PDA

View Full Version : முதல் நினைவுபாரதி
12-05-2005, 04:00 PM
தேதியில்லா குறிப்புகள்

நிறைய மாதங்களாக நினைத்துக்கொண்டே இருந்தது.... ஆனால் செய்யத்தான் முடியவில்லை. இப்போதும் இதை முடிப்பேனா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் தொடங்கிவிட வேண்டும் என்கிற உத்வேகம் மாத்திரமே இதை ஆரம்பிக்க செய்கிறது.

நினைவில் உள்ளவற்றை அப்படியே கொட்டுவதுதான் இதன் நோக்கம். இதில் அனேகமாக தேதியே இருக்காது, வரிசைக்கிரமமாகவும் இருக்காது.... கோர்வையாகவும் இருக்காது. சில விசயங்கள் திரும்ப வரலாம். சில சம்பந்தமில்லாமல் இருக்கலாம்... சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளிவராமல் இருக்கலாம்.ஆனால் ஒன்று வருவதில் நிஜம் மட்டுமே இருக்கும்.

படிக்கப்போகிறவர்களுக்கு ...
இதில் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். நன்றி.


முதல் நினைவு

யோசிச்சுப்பாக்குறேன்... பிறந்ததுலேருந்து எது முதல்ல ஞாபகத்துக்கு வருதுன்னு...ம்ம்... இதுதான்னு குறிப்பா சொல்ல முடியல... இப்போதைக்கு முதலாவது வகுப்பு படிக்க போனதுதான் நெனவுல இருக்கு.

பள்ளிக்கூடத்தோட பேரு பழனியப்பா வித்தியாலயம். பள்ளிக்கூடத்துல ஒண்ணாங்கிளாசுன்னா ரெண்டு வகுப்பு, ரெண்டாங்கிளாசுன்னா ரெண்டு வகுப்பு... இப்படி மொத்தம் பத்து வகுப்பு.

திங்கக்கிழம மட்டும் கண்டிப்பா யூனிபார்ம் போடணும். வெள்ளச்சட்ட, காக்கி டவுசர். மத்த நாள்ல நம்மகிட்ட என்ன இருக்கோ அத போட்டுகிட்டு போனா போதும். காலைல ஒம்போது மணிக்கு பள்ளிக்கூடம். லேட்டா போனா ஹெட்மாஸ்டர்கிட்டே பெரம்படி வாங்கணும். அஞ்சாவது வகுப்பு வரைக்குந்தான் அந்தப்பள்ளிக்கூடம். ஆறாவது வகுப்புலேருந்து "பழனியப்பா உயர்நிலைப்பள்ளி"ன்னு மெயின் ரோட்டுக்கு கெழக்க இருக்கும். அங்கே போயி படிக்கணும்.

எங்க வகுப்புல ரெண்டு மூணு இஞ்சு உயரத்துல மர பெஞ்சு இருக்கும். மொத்தம் எட்டு பெஞ்சு. ஒவ்வொரு பெஞ்சுலயும் மூணு இல்லாட்டி நாலு பேரு உக்காருவோம். டீச்சரோட பேரு என்ன தெரியுமா..? டிலாமணி. நல்லா குண்டா இருப்பாங்க. அவங்க டேபிள் மேலேயே நீளமா ஒரு தப்பைக்குச்சி இருக்கும். உக்காந்த இடத்துலேருந்தே பசங்கள "மொட்"டுனு அடிக்க வசதியா இருக்கும். என் பக்கத்திலே இருந்த பையனோட பேரு முருகன். பரிச்ச நடக்கும் போது அவனுக்கு காட்டலன்னா 'வெளியே வந்தா அடிப்பேன்'னு மெரட்டுவான். ரொம்ப பயமா இருக்கும்.

அப்ப எல்லாம் ஒரு சிலேட், ஒரு குச்சி, முத வகுப்பு புஸ்தகம் - இத எல்லாம் ஒரு மஞ்சப்பையில் போட்டுகிட்டு போவோம். சிலேட்டுல எழுதுற குச்சில ரெண்டு வகை. ஒண்ணு சாதாரணமா எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி பாறையில இருந்து எடுத்த மாவுக்குச்சி. அப்புறம் கடல்பாசின்னு சொல்வாங்க.. கருவேலமர முள்ளு மாதிரி இருக்கும். அத வச்சித்தான் எல்லாத்தையும் எழுதணும். சாக்பீசு எல்லாம் டீச்சர் மாத்திரம்தான் வச்சிருப்பாங்க.

தமிழ்ல மாத்திரம்தான் பாடம் எல்லாம். "அ"-னா "ஆ"-வன்னா .. அப்புறம் பறவைகள், விலங்குகள்... இப்படித்தான் மொத்தப்பாடமும் இருக்கும்.

வருசத்துக்கு ஒரு தடவ "இன்ஸ்பெக்சன்" அப்படீன்னு சொல்லி எல்லோரும் பரபரப்பா இருப்பாங்க. சுவத்துல எல்லாம் புதுப்புது படமா தொங்கும். யாரோ ரெண்டு பேரு வருவாங்க... நாங்க எல்லாம் பேந்த பேந்த முளிச்சுகிட்டு இருப்போம். சும்மா சிரிச்சிட்டு போய்டுவாங்க.

முத வகுப்புல காப்பரிச்சைல நாந்தான் பர்ஸ்ட் ரேங்க். அத அம்மாகிட்டே சொன்னேன் பாருங்க... சந்தோசம் தாங்காத அம்மா "நீனு நன்னு மொகுல்ல"... என்று கொஞ்சிக்கொண்டு என்ன இடுப்புல தூக்கி வச்சுகிட்டு தெருக்கோடியில இருந்த காப்பிக்கடைல அதிரசம் வாங்கிக்கொடுத்தாங்க.. என்னா ருசி தெரியுமா...ம்ம்ம்..! அதுதான் எனக்கு நெனவிருக்கு...

(அவசரத்துல டீச்சர்கிட்ட கேக்க பயந்து கிட்டு ஒண்ணுக்கு இருந்து, அத யாருக்கும் தெரியாம புத்தக பையாலேயே தொடச்சு... அதெல்லாம் தனிக்கத)

இளசு
18-11-2005, 06:35 AM
இதோ நுனியைப் பிடித்துவிட்டேன் பாரதி..

டிலாமணி -- இதுவரை கேள்விப்படாத பெயர்.

முதல் நினைவு -- மங்கிய நினைவுகளை மங்காமல் பதிவு செய்த விதம் அருமை.

நான் ' பேபி கிளாசில்' காலோடு போய் கிணற்றடியில் வைத்து பெரிய கிளாஸில் படித்த என் அத்தை கழுவி விட்ட -- அவமானத்தில் என் முகம் சிவந்த நினைவு..

டீச்சர் பெயர் நினைவில்லை-- பக்கத்து மாணவி -புவனா என்பது ஏனோ தெளிவாய் இருக்கிறது!!!!!!!!!

கோவைக்காய் வைத்து சிலேட்டு துடைத்தது
புழுக்கை பலப்பங்கள் (கொஞ்சம் திங்க-- கொஞ்சம் எழுத)
அச்சுப்பூ ஒத்தி அந்தக்கால ஸ்டென்ஸில் படங்கள்
ஐந்து பைசாவுக்கு கைநிறைய 'கசகசா' மிட்டாய்..
அபேகஸ் எண்ணல்கள்..
தாம் தூம் பருப்பு பாட்டுக்கே என் அப்பா அம்மா தாம் தூம் என பெருமைப்பட்டது..
இம்சிக்கும் கான்வாஸ் ஷூ

ஆட்டோகிராஃபின் முதல் பக்கம்...


எண்ண வைத்த பதிவுக்கு நன்றி..

பாரதியின் இப்பதிவு -- படிப்பவரைப் பயணிக்கவைக்கும் பதிவு.

பாராட்டுகள் பாரதி..

gragavan
18-11-2005, 10:10 AM
முதன் முதலாய் நினைத்ததெல்லாம் மீண்டும் நினைத்து அதைத் தமிழில் நனைத்துத் தந்திருக்கின்றீர்கள். மீண்டுமொரு காவியம். புனைப்பெயருக்குப் பொருத்தமான விளைவோ!

சரி. என்னுடைய முதல் நினைவு எது தெரியுமா? என்னைக் கைக்குழந்தையாக, ஒரு வயது ஒட்டி இருக்கும் என நினைக்கிறேன், என் அத்தை கையில் தூக்கிக் கொண்டு, படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் அம்மாவைக் காட்டி "இது யாரு சொல்லு" என்று கேட்டதுதான் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காட்சி இன்னமும் கண்ணில் இருக்கிறது.

பாரதி
18-11-2005, 09:33 PM
ஒரே பதிவுக்கு இரண்டு முறை - திஸ்கி மன்றத்தில் ஒரு முறை - இப்போது ஒரு முறை - கருத்து தந்த அண்ணனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி.

அச்சுவெல்லம், சவ்வு மிட்டாய் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. கான்வாஸ் ஷ¤ எல்லாம் அன்றைக்கு எனக்குத்தெரியாது. இன்றைக்கு நாள் முழுதும் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் நான். ஹ¤ம்...

கருத்துக்கு நன்றி இராகவன். இது புதிய பதிவல்ல. சில மாதங்களுக்கு முன்பு திஸ்கி மன்றத்திலிருந்து மாற்றப்பட்டது.

தாமரை
20-06-2006, 02:01 PM
தேதியில்லா குறிப்புகள்

முதல் நினைவு

யோசிச்சுப்பாக்குறேன்... பிறந்ததுலேருந்து எது முதல்ல ஞாபகத்துக்கு வருதுன்னு...ம்ம்... இதுதான்னு குறிப்பா சொல்ல முடியல... இப்போதைக்கு முதலாவது வகுப்பு படிக்க போனதுதான் நெனவுல இருக்கு.

முத வகுப்புல காப்பரிச்சைல நாந்தான் பர்ஸ்ட் ரேங்க். அத அம்மாகிட்டே சொன்னேன் பாருங்க... சந்தோசம் தாங்காத அம்மா "நீனு நன்னு மொகுல்ல"... என்று கொஞ்சிக்கொண்டு என்ன இடுப்புல தூக்கி வச்சுகிட்டு தெருக்கோடியில இருந்த காப்பிக்கடைல அதிரசம் வாங்கிக்கொடுத்தாங்க.. என்னா ருசி தெரியுமா...ம்ம்ம்..! அதுதான் எனக்கு நெனவிருக்கு...

(அவசரத்துல டீச்சர்கிட்ட கேக்க பயந்து கிட்டு ஒண்ணுக்கு இருந்து, அத யாருக்கும் தெரியாம புத்தக பையாலேயே தொடச்சு... அதெல்லாம் தனிக்கத)


நான்ன மொகுதா பாரதி..

சிறிய வயதில் (எனக்கு இரண்டு வயதிருக்கலாம் எனக்கு நினைவு வருவது இரண்டு விஷயங்கள்..

1. நான் என் சின்ன அண்ணன், இரு அக்காக்கள் மற்றும் பக்கத்து வீட்டு பிரேமா அக்கா ஆகியோர் நொண்டிக்கொண்டே விளையாடும் தொடும் விளையாட்டு.. நான் மிகச் சிறிய குழந்தை என்பதால் நொண்ட வேண்டியது கிடையாது.. ஒப்புக்கு சப்பாணி.. ஒரே ஒரு முறை அவுட் செய்து யாரையாவது எளிதில் மாட்ட வைத்து....

2. தூரத்தில் கூவெனக் கூவிக் கொண்டே செல்லும் ரயில்.. குடிசையை விட்டு வெளியே வந்து நடு வீதியில் நின்றுகொண்டே பார்க்கலாம்..

மூன்று வயதாகும் போது அந்த வீட்டை விட்டு ஒரு பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் மாட்டு வண்டியுல் கட்டிலின் மேல் படுத்துக் கொண்டே இன்னொரு ஊருக்கு குடி போனது...

pradeepkt
26-06-2006, 07:16 AM
மயூரேசா,
உனது தேதியில்லாக் குறிப்புகளைத் தனித் திரியிலேயே போடலாமே...

மயூ
26-06-2006, 10:27 AM
மயூரேசா,
உனது தேதியில்லாக் குறிப்புகளைத் தனித் திரியிலேயே போடலாமே...
அப்படியே ஆகட்டும் பிரதீப் அண்ணா!

அன்புரசிகன்
05-01-2008, 06:30 AM
அப்படியே சிறுவயதிற்கு சென்றுவந்துவிட்டேன்.

"நீனு நன்னு மொகுல்ல"... என்னால் என்ன அண்ணா?

பாரதி
05-01-2008, 09:56 PM
1. நான் என் சின்ன அண்ணன், இரு அக்காக்கள் மற்றும் பக்கத்து வீட்டு பிரேமா அக்கா ஆகியோர் நொண்டிக்கொண்டே விளையாடும் தொடும் விளையாட்டு.. நான் மிகச் சிறிய குழந்தை என்பதால் நொண்ட வேண்டியது கிடையாது.. ஒப்புக்கு சப்பாணி.. ஒரே ஒரு முறை அவுட் செய்து யாரையாவது எளிதில் மாட்ட வைத்து....

2. தூரத்தில் கூவெனக் கூவிக் கொண்டே செல்லும் ரயில்.. குடிசையை விட்டு வெளியே வந்து நடு வீதியில் நின்றுகொண்டே பார்க்கலாம்..

மூன்று வயதாகும் போது அந்த வீட்டை விட்டு ஒரு பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் மாட்டு வண்டியில் கட்டிலின் மேல் படுத்துக் கொண்டே இன்னொரு ஊருக்கு குடி போனது...

முதலில் மன்னிப்பு கோருகிறேன் தாமரை _ சுமார் ஒன்றரை வருடங்களுப்பின் பதில் சொல்வதற்கு. இரவான பின், மங்கிய தெரு வெளிச்சத்தில் நொண்டியாட்டம் நானும் ஆடியிருக்கேன். என் வீட்டின் முற்றத்தில்தான் பெரும்பாலான சிறு வயது தூக்கம். நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே தூங்கும் அந்த சுகமும் தனிதான். உங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி."நீனு நன்னு மொகுல்ல"... என்னால் என்ன அண்ணா?

நீ என் பிள்ளை இல்லையா..! _ என்பதாக பொருள் அன்பு.

அன்புரசிகன்
06-01-2008, 03:59 PM
நீ என் பிள்ளை இல்லையா..! _ என்பதாக பொருள் அன்பு.

என்ர அச்சாப்பிள்ளயெல்லே என்பாங்க நம்ம ஊர்க்காரங்க.... (பொதுவாக இலங்கையின் வடகிழக்கில் இருப்பவர்கள். :D