PDA

View Full Version : ஒரு மழை நாளின் விடியலில்....Iniyan
15-04-2005, 06:32 PM
ஒரு மழை நாளின் விடியலில்
எனதறைச் சன்னலுக்கு வெளியே
சன்னமாய் நனைகிறது உலகம்.

எதிர்வீட்டு ஓட்டின் மேல்
எதுகைத் தாளமிடும் மழைத்துளியும்
எங்கிருந்தோ சுப்ரபாதமும்
இசையாய் இணைந்து
சப்தங்கலள் என்னுள்
சந்தோஷம் தூண்ட.....


விடிகாலை மழையில்
விபரம் புரியா கனவுகளுடன்
விவரிக்கவொண்ணா சிலிர்ப்பு
என்னுள்.


என் காதல்
கனாக்காலங்களும்
என் கவிதைக்
களங்களும்
என் மனங்கவர்
மாந்தரும்
என் இதயங்கவர்
இசையுமாய்
என்னுள் ஏதெதோ
மதர்த்த குழப்பங்கள்.


மடி நிறையப்
புத்தகங்கள் .
என்
மனம் நிறையக்
கனவுகள்.

மனம் கிறங்கி நான்
நாற்காலி மடியில்
ஞானம் தேடும்
புத்தனாய்
ஞாலம் வேண்டும்
கிறுக்கனாய்
என் மோனக் குதிரையில்
என் கவிதைக் காதலியுடன்
கம்பீரப் பிருத்வியாய்.கவிதைச் சம்யுக்தையின்
காலொடிக்கும்
ஜெயச்சந்திரத் தகப்பனாய்
என் தகப்பனின்
கடிந்த குரல் என்னை
கட்டாந்தரையில் தள்ள......இனிய மழையே!

இதம் தரு கனவுகள்
ஈந்த போதி மரமே!

ஞானமும் ஞாலமும்
ஞாபகமும் திறனும்
கவியும் கல்வியும்
ஏன் காதலும் தந்த
கருணையே!

விடை பெறுகிறேன் நான்.

இனியொரு நாள்
இடையூறுகளேதுமின்றி
இன்பமாய்ச் சந்திப்போம்.

பிறிதொரு நாள்
பிரிப்பார் யாருமின்றி
பிரியமாய்ச் சந்திப்போம்.

நான் என் கவிதைகளுடனும்,
நீ எனக்குத் தரவிருக்கும் கனவுகளுடனும்
மட்டும்.

Iniyan
15-04-2005, 06:32 PM
இது புதுக் கவிதையா, வசன கவிதையா இல்லை கட்டுரையா? எனக்கே தெரியாது. மன்னிக்கவும்.

Nilaa
07-05-2005, 05:49 PM
//பிறிதொரு நாள்
பிரிப்பார் யாருமின்றி
பிரியமாய்ச் சந்திப்போம்.//

மழையுடன் காதலா??. :)

இனிமையான கவிதை, இனியன்!

Nanban
07-05-2005, 06:02 PM
நன்றி, இனியன்.

இத்தகைய மழைக் கனவுகள் நிறய உண்டு எனக்கும்;

பழையவற்றை நினைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கியது உங்கள் கவிதை.

அது மட்டுமல்ல, கவிதைப் பக்கங்களில் வாசித்தற்குரிய ஒரு கவிதையும் உண்டாக்கித் தந்தமைக்கும் நன்றி.

அன்புடன்,

நண்பன்

பிரியன்
07-05-2005, 06:42 PM
நல்ல கவிதைதான் நண்பரே .. சந்தேகம் என்ன...

கவிதையின் அர்த்தம் கவிஞனின் மனோநிலை சம்பந்தப்பட்டது. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதன் கவித்துவம் மட்டுமே விமர்சனத்திற்கு உரியது,,

தொடருங்கள்...

வாழ்த்துக்களுடன்

பிரியன்

சுவேதா
07-05-2005, 08:02 PM
நன்றாக இருக்கிறது இனியன் அண்ணா வாழ்த்துக்கள்!

மன்மதன்
08-05-2005, 04:16 AM
அருமையான கவிதை இனியன்..
கவிதைச் சம்யுக்தையின்
காலொடிக்கும்
ஜெயச்சந்திரத் தகப்பனாய்
என் தகப்பனின்
கடிந்த குரல் என்னை
கட்டாந்தரையில் தள்ள......


இந்த வரிகள் சரியாக புரியவில்லை..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
09-05-2005, 06:59 AM
வாழ்த்துக்கள் அன்பரே...... நல்ல கனவுகள்... வரியாகியுள்ளது... இன்னும் கொடுங்கள்
அது மட்டுமல்ல, கவிதைப் பக்கங்களில் வாசித்தற்குரிய ஒரு கவிதையும் உண்டாக்கித் தந்தமைக்கும் நன்றி.

வாசித்தற்குரிய பல கவிதைகளை நண்பனிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

ஆதவா
29-05-2007, 05:15 PM
கவிதை அருமைங்க இனியன்... நல்ல வார்த்தை சொல்லாடல்... மன்றத்தினர் பார்வையிடவேண்டிய அழகிய கவிதை

விகடன்
29-05-2007, 05:29 PM
[size=3][color=darkred]
இனியொரு நாள்
இடையூறுகளேதுமின்றி
இன்பமாய்ச் சந்திப்போம்.

பிறிதொரு நாள்
பிரிப்பார் யாருமின்றி
பிரியமாய்ச் சந்திப்போம்.

.

சற்றே ஜீரணிக்க கடினமான வார்த்தைப்பிரயோகம் நண்பரே.
இதே தந்தை(பெற்றார்) இல்லாது வேற்று நபராக இருந்திருந்தால் வேறு. கவிதையின் நடையில் அழகாய் வடித்திருந்த கவிதைக்கு கறுப்புப்புள்ளிபோல் எனக்கு தோன்றுகிறது இந்சொற்பிரயோகம்.

மற்றும்படி பிரமாதமான மழைக்காட்சி.

கருத்தால் மனதை கனமாக்கின் மன்னிக்கவும். ஏனெனில் " கவிதை ஒன்றை எழுதுவது எந்தளவு கடினம் என்று அநுபவித்துக்கொண்டிருப்பவன் நான் (இன்றுவரை ஒன்றுகூட எழுதவில்லை...)"

அக்னி
29-05-2007, 05:37 PM
சொற்களின் ஆட்சி, அம்சமாய் பொதிந்த கவிதை.
பெயரைப் போலவே, இனிமையாய் கவிதைகள் இன்னும் தரவேண்டும்...