PDA

View Full Version : என்ன தான் மிச்சம்?



Iniyan
15-04-2005, 05:52 PM
என்ன தான் மிச்சம்?

கண்கள் சிவக்க
கண்ணீர் வழிய
அம்மாவின் திட்டுக்களுடன்
எண்ணெய்க் குளியல்.

மொடமொடக்கும்
புதுத் துணியும்,
அதில் வைத்த
சந்தன வாசமும்.

நாக்கு சுட
மேலண்ணம் பொத்துப் போக
அவசர அவசரமாய்
சாமி கும்பிடும் முன்னே
திருடித் தின்னும்
எண்ணெய்ப் பலகாரங்கள்.

பலகாரக் கூடையுடன்
பெரிம்மா பெரிப்பா
சின்னம்மா சித்தப்பா
வீட்டுக்கெல்லாம் ஒரு நடை.

தின்று கழித்து
உண்டு மகிழ்ந்து
வெடித்து வலித்து
சத்தம் ஓய்ந்த
உச்சி வெயிலில்
உள்ளூர் டூரிங் டாகீசில்
ஒரு தரை டிக்கெட் சினிமா.

கையில் வெடி வெடித்துக் காந்த
கத்தும் அப்பாவுக்கு பயந்து
நான் மறைக்க நினைத்தாலும்
என்னையும் அறியாமல்
வலியால் தானாய்ச் சுரந்து
கொட்டும் கண்ணீர்.

தெருவோரக் குட்டிச் சுவற்றை
அதிர அதிர அடித்த வெங்காய வெடி.
அந்த வெங்காய வெடியை
எனக்கு அறிமுகம் செய்து வைத்து
அடுத்த வருசமே செத்துப் போன
செல்வராசு சித்தப்பா.

அவர் போலவே இப்போதெல்லாம்
தீபாவளியையும் காணோம்.

என்ன தான் மிச்சம்?

வழக்கம் போல அரக்க பரக்க
ஆபீஸ் கிளம்பி ஓடும் போது
'ஹேப்பி தீவாளி மாப்ஸ்' என்ற
சினேகிதனின் வாழ்த்தைத் தவிர???

pradeepkt
18-04-2005, 07:00 AM
நகரா நகர வாழ்க்கையின் நரகத் தன்மையின் ஒரு பகுதி பண்டிகைகளின் மரணம்.
வாழ்த்துகள் கூட என்னமோ ஒரு இயந்திரத்தனத்துடன் இருப்பதை நன்றாகப் படம் பிடித்துள்ளீர்கள் இனியன்

அறிஞர்
09-05-2005, 07:13 AM
மீண்டும் படிப்பது.. மகிழ்ச்சியை தருகிறது...
அன்பரே.....

இன்னும் எழுதுங்கள்

puppy
19-05-2005, 05:57 AM
உணமை கவிதை இனியனே......நிறைய எழுதுங்கள்....

poo
19-05-2005, 09:30 AM
இப்போதெல்லாம் தொலைக்காட்சிகள்தான் பண்டிகைகளை நினைவுப்படுத்துகிறது...

இயல்பான கவிதை... அருமை!

இன்னும் நிறைய எழுதுங்கள் இனியன்!!

amudha
20-05-2005, 12:18 AM
ம்ம்ம்...கவிதை படிச்சப்போ நம்ம ஊரில் தீபாவளி கொண்டாடின மாதிரி இருக்கு இனியன்... :)

மேலும் எது எதுக்கோ club ஆரம்பிக்கிறாங்க...பண்டிகைகளை முறையா கொண்டாடுவதற்கும் clubs ஆரம்பிச்சா நல்லா இருக்கும் இல்ல?... :)

[என்னோட பல, பல ஆசைகளில் இதுவும் ஒன்று...]