PDA

View Full Version : ஊர்ச்சாத்தரை - பாகம் 1Iniyan
15-04-2005, 04:00 PM
எனது சின்ன வயது கிராம அனுபவங்களின் தாக்கத்தால் நான் எனக்கு நடந்த அனுவபங்களை இங்கே கொஞ்சம் கொஞ்சமாய் வழங்குகிறேன். இங்கு இது எனது எழுத்து தாகம் தீர்க்க எண்ணி சரி செய்து வழங்குகிறேன்.

சேரனின் ஆட்டோகிராப்பை நினைவுபடுத்தினால் மன்னிக்கவும்.

நன்றி.


வெகு நாட்கள் கழித்து நான் இந்த கிராமத்திற்கு வருகிறேன். எனது பல சின்ன வயது ஞாபகங்கள் இந்த கிராமத்திலேயே. ஆனால் ஆண்டுகள் ஓடிய வேகத்தில் நான் இன்று இந்த சின்ன கிராமத்தை விட்டு வெகு தூரம் சென்று விட்டேன். படிப்பு, வேலை என பல்லாயிரம் மைல் தூரம் பயணித்து விட்ட நான் இன்று மீண்டும் இந்த கிராமத்திற்கு வருவது ஊர்ச்சாத்தல் என அழைக்கப்படும் கிராம தேவதைப் பொங்கலுக்காக. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இன்னும் பசுமையாக இருக்கும் சில பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்போது என் நெருங்கிய உறவுகள் யாரும் அந்த கிராமத்தில் இல்லை என்றாலும் எனது தூரத்து உறவுகள் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க எங்களது பூர்வீக சொத்தான பழைய மச்சு வீடு வாசலில் புதிதாய்ப் போடப்பட்ட கம்பி கிரில் கதவுடனும் பெரிய பூட்டுனும் தூசியாய் இன்னும் நிற்கிறது.

இந்த வீடு ரொம்ப பெரிசு. முன்னால் பெரிய பெரிய தூண்கள் வைத்து திண்ணையுடன் கட்டப்பட்ட பழைய கால பெரிய தேக்கு மர ஒற்றைக் கதவு கொண்ட பெரிய வீடு. மாடியில் நெல் கொட்டி வைக்கும் குதிர், பழங்கால அலமாரிகள், தொட்டால் தூசி பறக்கும் பழைய ரொம்ப பழைய புத்தகங்கள், மரத்தாலான புராதனமான ஆடு குதிரை, எப்போதோ யாரோ தூக்கிய காவடி, இருண்டு பாசி பிடித்த மாடிப்படிகள், ஒட்டடை தொங்கும் மாடி ஊஞ்சல், வாசலில் இருக்கும் கல்லாலான சின்ன வயதில் என் மண்டையை உடைத்த 12 பெரிய படிகள், வெயிலையும் மழையையும் வீட்டினுள்ளே கொணரும் முற்றம், முற்றத்தின் ஓரத்தில் மறைவாய் ஓலைத்தட்டை கட்டபப்ட்டு மறைக்கப்பட்ட குளியலறை, பின் கட்டில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாய் மாடுகள் நின்ற மாட்டுக் கூடத்தில் இன்று காய்ந்து கிடக்கும் மாட்டுச் சாணமும், மக்கிய வைக்கோலும், சிதிலமாகிக் கொண்டிருக்கும் உழவுத் தப்பைகளும், உருளைகளும், பழைய ஏர்களுமாக கொட்டம்.

'ஆரு நம்ம ராசாத்தியக்கா பேரனா? நல்லா இருக்கியா ராசா?'

யாரோ ஒரு உறவின் குரல் என்னை பழங்கனவுகளில் இருந்து மீட்டு நடப்புலகிற்கு கொணர்ந்தது.

'யாரது புள்ள?' இது இன்னோரு கிழவியின் குரல்.

'நம்ம ராசாத்தியக்கா பேரனாத்தா. நம்மூரு ஊர் சாத்தறைக்கு வந்திருக்கு.'

'வாய்யா. அவ்வா வரலியா? கடுதாசு போட்டிருந்துச்சி. ஊடு வாசல்லாம் சுத்தபப்டுத்தி வக்கச் சொல்லி. இன்னிக்கு எல்லாரும் வந்துருவாகன்னு எழுதி இருந்ததா அந்த நொட்டாங்கை தவாலுகாரரு படிச்சி சொன்னாரு. ஆனாஇப்ப என்னடான்டா நீ மாத்திரம் தனியா வந்து நிக்கிறே?'

'நான் கானா வெளக்கு நிறுத்ததுதுல இறங்கி நடந்தே வந்துட்டேன். அவங்கெல்லாம் 6 மணி பஸ்ஸிக்காக காத்திருந்து அதுல வருவாங்க'.

'போய் கைகால் கழுவீட்டு வாப்பா. நான் நீ வாரேன்னு சொல்லி சுடு சோறாக்கி, பருப்பு கடஞ்சி கத்திரிக்கா புளிக்கறி செஞ்சு வச்சிருக்கேன். வந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் தகிப்பாரு'

பக்கத்து வீட்டு அத்தை அன்பாய் உபசரிக்க, நான் கிராமத்து உணவை ருசித்து உண்டு முடித்து திண்ணையில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் பழைய துணி மெத்தையில் கைலியுடன் படுத்து மலையடிவாரக் காற்றையும் தூரத்தில் எங்கோ கூவும் ஒற்றை குயில் பாடலும், எங்கோ நாத்து நடும் பெண்கள் பாடும் கேலிப்பாட்டும் என்னை தாலாட்ட கண்ணயர்ந்தேன்.

'பத்து வந்துட்டாளாத்தா பள்ளிகூடத்துல இருந்து? 5 மணி டவுன் பஸ் இப்போ தான் போச்சி. அதான் அவ வந்துட்டான்னா நந்தவன கிணத்துக்கு தண்ணி எடுக்க கூட்டி போலாம்னு தான் வந்தோம்'

இந்த வசனத்துடன் இன்னும் ஏதேதோ பேச்சுகுரல்களும் வளையல் ஒலியும் கலந்த குழப்பமான சப்ததிற்கு நான் கண் விழித்தேன்.

'அடியே ராமக்கா. கத்தாதடி. திண்ணைல அந்த பிள்ள தூங்குறது தெரியலியா? பத்து வந்துட்டா. கொஞ்சம் பொறு டீ குடிச்சுட்டி உங்களோட தண்ணிக்கு வருவா.'

கோபமாய் அத்தையின் குரல் கேட்டதும் அனைத்து ஓசைகளும் சட்டென அடங்கின. அதே நேரம் நான் கண் விழிக்க என்னை குறைந்தது 6 அல்லது ஏழு சோடி கண்களாவது மொய்த்துக் கொண்டிருப்பது தெரிந்து நான் சடாரென எழுந்து உட்கார்ந்து கட்டிலில் கிடந்த துண்டை எடுத்து என் திறந்திருந்த மாரில் போட்டு மூடியபடி திகைத்து விழித்தேன்.

'இதாராத்தா புதுசாயிருக்கு நம்ம ஊட்டு தின்ணிலே...'

'என்ன தம்பி ? இந்த பொண்ணுவ உன்னைய எழுப்பி உட்டுட்டாளுங்களா? அடியே உனக்கு தொண்ட கொஞ்சம் சாஸ்தி தான். இந்த கத்து கத்திறியே? இது நம்ம ராசாத்தியக்கா இல்லே, அவுக மவந்தான்'

'அடி ஆத்தி? ஓசிக் கஞ்சி. அட நீதானா? யேய் என்னய தெரியலியா?'

'போடி பொச கெட்ட சிறுக்கி. வளந்த ஆம்புளய பட்டப் பேரச் சொல்லி கூப்பிட்டுகிட்டு. பல்ல தட்டப் போறேம் பாரு'.

'அட அத்தைக்கு கோவத்த பாருங்கடி. அவுக மருமவன நானு பேரச் சொல்லி கூப்பிடுறேன்னு. அத்தேய். இவம் உனக்கு தான் மருமவன். எங்கூட சம்முவ வாத்தியார் க்ளாசுல புளிய மரத்தடில படிச்சவந்தாம் இவந்தெரியும்ல?'

எனக்கு இப்போது நினைவுக்கு வந்து விட்டது இவளை. மூக்கு ஒழுக, இடுப்பில் நிற்காது சரிந்து இறங்கும் பாவாடையை ஒரு கையால் தூக்கி பிடித்துக் கொண்டு சண்முக வாத்தியார் புளியமரத்தடியில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது இவள் கையில் பட்ட கல்லை வைத்து மரத்தில் தொங்கும் புளியங்காயை குறி வைத்து அடிக்கப் போக அது தவறி வாத்யார் தலையில் பட்டு அவர் மண்டை உடைந்து முகமெல்லாம் வழியும் ரத்தத்துடன் கையில் பிரம்புடன் ஊருணிக்கரையெல்லாம் இவள் பின்னால் தானே ஓடினார்? அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்பு தான் வந்தது. என் முகத்தில் என்னையும் மீறி துளிர்த்த சிரிப்பை பார்த்த அவள் 'யேய். நான் சம்முவ வாத்தியார் மண்டைய ஒடச்சத நினச்சு தானே சிரிக்கே?' என்று கேட்டபடி வந்து உரிமையாய் என்னருகே கட்டிலில் உட்கார்ந்தாள்.

'ஏந்தம்பி உங்களுக்கிவளை உங்களுக்கு தெரியுமா?'

'என்னத்தே இப்படி கேட்டுட்டீங்க? பள்ளிக்கூடம் போற நாளுல இவ எனக்காக ஊட்டுலேர்ந்து புளி, மிளகாய், சக்கரை எல்லாத்தியும் போட்டு ஒண்ணா அம்மில வச்சி நச்சி ஒரு குச்சில சொருவி லாலிபாப்புன்னு கொணாந்து தருவாத்தே. இவ கூட சேந்து கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாடுறேன்னு சொல்லி தான் வடக்கு வீட்டு பெரிய கொண்டு தாத்தா வீட்டு வக்கப்போர நான் எரிச்சது அந்த வயசுல'

'அப்படி சொல்லுடா. பாத்தியா அத்தே. எம்பிரண்ட? எல்லாத்தயும் நாவகம் வச்சிருக்கான். எலேய், நீ எங்கேயே வட நாட்டு பக்கமுல்ல வேல பாக்கிறதா சொன்னாக?'

'ஆமா நம்மூரு ஊர் சாத்துறடை பாத்து பல வருசம் ஆச்சேன்னு இப்ப லீவ் போட்டுட்டு வந்தேன்'

'அட ஙொப்புரானே. சரியான டைத்துக்கு தாம் வந்துருக்கே. எம் மச்சாங்கூட இந்த தடவ தீ சட்டி எடுக்குதில்ல'

'மச்சானா. அதாரு?'

'அவ ஒரு விவரங்கெட்ட சிறுக்கி தம்பி. இதையும் முழுசா சொல்ல மாட்ட. அவ மச்சாங்கிறது அவளோட புருசனத்தான். அவந்தான் தம்பி கோணக்காலு கோவிந்து. அவனுக்கு தான் இவள கட்டி கொடுத்திருக்கு.'

'இந்தா அத்தே. ஒழுங்கு மருவாதியா பேசு. எம் மச்சான கோணக்காலு அது இதுன்னே உன் கால் ஒடிச்சு அடுப்புல வச்சிருவேன்'

'ஆத்தாடி. வாயாடிக்கு கோவத்த பாரு அவ புருசன பத்தி பேசுனா? அடி அம்மா. அவன கோணக்காலு கோவிந்துன்னு தான் ஊரே சொல்லுது. அப்போ ஊருக்காரன் காலெல்லாம் ஒடிச்சி அடுப்புல வப்பியாக்கும்? அடி ஆத்தி, உன்கிட்ட வாய் குடுத்து யாரும் முழுசா மீள முடியாதடி. என்னய ஆள விடு. தம்பி உங்களுக்கு டீ போட்டு வச்சிருக்கேன். மூஞ்சி கழுவி வாங்க. தாரேன்' என அத்தை வீட்டுனுள் போனார்கள்.

இப்படி கலாட்டாக்கள் எல்லாம் முடிந்த பின் அந்த கும்பல் நந்தவனக் கிணற்றுக்கு தண்ணீர் எடுத்து வரக் கிளம்பினார்கள். நான் இன்னும் அப்படியே கட்டிலில் டீ குடித்து முடித்து ரிலாக்சாக உட்கார்ந்திருக்க வாசலில் நிழலாடியது. 'வாப்பா கணேசா, வா. எந்தம்பி கணேசன் உங்களோட பள்ளியோடத்துல படிச்சதாம்ல? சொல்லிச்சு. உன்னைய பாக்கணும்னு நேத்துலேந்து நடையா நடக்கு. ஏப்பா கணேசா டீ குடிக்கிறியா?'

'இல்லாத்தா. இப்பதான் டீ குடிச்சேன். ஏண்டா என்னிய தெரியுதா?'

'என்ன கணேசா இப்படிக் கேட்டுட்டே? நாம சின்ன வயசுல வெளயாடுறப்போ உன் நெத்தில நான் களைக் கொத்தியால கொத்தி வச்ச தழும்பு இன்னும் இருக்கா இல்லியா?'

'அடடே...பரவயில்லயே எல்லாமும் நினைவிருக்காடா உனக்கு?' என என் பக்கத்தில் சுவாதீனமாய் வந்து உட்கார்ந்த அவன் மேல் இருந்து வேர்வையும் பலசரக்கு வாசமும் சேர்ந்து வீசியது.

'ஏன் கணேசா, இப்ப நீ என்ன பண்ணுறே?'

'நா இங்கன நம்மூருல தாம் பலசரக்கு கடை வச்சிருக்கேம். நாளப்பின்ன கடைப்பக்கம் வா.'

'சரிடா. இப்போ கடைய உட்டுட்டு வந்துருக்கே?'

'நீ வந்துருக்கேண்டு தண்ணி எடுக்கப் போன புள்ளிய சொன்னிச்சு. பால்ய சினேகிதனா பாத்துட்டு போலாம்னு எந்தம்பி கோவால கடைல இருக்கச்சிட்டு வந்தேம். ஏலே..எனக்கு கல்யாணமாகி இப்போ ரெண்டு புள்ளக தெரியுமா? நானு இப்போ பெரிய சம்சாரி'

'அடேங்கப்பா. இப்ப உனக்கேதாச்சும் வேல இருக்கா? இல்லீன்னா நாம அபப்டியே பள்ளிக்கூட திடலுப் பக்கம் காத்தாட போய் வரலாமா?'

'பெரிசா ஒண்ணும் வேலைல்லாம் இல்லைடா. வா போலாம்.'

சரியென நான் எழுந்து முகம் கழுவி கைலி ஒன்று எடுத்து உடுத்தி சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு கணேசனுடன் கிளம்பினேன். இத்தனை வருடங்களில் ஊர் ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை. அங்கங்கே புதுசு புதுசாக கடைகள் முளைத்திருந்தன. ஏதோ ஒரு ஆட்சி மாற்றத்தின் போது யாரோ போட்டுக் கொடுத்த தார் ரோடு புதிது. மற்றபடி இன்னும் தெருக்களில் வீட்டு வாசலில் கட்டிக் கிடக்கும் எருமை மாடுகளும், தெருவோரம் வெளிக்கி போகும் சின்னக் குழந்தைகளும், ஊர் மந்தையில் கபடி ஆடிக் கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளமும், தெருக்களில் பழைய சைக்கிள் டயரை ஒரு குச்சியால் டொக் டொக்கென அடித்தபடி ஓடும் சிறார்களும், பள்ளிக்கூட வராந்தாவில் நடக்கும் சீட்டுக்கச்சேரியும், பார்ப்பவர்களை எல்லாம் சித்தப்பு, பெரியப்பு, மாமா, மச்சா, அத்தே, யக்கா, தங்கச்சி, தாத்தா என உறவு சொல்லி சளைக்காமல் விசாரிக்கும் பிரியமான சனங்களும், கணேசா யாருலே அது நம்மூருல இன்னேரம் குழா கிழா மாட்டி சவான் மாதிரி உங்கூட என உரக்கக் கேட்கும் நகரத்து பாசாங்கில்லா மக்களுமாய் இன்னும் இந்த கிராமம் உயிர்ப்புடனே இருந்தது.

ஊருக்குள்ளே குண்டும் குழியுமாய் இருக்கும் தெருக்களில் குறுக்காய் ஓடும் சாக்கடைகளின் குறுக்கே பாலமாய் போடப்பட்டிருக்கும் கல் பலகைகள் தாவ் நாங்கள் மெல்ல நடை பயில, நான் அப்போது தான் படக் படக்கென கண் விழித்து எரியத் தொடங்கி இருந்த தெரு விளக்குகளை அண்ணாந்து பார்த்தபடி மனம் எங்கோ இருக்க கணேசனின் இடைவிடாத பேச்சினை இடை இடையே காதில் கேட்டபடி சென்று கொண்டிருந்தேன். ஊர் எல்லை தாண்டியதும் எல்லை காத்த மாரியம்மா கோவில் வாசலில் படியில் உட்கார்ந்தேன். கோவில் என்றால் ஏதோ பெரிய கோபுரம் சுற்றுப் பிரகாரம் என எண்ண வேண்டாம். ஒரு பெரிய சிமெண்ட் மேடை. அதன் மேலே நடுவில் சொருகி வைக்கப்பட்ட சூலம் ஒன்று. அதை சுற்றி சிமெண்ட் மேடையில் விளிம்பில் 3 அடி உயர கம்பி கிராதி. இவ்வளவு தான். சூலத்தின் முன்னால் சதுர வடிவில் கல்லான ஒரு குழி போன்ற விளக்கும், யாரோ எப்போதோ வெட்டி போட்ட எலுமிச்சை தோலும், பாதி எரிந்து அணைந்து கிடக்கும் பத்திக் குச்சிகளுமாய் இது தமிழக கிராமங்களின் பல லட்சக்கணக்கான சிறு தேவதை கோவில்களில் ஒன்று. பக்கத்தில் பெரிதாய் கிளை பரப்பியிருக்கும் வேப்ப மரமும், இந்த பக்கம் விழுது விட்டு அடர்ந்து காடாய் பெருகியிருந்த ஆலமரமும், அதை ஒட்டி கடும் மழியில் மட்டுமே தண்ணீர் ஓடும் உப்போடையும். மரங்களில் வந்தடையும் பறாவைகளின் இரைச்சல் கேட்டபடி ஆலமர விழுதொன்றில் சாய்ந்தபடி நான் என் சட்டை பாக்கெட்டில் இருந்து சிகரட் பாக் ஒன்றை எடுத்து கணேசனுக்கும் நீட்டினேன்.

'நானு எப்பவாச்சும் கோழிக்கறி கிறி சாப்பிட்டா ஒரு பீடி இழுப்பேம். இப்போ நீ தாறீயேண்டு ஒண்ணு எடுத்துக்கிர்றேன்'. கூச்சமில்லாமல் கிராமத்து வெகுளித்தனத்தோடு ஆவலாய் எனது சிகரெட் ஒன்றை கணேசன் எடுக்க இருவரும் பற்ற வைத்து நிதானமாய் உறிஞ்சினோம்.

தொடரும்.....

aren
08-01-2006, 11:15 AM
அருமை சுடர் அவர்களே. ஒரு கிராமத்திற்கு சென்ற உணர்வு ஏற்பட்டது.

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் கிராமம் பற்றிய அறிவு அவ்வளவாக கிடையாது. பாரதிராஜா புண்ணியத்தில் சினிமாவில் சில கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். மேலும் கும்பகோணத்தருகில் இருக்கும் எங்கள் சொந்த கிராமத்திற்கு இருமுறை சென்றிருக்கிறேன், ஆனால் இரண்டு முறையும் ஒரு இரவே அங்கே தங்கினேன், ஆகையால் கிராமம் பற்றிய அறிவு அறவே கிடையாது.

எவ்வளவு இழந்திருக்கிறேன் என்று உங்களுடைய பதிவைப் படித்தவுடன் தெரிந்தது.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்