PDA

View Full Version : தோற்றவன் வென்றால்.....



Iniyan
15-04-2005, 06:37 PM
காதலில் தோல்வி எனக்
கலங்கிய இதயம் ஒன்றிற்கு

இதமளிக்க வந்தால் முன்பே
இல்லை என்று சொன்ன
இதயமில்லாதவள்.

காயப்படுத்தியவளுக்கு திரும்பக்
காதல் வரக் காரணம்?

முதலில் மறுத்தவள்
முடிவில் மாறினாளா?

ஏன் என்ற கேள்வியை
அவனே கேட்கிறான் இங்கே.....

Iniyan
15-04-2005, 07:06 PM
முத்தக் கவிதையால் என்
சித்தம் உரைத்த போது
சத்தமின்றியே இனிப்பாய்
இன்பக் காதல் தந்தவளே!


பின்

நனவுக்காதலைக்
கனவாக்கி
கானலாக்கி
என்னை
காதல்வேள்வியில்
கருக்கியவளே!

Iniyan
15-04-2005, 07:07 PM
முதன்முதலாய்
என் மனக்குழந்தைக்கு
காதல் நடை
பழகித் தந்தவளே!

பின்

நீயே ஏனோ என்
காதல் குழந்தையின்
கால் முறித்துப்
போட்டாய்.


தகிக்கும்
காதல் நெருப்பில்
கொதிக்கும் உலையாய்
கதியற்றே என்னெஞ்சை
கனலாய் ஆக்கி விட்டு
கனவாய்ப் போனவளே!

Iniyan
15-04-2005, 07:08 PM
இதயம் துளைக்கும்
இரவுகள் தந்த நீயோ
கண்ணாடி மாளிகைக்குள்ளிருந்து
கல்லாய்ச் சொல்லெறிந்தாய்.

கல்பட்டுச் சிதறிய கண்ணாடியாய் உன்
சொல்பட்டுச் சிதறியது
என்னிதயம் மட்டுமல்ல.
நம் காதலும் தான்.



இதுவரை இல்லாது
இறுதியாய் இன்று ஏனடி
சிதறிய கண்ணாடியாய்ச்
சிதைந்த என் மனதுக்கு
பச்சிலை வைக்கிறாய்
பாவையொருவள் மூலம்?

Iniyan
15-04-2005, 07:08 PM
எத்தனை இரவுகள்?
எத்தனை இரவுகள்?
எவ்வளவு கண்ணீர்?
எவ்வளவு துயரம்?
காதலென்றால்
என்னவென்று
அறிவாயா
கண்மணியே?

Iniyan
15-04-2005, 07:10 PM
கருத்தொருமித்தவர்
காமம் கழித்து
கனிவினைக் கூட்டி
நனிமிகு நட்பினை
நாளும் வகுப்பதே
காதல் என்றான்
"இனிது இனிது காதல் இனிதில்"
எனதினிய பாலகுமாரன்.

Iniyan
15-04-2005, 07:11 PM
கட்டுப்பாட்டுக் காற்றாலே
கலைந்து விழும்
சீட்டுக் கட்டு மாளிகையா
காதல்?

இல்லை.
இல்லவே இல்லை.

இடி தாங்கி
இடர் தாங்கி
புயல் தாங்கி
பூகம்பமும் தாங்கி
நிற்கும்
வாழ்வின்
கலங்கரை விளக்கமடி அது.

Iniyan
15-04-2005, 07:11 PM
பெற்றோர் சொல்லே
பெரும் வேதம் என்றவளே!
பெற்றாயே என் காதலை முதலில்.

அப்போது

பெற்றாயா அனுமதி உன்
பெற்றோரிடம்?

Iniyan
15-04-2005, 07:12 PM
மூத்தவன்
நானென்றும்
முதல் நண்பன்
மட்டுமே
நானென்றும்
இருந்த உன்
காவிய நட்பதனை
காதலாய் நானே
கற்பனை செய்தேன்
என்றாயே...


அந்த இரவில் மாத்திரம்
எத்தனை சிகரெட்டுக்கள்
எனக்காய்த் தீக்குளித்தன
தெரியுமா???

அன்றிரவு மட்டும்
நான் இன்னும் கொஞ்சம்
அலை பாய்ந்திருந்தால்
அடங்கி இருக்குமடி
என் வாழ்வு
இந்நேரம்.

Iniyan
15-04-2005, 07:13 PM
சுடர் நெருப்பால்
உருகும் மெழுகாய்
நான் உருக,

பற்ற வைத்த
தீக்குச்சியாய்
பட்டென்று
அணைந்து விட்டு
குற்றம் எனதென்றே
குனிந்தே சிரித்தாயே?

Iniyan
15-04-2005, 07:14 PM
எத்தனை கனவுகள்?
எத்தனை கனவுகள்?
எவ்வளவு தனிமை?
எவ்வளவு வெறுமை?


காதல்
இல்லையென்று
சொன்னதற்காய்
இறைஞ்சுகிறேன்
நான் என்றா
நினைத்தாய்?

Iniyan
15-04-2005, 07:14 PM
இல்லை என்று சொல்லி
இறுகக் கதவடைத்த பின்னும்
இறைஞ்ச இராப்பிச்சை
இல்லையடி நான்.

Iniyan
15-04-2005, 07:15 PM
தனித்துக்
கொதித்து
தணியாது
கனன்ற
என்னிதயத்தை
என் தமிழும்
என் கவியும்
குளிர்ப்பிக்க


சாம்பரில்
உயிர்த்தெழும்
பீனிக்ஸ்
பறவையாய்
மீண்டும்
மீண்டும்
மீண்டும்

உயிர்த்தெழுவேன்
நான்.

Iniyan
15-04-2005, 07:16 PM
கடந்து போன
காதல் காலங்களை எண்ணி
ன்றேனும் இரவுகளில் நீ
கலங்கும் போது
உன் கண்கள்
வடிக்கும்
கண்ணீர்த் துளிகளைக்
காய வைத்த
காற்று என்
காதோரம் வந்து சொல்லும்...


"கவிஞனே!

காதலும்

கவிதையும்

என்றுமே

அழியாது! "

என்று

ஜீவா
16-04-2005, 11:03 AM
இனியன்.. இது எல்லாம் உங்கள் கவிதையா... ரொம்ப அருமையாய் இருந்தது.. இந்த கவிதையில் உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடும் கோபமும் தெள்ள தெளிவாய் தெரிகிறது..

சுவேதா
17-04-2005, 01:39 AM
இனியன் உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

Iniyan
17-04-2005, 01:59 AM
என் கவிதையே தான். வாழ்த்துக்களுக்கு நன்றி

pradeepkt
18-04-2005, 06:42 AM
காதலும் கவிதையும் என்றும் அழியாது!

நன்று நன்று