PDA

View Full Version : ஊர்ச்சாத்தரை - பாகம் 3Iniyan
15-04-2005, 03:05 PM
இப்படி ஏதேதொ நினைவுகளில் நான் ஆழ்ந்திருக்க கணேசனும் எங்கோ வெறித்தபடி அமைதியாய் இருந்தான்.

இருவரின் அமைதியையும் களைக்கும் விதமாய் 'ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....பாம் பாம்' என்று வாயாலேயே அனைத்துச் சத்தங்களும் எழுப்பியபடி ஒரு சிறுவன் எங்களை நோக்கி தன் கற்பனை பஸ்ஸை ஓட்டியபடி வந்து நிறுத்தினான்.

'யப்பா! அழகம்மத்தே உன்னியயும் இந்த மாமாவையும் உடனே வூட்டுக்கு கூட்டியாரச் சொல்லிச்சு'

'இதுதாம்லே எம் மூத்த மவன் நாகராசு.'

கணேசன் தன் மகனை எனக்கு அறிமுகப்படுத்தினான். 'ஏயப்பா. உனக்கு இவ்ளோ பெரிய பய இருக்கானா? என்ன வயசாவுது இவனுக்கு?'

'வர்ற ஆனி பொறந்தா 5 வயசு'

ஒல்லியாய் அவன் வயதிற்கதிகமான உயரமாய் நல்ல கருப்பாய் சின்ன வயசு கணேசனின் தீட்சண்யமான கண்களுடன் செய்தியை தெரிவித்து விட்டு இன்னும் தன் பஸ்ஸை ந்யூட்ரலிலேயே போட்டு உறும விட்டுக் கொண்டிருக்கும் நாகராசுவை பாரக்க பார்க்க என் பால்ய சினேகிதன் கணேசன் என் மனமெல்லாம் நிறைந்தான். பயல் துடிப்பாய் இருந்தான். கண்களில் பளப்ளவென மின்னும் ஒளி என்னை கவர்ந்தது. டவுசர் மட்டுமே போட்டு சட்டை இல்லாத வெற்றுடலில் ஆங்காங்கே கீறல்களும் சிராய்ப்புகளும். 'என்ன கணேசா இது இவம் ஒடம்பெல்லாம் காயமா இருக்கு?'

'அட அதயேம் கேக்கிற? இவம் சரியான சுழி புடிச்ச பய. ஒரு நிமிசம் சும்மா இருக்க மாட்டாம். எதுமேலா ஏறிகிட்டு குதிச்சுகிட்டு கிளறிகிட்டே இருப்பாம். இவன வச்சி பாக்குறதும் வாழய வச்சி வளக்குறதும் ஒண்ணு.....நாகராசு. போயி அத்தேட்ட சொல்லு நாங்க வாரோம்னு'

நாகராசு இப்போது கியர் மாற்றி வண்டியை ரிவர்ஸ் எடுத்து திரும்ப கியர் மாற்றி வேகமெடுத்தான். கியர் மாற்றுவதாய் அவன் கை காற்றில் அலைந்ததும், இல்லாத ஸ்டியரிங்கை அவன் இறுக்கிப் பிடித்து திருப்பியதும், ஏன் கியர் விழும் போது மாறும் இஞ்சினின் ஒலியுமாய் அவன் போவதை நான் இமைக்காமல் துளிர்த்த புன்னகையுடன் பார்த்திருந்தேன். மெல்ல இருவரும் வீடு திரும்பினோம்.

'கானா விலக்குல ஏதோ கலாட்டாவாம். நம்ம மொண்ண ராமண்ணா 6 மணி பஸ்சு மேல கல்ல விட்டு எறிஞ்சி கண்ணாடிய ஒடச்சிப் போட்டானாம். இன்னிக்கு இனி நம்மூருக்கு பஸ் வராது. உங்க அவ்வா தாத்தால்லாம் சைக்கிள்ல வந்த நம்ம பரமசிவம் ஆச்சாரிட்ட சொல்லி உட்டு யாருனாச்சும் மாட்டு வண்டி கட்டி வரச்சொல்லியிக்காங்க. நானு நம்ம உடம்பங்காளி பஜனகோவிலு பழனியாண்ட சொல்லி வண்டி கட்டச் சொல்லி இருக்கேம். நீயும் ஒரு எட்டு கூட போய் வாரியா?'

அத்தை சொன்னதற்கு சரியென நான் தலை ஆட்ட கணேசன் சொன்னான்.

'நீயி எம் டிவிஎஸ் 50 எடுத்துட்டு வண்டியோட போ. அப்பத்தாம் திரும்பி வரப்போ எல்லாருக்கும் வண்டில இடமிருக்கும்'

மெயின் ரோடு எங்கிருந்தோ எங்கோ போக, அந்த மெயின் ரோட்டில் இருந்து விலகி வரும் சிறு ரோடு எப்போதோ காணாமல் போன கிராமத்து மக்களின் கனவுகள் போல கொஞ்சம் கொஞ்சமாய் சிதிலமாகி தார் அழிந்து, கிழிசல் கோவணமாய் ஆங்காங்கே குண்டும் குழியுமாய், மேயப்போகும் வெள்ளாட்டுக் கூட்டத்தின் காலடித்தடத்தில் எழும் புழுதிப் படலமும், புழுக்கைகளும் நிறைந்து உலகத்தில் இருந்தே தனித்தீவாய் இருக்கும் கிராமங்களை விலக்கி வைக்கும் கல்லுப்பட்டி விலக்கு தான் கானா விலக்கு.

ஊருக்கு நாளுக்கு இரு முறை வந்து போகும் டவுன் பஸ், மற்ற லாரிகளுக்கான ரோடு போடப்பட்டிருக்க அதன் மறுபுறம் இருந்தது சின்னப்ப நாயக்கர் கடை. இந்த ரோடு செல்லும் இடத்திலேயே டூரிங் டாக்கீஸ் ஒன்று இருப்பதால் வழிப்போக்கர்களுக்கு டீ, பீடி, வடை ஏன் சில நேரம் ஹோட்டலாகவும் இந்த கடை. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அந்த விலக்கில் இருந்து வரும் ஒரே ஒரு பெரிய கடை சின்னப்ப நாயக்கர் கடை. இது போக அவ்வப்போது அங்குமிங்குமாய் புதிதுபுதிதாய் முளைக்கும் சில பெட்டிக் கடைகள் வரும் போகும். ஆனால் கானா விலக்கின் ஒரு அழியாத அடையாளம் சின்னப்ப நாயக்கர் கடை.

இது ஆல் இன் ஆல் - ஒரு பக்கம் டீக்கடை/பெட்டிக்கடை/சைக்கிள் கடை. மற்ற பக்கம் அவர் நடத்தும் தட்டி வைத்துக் கட்டிய ஓட்டல். நாலு மர பெஞ்சுகளும் அந்த பெஞ்சினை விட சற்றே உயரத்தில்
இருக்கும் மர மேசைகளும் தான் ஹோட்டல். பக்கத்தில் சவுக்கு கட்டைகளை தரையில் ஊன்றி ஒரு கருங்கல் பலகையை மேலே வைத்து டேபிள் ஆக்கி ஒருவர் பரொட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருப்பார். கடையின் தென்னங்தட்டியில் இருந்த சினிமா போஸ்டரில் நான் ஆணையிட்டால் என எம்ஜியார் சிரித்தபடி சவுக்கு உயர்த்தி இருக்க தட்டியின் வெளிப் பக்கத்தில் சனிக்கிழமை காலை ஆட்டம் மட்டும் 'ரதியின் இரவுகள்' என யாரோ ஒரு பெண் மாரில் துண்டு கட்டி அநியாயத்திற்கும் கவர்ச்சி காட்டி ரசிகப் பெருமக்களை சிறப்பு காலைக் காட்சிக்குக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

இதில் பெட்டிக்கடைக்கு முன்னே சைக்கிள்கள் நிற்கும் இடத்தின் பக்கமாய் இரண்டே இரண்டு மர பெஞ்சுகள். இது தான் ரிசப்சன் ஏரியா. மேலே கூரை வேய்ந்திருப்பதால் மழை வெயிலுக்கு சனங்களின் புகலிடம் இது தான். கொஞ்சம் தள்ளி அரசாங்கம் ஒரு பேருந்து நிழற்குடை போட்டுத் தந்திருந்தாலும்,
அங்கே எப்போதும் ரெண்டு செம்மறியாடோ வெள்ளாடோ தான் அங்கிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அக்கடாவென படுத்திருக்கும். மற்றபடி அபீசியல் பஸ் ஸ்டாப் சின்னப்ப நாயக்கர் கடை தான். இந்த கடைகளின் பின்னாலேயே சின்னப்ப நாயக்கர் வசிக்கும் மண் சுவர் வைத்துக் கட்டிய பெரிய தென்ன ஓலை வேய்ந்த வீடு. அதற்கும் பின்னால் வாழைத்தோட்டம். எனக்கு தெரிந்த வரை சின்னப்ப நாயக்கரின் மொத்தக் குடும்பமும் அந்த கடையில் அயாராது உழைத்து வந்தது.சின்னப்ப நாயக்கர் சைக்கிள் கடையில் இருப்பார். பஞ்சர் ஒட்டுதல், ஓவராயில் போடுதல், வாடகைக்கு சைக்கிள் தருதல் என அவர் தான் சைக்கிள் கடை பொறுப்பு. அவரின் பெயர் தெரியாத மனைவி தாம் ஹோட்டல் பின் புலத்தில் கடைகளுக்கும் வீட்டுக்கும் இடையே இருக்கும் சமையலறையில் இன்சார்ஜ். டீகடையில் டீ ஆற்றுவது நாயக்கரின் பெரிய பொண்ணா இல்லை மருமகளா என்று தெளிவாக நினைவில் இல்லை.ஹோட்டலில் இலை போட, தண்ணீர் வைக்க, எச்சில் இலை எடுக்க என்று ஒரே ஒரு சின்ன பையன் எவனாவது பக்க்த்தில் இருக்கும் ஏதாவது கிராமத்தில் இருந்து இருப்பான்.

என் அவ்வா, தாத்தா, அம்மா, சித்தி, மாமா, அத்தை மற்றும் என் குடும்ப நண்டு சிண்டுகள் எல்லாம் விலக்கில் இருந்து ஊர் வரை போகும் 4 கிமீயை நடந்து கடக்க மலைத்துக் கொண்டு 6 மணி பஸ்சுக்காய் காத்திருக்க நான் அங்கு போய்ச் சேர்ந்த போது பெரிய கலாட்டாவாய் இருந்தது. டவுண் பஸ் கண்ணடி உடைந்து சிதறிக் கிடக்க ஒரு புறம் ஒரு கூட்டம் பஸ் டிரைவர் கண்டக்டரை சமாதானபடுத்த, மற்றொரு பக்கம் இன்னமும் கோபம் ஆறாமல் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்துக் கொண்டிருந்த ராமண்ணாவை அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

'சார். கோச்சுகாதீங்க சார். இப்போ போலீஸ் கேசு அது இதுண்டு ஆச்சுண்டா அப்புறம் உங்க டெப்போ மேனசரு எங்கூருக்கு பஸ் உட மாட்டாரு. அதும் விசேச நேரத்துல பஸ்சில்லேன்னா சனங்க தட்டுக் கெட்டுப் போகும்.ஊர் பொதுவுலே பேசி பஸ்சு ரிப்பேருக்குண்டு ஏதாச்சும் வாங்கி தாரோம். இந்த ஒரு வாட்டி பொறுத்துக்கங்க'

'அட என்னப்பா. இது ஆளாளுக்கு பேசிகிட்டு. கொஞ்சம் தவறி இருந்தான் எம் மண்டைல உடஞ்சிருக்கும். அவனுக்கு கோவம்னா கவருமெண்டு பஸ்சு தானா கெடச்சுது? கோனத்தனமா கல்லடிக்கிறான்' டிரைவர் கத்திக் கொண்டிருந்தார்.

'ய்யே...போங்கலே. வந்துட்டீக பெரிய்ய்ய்ய மயிரு பஸ்சு வச்சுகிட்டு. போனாரமென்னடாண்டா எங்கப்பத்தா ஊட்டுக்கு நாங் கொண்டு போன் உளுந்து மூட்டைக்கு டிக்கெட் போடுறே? நேத்து என்னாடாம்னா நானும் எம் புள்ள தாச்சிப் பொண்டாட்டியும் வரப்புல ஓடியாந்துட்டிருக்கும் போதே எங்க மூஞ்சில புக அடிச்சுகிட்டு நிக்காம போறே? அப்பறம் என்னடா பஸ்சு பெரிய பஸ்சு? இந்த ராமண்ணா யாருண்ணு தெரியாத பெரச்சன பண்ணிகிட்டு. ..அதாம்லே இப்ப காட்னேம் இந்தூரு சண்டியரு யாருண்டு....'

'இந்தா ராமண்ணா உம் வாய வச்சுகிட்டு சும்மாருக்க மாட்டே? நீ சண்டியருண்ணு காட்ட இதா சமயம்? எங்க எளவெடுக்கவே வந்துருக்கே. ஊருல வச்சு உன்னிய சுளுக்கெடுத்தா தாம்லே நீ சரிப்படுவே'

ஒரு வழியாய் பக்கத்தூர் பெருந்தலை ஒன்று டிப்போக்கு அப்போதே பஸ்சில் டிரைவர் கண்டக்டருடன் சென்று டிப்போ மேனசரிடம் சமாதானம் பேசி நல்ல நா கிழம வர ஊருகளுக்கு பஸ்சு விட ஏற்பாடு செய்வதாய் முடிவானது. இனி ஊர் கூட்டத்தில் ராமண்ணாவைப் போட்டு தாளிப்பார்கள். ஊர் பொதுவில் அபராதம் ஏதாவது விழும் அவனுக்கு. அத்தோடு சேர்ந்து அவன் வூட்டுப் பொண்டுகள் ஏதாச்சும் வாரம் பத்து நாள் வெம்புலயங் கோவிலில் எண்ணெய் ஊத்தி திரி போட்டு விளக்கேத்த வேணுமாய் முடிவாகும். இது தான் அவர்களின் கம்யூனிட்டி சர்வீஸ் கான்செப்ட்.

இந்த கலாட்டா எதாலும் பாதிக்கப்படாமல் அங்கே இருந்த மர பெஞ்சில் இருந்த இரண்டொருவர் தங்களது சுவாரசியமான அரசியல் பேச்சில் ஆழ்ந்திருந்தனர். நான் கேட்டவரை ஒரு கரை வேட்டி சொல்லிக் கொண்டிருந்தது இது. 'ரோடு யாரப்பு கேட்டா ரோடு? ரோடு போடுறாகலாம்ல? ரோடு யாருக்கு? பணக்காசு செழிச்சு டர் புர்ன்னு மோட்டார்ல போறவனுக்கில்ல ரோடு. நானு நீயும் எப்பவும் மாட்டு வண்டியோ இல்ல இந்த ஓட்ட சைக்கிளோ தானப்பு. நமக்கெதுக்குலே ஒக்காலி ரோடு. எங்கம்மா ஆட்சில இதே ரோடு திட்டம் வந்திருந்தா மேலிடத்துக்கு போக மிகுந்தத மந்திரி, எமெல்லே, மாவட்ட, வட்டமின்னு காச பிரிச்சு கொடுத்திருப்பாக. அதுல கொஞ்சம் பணம் ஓட்டு போடுற நம்ம கைக்கும் வந்து செழிப்பா இருப்போம்ல. பணம் வந்துச்சா, மாசிப் பொங்கல வச்சமா, கிடாய வெட்டினமா, சாராயத்த குடிச்சமான்னு சந்தோசமா இருக்கலாம்ல. அத்த வுட்டு தார் ரோடு பெரிய சாதனதாம் மாமா. வந்துட்டே பேச?'

gragavan
19-04-2005, 05:53 AM
இனியன் இவையனைத்தும் நிகழ்வுகள். ஆனால் கதை போலச் சொல்வது நன்றாக இருக்கிறது. தொடருங்கள். நல்ல எழுத்து வளம் உங்களுக்கு.

அன்புடன்,
கோ.இராகவன்

மங்குவதெல்லாம் எவை?
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=97255#post97255

pradeepkt
19-04-2005, 06:23 AM
அடேயப்பா,
இதென்னாஆஆஆடி இது? பிச்சுக்கிட்டுப் போகுது வருசநாட்டு வண்டி, கண்மூடித் தொறக்கையில வாழத்தாரு மண்டிங்கறாப்புல டாப்புக் கியரில கெளப்புதப்பு உங்க நடை. (இத அப்படியே காந்திமதி சொல்லுறாப்புல நெனச்சிக்கிருங்க)

எழுதுங்க எழுதுங்க. போற போக்குல அம்மா ஆட்சி மகத்துவம், ஏன் அவனவன் பெத்த தாய விட்டு இதய தெய்வத்தைக் கொண்டாடுறாங்கறத எல்லாம் போட்டுத் தாக்கிப் புட்டீக.
இனி பஸ்சு உங்கூருக்கு வருதோ இல்லையோ, ஒங்க வீட்டுக்கு ஆட்டோ கீட்டோ வராமப் பகுமானமா இருந்துக்கங்கப்பு!

அன்புடன்,
பிரதீப்

Iniyan
22-04-2005, 07:57 PM
ஆத்தி, இத தொடரணும் சீக்கிரமே...

kiruba_priya
18-11-2005, 01:20 PM
கதையின் கருவை விட கதையின் போக்கு, பின்னனி காட்சிகள், விளக்கிய விதம், கதை மாந்தர்கள் பேசிய மொழி, உள்ளூர் பேச்சு வழக்கு... சொல்லிகிட்டே போகலாம் உங்க கதையில்.

ஓவரா புகழ்வதுபோல் ஆகிடும்.

ஆனா முடிவு எங்கே மறந்திட்டீங்களா? அல்லது பாகம் 4க்கு காத்திருக்கனுமா?

aren
08-01-2006, 02:38 PM
ஒரு ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை அப்படியே படம் பிடித்து காண்பித்துவிட்டீர்கள். அப்புறம் சண்டை முடிஞ்சு வண்டி வந்த்தா? ஊர்த்திருவிழா சிறப்பாக நடந்த்தா? எழுதுங்கள்.

மறந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் எழுதினால் நன்றாக இருக்கும். சுவாரசியம் இருக்கும்பொழுது படித்துவிடவேண்டும் என்ற ஆதங்கம், வேறொன்றுமில்லை.

நன்றி வணக்கம்
ஆரென்