PDA

View Full Version : ஆயுத பூஜை!poo
26-02-2005, 05:47 AM
ஆயுதபூஜை...


பெரும் முயற்சிக்குபின் அடுப்பில் வைத்த வரட்டித்துண்டுகள் எரிய ஆரம்பித்தது. ரேசன் கடையில் வாங்கிவந்த அரிசியை களைந்து போட்டுவிட்டு பெருமூச்சுவிட்டாள் சுசீலா. அதற்கு அர்த்தம் இல்லாமலில்லை..

சுசீலாவிற்கு வயது 60. இந்த வயதில் ரேசன் அரிசி ..வரட்டிகள் என வாடிக்கொண்டிருக்கும் அவளின் மூச்சுக்காற்றுகள் அடுப்பு நெருப்புக்கு சுவாசம் தந்து கொண்டிருப்பதிலேயே கண்டுபிடித்துவிடலாம்
பிள்ளைகளால் கைவிடப்பட்டவளென்று.


அலுமினிய குண்டானின் வெளிப்புறத்திலிருந்த நீர்த்துளிகள் தொலைந்துபோவதை வெறித்துக் கொண்டிருந்தாள் சுசீலா. வறண்டுபோன அவளது கண்ணீர்த்துளிகள் நினைவுக்கு வந்தது..கூடவே அந்த ஆயுதபூஜையும்..

பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது. நீர்க்குமிழ்கள் ஒன்றுக்கு இரண்டென இறந்து பிறந்து கொண்டிருந்தன.. மனித இனத்தைப்போலவே...

திருமணமான பத்தாவது வருடத்தில் சுசீலாவின் கணவர் வேலை செய்துவந்த பஞ்சாலையை மூடிவிட்டார்கள். வயிற்றுப்பிழைப்புக்கே சிரமமாகிவிட்டது. குத்தகைக்கு கொஞ்சம் நிலத்தை பயிர்வைத்து மூன்று மகன்களையும் பிரமாதமாக படிக்கவைக்க முடியாமல்போனாலும் அவர்கள் சம்பாதிக்குமளவு ஆளாக்கிவிட்டிருந்தார்கள்.

மூத்தவன் சொந்தமாக ஆப்செட் பிரஸ் வைத்திருக்கிறான். பனிரெண்டாம் வகுப்போடு நின்றுவிட்டு அச்சுத்தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன் தனியே தொழிலை தொடங்கியவுடன் பி.காம் படிப்பை தபாலில் முடித்தான்.

அடுத்தவன் ஒன்பதாம் வகுப்பை முடிக்கும் முன்னரே திருமணத்திற்கு சமையல் செய்யும் குழுவோடு பரிமாறும் வேலைக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தான்... வழிகாட்ட வேண்டிய கலங்கரை விளக்கம் குடும்பச்சூழலால் கலங்கி நிற்க.. அதையே சாதகமாக்கிக்கொண்டு இந்த வயதிலேயே கையில் நிகரமாய் வருகிறதேயென.. படிப்பை நிரந்தரமாக தலைமுழுகி சமையலை கற்றுக் கொண்டான். இப்போது ஒரு கம்பெனியின் கேண்டீனில் மாஸ்டராக இருக்கிறான். இவன்மட்டும் சமையல் படிப்பை முடிச்சிருந்தா பெரிய அளவுல வந்திருக்கலாமென மெம்பர் அண்ணன் சொல்லியதை நினைத்து அடிக்கடி சுசீலா கணவனிடம் ஆதங்கப்படுவாள். அவரோ " மரவள்ளிக்கிழங்கை அவிச்சித் தின்னு காத்தால பசியை ஆத்தன நமக்கு ஊருக்கெல்லாம் ஆக்கிப்போடற புள்ள இருக்காண்டி"ன்னு மார்தட்டிக் கொள்வார். அவர் எப்போதும் அப்படித்தான் "இடுக்கன் வருங்கால் நகுக" ரகம். அது அவ்வப்போது அவரது தாழ்வு மனப்பான்மையை குறைத்துக்கொள்ளவும் ஏதுவாக இருந்ததால் சுசீலாவும் அதை கண்டுகொள்ளவில்லை.

இளையவன் ஆளாவதற்குள் மேலிருந்த இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதால் அவனை கரைசேர்ப்பதில் அவ்வளவு பாரமில்லை. கல்லூரிப்படிப்பை முடித்து தனியார் பள்ளியொன்றில் ஆசிரியனாக இருக்கிறான்.

குத்தகைக்காரன் நிலத்தை திரும்பப்பெறுவதற்கு ஒரு வருடத்திற்குமுன்னரே எல்லோருக்கும் திருமணத்தை முடித்தாகிவிட்டது. கடனாளி ஆகாதபடி எளிமையாக முடிக்க வேண்டுமென்பதில் சுசீலாவின் கணவர் குறியாக இருந்தார்.. அதில் சுசீலாவிற்கு கொஞ்சம் வருத்தமிருந்தாலும் எல்லாம் நன்மைக்கேன்னு நினைக்கும் கணவனின் முடிவை ஏற்றுக்கொண்டாள். கொஞ்சநஞ்ச கடனையும் அடைத்துவிட்டு மூத்தவனைப்பாத்து "அடேய் இந்த மாச சம்பளத்துல ஒரு ஈச்சேர் வாங்கியாடா.. இனி ஒங்கப்பன நீங்கதான் ஒட்காரவைச்சு சோறு போடனும்.." சொன்னபடி ஈஸிசேர் வந்து சேரவில்லை. அதற்குள் அவர் போய்சேர்ந்துவிட்டார்.

நான் சின்ன வயசுல இந்த மாருமேல பாறாங்கல்லை தூக்கிவைச்சு நூறுவரைக்கும் எண்ணியிருக்கேண்டி- வழக்கம்போல நகைத்தபடி மாரைப்பிடித்துக்கொண்டு சாய்ந்தவர் ஒரேடியாக போய்விட்டார். பிள்ளைகள் ஆளாகிவிட்டபின் என்னை எப்படி மறந்தார்.. ஒரே மாரடைப்பில் மறைந்துபோன கணவனை நினைத்து சுசீலா புலம்பாத நாளில்லை.

அமைதியாக போய்க்கொண்டிருந்த குடும்பம் அவரது இறப்புக்குபின் கொஞ்சம் அசைய ஆரம்பித்தது.. இத்தனைக்கும் அதுவரை குடும்பத்தை பராமரித்தது சுசீலாதான்.. காற்றின்போக்கில் சாய்மரம் பயணிக்குமென்றாலும் படகோட்டி இருந்தால்தானே மரியாதை..

அப்பா போனபின் சுசீலாவிடம் மாதச்செலவுக்கு சம்பளமென்ற பெயரில் கொடுத்துவந்த தொகையை மூன்று மகன்களுமே கணிசமாக குறைக்க ஆரம்பித்தனர்.. சம்பளத்தை கூட்டிக்கொடுப்பாங்க.. கொறைச்சுமா கொடுப்பாங்க... சுசீலா அப்பாவியாய் அந்த வார்த்தையை கேட்க வெடிக்க ஆரம்பித்தது பூகம்பம்.. அன்று ஆயுதபூஜை.

அதுவரை பிள்ளைகள் அவளிடம் கொடுத்துவந்தது முழுச்சம்பளமல்ல என்பதே அப்போதுதான் தெரிந்தது சுசீலாவிற்கு.. அதற்காக அவள் வருத்தப்படவில்லை. அவள் அம்மாவாயிற்றே...
நாமதான் இப்படியாயிட்டோம்.. பிள்ளைகளாவது கடைசிகாலத்துக்கு சேமிச்சி வைக்கட்டுமேயென நினைத்தாள். ஆனால் அப்பிள்ளைகளின் சேமிப்பிற்கு அவளின் சாப்பாடும் பங்கம் ஏற்படுத்துமென அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அவர் ஆலையில் இருக்கும்போது சம்பள நாட்களில் தின்பதற்கு ஏதேனும் வாங்கிவந்தால் அதை மூன்று பிள்ளைகளுக்கும் சமமாக பங்குவைப்பாள்.. அதேபோன்றொரு பங்குவைக்கும் படலம் அரங்கேற ஆரம்பித்தது..இம்முறை பங்குவைக்கப்பட்டது சுசீலா என்ற பொருள்.. ஆம்.. அவளை உயிராக..உயிர் கொடுத்த இறையாக நினைக்காமல் ஆயுதங்களுக்கு பூஜைபோடுவதை சற்றே ஒத்திவைத்துவிட்டு...

அம்மா.. நாங்க தனியா போய்டலாம்னு இருக்கோம்.. -ஒன்றாக சொன்னார்கள்..

இன்னாடா ஆச்சு.. நான் இன்னா கேட்டுட்டேன்.. பதறிய சுசீலாவை நோக்கி தெளிவாக பேசினான் இளையவன்.

நீ ஒண்ணும் தப்பா கேக்கலம்மா.. எங்களுக்குன்னு ஒரு குடும்பம் ஆயிடுச்சி..இந்த ஊரைவிட்டு வெளியில கிளம்பினாதான் சரிப்படும்னு தோனுது. எல்லாருமே இங்க இருந்துகிட்டு தினமும் 25 கி.மீ தள்ளி போய் வரவேண்டியிருக்கு.. யோசிச்சி பார்த்தா சிரிப்புதான் வருது.. இப்படி ஒரே குட்டையில எத்தனை நாள் கிடக்கிறது.. அதுவும் ஒரு ஆளுக்காக...

இறுதியாக வந்த அலட்சிய வார்த்தையில் சுசீலா தடுமாறினாலும்.. வாய்தவறி வந்திருக்கலாமென நினைத்தபடி அவளது எண்ண ஓட்டங்கள் இன்னமும் தெளிவான பாதையிலேயே ஓடத்தொடங்கியது..
இருப்பது வாடகை வீடு. இவர்கள் தனியே போனால் எவனோடு போவது. ஒருத்தனைவிட்டு இன்னொருத்தன்கிட்ட போனா வருத்தம் வருமே.. இன்னமும் அப்பாவியாகவே இருந்தாள் சுசீலா.
அடுத்த அஸ்திரம் வந்துவிழுந்தது. "அம்மா எப்பிடியும் எல்லாரும் டவுனுபக்கம்தான் போயாகனும். அங்க உன்னைமாதிரி வயசானவங்களை கூட வைச்சுக்கிட்டா வீடு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். மெம்பர் அய்யாகிட்ட சொல்லி ஏரிக்கரை ஓரமா இருக்கற பொறம்போக்குல நீ ஒரு ஆள் இருக்கிறாப்போல ஒரு குடிசை போட்டுத்தர்றோம்... ரேசன்லயே எல்லாம் கிடைக்கும் ஒண்டி வயிறுதானே அப்படியே ஓட்டிக்க.. நானும் அண்ணன்களும் அப்பப்போ வந்து போறோம்..."

அன்னையெனும் அகராதியை அந்த பட்டதாரி முழுமையாக அறியாமல்போனதை நாகரீக முன்னேற்றமென சொல்வார்களோ...அப்படியெனில் அந்த பட்டதாரிக்குப்பின்னே மறைந்துநின்ற வேடதாரிகள்..?

விழுந்த அஸ்திரத்தில் வெடித்துப்போனாள் சுசீலா. பிள்ளைவரம்கேட்டு பிச்சைகிடந்த எனக்கு எச்சில் சோற்றை பிச்சைப்போட துணிந்துவிட்டனர்


வார்த்தைகள் வரவில்லை... மூச்சுவிடாமல் இளையவன் பேசியதிலிருந்தே தெரிகிறது..எல்லாம் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள்.பேசிப்பயனில்லை. முதல்முறையாக விவரம் புரிந்தது சுசீலாவிற்கு.

கண்ணீர்திரை விழுந்தது. கவலைகளை மறைக்கவோ..மறக்கவோ சிரித்து மழுப்பும் கணவனின் முகம் அவளுக்கு கலங்கலாக தெரிந்தது. " கடைசி மூச்சுவரைக்கும் கலகலன்னு இருந்தவரு நீங்க இந்த இறுகன ஜென்மங்களுக்காக அழுதுடாதீங்க" மனதுக்குள் வேண்டியபடி வெளியேற தயாரானாள் சுசீலா.

காட்சிகள் முடிந்தது. ஆயுத பூஜையும்தான்... பூஜைக்கு காத்திருந்த ஆயுதங்கள் கவலைப்படவில்லை.. இந்த ஊனமான கரங்களும் பாவமான மனங்களும் பூஜிக்காமல் இருந்ததே நல்லதென ஆயுதங்கள் கவலைப்படவில்லை.

நின்றுவிட்ட அடுப்பிலிருந்து கிளம்பிய புகைவளையங்கள் அவளை நினைவலைகளில் இருந்து மீட்டுவந்தது. இயல்பு நிலைக்கு திரும்பிய சுசீலா தனக்கு சோறுபோடும் வரட்டிய்ல் ஒன்றையெடுத்து அடுப்பில் வைத்தாள். அதனடியில் கொஞ்சம் ஈரம் கலந்த ஒரு கருவேலங்காட்டு விறகை நுழைத்து ஊதாங்குழலால் ஊதினாள்.. எரிய ஆரம்பித்த சிறிது நேரத்தில் அந்த கருவேலங்காட்டு கட்டையின் அடிப்புறம் நீர் கசிய ஆரம்பித்தது.. பதறியவளாய் அதை வெளியே எடுத்து குளிர்ந்த நீரில் அணைத்து ஆசுவாசமானாள்..

சுசீலாவிற்கு ஆயுதபூஜை நினைவுகள் மீண்டும் வந்துவிட்டது!!...

பரஞ்சோதி
27-02-2005, 08:38 AM
நண்பா,

மன்றத்தில் கவிதை படித்து மனம் துடித்து அடங்கும் முன்னமே உன் கதை.

தாயின் அருமையை காலம் மறக்கடிக்க முயல்கிறது.

பெற்ற தாயை மறந்தது, உதாசினப்படுத்தியது எல்லாம் தீராத ரணமாக மாறும் என்பது ஒவ்வொருவரும் தாயாகவும், தந்தையாகவும் மாறும் போது புரியும்.

gragavan
28-02-2005, 10:52 AM
அடடா! என்ன கொடுமை. தெய்வமே! எந்தப் பிள்ளைக்கும் இந்த உள்ளத்தை வைக்காதே!

பூ, நன்றாக உணர்வை உலுக்கும் வகையில் எழுதியிருக்கின்றீர்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

அன்புரசிகன்
23-06-2008, 03:15 PM
விழுந்த அஸ்திரத்தில் வெடித்துப்போனாள் சுசீலா. பிள்ளைவரம்கேட்டு பிச்சைகிடந்த எனக்கு எச்சில் சோற்றை பிச்சைப்போட துணிந்துவிட்டனர்

எத்தனை படங்கள் கதைகள் கேட்டாலும் இவ்வாறான நிகழ்வுகளை தடுக்க முடிவதில்லையே... இந்த வரிகள் படிக்கும் போது ஒரு தடவை உடம்பே குளிர்ந்தது போன்ற பிரமை. தலை விறைத்துவிட்டது. நமக்கும் இப்படி ஒரு நிலமை வந்தால்??????? கனவிலும் கடினமே.... தற்கொலை தான் இப்படியான முடிவு கிட்டியவர்களுக்கு தீர்வாக அமையவிருக்கிறதோ???

இளசு
23-06-2008, 07:43 PM
அன்பு பூ..

எப்படி இருக்கிறாய்?

இக்கதை முழுதும் உன் முத்திரை கண்டேன்..

வரட்டி அடுப்பு, அலுமினிய குண்டா, மேற்புர நீர்த்துளி - உட்புற நீர்க்குமிழி..

ஈர விறகா? இல்லை கருவேல மர குணமா?
எரியும்போதும் ஈரம் கசிகிறதே!

பெற்ற வயிறு பற்றி எரியும்போதும்
பிள்ளைகள் மேல் பாச ஈரம் கொண்ட தாய்போல்..

கலங்க வைத்தாய்.. உன் மீள்வரவுக்காய்
ஏங்க வைத்தாய்!

அறிஞர்
23-06-2008, 09:50 PM
கதையை இப்பொழுது படித்தாலும்.. தாக்கம் நீங்கவில்லை.

எந்த பெற்றோருக்கும் இந்நிலை வரக்கூடாது....

பூ திரும்பி வாங்க..
இன்னும் எழுதுங்க...