PDA

View Full Version : வீடு - 4



பாரதி
14-12-2004, 12:53 PM
தேதியில்லா குறிப்புகள்

நிறைய மாதங்களாக நினைத்துக்கொண்டே இருந்தது.... ஆனால் செய்யத்தான் முடியவில்லை. இப்போதும் இதை முடிப்பேனா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் தொடங்கிவிட வேண்டும் என்கிற உத்வேகம் மாத்திரமே இதை ஆரம்பிக்க செய்கிறது.

நினைவில் உள்ளவற்றை அப்படியே கொட்டுவதுதான் இதன் நோக்கம். இதில் அனேகமாக தேதியே இருக்காது, வரிசைக்கிரமமாகவும் இருக்காது.... கோர்வையாகவும் இருக்காது. சில விசயங்கள் திரும்ப வரலாம். சில சம்பந்தமில்லாமல் இருக்கலாம்... சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளிவராமல் இருக்கலாம்.ஆனால் ஒன்று வருவதில் நிஜம் மட்டுமே இருக்கும்.

படிக்கப்போகிறவர்களுக்கு ...
இதில் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். நன்றி.

முதல் நினைவு

யோசிச்சுப்பாக்குறேன்... பிறந்ததுலேருந்து எது முதல்ல ஞாபகத்துக்கு வருதுன்னு...ம்ம்... இதுதான்னு குறிப்பா சொல்ல முடியல... இப்போதைக்கு முதலாவது வகுப்பு படிக்க போனதுதான் நெனவுல இருக்கு.

பள்ளிக்கூடத்தோட பேரு பழனியப்பா வித்தியாலயம். பள்ளிக்கூடத்துல ஒண்ணாங்கிளாசுன்னா ரெண்டு வகுப்பு, ரெண்டாங்கிளாசுன்னா ரெண்டு வகுப்பு... இப்படி மொத்தம் பத்து வகுப்பு.

திங்கக்கிழம மட்டும் கண்டிப்பா யூனிபார்ம் போடணும். வெள்ளச்சட்ட, காக்கி டவுசர். மத்த நாள்ல நம்மகிட்ட என்ன இருக்கோ அத போட்டுகிட்டு போனா போதும். காலைல ஒம்போது மணிக்கு பள்ளிக்கூடம். லேட்டா போனா ஹெட்மாஸ்டர்கிட்டே பெரம்படி வாங்கணும். அஞ்சாவது வகுப்பு வரைக்குந்தான் அந்தப்பள்ளிக்கூடம். ஆறாவது வகுப்புலேருந்து "பழனியப்பா உயர்நிலைப்பள்ளி"ன்னு மெயின் ரோட்டுக்கு கெழக்க இருக்கும். அங்கே போயி படிக்கணும்.

எங்க வகுப்புல ரெண்டு மூணு இஞ்சு உயரத்துல மர பெஞ்சு இருக்கும். மொத்தம் எட்டு பெஞ்சு. ஒவ்வொரு பெஞ்சுலயும் மூணு இல்லாட்டி நாலு பேரு உக்காருவோம். டீச்சரோட பேரு என்ன தெரியுமா..? டிலாமணி. நல்லா குண்டா இருப்பாங்க. அவங்க டேபிள் மேலேயே நீளமா ஒரு தப்பைக்குச்சி இருக்கும். உக்காந்த இடத்துலேருந்தே பசங்கள "மொட்"டுனு அடிக்க வசதியா இருக்கும். என் பக்கத்திலே இருந்த பையனோட பேரு முருகன். பரிச்ச நடக்கும் போது அவனுக்கு காட்டலன்னா 'வெளியே வந்தா அடிப்பேன்'னு மெரட்டுவான். ரொம்ப பயமா இருக்கும்.

அப்ப எல்லாம் ஒரு சிலேட், ஒரு குச்சி, முத வகுப்பு புஸ்தகம் - இத எல்லாம் ஒரு மஞ்சப்பையில் போட்டுகிட்டு போவோம். சிலேட்டுல எழுதுற குச்சில ரெண்டு வகை. ஒண்ணு சாதாரணமா எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி பாறையில இருந்து எடுத்த மாவுக்குச்சி. அப்புறம் கடல்பாசின்னு சொல்வாங்க.. கருவேலமர முள்ளு மாதிரி இருக்கும். அத வச்சித்தான் எல்லாத்தையும் எழுதணும். சாக்பீசு எல்லாம் டீச்சர் மாத்திரம்தான் வச்சிருப்பாங்க.

தமிழ்ல மாத்திரம்தான் பாடம் எல்லாம். "அ"-னா "ஆ"-வன்னா .. அப்புறம் பறவைகள், விலங்குகள்... இப்படித்தான் மொத்தப்பாடமும் இருக்கும்.

வருசத்துக்கு ஒரு தடவ "இன்ஸ்பெக்சன்" அப்படீன்னு சொல்லி எல்லோரும் பரபரப்பா இருப்பாங்க. சுவத்துல எல்லாம் புதுப்புது படமா தொங்கும். யாரோ ரெண்டு பேரு வருவாங்க... நாங்க எல்லாம் பேந்த பேந்த முளிச்சுகிட்டு இருப்போம். சும்மா சிரிச்சிட்டு போய்டுவாங்க.

முத வகுப்புல காப்பரிச்சைல நாந்தான் பர்ஸ்ட் ரேங்க். அத அம்மாகிட்டே சொன்னேன் பாருங்க... சந்தோசம் தாங்காத அம்மா "நீனு நன்னு மொகுல்ல"... என்று கொஞ்சிக்கொண்டு என்ன இடுப்புல தூக்கி வச்சுகிட்டு தெருக்கோடியில இருந்த காப்பிக்கடைல அதிரசம் வாங்கிக்கொடுத்தாங்க.. என்னா ருசி தெரியுமா...ம்ம்ம்..! அதுதான் எனக்கு நெனவிருக்கு...

(அவசரத்துல டீச்சர்கிட்ட கேக்க பயந்து கிட்டு ஒண்ணுக்கு இருந்து, அத யாருக்கும் தெரியாம புத்தக பையாலேயே தொடச்சு... அதெல்லாம் தனிக்கத)

இளசு
14-12-2004, 08:38 PM
அதிரசத்துடன் இனிப்பான தொடக்கம்...

எல்லாருக்கும் இப்படி எழுதணும்னு ஆசை வரவைக்கும் இப்பதிவு
நிச்சயம் ஒரு மெகா வெற்றித்தொடர்தேன்...

தம்பிக்கு வாழ்த்தும் ஊக்கமும்..


கடைசி வரி அனுபவம் போல் எனக்கும் உண்டாக்கும்..ஹிஹ்ஹீஈஈஈஈ!

gragavan
15-12-2004, 04:38 AM
குழந்தைப் பருவத்து இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பாரதிக்கு வாழ்த்துகள். நன்றாக வருகிறதய்யா கோர்வை. தொடருங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
16-12-2004, 04:14 AM
தேதியில்லாக் குறிப்புகளை நிறைய எழுதுங்க பாரதி...
நாங்களும் எங்கள் வாழ்க்கையோட அதை நினைவுபடுத்தி மகிழ்கிறோம்.

அன்புடன்,
பிரதீப்

பாரதி
16-12-2004, 06:37 AM
குற்றாலம் - 1

நைட் எட்டு மணிக்கு தாமோதரன் மெஸ்ல சாப்புடுற அப்பத்தான் அந்த பேச்சு வந்துச்சு. எலுமிச்ச சாதம், உருளக்கெழங்கு சிப்ஸன்னு எல்லாரும் ருசிச்சு சாப்புட்டுகிட்டு இருந்தாங்க.

நிஜாம்தான் ஆரம்பிச்சாப்ல ... "குற்றாலத்துல தண்ணி வருதாம்ல.. பேப்பர்ல போட்டுருக்கான்.."

குத்தாலம்.. பச்சப்பசேல்ன்னு செடிக..மரங்க... பச்சயும் நீலமும் கலந்த கலர்ல மலை.. அந்த மலைல வெள்ளிய காச்சி ஊத்துன மாதிரி அங்க அங்க அருவிங்க... காத்துல வர்ற குளுமை, ஒடம்பு நனயாம அடிக்குற சாரல்... இப்படின்னு அருவியில குளிக்கப் போறதுக்கு முன்னாலயே மனசு ரெக்க கட்டி பறக்குற மாதிரி இருக்கும்.

சீசன் தொடங்குறதுக்கு முன்னாடி போனா கொஞ்சம் நல்லா இருக்கும். சீசன் டைம்ல போனா குளிக்கவே முடியாது. கூட்டம்னா கூட்டம்... அவ்ளோ கூட்டம் இருக்கும்.

மொதல்ல மாதிரியில்லாம் இப்ப இல்ல.. சும்மா வெறும் முழங்கால் அளவு தண்ணி தேங்குற அளவுக்கு இருக்குற பள்ளத்துல கொஞ்ச தூரம் நடந்து போயி அருவில அவ்வளவு பேரும் ரொம்ப சந்தோசமா குளிப்பாங்க... ஆனா இப்பல்லாம் அப்படியா...? எல்லாத்தையும் சிமிண்டால கட்டி வச்சிருக்காங்க.. ஆம்பளங்களுக்கும் பொம்பளங்களுக்கும் தனியா குளிக்கிற மாதிரி நடுவுல காங்கிரீட்ல ஒரு திண்டு வேற கட்டி வச்சிருக்காங்க. பிடிச்சு குளிக்க பெரிய பெரிய பைப் வேற...ம்ம்... என்னதான் இருந்தாலும் முத முதல்ல அருவிய பாத்த மாதிரி இல்ல. நாளு ஆக ஆக மனுசன் தான் மாறுறது மட்டுமில்லாம பாக்குறத எல்லாம் வேற மாத்திப்புடுறான். அட.. நல்லா இருந்தா பரவாயில்ல... எல்லாத்துலயும் காசு பாக்குறதுலதான கண்ணா இருக்கான்.

அப்படித்தான் ஒரு தடவ சீஸனப்ப போயி அருவில ரெண்டு மூணு நிமிசம்தான் நின்னுருப்போம். திண்டு மேலே வெரட்ட போலீஸ்காரன் ரெடியா நிக்குறான். ஒரு தடவ சொல்லுவான். கேக்கல... அவ்வளவுதான்... அப்புறம் அவன் கைல இருக்குற குச்சிதான் பேசும். குளிக்குறத விட எப்ப போலீஸ்காரன் போகச்சொல்லுவானோ அப்டீங்குறதுலதான் கவனம் பூராவும் இருக்கும்.... அப்புறம் என்ன...? அடச்சே..ன்னு ஆகிப்போகும்... இங்க குளிக்க வந்தமா..இல்ல அடி வாங்க வந்தமா...ன்னு.. அப்ப மட்டும் போலீஸ் மேல கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும்.. அவன் மட்டும் நாள் பூரா யாரும் விரட்டாம அருவில குளிச்சுகிட்டு நிக்கிறானேன்னு...

அப்புறம் ஒடம்பு பூராவும் எண்ணெய தேச்சுகிட்டு வர்ற ஆளுங்க மேல ஒரசுறதுல ஒடம்பு பூரா மறுபடி ப்சுபிசுங்கும்... மறுபடியும் குளிக்கணும் போல இருக்கும்.

கொஞ்சம் திமிர் பிடிச்ச தெனாவெட்டு ஆளுங்க... உள்ள சரக்க நல்லா ஊத்திகிட்டு மாடு மாதிரி குளிச்சுகிட்டு இருக்குறவங்க மேல வந்து விழுவாங்க... அப்பயும் ஏண்டா குளிக்க வந்தோம்னு இருக்கும்.

வெளியூர்ல இருந்து வர்றவங்க குளிக்கிற பழய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி,சிற்றருவி... கொஞ்சம் சிரமப்பட்டு போற செண்பகா தேவி அருவி... எல்லா அருவிலயும் குளிச்சே ஆகணும்னு நெனக்கிற எளவட்டங்க மட்டும் போற தேனருவி... கவர்மெண்ட் ஆளுங்க பணக்காரங்க குளிக்கிற பழத்தோட்ட அருவி ... இன்னும் அங்கங்க சின்ன சின்னதா நெறய பேருல அருவிங்க..... இப்படி குற்றாலத்துல எங்க பார்த்தாலும் மனசு எல்லாம் உருகிப்போற மாதிரி இருக்கும்... சும்மா..சில்லுன்னு அடிக்கிற காத்துல முதல்ல கொஞ்சம் ஒடம்பு குளுரத்தான் செய்யும்... ஆனா அருவில புகுந்துட்டோம்னு வைங்க... அடடா..... அந்த சுகத்தயெல்லாம் வார்த்தையில் சொல்லி வெளங்க வைக்க முடியாதப்பு...

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போய்கிட்டிருக்கேன் பாருங்க...ம்ம்.. இது மாதிரி அடிக்கடி சுத்துப்பிரயாணத்த எல்லாம் நெனச்சுப்பாத்தாலே வயசெல்லாம் குறஞ்சிட்ட மாதிரி இருக்கு... நேரம் கெடைக்கும் போது சொல்லப்பாக்குறேன்...

ரெண்டு வருசமா அருவில தண்ணி சரியா வரல. அதனால குத்தாலத்துக்கு போகல...

நிஜாம் சொன்னவுடனே மெஸ்ஸில சாப்பிட்டுகிட்டு இருந்த அத்தன பேருக்கும் ஒரே சந்தோசம்...

இந்த வாட்டி கண்டிப்பா போய்ர வேண்டியதுதான்...

நெறய வண்டியில போகணும்...

சும்மா வேலக்கி போயி அலுத்துப்போச்சுப்பா...

இப்படி ஆளுக்காளு பேச எனக்கும் சந்தோசம்...

ஒரு மூணு நாலு வாட்டி குத்தாலத்துக்கு போயிட்டு வந்திருக்கேன். ட்ரெயினியா இருக்குறப்ப ஒரு தடவ... அப்புறம் ஜிம்கானாவுல போனது.. பசங்க கூட வண்டில போனது... இப்படி...

ஆனா ஒரு தடவ கூட தேனருவிக்கு போனது கெடயாது. இந்தத்தடவ போனா கண்டிப்பா போகணும்னு நெனச்சுகிட்டேன்.

பேச்சு எப்படியோ தெச மாறிப்போச்சு... ஒருத்தன் அடுத்தவன குத்தம் சொல்ற மாதிரி ஆகிப்போச்சு...

போன வருசம் கூப்பிட்டனே வந்தியாலே..?

சும்மா சொல்றீங்கடா... எல்லாம் வெட்டியா பேசுறீங்க....

கூப்பிட்டா ஒருத்தனும் வரமாட்டானுங்க...

இப்படியா பேச்சு முத்தி யாரு சொன்ன சொல்ல காப்பாத்துறங்குற அளவுக்கு ஆயிப்போச்சு...

சத்தியமோகன் சொன்னான்... எலே... இப்பவே கிளம்ப நான் ரெடி... கூட யாரு வர்றீங்க..?

நெறய பேரு கப்சிப்புன்னு வாயடச்சிட்டாங்க...

எனக்கு ரோசம் பொத்துகிச்சு.. நானும் ரெடிதான்னு சொன்னேன்... எப்படியும் பிரதீப்பையும் கூட்டிகிட்டு போயிரலாம்ணு தெரியும். நிஜாமும் வர்றதுக்கு ரெடின்னு சொன்னாப்ல.

ரமேஷ், சீனு, பால்ராஜா, தமிழு எல்லாம் வரமுடியலன்னு சொன்னாங்க.

சரி.. யாரு வந்தாலும் வரலன்னாலும் கண்டிப்பா உடனே கெளம்பிற வேண்டியதுதான்னு ஒரு தீர்மானமாகிப்போச்சு.

அடுத்த ஒரு அரமணி நேரத்துல கெளம்புறதுக்கு ரெடியாய்ட்டோம் - செலவுக்கு பணம், ஒரு செட் மாத்துத்துணி, துண்டு, அருவில குளிக்க டவுசர் அவ்வளவுதான. அடுத்தநாள் ஞாயித்துக்கெழமங்கிறதுன்னால வசதியாப்போச்சு. ஒரு வேள சீசன் நல்லா இருந்துச்சுன்னா திங்கக்கெழமயும் குத்தாலத்துலேயே தங்கி இருந்துட்டு வர்றதுக்கு வசதியா கம்பெனில ஈ.எம்.எல் சொல்லிறணும்னு ரமேஷ்கிட்ட சொல்லியாச்சு. . என்னோட வெஸ்பா வண்டியயும் நிஜாமோட வெஸ்பா வண்டியயும் கொண்டு போகலாம்ணு தீர்மானமாச்சு.

என்கூட பிரதீப்பும்... நிஜாம் கூட சத்தியமோகனும் வந்தாங்க... நைட்ல வண்டி ஓட்ற சுகமும் அலாதிதான்.. வண்டிங்க அவ்வளவா இருக்காது. என்ன.. பள்ளம் மேடு சரியா தெரியாது.. கொஞ்சம் சூதானமா வண்டிய ஓட்டணும்.

முத்தையாபுரம் பல்க்-ல பெட்ரோல போட்டுகிட்டு கெளம்புனோம். தூத்துக்குடி பைபாஸ் ரோட்டு வழியா தூத்துக்குடி-திருநெல்வேலி ஹைவே ரோட்ட பிடிச்சு, அளவான வேகத்துல போனோம்..
பாளயங்கோட்ட பக்கத்துல போகும் போது... நேரா போனா ஒன்வே ரோடு... அதனால மெடிக்கல் காலேஜ் வழியா சுத்தி திருநெல்வேலி போகணுமே..ன்னு யோசன...

பிரதீப்பும் சத்தியமோகனும் அடிச்சு சொன்னாங்க... ஒம்போது மணி வரைக்குந்தான் ஒன்வே.. அதுக்கப்புறம் ஒன்வே கெடயாது.. இப்பதான் மணி ஒம்போதர ஆயிப்போசுல்ல... தாராளமா போலாம்....அப்டீன்னு.

சரிதான்னு முருகன்குறிச்சி வழியா நேரா பஸ்ஸ்டாண்ட் பாத்து போனமா...? மேம்பாலத்துக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நின்னுகிட்டு இருந்தார்...!

pradeepkt
16-12-2004, 10:36 AM
என்னமோ எனக்கும் குத்தாலத்துக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இது வரைக்கும் ஒரே ஒரு தடவைதான் போயிருக்கேன். அப்பவும் ஒழுங்கா குளிக்க முடியாம நீங்க சொன்ன அத்தனை பிரச்சினையும் வந்திச்சு. சண்டை போட்டுட்டு வந்து சேந்தேன்.
உங்க கதையில வர பிரதீப்பையாச்சும் நல்லபடியா குத்தாலத்துக்குக் கூட்டிட்டுப் போய் எல்லாருமா எஞ்சாய் பண்ணுங்க.

இப்ப தொடருங்க தொடரை.
அன்புடன்,
பிரதீப்

gragavan
17-12-2004, 01:51 PM
அடடா! பாரதி மக்கான். நம்மூரு விசயமெல்லாம் எடுத்து விடுற அழகு இருக்கே! அடடா! தூத்துக்குடி, முத்தையாபுரம், பைபாசுன்னு அடுக்கைல அப்பிடியே தூத்துக்குடிக்குள்ள நொளஞ்சுட்ட மாதிரி இருக்கு. விட்டா மூனாம் மைலு, போல்டன் புரம், சின்னக் கோயிலு, சார்லசுன்னு அடுக்குவீங்க போல இருக்கே. நடத்துங்க. நடத்துங்க.

தூத்துக்குடில இருந்த வரைக்கும் வருசாவருசம் குத்தாலம் போயிருவோம். திருநவேலி, தெங்காசி வழியா போறதே ஒரு பெரும் பயணமா இருக்கும். ஐயா! பாரதி என் வயசு ஒரு இருவது கொறஞ்சாப்புல இருக்கு. தொடருங்க. அத்தோட போயிருந்தீங்கன்னா மொயல் தீசு, ஏரலு பத்தியெல்லாம் எழுதுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
17-12-2004, 02:05 PM
ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் குற்றாலம் போயிருந்தாலும், கல்லூரிக் காலத்தில் வீட்டுக்குத் தெரியாமல் கல்லூரி நண்பர்களுடன் குற்றாலம் சென்றாதை மறக்கவே முடியாது. குற்றாலத்திற்கருகே ஏதோ ஒரு சின்ன கிராமத்தில் இருந்த நண்பனின் சித்தப்பா வீட்டில் ஓரிரவு தங்கி இருந்து விட்டு இரண்டு நாட்கள் குற்றாலத்தில் அலைந்து அடித்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

எழுதுங்கள் பாரதி. மலரும் நினைவுகளில் என்னை தள்ளி விட்டது உங்கள் எழுத்துக்கள்.

பாரதி
18-12-2004, 03:59 PM
எங்கள பாத்ததும் கைய காமிச்சு நிறுத்தச்சொன்னார். ஓரமா வண்டிய நிறுத்திட்டு வந்தோம்...

எங்கேருந்து வர்றீங்க...?

தூத்துக்குடிலேருந்து சார்...

அதெல்லாம் சரி... பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க... நீங்களே இப்படி பண்ணுனா எப்படி...?

என்ன சார் ப்ராப்ளம்...?

ஆர்.சி.புக், லைசென்ஸ் எல்லாம் இருக்கா...?

இருக்கு சார்... எடுக்கவா..?

இருக்கட்டும்... இருக்கட்டும்... அதெல்லாம் பத்திரமா இருக்கட்டும்...

எங்களுக்கு ஒண்ணும் புரியல...

ஒன்வேல வரலாமா....?

சத்தியமோகன் கொஞ்சம் சமாளிக்கலாம்னு... அப்பிடியா சார்... சரியா கவனிக்கல... அப்டீன்னான்.

ஒரு இடம்னா பரவால்ல... சமாதானபுரத்துல இருந்து ஒன்வே அப்டீன்னு பதினெட்டு எடத்துல போர்டு வச்சிருக்கமே... கவனிக்கலன்னு சொன்னா எப்படீ...?

சார்... டைம்தான் ஒம்போதரைக்கு மேலே ஆச்சே...

அதனால... ஒங்க இஷ்டத்துக்கு ஒன்வேல வருவீகளோ... எப்படீ..?

எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல.. அந்த நேரம் பாத்து நாங்க வந்த அதே வழியா ஒரு வேன் வந்துச்சு... அதயும் ஓரங்கட்டுனாரு அவரு. வேன்ல இருந்து டிரைவர் குதிச்சு வெளிய வந்தாரா... நேரா கான்ஸ்டபிள் கைய பிடிச்சு குலுக்குனாரு... மறுபடி வண்டியில ஏறி உக்காந்துகிட்டு வேன ஸ்டார்ட் செஞ்சு கெளம்பி போயிட்டாரு...!!

இப்பத்தான் எங்களுக்கு வெசயம் புரிஞ்சுச்சு.

Iniyan
18-12-2004, 09:00 PM
என்ன நம்ம டிராபிக் களைப்பு நீங்க டீ செலவுக்கு தலை சொறிஞ்சிருப்பாரு.

பாரதி
19-12-2004, 03:23 PM
குற்றாலம் - மெயின் அருவி

அவரு "சம்திங்க்" கேக்காருடே... கிசுகிசு குரலில் நிஜாம்.

இத்தன வருசத்துல அப்படி எதுவும் தந்ததே இல்ல.. இப்ப ஏன் தரணும் அப்டீங்கிற நெனப்பு உள்ள ஓடுச்சு.

என்ன யோசிக்கிறீங்க.. எதையாவது தந்துட்டு கெளம்பலாம்ல...சத்யமோகன் சொல்லிட்டே சட்டப்பைல கைய விட்டு இருந்ததை எடுத்தான்.. இருவது ரூவாதான் இருக்கு... அப்டீன்னு சொன்னான். உடனே கான்ஸ்டபிள் அட..குடுத்துட்டு இடத்த காலி பண்ணுங்க சார்..ன்னு அவசரப்பட்டார். காரணம் என்னன்ன.. மறுபடியும் ரெண்டு மூணு வண்டி அந்த ரோட்ல வந்துகிட்டு இருந்துச்சே.. வசூல் பண்றதுல குறியா இருக்காருங்கிறது ரொம்ப தெளிவா தெரிஞ்சுச்சு.

கோபமும் எரிச்சலும் இருந்தாலும் சீக்கிரம் குத்தாலம் போகணுமே அப்டீகிறதுதான் ரொம்ப முக்கியமா இருந்துச்சு... சரீன்னு கெளம்புனோம். திருநவேலில டீத்தண்ணி குடிச்சுட்டு குத்தாலம் ரோட்ட பிடிச்சு ஒரே வெரட்டுதான்..

எப்பவாச்சும் எதிர்ல வர்ற வண்டிங்க போற சத்தம்... சில்வண்டுகளோட சத்தம்.... ஸ்கூட்டரோட எஞ்சின் சத்தம்... இது மாத்ரம்தான்... வண்டி ஓட்ட ரொம்ப சுகமா இருந்துச்சு.

ஆலங்குளத்த தாண்டுன உடனே காத்து மாறிப்போச்சு... குளுகுளுன்னு ஏ.சி. போட்ட மாதிரி இருந்துச்சு... தென்காசி வரும் போது லேசா சாரல் வேற... ஆனா நல்ல வேளையா மழ விழல... ஒரு வழியா ஒரு பன்னெண்டு... பன்னெண்டர மணி இருக்கும்... குத்தாலம் வந்து சேந்தோம்.

மெயின் அருவி போற ரோட்டு முக்குல ஒரு காப்பிக்கட இருந்துச்சு. சுடச்சுட காப்பி... ரொம்ப நல்லா இருந்துச்சு..

விடிஞ்சிட்டா கூட்டம் வந்துரும்.. சரியா குளிக்க முடியாது... அதனால நைட்லேயே குளிக்கலாம்னு எல்லாரும் சொன்னாங்க.

நெனச்ச மாதிரியே மெயின் அருவில கூட்டமே இல்ல.. தண்ணியும் நல்லா விழுந்துகிட்டு இருந்துச்சு. ஆச தீர நல்லா குளிச்சோம். ரொம்ப நாளக்கி அப்புறமா இப்படி குளிக்கிறது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நைட் ஒரு மணிக்கு அருவில குளிச்சமா..ன்னு இப்ப நெனச்சா கூட சிரிப்புத்தான் வருது...
சொன்னா நம்ப மாட்டீங்க...அருவில குளிக்கும் போது கொஞ்சம் கூட குளுரவே இல்ல...!

அங்க ஒரு முக்கா மணி நேரம் குளிச்சிருப்போம். வெளிய வந்தா ... கைல வெளங்கு எல்லாம் போட்டு ஒரு பத்து பேருகிட்ட இருக்கும்... இரும்பு சங்கிலியில கட்டி வரிசையா கூப்பிட்டு போறது தெரிஞ்சது. மனசு பாதிச்சவங்களுக்கு அங்க இருக்குற வைத்தியருங்க கொடுக்குற ட்ரீட் மெண்டாம். ஏதோ குத்தவாளிங்கள கூட்டிட்டு போற மாதிரி... இப்படியெல்லாமா வைத்தியம்னு யோசன...மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு.

சரி...அதோட விட்டமா...? அங்க குளிச்ச கையோட அஞ்சருவிக்கு கெளம்பியாச்சு. வண்டிதான் இருக்குல்ல... ரொம்பல்லாம் யோசிக்கல... அஞ்சருவிலயும் தண்ணி நல்லா வந்துகிட்டு இருந்துச்சு... பெரிய சோடியம் வேப்பர் பல்ப் போட்டிருந்ததால இருட்டால்லம் ஒண்ணும் இல்ல. இங்க கொஞ்ச பேரு குளிச்சிட்டு இருந்தாங்க... இங்கயும் ரொம்ப சுகமான குளியல். அதுலயும் வலதுகை பக்கமா விழுற அருவில கொஞ்சம் சந்து போல இருக்கும். அதுக்குள்ள போயி நின்னா வெளிய வர மனசே வராது. மூச்சு முட்டுற அளவுக்கு நிப்போம். அருவித்தண்ணி தலலயும் முதுகுலயும் விழுறது சும்மா.. மசாஜ் பண்ற மாதிரி இருக்கும். இங்கயும் ஆனந்தக்குளியல்...

ரெண்டரை மணிக்கு மேல இருக்கும். நல்லா பசிக்க ஆரம்பிச்சுச்சு. இப்பக்கொஞ்சம் குளுர வேற ஆரம்பிச்சிருச்சு. மறுபடியும் காப்பிக்கடக்கி போயி சூடா பால மட்டும் குடிச்சோம்.

சரிதான்.. நேரம் ஆச்சு... ஏதாவது லாட்ஜ்ல ரூம் போட்டுட்டு தூங்குவோம்னு முடிவு பண்ணுனோம்.
குத்தாலத்துல இருக்குற லாட்ஜ் ஒண்ணொன்னா தேடிப்போனமா.... நெறய இடத்துல கதவயே தெறக்கல... தெறந்த இடங்கள்ளயும் கெடச்ச பதிலு 'இடமில்ல' அப்டீங்கிறதுதான்..

குத்தாலத்துல இருக்குற எல்லா லாட்ஜயும் பாத்துட்டோம்... ஒரு லாட்ஜ்ல கூட ரூம் காலி இல்ல....!

எல்லாருக்கும் ஒரே எரிச்சல். குத்தாலத்துல இடமில்லன்னா என்ன...? தென்காசிக்கு போயிரலாம்னு தீர்மானமாச்சு.

திரும்பி தென்காசிக்கு வண்டிய விட்டோம்... அங்க போயி பாத்தா... என்னத்த சொல்ல... எங்க நேரம்.. சொல்லி வச்ச மாதிரி ஒரு லாட்ஜ்லயும் இடமில்லன்னு சொல்லிட்டாங்க...

எங்களுக்குன்னா ஒரே கடுப்பு.... என்னடா இது... இப்படி சோதனயா இருக்கேன்னு.. ஆனாலும் எல்லாருக்கும் ஒரே வைராக்கியம்... என்னன்னா... இத எப்படியும் விடக்கூடாது .... எப்படியாவது தூங்கிறணும்கிறதுதான்... தென்காசில இல்லன்னா விட்ருவமா...? கொஞ்சம் யோசன பண்ணிட்டு, செங்கோட்ட போயி பாக்கலாம். எப்படியும் ரூம் கெடைக்க வாய்ப்பிருக்குன்னு... முடிவாச்சு.

தெங்காசிலேருந்து நேரா செங்கோட்டக்கி போக வழி இருக்குன்னு வழியில சொன்னாங்களா...? சரீன்னு அந்த வழியா போனோம். இலஞ்சி..அப்டீங்கிற ஊரு வழியில இருந்ததுன்னு நெனவு.

செங்கோட்டைக்கி போய் சேரும் போது நல்லா விடிஞ்சி போச்சி... ரெண்டு மூணு மணி நேரத்துக்கு மேல ரூம் தேடி அலஞ்சிக்கிட்டிருக்கோமேன்னு அப்பதான் தெரிஞ்சது. அந்த ஊர்ல போயி லாட்ஜ் இருக்கான்னு கேட்டா ஒரே ஒரு லாட்ஜ்தான் இருக்கு... பஸ்ஸ்டாண்டுக்குள்ள இருக்கு..ன்னு சொன்னாங்க.

போயி கேட்டா ஒரே ஒரு சிங்கிள் ரூம்தான் காலியா இருக்கு.!. அப்டீன்னாரு அங்க இருந்தவரு.

baranee
19-12-2004, 05:10 PM
பாரதி நீங்களா அந்த வலைப்பூவில் எழுதுபவர்.. ?

gragavan
20-12-2004, 05:18 AM
பாரதி! நடத்துங்கவே! நல்லாருக்கு! செங்கோட்ட, திருமல எல்லாம் போயிருக்கேன். சின்னப்புள்ளயா இருந்தப்ப. எலஞ்சி போகனும்னு ஆச இருக்கு. என்னைக்குக் குடுத்து வெச்சிருக்கோ. நீங்க சொல்லச்சொல்ல ஒவ்வொரு எடமும் எங் கண்ணுல அப்பிடியே தெரியுது. குத்தால சங்குவீதில கடத்தெருவுல எதுவும் வாங்குனீங்களா? நாஞ் சின்னப் புள்ளைல எனக்கு ஆட்டோமேடிக் பம்பரமும் மூளைக்கு வேலையுந்தான் பிடிக்கும். அதத்தாங் கேப்பேன். இப்போ என்னென்ன விக்கானோ! அப்புறம் மங்கூசுதானு பழம். பிரிச்சா சின்னதா கண்ணாமுழியாட்டம் மூனு பழமிருக்கும். அடடா!

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
20-12-2004, 03:59 PM
கருத்துக்கள் சொன்ன அண்ணன், பிரதீப், இனியன், இராகவனுக்கு மிக்க நன்றி.

ஆமாம்.. பரணீ.. உங்கள் யூகம் மிகச்சரி.

பிரதீப்பை மறக்க முடியுமா பிரதீப்...?!

அன்பு இராகவன்... நீங்கள் குறிப்பிட்ட தூத்துக்குடி இடங்களுக்கு எல்லாம் நான் பலமுறை சென்றிருக்கிறேன்.. ஏரல் ஓரிரு முறை சென்றிருக்கிறேன். என் நண்பன் அப்துல் ராசிக்கின் ஊர்தான் அது..!

குற்றாலம்....குறுகிய அந்த குற்றாலக் கடைத்தெருவில் போவதே சின்ன திருவிழாதானே... நீங்கள் குறிப்பிட்டபடி அந்த மங்குஸ்தான் பழத்தை அங்கேதான் பார்த்திருக்கிறேன்... ஆனால் என்ன... எதையும் வாங்கவில்லை...

எப்போதுமே இளமை நினைவுகள் இனிமையானவைதான்... எனக்கு வயதாகிறதே என்று நான் எப்போதும் கவலைப்பட்டதுமில்லை. உற்சாகப்படுத்தும் வகையில் நீங்கள் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

பாரதி
20-12-2004, 04:02 PM
அய்யா சாமி... பரவால்ல..குடுங்க... நாங்க பாத்துக்குறோம்.... சொல்லி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்துட்டு ரூமுக்கு போய் சேந்தோம். எல்லாருக்கும் நல்ல அலுப்பு. நைட் பூரா வண்டி ஓட்டுனது.. அருவில குளிச்சதுன்னு... எப்படா கீழ விழுவோம்னு இருந்துச்சு.

அந்த ரூம்ல ஒரு சின்ன கட்டுலு மாத்திரம்தான் இருந்துச்சு. எல்லாரும் துண்ட விரிச்சு கீழயே படுத்துட்டோம். அடிச்ச போட்ட மாதிரி தூக்கம்.

திடீர்னு முளிப்பு வந்துச்சு. கபகப..ன்னு ஒரே பசி... காலைல மணி ஒரு பத்து இருக்கும். சாப்புடுறதுக்காக எல்லாரையும் எழுப்புனேன். பக்கத்துலேயே ஒரு சின்ன ஹோட்டல் இருந்துச்சு. கேரளாவுல இருந்து வர்ற லாரி டிரைவர் எல்லாம் அங்கதான் சாப்பிடுவாங்களாம்.

புட்டு, ஆப்பம், தோச இருக்குன்னு சொன்னாங்க. நான் சைவம்கிறாதால தோச மாத்திரம் சொன்னேன். நிஜாமும் பிரதீப்பும் தோச மாத்திரம் போதும்னு சொன்னாங்களா...சத்தியமோகன் தோசயோட ஒரு ஆம்லேட் ஆர்டர் கொடுத்தான். அந்த சர்வர் கொஞ்சம் வயசானவரு... "ஆம்லேட் தாரா..?" என்று மலையாளம் கலந்த தமிழில் கேட்க இவனும் "ஆமா.. ஆமா.. ஆம்லேட் தாங்க"ன்னு சொன்னான்.

எல்லாருக்கும் கேட்டது வந்துச்சு. தோச கொஞ்சம் சுமாரா இருந்துச்சு. ஆம்லேட் நல்லா பெரிசா இருந்துச்சு. சத்தியமோகனுக்கு ஒரே சந்தோசம்.... அங்கெல்லாம் ஏமாத்துராங்க. இங்க பாரு... இதயே ரெண்டு ஆம்லேட்ன்னு சொல்லி காச தீட்டிருவாங்க... அப்டீன்னு சொல்லிகிட்டே சாப்பிட்டான்.

ரெண்டு வாய் சாப்புட்டதுக்கு அப்புறம் அவனுக்கு லேசா ஒரு சந்தேகம்.. ஏதோ வாட அடிக்குதுன்னு... சர்வர கூப்பிட்டு கேட்டான்... ஆம்லேட் டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு... அவரு கஷ்டப்பட்டு வெளங்க வச்சதுக்கப்புறந்தான் தெரிஞ்சது தாரா..ன்னா வாத்து..ன்னு!! ம்.. அப்டீயும் அவன் விடலயே... முழுசா சாப்புட்டான்.

கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ண பின்னாடி... புரோகிராம் படி தேனருவி பாக்கப் போகணுமே.. மத்த எல்லாத்தையும் வச்சுட்டு சட்ட, டவுசர், துண்டோட கெளம்பினோம். செங்கோட்ட - குத்தாலம் ரூட்ல போனோம்.. அட.. அட... அந்த வழில வரும்போது மலை எல்லாம் பாக்க பாக்க கொள்ள அழகா இருந்துச்சு...

எல்லாத்தையும் ரசிச்சுகிட்டே வந்தோம். வர்ற வழில ரோட்டுலயே இளநி வெட்டி வித்துகிட்டு இருந்தாங்க... அதயும் ஒரு கை பாத்தோம். என்னா ருசி... என்னா ருசி...!

சிற்றருவி...ல சின்னதா ஒரு குளியல் போட்டுட்டு... தேனருவிய பாக்க கெளம்புனோம். அப்ப எனக்குத் தெரியாது... இப்டியெல்லாம் நடக்க போகுதுன்னு...

எலே... மேல போகும் போது வழுக்குமே.. செருப்ப எல்லாம் வண்டியில வச்சிட்டு போலாமே...ன்னு சத்தியமோகன் அபிப்பிராயப்பட்டான். ஆனா நாங்க மத்த மூணு பேரும் சும்மா செருப்போட போகலாம்ணு சொன்னோம். மெஜாரிட்டி சொன்ன பின்னாடி அப்புறம் என்ன..? செருப்பு போட்டுகிட்டேதான் போனோம்.

மேல போகுற வழியல அங்க அங்க சின்ன சின்னதா அருவி மாதிரி இருக்குற இடத்துல் எல்லாம் ஆளுங்க குளிச்சிட்டுகிட்டிருந்தாங்க..

செண்பகா தேவி அருவிக்கு போய் சேந்தோம். வசதியா அருவில குளிக்கணும்னு நெனக்கிறவங்களுக்கும் சரி... குளத்துல குளிக்கணும்னு நெனக்கிறவங்களுக்கும் சரி.. கிணத்துல குளிக்கணும் நெனக்கிறவங்களுக்கும் சரி.... அது ரொம்ப அருமையான இடம். ஏன்னா அருவி விழுற இடத்துல நின்னு வசதியா குளிக்கலாம். கொஞ்சம் தள்ளி பெரிய கிணறு மாதிரி அருவித்தண்ணி தேங்கி அப்புறமா போற இடம் இருக்கும். நல்ல ஆழத்துல இருந்து நின்னு குளிக்கிற அளவு ஆழம் வரைக்கும் தண்ணி இருக்கும். துணிச்சலா மேல இருந்து "டைவ்" அடிக்கிறவங்களுக்கும் அங்க ரொம்ப வசதிதான்...

எப்பயும் இருக்குறத விட இந்தத்தடவ கூட்டம் கொஞ்சம் கூடத்தான் இருந்துச்சு...!

நேரம் வேற ஆயிட்டிருக்கு... கீழ வரும் போது பாத்துக்கலாம்னு அதுக்கு மேல போக ஆரம்பிச்சோம்.

போற வழியில அங்க அங்க பாறைங்க இருந்துச்சா... செருப்போட நடந்து போறது கொஞ்சம் செரமமா இருந்துச்சு. கொஞ்ச தூரம் கைல செருப்ப தூக்கிட்டு நடந்தமா... அப்புறமா யோசன பண்ணி.... ஏதாவது ஒரு இடத்துல செருப்ப எல்லாம் ஒளிச்சி வச்சிட்டுப் போலாம்.. வர்றப்ப எடுத்துக்கலாம்னு...

ஒரு இடத்த அடையாளம் பாத்துகிட்டு செருப்ப எல்லாம் வச்சோம். சத்தியமோகனுது மட்டும் சாதாரண சிலிப்பர். மத்தவங்களுது எல்லாம் "பாட்டா".

மேல போக போக கொஞ்சம் கொஞ்சமா ஆள் நடமாட்டம் குறைய ஆரம்பிச்சிருச்சு. இருந்தாலும் ரெண்டு பேரு... மூணு பேருண்ணு அங்க அங்க ஆளுங்க வந்துகிட்டு இருந்தாங்க.

சின்ன வயசுல படிச்ச குற்றாலக்குறவஞ்சி நினைவுக்கு வந்துச்சு... கொரங்குக வேற அங்க அங்க உர்..உர்..னு சத்தம் போட்டுகிட்டு கூட்டமா சுத்திகிட்டு இருந்துச்சுங்க.

தூறல் வேற லேசா விழுந்துகிட்டே இருந்துச்சு.. தேனருவிய பாக்கப் போகணுங்கிறதுல இருந்ததால நேரம் போறதே தெரியல.. வெயிலே தெரியாத அளவுக்கு மோடம் போட்டிருந்துச்சு.

போய்கிட்டு இருக்கும் போது கொஞ்ச கொஞ்சமா ஒரு பத்து பேருகிட்ட சேர்ந்துட்டோம். வரிசையா பேசிகிட்டே போனோம். ஒரு இடத்துல சின்ன ஓடை மாதிரி இருந்துச்சு. அது தாண்டிப் போறதுக்காக கட்டுன பாலம் ஒடஞ்சி போயி இருந்ததால, அந்த ஓடைக்கு அந்தப்பக்கம் போகணும்னா ஓடையில நடந்துதான் போகணும். நாம நடக்குற இடத்துல ஒரு பெரிய பாற இருந்துச்சு. அதுக்கு மேல கணுக்கால் அளவுக்கு தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சு. அந்தப் பாற ஒரு ஆறு ஏழடி இருக்கும். அதுல கால் வச்சதுமே தண்ணி "சர்"ன்னு இழுக்குற மாதிரி இருந்துச்சு. ஆழமில்லாட்டி கூட ஆள இழுத்துரும் போல இருந்துச்சு.

ஒரு வழியா அதத் தாண்டி மேல போக ஆரம்பிச்சோம். மேல இருந்து ஆளுங்க எல்லாம் கீழ வந்துகிட்டு இருந்தாங்க...

baranee
20-12-2004, 05:16 PM
நண்பர் பாரதி, உங்களுக்கு தனி மடல் அனுப்ப இயலவில்லை, உங்கள் "profile" ஐ கொஞ்சம் பார்க்கிறீர்களா ?

இளசு
20-12-2004, 09:42 PM
தம்பிக்கு
நினைவுச்சாரலில் நீ நனையும் சுகம் படிக்கும் என்னையும் தொற்றிக்கொள்ள..
பரவசம்தான்..

நாகர்கோவில் நண்பன் கல்யாணம் போய்விட்டு,
நண்பன் புதுசு ஊரான இராஜபாளையம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு
கும்ப்லாய் தென்காசி மார்க்கமாய் குற்றாலம் ஒரு நாள் டிரிப்பாய் போய்
மூன்று நாள் டிரிப்பாய் நீ...ண்ட நினைவுகள் எனக்குள்..

கல்லூரிக்காலம்...

அதே போல் ஒகனேக்கல் அருவிக்குள் தலையைக் கொடுத்து
மீளவும் விரும்பாமல் தாங்கவும் இயலாமல்
ஒரு முரண்காட்சிப்பாதான்...


தொடர்க பாரதி...

aren
21-12-2004, 11:06 AM
பாரதி அருமையாக எழுதுகிறீர்கள் உங்கள் நினைவலைகளை. குத்தாலம் பெயர்தான் நான் கேட்டிருக்கிறேன், இதுவரை பார்த்ததில்லை. உங்கள் எழுத்தை படிக்கும்பொழுது நானே உங்களுடன் சேர்ந்து நடந்தது போலிருக்கிறது. தொடருங்கள்.

பாரதி
21-12-2004, 03:47 PM
போற வழியில எல்லாம் ரொம்ப பெரிய பெரிய பாறைங்க.... குரங்குக குடும்பம் நடத்துறதுக்கு வசதியா பாறைகளுக்கு கீழ பெரிசா இடம் இருந்துச்சு.

தேனருவிய பாக்குறதுக்கு வழுக்குப்பாறைகள்..ல எல்லாம் கவனமா சர்க்கஸ் வேல செஞ்சி போனாதாம் பாக்க முடியும்.

ரொம்ப கஷ்டப்பட்டு தேனருவிய பாக்க முடிஞ்சது.... தேனருவி.... நல்ல உயரத்துல மலை உச்சியிலிருந்து விழுந்துகிட்டு இருந்துச்சு. ஒரு ஆளு கட்டிப்பிடிச்சா எந்த அளவு இருக்குமோ அந்த அளவுல "திமுதிமு"ன்னு தண்ணி விழுந்துகிட்டு இருந்துச்சு. மத்த அருவி மாதிரி இந்த அருவில போய் தலய காட்ட முடியாது... ஆள அமுக்கிப்பூடும்ல... மேல இருந்து விழுற வேகத்துல பக்கத்துல கூட போக முடியாது... தூரத்துல இருந்துதான் குளிக்கணும்.

பக்கதுல இருந்த ஆளு சொன்னான்... என்ன இவ்ளோ தண்ணி விழுது.. எப்பயும் குழாயில வர்ற கணக்காதான தண்ணி விழும்...!..ன்னு..

அந்த ஆளு சொல்லிகிட்டிருக்கும் போதே அங்க குளிச்சிகிட்டிருந்த ஆளுங்க எல்லாம் விழுந்தடிச்சிகிட்டு மேலே ஏறி வந்துகிட்டு இருந்தாங்க. என்னன்னு விசயம் கேட்டப்ப " லெவல் கூடிகிட்டே இருக்கு...தண்ணி கலர் மாறுறது தெரியலயா..."ன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருந்தாங்க...

அப்பதான் புரிஞ்சது... முதல்ல வெள்ள வெளேர்னு விழுந்துகிட்டு இருந்த அருவித்தண்ணி இப்ப செம்பட்ட கலர்ல விழுகுது....! மேல விழுந்த மழைல தண்ணி வரத்து எக்கச்சக்கமா கூடியிருக்குன்னு..... ஹம்..தேனருவிய ஆசயோட பார்த்ததோட சரி... குளிக்கணும்கிறத எல்லாம் மறந்துட்டு கீழே போயே ஆகணும்னு ஆகிப்போச்சு...

புதுசா வந்தவங்கள தவிர எல்லாரும் வேகமா இடத்த காலி பண்ணிகிட்டு இருந்தாங்க... எங்களுக்கும் வேற வழியில்ல... அவசரமா வெளிய போறதுல ஒரு வழுக்குப்பாறைல பிரதீப் வழுக்கி விழ... லேசான செராய்ப்போட தப்பிச்சாப்புல...

வேக வேகமா கீழ வந்தா..... எங்களுக்கு முன்னாடி ஒரு "க்யூ". வரும் போது ஒரு இடத்துல ஓடய தாண்டி வந்தோம்ல.. அங்கதான்... கணுக்கால் அளவுக்கு இருந்த தண்ணி இப்ப முழங்கால் அளவுக்கு மேல ஓடிகிட்டு இருக்கு...!!

முன்னாடி நின்ன ஆளு அதுல நடந்து போக ரொம்ப பயப்பட்டாப்ல. அந்த க்ரூப்ல வந்த கொஞ்ச பேரு அந்தப்பக்கமா போயிட்டாங்க... அதுல ஒரு ஆளு அந்தப்பக்கத்துல இருந்து ஒரு நீளமான துண்ட தூக்கிப்போட்டு எங்க பக்கமா இருந்த ஆள பிடிச்சுகிட்டு வர சொன்னாரு. இவரும் துண்ட பிடிச்சிகிட்டு தண்ணியில ஒரு எட்டு எடுத்து வச்சாரு பாருங்க... அவ்வளவுதான்... தண்ணி போய்ட்ருந்த வேகத்துல அவரையும் இழுத்திருச்சு. நல்ல வேளயா அவரு துண்ட விடல... தன்ணி இழுத்த வேகத்துல ஒரு பாறைல போயி மோதுனாரு... அந்தப்பக்கமா இருந்த ஆளுங்க அடிச்சி பிடிச்சி அவர மேல தூக்கிப் போட்டாங்க...

இதுக்கு அப்புறமா அந்த இடத்துல தண்ணில கால் வைக்க யாருக்காவது தய்ரியம் வருமா...? என்ன செய்யலாம்னு அந்தப்பக்கம் இருந்தவங்களும் இந்தப்பக்கம் இருந்தவங்களும் பேசிகிட்டு இருக்கும் போதே மழை விழ ஆரம்பிச்சது...!

அந்தப்பக்கம் இருந்த ஆளுங்க... போயி பயர் ஸ்டேசன்ல சொல்றம்... அவங்க வந்து எப்படியாவது ஹெல்ப் பண்ணுவாங்க... அப்டீன்னாங்க...

எப்ப தண்ணி வர்றது கொறயும்..னு கேட்டதுக்கு... இப்ப வர்ற தண்ணிய பாத்தா எப்படியும் கொறய ரெண்டு நாளாவது ஆகும்..னு சொன்னாங்க..!

மழைன்னா மழை... பேய் மழை... அப்படி விழுகுது.... அந்தப்பக்கம் இருந்தவங்கள்ளாம் ஓடிப்போயிட்டாங்க...

மழைல ஏன் நிக்கணும்... ஏதாவது பாறைக்கு கீழ ஒதுங்கலாம்னா குரங்குக எல்லாம் மொறச்சு பாக்குதுக.... எங்க கூட்டம் அவங்க கூட்டத்த விட ரொம்ப இருந்ததால அவைகள வெரட்டிட்டு நாங்க ஒதுங்குனோம்.

ஒரு ஆளு பத்திரமா சுத்தி வச்சிருந்த பிளாஸ்டிக் பைல இருந்து ஒரு பீடிய எடுத்து பத்த வச்சாரு. நம்ம சத்தியமோகன் சிகரெட் விசயத்துல பெரிய கில்லாடில்ல... அண்ணே.. எனக்கும் ஒரு பீடி கொடுங்க...ன்னு அசடு வழிய கேட்டான். அவரும்... பாருங்க தம்பி.. ரெண்டு நாளக்கி சாப்பாடு கீப்பாடு கெடக்குமான்னே தெரியல.. மழை எப்ப நிக்கும்ன்னும் தெரியாது... இந்த நெலல என்கிட்ட இருக்குறது இன்னும் ஒரே ஒரு பீடி... அதயும் ஒங்கிட்ட குடுத்துட்டன்னா நான் என்ன செய்ய..ன்னு கேட்டாரு...! அப்புறம் என்ன நெனச்சாரோ... இருந்தத அவரும் கொடுக்க... சத்தியமோகன் அத வாங்கி பத்த வைக்கும் போது அவன் முகத்துல என்ன ஒரு சந்தோசம் தெரியுமா...?

ஒரு மணி நேரம் ஆச்சு... ரெண்டு மணி நேரம் ஆச்சு.. மழை நிக்கிற வழியா தெரியல.. என்ன பண்றதுன்னும் தெரியல...

டவுசர் பாக்கெட்ல வண்டிச்சாவிய தவிர வேற ஒண்ணும் இல்ல. ரெண்டு நாள எப்படி தள்றது..? சாப்பாடும் கெடயாது... குளுரு வேற அடிக்குது.... என்ன பண்றதுன்னு ஆளுக்காளு யோசன பண்ணுனோம்.. அப்பிடியே கெடக்கிற வழில நடந்து போனா கேரளாவுக்கு போயிரலாம்..ன்னு ஒரு ஆளு யோசன சொன்னாப்ல...

சரீ.. சும்மா இருக்குறதுக்கு ஏதாச்சும் முயற்சி பண்றது தப்பில்லன்னு முடிவு பண்ணுணோம். மொத்தம் பத்து பேரு இருந்ததால ரெண்டு மூணு பேரா நடக்க ஆரம்பிச்சோம். சினிமா படத்துல வர்ற மாதிரி கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா "ஹோய்... ஹோய்"ன்னு சத்தம் கொடுத்துகிட்டே போனோம். எதுத்தாப்ல என்ன வரும்னு தெரியாத நெலம... செருப்பும் கெடயாது... வழி நெடுக "சொத சொத"ன்னு சகதி மாதிரி இருக்கு... ரெண்டு பக்கமும் இடவெளியே இல்லாம செடியும் புல்லுமா வளந்து கெடக்கு... எந்த தெசைல போறோம்னும் தெரியல...

மரம் வெட்டிட்டு போறவங்க அடிக்கடி போற பாத போல... நிக்காம மழைல நடந்துகிட்டே இருந்தோம்.

ஒன்னு ஒன்னர மணி நேரம் நடந்திருப்போம்.... கிட்டத்தட்ட ஒரு சமதளத்துக்கு வந்து சேந்துட்டோம்.. வழில ஒரு போர்டு தமிழ்ல... அரசு தாவர ஆராய்ச்சிப்பண்ணையோ ... அரசு மூலிகை ஆராய்ச்சிப்பண்ணையோ..ன்னு எழுதியிருந்துச்சு... அப்பாடா ... கொஞ்சம் நிம்மதி மனசுல... பெரு மூச்சு விட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சோம். அந்த வழி சிற்றருவிக்கு பக்கத்துல ஒரு இடத்துக்கு வந்து சேந்துச்சு. மழையும் கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சிருச்சு.

கீழ வந்து வண்டி எல்லாம் இருக்கான்னு பாத்தோம்.. நல்ல வேள அங்ஙனயே இருந்துச்சு.

மணி நாலரைகிட்ட இருக்கும்...மதியம் சாப்பிடலல்ல.... இப்பத்தான் வயித்துக்கு தெரிஞ்சது போல... தள்ளுவண்டில சுடச்சுட பஜ்ஜி போட்டுகிட்டு இருந்தாங்க... நாக்குல எச்சி ஊறிச்சு. மொளகா பஜ்ஜி, உருளக்கெழங்கு பஜ்ஜி, வெங்காய பஜ்ஜின்னு எல்லா வக பஜ்ஜியையும் ஒரு கை பாத்தோம். சூடா காப்பித்தண்ணியும் உள்ளத் தள்ளுனப்புறம்தான் ஒரு தெம்பே வந்துச்சு.

கத இதோட முடிஞ்சதுன்னு நெனச்சீங்களா... விட்ருவனா....?

இளசு
21-12-2004, 10:12 PM
திடீர் வெள்ள பக்..பக்..

சூடா பஜ்ஜி சாப்பிட்டு பசியாறுற கட்டம் வரைக்கும் திக்..திக்..!

அப்புறம் சாயா அடிச்ச திருப்தி எனக்கும்!

கையைப் பிடித்து குலுக்கணும் போல இருக்கு இந்த இயல்பு நடை..

தொடரட்டும் பாரதி!

aren
22-12-2004, 01:32 AM
காட்டாற்று வெள்ளம் என்று படித்திருக்கிறேன். பாரதி அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள். அவர் எழுதியதைப் படித்த பிறகு நான் குற்றாலம் சென்றாலும் தேனருவி பக்கம் செல்வேனா என்பது சந்தேகமே.

தொடருங்கள். உங்கள் சொந்த அனுபவம் படிப்பதற்கு சுவையாக இருக்கிறது.

Iniyan
22-12-2004, 02:05 AM
மழை இல்லாமல் இன்பமாய் சாறலடிக்கும் தினக்களிலேயே மரங்கள் அடர்ந்து ஒழுங்கான பாதை இல்லாது பாறையின் மேலும் கீழும் இடுக்கிலுமாய் ஒடுங்கி விரிந்து ஏறி செல்லும் தேனருவிப் பாதை நல்ல நாளிலேயே கொஞ்சம் பயமூட்டும் விசயம் தான். இது வரை நான் பலமுறை தேனருவி சென்றிருந்தாலும் அந்த ஏகாந்த வனப்பகுதியில் சில் வண்டுகள் ரீங்காரமும், மந்திகளின் கெக்கலிப்பும், காற்றில் அசைந்தாடும் மரக்கிளைகளும் எனக்குள் என்னமோ பயமூட்டும். அதிலும் நண்பர் பாரதி சொல்வது போல கொட்டும் மழை, பெருக்கெடுக்கும் காட்டாறு இருண்ட வானம் என நினைத்து பார்த்தாலே....அப்பப்பா..

கடைசியில் சுகமாய் மிளகாய் பஜ்ஜி ......அருமை.

mania
22-12-2004, 03:26 AM
அருமை....அருமை பாரதி. 30 வருடங்களாக தவறாமல் போன நான் கடந்த 5 வருடங்களாக போகாத குறையை நீக்கின மாதிரி இருக்கிறது..... ஐந்தருவியில் ந்ன்றாக குளித்துவிட்டு அங்கே இருக்கும் சிறிய கடையில் சுட சுட இட்டிலியும் மசால் வடையும் சாப்பிட்ட அனுபவம் உண்டா......??.... அட அட என்னத்தை சொல்ல...... :(
அன்புடன்
மணியா.....

பாரதி
22-12-2004, 03:06 PM
அண்ணா. எப்போது உங்களுடன் பஜ்ஜி சாப்பிடப்போகிறேன்...?

அன்பு ஆரென்... குளிக்க நிறைய இடங்கள் குத்தாலத்தில் இருக்கின்றன. ஒரு முறை கண்டிப்பாக சென்று வாருங்கள்.

அன்பு இனியன்... நீங்கள் குறிப்பிட்டிருப்பது நிஜம்தான்... தேனருவி போவது கொஞ்சம் பயம் கலந்த சந்தோசம்தான்...!

மணியா அண்ணா.... முப்பது வருடமாக போய்கொண்டிருந்தீர்களா..? ம்ம்.. கொடுத்து வச்சவர் அண்ணா...

கருத்துக்கள் கூறி உற்சாகமூட்டும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி.

பாரதி
22-12-2004, 03:10 PM
செம்பகாதேவிக்கு மேல மலைல செருப்ப ஒளிச்சு வச்சுட்டு வந்தோம்ல... அத எடுத்துட்டு வந்துருவோம்னு சொன்னேன்.

சத்தியமோகன் சொன்னான்... செருப்பு போனா போகுது.. விட்ருவம்டா... வேற வாங்கிரலாம்..ன்னு...

அவனுது வெறும் சிலிப்பர்.. நம்மது அப்டீயா...? போயி எடுத்துத்தான் ஆகணும்னு அடம் பிடிச்சு, மறுபடியும் எல்லாரும் மேல போனோம்.

செருப்பு அடயாளம் வச்ச இடத்துல போயி பாத்தா....! யாரோ புண்ணியவான் செஞ்ச வேல... அங்க... சத்தியமோகனோட செருப்பு மாத்திரம்தான் இருக்கு.. மத்த மூணு பேரோட செருப்பு... போயே போயிந்தி...!!

எல்லாம் விதின்னு நொந்துகிட்டு கீழ எறங்கி வந்தமா... செம்பகாதேவிய இப்ப பாக்க ரொம்ப பயமாகிப் போச்சு.. ஏன்னு கேக்குறீங்களா...? செம்பகாதேவிக்கு போயிட்டு வந்தவங்களுக்குத்தான் நான் சொல்றது புரியும். அருவி மலைய ஒட்டி இருக்குற சின்ன திண்டு பக்கத்துலதான் விழும். அதுல வர்ற தண்ணி எல்லாம் அதுக்கு முன்னாடி இருக்குற கொளத்துல நெரம்பி அதுக்கப்புறம்தான் போகும்.

இப்ப என்னாடான்னா... அருவில இருந்து விழுற தண்ணி திண்டுலயும் விழல... கொளத்துலயும் விழல... எல்லாத்தையும் தாண்டி தனியா விழுந்துகிட்டு இருந்துச்சு...!

எப்பயும் அருவி விழுற சத்தம் கேட்க சுகமா இருக்கும்ல... இப்ப அருவியோட சத்தத்த கேக்க முடியல... யாரயோ அடிக்க போற ஆக்ரோசத்தோட, செம்மண் கலந்த நெறத்துல தண்ணி போற வேகத்தப்பாத்தா.... இயற்கைக்கெதுத்தாப்ல யாரும் நிக்க முடியாதுங்கிறது நல்லாவே தெரிஞ்சது.

வண்டிய எடுத்துகிட்டு அய்ந்தருவிக்கு போய் பாக்கலாம்னு போனோம்.. அங்க அய்ந்தருவிய காணோம்.. அஞ்சும் ஒண்ணா சேந்து ஒரே அருவியா... கோயில் படிக்கட்டுல இறங்கிப் போவோம்ல.. அதுக்குப் பக்கத்துல விழுந்துகிட்டு இருந்துச்சு...!! அதுக்குப் பக்கத்துலயே போகக்கூடாதுன்னு போலீஸ் ஏக கெடுபிடி...

குத்தாலத்துலயே ஒரு ஹோட்டல பாத்து திருப்தியா சாப்டுட்டு நைட் தூங்க செங்கோட்டக்கிப் போயிட்டோம். காலைல ஒரு நாலு நாலரைக்கு கெளம்புனா ஜெனரல் ஷிப்ட் வேலக்கி போயிரலாம்னு திட்டம்.

அன்னக்கி அலஞ்ச அலச்சல்ல... சொல்லணுமா... நல்லா தூங்குனோம். தற்செயலா எந்திரிச்சிப்பாத்தா அஞ்சு மணி ஆகிப்போச்சு. அடிச்சுப்பிடிச்சு கெளம்பி லாட்ஜை காலி பண்ணிட்டு போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணுனா..... என்னத்த சொல்ல.... நிஜாமோட வண்டி ஸ்டார்ட் ஆகல...!

ஸ்பார்க் பிளக்க கழட்டி கிளீன் பண்ணி பாத்தோம். வண்டி ஸ்டார்ட் ஆச்சு... ஆனா உடனே நின்னுருச்சு. எப்டியாவது ஸ்டார்ட் பண்ணிறனும்னு விடாம முயற்சி பண்ணுனோம்... வள்ளுவர் சொன்னது மாதிரி.. முயற்சி திருவினையாச்சு... வண்டி ஸ்டார்ட் ஆகும் போது மணி ஆறு ஆறரை இருக்கும்.

எப்பிடியும் வேலக்கி போயே ஆகணும்னு நான் குறியா இருந்தேன். சத்தியமோகனும் நானும்தான் ஜெனரல் ஷிப்ட் வேலக்கி போகணும்.. அதனால அவன ஏன் வண்டியில உக்கார வச்சிட்டு நாங்க சீக்கிரமா போறோம்... நீங்க ஆற அமர வாங்கன்னு நிஜாம்கிட்டயும் பிரதீப்கிட்டயும் சொல்லிட்டு வண்டிய கிளப்புனனா....

இந்த மழை இருக்கு பாருங்க... அப்பயும் நம்ம விட்டுச்சா... மறுபடியும் விழ ஆரம்பிச்சிருச்சு... வேகமா வந்தா தார்ரோட்ல வழுக்கிருமோன்னு பயம் இருந்ததால அம்பது அறுபதுக்கு மேல போகல... ஆலங்குளத்த தாண்டி கொஞ்ச தூரம் வந்த பின்னாடிதான் மழை நின்னுச்சு... அங்க இருந்து நல்ல வேகம்....

திருநெல்வேலிக்குள்ள வரும் போது காலைல எட்டேகால் மணி... எல்லோரும் ஸ்கூல்,ஆபீசுன்னு போறதால ட்ராபிக் ரொம்ப இருந்துச்சு... பாளயங்கோட்ட வரும் போது எட்டு இருபத்தஞ்சு... பஸ் பின்னாடியே போனா வேகமா போகலாம்னு போனா.... கொடுமை... அது திருச்செந்தூர் பஸ்... திருச்செந்தூர் ரோட்ல கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி மறுபடி தூத்துக்குடி ரோட்டுக்கு வந்தோம்.

ஊர விட்டு வெளிய வந்த பின்னாடி... வண்டியில எவ்வளவு வேகமா போக முடியுமோ அந்த அளவுக்கு வேகமா ஓட்டுனேன்... ஆக்ஸிலேட்டர அதுக்கு மேல திருப்ப முடியல... எவ்ளோ வேகம்னு பாத்தா... நம்புவீங்களோ மாட்டீங்களோ.... நூறுக்கும் நூத்து அஞ்சுக்கும் நடுவுல முள்ளு இருந்துச்சு....

.. "ம்ம்ம்ம்ம்ம்..." -ன்னு வண்டி போற சத்தம் மாத்ரம்தான்.... வேற எந்த சத்தமும் கேக்கல... சரியான விரட்டு.... அப்டியே பறக்குற மாதிரி இருந்துச்சு. வல்லநாடு, புதுக்கோட்டை எல்லாம் போனதே தெரியல.

வீட்டுக்கு வந்தப்ப மணி ஒம்போது... யூனிபார்மை அடிச்சி பிடிச்சி மாட்டிகிட்டு கம்பெனில வேலக்கி போய் சேந்தப்ப ஒம்போது எட்டு... போயி உக்காந்து டேபிள் மேல கைய வச்சா... கை தன்னால நடுங்கிகிட்டு இருக்கு...! கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் ஆட்டம் நின்னுச்சு... கிட்டத்தட்ட அம்பது கிலோமீட்டருக்கும் மேல... அத அர மணி நேரத்துல வந்துருக்கோம்...!

ஆர அமர யோசன பண்ணுனேன்...வர்ற வேகத்துல ரோட்டுல சின்ன கல்லு இடறி இருந்தா கூட என்ன ஆயிருக்கும்...? ஏன் இவ்வளவு அவசரப்பட்டு போகணும்.. அவசரப்பட்டு வரணும்ன்னு....!!

பின்குறிப்பு:
1. அதுக்குப்பின்னாடி கொஞ்ச நாளுலேயே சத்தியமோகன் அவனோட மோட்டார்பைக்க வித்துட்டு வெஸ்பா வாங்கிட்டான்..
2. குத்தாலம் போகணும்... தேனருவிய பாக்கணுங்கிற ஆச அத்தோட போச்சு...!!

இளசு
22-12-2004, 09:49 PM
குத்தாலப்படலம் ரொம்ப அருமையா எழுதிய தம்பிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்..

மழை, தார் ரோடு, இருசக்கர வாகனம், வேகம், பஸ் பின்னாடி துரத்தல்..

என்ன இது.. அப்ப செஞ்சதுக்கு இப்ப பாத்தாலும் அடி உண்டு உனக்கு..

கண்டிச்சு முடிச்சப்புறம் பஜ்ஜி, காபி உண்டு..சரீய்யா?

pradeepkt
23-12-2004, 03:37 AM
அடடா...
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல பயணக் கட்டுரை.
ஆனாப் போன விதத்தப் பாத்தா உயிர "பணயம்" வச்ச கட்டுரையால்ல இருக்கு
நான் ஒரே ஒரு தடவை சின்னப் புள்ளையா இருக்கப்ப குத்தாலம் போனது. அப்பயும் எங்க சித்தப்பு கையிலயே பிடிச்சிக்கிட்டு விட மாட்டேன்னுட்டாப்பல.
போற தூரத்தில் இருந்தப்ப நான் போகல. இப்பப் போற தூரத்தில நான் இல்ல. இப்பப் பாத்து என் ஆசயத் தூண்டி விட்டுட்டீகப்பு. என்ன செய்ய அடுத்த சீசனுக்குப் போயிற வேண்டியதுதான்.

ஆனா உங்க கட்டுரையிலயே எனக்குப் பிடிச்சது உங்க வர்ணிப்புதானப்பு.
<quote> ஒரு ஆளு கட்டிப்பிடிச்சா எந்த அளவு இருக்குமோ அந்த அளவுல "திமுதிமு"ன்னு தண்ணி விழுந்துகிட்டு இருந்துச்சு. </quote>
இது ஒரு உதாரணந்தேன்.

இந்த மாதிரி நெறய எழுதுங்க... உங்களுக்கு நல்லாக் கோவையா வருது.

அன்புடன்,
பிரதீப்

gragavan
23-12-2004, 06:02 AM
வெறுமனே பிரமாதமுன்னு சொல்தேன்னு பாக்கீகளா! என்ன செய்ய! பேச்சும் வரமாட்டெங்கி. மூச்சும் வரமாட்டெங்கி. குத்தால நெனப்பெல்லாம் திரும்ப வந்திருச்சி. அஞ்சருவின்னு சொல்லுறப்போ அஞ்சருவியும் அந்த வட்டக் கோயிலு, சுத்துப் படிக்கெட்டு எல்லாம் நெனப்பு வருது. செண்பகாதேவி அருவியும் பிரமாதம். ரெண்டொரு வாட்டி போயிருக்கேன். தேனருவி போனதில்ல. உங்க எழுத்து புண்ணியத்துல போயாச்சு.

அடுத்து நம்மூரப் பத்தி எழுதுங்களேன். தூத்துக்குடில ரொம்ப காலமா இருந்திருக்கீங்க. எழுதுங்களேன் உங்க அனுபவங்கள. காத்துருக்கோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
25-12-2004, 11:15 AM
அண்ணன், பிரதீப், இராகவனுக்கு நன்றிகள்.

உங்களிடம் நேரடியாக அடி கிடைக்குமெனில் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன் அண்ணா..

நீங்கள் கூறியபடியே பிரதீப்பை பத்திரமாக கூட்டிக்கொண்டு வந்து விட்டேன் பிரதீப்!

அன்பு இராகவன்.. எந்தக்குறிக்கோளும் இன்றி எழுதத்தொடங்கிய பகுதி இது...

gragavan
27-12-2004, 05:53 AM
Originally posted by பாரதி@Dec 25 2004, 05:15 PM
அண்ணன், பிரதீப், இராகவனுக்கு நன்றிகள்.

உங்களிடம் நேரடியாக அடி கிடைக்குமெனில் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன் அண்ணா..

நீங்கள் கூறியபடியே பிரதீப்பை பத்திரமாக கூட்டிக்கொண்டு வந்து விட்டேன் பிரதீப்!

அன்பு இராகவன்.. எந்தக்குறிக்கோளும் இன்றி எழுதத்தொடங்கிய பகுதி இது...
என்ன அப்பிடிச் சொல்லீட்டீங்க பாரதி. குறிக்கோள் இல்லாமயே பிச்சு ஒதறிருக்கீங்க. நீங்க இன்னமும் நிறைய எழுதனும். கண்டிப்பா எழுதனும். எந்தச் சாக்கும் சொல்லக் கூடாது. நம்ம மன்ற அன்பர்கள் சார்பான வேண்டுகோள் இது. காத்திருக்கிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
07-01-2005, 02:01 PM
செல்வதாஸ்

"எவம்லே அது.... இவன எல்லாம் பேசவிட்டா எல்லாரையும் கிறுக்கனாக்கிருவாம்ல...."

"பேசாத... ஒக்காருலே..."

"இவம்பேசி கேக்கணுமோ...?"

" பேசுனா ஒண்ணுமே புரியாது... உக்காரு.... பேசாதே...."

இப்படி ஒரே சத்தம்தான் அந்தப்பொதுக்குழுக்கூட்டத்தில்.... நிறுவனத்தில் பயிற்சியாளனாக பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்களுக்குப்பிறகு, தொழிற்சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பின்னர் தொழிற்சங்கம் கூட்டிய அந்தக்கூட்டத்தில்தான் மேலேயுள்ள நான் கேட்ட அமைதியற்ற குரல்கள்.....

இப்படி யாரைச் சொல்கிறார்கள் என்பதைக் காண முடியாதபடி நிறைய உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆர்வமிகுதியில் "யாரது" என்று கேட்டேன்.

"எல்லா அவந்தாம்லே... செல்வதாசு..." என்றார் அருகில் இருந்தவர்.

சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் என்றாலும் பெரும்பாலும் நான் இருந்த மின்துறைக்கு சம்பந்தப்பட்டவர்களையும், என்னுடன் பணிக்கு ஒரே நேரத்தில் இணைந்த அந்த (என்ஜீனியரிங் சபார்டினேட் சர்வீஸ் என்று அழைக்கப்பட்ட) எட்டாவது குழு நண்பர்களை மட்டுமே நான் அறிந்திருந்தேன். இயல்பாகவே நான் யாருடனும் பேச அதிகம் கூச்சப்படுவேன். பெரும்பாலோனாரால் இகழப்பட்ட அந்த செல்வதாசை அன்று பார்க்க இயலவில்லை. என்றாலும் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டானது. ஆனாலும் அதற்காக எந்த முயற்சியையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் "ஆபரேசன்" துறையில் பணிபுரிகிறார் என்கிற விபரம் மட்டும் எனக்குத் தெரிந்தது.

சில வாரங்களுக்குப்பிறகு ஒரு நாள் வருகைப்பதிவை பதிவு செய்யும் டைம் ஆபிஸில் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. செல்வதாசை அடையாளம் காட்டினான் ஒரு நண்பன்.

சராசரிக்கும் குறைவான உயரம்... தூத்துக்குடிப் பகுதிக்கே உரிய உழைப்பாலும் வெயிலாலும் உண்டான கருப்பு நிறம்.... கூரிய சிறிய கண்கள்... படர்ந்த நெற்றி.... எண்ணெய் வாரி சீவப்பட்ட முடி... சற்றே நுனியில் முறுக்கிவிடப்பட்ட மீசை... இவ்வளவுதான்.. எந்த வித்தியாசமும் இல்லை...

வருகையை பதிவு செய்யும் கருவியில் அட்டையை வைத்து, கைப்பிடியை அழுத்தி வருகையை பதிவு செய்து அதை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு இரண்டு கையையும் வீசி நடக்க ஆரம்பித்தார் அவர்.

அநேகமாக எல்லோரும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நடந்து செல்லும் அவர் எனக்கு சற்றே வியப்பை ஊட்டினார். அவரைப்பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் சில மாதங்கள் கடந்தன... நான் "பேகிங்" என்று அழைக்கப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட உரம் மூட்டைகளில் அடைக்கப்படும் பகுதிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டேன். அங்குதான் செல்வதாஸம் பணிபுரிந்து வந்தார்.

gragavan
07-01-2005, 03:26 PM
ஏலே மக்கா! இங்க பாருவே! திரும்பத் தூத்துக்குடி வருது. அதுவும் ஒரே சந்தோசக் கும்மரிச்சத்தோட! பாரதி நடத்துங்க. நான் ஒங்க விசிறியாகி ரொம்ப காலமாச்சி.

அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
07-01-2005, 05:23 PM
Originally posted by gragavan@Jan 7 2005, 07:26 PM
ஏலே மக்கா! இங்க பாருவே! திரும்பத் தூத்துக்குடி வருது. அதுவும் ஒரே சந்தோசக் கும்மரிச்சத்தோட! பாரதி நடத்துங்க. நான் ஒங்க விசிறியாகி ரொம்ப காலமாச்சி.

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி அண்ணாச்சியின் அட்டகாசம் கலக்கலாக இருக்குது.

அண்ணாச்சி, எங்கே நம்ம வட்டார வழக்கு மொழி, இராகவன் வந்திருக்காக இல்ல, இனிமேல் தூள் பறக்குல்ல. B)

மன்மதன்
08-01-2005, 07:00 AM
ஒரே மூச்சில் படித்தேன்.. மகிழ்ந்தேன்..

ஒண்ணாம்பு படிக்கையில் பையில் ஒண்ணுக்கு போன நிகழ்ச்சி சிரிக்க வைத்தது.. நான் பொதுவாக பள்ளிக்கூடத்தில் டாய்லெட்டில் கூட ஒண்ணுக்கு போனதில்லை.. இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.. அதுவும் பிரைவசி இல்லாமல் அது வராது..

குற்றால சாரல் பதிவு படித்ததும் மனதில் சாரல் அடித்தது.. இதுவரை 10 தடவைக்கும் மேல் போய் வந்துட்டேன். உங்க அனுபவத்தில் பலது என் அனுபவமும் கூட.. கடந்த 3,4 வருடங்களாக போகாத குறையை உங்க பதிவு நீக்கியது.........

குற்றால குறுகிய சந்துக்களில் 'சித்தாடைக்கட்டிகிட்டு..' என்று பாட்டுப்பாடி, ஆடி, அப்படியே டவுசருடன் அருவிக்குள் , பல ஜாம்வானுக்கு இடையில் சிறிய கேப் கிடைத்ததும் உள்ளே நுழைந்து சடேரன புரடியில் அருவி தண்ணி அடியை வாங்கி 2 மணி நேரமாவது பாறையுடன் ஒட்டி நின்று, பிறகு சாலையோர கடைகளில் இட்லி சாப்பிட்டு .... ஆஹா.. ஆஹா.. என்னவொரு ஆனந்தம்..

திடிரென்று வேலைக்கு வந்து விட்டீர்கள் .. இளமைப்பருவத்தை இன்னும் தொடர்ந்திருக்கலாமே..

அன்புடன்
மன்மதன்

பாரதி
08-01-2005, 12:06 PM
அன்பு இராகவன், பரஞ்சோதிக்கு நன்றி.

அன்பு மன்மதன்... இப்பகுதியின் ஆரம்பத்தில் சொன்னதை திரும்பவும் சொல்கிறேன்....


நினைவில் உள்ளவற்றை அப்படியே கொட்டுவதுதான் இதன் நோக்கம். இதில் அனேகமாக தேதியே இருக்காது, வரிசைக்கிரமமாகவும் இருக்காது.... கோர்வையாகவும் இருக்காது. சில விசயங்கள் திரும்ப வரலாம். சில சம்பந்தமில்லாமல் இருக்கலாம்... சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளிவராமல் இருக்கலாம்.ஆனால் ஒன்று வருவதில் நிஜம் மட்டுமே இருக்கும்.

படிக்கப்போகிறவர்களுக்கு ...
இதில் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். நன்றி.
நன்றி...

பாரதி
09-01-2005, 01:22 PM
செல்வதாஸ்-2

ஆரம்பத்தில் ஜெனரல் ஷிப்ட் என்றழைக்கப்பட்ட காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்தரை மணி வரையான வேலைக்குத்தான் சென்று கொண்டிருந்தேன். எப்போதாவது அவரைப்பார்த்தால் மெதுவாக புன்முறுவல் அவரிடமிருந்து வரும்.

நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தோம். தனக்கு பிடித்தவர், பிடிக்காதவர் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பேசக்கூடியவராகத்தான் இருந்தார். ஆனால் அவரிடம் பேசுபவர்கள் எப்போதும் அவரைப்பற்றி முன்கூட்டியே திட்டமிட்டு பேசுவது போல எனக்குத்தோன்றியது. இன்னும் சொல்லப்போனால் பல நேரங்களில் அவருடைய துறை மேலாளர் கூட அவரிடம் பேசுவதை தவிர்ப்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் நான் பேசுவது அதிகமானதற்கு காரணம் அங்கே பணிபுரிந்து வந்த மரியாதைக்குரிய சந்தானம் அண்ணாச்சி, செவ்வேள் உள்ளிட்ட சில நண்பர்கள் காரணம். "பேகிங்" பகுதியில் பணி புரிந்து வந்த மற்றவர்களை பற்றி பேச இது சமயமில்லை.

எப்போதும் வட்டார வழக்கு மொழியைக்கற்றுக்கொண்டு அதிலேயே பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் சொந்த ஊரின் "அண்ணே".. என்பதை விடுத்து, செல்வதாஸை "அண்ணாச்சி" என்று அழைப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. அவர் என்னைக்காட்டிலும் பல வயது மூத்தவர். ஆனால் அவரும் என்னை 'அண்ணாச்சி' என்றே அழைப்பார். அவர் அப்படி அழைக்கும் போது மிகவும் கூச்சமாக இருக்கும். ஆனால் நாளாக நாளாக வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

சில மாதங்களுக்குப் பின் "ஷிப்ட்" முறை பணிக்கு வர பணிக்கப்பட்டேன். அதன்பின்னர் எங்களிடையே ஆன நெருக்கம் கொஞ்சம் அதிகமானது.

அவரது நேரிடையான பேச்சு, ஆழ்ந்த சிந்தனை, அறிவு எனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அவரை ஏன் எல்லோரும் இகழ்ந்து பேசுகிறார்கள் என்று அப்போது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அவரது உருவம் ஒருவேளை காரணமாக இருக்குமோ என்று மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம்.

அவருக்கு எப்போதும் சமூகத்தின் மீதான அக்கறை அதிகமாக இருக்கும். மனித நேயத்துடன் கூடிய அவருடைய பார்வையில் எந்த ஒரு விசயத்தையும் அக்குவேறு ஆணிவேராக அலசிப்பார்க்கும் திறமையைக் காண முடியும்.

வாரத்தின் ஆறு வேலை நாட்களில் மூன்று நாட்கள் அவரும் நானும் ஒரே நேரத்தில் வேலைக்கு வருவதாக அமைந்திருந்தது. அவருடைய பணியும் என்னுடைய பணியும் வேறு வேறு என்றாலும் வேலை இல்லாத சமயங்களிலும், ஓய்வு நேரங்களிலும், சாப்பிடும் நேரங்களிலும் அவருடன் இருக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

வெறுமனே திரைப்படங்கள், புத்தகங்கள் என்று ஆரம்பத்தில் பேச ஆரம்பித்தது தொழிற்சங்கத்தைப் பற்றி பேசுவது அதிகம் என்றாகிவிட்டது. தன்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு நல்லதே செய்ய வேண்டும் என்கிற அவருடைய ஆர்வம் கொஞ்சமாக என்னையும் தொற்றிக்கொண்டது.

சாதாரணமாக ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கையெழுத்துப்பிரதி ஆரம்பித்தால் என்ன என்கிற கேள்வி பிறந்தது.

அப்போது வேறு சில நண்பர்கள் "ஸ்வரங்கள்" என்கிற கையெழுத்துப்பிரதியை நடத்திக்கொண்டிருந்தார்கள். கையெழுத்துப்பிரதி என்றால் என்ன என்பதையே நான் அப்போதுதான் அறிந்தேன். ஒரு முறை பிரதீப்பின் உதவியால் அந்த ஸ்வரங்கள் என்கிற கையெழுத்துப் பத்திரிக்கையை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

பலவண்ண காகிதங்களில் கலர் கலராக ஓரளவுக்கு அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த அதைப் பார்த்ததும் வியப்பும் சந்தோசமும் ஏற்பட்டது.

pradeepkt
09-01-2005, 04:50 PM
அட... கலக்குங்கய்யா.

போதாக்குறைக்கு மண்ணின் மைந்தர்களா ராகவனும் பரஞ்சோதி அண்ணாவும் வந்துட்டாக.
படிச்சு மகிழ நானாச்சு.


அன்புடன்,
பிரதீப்

gragavan
11-01-2005, 04:03 AM
கையெழுத்துப் பிரதி. சிறு வயதில் பங்கு பெற்ற நினைவுகள் வருகின்றன. பாரதி கலக்குங்க. நாங்க தொடர்ந்து படிச்சுக்கிட்டிருக்கோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

தங்கக் கிண்ணத்தில் கழுதைப் பாலா?
http://www.tamilmantram.com/new/index.php?...view=getnewpost

பாரதி
11-01-2005, 02:48 PM
இப்படியெல்லாம் கூட பத்திரிக்கைகள் உண்டா.. என்கிற ஆச்சரியமும் உண்டானது. ஆனால் அப்போது நாமே ஒரு கையெழுத்துப்பிரதி நடத்த வேண்டும் என்கிற எண்ணம் உண்டானதே இல்லை.

செல்வதாஸடன் உரையாடிய போது கையெழுத்துப்பிரதி குறித்த கேள்விக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்தது.

ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டுமெனில் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தீவிரமாக பேச ஆரம்பித்தோம். பத்திரிக்கையின் குறிக்கோள், பத்திரிக்கையின் உள்ளடக்கம், எத்தனைப்பக்கங்கள், என்று வெளிவருவது, எப்படி வெளியிடுவது, பத்திரிக்கை நடத்துவதில் என்ன என்ன சிரமங்கள் வரக்கூடும்... என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடந்தது. எந்த நேரமும் அதைப்பற்றிய சிந்தனையே மேலோங்கி நின்றது.

ஓரளவுக்கு மேலே கூறப்பட்ட விசயங்கள் இறுதியானதும், முக்க்யமான ஒன்றுக்கு... கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் இரவுப்பணியில் இருந்த போது வேலை இல்லாத நேரங்களில் எல்லாம் பேசியதுமான புத்தகத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரே சர்ச்சை.
சர்ச்சை என்றால் வேறு விதமாக விளங்கிக்கொள்ள வேண்டாம். இருவரும் அவரவர்களுக்கு தோன்றிய பெயர்களை எல்லாம் எழுதுவது... எழுதிய பெயர்களை ஏன் வைக்கலாம்.. வைக்கக்கூடாது என்று சார்பாக எதிர்ப்பாக எல்லாம் பேசி.. கடைசியில் நான் சொன்ன "விழி" என்கிற பெயரை வைக்கலாம் என்று முடிவானது. விழி என்பது சமூகத்தை பார்க்கின்ற பார்வையாகவோ அல்லது அறியாமையில் இருக்கும் மனிதர்களை எழுப்ப முயற்சிக்கும் குரலாகவோ இருக்கும் என்பதால் அது சரியானதாக இருக்கும் என்கிற என் வாதத்தை அவர் ஏற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

மற்ற பத்திரிக்கைகளைப் போல ஐந்திலிருந்து பத்து பத்திரிக்கைகள் வரை கையிலேயே எல்லாவற்றையும் எழுதுவது கடினமான காரியமாக தோன்றியதால் ஒரு பத்திரிக்கையை மட்டும் கையால் எழுதுவது என்றும், தேவைப்படும் பத்திரிக்கைகளை நகல் எடுத்துக்கொள்வது என்றும் முடிவானது. நகல் எடுத்தால் வண்ணங்கள் இல்லாமல் கருப்பு வெள்ளையாக தோன்றினாலும், தரப்படும் விசயங்கள் மட்டுமே முக்கியம்- அதுவே போதுமானது என்று எண்ணினோம்.

சாதாரண மையினால் எழுதினால் போதும் என்று நான் நினைத்தேன். செல்வதாஸ் "இந்தியன் இங்க்" எனப்படும் அடர்கருப்பு மையினால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நான் முன்பேயே வெவ்வேறு வகையான எழுத்துக்களை எழுதுவதற்காக பலவகையான பேனாநுனி(நிப்பு)களை ஒரு முறை சென்னைக்கு சென்றிருந்த போது, தீவுத்திடலில் வாங்கி வைத்திருந்தேன். அவை இப்போது உபயோகப்பட்டன.

எனது கையெழுத்து ஓரளவுக்கு அழகாகவே இருக்கும். சிறு வயதில் எனக்கு அதில் கொஞ்சம் கர்வம் கூட உண்டு.

பெரும்பான்மையான பகுதிகளை நான் எழுதிவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் பலவிதமான கையெழுத்துக்கள் இருந்தால் அது ஒரு செய்தியில் இருந்து மற்றவற்றை கொஞ்சம் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கும் என்பதால் யாரை தேர்வு செய்யலாம் என்று பேசினோம்.

எழுதுவதற்கு உதவி கேட்டவுடன் சுரேந்திரனும் ரங்கராமனுஜமும் விருப்பத்துடன் முன் வந்தனர்.

கையெழுத்துப்பிரதி என்றாலும் அதில் படங்களும் இருந்தால்தான் நன்றாக இருக்கும்..இல்லையா...? எனவே யாருடைய உதவியைக் கேட்கலாம் என்று யோசித்த போது கண்ணனின் நினைவு வந்தது. அவன் ஏற்கனவே விஜயன் திருமணத்திற்காக வரைந்த பென்சில் ஓவியத்தை நான் பார்த்திருந்தேன். உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு தொழில்முறை ஓவியரின் படம் போலத்தான் இருந்தது.

gragavan
13-01-2005, 11:19 AM
பிரமாதம். பிரமாதம். தொடர்ந்து எழுதுங்க. விறுவிறுப்பா போகுது.

அன்புடன்,
கோ.இராகவன்

முத்து
13-01-2005, 02:33 PM
பாரதி நல்லா எழுதுறீங்க... உங்க வலைப்பூவிலும் பார்த்தேன். உங்க எழுத்து ரொம்ப மெருகேறியுள்ளது.

பாரதி
16-01-2005, 01:52 PM
விடாமல் தரும் ஊக்கத்திற்கு நன்றி இராகவன்.
அன்பு முத்து... உங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி. அதை விட கொஞ்சம் கொஞ்சமாக உங்களை மன்றத்தில் மீண்டும் காண்பது அளவில்லா உவப்பைத்தருகிறது. தொடர்ந்து வரவேண்டும். உங்கள் கருத்துக்களைத் தர வேண்டும்.

பாரதி
16-01-2005, 02:57 PM
இதற்கிடையில் அது வரை ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டிருந்த "இந்தியா டுடே" என்கிற பிரபலமான பத்திரிக்கை தமிழில் வர ஆரம்பித்திருந்தது. அதில் முதன் முறையாக ஒரு குறுக்கெழுத்துப்போட்டியை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அது வழக்கமாக இருக்கும் பொதுவான கேள்விகளில் இருந்து மாறி, அந்தப்புத்தகத்தை முழுவதும் நன்கு படித்தால் மட்டுமே எழுத முடியும் என்பதாக அது அமைந்திருந்தது. அப்போது இருந்த ஆர்வத்தில் விடாமல் எல்லாவற்றையும் படித்து குறுக்கெழுத்துப்போட்டியில் கேட்டிருந்த எல்லா கேள்விகளுக்கும் விடை கண்டுபிடித்து விட்டேன். ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இரண்டு விடைகள் வந்தன. இரண்டுமே சரியானதாகவும் தோன்றியது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எந்தவிடையை தேர்ந்தெடுக்கலாம் என்று செல்வதாஸிடம் ஆலோசித்தேன்.

அவர் விடையை சொல்லும் முன்பாக " அண்ணாச்சி.. ஒரு வேள பரிசு கெடச்சா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க..?" என்றார்.

எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவர் மெதுவாக சிரித்தார்.

அப்போதுதான் எனக்கு பிடிபட்டது..." அண்ணாச்சி... ஒரு வேள பரிசு கெடச்சா... அது முழுசும் நம்ம "விழி" பத்திரிக்கை நடத்துறக்கு ஆற செலவுக்குத் தர்றேன்..." என்றேன்.

அவருடைய மகிழ்ச்சியை உணர முடிந்தது. அவர் சொன்ன விடையை எழுதி போட்டிக்கும் அனுப்பி விட்டேன்.

விழி பத்திரிக்கை குறித்து தொடர்ந்து பேசினோம். கண்ணனும் படம் வரைய முழுமனதுடன் ஒத்துக்கொண்டான்.

"விழி" என்கிற புத்தகப்பெயரை எப்படி எழுதுவது என்பதை தீர்மானிக்க இயலவில்லை. பலவித முறைகளில் விதவிதமாக கிறுக்கிப் பார்த்தேன். பலவிதமாக கிறுக்கியதில் ஒரு வடிவம் மிகவும் பிடித்துப்போனது அவருக்கு. அதே போல வரைய பலமுறை முயன்றாலும் முதலில் இருந்ததுதான் சிறப்பானதாக தோன்றியது. முதல் எழுத்தான "வி" எழுத்து முடிவதையே "ழி"யின் தொடக்கமாக கொள்வதாக அமைந்திருந்தது அது.

அதையே புத்தகத்திற்கான அடையாளமாக வட்ட வடிவில் எழுதிவிட வேண்டும் என்றும் பேசிக்கொண்டோம். முகப்பு அட்டையில் என்ன படம் வர வேண்டுமென்பதை செல்வதாஸ் முடிவு செய்தார். எந்த ஒரு மலையாளப் பத்திரிக்கையிலோ வந்த ஒரு படத்தை கொடுத்து அதை வரைந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விரும்பினார். அலையடிக்கும் கடல், சூரிய உதயம்... இன்னும் என்று ஒரு நவீன ஓவியமாக அது இருந்தது. ஆனால் மிக எளிமையான படமாகவும் இருந்தது.

எல்லாவற்றையும் நாமே சொந்தமாக எழுதுவது என்பது இயலாது என்பதால் சில விபரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அதையும் இணைத்துக்கொள்வது என்றும் முடிவு செய்தோம்.

மக்களால் அதிகம் அறியப்படாத மிகச்சிறந்த கவிஞர், அன்பு நண்பர் செல்வராஜை ஒரு கவிதை எழுதித்தர வேண்டினேன். சில தினங்களில் அருமையான கவிதை ஒன்றை அளித்தார் அவர். அதற்கு மேலும் மெருகூட்டும் விதமாக தமிழகத்தில் பஞ்சம் நிலவிய போது எடுக்கப்பட்ட ஒரு மிகப்பழைய புகைப்படத்தை இணைத்தோம்.

மக்கள் கவிஞர் என்று வட இந்தியாவில் அறியப்பட்ட "ஷப்தர் ஹஷ்மி" என்கிற தெருமுனை நாடகக்கலைஞர் சில மாதங்களுக்கு முன் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டிருந்தார். அவரை நினைவு கூறும் வண்ணம் ஒரு செய்தியை தொகுத்து எழுதினோம். மேலும் தேவகிப்பிரியனின் ஒரு அறிவியல் பார்வையும் இடம் பெற்றது. மேலும் ஒரு நண்பரின் கதையும் எங்களுக்கு கிடைத்தது. அறிமுகப்பகுதியில் மனித நேயத்தைக் குறித்து மிக அருமையான ஒரு கருத்தை வலியுறுத்தி செல்வதாஸ் எழுதினார்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் ஓரளவுக்கு நல்ல முறையில் எழுதிவிட்டோம். ஒரு நகல் அலுவலகத்தில் கொடுத்து ஐந்து பிரதிகள் எடுத்தோம். பத்திரிக்கையின் இறுதியில், படிப்பவர்கள் கருத்து அல்லது விமர்சனம் செய்வதற்காக சில வெற்றுப்பக்கங்களையும் இணைத்தோம்.

ஏப்ரல் - 14ம் தேதி பத்திரிக்கையை கொண்டுவந்து விட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

முன்பு எதிர்பார்த்திருந்தாலும் சற்று மறந்து விட்ட "இந்தியா டுடே" பத்திரிக்கையின் முதல் குறுக்கெழுத்துப் போட்டியில் எனக்குப் பரிசு கிடைத்திருப்பதாக அந்தப் பத்திரிக்கையில் இருந்து ஒரு கடிதம் வந்தது..!!

gragavan
18-01-2005, 04:09 AM
அடடே! விழி திறக்கத் தொடங்கி விட்டது. இனி பார்வை விசாலந்தான்! இந்தியா டுடேயில் பரிசு வாங்கினீர்களா பாரதி. பாராட்டுகள்.

பத்திரிகை சிறியதோ பெரியதோ! நடத்துவது எளிதல்ல என்பது புரிகின்றது.

அன்புடன்,
கோ.இராகவன்

முதன்முதலில் ஒளியும் ஒலியும்..............................
http://www.tamilmantram.com/new/index.php?...st=105&p=94831&

மன்மதன்
20-01-2005, 04:42 AM
சாதாரணமாக குறுக்கெழுத்து போட்டிகளில் பரிசு வாங்கிடலாம். பரிசு இல்லாவிட்டாலும் முழு கட்டங்களையும் பூர்த்தியாவது செய்துடலாம்.. ஆனா இந்தியா டுடே குறுக்கெழுத்து போட்டியை பூர்த்தி செய்ய, முந்தைய இ.டு பத்திரிக்கையை கசக்கி பிழிய வேண்டி வரும்.. உங்களுக்கு அநியாயத்திற்கு பொறுமை அதிகம் பாரதி..
அன்புடன்
மன்மதன்

mania
20-01-2005, 07:34 AM
பொது ஜனங்களின் சவுகர்யத்துக்காக அந்த குறுக்கெழுத்து போட்டியை இங்கே தரக்கூடாதா பாரதி....?........
அன்புடன்
மணியா....

மன்மதன்
20-01-2005, 07:41 AM
Originally posted by mania@Jan 20 2005, 01:34 PM
பொது ஜனங்களின் சவுகர்யத்துக்காக அந்த குறுக்கெழுத்து போட்டியை இங்கே தரக்கூடாதா பாரதி....?........
அன்புடன்
மணியா....

அப்படியே .. அதற்கு முந்தைய இ.டு சேர்ந்து..
அன்புடன்
மன்மதன்

mania
20-01-2005, 07:47 AM
Originally posted by மன்மதன்+Jan 20 2005, 01:41 PM--><div class='quotetop'>QUOTE(மன்மதன் @ Jan 20 2005, 01:41 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-mania@Jan 20 2005, 01:34 PM
பொது ஜனங்களின் சவுகர்யத்துக்காக அந்த குறுக்கெழுத்து போட்டியை இங்கே தரக்கூடாதா பாரதி....?........ * *
அன்புடன்
மணியா....

அப்படியே .. அதற்கு முந்தைய இ.டு சேர்ந்து..
அன்புடன்
மன்மதன்[/b][/quote]


கோபத்துடன்
மணியா..... :angry:

மன்மதன்
20-01-2005, 08:46 AM
ஏன் கோபம்.. நீங்க பாட்டுக்கு குறுக்கெழுத்து.. நெடுக்கெழுத்துன்னு ஏதாவது கேட்க.. ஏற்கனவே கிளாளில் உள்ள சிகப்பு ஸ்ட்ராவை எடுகக் முடியாம போராடிக்கிட்டிருக்கோம்.. இடையிலே இந்த போட்டி வேறயா..
அன்புடன்
மன்மதன்

பாரதி
20-01-2005, 01:45 PM
கருத்தால் என்னை மகிழ்வித்த இராகவன், மன்மதன் மற்றும் மணியா அண்ணாவுக்கு மிக்க நன்றி.

அன்பு மணியா அண்ணா...
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. குறுக்கெழுத்துப்போட்டி எனக்கு நினைவில் இல்லை. அந்த செய்தியையும் சேமிக்கவில்லை. எனினும் யாரிடமாவது இந்தியா டுடே-யின் அந்த குறுக்கெழுத்து போட்டியின் பிரதி இருக்குமெனில் தந்து உதவுங்கள். இப்போதும் நான் அதைக் கேட்பது ... பரிசு கிடைத்தது என்பதற்காக அல்ல... செல்வதாஸ் எனக்கு உதவினார் என்பதை நினைவில் கொள்ள மட்டுமே..

பாரதி
20-01-2005, 01:46 PM
பத்திரிக்கை வெளியானதும் முதலில் அங்கேயே இருந்த சில நண்பர்களிடம் கொடுத்து படித்துப்பார்க்க சொன்னோம். சில நண்பர்கள் நன்றாக இருப்பதாகவும், மற்ற நண்பர்களிடம் கொடுத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி..!

"விழி" நன்றாக பிரபலம் அடைந்து விடும்.. எல்லோரும் அதைப்பற்றியே பேசுவார்கள் என்று எண்ணத்தொடங்கி விட்டேன்...

சில தினங்கள் கழித்து வாசகர்களின் கருத்தறிய பிரதிகளை சேகரித்துப்பார்ப்போம் என்று முயற்சித்தால்.... ஒரு பிரதியைக் கூட திரும்ப பெற இயலவில்லை..! கடைசியாக யாரிடம் போய் சேர்ந்தது என்பதைக்கூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஓரிரு பிரதிகள் எங்கு போய் சேர்ந்திருக்கும் என்பதை அனுமானிக்க மட்டுமே முடிந்தது. முதல்பிரதி மட்டும் ஒரு வழியாக கைக்கு வந்தது...

அவரிடம் ஒரு "புல்லட்" இரு சக்கர வாகனம் இருந்தது. ஆனால் அதை அவர் உபயோகித்துப்பார்த்தது மிகவும் அபூர்வமே..! அதே போல யாருடைய இரு சக்கரவாகனத்திலாவது பின் அமர்ந்து சென்றிருக்கிறாரா என்றால் அதுவும் அபூர்வமே. என்னுடன் மட்டும் அவ்வப்போது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வர ஒப்புக்கொள்ளுவார்.

இரு சக்கர வாகனம் பற்றி காரணம் கேட்டதற்கு " ஒரு நாளு நைட் டவுன்லேருந்து வந்துகிட்டிருந்தேனா... அப்ப ஓடை பக்கத்துல மேம்பாலம் இருக்குல்ல.. அதுல வந்தேனா... "சடார்"ன்னு ஏதோ நெத்தியில அடிச்சுச்சு அண்ணாச்சி. என்னான்னே தெரியல... அப்படியே கீழ விழுந்தேன்.. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்தான் நெனவு வந்திச்சு. எப்படியோ வீட்டுக்கு வந்து சேந்தேன். அன்னைல இருந்து வண்டிய எடுக்கணும்னா பயமா இருக்கு அண்ணாச்சி.. மீறி வண்டி எடுத்தாலும் ஏதோ படபடன்னு வருது." என்றார்.

அந்தப்பகுதிகளில் இரவு நேரங்களில் கழுகுகள் இரு சக்கர வாகனங்களின் விளக்கை (ஒரு வேளை இரையாக கருதுமோ..?) நோக்கி வேகமாக பறந்து வரும். அந்த நேரத்தில் அந்தப்பறவைகள் நம் மீது வேகமாக மோதவும் கூடும். எனக்கும் கிட்டத்தட்ட அதே அனுபவம் ஒரு முறை பின்னர் ஏற்பட்டிருக்கிறது.

அவருடைய குடும்பத்தைப்பற்றி அவர் ஒரு போதும் என்னுடன் கதைத்ததில்லை. காரணத்தை நானும் கேட்டதில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு "நமக்கெல்லாம் அது சரிப்படாது அண்ணாச்சி" என்றார்.

பெரும்பான்மையான சமயங்களில் அவர் ஒரு முடிவெடுத்தார் என்றால் அதில் தீர்மானமாக இருப்பார். அப்போது தொழிற்சங்கத்தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. (தேர்தல் குறித்து சொல்வேனேயானால் அது ஒரு பெரிய தொடர்கதையாகி விடக்கூடும் என்பதால் மிகவும் சுருக்கி சொல்கிறேன்.)

எப்போதும் ஒரு குறிப்பிட்ட "தலை"வரே குறிப்பிட்ட கால இடைவெளியில் மகத்தான வெற்றிகளைத் தொடர்ந்து பெற்று வந்த காலம் அது.. ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்காக புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. வழக்கம்போல "அவர்" அந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

தொழிற்சங்கத்தின் தலைவராக புன்னைவனராசனும், பொதுச்செயலராக செல்வதாஸம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்..! தேர்தல் நடந்திருந்தால் முடிவு என்ன என்பது வேறு கதை. உடன் பிரபாகரனும் நிர்வாகக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் புன்னைவனராசனும், பிரபாகரனும் மிகச்சிறந்த படைப்பாளிகள். புன்னைவனராசனின் கதைகள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பல வார, மாதப் புத்தகங்களில் பிரபாகரன் கதைகளுக்காக பரிசு பெற்றிருக்கிறார்.

எப்போதும் போல அன்றி, அந்தக்குழு உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு ஊதிய உயர்வு குறித்து சரியான விசயங்களை அளித்து வந்தது என்பது என் அசைக்க முடியாத கருத்து. தொழிலாளர்களும் அடிக்கடி அதைப்பற்றி விவாதித்து வந்தனர். மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது.

தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான பேச்சு வார்த்தை நடந்து கொண்டே.......... இருந்தது. பேச்சுவார்த்தை முடிவடையாமல்..... ஒரு கட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கிடையேயான முரண்பாடுகள் ஒரு பொதுக்குழுவில் வெளிப்படையாக தெரிந்தது.

'மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கத்தயாராக இல்லை' என்று ஒரு நிர்வாகி சொல்ல... கடுமையான வாக்குவாதம் மூண்டது.

ஒரு காலத்தில் ஓரிரு வார்த்தைகளை கூட பேச விடாமல் தடுத்த அதே அரங்கில், அதே தொழிலாளர்கள் அன்றைக்கு சுமார் இரண்டு மணி நேரமாக செல்வதாஸின் தங்கு தடையற்ற பேச்சைக்கேட்டு மூச்சு விட மறந்திருந்தார்கள்...! செல்வதாஸின் சொல்வன்மையைக் கண்டு அனைவரும் திகைத்துப் போனார்கள்.

gragavan
21-01-2005, 11:25 AM
தலைவர்கள் உருவாக்கப் படுவதில்லை. உருவாகிறார்கள் என்ற மொழி நினைவிற்கு வருகிறது. நல்ல நடை பாரதி. தொடருங்கள்.

ஒரு சின்ன நடைவிலகல். மண் குதிரை பற்றி. இந்தச் சொலவடை இன்றைக்கும் பிரபலமானது. ஆனால் எப்படி தொடங்கியது தெரியுமா? நீர்த்தேக்கங்களில் நீருக்குள் பார்த்தால் ஆங்காங்கே மணல் மேடுகள் தெரியும். சில நேரங்களில் நீருக்கும் வெளியே தலைகாட்டும். இவைகளுக்கு குதிர் என்று பெயர். நெற்குதிரோடு தொடர்புடைய சொல்தான் இந்தக் குதிரும். நெல்லைக் குவித்து வைப்பது நெற்குதிர். மண்ணைக் குவித்து வைப்பது மண்குதிர். இந்தக் குதிரின்மேல் காலை வைத்தால் பொதக்கென்று குதிர் கலைந்து கால் உள்ளே போய்விடும். இதைத்தான் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது என்பார்கள். அது மருவி மண்குதிரையை என்றாகி விட்டது.

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
21-01-2005, 03:29 PM
அன்பு இராகவன்...
மருவிப்போன ஒரு பொருளை இன்று அறிந்துகொண்டேன். மிக்க நன்றி. தொடருங்கள்.

அறிஞர்
25-01-2005, 09:15 AM
அருமையாய் எழுதுகிறீர்கள்.. பாரதி.. இன்னும் தொடருங்கள்......

நேரமில்லாததால்... இந்த பதிப்பை முன்பு படிக்க இயலவில்லை...

இன்று படிக்கும்போது.. நானும் எழுதலாமா என்று எண்ணம் வருகிறது......

ராகவனின் மருவி போன பெயர் காரணம் அருமை.. வாழ்த்துக்கள்

பாரதி
28-01-2005, 03:15 PM
செல்வதாஸின் திறமையைக் கண்ட பின்னர் "குறிப்பிட்ட சிலர்" எரிச்சலடைந்தனர். அவருடன் விவாதத்தில் ஈடுபட்டு அவரை வெல்வதென்பது அநேகமாக நடக்காத காரியமாக மாறி விட்டிருந்தது.

அதன்பின்னர் நடந்த பல்வேறு விசயங்களில் செல்வதாஸ் மிகுந்த மனவேதனை அடையும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை நினைவுகூரவும் எனக்கு விருப்பமில்லை. மீண்டும் நடந்த தொழிற்சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். அவரது தோல்வியை முதலில் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

விழிக்காக "காயம்" என்கிற கதையை அவர் இரண்டு பாகங்களாக எழுதிக்கொடுத்தார். முதல் பாகம் ஒரு விழி இதழில் வெளிவந்தது.

அதன் பின்னர் அவர் எப்போதும் ஒரு சோர்வுடனே காணப்பட்டார். அடிக்கடி " அண்ணாச்சி.. எனக்கென்னமோ இனி ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு தோணுது. நீங்கதான் எல்லாத்தையும் பாத்துக்கணும்" என்று சொல்வார். முதலில் அது பற்றி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அவர் திரும்பவும் சொல்லும் போது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்தது.

சந்தானம் அண்ணாச்சியுடன் பேசும் போது அவரும் இதைக்குறிப்பிட்டார். " என்னா..இது..? இப்டியே பேசுதாப்ல... எல்லாரும் ஒரு நா போயி சேர வேண்டியதுதா.. இது ஒரு விசயம்னு..." என்று சற்று கோபத்துடன் சொன்னார்.

மேலும் சில வாரங்கள் உருண்டோடின. பால்ராஜுடன் ராஜ் திரையரங்கில் காலைக்காட்சியாக ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது தூத்துக்குடியை நோக்கி சில நெருங்கிய நண்பர்கள் வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இத்தனை நபர்கள் ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றனர் என்று முதலில் புரியவில்லை. மேலும் ஒரு வாகனத்தில் இரு நண்பர்கள் வந்ததைக் கண்டு அவர்களை நிறுத்தி விசாரித்தேன்.

அந்த அதிர்ச்சி தரும் தகவலை சொன்னார்கள் அவர்கள்... செல்வதாஸ் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கேள்விப்பட்டதும் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளானேன்.

உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு சென்றோம். அதிகாலை நேரத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் பேருந்தை நிறுத்தி ஏற முயற்சி செய்த போது, தவறி விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் அவரது வயிற்றில் ஏறி விட்டதாகவும் அதனால் அங்கேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல் சொன்னார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை. பிரேத பரிசோதனைக் கிடங்கில் சில நிமிடங்களுக்கு மேல் "அண்ணாச்சி"யைக் காண என்னால் முடியவில்லை. எப்போதும் போல வெள்ளைச்சட்டையும் கருப்பு கால்நிற சட்டையும்தான் அவர் அணிந்திருந்தார்.

செல்வதாஸ் அண்ணாச்சியை தொழிற் சங்க கட்டடதிற்கு கொண்டு வந்த பின்னர் அனைவரும் மரியாதை செலுத்தினர். துயில் கொண்டது போல இருந்தார் அண்ணாச்சி. நெற்றியில் மட்டும் ஒரு சிறிய கீறல் இருந்தது. அங்கிருந்து குடியிருப்பு வாயில் வரை, அது வரை யாருமே பார்த்திராத அளவுக்கு சாலையை நிறைத்து அனைவரும் மெளனமாக நடக்க, அண்ணாச்சி அவரது சொந்த ஊருக்கு மீளாத்துயில் கொள்ள புறப்பட்டார்.

எளிமையான எத்தனையோ பெரிய தலைவர்களைப்பற்றி பலமுறை படித்திருக்கிறேன். ஆனால் நேரில் கண்டதில்லை. ஆனால் செல்வதாஸ் அண்ணாச்சியுடன் வாழ்ந்த அந்த சில காலம் என்னால் எப்போதும் மறக்க முடியாதது. இவை தேதியில்லா குறிப்புகள் என்றாலும் அண்ணாச்சி பிரிந்த அந்த நவம்பர் 17 எப்போதும் என் மனதை உறுத்திக்கொண்டேதான் இருக்கும்.

ஒரு முறை அவர் வாழ்ந்த வீட்டுக்கு அவரைக் காண்பதற்காக சென்றிருந்தேன். பொதுவாக அங்கு வாழ்ந்த எத்தனையோ நண்பர்களின் வீடுகள் ஆடம்பரப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை மட்டுமே பார்த்தவன் அவர் வீட்டைக் கண்டு அயர்ந்து போனேன்.

அவரது வீட்டில் நான் பார்த்தவை :- தூங்குவதற்கு ஒரு கோரைப்பாய், இரண்டு வெள்ளைச்சட்டைகள், இரண்டு கருப்பு நிற கால்சட்டைகள், ஒரு துண்டு, ஆலையில் பணிபுரியும் போது அணிய வேண்டிய சீருடை, காலணி,காலணியுறைகள், ஒரு மேசை, ஒரு நாற்காலி (இவை இரண்டும் தொழிற்சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சங்க அலுவலுக்கு தேவைப்பட்டதால் அவர் சொந்தமாக வாங்கியவை), சில வெண்குழல் பாக்கெட்டுகள்... இவை மட்டுமே...!

எளிமையை எனக்கு உணர்த்திய அன்பு அண்ணாச்சியை, எப்போதும் மனிதத்துவத்தை உணர்த்திய அந்த அன்பு உள்ளத்தை நினைவில் குறித்துக்கொள்வதை விட, மனத்தில் என்றும் இருத்திக்கொள்வதே நான் செய்த பேறு.

அறிஞர்
01-02-2005, 02:15 AM
அருமையாக எழுதி... சோகத்துடன் முடித்துவிட்டீர்கள்..........

இவரை போன்ற மனித நேயமிக்க நல்ல தலைவர்கள் நீண்ட நாள் இருக்காததால்தான்.... தீயவர்கள்... புகுந்து... நாட்டை கெடுக்கிறார்கள்....

thiruarul
02-02-2005, 02:54 AM
மதிப்பிற்குரிய பாரதி அவர்கட்கு,

தாங்கள் இக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன இடங்கள் எனக்குப் புதியவையாதலின் கருத்துச்சொல்ல எதுவுமில்லாமல் ஒதுங்கியிருந்தேன்.

ஆனால் மதிப்பிற்குரிய செல்வதாஸ் அவர்கள் குறித்துத் தாங்கள் எழுதவாரம்பித்ததும் தங்களது அடுத்த பதிவு எப்போது வரும் எனக் காத்திருந்தேன்.

காரணம் அடியேன் வாழ்க்ககைச் சரிதங்களை வாசிப்பதில், மனித இயல்புகளை அறிந்துகொள்வதில் அளவிலா ஈடுபாடுகொண்டவன்.

செல்வதாஸ் அவர்களது இரசிகனாகவே மாறிவிட்ட என்னை அவரது திடீர் முடிவு கலங்கவைத்துவிட்டது.

நல்லவர்களை ஆண்டவன் நீண்டகாலம் புவியில் துன்பப்படவிடுவதில்லை.

நிற்க, தங்களது எழுத்து வன்மை இப் பதிவுகளில் துலாம்பரமாகத் தெரிகிறது.பாராட்டுகள் பல!!

என்றும் அன்புடன்
திருவருள்

gragavan
02-02-2005, 05:31 AM
பாரதி, அழுத்தமாகத் தொடங்கி வருத்தமாக முடித்து விட்டீர்கள். அற்புதமான நடை.

நண்பர் திருவருள் சொன்னது போல, நல்லவர்கள் இந்த உலகில் நீண்ட காலம் துன்பப் படுவதில்லை.

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
02-02-2005, 10:21 AM
கருத்தளித்த அன்பு அறிஞர், அன்பு திருவருள், அன்பு இராகவன் ஆகியோருக்கு நன்றி. இப்பதிவை சரியாக செய்யவில்லை என்பதே என் கருத்து. சில சமயங்களில் எழுத வேண்டுமே என்பதற்காகவும், சில இடங்களில் தொழிற்சங்கங்களைப்பற்றிய உரையாடல்களையும் தவிர்க்க முயற்சி செய்தது போன்றவையும் என் பொறுமையின்மையுமே காரணம். எப்போதாவது சமயம் கிடைக்கும் போது நன்கு எழுத முயற்சி செய்கிறேன். செல்வதாஸ் அவர்களின் 'விழி' தலையங்கத்தை இன்று தேடி எடுத்ததால் இன்று தருகிறேன்.

பாரதி
02-02-2005, 10:23 AM
செல்வதாஸ் - மனிதநேயம்

விழி இதழுக்காக தலையங்கம் போல செல்வதாஸ் அண்ணாச்சி எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு:

மனிதகுலம் வரலாற்றின் வழி நெடுகிலும் எதிர்கொண்டு அனுபவித்த இன்னல்கலையெல்லாம் களைந்து மேம்பாடடைவதற்கும், அதனுடைய வளர்ச்சிப்படிகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கும், மனிதகுலம் நினைவில் நிறுத்தியுள்ள மாமனிதர்களோடு அவர்களது முயற்சியிலும் உழைப்பிலும் தங்கலது சொந்த வியர்வையையும் இரத்தத்தையும் ஒன்றிணைத்துக்கொண்ட 'முகம் தெரியாத' 'மனிதர்கள்' நூறாயிரக்கணக்கிலே. இவர்களையெல்லாம் 'மனிதகுல நல்வாழ்வுக்காக' வியர்வையும் இரத்தமும் சிந்தி உழைக்க வைத்தது எது?

நிச்சயமாக ....அது -

பாடுகளில் சிக்கி உழன்று, தவிக்கின்ற மனிதனை நேசிக்கின்ற - மனிதம் ஆட்சி செய்யும் மனிதகுல வாழ்க்கையைப் படைக்கத் துடிக்கின்ற ' மனிதர்களின் அன்பு' மனித நேயம் அல்லவா..!

இந்த மனித நேயம் என்பது -

- எந்த வகையான எல்லைகளுக்கும் அல்லது வரையறைகளுக்குள்ளும் தன்னை முடக்கிக்கொள்வதில்லை.

- அடக்கி ஆளும் ஆதிக்க வெறியின் அச்சுறுத்தல்களுக்கு அடங்கிப்போவதுமில்லை.

- இதன் இயல்பான பிரசவத்தை நிர்ப்பந்தங்கள் கருச்சிதைவு செய்யப் பொறுத்துக் கொண்டிருப்பதுமில்லை.... அப்போது

- பொங்கிச்சீறியெழுந்து போர் தொடுக்கும் போர்க்குணமிக்கது.

எனினும் -

இந்த மனித நேயம் பட்சமானது அல்லது சார்புடையது.

- உண்மையைச் சார்ந்து நிற்கும் - பொய்மையின் ஆதிக்கத்தை முறியடிக்கப் போரிடும்.

- மனித வாழ்க்கையை, அதன் மேம்பாட்டை; மனித குல முன்னேற்றத்தை மறுக்கின்ற அல்லது தடுக்கின்ற எந்தச் சக்தியையும் முறியடிக்க அணி திரளும்.

இந்த மனித நேயப் போர்ப்படையணிகளின் வரிசையில் நமது விழியும் அதன் இயக்கமும் ஒன்றிணையட்டும்.

இது உண்மையின் வெற்றியைக்கோரி தொடுக்கின்ற போர்!
இது மனிதகுல உயர்வு வேண்டி தருகின்ற உழைப்பு!

நீங்களும் பங்களிப்பீர்..! நாம் நமது முயற்சிகளையும் உழைப்பையும் ஒன்றிணைத்துக்கொள்வோம்!!

"இனி மனிதகுல உயர்வுக்கும் அதன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் தடையாக உள்ளவைகளே நம் இலக்கு. அவைகளின் நிர்மூலமே நாம் வேண்டுவது."

- ஆசிரியர் குழு.

mania
02-02-2005, 10:25 AM
மனதை கனமாக்கிய கதை.....பாராட்டுக்கள் பாரதி...(நினைவுகூர்ந்து இங்கே கொடுத்ததற்கு )
அன்புடன்
மணியா....

பாரதி
02-02-2005, 10:29 AM
அன்பு மணியா அண்ணா... உங்கள் கருத்துக்கு நன்றி.
செல்வதாஸின் வரிகளை இன்று தந்துள்ளேன். பார்க்கவும்.

அறிஞர்
03-02-2005, 07:08 AM
மனித-நேயத்தை பற்றிய வரிகள்... அருமை....

அன்பர்களை... ஆர்வமுடன் ஈர்க்கும் வரிகள் வெகு அருமை.....

இன்னும் பழைய பாகங்கள்.. கண்களில் தென்பட்டால்.. இங்கு கொண்டு வந்து ஏற்றுங்கள்.. அன்பரே....

mania
03-02-2005, 07:59 AM
Originally posted by பாரதி@Feb 2 2005, 04:29 PM
அன்பு மணியா அண்ணா... உங்கள் கருத்துக்கு நன்றி.
செல்வதாஸின் வரிகளை இன்று தந்துள்ளேன். பார்க்கவும்.


நல்ல ஆழமான....அழுத்தமான வரிகள்.......நன்றி பாரதி...
அன்புடன்
மணியா....

பாரதி
03-02-2005, 11:48 AM
மிக்க நன்றி அறிஞரே... மிக்க நன்றி மணியா அண்ணா...

செல்வதாஸின் கைப்பட எழுதிய அந்த குறிப்புகளை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.

பாரதி
03-02-2005, 04:27 PM
நிச்சயமாக கனவு இல்லை..!

இது நிச்சயமாக கனவு இல்லை. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருக்கும். பெரும்பாலும் நள்ளிரவில் வலைத்தளங்களில் உலாவுவது என் வழக்கம். அப்போதெல்லாம் ஏதாவது "அரட்டை அறை"களுக்கு சென்று யாருடனாவது புனைப்பெயர்களில் கதைப்பது என்பதும் நடைமுறையில் இருந்து வந்தது.

ஒரு நாள் நள்ளிரவு அல்லது அதிகாலை இரண்டு மணி இருக்கும். "தமிழ்மூவீஸ்ஆன்லைன்" வலைத்தளத்தின் அரட்டை அறை என்று எண்ணுகிறேன். வழக்கம் போல வலைத்தளங்களைப் பார்வையிட்டுக்கொண்டே அரட்டை அறையிலும் இருந்தேன்.

ஒரு நபர் தானாக பேச அழைத்தார். அவரது பெயர் ஒரு பெண்பாலாக இருந்தது. அவரது உரையாடல் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை - ஒரு வேளை "சாதனா"வாக இருக்கக்கூடும். அவர் சரளமாக உரையாட ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த தட்டச்சு உரையாடலை என் நினைவிலிருப்பதைக்கொண்டு தமிழில் சொல்கிறேன்.

அவர் : நலமா...? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இந்த நேரத்தில்?

நான்: நலம். நீங்கள் யார்?

அவர்: நான் ரம்பாலி நாயக். (அல்லது ராம்பலி நாயக்) உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா...?

நான்: எனக்கு நம்பிக்கை எல்லாம் இல்லை.

ரம்பாலி நாயக்: ஏன் அப்படி?

நான்: எந்த ஒரு விசயத்தையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ரம்பாலி நாயக்: ஜோதிடமும் ஒரு விஞ்ஞானம்தான்.

நான்: என்னால் முழுமையாக நம்ப முடியாது.

ரம்பாலி நாயக்: உங்களை பற்றி சொல்லவா..?ம்ம்.. உங்கள் பெயர்...

நான்: என் பெயர் ................

ரம்பாலி நாயக்: ஏன் அவசரப்பட்டீர்கள்...? நானே உங்கள் பெயரைச்சொல்லி இருப்பேனே... சரி..பரவாயில்லை.

நான்: அப்படியா...?

ரம்பாலி நாயக்: உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று சொல்லவா..?

நான்: சொல்லுங்கள்.

ரம்பாலி நாயக்: உங்களுக்கு மூன்று குழந்தைகள்.. முதல் குழந்தை கருவில் தங்கி இருக்காது.

நான்: (உண்மையிலேயே ஆச்சரியத்துடன்) ஆமாம்.

ரம்பாலி நாயக்: மற்ற இருவரும் ஆண்குழந்தைகள்தானே..

நான்: ஆமாம்.

ரம்பாலி நாயக்: இப்போது நீ வேலை பார்க்கும் இடத்தில் உனக்கு திருப்தி இருக்காதே..?

நான்: ஆமாம்.. என்ன செய்யலாம்? எவ்வளவுதான் உண்மையாக வேலை செய்தாலும் மதிப்பே இல்லை. நம்புபவர்களும் இல்லை.

ரம்பாலி நாயக்: வேறு புதிய வேலையை தேட முயற்சி செய். கிடைக்கும்.

நான்: எங்கு வேலை தேடலாம்?

ரம்பாலி நாயக்: மத்தியகிழக்கு...ம்ம்... ஜோர்தான் அல்லது சிங்கப்பூர்.

நான்: கிடைக்குமா..?

ரம்பாலி நாயக்: முதலில் முயற்சி செய்.

நான்: இங்கேயே வேலையைத் தொடர்ந்தால் என்ன?

ரம்பாலி நாயக்: தொடரலாம். ஆனால் மரியாதை இருக்காது. உடனே வேறு வேலையில் சேர முயற்சி செய். கண்டிப்பாக கிடைக்கும்.

நான்: எனக்கு அமைதியில்லாமல் இருக்கிறது... நெருங்கிய நண்பர்கள் யாரும் அருகில் இல்லை... அடிக்கடி கோபம் வருகிறது.

ரம்பாலி நாயக்: குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்..?

நான்: நலமாக இருக்கிறார்கள்.. அவர்களின் எதிர்காலம் எப்படி?

ரம்பாலி நாயக்: அவர்கள் முத்துகளாக வருவார்கள். அவர்களை ஒன்றும் சொல்ல வேண்டாம். படிப்பதற்கு மட்டும் வழிகாட்டினால் போதும். பிற்காலத்தில் நட்சத்திரங்கள் போல ஒளிவீசுவார்கள்.

நான்: நீங்கள் யார்..?

ரம்பாலி நாயக்: நான் ரம்பாலி நாயக்.

நான்: எங்கு இருக்கிறீர்கள்?

ரம்பாலி நாயக்: இப்போது புதுதில்லியில்

நான்: உங்கள் தொலைபேசி எண் என்ன?

ரம்பாலி நாயக்: உனக்கு அது தேவை இல்லை.

நான்: ஏன் என்னுடன் பேசுகிறீர்கள்?

ரம்பாலி நாயக்: எனக்கு இடப்பட்ட கட்டளை.

நான்: யார் இட்டது?

ரம்பாலி நாயக்: சொல்ல எனக்கு அனுமதி இல்லை.

நான்: உங்களை நான் எப்படித் தொடர்பு கொள்வது?

ரம்பாலி நாயக்: தேவைப்பட்டால் நானே வருவேன்.

நான்: உங்கள் உதவி தேவை என்று அஞ்சல் அனுப்ப விரும்பினால்..மின்னஞ்சல் முகவரியாவது கொடுங்கள்.

ரம்பாலி நாயக்: உனக்குத் தேவையில்லை.

நான்: தயவு செய்து கொடுங்கள்.

ரம்பாலி நாயக்: என்னை சங்கடப்படுத்தாதே... சரி. ரம்பாலிநாயக்@யாஹ.காம்

நான்: ஒரு வேளை எனக்கு மிகவும் அவசரம் எனில் எங்களை எப்படித்தொடர்பு கொள்ள..?

ரம்பாலி நாயக்: உனக்கு தேவைப்படாது. தேவைப்படும் சமயத்தில் நான் அங்கிருப்பேன்.

நான்: நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.

ரம்பாலி நாயக்: ம்ம்.. தேவையில்லை. உடன் பதில் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இந்த நேரத்தில் இணையத்தொடர்பு துண்டிக்கப்பட அவசர அவசரமாக மீண்டும் இணைப்புக்கு முயற்சி செய்து வலைத்தளத்திற்கு வந்தேன்.

என்னுடன் உரையாடிய அந்த பெயர் அங்கேயே இருந்தது.. அப்பாடா.. நல்ல வேளை... இன்னும் நிறைய பேசலாம் என்று முயற்சித்தால்...! அதே பெயரில் இப்போது வந்த நபரின் உரையாடல் முற்றிலும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.. மொழி நடையும், உச்சரிப்பும்...(தட்டச்சில்) மிகவும் வேறுபட்டிருந்தது. மீண்டும் மீண்டும் என் கேள்விகளைத் தொடுக்க அந்த நபர் "மன்னிக்கவும். நீங்கள் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உரையாடுகிறீர்கள்" என்று கூறி என்னுடன் உரையாடுவதைத் தவிர்த்து விட்டார்.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அன்று என்னால் உறங்கவே முடியவில்லை. அவர் சொன்ன முகவரிக்கு பெயருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அது பிழையான முகவரி என்று வந்தது! தொடர்ந்து சில தினங்கள் அந்த அரட்டை அறைக்கு சென்று பார்த்தேன். ஆனால் ரம்பாலி நாயக் வரவே இல்லை. சில மாதங்களில் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.

அந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்குப் பின்னர் சென்னை - அடையாரில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த ஒரு நேர்முகத்தேர்வு - "வெயின் பார்மசூட்டிக்கல்ஸ்" என்கிற அமெரிக்க நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்காக நடைபெற்றது. ஒரு சீனர் என்னை நேர்காணல் செய்தார். ஐந்து நிமிட பேட்டிக்கு பிறகு என்னை தேர்வு செய்திருப்பதாக தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் தேர்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில், சில தவணைகளில் இந்திய மதிப்பில் கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய், வேலையில் இணைந்த பின்னர், தேர்வு செலவுக்காக கட்ட வேண்டும் என்று நேர்காணல் தேர்வுக்கு அழைத்திருந்த மனித வள நிறுவனம் சொன்னதும் எனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. அத்தொகை எனக்கு மிகவும் அதிகமானதாக இருந்தது. பணம் கொடுத்துதான் வேலையில் சேர வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. ஆகவே அந்த வேலையில் சேர முடியாமல் ஆனது.

சில மாதங்களுக்குப் பின்னர் ரமதான் மாதத்தின் ஒரு நாளில், அபுதாபியில் பிரபல அரசு எண்ணெய் நிறுவனமான "ஜாட்கோ" (ஜாக்கும் டெவலப்மெண்ட் கம்பெனி)-வில் நடைபெற்ற ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். நேர்முகத்தேர்வுக்காக அபுதாபி சென்று ஓரளவுக்கு நல்ல முறையில் தேர்வில் பதிலளித்தேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அங்கு வேலையிலும் சேர்ந்தேன். ஆனால் உடனடியாக ரம்பாலிநாயக்கின் நினைவு எனக்கு வரவில்லை.!

எப்போதாவது ரம்பாலிநாயக்கின் நினைவு வரும் போது, மன்றத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பியது இன்றுதான் கைகூடி இருக்கிறது.

என் மனதில் இந்நிகழ்ச்சி சற்று குழப்பத்தை உண்டு பண்ணியது. இன்று வரை இதை என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்க முடியவில்லை...! உங்களில் சிலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

pradeepkt
04-02-2005, 02:59 AM
ஆச்சரியம்தான் பாரதி. என் வாழ்விலும் இப்படி என்னமோ நடந்திருக்கு. எல்லாமே தற்செயலான்னும் புரியலை.

நாங்கள் கல்லூரியில் (மண்டலப் பொறியியற் கல்லூரி, திருச்சி) படிக்கும்போதுதான் இந்த மின் அரட்டை, மின்னஞ்சல் எல்லாம் பிரபலமாகிக் கொண்டு வந்தது. கல்லூரியில் மின்னரட்டையில் தனக்கு ஒரு பெண் நண்பர் இருப்பதாகக் கூறிக் கொள்வது ஒரு பெரிய கௌரவமாக இருந்து வந்தது. அந்நாளில் என் வகுப்பில் பங்களாதேஷில் இருந்து இந்தியா வந்து படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் மிக அமைதியானவன், படிப்பைத் தவிர வேறெதும் அறியாதவன், யார் வம்புக்கும் போகாதவன் என்று பெயர் எடுத்தவன். அவன் திடீரென்று சில நாட்கள் தேன் குடித்த நரி போல் திரிந்து கொண்டிருந்தான். என்னவென்று நண்பர்கள் எல்லாரும் அமுக்கி விசாரித்ததில் அவனுக்கு தில்லியில் இருந்து சோனாலி என்ற பெண் நண்பர் கிடைத்ததாக அறிந்து அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஏனெனில் சோனாலி என்ற பெயரில் அவனுடன் பேசிக் கொண்டிருந்தது நான்தான்.

அன்றிலிருந்து விளையாட்டுக்கு அவன் பக்கத்து டெர்மினலில் இருந்தே பேச ஆரம்பித்தோம். அவ்வப்போது அவனுடன் பேச்சும் கொடுத்து அதையும் உள்ளிட்டு வந்தோம். அப்படி ஒருநாள் அவனிடம் அந்தப் பெண் கூறுவது போல் என்னை அவளது உறவினராக அறிமுகப் படுத்தச் செய்தோம். அவளும் உனக்கு பிரதீப்பைத் தெரியுமா, அவன் என் உறவினன், என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் என்று கூற, அவன் ஒரேயடியாகத் தெரியாதென்று மறுத்து விட்டான்.

அன்றிலிருந்து அரட்டையிலும் சரியாகப் பேசுவதில்லை, கல்லூரியில் என்னிடமும் சரியாகப் பேசுவதில்லை. இது அவன் யாருக்கும் தெரியாமல் என் ப்ராஜக்ட் கோப்புகளைக் கல்லூரி வலைதளத்திலிருந்து நீக்குவது வரை சீரியஸாகச் சென்றது. நாங்களும் தேள் கொட்டிய திருடனைப் போல் அமைதி காத்தோம்.

நானும் அவன் அறியாமல்தான் ஏதோ கோபத்தில் இவ்வளவையும் செய்கிறான் என்றெண்ணினோம். கடைசிப் பிரிவு நாளில் எல்லா உறவினர்களும் வருவது வழக்கம். அவனுக்கும் அவன் குடும்பத்தினரும் ஒரு சூப்பர் அழகியும் (பிகர்?) வந்திருந்தனர். அவனை அணுகி அனைவரும் உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்டோம்.
அதற்கு அவன் கூறியதுதான் ஹைலைட்: "இட்ஸ் ஓகே. பை தி வே, இதுதான் சோனாலி, சொந்த ஊர் டெல்லி. நான் கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிற பெண்"

அடப்பாவி!

அன்புடன்,
பிரதீப்

babu4780
04-02-2005, 08:07 AM
ஹா ஹா.. 'பல்பு' வாங்குனீரா
நல்லா வேணும்-- இப்படியா அடுத்தவங்கள ஏமாத்தரது !!

gragavan
04-02-2005, 08:40 AM
என்ன பிரதீப்பு இந்தக் கும்மரிச்சம் போட்டிருக்கீரு. என்னவோ எல்லாரும் நல்லாருந்தாச் சரித்தான்.

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
04-02-2005, 08:54 AM
Originally posted by பாரதி@Feb 3 2005, 10:27 PM
நிச்சயமாக கனவு இல்லை..!

என் மனதில் இந்நிகழ்ச்சி சற்று குழப்பத்தை உண்டு பண்ணியது. இன்று வரை இதை என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்க முடியவில்லை...! உங்களில் சிலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

பாரதி, இந்த நிகழ்வுகளைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதிசயம் போலத் தெரிகிறது. மனித ஆய்விற்கு அப்பாற்பட்ட எந்த நிகழ்வுமே தெய்வாதீனம் அல்லது காத்து கருப்புச் சேட்டை என்று சொல்வது வழக்கம். நடந்தது நல்லதாகவே இருப்பதால் இதை தெய்வாதீனம் என்பதே நன்று.

இதை மனோரீதியில் ஆராய வேண்டும் என்று நினைக்கிறேன். சில நேரங்களில் சில விடயங்களைச் சிலரிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பியிருப்போம். பலமுறை சொல்ல வேண்டும் என்று நினைத்து, ஆனால் சொல்லாமல் விட்டிருப்போம். அவரிடம் அந்த விடயத்தைச் சொல்லி விட்டதாகவே நம்பி விடுவோம். சொன்னேன் என்று அவருடன் சண்டைக்கும் போவோம். அது போல உங்கள் மனதிலிருந்த ஆசைகளும் குழப்பங்களும் சேர்ந்து நடத்திய கூத்தாக இருக்குமோ என்று நினைக்கிறேன். ஆனாலும் விடயம் என்னுடைய அறிவிற்கு அப்பாற்பட்டது. para-pasychology என்று தனிப் பிரிவே இருக்கிறது.

பாபர் தன்னுடைய மகனின் நோயை வாங்கிக் கொண்டார் என்று வரலாற்றில் படித்திருக்கின்றோம். அது போன்ற நிகழ்வு என்னுடைய வாழ்விலும் நான் கண்டிருக்கிறேன். இவைகள் எல்லாம் இறைவன் திருவிளையாடல்கள் என்றே கொள்ள வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
04-02-2005, 01:19 PM
அன்பு இராகவன்,
உங்கள் கருத்துக்கு நன்றி. பிரதீப் சொன்னது போல என்னுடைய நண்பர்கள் யாரும் என்னுடன் உரையாடியிருக்க வாய்ப்பே இல்லை. காரணங்கள் பல.. நேரம் இரவு இரண்டு மணி. கணினியில் பரிட்சயம் பெற்ற நண்பர்கள் எனக்கு அப்போதைய நிலைமையில் இல்லை. யாரிடமும் கணினியும் இல்லை. மேலும் குழந்தை விசயம் குடும்பத்தினர் தவிர்த்து, நண்பர்கள் யாருக்கும் தெரியாது. பொதுவாகவே நான் இது போன்ற விசயங்களை நம்ப மாட்டேன்... ஆனால் எனக்கே இப்படி நடந்ததுதான் விநோதம்.. அடுத்து இன்னுமொரு நம்ப முடியாத நிகழ்ச்சி.. அதையும் வரும் பதிவில் சொல்கிறேன்... படித்து விட்டு சொல்லுங்கள். நன்றி.

மன்மதன்
05-02-2005, 09:10 AM
பாரதி சொன்னதை நம்ப முடியவில்லை.. நிஜமாவே நம்ப முடியவில்லை..

ப்ரதீப் , அந்த பங்களாதேஷி நீங்கள் உண்மையை சொன்ன பிறகு எப்படி அந்த பெண்ணை சோனாலி என்று சொல்லியிருக்க முடியும். அதற்கு முன்னாடி சொன்னாலும் அர்த்தம் இருக்கிறது..

அன்புடன்
மன்மதன்

Iniyan
05-02-2005, 11:33 AM
என்னமோ நடக்குது

மர்மமா இருக்குது....

pradeepkt
05-02-2005, 01:49 PM
மன்மதா,

ஆச்சரியமே அங்கதான்.
நான் அவன் கூடப் பேசினது உண்மை. அப்ப அவனுக்கு அப்படி ஒரு காதலி அதுவும் மின்னரட்டை மூலமா இருக்க வாய்ப்பே இல்லை.
ஆனால் அதே பையனுக்கு ஆறு மாசத்துக்குள்ள அதே பேர்ல, அதே ஊர்ல இருந்து அதே மாதிரி மின்னரட்டையில பொண்ணு மாட்டினதுதான் ஆச்சரியம். அது கல்யாணம் வரைக்கும் போனதை என்னன்னு சொல்லுறது?

அது மாதிரி அவனுக்கு நான் சோனாலிங்கற பேர்ல பேசினது நான் சொல்லும் வரைக்கும் தெரியாது. நாங்க அதைப் பலவிதமா சோதிச்சுத் தெரிஞ்சுக்கிட்டோம்.

நடுவுல என்ன நடந்தது, அந்தப் பொண்ணுகிட்ட அவன் என்னைப் பத்திப் பேசினானான்னு எல்லாம் கேக்கறதுக்கு அப்ப எங்களுக்குத் தைரியம் இல்லை. தைரியம் வந்ததில இருந்து அவனோட எனக்குத் தொடர்பு இல்லை. அவன் வேற எங்கயோ படிக்கப் போயிட்டான்.

அன்புடன்,
பிரதீப்

பாரதி
05-02-2005, 02:25 PM
நம்ப முடியாமல் கருத்து சொன்ன மன்மதனுக்கும் இனியனுக்கும் நன்றி. இச்சம்பவத்தை என்னாலேயே இன்னும் நம்புவது என்பது கடினமாக இருக்கும் போது மற்றவர்களைப்பற்றி சொல்லத் தேவையில்லை. ஆனால் சம்பவம் நடந்தது என்னவோ நிஜம்.!

அன்பு பிரதீப்.. உங்களின் விநோத அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

மேலும் ஒரு சம்பவத்தை சொல்லப்போகிறேன். நண்பர்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ.. தெரியவில்லை...!!

பாரதி
05-02-2005, 02:30 PM
முனிப்பாய்ச்சல்....? பதில் தேடுகிறேன்.

இதே போல இன்னொரு முறை...

அன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேலே இருக்கும். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தொலைபேசியில் செய்தி வந்தது. உடனே கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தேன். பேருந்தில் கிளம்பி தூத்துக்குடிக்கு வந்தால் ஏதோ பிரச்சினை காரணமாக பேருந்துகள் எல்லாம் ஓடாது என்பதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்து விட்டு.. இனி தாமதிப்பதில் பயனில்லை என்பதால் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

திரும்பவும் வீட்டுக்கு வந்து, பிரதீப்பை உடன் வர முடியுமா என்று கேட்டேன். உடனே அவசர விடுப்பு சொல்லி விட்டு அவனும் என்னுடன் வர ஒப்புக்கொண்டான்.

கிளம்பி வரும் போது, அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது.. இரவு நேரம் என்பதால் சாலையில் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை. வாகனத்தில் வேகத்தைக்காட்டும் கருவியில் முள் ஓடாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நான் பிரதீப்பிடம் ஏதோ கேட்க, சற்றே கவனம் அவன் பதிலிலும்- அந்தக்கருவியிலும் சென்றது.

சரியாக அதே சமயத்தில் சாலையில் உண்டாகியிருந்த, நீரில் மறைந்திருந்த பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் உள்ளே இறங்கி விட, வந்த வேகத்தில் நானும் பிரதீப்பும் வாகனத்திற்கு முன்பாக தூக்கி வீசப்பட்டோம். எதிரே எந்த வாகனமும் வராத காரணத்தால் சில சிராய்ப்புகளுடன் எழுந்தோம். வாகனத்தில் எதுவும் பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெக்கானிக்கிடம் உறுதிப்படுத்திக்கொண்டு, சிராய்ப்புகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு, பிரயாணத்தைத் தொடங்கினோம். வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்ட பின் அத்தனை வருடங்களில் வாகனம் ஓட்டும் போது கீழே விழுந்தது அதுவே முதல்முறை.

உள்ளங்கையிலும் சில சிராய்ப்புகள் இருந்த காரணத்தால் வாகனத்தை ஓட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கவே செய்தது.
மிதமான வேகத்தில் இரவு சுமார் பதினொன்றரை மணியளவில் தூத்துக்குடியை விட்டு வெளியே வந்தோம். நேரடி பேருந்துத்தடத்தை விட, எட்டையாபுரம், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், செக்கானூரணி, உசிலம்பட்டி வழியாக ஊருக்கு செல்வதே குறுக்கு வழி என்பதால் அந்த வழியாக செல்ல முடிவு செய்தோம்.

எட்டையாபுரத்திற்கும், கோவில்பட்டிக்கும் இடையே செல்லும் போது சாலையில் கும்மிருட்டு. சாலை ஓரங்களில் எந்த மின்விளக்கும் இல்லை. சாலையின் இருமருங்கிலும் தோட்டம் . கம்பு அல்லது சோளம் போன்ற பயிர் பயிரடப்பட்டிருந்தது. எந்த ஒரு வாகனமும் எங்களுக்கு பின்போ, முன்போ வரவில்லை. எங்களின் இருசக்கர வாகன வெளிச்சம் மட்டுமே சாலையில் இருந்தது.

கோவில்பட்டிக்கு ஒரு ஐந்து கிலோமீட்டர் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். அப்போது ஏறக்குறைய ஒரு பர்லாங்கு தொலைவில் சாலையின் இடது பக்கத்தில் வெகு தொலைவில் இருந்து பிரகாசமான ஒரு வெளிச்சம்... இரண்டு பெரிய டார்ச் லைட்டுகளை அருகருகே - ஒரு அடி தொலைவில் வைத்தால் எப்படி இருக்குமோ, அது போல இருந்தது. வெளிச்சமும் அதே போல இருந்தது. அது மிகவும் வித்தியாசமாகவும், கவனத்தை கவருவதாகவும் இருந்ததால் அதைப் பற்றி பிரதீப்பிடம் சொன்னேன்... அவனும் கவனித்தான்.

கிட்டத்தட்ட சராசரியான ஒரு ஆள் உயரத்தில் தெரிந்த அந்த வெளிச்சம் அதிவேகத்தில் இடப்புறத்தில் இருந்து வலதுபுறமாக நகர்ந்தது. சாலையை கடந்து வலப்புறமாக சென்ற அந்த வெளிச்சம் சில விநாடிகளில் மறைந்து விட்டது.

வெளிச்சம் கடந்த அந்த இடத்தை நெருங்கிய போது அங்கு எந்த சாலையும் இல்லை என்பது தெரிந்தது. ஆகவே எந்த வாகனமும் தோட்டங்களுக்கிடையே சென்றிருக்க வாய்ப்பே இல்லை. எந்த ஒரு மனிதனாலும் விளக்குகளைப் பொருத்திக்கொண்டு, அந்த நள்ளிரவு வேளையில் தோட்டங்களுக்கு இடையிலும், சாலைக்கு இடையிலும் நம்ப முடியாத அந்த வேகத்தில் நிச்சயமாக ஓடி இருக்க முடியாது. ஒரு வேளை ஏதாவது பறந்து சென்ற பறவையின் கண்களாக இருக்க முடியுமா என்றால் அந்த அளவுக்கு (சுமார் ஆறு அல்லது ஏழு இஞ்சுகள் கொண்ட வட்டங்கள்) பெரிய கண்களைக் கொண்ட பறவையை இது வரை நான் நேரில் பார்த்ததில்லை. வெளிச்சங்களுக்கு இடையே இருந்த இடைவெளி கிட்டத்தட்ட ஒரு அடி இருக்கும். எனவே பறவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறும் இல்லை.

காரணமில்லாமல்... மயிர்கூச்செரிதல் என்று சொல்வார்களே... அந்த நேரத்தில் அது எனக்கும் ஏற்பட்டது.

பிரதீப்பிடமும் இதைப்பற்றிக்கேட்டேன். இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன். இருவருக்கும் சரியான, அறிவியல்பூர்வமான பதில் இன்று வரைக்கும் கிடைக்கவில்லை!

அதிகாலையில் வீடு சென்று சேர்ந்தோம். மருத்துவமனையில் அம்மா நலமாகத்தான் இருந்தார்கள். எனவே மனதுக்கு சற்று நிம்மதி.

சில மாதங்களுக்குப் பின்னர் பேருந்தில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அருகில் அமர்ந்திருந்த பயணி என்னுடன் பேசிக்கொண்டு வந்தார். எப்படியோ பேச்சு... இந்த விளக்கைப்பற்றியும் வந்தது. அவர் சொன்னார் - இது "முனிப்பாய்ச்சல்"-ஆக இருக்கும்; இல்லாவிட்டால் கொள்ளிவாய்பேயாக இருக்கும்; அல்லது அம்மன் ஊர்வலம் வந்திருப்பார்! எனக்கு எதுவும் ஆகவில்லை என்பதால் கண்டிப்பாக நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றும் சொன்னார்..! இது உண்மையா..??

பாரதி
07-02-2005, 08:04 AM
நம்பிக்கை....

இம்முறை ஒரு பேருந்து பயணம்... ஒரு நாள் மாலை நேரம்... மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். பேருந்தில் அதிகம் கூட்டமில்லை. பேருந்து பந்தல்குடியை நெருங்கிக் கொண்டிருந்தது.

பேருந்தில் பின்பக்கம் இருந்த சிலர் " கண்டக்டரே.. என்னமோ வாசன அடிக்குது... என்னான்னு கொஞ்சம் பாருங்க" - என்றார்கள். அவர் கண்டு கொள்ளவே இல்லை.

சில நிமிடங்கள் கழித்து, பேருந்து எதன் மீதோ ஏறி இறங்கியது போன்று ஒரு சத்தம். ஓட்டுநர் எதைப்பற்றியும் கவலைப்படாதவராக பேருந்தை ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தார்.

திடீரென்று பேருந்தின் பின்புறமிருந்து ஒரு கூக்குரல்... "ய்யோவ்.... டீசல் டேங்க் அங்கன கெடக்குது.. அது மேல வண்டிய ஏத்திப்பிட்டீங்களே...!"

பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர். பேருந்திலிருந்து இறங்கிப்பார்த்தால் நசுங்கிப்போன உருளை போல, சாலையின் நடுவில் "டீசல் டேங்க்" கிடந்தது.

ஆளுக்காள் பேருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்தும், சோதனைகள் குறித்தும் பலவிதமாக பேசிக்கொண்டே இறங்கினர். முன்கூட்டி சொல்லியும், சரியாக கவனிக்காத ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் வார்த்தை அபிசேகம் நடந்தது.

மீதி பயணத்துக்கான பணத்தை நடத்துநரிடம் இருந்து பெற்றுக்கொள்ள பெரும்பாலோர் விரும்பினர். ஆகவே அவரும் பயணத்தூரத்திற்கான கட்டணம் போக மீதியை அனைவருக்கும் வழங்கினார்.

நேரமும் இரவு ஏழு மணியைப் போல ஆனதால், வெளிச்சமும் நன்றாக குறைந்து விட்டது. அங்கேயே நிற்பதை விட, பந்தல்குடி அருகில்தான் இருந்தது; அவ்வழியே வரும் பேருந்துகள் பெரும்பாலும் "ஹோட்டல் லக்கி"யில் இளைப்பாறித்தான் (!) செல்லும் என்பதால் அங்கு சென்று விடலாம் என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர் பயணிகள்.

நானும் நடக்க ஆரம்பித்தேன். அப்போது சற்று அழுக்கான ஆடை அணிந்த ஒரு இளம்வயது நபர் என்னிடம் பேச முற்பட்டார். அவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்பது தோற்றத்தால் புலனானது. அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய மஞ்சள்பையைத் தவிர அவரிடம் வேறொன்றுமில்லை.

ஹிந்தியில் கேட்டார் - "தூத்துக்குடி செல்ல எங்கு பேருந்து கிடைக்கும்?"

ஒரே நாட்டில் இருக்கும் சக மனிதர்களிடம் உரையாட ஒரு பொது மொழி தேவை. ஒரு வேளை நாட்டில் இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு தமிழ் தெரிந்திருக்கும் எனில் மீதம் இருக்கும் மக்களிடம் கண்டிப்பாக தமிழின் அவசியத்தை வலியுறுத்தி, தமிழைக் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என் கருத்து. அதே போல தமிழகம் தவிர்த்து ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் ஹிந்தி பெரும்பான்மையாக பேசப்படுவதால் தமிழர்களும் ஒரு தொடர்பு மொழியாக ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்தேன் நான். அதன் காரணமாக வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில், ஓரிரு வருடங்கள் மாலையில் கற்பிக்கப்படும் வகுப்புகளில் சொல்லித்தரப்பட்ட ஹிந்தியை வைத்துக்கொண்டு.. அவர் பேசியதை சற்று புரிந்து கொண்டு பதிலளிக்க முற்பட்டேன்.

என்னுடைய அரைகுறை ஹிந்தியை கேட்டு அவர் மகிழ்ந்தார். என்றாலும் என் பேச்சை அவர் நம்பவில்லை என்பது தெரிந்தது. எதற்காக அந்த வடநாட்டவர் வந்திருப்பார் என்று எனக்கு விளங்கவில்லை. அவருக்கு புரியும் படி அல்லது அவருக்கு புரியும் என்று நான் நினைத்துக்கொண்டதை கூறி விட்டு, பந்தல்குடி நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

லக்கி உணவகத்தை அடைந்த நேரம்; அங்கு நின்ற கொண்டிருந்த ஒரு வேன் எட்டையாபுரத்திற்கு உடனே செல்வதாகவும், பேருந்து பயணக்கட்டணம் எவ்வளவோ அதைத் தந்தால் போதும் எனவும் அதிலிருந்த ஓட்டுநர் தெரிவித்தார். விரைவில் செல்லலாம் என்கிற நம்பிக்கையில் நானும் ஏறிக்கொண்டேன். அப்போதுதான் அந்த வடநாட்டைச்சேர்ந்தவரும் என்னைப்பின் தொடர்ந்திருக்கிறார் என்று தெரிந்தது.

அவரை அழைத்து விபரம் சொன்னேன்... அவருக்கு நம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை. பயணக்கட்டணம் குறித்து அழுத்திக்கேட்டார். மிகுந்த தயக்கத்திற்கு பின்னர் ஏறிக்கொண்டார். என் அருகிலேயே அமர்ந்தார். வாகனம் செல்லும் போது அவருடன் நானாக பேச்சு கொடுக்க முற்பட்டேன். என்னுடைய அரைகுறை ஹிந்தியைத் தொடர்ந்தேன்.

நான் பார்த்திருந்த வெகுசில வடநாட்டு திரைப்படங்களைப்பற்றியும், அதில் வந்த பாடல்களைப்பற்றியும் பேச ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அவரும் என்னுடன் தயக்கமில்லாமல் உரையாட ஆரம்பித்தார். மொழிப்பிரச்சினை காரணமாக ஒவ்வொரு கேள்வியை கேட்பதிலும், பதில் அளிப்பதிலும் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

எட்டையாபுரம் வந்து சேர்ந்தோம். அப்போது பேருந்து நிலையத்தின் எதிரே இருந்த கூட்டுறவு பால்பண்ணையின் தேநீர் விடுதி மிகவும் பிரபலமாக இருந்தது. அங்கு உண்மையாகவே பால் நன்றாக இருக்கும். அங்கு பால் சாப்பிட அவரையும் அழைத்தேன். அவர் மறுத்து விட்டார்.

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் பேருந்து சாலையில் வந்து நின்றது. நாங்களும் அதில் ஏறிக்கொண்டோம். எதையாவது பேச வேண்டும் என்பதற்காகவே நான் சென்ற வடநாட்டு சுற்றுப்பயணத்தைக் குறித்தும், அதில் நான் கண்ட இடங்களைப்பற்றியும் கதையளக்க ஆரம்பித்தேன். ஒரிசாவில் இருக்கும் புவனேஸ்வரில் இருப்பதாகவும், தூத்துக்குடியில் உள்ள ஒரு நபரை சந்திக்க செல்வதாகவும் கூறினார். கதைத்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

தூத்துக்குடி நகரை பேருந்து நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர் வந்த நோக்கத்தை சொன்னார். தூத்துக்குடியில் உப்பு வாங்க வந்திருப்பதாக சொன்னார். வழக்கமாக அவர் தந்தை வருவார் என்றும், அவருக்கு உடல்நலமில்லாததால் அவர் வந்திருப்பதாகவும் சொன்னார். அடுத்த தினம் சம்பந்தப்பட்ட உப்பு விற்பனையாளரிடம் பேசி முடித்து விட்டால், புகைவண்டி மூலம் ஒரிசாவிற்கு உப்பு வந்து விடும் என்கிற விபரத்தை விளக்கினார். ஹோட்டல் அசோக்பவனில் தங்க அறை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார். இதை ஏன் முன்னரே சொல்லவில்லை என்று வினவினேன். அதற்கு அவர் யாரையும் தெரியாமல் நம்பக்கூடாது என்பதால் முழு விபரத்தையும் சொல்லவில்லை என்றார்.

பேருந்து தூத்துக்குடி பேருந்து நிலையத்தை அடைந்தது. அதிலிருந்து இருவரும் இறங்கினோம். தமக்கு உதவியதற்காக நன்றி கூறிய அவர் தனது பெயர் பிருத்விராஜ் அகர்வால் என்றும், தமது தந்தையார் பெயர் கியான்சந்த் அகர்வால் என்றும் விபரம் கூறினார். முகவரியைத் தந்து புவனேஸ்வர் வந்தால் தம்மை அவசியம் சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார். பழைய புகைவண்டி நிலையத்தின் அருகே உள்ள கடைவீதியில் யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள் என்றும் மேலதிக விபரம் சொன்னார். அவர்கள் பணக்காரர்களா என்று வினவினேன். ஆம் என்று சொல்லும் விதமாக தலையசைத்தார்.

கையிலிருந்த பழைய பையைப் பார்த்து அவருடைய உடைகள் வைத்திருக்கிறாரா என்று கேட்டேன். சிரித்துக்கொண்டே, ஒரு பாதுகாப்பு காரணமாக அந்த கோலத்தில் வந்ததாக சொன்ன அவர் அடுத்து சொன்னார் - "உப்பு வாங்குவதற்காக இதில் மூன்று லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன்". அவர் ஆரம்பத்தில் என்னை நம்பாததற்கான காரணம் எனக்கு இப்போது விளங்கியது.

thempavani
07-02-2005, 09:25 AM
"உப்பு வாங்குவதற்காக இதில் மூன்று லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன்". அவர் ஆரம்பத்தில் என்னை நம்பாததற்கான காரணம் எனக்கு இப்போது விளங்கியது.

சரத்குமார் படம் "நட்புக்காக"வில் கார் வாங்க சாக்கு மூட்டையில் பணம் கொண்டு போவாங்களே... அந்த ஞாபகம் வந்தது அண்ணா.. இப்படியும் ஒரு வழி இருக்கிறது பணம் கொண்டுபோக....மனிதருக்கு சபாஷ்!!!

பிரியன்
07-02-2005, 04:00 PM
நமது வாழ்வில் எல்லாமும் அறிவியல் விதிகளி‎ன்படியே நடப்பதில்லை .‏(அறிவியலே ஒரு விந்த தா‎ -எ.கா தொலைபேசி ) இந்த சூரிய குடும்பமே பல விந்தைகளை கொண்டது னது..நீங்கள் சொல்லுவது அறிவியல் முறைப்படி சாத்தியமில்லாமல் இருக்கலாம் அல்லது நிருபிக்க முடியாமல் இருக்கலாம். முற்றிலும் தவிர்க்க முடியாது..

இது காலங்காலமாக உள்ள நம்பிக்கைகள். தமிழ் கடவுள்களை எல்லாம் எப்போதும் கொடுரமானவர்கள்,ரத்தம் விரும்புவர்கள் எ‎ன மக்களிடம் திணித்திருக்கிறார்கள்..
முனி, காத்து கருப்பு போன்‎றவை எல்லாம் கொடுரமானவை எ‎ன்பதிலெல்லாம் எந்த உண்மையும் இ‏ல்லை.. பழந்தமிழ் காவல் தெய்வமே முனி.யாரையும் து‎புறுத்துவது அதன் வேலை அல்ல..னால் நம் மக்களீ‎ முன் ஒரு கோபமான கடவுளாக மாற்றி விட்டார்கள்.. ‏இயல்பாகவே மனிதனுக்கு இருள் என்றால் ஒருவிதமான அச்சம்..அதனால்தான் ஒளியை வழிபட்டான். அந்த கால சூழ்நிலையில் அதனால்தான் இரவு நேரங்களீல் வெளியே போக வேண்டாம் என கூறியது. அதை கேட்க வைப்பதற்காக வைத்த பெயர்தான் காத்து கருப்பு.
அவரவர் மன விகாரங்களுக்கு ஏற்ப முனியி‎ன் வடிவம் மாறும்..எனது தந்தையார் திருவரங்கத்தில் பணியாற்றும்போது இருந்த வீடு முனிஸ்வரன் கோயிலிக்கு அருகில்தான்.ஏன் அதன் பார்வை செல்ல கூடிய திசையில் அமைந்திருந்த வீடு.. அங்குதா‎ன் நான் பிறந்தேன்..ஒன்றும் செய்ய வில்லை..
கையால் நீங்கள் பார்த்தது தெய்வச்செயலே...தாரளமாய் நம்புங்கள்,
இந்த இ‏டத்தில் நானும் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
சேத்தூர் அருகே தேவதானம் எனும் மலைலப்பகுதி உள்ளது.‏. அய்யப்பன் புலிப்பால் சேகரிக்க வந்த வனப்பகுதி..அடர்ந்த காட்டு பகுதி..ஏறக்குறைய 50 ண்டுகளுக்கு முன் என் தகப்பன் வழி பாட்டனாருக்கு நடந்த நிகழ்ச்சி இது தாத்தா சித்த வைத்தியர் என்பதால் மதியம் சாமி கும்பிட்ட பி‎ன் தன் மைத்துனரை அழைத்துகொண்டு
மூலிகைகள் தேடி சென்றிருக்கிறார்கள்...நேரம் போனதே தெரியாமல் நெடுந்தோலைவு செ‎ன்‎றுவிட்டார்கள்..சூரியன் மறைய ரம்பிக்க நேரமானதை உணர்ந்தவற்களாக கீழே இற‎ங்க ரம்பித்த போது வந்த திக்கு தெரியாமல் மிகவும் குழம்பி போனவர்களாய் நி‎ன்றிருக்க எனது தாத்தாவின் தமைக்கையார்முறையான ஒரு பெண்மணி அவர்கள் பார்வையில் பட்டவாறே கீழிறங்கி போயிருக்கிறார்கள்..எ‎ன்னடா இது அக்கா மாதிரி தெரியுதே என்றவாறே அவர்கள் பின்னே இவர்களும் சென்றிருக்கிறார்கள்.. இவர்களுக்கு ஞாபகம் இருக்குமிடம் வந்தவுடன் அந்த பெண்மணி ஒரு மரத்திற்கு பி‎ன் ஒதுங்க, இவர்களும் சிறிது நேரம் காத்திருந்தும் திரும்பி வராமல் போகவே,இருப்பிடத்திற்கு வந்து பார்வதி அக்கா வந்துட்டாங்களா என்று கேட்டிருக்கிறார் என் தாத்தா.அதற்கு சொந்தகாரர்களெல்லாம் அவங்க கோயிலுக்கே வரலியே,மருதையில இருக்காங்க என்று சொல்லியிருக்கிறார்கள்..
அங்கே வந்தது யார்?.. வழி காட்டியது யார்...?
அது தெய்வத்தி‎ன் செயல் அ‎ன்றி வேறெது...??

அ‎ன்புடன்
பிரியன்

பாரதி
08-02-2005, 12:06 AM
கருத்துக்களுக்கு நன்றி தேம்பா.
அன்பு பிரியன்... விடை தெரியா விசயங்களை பகிர்வதன் மூலம் சரியான விடைகளை தேட முற்பட்டேன். உங்கள் அனுபவத்தையும் கொடுத்ததற்கு நன்றி.

gragavan
08-02-2005, 04:45 AM
Originally posted by பாரதி@Feb 5 2005, 08:30 PM
முனிப்பாய்ச்சல்....? பதில் தேடுகிறேன்.
காரணமில்லாமல்... மயிர்கூச்செரிதல் என்று சொல்வார்களே... அந்த நேரத்தில் அது எனக்கும் ஏற்பட்டது.

பிரதீப்பிடமும் இதைப்பற்றிக்கேட்டேன். இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன். இருவருக்கும் சரியான, அறிவியல்பூர்வமான பதில் இன்று வரைக்கும் கிடைக்கவில்லை!
]

பாரதி, இந்த நிகழ்ச்சியைப் பற்றி என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக எனக்கு ஆவிகளின் மீது நம்பிக்கை உண்டென்றாலும் இட்டிலிக் கொப்பரை ஆவியைத் தவிர வேறெந்த ஆவியையும் நான் பார்த்ததில்லை. யாரேனும் சொல்லித்தான் கேள்விப் பட்டிருக்கின்றேன். எனக்கு ஆவி தரிசனம் கிடைக்குமென்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை. காரணம், இறைவனின் தரினத்தை நாடுகின்றவர்களுக்கு ஆவிகள் ஒரு பொருட்டே அல்ல. "ஆரமுதுண்ணுதற்கு ஆசை கொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்துவரோ" என்பது போல. ஆவிகளைப் பற்றிய அச்சம் என்பதை விட திரைப்படங்களின் மீது வரும் அந்த திடுக் திடுக் இசையின் மீதுதான் எனக்கு கொஞ்சம் அச்சம். மேலும் திரைப்படங்களில் காட்டுகின்ற விதத்திலுள்ள அருவெறுப்பு. உங்கள் அநுபவம் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. பொதுவாக ஊர்க்காவல் தெய்வங்கள் ஊர்வலம் செல்லுமென்பார்கள். எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. ஆகையால் உங்கள் அநுபவம் அப்படிப்பட்டதாகவே இருக்குமென்று நினைக்கின்றேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

மங்கையர் கொங்கையிலே தான் தங்கையிலே அருணகிரி சொன்னதென்ன?
http://www.tamilmantram.com/new/index.php?...st=120&p=95377&

gragavan
08-02-2005, 05:01 AM
Originally posted by priyan@Feb 7 2005, 10:00 PM
நமது வாழ்வில் எல்லாமும் அறிவியல் விதிகளி‎ன்படியே நடப்பதில்லை .‏(அறிவியலே ஒரு விந்த தா‎ -எ.கா தொலைபேசி ) இந்த சூரிய குடும்பமே பல விந்தைகளை கொண்டது னது..நீங்கள் சொல்லுவது அறிவியல் முறைப்படி சாத்தியமில்லாமல் இருக்கலாம் அல்லது நிருபிக்க முடியாமல் இருக்கலாம். முற்றிலும் தவிர்க்க முடியாது..

அ‎ன்புடன்
பிரியன்


நன்றாகச் சொன்னீர்கள் பிரியன். அறிவியல் என்று நாம் கொண்டாடுவது அனைத்தையும் அளக்கும் அளவை அல்ல. அதுவும் ஒரு கட்டுக்குள் உள்ளதே. மனிதனால் படைக்கப்பட்ட எதற்குமே ஒரு கட்டுப்பாடு உண்டு. இயற்கைக்கும் இறைக்கும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆகையால் அறிவியல் பூர்வமான விளக்கங்களே அனைத்திற்கும் வேண்டுமென்று நினைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அணுவினுடைய விளக்கம் என்று அன்று சொன்னது இன்று தவறானது. இன்று சொன்னது நாளை தவறாகும். இப்படியே போய்க்கொண்டிருக்கும். அவ்வளவே அறிவியலின் வலிமை. அறிவியலை பொதுமனித வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்வதே நன்று. அறிவியலுக்கு அப்பாற்பட்டவை இவ்வுலகில் நிறைய உண்டு.

அன்புடன்,
கோ.இராகவன்

மங்கையர் கொங்கையிலே தான் தங்கையிலே அருணகிரி சொன்னதென்ன?
http://www.tamilmantram.com/new/index.php?...st=120&p=95377&

பாரதி
08-02-2005, 08:58 PM
விரிவான விளக்கத்திற்கு நன்றி இராகவன்.
எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராய வேண்டும் என்று விரும்புபவன் நான். முடிவு காணாமல் திணரும் போதுதான் கஷ்டமாக இருக்கிறது. மேலும் ஒரு நண்பர் சொன்னார்.. ஒரு வேளை அது மீத்தேன் வாய்வாக இருக்கலாமோ என்று..! ஆனால் நேரில் பார்த்த மிக ஒழுங்கான, சீரான, வேகமான ஒளியை பார்த்தபின் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே உறுதியாக தோன்றுகிறது.

pradeepkt
09-02-2005, 03:20 AM
அறிவியலுக்கு அப்பாற்பட்டவை, மனித சக்தியால் அறிய முடியாதவை என்றுமே உண்டு.
நம்மை மீறிய சக்திக்கு நாம் "கடவுள்" எனப் பெயர் சூட்டி இருக்கிறோம். மற்றோர் வேறு பெயர் கொள்ளலாம்.
பாரதி, அனைத்துக்கும் ஒரு அறிவியல் காரணி இருக்கலாம், அதை நாம் இப்போது கண்டு பிடிக்க இயலாமலும் இருக்கலாம். அறிவியலோ ஆன்மீகமோ அதனால் நமக்கும் நாம் சார்ந்துள்ள சமூகத்துக்கும் ஏதேனும் நன்மை ஏற்படுவதென்றால் அது ஏற்புடையதே என்பது என் கருத்து.

அன்புடன்,
பிரதீப்

gragavan
09-02-2005, 07:36 AM
Originally posted by பாரதி@Feb 9 2005, 02:58 AM
விரிவான விளக்கத்திற்கு நன்றி இராகவன்.
எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராய வேண்டும் என்று விரும்புபவன் நான். முடிவு காணாமல் திணரும் போதுதான் கஷ்டமாக இருக்கிறது. மேலும் ஒரு நண்பர் சொன்னார்.. ஒரு வேளை அது மீத்தேன் வாய்வாக இருக்கலாமோ என்று..! ஆனால் நேரில் பார்த்த மிக ஒழுங்கான, சீரான, வேகமான ஒளியை பார்த்தபின் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே உறுதியாக தோன்றுகிறது.]
மீத்தேன் வாயுவாக இருக்க வாய்ப்பில்லை பாரதி. எட்டயாபுரத்தில் பாரதியின் கவி மழைதான் பெரிதே தவிர, வான் மழையல்ல. மீத்தேன் உருவாக தொடர் மழையும் சதுப்பு நிலமும் கதுப்புச் சூழலும் தேவை. இது ஏதோ தெய்வாதீனமான செய்லென்றே தோன்றுகின்றது.

என்னுடைய சிறுவயதில் தீபாவளிக்கும் எனக்கும் ஒரு சொல்லாப் பகை பொல்லாத்தனமாக இருந்து வந்திருக்கின்றது. ஒவ்வொரு தீபாவளியிலும் ஏதேனும் தீயதாக நடந்திருக்கிறது. உடல் நலக் குறைவு, பட்டாசு விபத்து என்று ஏதாவது ஒன்று நடந்தே வந்திருக்கிறது. அந்த வருடம் (வருடம் நினைவில்லை) எங்கள் ஊரில் இருந்தோம். எங்கள் வீடுகளில் உறவு முறைகளில் பெண்கள் கேதார கௌரி விரதெமென்று வைப்பார்கள். விளாத்திகுளம் பக்கத்தில் புதூர் எங்கள் சொந்த ஊர். அருப்புக்கோட்டை விளாத்திகுளம் மெயின் ரோடு புதூர் வழியாகச் செல்லும். அந்தச் சாலையின் ஓரத்திலிருந்த பஞ்சாலையின் முன்னே இருந்த ஒரு மரத்தடியில்தான் எப்பொழுதும் பூசை நடக்கும். அதுவும் தீபாவளி இரவன்று. பஞ்சாங்கம் பார்க்க மாட்டார்கள். பெண்களாகக் கூடிச் சென்று களிமண்ணில் அம்மனை பாவையாக்கி அதற்கு பூசனையிடுவார்கள்.

சின்னப் பையன்கள் நாங்கள் பின்னாலே சென்று வெடிகளை வெடித்தும் கும்மரிச்சமிட்டும் விளையாடிக் கொண்டிருப்போம். அன்றைய தினம் எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. இரவும் வந்து விட்டது. சரி. தீபாவளி நம்மை மன்னித்து விட்டது போலும் என்று நினைத்திருந்தோம். பூசனை முடிந்தது. எல்லாரும் மரத்தை வலம் வந்து வணங்கினார்கள். நானும் அவர்களோடு வலம் வந்தேன். பூசையில் வைத்த அதிரசங்களும் அச்சு வெல்லக்கட்டிகளும் நாசியையும் பசியையும் சீண்டின. இருந்தாலும் பக்தியோடு (அந்த வயதில் ஏது பக்தி. இரண்டு கையையும் கூப்பிக் கொண்டால் அதுதான் பக்தி.) சுற்றி வந்தேன். திடீரென்று அலறினேன். வலது காலில் தோன்றிய வலி பெருகி மேலே ஏறியது. என்னவென்று தெரியாமல் எல்லாரும் தூக்கிப் பார்த்தார்கள். என் காலிலிருந்து ரத்தம் பெருகி வழிந்தது. ஒரு கண்ணாடித் துண்டு ஆழமாகக் கிழித்திருந்தது. அத்தனை பேர் எனக்கு முன்னால் போனார்கள். மொத்தம் மூன்று சுற்றுகள். நானும் இரண்டு சுற்றுகள் முடித்து விட்டேன். கடைசியில் இப்படி.

நல்ல வேளை இப்பொழுதெல்லாம் அப்படி ஆவதில்லை. :-)

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
10-02-2005, 05:41 AM
மீண்டும் உங்கள் அனுபவத்துடன் தந்த கருத்துக்கு மிக்க நன்றி. நானும் அந்த நண்பரிடம் அதைத்தான் தெரிவித்தேன்.
சில கேள்விகள் விடை தெரியாமலே போய்விடுகின்றன..ம்ம்...
என்னுடைய குறிப்புகள் தொடரும் போது.. மேலும் சில விவாதங்கள் வரக்கூடும்.
நன்றிகள் பல.

மன்மதன்
14-02-2005, 06:55 AM
சிம்பிள் மேட்டரை கூட சுவாரஷ்யமாக சொல்லும் ஆற்றல் பாரதிக்கு உண்டு.. தொடர்ந்து எழுதுங்க அண்ணாச்சி..
அன்புடன்
மன்மதன்

பாரதி
02-04-2005, 08:43 PM
வீடு

ஊரில் சொந்தமாக வீடு இருந்தாலும், தூத்துக்குடியில் வேலைக்கு சேர்ந்த பின்னர் நிறுவனத்திற்கு சொந்தமான வீடுகளில் இடம் கிடைக்க பல வருடங்கள் ஆகக்கூடும் என்பதால் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டலாம் என்று யோசனை பல நண்பர்களால் எனக்கு வழங்கப்பட்டது.

ஊரிலேயே வீடு கட்டலாமா...? அல்லது மதுரையில் வீடு கட்டலாமா என்ற எண்ணமும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் பின்னர் அதை நிராகரித்து விட்டேன். நண்பர்கள் சந்தானம், செவ்வேள் ஆகியோரின் ஆலோசனை பேரில் தூத்துக்குடி நகரத்தில் வீடு கட்ட இடம் பார்த்தேன். சில இடங்கள் வாங்கலாம் போல இருந்தாலும் விலை அதிகமாக இருந்தது.

அப்போது சுந்தரம் நகரில் நண்பர்களுடன் வசித்து வந்தேன். அப்போதுதான் அத்திமரப்பட்டி ரோட்டில் புதிதாக அமைத்திருக்கும் மனையடியில் ஒன்றை வாங்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சில மாதங்களுக்கு முன்பாக கருவேலி மரங்களாக இருந்தது அந்த இடம். அதே இடத்தை சில மாதங்கள் முன்னர் "இந்த இடத்தை எவனாவது செண்ட் மூவாயிரம் கொடுத்து வாங்குவானா..?" என்று எண்ணிய அதே என்னுடைய எண்ணம் இப்போது என்னைப்பார்த்து நகைத்தது.

நான் பணி புரிந்த நிறுவனத்தின் உணவகத்தில் தளவாய் என்பவர் பணி செய்து வந்தார். அவரும் அவருடைய உதவியாளராக அங்கே இருந்த முருகன் என்பவரும் சேர்ந்து காலி இடத்தை வாங்கி மனையடியாக மாற்றி விற்பனை செய்து வந்தனர்.

அந்த இடத்தில் விற்காமல் இருந்த கடைசி மனையடி அதுதான் என தளவாய் சொன்னார். பெரும்பாலும் நிறுவனத்திலேயே பணிபுரியும் நண்பர்களே மற்ற இடங்களை வாங்கி இருந்தனர்.

அந்த மனையடி கடைசியாக இருந்தது. மனையடியின் பின்பக்கம் பனைத்தோப்பு. வலதுபுறம் ஒரு பழைய வீடு. எதிரே பத்தடி தெரு. இடது பக்கம் கண்ணன் வாங்கியிருந்த இடம். அந்த இடம் கிட்டத்தட்ட ஒரு "ப" வடிவத்தில் அமைந்த காலனி போல் அமைந்திருந்தது. க்ட்டத்தட்ட சதுரம் போல ஐந்து செண்டில் அமைந்த அந்த மனை ஓரளவுக்கு மனதுக்கும் பிடித்திருந்தது. காற்றோட்டம், பாதுகாப்பு வசதி போன்றவை பரவாயில்லை என்பதாகவும் தோன்றியது.

ஒரு வழியாக பேரம் பேசி, நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து சுமார் இருபத்தி எட்டாயிரம் பி.எப் கடன் பெற்று, பத்திரம் முடிக்க கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஆனதாக நினைவு. வீடு கட்ட நிறுவனத்தில் கடனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். வீடுகட்ட பிரபலமாக இருந்த மலர் கன்ஸ்ட்ரக்ஷனை அணுக கண்ணன் வலியுறுத்தினான். பிரதீப்பும் நானும் அங்கே சென்று பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நானும் பிரதீப்பும் யோசனை செய்து ஒரு உத்தேச திட்டத்தை சொன்னோம். கீழ் வீட்டின் ஒரே தளத்திலேயே இரண்டு படுக்கை அறைகள் அமைவதாக - அதாவது ஒரு படுக்கையறை தரை மட்டத்திலும், மற்ற படுக்கையறை அதற்கு மேலாகவும் - திட்டம் போட்டிருந்தோம். அதனால் கீழ் வீட்டின் ஹால் கூரை சுமார் 17 அடி உயரத்தில் வருவதாக ஆனது. (இதை எழுத்தில் விளக்குவது சற்று சிரமம் தரக்கூடியது. அதாவது வீட்டினுள்ளேயே படிக்கட்டுகள் மூலமாக படுக்கையறைக்கு செல்வதாக அமைந்திருக்கும்). 16 * 12 அடி என்கிற அளவில் வரவேற்பறையும், 12*12 அடி என்கிற அளவில் படுக்கையறைகளும், 16* 9 அடி என்கிற அளவில் சமையலறையும் இருப்பதாக திட்டம் போட்டோம். ஒரு படுக்கையறை குளியல் மற்றும் கழிப்பறை இணைந்ததாக இருந்தது. ஒரு பரண், தேவையான இடங்களில் பொருட்களை வைக்க இடம்... இப்படி எல்லாவற்றையும் யோசித்து யோசித்து அமைத்தோம். ஆனால் இங்கு ஒனௌ சொல்லியாக வேண்டும். வாஸ்து போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது என்பதால் வசதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு திட்டம் அமைத்தோம். பின்புறம் தோட்டத்திற்கு செல்ல ஒரு வாசலும் அடங்கி இருந்தது. உத்தேச வரைபடமும் தயாரானது. கீழே பெரிய வீடாகவும், மேலே ஒரு சிறிய குடித்தனம் இருக்கக்கூடியதாகவும் வரைபடம் அமைந்திருந்தது. தோற்றமும் பிடித்திருந்தது.

விரைவில் வேலை ஆரம்பித்து விடலாம் என்று பொறியாளர் சொன்னார். ஒரு பிப்ரவரி மாதத்தின் நல்ல நாளில் (?) பூமிபூஜை போடப்பட்டதாகவும் நினைவு. முதலில் வீடு கட்ட ஒரு தண்ணீர் தொட்டி தேவைப்படும் என்பதால், வீட்டின் பின் மூலையில் ஒரு பெரிய கிடங்கு தோண்டி, அதையே பின்னர் "செப்டிங்" தொட்டியாக மாற்றிக்கொள்ளலாம் என்று திட்டம்.

இதே நேரத்தில் வீட்டில் மரக்கன்றுகளை ஆரம்பத்திலேயே நட்டால் நல்லது என்பது பிரதீப்பின் ஆலோசனை. ஒரு மாதுளை கன்று, மூன்று தென்னங்கன்றுகள், ஒரு அரைநெல்லி மரக்கன்று , இரண்டு வேப்பமரக்கன்றுகள் ஆகியவற்றை நர்சரியில் இருந்து வாங்கி வந்தோம். தேவையான ஆழம் தோண்டி, உரங்கள் இட்டு மரங்களை நட்டோம். வீட்டு முகப்பில் இரண்டு வேப்பமரக்கன்றுகள் நடப்பட்டன.

தண்ணீர் தொட்டி கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு கட்டிடத்தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்த்தனர். சில நாட்களில் ஆழமாக கிடங்கு தோண்டப்பட்டு அதில் தொட்டியும் கட்டப்பட்டது. குறிப்பிட்ட நாட்கள் கழித்து தண்ணீர் ஊற்றப்பட்டது. அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால், தண்ணீர் ஊற்றப்பட்ட தொட்டியில் பெரிய விரிசல்.!!

gragavan
04-04-2005, 04:50 AM
ஆகா! மீண்டும் தூத்துக்குடி. வாங்க பாரதி வாங்க. ரொம்ப நாளாச்சேன்னு பாத்தேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. படிக்கிறவன் நெஞ்ச அப்பீட்டுப் போயிட்டீரேய்யா!

தண்ணீர் டேங்க் கட்டி அதையே செப்டிக் டேங்க்காக மாற்றுவது ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படுவது போலும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
04-04-2005, 12:41 PM
பாலு மகேந்திராவின் வீடு போல இது பாரதியின் வீடா???

பாரதி
04-04-2005, 03:47 PM
கருத்துக்கு மிகவும் நன்றி இராகவன். படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்த இடமல்லவா..? அதுவும் இல்லாமல் இதுவரை வாழ்ந்த நாட்களில் பெரும்பான்மையான நாட்கள் இருந்த இடமும் தூத்துக்குடிதான். எப்போவாவது நேரம் கிடைக்கும் போது தோன்றுவதை எழுதுவது என்பதுதான் என் வழக்கம் என்பது உங்களுக்கும் தெரிந்ததுதானே..?

ஹஹஹா... இனியன்... பெரும்பாலோனோர் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம்தான்.. என்ன..? ஒவ்வொருவரின் அனுபவமும் அலாதி.. நினைவில் உள்ளதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.. அவ்வளவே.. நேர்த்தியாக எழுத வேண்டுமெனில் வார்த்தைகளை நிறைய செதுக்க வேண்டும்... நான் அவ்வாறு செய்யாமல் தோன்றுவதை மட்டுமே எழுதுகிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

gragavan
05-04-2005, 05:01 AM
எனக்கும் தூத்துக்குடி மேல் பிரியமுண்டு பாரதி. பிறந்து ஒரு வயது வரை இருந்து வளர்ந்த ஊர். அந்த ஊரின் தாக்கம் என்னுடைய பல நடவடிக்கைகளில் உண்டு. இதோ இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றேன். ஊருக்குள் பல மாற்றங்கள். ஆனால் ஊர் அப்படியே இருக்கிறது. எத்தனையோ பிசுக்கோத்துகள் தின்றிருக்கிறேன். ஆனால் ஞானம் பேக்கரி சோளமாவு பிசுக்கோத்து போல வருவதில்லை. அதைக் குளுகோசு பிசுக்கோத்து என்பார்கள். நேராக ஞானம் பேக்கரி சென்று மக்ரூனும் அரைக்கிலோ குளுக்கோசு பிசுக்கோத்தும் வாங்கிய பிறகுதான் நெஞ்சில் அமைதி வந்தது.

எத்தனை மார்க்கட்டுகள் இருக்கின்றன......நிறையப் பார்த்திருக்கிறேன். இந்தியா ஐரோப்பா....அமெரிக்கா என்று...ஆனால் தூத்துக்குடி சின்னக்கோயில் மார்க்கட்டுக்குள்ளே போனாலே ஒரு அமைதியான இன்பம் வரும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு......
http://www.tamilmantram.com/new/index.php?...011&#entry97011

thiruarul
05-04-2005, 03:08 PM
மதிப்பிற்குரிய பாரதி அவர்களது உள்ளத்து நினைவலைகள் ஒருபோதும் தந்தையர் நாட்டிற்கு வந்திராத என்போன்றோருக்கு அதன் சிறப்பைச் சொல்லும். மிகச்சிறப்பான வகையில் இப்பதிவினை நகர்த்திச் செல்லும் பாரதி அவர்கள் சொல்லேருழவராயிருக்கத் தகுதி படைத்தவர். எனது உளமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன் திருவருள்

பாரதி
05-04-2005, 04:21 PM
அன்பு இராகவன்... உங்கள் உள்ளக்கிடக்கையை இங்கே பகிர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இப்போதும் என்னுடைய பல நண்பர்கள் அங்கேதான் வசிக்கிறார்கள்.. பிசுக்கோத்து.. மக்ரூன்.... இன்னும்.. இன்னும்... நானும் நினைவலையில் நனைகிறேன் நண்பரே... தொடர்ந்து கருத்தளித்து வரும் உங்களுக்கு என் நன்றி.

மதிப்பிற்குரிய திருவருளின் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத்தருகிறது. அன்பு நண்பரே... உங்கள் பாராட்டு உங்களின் பெருந்தன்மையைக் குறிக்கிறது. ஆனால் அதற்கு என்னை தகுதியாக்கி கொள்ள வேண்டுமே என்கிற கவலைதான் இப்போது அதிகமாக இருக்கிறது. விடுமுறை நேரத்தில் முடிந்த அளவிற்கு தர முயற்சிக்கிறேன். மிக்க நன்றி. நீங்கள் விரும்பினால் இங்கு வந்து செல்லலாமே திருவருள்?

பாரதி
05-04-2005, 04:27 PM
வீடு - 2

கவனக்குறைவான அல்லது தரக்குறைவான கட்டுமான பணி என்று எனக்கு தோன்றியது. முதலில் ஆரம்பித்த இது போன்ற சாதாரண வேலையிலேயே பிரச்சினை என்றால் கட்டிடப்பணி எப்படி இருக்கும் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. எனவே பொறியாளரிடம் நேரடியாக பேசினேன். "இது போன்ற சாதாரண வேலையில் பிரச்சினை என்றாலும், பின்பு வீடு கட்டும் போது ஏற்படும் பிரச்சினைகள் வேண்டுமென்றே கவனக்குறைவாக செய்வதாக எனக்கு தோன்றும். வீணான சச்சரவு உண்டாகும். எனவே இது வரை நடந்த வேலைக்கான பணத்தை தந்து விடுகிறேன். அநாவசியமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல்.. வேறு நபரிடம் வீடு கட்டும் பணியை ஒப்படைத்து விடுகிறேன்" என்று சொன்னேன்.

பொறியாளரும் மிகவும் நாகரீகமாக சொன்னதை ஒப்புக்கொண்டார். தர வேண்டிய பணத்தை கொடுத்து முடித்தேன். மறுபடியும் யாரிடம் வீடு கட்ட கேட்கலாம் என்ற போது நண்பர்கள் "சேகரன்" என்கிற நபரை பரிந்துரைத்தார்கள்.

அவர் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவரல்ல... ஆனால் அதில் அதிகம் அனுபவ அறிவு இருப்பவர். மிகவும் நல்லவர் - இப்படியெல்லாம் சொன்னார்கள். நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவர் கட்டிய வீடுகள் சிலவற்றை பார்வையிடச் சொன்னார்கள். நானும் பார்த்தேன். பார்வையிட்டதில் எனக்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் வீடுகளெல்லாம் நன்றாக இருப்பது போலதான் எனக்கு தோன்றியது.

அவரிடம் பேசிய பின்னர் மறுபடியும் வீட்டுத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்களை செய்யலாம் என்று சொன்னார். சற்று யோசித்த பின்னர் அதன்படியே செய்யலாம் என்று ஒப்புக்கொண்டு, புது வரைப்பட திட்டம் தயாரித்து, பஞ்சாயத்தில் ஒப்புதல் பெற்று, நிறுவனத்தில் காண்பித்து வீடு ஆரம்பித்து விடலாம் என்கிற நிலை வந்தது.

சந்தானம் அண்ணாச்சி, செவ்வேள் முன்னிலையில் அவருடைய வீட்டில் சேகரனிடம் புதிதாக வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

வீடு கட்டும் வேலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, ஒரு சிறிய ஓலைக்குடிசை ஒன்றை போட்டால் நல்லது என்று சேகரன் சொன்னார். அதன் படியே வீட்டுக்கு முன்பாக ஒரு சிறிய குடிசை போடப்பட்டது. ஆரம்பத்தில் வீடு கட்ட தேவையான சில கருவிகள், சிமெண்ட் போன்றவற்றை வைக்க அது உபயோகிக்கப்பட்டது.

அவர் வீடு கட்டும் போது ஒரு பகுதியை கிழக்கு பக்கமாக ஒரு இஞ்சாவது இழுத்து (!) கட்ட வேண்டும் என்று சொன்னார். பின்பு அஸ்திவாரத்திற்கும், செங்கல் கட்டடத்திற்கும் வித்தியாசம் தெரியாதபடி புதுமுறையில் அமைக்கப் போவதாகவும் சொன்னார்.

வீடு கட்டும் போது, முழுவதும் உடனிருந்து பார்த்துக்கொள்ள, விளாத்திகுளத்திற்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து ஒருவரை அவரே அழைத்து வந்தார். அவர் ஒரு இளைஞர். கடினமான உழைப்பாளியாக தென்பட்டார். அவர் நல்ல முறையில் அங்கேயே தங்கி இருந்து வேலைகளை கவனித்து வந்தார்.

இந்த குறிப்பிட்ட சில நாட்கள் பழக்கத்திலேயே சேகரனை நான் முழுவதுமாக நம்ப ஆரம்பித்து விட்டேன். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த தொட்டியை உடனடியாக பழுது பார்த்தார். சுறுசுறுப்பாக அடிக்கடி வீடு சம்பந்தமாக, வீடு கட்டத்தேவையான தண்ணீரை வண்டிகள் மூலமாக எப்படி கொண்டு வருவது சம்பந்தமாக, வீடு கட்டுவதை எப்படி செய்யலாம் என்று... அடிக்கடி ஆலோசனை செய்வது என்று... அவரது நடவடிக்கைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

நான் எந்த அளவிற்கு அவரை நம்பினேன் என்றால், அஸ்திவாரம் போடும் போது நான் நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுப்பயணம் செல்லும் அளவுக்கு...! கொடைக்கானலில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட தரை மட்டத்திற்கு சற்று மேலே கல் கட்டப்பட்டிருந்தது.

gragavan
07-04-2005, 05:47 AM
என்ன அடித்தளம் போடுகையில் சுற்றுலாவா..அடடா! அப்புறம் என்னவாயிற்று?

அண்ணா...உங்கள் வீடு தூத்துக்குடியில் எங்குள்ளது? அதாவது எந்த ஏரியாவில்?

அன்புடன்,
கோ.இராகவன்

பாரதி
09-04-2005, 12:49 AM
வீட்டின் வரைபடத்தின் படி, முன்பகுதி அஸ்திவார கல்கட்டிடம் சற்று குறைவாகவும், பின்பகுதி சற்று உயரமாகவும் கட்டப்பட்டிருந்தது.

வீடு கட்டும் போது மேற்பார்வையிடவும், பொருட்களை வைத்துக்கொள்ள வசதியாகவும், அதே தெருவில் வீடு கட்டி குடியேறியிருந்த நண்பர் விஜயனின் பின் வீட்டில் வாடகைக்கு வந்தேன். அம்மாவையும் உடன் அழைத்து வந்து விட்டேன். அப்பா அவ்வப்போது வந்து செல்வார்.

அஸ்திவாரத்திற்கு, செங்கல் கட்டுக்கு, கான்கிரீட்டுக்கு, சுவர் பூச்சுக்கு... என்று தனித்தனியாக...எவ்வளவு மணலுக்கு எவ்வளவு சிமெண்ட் கலக்க வேண்டும் என்றெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருந்தது. அதை அவ்வப்போது கவனிப்பதுதான் பெற்றோர்களின் முக்கிய கடமையாக மாறி விட்டது.

வீடு கட்டும் செங்கல் வாங்க சீவலப்பேரியில் தயார் செய்யப்படும் செங்கற்கள்தான் நன்றாக இருக்கும் என்று அங்கே உள்ள ஒரு செங்கற்சூலைக்கு அழைத்துச் சென்றார் சேகரன். பழையகாயல், ஆத்தூர், ஏரலைக் காட்டிலும் அங்கே தயாரிக்கப்படும் கற்கள்தான் சிறந்ததாம்.. நிறமும் நன்றாக இருக்கும் என்று அவர்தான் சொன்னார். சூலையில் செங்கற்களுக்கும் நன்றாகத்தான் இருந்தன. எத்தனை 'லோடு' (லாரி மூலம் ஒரு முறை கொண்டு வரப்படும் செங்கற்களின் அளவு ஒரு லோடு) தேவை என்பதை ஏறக்குறைய கணக்கிட்டு முன்பணம் எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம்.

வீடு கட்ட நல்ல நீர் அத்திமரப்பட்டியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தேவையான சிமெண்ட் அத்திமரப்பட்டி ரோட்டிலேயே இருந்த ஒரு சிமெண்ட் கடையில் தேவையான போது எல்லாம் வாங்கப்பட்டது. வேலை எல்லாம் நன்றாகவே நடந்ததாகத்தான் நினைவு.

வரைபடம் எல்லாம் முன்னேற்பாடாக இருந்தாலும், வீடு கட்டும் போதுதான் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன என்பதெல்லாம் தெரிய வந்தன. வீட்டினுள்ளேயே இருந்த, (மாடி) படுக்கையறைக்கு வீட்டின் உள்ளே இருந்து ஒரே வரிசையில் மாடிப்படி மூலம் செல்வதாக வரைபடம் இருந்தது. ஆனால் நடைமுறையில் அவ்விதம் போட்டால் மாடிப்படி செங்குத்தாக இருப்பதாக அமையும் என்று தோன்றியது. அதற்காக மாடிப்படி முதலில் ஏறி ஒரு இடத்தில் திரும்பி, பின்னர் மறுபடி ஏறி படுக்கையறையை அடைவதாக மாற்ற வேண்டியதாயிற்று. இதனால் ஹாலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மாடிப்படி அடைத்துக்கொண்டது.

இதே போல வீட்டின் பின் வாசல் நேராக சமையலறையிலிருந்து செல்வதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்விதம் இருந்தால் சமையலறையில் பாதியளவு உபயோகிக்க முடியாததாகி விடும் என்பது தெளிவாக தெரிந்தது. அதனால் குளியலறையில் மாற்றம் செய்து, அதன் பக்கவாட்டில் பின்வாசல் அமைக்கப்பட்டது.

தேவையான இடங்களில் பொருட்களை வைப்பதற்கான தளங்கள் கட்டப்பட்டன. சமைலறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பரண் அமைந்தது. அதை கட்டிய பின்னர் அதை பூஜையறையாக்க வேண்டும் என்று அப்பா சண்டை போட்டது தனிக்கதை..!

வீட்டின் வாசல் நிலைக்கு தேக்கு மரமும், ஜன்னல்களுக்கு மலேசிய கோங்கு மரமும் உபயோகிக்கப்பட்டது.

வீட்டை பார்வையிட எப்போது வந்தாலும், எங்கள் வீட்டிலேயே எப்போதும் உணவருந்தும் அளவுக்கு அவருடனான நட்பு வளர்ந்திருந்தது. அவ்வப்போது அவருக்கு தரும் பணம் எவ்வளவு என்பதை மட்டும் நாட்குறிப்பில் குறித்து வந்தேன்.

பக்கத்தில் கண்ணன் வீட்டு கட்டிடமும் கட்டப்பட்டு வந்தது. அவன் மாடிக்கு செல்லும் சுவர் தவறுதலாக பொது இடத்தில் கட்டப்பட்டு விட்டது. அதை நான் பெரிது படுத்தவில்லை. இருந்தாலும் சேகரன் விடவில்லை. பிற்பாடு பிரச்சினைகள் வரும் என்று வாதிட்டார். மறுபடியும் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து மாடி வீட்டுக்கு செல்ல வேண்டிய மாடிப்படிகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டியதானது. அப்போது கட்ட வேண்டிய மாடிப்படியை பொதுசுவற்றில் நானும் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவ்வாறே செய்தார்.

gragavan
11-04-2005, 04:57 AM
ஒரு வீடு. எத்தனை பிரச்சனைகள். அடேங்கப்பா! எத்தனை யோசிக்க வேண்டியிருக்கிறது. எவ்வளவு கவனிப்பு தேவையிருக்கிறது. உங்கள் வீடு வளர்ந்த கதையும் சுவாரசியமாகவே வளர்கிறது பாரதி.

அன்புடன்,
கோ.இராகவன்

அதிர்ச்சியும் குரங்காட்டமும்....
http://www.tamilmantram.com/new/index.php?showtopic=4891

பாரதி
13-04-2005, 08:33 AM
வீடு - 4

வீட்டை பார்த்து வந்த நபரும் நல்ல முறையில் தொடர்ந்து கட்டிடத்திற்கு தண்ணீர் தெளிப்பது, கட்டிடத்திற்கு தேவையான பொருட்களை பராமரித்து வருவது போன்றவற்றை சிறப்பாகவே செய்து வந்தார். அவர் சில நேரம் மட்டுமே எங்கள் வீட்டில் உணவருந்தினார். மற்ற நேரங்களில் உணவகத்திலேயே உணவு உட்கொண்டார்.

அப்போது வீடு கட்டும் பணிகளுக்கு தண்ணீர் தெளிக்கவும், பிற்பாடு மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றவும் வசதியாக இருக்கும் என ஒரு மோட்டாரை சுமார் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தோம். அது ஓரளவுக்கு பயனுள்ளதாகவே இருந்தது.

சமைலறை மேடையில் கடப்பா கற்கள் பதிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் சேகரன் கான்கிரீட் மூலமே அவ்விதமான மேடை அமைக்க முடியும் என்றும் கடப்பா கற்கள் போன்றே தோற்றம் தரும் விதமாக கருப்பு வண்ணத்தில் நன்றாக செய்து தருவதாகவும் சொன்னார். அவ்விதம் அமைக்கப்பட்ட மேடையில் சமையல் வாயு செல்லும் குழாய்க்கான துளையும் அமைக்கப்பட்டது. பலசரக்கு சாதனங்கள் வைக்க பல சிறிய அடுக்குகளும் அமைக்கப்பட்டன. சமையலறையில் இருந்து புகை வெளியேற ஜன்னல்களும் அமைக்கப்பட்டன.

எல்லா அறைகளும் நல்ல வெளிச்சம் தரக்கூடிய வகையிலும், காற்றோட்டம் இருக்கும் வகையிலும் சன்னல்கள் பெரியதாக அமைக்கப்பட்டன.

இப்படியாக வீடு கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வீடு கட்டும் பணியாளர்கள் குறித்து தொடர்ந்து என்னிடம் குறை சொல்லி வந்தனர். கீழே நின்று கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே சிமெண்ட் கலவையை மேலே போடுவதாகவும், அடிக்கடி சொல்வதைக் கேட்பதில்லை என்றும் குறைப்பட்டனர். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனினும் இது தொடர்ந்ததால் மிகவும் கவலைப்பட்டேன். சேகரனிடமும் இதைப்பற்றி சொன்னேன்.

கான்கிரீட் அமைக்க தேவையான மரப்பலகைகள் பொருத்துவதை "செண்ட்ரிங்" என்று அழைத்தார்கள். அதை அமைப்பதற்கு முத்தையாபுரம் தோப்பில் இருந்த ஒரு நபர் அமர்த்தப்பட்டார். அவர் சேகரனுக்கு கொஞ்சம் தூரத்து உறவு என்பதைப் போல அவர்களின் பேச்சு புலப்பட்டது.

மரப்பலகைகள் பொருத்த ஆரம்பித்த அந்த நபர் பாதி வேலைக்கு பின் வரவில்லை.. அவரை தேடிப்போகும் நேரம் எல்லாம் வீட்டிலும் இருப்பதில்லை. நிறைய குடிப்பவர் என்றும் அறிந்தேன். ஏற்கனவே ஒரு நபர் ஆரம்பித்த பணி என்பதால் பொதுவாக மற்றவர்கள் வந்து பணி செய்ய மாட்டார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. விடாமல் அவர் வீட்டுக்கு சென்று ஒரு வழியாக மரப்பலகைகள் அமைக்கும் பணியை அவர் முடித்தார்.

கான்கிரீட் அமைக்கும் முன்னரே எந்த எந்த இடங்களில் மின் விளக்குகள் வர வேண்டும், மின் விசிறிகள் வர வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு அதற்கு தேவையான பிளாஸ்டிக் குழாய்கள் தகுந்த முறையில் பொருத்தப்பட்டன. கூடவே தொலைபேசி கம்பி வருவதற்கான குழாயும், மாடியில் இருந்து ஆண்டனாவிலிருந்து தொலைக்காட்சிக்கு வரும் கம்பி வருவதற்கான குழாயும் தனித்தனியே சுவற்றிலும், கான்கிரீட் உள்ளேயும் அமைக்கப்பட்டன. இதே போல் சமைலறை, குளியலறை, கழிவறை ஆகியவற்றிற்கு செல்ல வேண்டிய தண்ணீர்குழாய்களும் அமைக்கப்பட்டன.

கான்கிரீட் தளம் அமைக்கும் போது உடனிருந்து பார்வையிட்டேன். கற்களினிடையில் கொஞ்சம் செங்கல் துண்டுகள், குப்பைகள் தென்பட்டன. அதையெல்லாம் அகற்றும் படி சொன்னேன். அங்கு பணி செய்தவர்கள் பேருக்கு அப்படி செய்வது போல பாவனை மட்டுமே செய்தனர். பின்பு நானே அதையெல்லாம் அகற்ற ஆரம்பித்தேன். அதன்பின்னர் அவர்களும் கொஞ்சம் ஒத்துழைத்தனர்.

கான்கிரீட் பணி நடக்கும் தினம் எத்தனை பேர் வேலை செய்தாலும் அனைவருக்கும் திருப்தியாக உணவும் நாம் வழங்க வேண்டுமாம். உணவகத்தில் சொல்லி தேவையானவற்றை தருவித்தோம். கான்கிரீட் பணி முடிந்த பின்னர் தன் மேல் சிறியதாக "பாத்தி" கட்டி தண்ணீர் தேங்குவதற்கான (க்யூரிங்) ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

தினமும் காலையும் மாலையும் கான்க்ரீட்டுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது பெய்த சிறு மழையும் நன்றாக உதவியது. வீட்டில் பதிக்க மொஸைக் கற்கள் தூத்துக்குடியில் வாங்கினோம். வீட்டின் பூச்சு ஓரளவுக்கு சொர சொரப்பாக இருந்தால் வர்ணம் பூச்சு நன்றாக இருக்கும் என்று கூறி அவ்விதமே செய்தார்.

வீட்டிற்கான கதவை (மரத்துகள்கள் நன்றாக அழுத்தப்பட்டு புது முறையில் தயாரிக்கப்படும் கதவுகள் - மிகவும் உறுதியானவை) இராஜபாளையத்தில் வாங்கலாம் என்று நான் ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அவரிடம் இருக்கும் தச்சரே அவ்விதமான கதவை நன்றாக செய்வார் என்று கூறினார். அவர் கூறியதை நான் முழுவதும் நம்பினேன்.

ஆனால் கதவு தயாரிக்கப்படும் இடத்தில் ஒரு நாள் சென்று பார்த்தேன். சட்டங்களில் பெவிக்காலை தடவி, நடுவில் மரத்துகள்களை கொட்டினர். மரத்துகள்கள் அழுத்தப்படவோ வேதிப்போருட்களால் கெட்டிப்படுத்தப்படவோ இல்லை. சட்டங்களின் மேல் பிளைவுட் அறையப்பட்டு கதவு தயாரிக்கப்பட்டது. சேகரனிடம் சொன்ன போது இவ்விதம் செய்யப்படும் கதவுகள் நன்றாக இருக்கும் என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது - திருப்தியும் இல்லை.

வீட்டின் ஜன்னல்களில் கண்ணாடி மட்டுமே பதிக்கப்பட்டதால் அதில் எந்தப்பிரச்சினையும் வரவில்லை.

வீட்டில் மொஸைக் கற்கள் பதிக்கப்பட்டன. சுத்தப்படுத்த எளிதாக இருக்கும் வகையில் சமையல் மற்றும் கழிவறைகளில் மொஸைக் போன்றே ஒரு கலவை சுவர்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டது.

வீட்டை சுற்றி சுற்றுப்புற சுவரும் கட்டப்பட்டது. வீட்டின் உட்சுவர்களில் பூச்சு வேலை ஆரம்பிக்கப்பட்டது. வீட்டின் பணிகள் முடிவடையப்போகும் தருணத்தில் வேலைகளில் கொஞ்சம் சுணக்கம் தெரிந்தது. வேலைக்கு வரும் ஆட்கள் வெகுவாக குறைந்தனர். வீட்டின் பணிகள் முடிவடைவது தேவையில்லாமல் தள்ளிப்போடப்படுவது போல எனக்கு தோன்றியது.

gragavan
13-04-2005, 09:58 AM
தொடங்குதல் மிக எளிது. முடிப்பதுதான் பெரிய தொல்லை என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன. நல்ல பயனுள்ள தகவல்கள் பல உள்ளன.

அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
13-04-2005, 11:42 AM
பாரதி அண்ணா,

இன்றைக்கு தான் இத்தலைப்பை பார்க்கிறேன், ஏதோ சிறுகதை என்று நினைத்தேன். நம்ம ஊர் கதையாக இருக்கிறதே. அனைத்தும் படித்து கருத்துகள் சொல்கிறேன்.