PDA

View Full Version : இறந்த காலத்திற்கு வயதில்லை?Nanban
26-04-2005, 08:15 PM
இறந்த காலத்திற்கு வயதில்லை.. .. ..

சுனாமி பொங்கிய கடலின் கரையாய் மனதினுள் சிதைந்த எண்ணங்கள் எழுந்தது அவனுள். வருடங்கள் கடந்த பின்பும் அவளைப் பார்க்கும் ஆசையில் புறப்பட்ட இந்த பயணம் குடைந்து கொணடே இருந்தது.
பையில் முகவரி எழுதிய தாள் கனத்தது.

எவிடயானு சாரே?

தன்னை யாரும் கவனித்தார்களா என்ற முனைப்பில் அவன் இயங்கிக் கொண்டிருக்க மீண்டும் ஒருமுறை கேட்டு கவனம் கவர்ந்தான் வாகன ஓட்டி.

பதில் சொல்வதை விட எளிதான வழியாக முகவரி தாளை அவனிடம் கொடுத்து விட்டு இன்னும் சரிவாக தன்னை இருக்கையில் பதித்துக் கொண்டான். உடலைத் தளர்த்தி சாய்ந்து கொண்ட தருணத்தில் மனம் கிளர்ந்தெழுந்து தன் போக்கில் பிரயாணப்படத் தலைப்பட்டது.

நீயும் நானும்
பயணித்த சாலைகள்
பயனற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும் காச்மீரையும்
இணைப்பதற்கு...

நீ பூப்பறித்த தோட்டங்கள்
இன்று வாகனங்களுக்கு
எரிபொருள் ஊற்றும் நிலையமாக
புன்முறுவலுடன் நிற்கிறது.. ..

நீ சிலாகித்து பரவசப்பட்ட
கர்த்தரின் சிலையோ
மறைந்து விட்டது -
பலமாடி வணிக வளாகத்தின்
பின்னே. . . .

நீ குதூகலித்துப் பார்த்த
தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் வழியே
பேருந்துகள் பயணிப்பதில்லை.
இப்பொழுதெல்லாம்
அவை மாற்றுப் பாதையில்
வழுக்கிக்கொண்டு விலகிப் போகின்றன. . . . .
நீ கவிதை எழுதிய
காய்ந்துபோன மரம்
வெட்டப்பட்டு விட்டது. .. .. ..

சாரே ஸ்தலம் வந்நூ

ஒரு கவிதை மனதினுள் புரண்டெழுவதற்குள் அவள் வீடு வந்துவிட்டதா?

புறப்பட்ட வேகம் இப்பொழுது தளர்ந்து தான் செய்வது சரியா என்ற மறுவிசாரணையில் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி சமாதானம் செய்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டதாக சொல்லிக் கொண்டே சிகரெட்டைத் தேடினான்.

சாரே வேறெந்து வேண்டே?

சிகரெட் பற்ற வைக்க நெருப்பு கொடுத்துக் கொண்டே பெட்டிக்கடைக்காரன் பேச்சுக் கொடுத்தான். மீண்டும் முகவரித் தாள் சட்டைப் பை விட்டு விடுதலையடைந்தது தற்காலிகமாக.

பேசாமல் நிக்கியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்...

முகவரி விசாரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம; மனைவியை அழைத்து வந்திருந்தால். இத்தனைக்கும் அவர்கள் நெருங்கிய தோழிகள். அதுவே கூட காரணமாக இருக்குமோ அவளைத் தவிர்த்தது?

இங்க பாருங்க எங்காயாச்சும் போகணும்னா சொல்லுங்க மாமா பையனைக் கூட்டிக்கிட்டுப் போச்சொல்றன்

எனக்கெங்கயும் போவேண்டியதில்லை. ஆளை கொஞ்சம் தனியா விடறீயா?

காரணமற்ற எரிச்சல். எதனால்? கேள்விகளுக்கு எப்பொழுதும் விடைதேடுவது வழக்கமல்ல என்பதால் கோபங்களைச் சுமந்து திரிவதில்லை. அவ்வப்பொழுது ஒரு கத்தலோடு கோபம் கரைந்து போய்விடும். என்றாலும் பயந்தது போல எல்லோரும் பின் வாங்கிக் கொள்வார்கள் - மனைவியும் பிள்ளைகளும். வீங்கிப் புடைத்து நிற்கும் அகங்காரத்தைத் திருப்திப் படுத்தத் தான் அப்படி. என்றாலும் அப்படிச் செய்யாவிட்டால் அதுவே அதிகமாக இரைய வைக்கும் என்பதால் அதை ஒரு அறிவிக்கப்படாத சலுகையாகவே தந்தார்கள். கூடவே முதுகிற்க்குப் பின்னால் குசுகுசுவென இயங்கிக் கொண்டிருப்பார்கள். சட்டென்று திரும்பினால் நாக்கை கன்னத்தினுள் திணித்து இளக்காரப் புன்னகையை மறைப்பார்கள். அது தான் எல்லை. தாண்டக்கூடாது.


இத்தகைய வீறாப்புகளிலே வாழ்க்கை பாதி ஓடிவிட்டது. என்றாலும் இந்த நேரத்தில் மனைவியையும் அழைத்து வந்திருக்கலாம். கொஞ்சம் இளக்காரப் பேர்வழிதான் என்றாலும் நேராக இந்நேரம் அவளுடைய வீட்டிற்கே கூட்டிட்டுப் போயிருப்பாள். ஓருவேளை அவளுடைய கணவன் இருந்திருந்தால் கூட தவறாகப் பட்டிருக்காது.

தவறாக நினைக்கக் கூடுமோ?

இத்தனை காலத்திற்குப் பின்னும் மனம் கலங்கிய குட்டையாக இருக்குமோ? இருக்கலாம். இத்தனை வருடங்களுக்குப் பின்னும் அவள் எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆவல் தன்னிடத்திலே தோன்றும் பொழுது அவன் மட்டும் தன் சந்தேகங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியுமா?

உன்னை எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நீ என் மகளைத் தொடர்பு கொள்ளப் பார்க்காதே - எந்த வகையிலும்...

அவளின் அம்மாவின் கடிதம்.... கடிதம் பிரிக்கப்படும் வரை ஒரு படபடப்பு இருந்தது. ஆவல் இருந்தது. படித்த பின் இறுக்கம். என்ன நடக்கிறது? அவள் அம்மா கடிதம் எழுதுகிற அளவிற்கு என்னாயிற்று? நகர மறுத்த சிந்தனைகளை கட்டி இழுத்து வந்தவனிடம் என்னடா திகிலடிச்சு நிக்கற? என்ற மனைவிக்கு அக்கடிதத்தைப் பதிலாகக் கொடுத்தேன்.

அடடா நமக்கு உதவ வந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா? ஒரு பெருமூச்சோடு முடித்துக் கொண்டாள். திருப்தியோ?

அத்துடன் அந்த உறவிற்கு ஒரு இடைவெளி விடப்பட்டது. கடைசியாக ஒருமுறைப் பார்த்து சொல்லிக் கொண்டுகூட பிரிய முடியவில்லை. திருமண நாளில் விடைபெற்றதே கடைசி சந்திப்பாகிவிட்டது. அப்பொழுது பார்த்த அவள் உருவம் மனதில் நிலைத்து உறைந்து போனது.

பெட்டிக் கடைக்காரன் முனைப்புடன் சொல்லிய வழி காதில் மனதில் உள்வாங்கப் பட்டதா என்ற பிரக்ஞையில்லாமலே அந்த இடம் விட்டு நகர்ந்தான். எங்கும் அதிகம் நில்லாதே என்ற மனப்பிராண்டல்.

இப்பொழுது அவள் வீட்டிற்குப் போகவேண்டும் என்ற ஆவல் பெரிதும் வடிந்து போயிருந்தது. சாத்தியமாகும் விடயங்களை ஒதுக்கிவிட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. அவசரமுமில்லை. புகை வலிப்பில் லயித்து தெம்பை கூட்ட பழைய நினைவுகளும் திமிறிக் கொண்டு நிலத்தகடுகளாய் அசைந்து பொருந்தின.

இப்பொழுதும் அவள் கவிதை எழுதுவாளா?

எத்தனை கூட்டத்தின் நடுவேயும்
என் மீது ஒரு கண் வைத்திருப்பாய் -
என் மௌனங்களோடு
நான் பேசாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு
புன்னகை பூப்பாய் -
நான் நானாக இருக்கிறேன் என்று..

கடைசியாக படித்தது. அவள் எழுதியது. இப்பொழுது அவளுக்கு இந்த கவிதை எழுதும் சுதந்திரம் இருக்குமா? அவள் வீடு எதிரே வந்து சிகரெட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தயங்கிய சில விநாடிகளில் இதயம் ஒரு மரத்தான் ஓட்டமே ஓடி முடித்திருக்கும்.

யார் வேண்டும்? தட்டுதலுக்காகவே காத்திருந்தது போல கதவு அவள் குரலில் பேசிக் கொண்டே திறந்தது.

நான் அவளைப் பார்த்த கடைசி தினத்தினின்றும் கூடுதலாக ஒரு தினம் கூட கழிந்திராது போன்று அதே பழைய அவளாக என் முன் நின்றாள். இது அறிவுப் பூர்வமாக சாத்தியமில்லையே என்ற என் மனதர்க்கத்தை வெட்டிக் கொண்டு என்னை நிதானிக்க அவகாசம் கொடாது கடந்த காலத்தினுள் தூக்கி எறியும் குரலில் கேட்டாள்

யார் வேண்டும் உங்களுக்கு?

அம்மா?

அம்மா இல்லை. அப்பாவை கூப்பிடுகிறேன். ஓரு நிமிடம்...

அவள் திரும்பி உள்ளே சென்றாள். ஓரு நிமிடத்திற்கும் குறைவான கணத்தில் மனம் முடிவெடுத்தது.

திரும்பி நடந்தேன் தயக்கமின்றி.

கலக்கமின்றி தங்குமிடம் திரும்பியதும் மனைவியின் - கோபமா ஆதங்கமா என்று இனம் பிரிக்க அவசியமில்லாத - கண்டனக் குரல் எழும்பியது எங்கே போயிட்ட சொல்லாமல் கொள்ளாமல்? கொஞ்சம் கூட பொறுப்பில்லையே வந்த இடத்திலே கூட.. இங்கே உனக்காக எத்தனை மணி நேரம் அவளை காக்க வைத்திருந்தேன் தெரியுமா?
அதிக நேரம் அவஸ்தையாக்காமல் மகனிடமிருந்து விடை கிடைத்தது

வித்யா ஆண்ட்டி வந்திருந்தாங்கப்பா...

நான் ஆடிப் போவேன் என்று எதிர்பார்த்த மனைவி அசந்து போனர்ள் என் அமைதியைக் கண்டு.
மகனே அவள் அங்கிளைத் தான் பார்த்திருப்பாள் நான் இருந்திருந்தால்;. இப்ப அவள் என்னையேப் பார்த்துப் போயிருப்பர்ள் - நான் அவளைப் பார்த்து வந்த மாதிரி...

அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே இருக்கட்டும்...

Nanban
26-04-2005, 08:20 PM
இந்தக் கதை நாங்கள் வெளியிட்ட "துவக்கு" மாதாந்திர மின்னிதழின் முதல் இதழில் வெளியாகியுள்ளது......

முத்து
26-04-2005, 08:59 PM
இந்தக் கதை நாங்கள் வெளியிட்ட "துவக்கு" மாதாந்திர மின்னிதழின் முதல் இதழில் வெளியாகியுள்ளது......

நண்பன்,
வாங்க, நல்லா இருக்கீங்களா ?
நமது தமிழ்மன்றம் யுனிக்கோடுக்கு மாறிவிட்டது. எனவே திஸ்கி எழுத்துக்களையோ பிற எழுத்துக்களையோ இங்கு யாரும் படிக்க இயலாது.

யுனிக்கோடில் எழுத கீழேயுள்ள யுனிகோடு கன்வர்ட்டரையே கூடப் பயன்படுத்தலாம்

pradeepkt
27-04-2005, 05:07 AM
சிங்குச்சா சிங்குச்சா.. கட்டம் கட்டம் சிங்குச்சா.
ஒண்ணும் புரியலை சிங்குச்சா. :)

admin
27-04-2005, 05:22 AM
நண்பன் அவர்களே...

நீங்கள் பாமினி எழுத்துருவில் போஸ்ட் செய்திருக்கிறீர்கள்.

நான் அதை மாற்ற முயற்சித்தேன் ஏனோ முடியவில்லை.

நீங்கள் கீழே உள்ள யூனிகோட் கன்வர்ட்டரை உபயோகித்துப் பாருங்கள், அல்லது http://www.suratha.com/reader.htm இங்கு சென்று முயற்சித்துப் பார்க்கவும்.

பரஞ்சோதி
27-04-2005, 05:28 AM
எனக்கு நன்றாக தெரிகிறதே.

Encoding - UNICODE (UTF8) என்று மாற்றினால் தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் யுனிகோடாக மாற்றி போஸ்ட் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.

பரஞ்சோதி
27-04-2005, 05:32 AM
இப்போ தெரியுது தானே நண்பர்களே!

pradeepkt
27-04-2005, 05:33 AM
அட ஆமா, UNICODE (UTF8) ல நல்லாத் தெரியுதே.

mania
27-04-2005, 06:26 AM
அட ஆமா, UNICODE (UTF8) ல நல்லாத் தெரியுதே.

அதே அதே சபாபதே..,
மணியா

gragavan
27-04-2005, 07:15 AM
ஒன்னுந் தெரியல. எதாவது செய்யுங்க சீக்கிரமா!

பரஞ்சோதி
27-04-2005, 08:10 AM
ஒன்னுந் தெரியல. எதாவது செய்யுங்க சீக்கிரமா!

இராகவன் அண்ணா, கீழே சொன்னது போல் செய்யுங்க.

Encoding - UNICODE (UTF8) என்று மாற்றினால் தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் யுனிகோடாக மாற்றி போஸ்ட் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.

அப்படி செய்த பின்பு பிரதிப், மணியா அண்ணாவுக்கு நன்றாக தெரியுது.

முத்து
28-04-2005, 03:34 AM
ஒன்னுந் தெரியல. எதாவது செய்யுங்க சீக்கிரமா!

ராகவன் அவர்களே,
ரைட் கிளிக் செய்து encoding---> unicode (UTF-8) என்பதைத் தேர்வு செய்யுங்கள் (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகித்தால்).

Iniyan
28-04-2005, 03:35 AM
ஆமா இதில் மாத்திரம் ஏன் இப்படி குழப்பம்???

முத்து
28-04-2005, 03:48 AM
இனியன்,
நாம் பயன்படுத்துவது யுனிகோடு எழுத்து அதனால் என்கோடிங் UTF-8 தான் இருக்கவேண்டும். western european சில சம்யம் தமிழ் யுனிகோடு எழுத்துருசக்கு பிரச்சைனை தருகிறது. நமது மன்றத்தில் சாதாரணமாய் western european தான தேர்வாகிறது, யுனிகோடு என்கோடிங் அல்ல , அதுதான் பிரச்சினை என்று நினைக்கிறேன்.

Iniyan
28-04-2005, 03:54 AM
இனியன்,
நாம் பயன்படுத்துவது யுனிகோடு எழுத்து அதனால் என்கோடிங் UTF-8 தான் இருக்கவேண்டும். western european சில சம்யம் தமிழ் யுனிகோடு எழுத்துருசக்கு பிரச்சைனை தருகிறது. நமது மன்றத்தில் சாதாரணமாய் western european தான தேர்வாகிறது, யுனிகோடு என்கோடிங் அல்ல , அதுதான் பிரச்சினை என்று நினைக்கிறேன்.

சரிங்க...நீங்க சொன்ன மாதிரியே வச்சிக்குவம். அபப்டின்னா மத்த தலைப்புகளுக்கும் இதே பிரச்சனை வரணுமில்லியா? இந்த ஒரு பதிவு தான் என்கோடிங் பிரச்சனை தருது.

Nanban
29-04-2005, 04:17 PM
எத்தனையோ முயற்சி செய்தும் சரிவர மாற்றி அமைக்க முடியவில்லை. இப்பொழுது பொங்கு தமிழ் மூலம் முயற்சி செய்து பார்த்து விட்டேன். இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றால், www.thuvakku.da.ru என்ற முகவரியில், எங்கள் பத்திரிக்கையிலே படித்துக் கொள்ளுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

நன்றி

அன்புடன்

Iniyan
29-04-2005, 05:36 PM
இப்ப சரியாகத் தெரிகிறதே

gragavan
02-05-2005, 06:16 AM
எனக்கும் இப்போ நல்லாத் தெரியுது.

அருமையான பதிவு.

அன்புடன்,
கோ.இராகவன்

Nanban
02-05-2005, 09:10 PM
சரிங்க ஐயா - இப்பொழுது தான் நல்லா தெரியுதில்ல, கதையைப் படிச்சிட்டு கருத்து சொல்ல ஆரம்பிக்கலாமே?

Nanban
07-05-2005, 06:56 PM
ஒரு வழியாக எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக நினைக்கிறேன்.

இப்பொழுது எல்லாம் சரியாகத் தெரிகிறதா, ந்ண்பர்களே?

மன்மதன்
08-05-2005, 05:23 AM
சரியாக தெரிகிறது. நன்றாக தெரிகிறது.. கதையும் அதனுள்ளே சிதறிக்கிடக்கும் கவிதை முத்துக்களும்.. தமிழ் மன்றம் உங்களால் பெருமை சேர்க்கட்டும்...

அன்புடன்
மன்மதன்

பாரதி
08-05-2005, 08:35 AM
அன்பு நண்பரே,

கதையை மிகவும் இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள். எத்தனை காலங்கள் ஆனாலும், எத்தனை வயதானாலும் அன்பிற்கு மட்டும் வயதாவதே இல்லைதான். கவிதைப் பூக்களை அங்கங்கே தூவி, கதையை மணக்க வைக்கிற உங்கள் கைவண்ணம் மிகவும் நன்று. எதிர்பார்ப்புகள் எப்போதும் நிறைவேறுவது இல்லையென்றாலும், மனதை சாந்தப்படுத்திக்கொள்ள அழியாத அன்பைப் போல அருமருந்து எதுவுமில்லை.

கதையில் " வரவேண்டாம் " என்பதற்கான காரணம் எதுவும் தரவில்லை என்பது சிறிய குறையாக தெரிகிறது. இருந்தாலும் தன் பார்வையில் மட்டும் கதை சொல்லப்பட்டிருப்பதால் அப்படிப்பட்ட காரணம் என்ன என்பது தெரிந்தாலும் சரி.. தெரியாவிட்டாலும் சரி.. தரவேண்டும் என்கிற அவசியமும் தேவையில்லைதானே என்கிற எண்ணமும் வருகிறது.

சிறப்பான, உயிரோட்டமுள்ள ஒரு கதையை வாசித்த திருப்தி. பாராட்டுக்கள் நண்பரே.

Nanban
08-05-2005, 10:20 PM
கதையில் " வரவேண்டாம் " என்பதற்கான காரணம் எதுவும் தரவில்லை என்பது சிறிய குறையாக தெரிகிறது. இருந்தாலும் தன் பார்வையில் மட்டும் கதை சொல்லப்பட்டிருப்பதால் அப்படிப்பட்ட காரணம் என்ன என்பது தெரிந்தாலும் சரி.. தெரியாவிட்டாலும் சரி.. தரவேண்டும் என்கிற அவசியமும் தேவையில்லைதானே என்கிற எண்ணமும் வருகிறது.


புரியவில்லை - எதைப் பற்றி கேட்கிறீர்கள் என்று? கதைக்குத் தேவையான அத்தனை சமாச்சாரங்களையும் சொல்லி விட்டேன். கதாநாயகன், கதையின் நாயகியைப் போய்ப் பார்க்க தடை எது என்று கேட்டீர்களென்றாலும் அதற்கும் பதில் சொல்லி விட்டேன். மனைவியின் நண்பனை நேசிக்கும் கணவர்கள் மிகவும் குறைவு....

அறிஞர்
09-05-2005, 08:37 AM
கவிதையுடன் கதை அருமை....

தங்கள் இதழ் கண்டேன்.....
இன்னும் பல இதழ்களை வெளியிட்டு
சிறப்புடன் திகழ வாழ்த்துக்கள்....

Nanban
10-05-2005, 07:51 PM
கவிதையுடன் கதை அருமை....

தங்கள் இதழ் கண்டேன்.....
இன்னும் பல இதழ்களை வெளியிட்டு
சிறப்புடன் திகழ வாழ்த்துக்கள்....

மிக்க நன்றி அறிஞரே. நீங்கள் தொடர்ந்து வாசித்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி.

எங்கள் இதழ் கண்டது பற்றியும் மகிழ்ச்சி. அது குறித்த கருத்துகளைத் தனியாக எங்களுக்கு எழுதுங்கள். நிறைகுறைகளை விரிவாக எழுதுங்கள். எல்லோருமே, மன்றத்தில் சந்திக்கும் பொழுது தவறாது குறிப்பிடுகிறார்கள்.

இங்கு என்னுடைய தாழ்மையான அபிப்ராயம் என்னவென்றால், தமிழ் மன்றத்தில், தமிழ் மன்றம் மட்டும் குறித்த கருத்துகளையும், படைப்புகளையும் விமர்சிப்பது, கருத்துக் கூறுவது, அதன் ஆக்கத்திற்கு பங்களிப்பது என்ற அளவில் நிறுத்திக் கொள்ளலாம் என்பது தான். நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள துவக்கு இதழிலேயே முகவரிகள் கொடுத்து உள்ளோம்.

தொலை பேசி எண்களுக்கு, உங்களின் தனி மடலைப் பாருங்கள்....

அன்புடன்

பாரதி
12-05-2005, 05:36 PM
அன்பு நண்பரே...
நீங்கள் சுட்டிக்காட்டிய காரணமாகத்தான் இருக்கும் என்பதை நானும் யூகித்தேன். இருந்தாலும் அம்மா அவ்விதம் சொன்னதாக மட்டும் இருந்தது சற்று சந்தேகமாக இருந்ததால்தான் அக்கேள்வி எழுந்தது. விளக்கத்திற்கு மிக்க நன்றி.

Nanban
13-05-2005, 07:09 PM
அன்பு நண்பரே...
நீங்கள் சுட்டிக்காட்டிய காரணமாகத்தான் இருக்கும் என்பதை நானும் யூகித்தேன். இருந்தாலும் அம்மா அவ்விதம் சொன்னதாக மட்டும் இருந்தது சற்று சந்தேகமாக இருந்ததால்தான் அக்கேள்வி எழுந்தது. விளக்கத்திற்கு மிக்க நன்றி.

தாயின் தலையீடே மகள் வாழ்க்கையில் பூகம்பம் நிகழ்ந்து விடக்கூடாது என்ற கவலை தானே..... எழுதிய கடிதமும் பிறர் தலையீடுகள் இன்றி மகள் வாழ வேண்டும் என்ற அவா தான் அக்கடிதத்தை எழுத தூண்டியது, இல்லையா?

Nanban
21-06-2005, 07:02 PM
இந்தக் கதையை மரத்தடியிலும் வெளியிட்டேன். அங்கே ஒரு நண்பர் (நடராஜன் சீனிவாசன் ) சில நாட்கள் கழித்து ஒரு தகவலை வெளியிட்டார்.
>
> > இறந்த காலத்திற்கு வயதில்லை...
> > " மகனே, அவள் அங்கிளைத் தான் பார்த்திருப்பாள், நான்
> > இருந்திருந்தால்;. இப்ப அவள் என்னையேப்
> > பார்த்துப் போயிருப்பர்ள் - நான் அவளைப் பார்த்து வந்த மாதிரி..."
> >
> > அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
> >
> > அப்படியே இருக்கட்டும்...
> >
> xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
>
> நண்பரே
>
> பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வாரப்பத்திரிக்கையில் மாலன் என்பவர் பாரதி சிறுகதைகள் என்ற பொது தலைப்பில் "ஆசைமுகம் மறந்து போச்சே" என்ற தலைப்பில் எழுதிய சிறுகதையின் கருவும் உங்களுடைய இந்தக் கதையின் கருவும் ஒன்றாக இருக்கிறது.
>
> அன்புடன்
> நடரான்.
>


அவருக்கு நான் எழுதிய பதில் இதோ கீழே......

> அன்பு நண்பரே,
>
> இது கதையல்ல.
>
> கல்லூரி வாழ்க்கையில் எனக்கு நேர்ந்தது.
>
> நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில், ஒரே கல்லூரியில் என பதினேழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள்.
> (நர்சரி, பத்து, +2, பொறியியல் - என பதினேழு... இதற்காக கணக்கு சரியாக வரவில்லை என்றெல்லாம் எழுதிவிடாதீர்கள்.) இந்த நட்பில், கல்லூரியில் வந்து இணைந்து கொண்டவர் தான் மனைவி.

> கதைகளம் - நெல்லை மாநகரம். கதையில் நிறையவே அடையாளப்படுத்தி இருக்கிறேன் கதை நிகழும் இடத்தை. காலம் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர். இந்த உலகம் முழ்வதுமே அந்த நட்பைக் கொச்சைப்படுத்தித் தான் பேசியது. நான் எவருக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. அந்தத் தோழியின் அம்மா அப்பாவிற்கு மட்டும் விளக்கம் சொல்லிப் புரிய வைத்தவர் என் மனைவி. அது அத்தியாவசியத் தேவை என்பதால்.


> ஆக,நடராசன் ஸ்ரீனிவாசன் (எந்தப் பெயரை எடுத்துக் கொள்வது..?) நண்பரே, இது கதையல்ல - என் வாழ்க்கையின் ஒரு சிறிய சுயசரிதம்.

> கதையை வாசித்த என் தோழி எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் - 'நல்லா எழுதியிருக்கடா...' நேரில் சென்று பார்ப்பதற்கு இன்றளவும் தயக்கமாயிருக்கிறது. என் மனைவியும், தோழியும் இன்றளவும் சந்தித்துக்
கொள்கிறார்கள் - பேசிக் கொள்கிறார்கள். வேறு வேறு ஊர்கள் என்றாலும், ஒரே அரசு நிறுவனம் என்பதால்.
>
> மற்றபடிக்கு, மாலன் திசைகள் அச்சுப்பத்திரிக்கை நடத்திய பொழுது, ஒரிரு இதழ்கள் வாசித்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது, நான் மிகச் சிறிய பையன். (கிட்டத்தட்ட எமர்ஜென்சி காலம்.. இல்லையா? ) பின்னர் திசைகள் நின்று போய்விட்டது. பலகாலம் கழித்து, தொலைகாட்சிப் பெட்டிகளில், அவர் தேர்தல் கணிப்பாளராகவும், விமர்சகராகவும் தோன்றிய பின்னர் அவரக் கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் அது இலக்கியவாதி என்ற முகமல்ல. ஒரு coloumnist என்ற அளவில் தான் அவரைப்பற்றிய எனது கணிப்பு இருந்தது. மீண்டும் திசைகள் இணையத் தளத்தில் வர ஆரம்பித்தபின்னர் தான் அவரது எழுத்துகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

கடந்த பிப்ருவரி மாதம் இந்தியாவுக்கு சென்றிருந்த பொழுது, புத்தக கடைகளில், தேடி வாங்கினேன் - மாலன் சிறுகதைகள் என்ற தொகுதியை. (கிழக்குப்பதிப்பகம் - சென்னை 4.) 53 கதைகள் கொண்டது.
> மாலனின் சிறந்த சிறுகதைகளின் தொகுதி என்று பின்னட்டையில் போட்டிருந்ததால் வாங்கினேன்.
>
> நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன பொழுது - அந்தப்புத்தகத்தை மீண்டும் புரட்டிப் பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட பெயருடைய கதை அந்தப் புத்தகத்தில் இல்லை. (ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட கதை, மாலனின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகத் தகுதி பெறவில்லையோ என்னவோ...) என்றாலும், நீங்கள் மாலன் அளவிற்கு என் சிந்தனையின் வீச்சு இருக்கிறது என்று குறிப்பிட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இத்தகைய
ஒப்பீடல்களும், விமர்சனங்களும் வேண்டித்தானே, தளம் தளமாகப் போய் எழுதிக் கொண்டிருக்கிறோம்? என்றாலும், அந்தக் கதையை ஒருமுறை படித்தால் நன்றாக இருக்கும் போலிருக்கிறது. அவர் அந்தக் கதையின்
கருவை எப்படி கையாண்டிருக்கிறார்? நான் எவ்வாறு கையாண்டிருக்கிறேன் என்று ஒப்பு நோக்குவதற்காக ஆவலுடன்
காத்திருக்கிறேன். ஆதலால், அந்தக் கதையை சிரமம் பாராது எங்கிருந்தாவது தேடிப்பிடித்து, மரத்தடியில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். அல்லது எந்தப் புத்தகத் தொகுதியில் அந்தக் கதை இருக்கிறது என்று தேடி சொல்வீர்களானால், இந்தியாவிலிருந்து வரக்கூடிய நண்பர்களிடம் சொல்லி வாங்குவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
>
> மேலும், ஒரு விஷயம், நண்பரே, மாலன் எப்பொழுது இந்தக் கதையை எழுதினார்? ஏனென்றால், என்னுடைய கதையை அவர் கேள்விப்பட்டிருக்கவும் கூடும். எப்படி என்கிறீர்களா? நெல்லை மாவட்டத்தின் பிரபல தொழிற்சாலைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் மேலதிகாரிகள் எல்லாம் - சென்னையில் தான் போய் 'செட்டில்' ஆவார்கள். பின்னர் நேரப்போக்கிற்காக, மேல்தட்டு மக்கள் உலாவும் சங்கீதசபாக்கள், திறப்பு விழாக்கள், ஆன்மீக விழாக்கள், இத்யாதி போன்றவைகளில் பங்கு பெறுவதையே மீந்த வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்தவர்கள். அத்தகைய சமயங்களில், மாலனையும் அவர்கள் சந்திருக்கக் கூடும்.

> நன்றி நண்பர் நடராஜன் ஸ்ரீனிவாசன் அவர்களே....
>
> (மீண்டும் ஒரு முறை - உங்கள் பெயரை எப்படி சுருக்கமாக குறிப்பிடுவது என்று சொல்லுங்களேன்..)
>
> நட்புடன்
>
> நண்பன்
>


இதை எதற்காக இங்கே எடுத்து வைக்கிறேன் என்றால், மற்ற தளங்களில் மக்கள் எத்தனை கவனமாக பிறர் பதிவுகளை அலசுகிறார்கள் - தேடித்தேடி துருவித் துருவி ஆராய்கிறார்கள். என்பதற்காகத் தான். மாலன் எழுதியதாகக் குறிப்பிடப்படும் கதை கிட்டத்தட்ட 81 - 82 வருட வாக்கில் வெளியானது என்று சில நண்பர்கள் குறிப்பிட்டனர் பின்னர். கிட்டத்தட்ட இருபத்து மூன்று வருடங்களுக்குப் பின்னர் வரும் ஒரு கதையின் கருவை ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு இயங்குகின்றனர்.

நான் அந்தக் கதையைப் படித்திருக்கவில்லை - ஏனென்றால், கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவனுக்கு படிப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும், பெண் நண்பிகளுடன் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதற்கும் நேரம் பத்தாத காலம் அது.

கதை சுயசரிதம் என்பதால் - தப்பித்தது. இல்லையென்றால், கதையைத் திருடிவிட்டான் என்றே பட்டம் கட்டி முடித்து விட்டிருப்பார்கள்.... என்றாலும், மாலன் அளவிற்கு பேசப்பட்டதால், தலையில் கொஞ்சம் எடை அதிகரித்தது போலிருக்கிறது நண்பர்களே.....

Nanban
25-07-2005, 06:45 PM
அட யாரும்மே பார்க்காத சுயசரிதம்....!!!!!

gragavan
26-07-2005, 09:07 AM
ஒரே விதமான கரு இரண்டு பேர்களுக்குத் தோன்றலாம். அனுபவங்களில் திரட்டிய கயிறுதான் கவிதையாகவும் கதையாகவும் திரிகிறது. இருவர் ஒன்றையே சொல்வது வியப்பான ஒன்றில்லை.

ஒப்பீடு செய்வது என்பது............கதையின் கருவினைப் பொருத்து அமையும். பொதுவான விடயத்தை(காதல் நினைவு)ச் சொல்லும் பொழுது, இது போன்று வருவதற்கு வாய்ப்புண்டு. அதைக் குற்றமெனச் சொல்லல் முறையன்று.

நண்பன், மாலன் அவர்கள் கதையில் சிலவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால் நினைவில் நின்றதென்று எதுவுமே இல்லை. ஆனால் உங்கள் கவிதைகள் சில பிரமாதமாகவே வந்துள்ளன. நானும் படித்துப் பாராட்டியிருக்கிறேன். நீங்கள் நீங்களாகவே இருங்கள். எங்களுக்கு நண்பன் போதும்.

எனக்கு மிகவும் பிடித்த விடயம் தந்தன்மை பேணல். அதனால்தான் நான் புனைப்பெயர் கூட வைத்துக் கொள்வதில்லை.

பாரதி
26-07-2005, 09:38 AM
நண்பரே... இன்றைக்குதான் பார்த்தேன். முன்பொரு முறை உரையாடும் போது நண்பர் ஒருவரின் கதை என்றுரைத்தீர்கள். அந்த நண்பரே நீங்கள்தான் என்று இப்போதுதான் தெரிகிறது.


மற்றபடி மாலனுடன் ஒப்பீடு - உங்களுக்கு மகிழ்ச்சி தந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே.. ஆனால் நண்பன் நண்பனாக காணப்படுவதில்தான் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

விமர்சனங்கள் நம்மை செதுக்க உதவினால் சரி. அப்படி இல்லாவிட்டால் அவற்றை ஒதுக்குவதே நல்லது.

அறிஞர்
26-07-2005, 10:54 AM
மாலன் பற்றி ஒப்பிட்டுள்ள பதிப்பை இன்று பார்த்தேன்..... வாழ்த்துக்கள்..

சொந்த சரக்கை எழுதும் போது கூட இவ்வளவு இடைஞ்சலா.....

அருமையான... பதிவுகள்.. இன்னும் தங்களின் அனுபவங்களை... பல கதைகளாக வடிக்கலாமே....

Nanban
26-07-2005, 07:03 PM
மாலன் கதை போன்று உள்ளது என்று துப்பறிந்து சொன்னது - கதையை எழுதியவர்களை discredit செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால், பின்னர் முழுவிவரங்களும் கொடுத்த பின்பு அமைதியாகப் போய்விட்டனர்.

இந்த ஒப்பீட்டில் மிஞ்சியது வருத்தமே.

ஏனென்றால் என்னுடைய சிந்தனைகள் எப்பவுமே இன்னொருவரைப் பின்பற்றாது.

நான் நானாகத் தான் இருப்பேன் - என்றுமே....

அன்புடன்

kavitha
27-07-2005, 10:19 AM
மாலன் கதை போன்று உள்ளது என்று துப்பறிந்து சொன்னது - கதையை எழுதியவர்களை discredit செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால், பின்னர் முழுவிவரங்களும் கொடுத்த பின்பு அமைதியாகப் போய்விட்டனர்.

இந்த ஒப்பீட்டில் மிஞ்சியது வருத்தமே.

ஏனென்றால் என்னுடைய சிந்தனைகள் எப்பவுமே இன்னொருவரைப் பின்பற்றாது.

நான் நானாகத் தான் இருப்பேன் - என்றுமே....

அன்புடன்


பாரதி சொல்வதைப்போல இவற்றை ஒதுக்குதல் என்பதைவிட இன்னும் கவனத்தில் இருப்பது நலம்.

மேலும் மாலனுடன் ஒப்பிட்டதால் தாங்கள் மகிழ்வுற்றதாகவே கூறியிருக்கிறீர்கள். எனும்போது இதைப்பற்றி வருத்தப்பட ஒன்றுமில்லை.

ஆனால் 'மட்டம்' தட்டுவதாக தோன்றினால், உங்களது தனித்தன்மையை நிரூபிப்பதன் அத்தியாவசியம் எழுகிறதல்லவா?

அரைகுறை ஆடை அணியும் நாடுகளில் கற்பைப்பற்றி பேசுவதில்லை.
போர்த்திக்கொண்டு நடக்கும் நாட்டில் தான் அது மாய்ந்து மாய்ந்து பேசப்படுகிறது.

mukilan
27-07-2005, 09:14 PM
Hello All
I am a new member in this forum. Can anyone help me how to write in Tamil font.

சுவேதா
27-07-2005, 09:40 PM
Hello All
I am a new member in this forum. Can anyone help me how to write in Tamil font.

வாருங்கள் முகிலன் உங்கள் வரவு நல் வரவாகட்டும் உங்கள் அறிமுகத்தை அறிமுக பகுதியில் கொடுங்களேன்... முன்னுக்கே உள்ளதே பொண்ட் பற்றி. முயற்சி செய்து பார்த்தீர்களா??

kiruba_priya
18-11-2005, 12:16 PM
அருமை நண்பரே...