்டு எடுத்து வச்சாரு பாருங்க... அவ்வளவுதான்... தண்ணி போய்ட்ருந்த வேகத்துல அவரையும் இழுத்திருச்சு. நல்ல வேளயா அவரு துண்ட விடல... தன்ணி இழுத்த வேகத்துல ஒரு பாறைல போயி மோதுனாரு... அந்தப்பக்கமா இருந்த ஆளுங்க அடிச்சி பிடிச்சி அவர மேல தூக்கிப் போட்டாங்க...

இதுக்கு அப்புறமா அந்த இடத்துல தண்ணில கால் வைக்க யாருக்காவது தய்ரியம் வருமா...? என்ன செய்யலாம்னு அந்தப்பக்கம் இருந்தவங்களும் இந்தப்பக்கம் இருந்தவங்களும் பேசிகிட்டு இருக்கும் போதே மழை விழ ஆரம்பிச்சது...!

அந்தப்பக்கம் இருந்த ஆளுங்க... போயி பயர் ஸ்டேசன்ல சொல்றம்... அவங்க வந்து எப்படியாவது ஹெல்ப் பண்ணுவாங்க... அப்டீன்னாங்க...

எப்ப தண்ணி வர்றது கொறயும்..னு கேட்டதுக்கு... இப்ப வர்ற தண்ணிய பாத்தா எப்படியும் கொறய ரெண்டு நாளாவது ஆகும்..னு சொன்னாங்க..!

மழைன்னா மழை... பேய் மழை... அப்படி விழுகுது.... அந்தப்பக்கம் இருந்தவங்கள்ளாம் ஓடிப்போயிட்டாங்க...

மழைல ஏன் நிக்கணும்... ஏதாவது பாறைக்கு கீழ ஒதுங்கலாம்னா குரங்குக எல்லாம் மொறச்சு பாக்குதுக.... எங்க கூட்டம் அவங்க கூட்டத்த விட ரொம்ப இருந்ததால அவைகள வெரட்டிட்டு நாங்க ஒதுங்குனோம்.

ஒரு ஆளு பத்திரமா சுத்தி வச்சிருந்த பிளாஸ்டிக் பைல இருந்து ஒரு பீடிய எடுத்து பத்த வச்சாரு. நம்ம சத்தியமோகன் சிகரெட் விசயத்துல பெரிய கில்லாடில்ல... அண்ணே.. எனக்கும் ஒரு பீடி கொடுங்க...ன்னு அசடு வழிய கேட்டான். அவரும்... பாருங்க தம்பி.. ரெண்டு நாளக்கி சாப்பாடு கீப்பாடு கெடக்குமான்னே தெரியல.. மழை எப்ப நிக்கும்ன்னும் தெரியாது... இந்த நெலல என்கிட்ட இருக்குறது இன்னும் ஒரே ஒரு பீடி... அதயும் ஒங்கிட்ட குடுத்துட்டன்னா நான் என்ன செய்ய..ன்னு கேட்டாரு...! அப்புறம் என்ன நெனச்சாரோ... இருந்தத அவரும் கொடுக்க... சத்தியமோகன் அத வாங்கி பத்த வைக்கும் போது அவன் முகத்துல என்ன ஒரு சந்தோசம் தெரியுமா...?

ஒரு மணி நேரம் ஆச்சு... ரெண்டு மணி நேரம் ஆச்சு.. மழை நிக்கிற வழியா தெரியல.. என்ன பண்றதுன்னும் தெரியல...

டவுசர் பாக்கெட்ல வண்டிச்சாவிய தவிர வேற ஒண்ணும் இல்ல. ரெண்டு நாள எப்படி தள்றது..? சாப்பாடும் கெடயாது... குளுரு வேற அடிக்குது.... என்ன பண்றதுன்னு ஆளுக்காளு யோசன பண்ணுனோம்.. அப்பிடியே கெடக்கிற வழில நடந்து போனா கேரளாவுக்கு போயிரலாம்..ன்னு ஒரு ஆளு யோசன சொன்னாப்ல...

சரீ.. சும்மா இருக்குறதுக்கு ஏதாச்சும் முயற்சி பண்றது தப்பில்லன்னு முடிவு பண்ணுணோம். மொத்தம் பத்து பேரு இருந்ததால ரெண்டு மூணு பேரா நடக்க ஆரம்பிச்சோம். சினிமா படத்துல வர்ற மாதிரி கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா "ஹோய்... ஹோய்"ன்னு சத்தம் கொடுத்துகிட்டே போனோம். எதுத்தாப்ல என்ன வரும்னு தெரியாத நெலம... செருப்பும் கெடயாது... வழி நெடுக "சொத சொத"ன்னு சகதி மாதிரி இருக்கு... ரெண்டு பக்கமும் இடவெளியே இல்லாம செடியும் புல்லுமா வளந்து கெடக்கு... எந்த தெசைல போறோம்னும் தெரியல...

மரம் வெட்டிட்டு போறவங்க அடிக்கடி போற பாத போல... நிக்காம மழைல நடந்துகிட்டே இருந்தோம்.

ஒன்னு ஒன்னர மணி நேரம் நடந்திருப்போம்.... கிட்டத்தட்ட ஒரு சமதளத்துக்கு வந்து சேந்துட்டோம்.. வழில ஒரு போர்டு தமிழ்ல... அரசு தாவர ஆராய்ச்சிப்பண்ணையோ ... அரசு மூலிகை ஆராய்ச்சிப்பண்ணையோ..ன்னு எழுதியிருந்துச்சு... அப்பாடா ... கொஞ்சம் நிம்மதி மனசுல... பெரு மூச்சு விட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சோம். அந்த வழி சிற்றருவிக்கு பக்கத்துல ஒரு இடத்துக்கு வந்து சேந்துச்சு. மழையும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிருச்சு.

கீழ வந்து வண்டி எல்லாம் இருக்கான்னு பாத்தோம்.. நல்ல வேள அங்ஙனயே இருந்துச்சு.

மணி நாலரைகிட்ட இருக்கும்...மதியம் சாப்பிடலல்ல.... இப்பத்தான் வயித்துக்கு தெரிஞ்சது போல... தள்ளுவண்டில சுடச்சுட பஜ்ஜி போட்டுகிட்டு இருந்தாங்க... நாக்குல எச்சி ஊறிச்சு. மொளகா பஜ்ஜி, உருளக்கெழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜின்னு எல்லா வக பஜ்ஜியையும் ஒரு கை பாத்தோம். சூடா காப்பித்தண்ணியும் உள்ளத் தள்ளுனப்புறம்தான் ஒரு தெம்பே வந்துச்சு.

கத இதோட முடிஞ்சதுன்னு நெனச்சீங்களா... விட்ருவனா....?

செம்பகாதேவிக்கு மேல மலைல செருப்ப ஒளிச்சு வச்சுட்டு வந்தோம்ல... அத எடுத்துட்டு வந்துருவோம்னு சொன்னேன்.

சத்தியமோகன் சொன்னான்... செருப்பு போனா போகுது.. விட்ருவம்டா... வேற வாங்கிரலாம்..ன்னு...

அவனுது வெறும் சிலிப்பர்.. நம்மது அப்டீயா...? போயி எடுத்துத்தான் ஆகணும்னு அடம் பிடிச்சு, மறுபடியும் எல்லாரும் மேல போனோம்.

செருப்பு அடயாளம் வச்ச இடத்துல போயி பாத்தா....! யாரோ புண்ணியவான் செஞ்ச வேல... அங்க... சத்தியமோகனோட செருப்பு மாத்திரம்தான் இருக்கு.. மத்த மூணு பேரோட செருப்பு... போயே போயிந்தி...!!

எல்லாம் விதின்னு நொந்துகிட்டு கீழ எறங்கி வந்தமா... செம்பகாதேவிய இப்ப பாக்க ரொம்ப பயமாகிப் போச்சு.. ஏன்னு கேக்குறீங்களா...? செம்பகாதேவிக்கு போயிட்டு வந்தவங்களுக்குத்தான் நான் சொல்றது புரியும். அருவி மலைய ஒட்டி இருக்குற சின்ன திண்டு பக்கத்துலதான் விழும். அதுல வர்ற தண்ணி எல்லாம் அதுக்கு முன்னாடி இருக்குற கொளத்துல நெரம்பி அதுக்கப்புறம்தான் போகும்.

இப்ப என்னாடான்னா... அருவில இருந்து விழுற தண்ணி திண்டுலயும் விழல... கொளத்துலயும் விழல... எல்லாத்தையும் தாண்டி தனியா விழுந்துகிட்டு இருந்துச்சு...!

எப்பயும் அருவி விழுற சத்தம் கேட்க சுகமா இருக்கும்ல... இப்ப அருவியோட சத்தத்த கேக்க முடியல... யாரயோ அடிக்க போற ஆக்ரோசத்தோட, செம்மண் கலந்த நெறத்துல தண்ணி போற வேகத்தப்பாத்தா.... இயற்கைக்கெதுத்தாப்ல யாரும் நிக்க முடியாதுங்கிறது நல்லாவே தெரிஞ்சது.

வண்டிய எடுத்துகிட்டு அய்ந்தருவிக்கு போய் பாக்கலாம்னு போனோம்.. அங்க அய்ந்தருவிய காணோம்.. அஞ்சும் ஒண்ணா சேந்து ஒரே அருவியா... கோயில் படிக்கட்டுல இறங்கிப் போவோம்ல.. அதுக்குப் பக்கத்துல விழுந்துகிட்டு இருந்துச்சு...!! அதுக்குப் பக்கத்துலயே போகக்கூடாதுன்னு போலீஸ் ஏக கெடுபிடி...

குத்தாலத்துலயே ஒரு ஹோட்டல பாத்து திருப்தியா சாப்டுட்டு நைட் தூங்க செங்கோட்டக்கிப் போயிட்டோம். காலைல ஒரு நாலு நாலரைக்கு கெளம்புனா ஜெனரல் ஷிப்ட் வேலக்கி போயிரலாம்னு திட்டம்.

அன்னக்கி அலஞ்ச அலச்சல்ல... சொல்லணுமா... நல்லா தூங்குனோம். தற்செயலா எந்திரிச்சிப்பாத்தா அஞ்சு மணி ஆகிப்போச்சு. அடிச்சுப்பிடிச்சு கெளம்பி லாட்ஜை காலி பண்ணிட்டு போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணுனா..... என்னத்த சொல்ல.... நிஜாமோட வண்டி ஸ்டார்ட் ஆகல...!

ஸ்பார்க் பிளக்க கழட்டி கிளீன் பண்ணி பாத்தோம். வண்டி ஸ்டார்ட் ஆச்சு... ஆனா உடனே நின்னுருச்சு. எப்டியாவது ஸ்டார்ட் பண்ணிறனும்னு விடாம முயற்சி பண்ணுனோம்... வள்ளுவர் சொன்னது மாதிரி.. முயற்சி திருவினையாச்சு... வண்டி ஸ்டார்ட் ஆகும் போது மணி ஆறு ஆறரை இருக்கும்.

எப்பிடியும் வேலக்கி போயே ஆகணும்னு நான் குறியா இருந்தேன். சத்தியமோகனும் நானும்தான் ஜெனரல் ஷிப்ட் வேலக்கி போகணும்.. அதனால அவன ஏன் வண்டியில உக்கார வச்சிட்டு நாங்க சீக்கிரமா போறோம்... நீங்க ஆற அமர வாங்கன்னு நிஜாம்கிட்டயும் பிரதீப்கிட்டயும் சொல்லிட்டு வண்டிய கிளப்புனனா....

இந்த மழை இருக்கு பாருங்க... அப்பயும் நம்ம விட்டுச்சா... மறுபடியும் விழ ஆரம்பிச்சிருச்சு... வேகமா வந்தா தார்ரோட்ல வழுக்கிருமோன்னு பயம் இருந்ததால அம்பது அறுபதுக்கு மேல போகல... ஆலங்குளத்த தாண்டி கொஞ்ச தூரம் வந்த பின்னாடிதான் மழை நின்னுச்சு... அங்க இருந்து நல்ல வேகம்....

திருநெல்வேலிக்குள்ள வரும் போது காலைல எட்டேகால் மணி... எல்லோரும் ஸ்கூல்,ஆபீசுன்னு போறதால ட்ராபிக் ரொம்ப இருந்துச்சு... பாளயங்கோட்ட வரும் போது எட்டு இருபத்தஞ்சு... பஸ் பின்னாடியே போனா வேகமா போகலாம்னு போனா.... கொடுமை... அது திருச்செந்தூர் பஸ்... திருச்செந்தூர் ரோட்ல கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி மறுபடி தூத்துக்குடி ரோட்டுக்கு வந்தோம்.

ஊர விட்டு வெளிய வந்த பின்னாடி... வண்டியில எவ்வளவு வேகமா போக முடியுமோ அந்த அளவுக்கு வேகமா ஓட்டுனேன்... ஆக்ஸிலேட்டர அதுக்கு மேல திருப்ப முடியல... எவ்ளோ வேகம்னு பாத்தா... நம்புவீங்களோ மாட்டீங்களோ.... நூறுக்கும் நூத்து அஞ்சுக்கும் நடுவுல முள்ளு இருந்துச்சு....

.. "ம்ம்ம்ம்ம்ம்..." -ன்னு வண்டி போற சத்தம் மாத்ரம்தான்.... வேற எந்த சத்தமும் கேக்கல... சரியான விரட்டு.... அப்டியே பறக்குற மாதிரி இருந்துச்சு. வல்லநாடு, புதுக்கோட்டை எல்லாம் போனதே தெரியல.

வீட்டுக்கு வந்தப்ப மணி ஒம்போது... யூனிபார்மை அடிச்சி பிடிச்சி மாட்டிகிட்டு கம்பெனில வேலக்கி போய் சேந்தப்ப ஒம்போது எட்டு... போயி உக்காந்து டேபிள் மேல கைய வச்சா... கை தன்னால நடுங்கிகிட்டு இருக்கு...! கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் ஆட்டம் நின்னுச்சு... கிட்டத்தட்ட அம்பது கிலோமீட்டருக்கும் மேல... அத அர மணி நேரத்துல வந்துருக்கோம்...!

ஆர அமர யோசன பண்ணுனேன்...வர்ற வேகத்துல ரோட்டுல சின்ன கல்லு இடறி இருந்தா கூட என்ன ஆயிருக்கும்...? ஏன் இவ்வளவு அவசரப்பட்டு போகணும்.. அவசரப்பட்டு வரணும்ன்னு....!!

பின்குறிப்பு:
1. அதுக்குப்பின்னாடி கொஞ்ச நாளுலேயே சத்தியமோகன் அவனோட மோட்டார்பைக்க வித்துட்டு வெஸ்பா வாங்கிட்டான்..
2. குத்தாலம் போகணும்... தேனருவிய பாக்கணுங்கிற ஆச அத்தோட போச்சு...!!


-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:

1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்

மன்மதன்
20-08-2005, 08:35 AM
ஆஹா.. ஆஹா.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்..

இந்த தடவை நான் ஊர் போயிருந்த போது மலேஷியாவிலிருந்து நண்பன் ஒருவன் வந்திருந்தான். இன்னும் 2 நண்பர்களுடன் காரை எடுத்துகிட்டு கிளம்பினோம்...

அந்த போலிஸ்காரர்கள் இன்னமும் இருக்கிறார்கள். சீசன் டைம்னாவே அதான் பிரச்சனை.. அதனால்தான் என்னவோ நாங்கள் இரவு 12 மணிக்கு மேல் போய்தான் குளிப்போம். இந்த தடவை நான் அதிகம் தண்ணீர் விழும் இடத்தில் நிற்கவில்லை. கண் மருத்துவர் கூறிய அட்வைஸ்படி தண்ணீர் கொஞ்சமாக விழும் இடத்தில்தான் நின்றேன். அதற்கே உடம்பு முறுக்கியெடுத்து விட்டது.


தென்காசி வரும் போது லேசா சாரல் வேற... ஆனா நல்ல வேளையா மழ விழல... ஒரு வழியா ஒரு பன்னெண்டு... பன்னெண்டர மணி இருக்கும்... குத்தாலம் வந்து சேந்தோம்.

சீசன் டைம்ல எப்பவும் சிறு தூரல் இருந்துகொண்டேதான் இருக்கும்..டவுசர் பாக்கெட்ல வண்டிச்சாவிய தவிர வேற ஒண்ணும் இல்ல. ரெண்டு நாள எப்படி தள்றது..? சாப்பாடும் கெடயாது... குளுரு வேற அடிக்குது.... என்ன பண்றதுன்னு ஆளுக்காளு யோசன பண்ணுனோம்.. அப்பிடியே கெடக்கிற வழில நடந்து போனா கேரளாவுக்கு போயிரலாம்..ன்னு ஒரு ஆளு யோசன சொன்னாப்ல...

படிக்கும் போது செம இண்டரஸ்டிங்க்... குத்தால அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாரதி..

அன்புடன்
மன்மதன்


(கொஞ்சம் பெரிய பதிவாக இருந்தாலும் படிக்க, படிக்க படு வேகமாகத்தான் போகுது.. எல்லோரும் படிக்க வேண்டிய கதை ..சாரி.. கட்டுரை...)

kavitha
20-08-2005, 11:13 AM
எனக்கு, சீசன்ல வருசா வருசம் தொலைக்காட்சியில் அருவிய காட்டும்போதெல்லாம் நாம பார்க்கமுடியலையேனு வருத்தமா தான் இருக்கும்.

ஜமாய்ங்க மக்கா!

rajasi13
24-09-2005, 02:31 PM
இந்த மாதிரி புலியருவி போய் மாட்டிக்கிட்ட அனுபவம் எனக்கும் இருக்கு . ஆனா நாங்க தப்பிச்சிட்டோம் நாந்தான் தென்காசி காரன்ல, அதையும் எழுதரேன்.

பாரதி
26-09-2005, 04:12 PM
கருத்துக்கு நன்றி கவி. சில விசயங்கள் கற்பனையில் நிஜத்தை விட சுவாரஸ்யமாகவும் இருக்கக்கூடும்.

அன்பு ராஜாஸி. தென்காசிக்காரா நீங்கள்..! அப்படியானால் உங்களிடமிருந்து சுவையான பதிவுகளை எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக சொல்லுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

gragavan
27-09-2005, 07:41 AM
இதப் பதிஞ்சி ரொம்ப நாளாயிருக்கும் போல இருக்கே. எப்படி பாக்காம விட்டேன்.

தூத்துக்குடில இருந்து பொறப்பட்டு திருநவேலி, தெங்காசி வழியா குத்தாலம் போய்க் குளிச்ச அனுபவம் பிரமாதம். எனக்கும் அது பல நினைவுகளைக் கிண்டு விடுது. உக்காந்து எழுதுனா ஒரு நாவல் அளவிற்கு வரும்.

உக்காந்து எழுதப் பாக்குறேன். நீங்கதான் தூண்டிவிடுறீங்களே......ஒங்க எழுத்த வெச்சு.

பாரதி
27-09-2005, 05:03 PM
நன்றி இராகவன். இப்பகுதி ஏற்கனவே "திஸ்கி"யில் வந்த மன்றத்தில் சில பகுதிகளாக இடம் பெற்றிருந்தது. ஒருங்குறியில் மன்றம் மாற்றப்பட்ட பின்னர் அதை இங்கு பதித்தேன். உங்களின் நாவலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

இளசு
29-10-2005, 10:32 PM
ஒருங்குறி = யூனிகோட்.
எங்கப்பா பிடித்தாய் இந்த சொல்லை? அழகு.

மீண்டும் படிக்க நீண்ட த்ரில்லிங் குறுநாவலாய் விருவிருப்புடன் ...
அருமை பாரதி.

என் நினைவில்-
திஸ்கியில் கவிதைகள் தந்த என் நண்பர் மௌரியன் அவர்களின் திருமணம் நாகர்கோவிலில்;
அது முடிந்து, நண்பர்களுடன் குற்றாலம் போய், 2 நாள் என்பது 4 நாளாய் நீண்டு..
அப்படியே ஆண்டாள் குடியிருக்கும் திருவில்லிப்புத்தூர், மொகமத்சாகிப் புரம் ( மம்சாபுரம் ), ராஜபாளையம் எல்லாம் போய் நண்பர்களிடம் சாப்பிட்டுவிட்டு காசும் வாங்கிக்கொண்டு வந்த நிகழ்வுகள்..

மனதை உசுப்பிவிடும் பதிவுகள்- இந்த தேதியில்லா குறிப்புகள்..

அன்புரசிகன்
05-01-2008, 11:33 AM
அப்படியே நம்ம மலைநாட்டு பகுதி பிரயாணம் கண் முன் வந்தது....

நல்ல விபரிப்பு....

மலர்
05-01-2008, 12:51 PM
பாரதி அண்ணா...
காட்சி விவரிப்பு அருமை...

உங்களோட சேர்ந்து நாங்களும் குற்றாலத்தை சுத்தினோமே..
நான் இதுவரை ஒரே ஒரு முறை தான் தேனருவிக்கு போயிருக்கேன்..
அதுவும் ஒரு கும்பலா போனதால பேசிட்டே போறதுக்கு நல்லா இருந்திச்சி....
போன வருசம் கூப்பிட்டனே வந்தியாலே..?
சத்தியமோகன் சொன்னான்... எலே... இப்பவே கிளம்ப நான் ரெடி... கூட யாரு வர்றீங்க..?எலே... மேல போகும் போது வழுக்குமே.. செருப்ப எல்லாம் வண்டியில வச்சிட்டு போலாமே...ன்னுஆஹா...
திருநெல்வேலி பாஷை...:D :D
அருவில குளிக்கும் போது கொஞ்சம் கூட குளுரவே இல்ல...! ஆமா...அதே மாதிரி அதிகாலையில குளிச்சாலும் குளுராது.. தண்ணி வெதுவெதுப்பாவே இருக்கும்,,,,

மழைல ஏன் நிக்கணும்... ஏதாவது பாறைக்கு கீழ ஒதுங்கலாம்னா குரங்குக எல்லாம் மொறச்சு பாக்குதுக.... எங்க கூட்டம் அவங்க கூட்டத்த விட ரொம்ப இருந்ததால அவைகள வெரட்டிட்டு நாங்க ஒதுங்குனோம் குரங்குங்க தொல்லை தான் பெரிய தொல்லையா இருக்கும்..:eek: :eek: கையில ஒண்ணையும் வச்சிருக்க விடாதுங்க...
இப்படிதான் போனதடவை குற்றாலம் போகும் போது என்னாச்சி தெரியுமா நான் கையில சிப்ஸ் பாக்கெட்டோட நிக்கிறேன்.. ஒரு பெரியகுரங்கு வந்துட்டு.... கொர்ன்னு முறைச்சி பாக்குது.. ம்ம் நான் சும்மா இருந்திருக்கலாம் அத உட்டுட்டு நானும் பதிலுக்கு முறைச்ச்சி பாக்க... அவ்ளோ தான் கோவம் வந்து என் கையில இருந்த ரெண்டு சிப்ஸ் பாக்கெட்ல ஒண்ணை பிடுங்கிட்டு ஓட ஆரம்பிச்சிட்டு.., :traurig001: :traurig001: ஒரு நிமிஷத்துல மரத்தோட உச்சிக்கு வேற போயிட்டு...
அதுக்குள்ள நான் போட்ட சத்தத்துல எங்க அப்பா கம்போட வர என்னை சுத்தி நின்ன குரங்கெல்லாம் ஜீட்.... :icon_rollout: :icon_rollout:

சிவா.ஜி
05-01-2008, 01:22 PM
ஒரு பெரியகுரங்கு வந்துட்டு.... கொர்ன்னு முறைச்சி பாக்குது.. ம்ம் நான் சும்மா இருந்திருக்கலாம் அத உட்டுட்டு நானும் பதிலுக்கு முறைச்ச்சி பாக்க... என்னை சுத்தி நின்ன குரங்கெல்லாம் ஜீட்.... http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/

மலரு சூப்பர்.ஒரு பார்வைக்கே எல்லா குரங்கும் ஜூட்டுன்னா.....மலரு நீ பெரிய.........................ஆள்தாம்மா!!!!!

அன்புரசிகன்
05-01-2008, 01:24 PM
மலரோட அப்பாவோட குரல கேட்டே குரங்குகள் அரண்டுவிட்டனவா???? அப்போ மலோர குரலப்பார்த்து???????

மலர்
05-01-2008, 01:27 PM
மலரோட அப்பாவோட குரல கேட்டே குரங்குகள் அரண்டுவிட்டனவா???? அப்போ மலோர குரலப்பார்த்து???????
அரைகுறை தூக்கத்துல படிச்சிட்டு எல்லாம் கேள்வி கேக்கப்படாது..
முகத்தை கழுவிட்டு....
ஒழுங்கா படிங்க...

மலர்
05-01-2008, 01:34 PM
மலரு சூப்பர்.ஒரு பார்வைக்கே எல்லா குரங்கும் ஜூட்டுன்னா.....மலரு நீ பெரிய.........................ஆள்தாம்மா!!!!!
நோ கமெண்ட்ஸ்...
ஒன்லி ஆக்ஷன்....
:traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001: :traurig001:

அன்புரசிகன்
05-01-2008, 01:34 PM
சரி தெளிவாகவே கேட்கிறேன். நீங்க போட்ட சத்தத்திலயா அல்லது உங்க அப்பா கொண்டுவந்த பிரம்பிற்கா குரங்கு ஓடியது???? (பிரம்புக்குத்தான் ஓடியது என்றால் நீங்களும் ஓடியிருக்கணுமே)

மலர்
05-01-2008, 01:49 PM
சரி தெளிவாகவே கேட்கிறேன்.
அது,,.,,,
அப்போ முதல்ல நீங்க தெளிவா இல்லைன்னு ஒத்துக்கிறீங்க... குட்

நீங்க போட்ட சத்தத்திலயா அல்லது உங்க அப்பா கொண்டுவந்த பிரம்பிற்கா குரங்கு ஓடியது???? (பிரம்புக்குத்தான் ஓடியது என்றால் நீங்களும் ஓடியிருக்கணுமே) பெரும்பாலும் குற்றாலத்துல உள்ள குரங்குங்க ஆண்களை கண்டால் தான் கொஞ்சமாச்சும் பயப்படும்..
நான் என்ன குரங்கை என் கண்ணே மணியே முத்தேன்ன்னு கொஞ்சவா செய்தேன் யப்பான்னு அலருனேன்...
அதுக்குள்ள எங்க அப்பாவும் கம்போட வர மங்கீஸ் எல்லாம் ஜீட்...
அப்புறம் அப்பாவோட பிரம்புக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லீங்கோ.. :rolleyes: :rolleyes:

பாரதி
05-01-2008, 10:18 PM
திஸ்கியில் கவிதைகள் தந்த என் நண்பர் மௌரியன் அவர்களின் திருமணம் நாகர்கோவிலில்;
அது முடிந்து, நண்பர்களுடன் குற்றாலம் போய், 2 நாள் என்பது 4 நாளாய் நீண்டு..
அப்படியே ஆண்டாள் குடியிருக்கும் திருவில்லிப்புத்தூர், மொகமத்சாகிப் புரம் ( மம்சாபுரம் ), ராஜபாளையம் எல்லாம் போய் நண்பர்களிடம் சாப்பிட்டுவிட்டு காசும் வாங்கிக்கொண்டு வந்த நிகழ்வுகள்..

மனதை உசுப்பிவிடும் பதிவுகள்- இந்த தேதியில்லா குறிப்புகள்..
மிக்க நன்றி அண்ணா.


அப்படியே நம்ம மலைநாட்டு பகுதி பிரயாணம் கண் முன் வந்தது....
நல்ல விபரிப்பு....
நன்றி அன்பு.


பாரதி அண்ணா...
காட்சி விவரிப்பு அருமை...

உங்களோட சேர்ந்து நாங்களும் குற்றாலத்தை சுத்தினோமே..
நான் இதுவரை ஒரே ஒரு முறை தான் தேனருவிக்கு போயிருக்கேன்..
அதுவும் ஒரு கும்பலா போனதால பேசிட்டே போறதுக்கு நல்லா இருந்திச்சி.... ஆஹா...
திருநெல்வேலி பாஷை...:D :D ஆமா...அதே மாதிரி அதிகாலையில குளிச்சாலும் குளுராது.. தண்ணி வெதுவெதுப்பாவே இருக்கும்,,,,
குரங்குங்க தொல்லை தான் பெரிய தொல்லையா இருக்கும்..:eek: :eek: கையில ஒண்ணையும் வச்சிருக்க விடாதுங்க...
இப்படிதான் போனதடவை குற்றாலம் போகும் போது என்னாச்சி தெரியுமா நான் கையில சிப்ஸ் பாக்கெட்டோட நிக்கிறேன்.. ஒரு பெரியகுரங்கு வந்துட்டு.... கொர்ன்னு முறைச்சி பாக்குது.. ம்ம் நான் சும்மா இருந்திருக்கலாம் அத உட்டுட்டு நானும் பதிலுக்கு முறைச்ச்சி பாக்க... அவ்ளோ தான் கோவம் வந்து என் கையில இருந்த ரெண்டு சிப்ஸ் பாக்கெட்ல ஒண்ணை பிடுங்கிட்டு ஓட ஆரம்பிச்சிட்டு.., :traurig001: :traurig001: ஒரு நிமிஷத்துல மரத்தோட உச்சிக்கு வேற போயிட்டு...
அதுக்குள்ள நான் போட்ட சத்தத்துல எங்க அப்பா கம்போட வர என்னை சுத்தி நின்ன குரங்கெல்லாம் ஜீட்.... :icon_rollout: :icon_rollout:

நினைவு கூறலுக்கு மிக்க நன்றி மலர். அன்போடு தன் இனத்தை வரவேற்க வந்தவரை (!) நீங்க முறைச்சி பார்த்திருக்க வேண்டியதில்லை.

aren
06-01-2008, 12:11 AM
என்ன மலர் இது, உங்கள் நண்பர்கள் உங்களை நலம் விசாரிக்க வரும்பொழுது அவர்களை முறைக்கலாமா. அதான் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.

ஆதவா
06-01-2008, 02:26 AM
அற்புதம்....

குற்றாலத்திற்கு இந்த பொங்கலைக் கொண்டாட எங்கள் குழு தீர்மானித்து கைவிட்ட நிலையில் உங்கள் அனுபவங்களைப் பார்த்தால் இந்த மாதங்கள் அதற்கு சரிபட்டு வராது என்றே தோன்றுகிறதே!

நேரடியே குற்றாலத்தைச் சுற்றிவந்த அனுபவத்தை உணர்ந்தேன்... எழுத்துக்கள் என்னை அப்படி இழுத்துச் சென்றன. குறிப்பாக என்றேனும் குற்றாலம் செல்லவிருக்கையில் உங்கள் அனுபவம் கண்முன் நிழலாடும்படி அமைந்திருக்கிறது....

அதிலும் வண்டியில் செல்லும் உங்கள் அனுபவம் எனக்கும் உண்டு என்பதால் பாதையை விட்டு விலகாமல் எனது நினைவுகள் உங்கள் எழுத்ததப் பின்பற்றியே குற்றாலம் பயணித்திருக்கிறது..........

aren
06-01-2008, 02:34 AM
சத்தமா சொல்லாதீங்க ஆதவன், பாரதி பில் அனுப்பிடப்போகிறார்.

மலர்
06-01-2008, 05:25 AM
அன்போடு தன் இனத்தை வரவேற்க வந்தவரை (!) நீங்க முறைச்சி பார்த்திருக்க வேண்டியதில்லை.

என்ன மலர் இது, உங்கள் நண்பர்கள் உங்களை நலம் விசாரிக்க வரும்பொழுது அவர்களை முறைக்கலாமா. அதான் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

பாரதி
06-01-2008, 05:59 AM
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

அடடா... என்ன இது! டார்வினின் கொள்கையைத்தானே நினைவு படுத்தினோம். அதற்கு அரிவாளா..??

ஆனாலும் ஒன்றைக் கவனித்தீர்களா..! ஒரு பாக்கெட்டை மட்டுமே அது எடுத்து சென்றதாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கும் ஒரு பாக்கெட்டை விட்டு சென்ற அந்த தாராள மனதை மனதார பாராட்டுகிறேன்.

மலர்
06-01-2008, 07:27 AM
ஒரு பாக்கெட்டை மட்டுமே அது எடுத்து சென்றதாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கும் ஒரு பாக்கெட்டை விட்டு சென்ற அந்த தாராள மனதை மனதார பாராட்டுகிறேன்.
அந்த பக்கம் தான் இண்டெலிஜெண்ட் ஆஃப் தி வண்டலூர்ன்னு பாராட்டுறாங்கனு
இந்த பக்கம் வந்தா... இங்கேயுமா.....:sauer028: :sauer028:
நற..நற.....
என்னமோ அந்த குரங்குல்ல ஒரு பாக்கெட்ட தாராளமா எனக்கு உட்டுட்டு போனமாதிரி அந்த குரங்கை பாராட்டுறீங்க...
என்ன கொடுமை ஓவியன் இது.............???
கஷ்டப்பட்டு நான் மட்டும் அப்போ எங்க அப்பாவை :eek: :traurig001: கூப்பிடலன்னா.. என்னையும் சேத்தே மரத்துக்கு கொண்டுபோயிருக்கும்...
அதுகூட தெரியாம...
வந்துட்டாங்கையா...பாராட்டுறதுக்கு.... :traurig001: :traurig001:

சிவா.ஜி
06-01-2008, 08:01 AM
ச்சே மலரோட பதிவைப் பாத்ததும், பாரதியோட இந்த பிரமாதமான பதிவுக்குப் பின்னூட்டம் போடறதை மறந்துட்டேன்.

அருமையான விவரிப்பு.இதெல்லாம் நடந்ததுன்னு நேர்ல சொல்லும்போதுகூட செய்தி அறிவிப்பாளர் மாதிரி சொல்றவங்க இருக்காங்க.ஆனா பாரதி...நீங்க செலவேயில்லாம குற்றாலம் மட்டுமில்லை சுற்று வட்டாரம் அனைத்தையுமே சுற்றிக்காட்டிவிட்டீர்கள்.அதுவும் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் கண்முன்னே ஓட வைத்துவிட்டீர்கள்.இதுவரை குற்றாலம் பார்க்காத அபாக்கியசாலி நான். இந்த பதிவு எப்படியும் பார்க்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.(ஏன்னா நானும் அட்வென்ச்சரை ரொம்பவே விரும்புகிறவன்)

ஆனா இப்ப கவலையில்லை. என் அன்புத்தங்கை மலர் இருக்கும்போது எனக்கென்ன கவலை.குடும்பத்தோடு போய் வர வேண்டியதுதான்.(நம்ம மூதாதையர்களிடமும் பயப்பட வேண்டியதில்லை..)

யவனிகா
06-01-2008, 08:52 AM
அருமையான மொழி நடையோட கூடிய அழக்கான அனுபவம். என்ன தான் சுத்தத் தமிழ் பத்தரை மாத்துத் தங்கம்ன்னாலும்...நம்ம வட்டார வழக்குங்கிற செம்பும் சேர்ந்தாத் தான அழகழகா நகை செய்ய முடியும்...அது போலத் தான் உங்க பதிவும் மின்னுது...உங்க "தேதியில்லாக் குறிப்புகள்" அத்தனையையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. இன்று வரை நான் குற்றாலம் போனதில்லை. இனிப் போகும் போது இந்த பதிப்பு நினைவுக்கு வரும். எந்த சிரமமும் இல்லாமல் ஒரு கதை சொல்லியின் நேர்த்தியுடன் லாவகமாக படு இயல்பாக போகிறது பதிவு. வாழ்த்துக்கள்.

பாரதி
07-01-2008, 04:01 PM
அற்புதம்....

குற்றாலத்திற்கு இந்த பொங்கலைக் கொண்டாட எங்கள் குழு தீர்மானித்து கைவிட்ட நிலையில் உங்கள் அனுபவங்களைப் பார்த்தால் இந்த மாதங்கள் அதற்கு சரிபட்டு வராது என்றே தோன்றுகிறதே!

நேரடியே குற்றாலத்தைச் சுற்றிவந்த அனுபவத்தை உணர்ந்தேன்... எழுத்துக்கள் என்னை அப்படி இழுத்துச் சென்றன. குறிப்பாக என்றேனும் குற்றாலம் செல்லவிருக்கையில் உங்கள் அனுபவம் கண்முன் நிழலாடும்படி அமைந்திருக்கிறது....

அதிலும் வண்டியில் செல்லும் உங்கள் அனுபவம் எனக்கும் உண்டு என்பதால் பாதையை விட்டு விலகாமல் எனது நினைவுகள் உங்கள் எழுத்ததப் பின்பற்றியே குற்றாலம் பயணித்திருக்கிறது..........

அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. வண்டியில் செல்லும் அனுபவங்களே தனிதான்... பலமுறை கொடைக்கானலுக்கும், திருச்செந்தூருக்கும்,கன்னியாகுமரிக்கும், திருவனந்தபுரத்திற்கும் சென்றவை நினைவுக்கு வருகின்றன. நீங்களும் இன்னும் உங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன் ஆதவா.
கஷ்டப்பட்டு நான் மட்டும் அப்போ எங்க அப்பாவை :eek: :traurig001: கூப்பிடலன்னா.. என்னையும் சேத்தே மரத்துக்கு கொண்டுபோயிருக்கும்...
அப்படி போயிருந்தா அன்னைக்கே உங்களைப் பார்த்திருக்கலாம்..ஹும்...அருமையான விவரிப்பு.இதெல்லாம் நடந்ததுன்னு நேர்ல சொல்லும்போதுகூட செய்தி அறிவிப்பாளர் மாதிரி சொல்றவங்க இருக்காங்க.ஆனா பாரதி...நீங்க செலவேயில்லாம குற்றாலம் மட்டுமில்லை சுற்று வட்டாரம் அனைத்தையுமே சுற்றிக்காட்டிவிட்டீர்கள்.அதுவும் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் கண்முன்னே ஓட வைத்துவிட்டீர்கள்.இதுவரை குற்றாலம் பார்க்காத அபாக்கியசாலி நான். இந்த பதிவு எப்படியும் பார்க்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது.(ஏன்னா நானும் அட்வென்ச்சரை ரொம்பவே விரும்புகிறவன்)

கருத்துக்கு மிக்க நன்றி சிவா. வாய்ப்பு இருக்கும் போது சென்று வாருங்கள். நல்ல காலச்சூழலும், கூட்டமில்லாமல் இருத்தலும் அமைந்தால் குற்றாலம் அருமையான இடம்தான்.


அருமையான மொழி நடையோட கூடிய அழக்கான அனுபவம். என்ன தான் சுத்தத் தமிழ் பத்தரை மாத்துத் தங்கம்ன்னாலும்...நம்ம வட்டார வழக்குங்கிற செம்பும் சேர்ந்தாத் தான அழகழகா நகை செய்ய முடியும்...அது போலத் தான் உங்க பதிவும் மின்னுது...உங்க "தேதியில்லாக் குறிப்புகள்" அத்தனையையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. இன்று வரை நான் குற்றாலம் போனதில்லை. இனிப் போகும் போது இந்த பதிப்பு நினைவுக்கு வரும். எந்த சிரமமும் இல்லாமல் ஒரு கதை சொல்லியின் நேர்த்தியுடன் லாவகமாக படு இயல்பாக போகிறது பதிவு. வாழ்த்துக்கள்.
மிகவும் மகிழ்ச்சி யவனி(க்)கா. பல இடங்களில் வட்டார வழக்கு மொழி மட்டுமே சொல்ல வந்ததை நேரடியாக கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தது. இந்த செம்பையும் கூட தங்கம் என்று கூறி அழகு பார்த்ததற்கும் இனிய பின்னூட்டத்திற்கும் நன்றி.