PDA

View Full Version : ஊர்ச்சாத்தரை - பாகம் 2Iniyan
15-04-2005, 04:02 PM
ஏண்டா கணேசா? நீ தான் சின்ன வயசுல நல்லா படிப்பியே? ஏண்டா படிப்ப விட்டுட்டே?

அட என்னப்பா நீயி? செட்டியார் வீட்டு பையனுக்கு கூட்ட கழிக்க பெருக்க வகுக்கண்டு கணக்கு பாக்கத் தெரிஞ்சா பத்தாதா? நானு அதுக்கு மேலே எட்டாப்பு வரைக்கும் படிச்சதே எந்த சாமி செஞ்ச புண்ணியமோ? ஏலா, நீ நம்மூரு ஸ்கூல விட்டு போனப்ப என்ன ஆறாவது படிச்சமா?

ஆமா கணேசா. அதுக்கப்புறம் அப்பாக்கு தஞ்சாவூர் பக்கம் வேல மாத்தி போயி வருசத்துக்கு ஒரு தடவ பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வாரதுன்னாகி, பின்னாலே அதும் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சி 5 வருசத்துக்கு ஒரு தரம் நடக்கிற ஊர் சாத்துறதுக்கு வரதுன்னு ஆகி இப்பப்போ அதுங்கூட முடியலடா. நெனச்சி பாத்தா ரெம்ப வருத்தமா இருக்கு

இதுல வருத்தப்படறதுக்கு என்னப்பு? நாங்க தாம் இந்த செங்காட்டு புழுதீலயும், கரிச வெயில்லயும் கெடந்து கருகுறோம். உனக்கெதுக்கப்பு இந்தூரு? வந்தியா சந்தோஷமா இருந்தியா பொழப்ப பாக்க போவியாண்டு இல்லாம உனக்கெதுக்கு வருத்தம்?

ஊர்த்திடலில் கபடி ஆடும் இளவட்டங்களின் குரல் ஓஓவென ஓங்கி ஒலித்தது. அந்த சப்தத்தில் ஆலமரத்தில் அடங்கிக் கொண்டிருந்த பறவைகள் எல்லாம் சலசலத்து கழிந்து கலைந்தன.

நம்மூரு இன்னும் அப்படியே இருக்கு இல்ல கணேசா?

அட போப்பா. எவ்ளோ மாறுதலு? தாயா புள்ளையா இருந்த நம்ம சனமெல்லாம் இன்னிக்கு விடக்கோழி கணக்கா நிக்குதுறே. நீ செட்டி, நாம் பறை, அவம் ரெட்டின்னி அடிச்சுகிட்டு சாவுது. ஞாபகமிருக்கா? பொழுசாய பருத்திக் காடு, நெல்லு வயலுண்டு போயி வந்த ஆணும் பொன்ணுகளுமா சேந்து தெருவோர முக்குலே அரிக்கேன் லைட்டேத்தி வச்சி கட்ட தாயம் ஆடுவாகளே? அதெல்லாம் போயி பல வருசம் ஆச்சப்பு. இப்போ பாதி சனம் பக்கத்தூரு ஜின்னிங் பேக்டரிக்கு வேலைக்கு போய் அடைய வரும் போதே மொண்டக் குடிச்சு தாம் ஊடு வருது. மீதிப்பேரு சேலம், கோயமுத்தூருண்டு ஹோட்டலு வைக்க இல்லீன்னா அந்த ஹோட்டலுவல்ல வேல பக்காண்டு போயிருச்சு. நண்டுஞ் சிண்டுமா காலேல பாம் பாம்னு அலறுற தீப்பெட்டி பஸ்ஸிக்கு போவிது. ஊர்த் தெடல்ல தீவாளி பொங்கல்ன்னா பெருசா தெர கட்டி மூணு படம் நாலு படம் போடுவாங்களே. அதும் போச்சி. இப்போ வீட்டுக்கு வீடு டிவிதாம். ஆட்டுக் கல்லுல ஆட்டி எங்கப்பத்தா சுசியம் சுட்டு தருமில்ல. அதெல்லாம் கனா மாறி இருக்குலே இப்போ. எம் பொண்சாதி இப்போ மிஸ்கி கேக்குறா.

அவன் சொல்லச் சொல்ல என்னுள் ஞாபகத் தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. மாலைக் கருக்கலில் வயல் வேலை முடித்து திரும்பும் மக்கள் முன்னிருட்டிலேயே கஞ்சி காச்சி குடித்து பொழுது போக்கிற்காய் கூட்டம் கூட்டமாய் வட்டம் வட்டமாய் உட்கார்ந்து கட்டை தாயம் ஆடுவார்கள். அந்த கட்டை தாயத்தை டக் டக்கென தட்டி கையிலே ஒரு பிடி பிடித்து மறு கையால் மீண்டும் தட்டி சிதற விட்டு தாயம் போடுவதே ஒரு கலை. விளையாடுவோரும் வேடிக்கை பார்ப்போருமாய் சின்னத் திருவிழா களை கட்டும். இதில் மாமன் மதினி முறை உள்ளவர்கள் விளையாண்டால் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே இல்லை. மசங்கல் வேளையில் 'சோறு போடுங்கோ சாமியோவ்', 'ரெட்டியம்மா, கூடு வேயண்டம்மா' என்று வீட்ட்ற்கு தக்க மொழி மாற்றி சத்தமிட்டபடி வீடு வீடாய் வந்து சோறு கேட்கும் ஏகாலி நொட்டண்ணா. உடன் வந்து 'வெளுக்கத் துணி இருக்குங்களாம்மா?' பட்டலு உண்டே வேயண்டிம்மா' என்று உடன் வரும் அவன் மனைவி காளியம்மா. எனக்கு நினைவு தெரிந்த வரை அவள் எப்போதும் கர்ப்பமாய்த் தான் இருப்பாள். இது பற்றி என் பாட்டி அவளிடம் கேலி பேசுவது உண்டு. தாத்தா அவ்வப்போது ஏகாலியை கூப்பிட்டு காசு பணம் கொடுத்தால் 'துட்டு எந்துகு சாமி? பப்பு, பிய்யம் இய்யண்டி' என்பான். [பணம் எதுக்கு? அரிசி பருப்பு கொடுங்க]
தலையை சொறிந்தபடி வெத்திலையால் காவி ஏறிய தன் கொட்டைப் பற்களை ஈயெனக் காட்டியபடி இடுப்பில் அழுக்கேறிய வேட்டி ஒன்றும் அந்த வேட்டியை இறுக்கிப் பிடித்திருக்கும் பச்சை நிற பட்டை பெல்ட்டும், கக்கத்தில் பணிவாய்ச் மடக்கி திணிக்கப்பட்ட அவனின் துண்டும், உழைத்து உழைத்து உரமேறிய உடலுமாய் ராச்சோறு கேட்டு நிற்கும் ஏகாலியைப் பார்த்து நான் சின்ன வயதில் பயந்தது உண்டு. ஊரோரமாய் கம்மாய்க்கரையில் அவன் குடும்பம் ஒரு குடிசையில். அவனுக்கு எத்தனை குழந்தைகள் என்று எனக்கு சரியாகத் தெரியாது. ஏகாலித் தொழில் போக அவன் பன்றி வேறு வளர்த்தான். கம்மாய்க் கரையோரம் பன்றிக் குட்டிகளும், அவன் குழந்தைகளுமாய் அவன் குடிசை எப்போதும் அமளிப்படும். பணமே தேவைப்படாத கவலையே இல்லாத வாழ்வு அவனுக்கு. ஏகாலிகள் பொங்கல் அன்று அவன் வீட்டில் பன்றி வெட்டி படையல் இட்டு சமைத்துச் சாப்பிடுவார்கள் எனக் கேள்வி. நான் பார்த்ததில்லை. செருப்பும் தைப்பான் நொட்டண்ணா. ஒரு முறை விளையாடுகையில் என் காலில் ஆழத் தைத்து விட்ட முள்ளை நொட்டண்ணாவை அழைத்தே எடுக்கச் சொன்னார்கள். கையில் முள் வாங்கியுடன், கட்டிலில் உட்கார்ந்து இருந்த என் காலடியில் வந்து நொட்டண்ணா உட்கார குப்பென ஏதோ நாற்றம். 'யேமி லேது ராசு...வெறொத்து. நொப்பி தெலகான நேனு சேசத்துனானு' [ஒண்ணும் இல்ல ராசா, பயப்படாதே,. வலி தெரியாம நான் செய்வேன்] என்று நிமிசம் என் காலை அசங்காமல் அழுத்தி பிடித்தி தன் மடியில் இருத்தி முள்வாங்கியால் கிண்டி கிளறி முள்ளெடுத்த அன்றிரவு தான் நானும் அவனும் சினேகமானோம்.

அன்றிலிருந்து அவனுடன் நானும் சேர்ந்து குருவி அடிக்கப் போனதும் அவன் பிள்ளைகளோடும் பன்றிகளோடும் விளையாடி அதை பார்த்த யாரோ என் அவ்வாவிடம் சொல்லி அவ்வா பருத்தி மாராலேயே என்னை பிய்த்து எடுத்ததும் தனிக் கதை. இதே நொட்ணா நான் போன முறை வந்த போது 'பொங்கலிகி ஏமி லேதா' [பொங்கல் பரிசு இல்லியா] எனக்கேட்டு பணம் வாங்கிப் போய் அனைத்து பணத்திற்கும் சாராயம் வாங்கி குடித்து அதே தெப்பக் கரையோரம் விழுந்து கிடந்தது கண்டு நான் மனம் நொந்தேன்.

ஏலே கணேசா, நொட்ணா எப்படிடா இருக்காம்?

இதாம்டா உங்கிட்ட எனக்கு பிடிச்சது. ஒவ்வொருத்தரா, ஒவ்வொண்ணா இன்னும் ஞாவகம் வச்சி கேக்கிற பாரு. நொட்ணா இருக்காம். அவன் இப்போ ஏகாலி வேல பாக்கிறதில்ல. திருமங்கலத்துல அவம் பய ஒருத்தம் யூனியன் ஆபீசுல பியூனா இருக்காம். அவங்கூட தாம் இருக்காம்லே. எப்பன்னா நம்ம ஊருக்கு வருவான். வந்தான்னா இங்கன தான் ஊரு காட்டுல குடிச்சி போட்டு கலாட்டா பண்ணிகிட்டு சுத்திகிட்டு அவம் பண்ணுற ரவுசு தாங்காது.

பணமே தேவையில்லாமல் சந்தோசமாய் சுற்றி சுற்றி வந்த ஒரு சீவன் இன்று இந்த நாகரீக உலகில் குடிக்கு அடிமையாகி குடல் வெந்து கெட்டுக் கொண்டிருப்பதைக் கேட்ட போது எனக்குள் எங்கோ வலித்தது.

நொட்ணா குடிசையை ஒட்டி இருக்கும் ஊர்த் தெப்பத்தில் தான் நான் நீச்சல் பழகியது. எப்போதோ கம்மாயாய் இருந்ததை எவெனோ ஒரு புண்ணியவான் போன நூற்றாண்டில் தெப்பமாய் மாற்றி கட்டி இருந்தான். கம்மாய் என்பது இயற்கையாய் ஏற்பட்ட மண் கரை சூழ்ந்த மழை நீரும், உப்போடைத் தண்ணீரும் தேங்கும் நீர் நிலை. கம்மாயில் மனித உழைப்பு சேர்ந்து, ஆழப்படுத்தப்பட்டு ஒழுங்காக உயர்த்திய கரை, மண்னரிப்பு தடுக்க கல் சுவர் வைத்து கட்டி செவ்வகமாயோ இல்லை சதுரமாயோ தரைமட்டத்தில் இருந்து உள்ளே இறங்கும் படிக்கட்டுகளும், நீர் வரத்திற்காய் செப்பனிடப்பட்ட உள் வாய்க்காலுமாய் இருக்கும் தெப்பத்தை சுற்றி ஒரு இரண்டடி உயரத்திற்கு கல் சுவர். இந்த தெப்பத்தில் நான் நீச்சல் கற்றது தனி அத்தியாயம். அது பின்பு. இது தான் நினைவுகளை எழுதுவதில் ஒரு பிரச்சனை. தலை முடி பிரித்து ஈறெடுக்கத் தொடங்கி பின் ஈறு பேனாகி, பேன் பெருமாளான கதையாய், சித்திரை வெயிலில் குளுகுளுக்கும் வேப்ப மரத்தடியில் கரிசல் மண் கொண்டு கறுப்பெறும்புகள் கட்டிய பூக்கூடு களைத்த மாதிரி பொளு பொளுவென நினைவுச் சிற்றெறும்புகள் நாலாபுறமும் ஓடுகின்றது.

aren
08-01-2006, 03:27 PM
அருமை சுடர். ஒவ்வொருவராக ஞாபகம் வைத்து அவர்களைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டது என்னுடைய பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டது.

நான் ஒவ்வொரு முறை இந்தியா போகும்பொழுதும் நடக்கும் விஷயம் இதுதான். ஆனால் சில சமயங்களில் தெரிந்தவர்கள் சிலரின் வீடுகளில் நடந்த துக்கங்களையும் சொல்லுவார்கள். அதில் மனக்கஷ்டமும் ஏற்படும்.

தொடருங்கள். ஆட்டோகிராஃப் மாதிரி இதுவும் ஒரு மலரும் நினைவுகள்தான்.

நன்றி வணக்கம்
ஆரென்