PDA

View Full Version : இசைக்குயிலின் இனிய கீதங்கள் - அறிமுகம்.rajeshkrv
23-11-2004, 07:52 AM
இசைக்குயில் பி.சுசீலாவைப்பற்றி மன்றத்திற்கு நான் சொல்ல வேண்டியதில்லை.
சுசீலாவிற்கு முன்னும் பின்னும் வெற்றிடமே -ஒரு ரசிகர் மெய் மறந்து ஆந்திராவில் சுசீலாவை புகழ்ந்து கூறியது. ஆராய்ந்து பார்த்தால் அது உண்மையும் கூட..

என்ன ஒரு குரல் வளம் இவருக்கு. எந்த ஸ்தாயில் பாடினாலும் வார்த்தைகள் தெளிவாக நம் காதுகளில் விழும். அது பாடகர்/பாடகிக்கு மிகவும் முக்கியமில்லையா? ..அதில் முதலிடம் இவருக்கும் டி.எம்.எஸ்ஸக்கும்.

எந்த வகை பாடலாக இருந்தாலும் குரலிலேயே பாவத்தை உள்ளடக்கி பாடுவதில் வல்லவர். இதற்காக குரலை மாற்றியோ, இல்லை வேறு மாதிரியோ பாடவேண்டியதில்லை..

எத்தனை மொழிகள் எத்தனை எத்தனை பாடல்கள்..

இவரை சந்திக்கவும் இவருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததை எண்ணி நான் மகிழ்வடையாத நாளே இல்லை.

இவ்வளவு புகழ் பெற்றாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் இவரைப்பார்த்தால் ஆச்சரியம் தான் வருகிறது.

10 பாடல்கள் பாடி புகழ்பெற்றால் சிலர் அடிக்கும் லூட்டிக்கு மத்தியில் இப்படியும் ஒரு பெண்மணியா?

இதே வியப்போடு முதல் பாடலுக்கு செல்வோம்..

இவர் அறிமுகமானது பெற்ற தாய் என்ற படத்தில்
ஆண்டு

56'துவங்கி இவர் பல பாடல்கள் பாட ஆரம்பித்தார்.

கணவனே கண்கண்ட தெய்வம்
இந்த படம் தான் இவருக்கு
நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது


இசையமைத்தவர்கள் - ஹிந்தியில் அப்பொழுது முன்னனிப்பாடகராக இருந்த
உடன் உதவியவர்
அதேபள்ளி ராமாராவ்


புகழ்பெற்ற உன்னை கண் தேடுதே, எந்தன் உள்ளம் துள்ளி என்ற பாடல்களை சுசீலா பாடியிருந்தார்

ஆனாலும் அதே திரைப்படத்தில் என்னை மிகவும் கவந்த பாடல்
அன்பில் மலர்ந்த நல் ரோஜா

பாடலில் தோன்றிய நடிகை அஞ்சலிதேவி
[i][b]
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 1


அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
தாலாட்டு பாடல்கள் என்றாலே சுகம்
அதுவும் சுசீலாவின் குரலில் கேட்பது இன்னும் சுகம்..

இந்த பாடலை கேளுங்கள் .. மென்மையான சோகம் கலந்த தாலாட்டு...
சோகத்தை குரலில் எவ்வளவு அழகாக கொண்டுவந்திருக்கிறார் என்று தெரியும்

அந்த ஆராரோவாகட்டும் தாலோவாகட்டும் எவ்வளவு மென்மை...

ஒரே பாடலில் எத்தனை வகையான வேறுபாட்டை காட்டியிருக்கிறார் பாருங்கள்

தாலாட்டு பாடல்களில் இந்த பாடலுக்கு நிச்சயம் இடமுண்டு..

நண்பர்கள் பாடலை கேட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள்

பாடலை இங்கே கேளுங்கள்

[size=2]http://psusheela.org/audio/ra/tamil/all/an...larnthanall.ram


நன்றி
ராஜ்

gragavan
23-11-2004, 09:53 AM
அருமையான பாடலுடன் தொடங்கியிருக்கின்றீர்கள். தாலாட்டுப் பாடல்களில் அன்றும் இன்றும் என்றும் சுசீலாதான். தமிழில் அவர் பாடிய தாலாட்டுப் பாடல்கள்தான் முன்னிலை வகிக்கின்றன. அதனால்தான் இசையமைப்பாளர்கள் மாறியிருந்தும் கூட, இளையராஜாவும் சில தாலாட்டுப் பாடல்களுக்கு சுசீலாவையே பயன்படுத்தியிருந்தார். குறிப்பாக "கற்பூர பொம்மை ஒன்று" மற்றும் "வரம் தந்த சாமிக்கு" பாடல்களைச் சொல்லலாம்.

கணவனே கண்கண்ட தெய்வம் படத்திற்கு இசை ஹேமந்த்குமார் என்பது எனக்குப் புதுச்செய்தி.

அன்புடன்,
கோ.இராகவன்

தஞ்சை தமிழன்
23-11-2004, 11:43 AM
ராஜேஸின் சுசிலா பற்றிய தொடருக்கு எனது வாழ்த்துக்கள்.

அவரது குரலின் இனிமை அனைவருக்கும் பிடிக்கும்.

பிரியன்
23-11-2004, 05:49 PM
வாழ்த்துகள் ராஜ் .தொடருங்கள் .....

என்னால் மறக்க முடியாத பாடல்

மாலை பொழுதின் மயக்கத்திலே...தினமும் மயங்கி கொண்டே இருக்கிறேன் ...அவர் காலத்தில் நாம் வாழ்வது வரமல்லவா நமக்கு

rajeshkrv
30-11-2004, 07:17 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 2

1957..

கணவனே கண்கண்ட தெய்வத்திற்கு பின் சுசீலாவிற்கு ஏறுமுகம் தான்..
அதற்கு மேலும் ஒரு உதாரணமாக அமைந்தது இந்த பாடல்

ஆம்

[b]<span style='color:green'>"அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ ? " </span>இந்த பாடலைக் கேட்டால் அந்த நிலவு அருகில் வராமல் இருக்குமா என்ன?
அவ்வளவு அருமையான வரிகள். இனிமையான குரல்


பத்மினி பிக்சர்ஸ் தயரிப்பில் வெளிவந்த படம் தங்கமலை ரகசியம்
பத்மினி பிக்சர்ஸ் என்றாலே ஆஸ்தான இசையமைப்பாளர் திரு.டி.ஜி.லிங்கப்பா தான்

[b]படம்: தங்கமலை ரகசியம்
இசை: டி.ஜி.லிங்கப்பா
வரிகள் : கு.மா.பாலசுப்பிரமணியம்
ஒரு பருவப்பெண் இயற்கை அழகை ரசித்து பாடுவதாக அமைந்தாலும்
பருவப்பெண்ணுக்கே உரிய நாணம், வெட்கம் எல்லாம் கலந்த பாடல்

காட்சி இதுதான் ..
காட்டிற்கு தந்தையுடன் வரும் ஜமுனா இரவில் குளத்தில் வெள்ளி தட்டு போல் ஜொலிக்கும் நிலவு தெரிய
அந்த அற்புத காட்சியில் மயங்கி கானம் பாடுவதாக அமைந்த பாடல்..

சுசீலா பாடும்விதமே அழகு...

புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற ..

மனதில் ஆசையை மூட்டிய பின்னே மறைந்தே ஓடிடலாமா
சுசீலாவின் பாடல்களை பற்றி பேசினால் இந்த பாடல் நிச்சயம் இடம்பெறும்
அந்த அளவிற்கு இந்த பாடல் அவ்வளவு அழகு.

நடுவில் வரும் அந்த ஆ .... அகரம் ஆகட்டும்
பின் பாடும்
இனிமை நினைவும் இளமை வளமும் ஆகட்டும் .. அற்புதம்

ழ ல ள மூன்றையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இன்றைய இளைஞர்கள்
இவர் பாடல் கேட்டாலே போதும்..

பாடலை கேட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்


http://us.f1f.yahoofs.com/bc/4576891b/bc/M...fahCrBBWr4Xmm5z

நன்றி
ராஜ்

gragavan
30-11-2004, 10:09 AM
அருமையான பாடல் ராஜேஷ். எனக்கு மிகவும் பிடித்தமான பாடலும் கூட. என்ன குரல்! என்ன குழைவு! என்ன உச்சரிப்பு! தமிழ் தமிழாகவே காதில் விழுந்து இதயத்தை நிறைக்கிறது. அற்புதம்.

டி.ஜி.லிங்கப்பா திருச்சியைச் சேர்ந்தவர். நல்ல இசையமைப்பாளர். தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலும் கன்னடத்தில் உள்ளது. பாடியது பி.சுசீலாவேதான். மிகவும் இனிமை. பாடல் வரிகள் இப்படிப் போகும்.

அமரா மதுரா ப்ரேமா
நீ பா பேக சந்த மாமா
பா பேக சந்த மாமா

எவ்வளவு கேட்டாலும் திகட்டாத பாடல். நினைவு படுத்தியமைக்கு நன்றி ராஜேஷ்.

அன்புடன்,
கோ.இராகவன்

இளசு
30-11-2004, 09:26 PM
உங்கள் கரங்களை என் கண்களில் ஒற்றி வாழ்த்துகிறேன் குருகுருவே..

அமுதைப் பொழியும் இசைக்குயிலின் கானங்கள் பற்றி
மழையாய்த் தொடர்ந்து பொழியுங்கள் ராஜ்..

தஞ்சை தமிழன்
01-12-2004, 11:19 AM
அமுதை லொழியும் நிலவே- எனது மனதில் எப்போதும் ஓரும் பாடல்.
சிறு வயதில் எங்கள் ஊரில் வந்தது. இன்னமும் ஜமுனா வின் முகமும், படல் முடிவில் சிவாஜியின் வருகையும் மறக்க முடியாத படம்.

பிரியன்
01-12-2004, 03:58 PM
அமுது இனிப்பதில் வியப்பென்ன? அது போலவே குயிலின் இசையும்

thamarai
02-12-2004, 06:18 AM
இசைக்குயிலின் பாடல்கள் அருமை...

pradeepkt
02-12-2004, 08:16 AM
சரியாகச் சொன்னீர்கள் ராஜேஷ்...
[b]ல ள ழ மட்டுமல்ல.
[b]ன, ந, ண வையும் இப்புதுமைப் பாடகர்கள் படுத்தும்பாடு சொல்லி மாளாது. அன்னன், அண்ணம், னண்மை, தநிமை என்றெல்லாம் இவர்கள் பாடும்போது கொதிக்கிறது.
கண்டிப்பாக சுசீலா அவர்கள் பாடியவை பாடல்கள் அல்ல,
இவர்களுக்குப் பாடங்கள் !!!

அன்புடன்,
பிரதீப்

rajeshkrv
07-12-2004, 07:21 AM
[b]இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 3
1957

தந்தை யாரோ தாயும் யாரோ ..

படம்: யார் பையன்
பாடல்: அ.மருதகாசி
இசை: எஸ்.தக்ஷிணாமூர்த்தி, டி.சலபதிராவ்
<span style='color:blue'>படத்திற்கு இசை தக்ஷிணாமூர்த்தி என்றாலும் இந்த பாடலுக்கு இசை திரு.டி.சலபதிராவ் அவர்கள் ..

யார் பையன் ..தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம்.. அந்த பையனாக நடித்தவர் டெய்ஸி ராணி.
ஜெமினி, சாவித்திரி, என்.எஸ்.கிருஷ்ணன்,டி.கே.மதுரம், சாரங்கபானி நடித்த படம்.

வழியில் கிடைக்கும் ஒரு சின்னப் பையனால் விளையும் குழப்பங்களும் விளைவுகளும் தான் கதை.

சாவித்திரியும், ஜெமினியும் காதலர்கள். ஜெமினி இந்த பையனை வீட்டிற்கு அழைத்து வர
ஜெமினியின் அப்பா என்.எஸ்.கே உன் அப்பா யார் என வினவ அதற்கு அந்த பையன்
" மாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன் " என்று கூறும் விதமே அழகு.

இந்த பாடலின் காட்சி இதுதான் ..
தன் வீட்டில் வைத்துக் கொள்ளாமல் முதலில் தன் காதலி சாவித்திரி வீட்டில் விட்டு விடுகிறார் ஜெமினி.
அவன் படுத்தும் பாடு சாவித்திரியால் தாங்கமுடியவில்லை. அவனை தூங்க வைக்க அழகாக பாடுகிறார்
ஊடே வம்பு செய்தால் உன் கன்னம் என் கையால் வீங்கும் என மருதகாசியின் குறும்பான வரிகள் அற்புதம்.

இது ஒரு வினோத தாலாட்டு.. அதையும் வரிகளில் கொண்டுவந்திருக்கிறார் மருதகாசி..
மாலை சூடும் முன்னமே 7 வய்தில் ஒரு பிள்ளையை எனக்கு தந்தார் என..
தாலாட்டு என்றால் சுசீலா என்று முன்னரே சொல்லியிருந்தேன். இங்கே வினோதமான தாலாட்டையும் எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் பாருங்கள்

சுசீலாவின் குரலில் அந்த குறும்பும் உள்ளது.. அதே சமயம் அன்னை உள்ளமும் உள்ளது..
அழகாக பாடியிருப்பார்.

இசையும் வரிகளும் குரலும் சேர்ந்தால் "தேன் இனிமையிலும் சுசீலாவின் குரல் திவ்ய மதுரமாமே"

கேட்டு மகிழுங்கள்
தவறாமல் உங்கள் கருத்துக்களை தாருங்கள்

http://psusheela.org/audio/ra/tamil/rare/r...raresong023.ramநன்றி
ராஜ்</span>

rajeshkrv
16-12-2004, 06:08 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 4

1957
சேலாடும் நீரோடை மீதே ....

படம்: அலாவுதீனும் அற்புத விளக்கும்
இசை: எஸ். ராஜேஸ்வரராவ்
குரல்கள் : சுசீலா,ஏ.எம்.ராஜா

தெலுங்கிலும் தமிழிலும் வெளிவந்த படம்
ராஜேஸ்வரராவ்வின் இசை இந்த படத்திற்கு பெரிய பலம்

ராஜேஸ்வரராவ்வின் ஆஸ்தான பாடகியாக சுசீலா விளங்கினார்.
கடினமான மெட்டுக்களை அமைப்பதிலும் வல்லவர் இவர்.
அதே சமயம் மெல்லிசையின் முன்னோடியும் இவரே...

இந்த பாடலை கேட்டால் நீரோடையில் நாமே செல்வது போல் தோன்றும்..
பாடலின் மெட்டமைப்பை பாருங்கள் -- மெதுவாக தொடங்கி, பின் வேகமெடுத்து பின் மெதுவாக முடியும்

ஒரு பயணம் போல் தோன்றும் ..

சேலாடும் நீரோடை மீதே என சுசீலா ஆரம்பிக்கும் அழகே அழகு.. அதற்கேற்றார் போல் ராஜாவுன் கனிவாக குழையா பாடல் தேன் சிந்தும்..

இவர்கள் இருவரும் பல இனிய பாடல்களை நமக்கு தந்திருக்கிறார்கள் .. அதில் இதுவும் ஒன்று..

சுசீலா பாடும் ஆதாரம் நீயே கண்ணாளனே ... உச்சஸ்தாயிலும் கூட வார்த்தைகள் தெளிவாக இருப்பதற்கு சான்று..

பாடலை கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்

பாடலை இங்கே கேளுங்கள்
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong036.ram


நன்றி
ராஜ்

rajeshkrv
23-12-2004, 02:06 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 5

1957

என்னைப்போல் பெண்ணல்லவோ

படம்: வணங்காமுடி
இசை: ஜி.ராமனாதன்

1957'ல் வெளிவந்த வணங்காமுடி பலவகையில் சிறந்த படம்
சிவாஜி-சாவித்திரி- கண்ணாம்பா என பெரும் நட்சத்திரங்களை கொண்ட படம்
அதே போல் ஜி.ராமனாதனின் இசை பெரிதும் பேசப்பட்டது..

குறிப்பாக இந்த பாடல் உருகாதவரையும் உருக்கும்..

என்னைப்போல் பெண்ணல்லவோ தேவி நீ என்னை போல் பெண்ணல்லவோ ..
என சாவித்திரி தேவியின் முன் பாடுவதாக அமைந்த காட்சி

கனமான தோடி ராகத்தில் அமைந்த இந்த பாட்டை சுசீலாவிற்கு கொடுத்து தோடியையும் லேசாக
மாற்றினார் ராமனாதன். ஆம் சுசீலா அப்படி பாடியிருக்கிறார்.

வரிகளும் இசையும் சுசீலாவின் சாரீரமும் வணங்காமுடியை வணங்க வைக்கும்

அவ்வளவு சிறந்த பாடல் இது

கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் தாருங்கள்

http://us.f1f.yahoofs.com/bc/4576891b/bc/M...fzqjyBBo99H7Rog

ராஜ்

aren
23-12-2004, 02:54 AM
P. சுசீலா மாதிரி ஒரு பாடகர் இனிமேல் பிறக்கவேண்டும். இவர் தமிழ் உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் நம் மனதை விட்டு நீங்காதவை.

சிட்டு குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே (ஆலயமணி)

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும்
என்னைப் பாட சொன்னால் என்ன பாடத் தோன்றும் (புதிய பறவை)

மறக்க முடியுமா இந்த பாடல்களை.

இப்படி ஆயிரக்கணக்கில் அவர் பாடிய பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழை தமிழாக உச்சரிப்பதில் வல்லவர் இவர். இவருக்கு தாய் மொழி தெலுங்கு. ஆகையால் பாடல்களை தெலுங்கில் எழுதி வைத்துக் கொண்டு பாடுவார். தமிழில் பாடும் அளவு அவர்களுக்கு பேசத்தெரியாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

rajeshkrv
23-12-2004, 05:09 AM
ஆரென்

இப்பொழுது கொஞ்சம் நன்றாகவே பேசுகிறார்

இவர் தமிழில் எழுதிவைத்து பாடத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன

rajeshkrv
29-12-2004, 03:46 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 6

1958

இன்ப முகம் ஒன்று கண்டேன்

படம்: நான் வளர்த்த தங்கை
இசை: பெண்டியாலா

பெண்டியாலா தான் சுசீலாவை அறிமுகம் செய்தவர்
அவரின் இசையில் இந்த பாடல் மிகவும் அருமையான பாடல்

சுசீலா பாடியிருக்கும் விதமும் அபாரம்..

இதை முதல் முதலில் சிங்கப்பூர் ஒலியில் கேட்டபோது நான் எனை மறந்தேன்..

இன்றும் என்னை கேட்க தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று..

மன்ற நண்பர்கள் கேட்டு கருத்துக்களை கூறுங்கள்

<span style='colorurple'>http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong205.ram

ராஜ்</span>

rajeshkrv
04-01-2005, 07:00 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 7

1957

புதையல் - விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் மாபெரும் வெற்றிப்படம்

சுசீலா விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பிரதான பாடகியாக பாடியது இந்த படத்தில் தான்.
அனைத்துப் பாடல்களும் சுசீலா தான் பாடினார். ஒவ்வொன்றும் இசை முத்துக்கள்.

அந்த வகையில் இன்றைய பாடலாக
மிகவும் பிரபலமான "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே"

சிதம்பரம் எஸ்.ஜெயரமானும், சுசீலாவும் இணைந்து பாடிய ஒரு அருமையான டூயட்.

பாடல் ஆத்மனாதன் ..

இவர் ஒரு உண்மை கவிஞர்.. பாடலை பாருங்கள்

அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே
விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்..

சிவாஜி, பத்மினி காதலர்கள்
காதலர்களுக்கு தோதான கடற்கரை .. மங்கிய மாலைப்பொழுது இதைவிட வேறென்ன வேண்டும் இவர்களுக்கு..

கானம் ஆரம்பம்..
சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸிற்கு முன் ஜெயராமன் தான் பாடிவந்தார். பத்மினிக்கு ஆரம்பத்தில் லீலா,ஜிக்கி பாடியிருந்தாலும் இந்த பாடலில் பத்மினி பாடுவது போலே நமக்கு தோன்றும் காரணம் சுசீலா..
பின்னர் டி.எம்.எஸ்-சுசீலா இணைந்து எத்தனையோ சிவாஜி-பத்மினி பாடல்களை பாடியுள்ளனர்.

பாடலின் இசையும், வார்த்தைகளும் நம்மை ஒரு புறம் ஈர்க்க
சுசீலாவும்,ஜெயராமனும் இன்னொரு புறம் நம்மை குரலால் இழுக்கிறார்கள்

பாடலை கேட்டு மகிழ்ந்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே தாருங்கள்

<span style='color:orange'>http://psusheela.org/audio/ra/tamil/all/vinnodum_mugilodum.ram

நன்றி
ராஜ்</span>

gragavan
04-01-2005, 10:38 AM
அற்புதமான பாடல். தேனோடு பால் கலந்து, அந்தப் பாலோடு ஊன் கலந்து, அந்த ஊனையும் ஊட்டினாற்போல் அருமையான பாடல். இது கேட்கத் திகட்டாத கானம். இந்தப் பாடலை நினைவு படுத்தியதற்கு நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
11-01-2005, 02:52 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 8

1955

மிஸ்ஸியம்மா - சலூரி ராஜேஸ்வரராவ்வின் இசையில் அருமையான பாடல்களை கொண்ட படம்

சாவித்திரி - ஜெமினி இணையின் மாபெரும் வெற்றிப்படம்

வாராயோ வெண்ணிலாவே - லீலா- ஏ.எம்.ராஜா குரல்களில் பிரபலமான பாடல்
அதே அளவிற்கு பிரபலம் "பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ" என்ற
பாடல்

சுசீலா,ஏ.எம்.ராஜா குரல்களின் மதுரகீதம் இந்த பாடல்
பாடலுக்கு சொந்தக்காரர் தஞ்சை ராமய்யாதாஸ். எளிய வார்த்தைகளாலேயே நம்மை கவர்ந்திழுக்கிறார் பாருங்கள்

ராஜாவும்-சுசீலாவும் பாடினால் இலவம் பஞ்சு வருடுவது போல் இருக்கும்..

புல்லாங்குழலிசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா

இந்த பாடலை கேட்டால் நம் உள்ளம் ஜில்லென துள்ளுவது என்னமோ உண்மை

பாடல் சொல்லிக்கொடுக்க ஜெமினி வர, ஜமுனா தயாராக சாவித்திரி பொறாமையால் கோபம் கொண்டு முறைக்க பாடல் ஆரம்பம்
எவ்வளவு பொருத்தம் பாருங்கள் இந்த சூழலுக்கு


பாடலை கேட்டு மகிழ்ந்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே தாருங்கள்

http://us.f1f.yahoofs.com/bc/4576891b/bc/M...ffAm4BByvmmYdrF

நன்றி
ராஜ்

mythili
11-01-2005, 07:33 AM
வாராயோ வெண்ணிலாவே....அருமையான பாடல்.......
"தன் பிடிவாதம் விடாது..என் மனம் போல் நடக்காது
இல்லறம் இப்படி இருந்தால் நல்லறம்..............."..அருமையான வரிகள்.

என்னால் அந்த சுட்டியில் பாடல் கேட்க முடிய வில்லை. சுட்டியை திரந்தால் ERROR வருகிறது.

அன்புடன்,
மைத்து

rajeshkrv
18-01-2005, 05:24 AM
<span style='color:red'>இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 9</span>

1957

தேசுலாவுதே தேன் மலராலே

படம்: மணாளனே மங்கையின் பாக்கியம்
இசை: ஆதி நாரயணராவ்
பாடல்: கு.மா.பாலசுப்பிரமணியம்
குரல்கள்:கண்டசாலா - சுசீலா

ராகமாலிகையில் அமைந்த இந்த இசை மாலை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

இது காதல் பாட்டு... அவன் புல்லாங்குழல் ஊத அவள் வானுலகிலிருந்து வருகிறாள்
அந்தி நேர்ம்.. அருமையான சோலை.. நிலவின் ஒளி, குளிர்ந்த ஓடை..
பாடல் ஆரம்பம்.. ஆரம்பமே ஒரு அற்புதம் தான்..

தேசுலாவுதே தேன் மலராலே..

ராகம் மாறிக்கொண்டே இருக்கும்.. அதற்கேற்றார் போல் காட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்..

ஆதி நாரயணராவ்- அஞ்சலிதேவியின் கணவர். இவர் ஒரு இசை மேதை.. இதைவிட சிறந்த ராகமாலிகை வேறு என்ன இருக்க முடியும்

கண்டசாலா - தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த பாடகர். சுசீலாவும் இவரும் சேர்ந்தே நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றனர்.

இந்த பாடலில் சுசீலாவும், கண்டசாலாவும் போட்டி போட்டுக்கொண்டு பாடும் விதம் அழகே அழகு..

வரிகளும் அற்புதம்

அந்த அற்புதத்தை நீங்களும் உணருங்கள்

கேட்டு கருத்துக்களை தாருங்கள்
இந்த பாடல் பற்றி உங்கள் அலசலையும் தாருங்கள்

http://psusheela.org/audio/ra/tamil/all/thesulavuthe.ram

நன்றி
ராஜ்

பரஞ்சோதி
18-01-2005, 05:59 AM
நன்றி ராஜேஷ் அருமையான பாடல்கள்.

நான் இப்போவே என் மகள் சக்திக்கு சுசிலா அம்மாவின் பாடல்கள் எம்.பி3 போட்டு கேட்க வைக்கிறேன். அவரும் கை, கால்கள் அசைத்து ரசிக்கிறார்.

gragavan
18-01-2005, 06:16 AM
அருமையான பாடல். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. தேசு என்றால் என்னவென்று எங்கோ ஒரு விவாதம் நடந்த நினைவு.

இந்தப் பாடலில் கமகங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். பிசுசீலா அவர்கள் இலகுவாக பாடியிருப்பார். அவரது திறமையின் சான்று அது.

தம்பி பரஞ்சோதி, நல்ல இசை வாழ்க்கையை வாழ இசைவாக்கும். சிறந்த பாடல்களை குழந்தைகளுக்குக் கேட்கச் செய்தால் நல்ல பலனே கிடைக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
18-01-2005, 06:47 AM
வாவ்! இந்தப் பாட்டை நான் கேட்டதே இல்லையே... அருமை! அருமை!

அண்ணா!
இப்பவே சக்திக்கு உங்களுக்குப் பிடிச்ச பாட்டைக் கேக்க வைக்கிறது நல்லது. அப்புறம் எல்லாம் ஒரே எம் டி.வி.யாத்தான் இருக்கும்!!!

அன்புடன்,
பிரதீப்

rajeshkrv
25-01-2005, 03:37 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 10

1956

தேன் உண்ணும் வண்டு மா மலரை கண்டு..

படம்: அமர தீபம்
இசை: டி.சலபதிராவ்
பாடல்: கே.பி.காமாட்சி
குரல்கள்:ஏ.எம்.ராஜா - சுசீலா

அமர தீபம் - ஸ்ரீதரின் கதை வசனத்தில் வெளிவந்த படம். சிவாஜி,சாவித்திரி,பத்மினி நடித்திருந்தனர்.
அதில் இந்த பாடல் மிகவும் பிரபலம்.

சலபதிராவ் - தெலுங்கில் இவர் மிக பிரபலம். தமிழில் இவர் சில படங்களுக்கே இசையமைத்திருந்தாலும் அத்தனை பாடல்களும் அருமை.
இவரின் மீண்டசொர்கம்(கலையே என் வாழ்கையின்), புணர்ஜென்மம்(என்றும் துன்பமில்லை) பாடல்களை மறக்க முடியுமா என்ன ..இந்த பாடலில் மென்மையாக இசையை கையாண்டுள்ளார்

கே.பி.காமாட்சி - இவர் பராசக்தியில் பூசாரியாக வருவாரே ஞாபகம் இருக்கிறதா. இவர் ஒரு அற்புதமான கவிஞர். இதில் மா மலர், திரிந்தலைந்து என கடினமான சொற்களை உபயோகப்படுத்தியிருப்பார் அதையும் எளிமையாக்கியிருப்பார் சலபதிராவ் தன் இசையால்.

முதலில் இந்த பாடலை ராஜாவும் லீலாவும் பாடுவதாக இருந்தது. லீலா தனி மைக் கேட்டதால் ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவில்லை .. அதனால் சுசீலா பாடினார்.

ராஜாவும் - சுசீலாவும் பாடினால் மயில் இறகால் வருடுவது போல் இருக்கும் .. அதற்கு பல பாடல்கள் சாட்சி அதில் இதுவும் ஒன்று..

எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார்கள் இருவரும்..

அதுவும்

வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம் விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே காற்றினிலே சல சலக்கும் பூங்கோடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ

மீன் நிலவும் வானில் வெண்மதியை கண்டு
ஏனலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு மென்காற்றே நீ சொல்லுவாய்

கான மயில் நின்று வான்முகிலை கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே கலையிதுவே கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய்

இந்த வரிகள் தான் எவ்வளவு அற்புதம்

ஆரம்ப இசையே போதும் மெல்லிய தாளம் போட வைக்கும்

கேட்டு கருத்துக்களை தாருங்கள்
இந்த பாடல் பற்றி உங்கள் அலசலையும் தாருங்கள்

www.musicindiaonline.com/l/26/s/movie_name.4232 (http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4232)


நன்றி
ராஜ்

chandru
29-01-2005, 12:15 PM
நல்லது நல்லது.. இது வரை கே.பி.காமாட்சி என்பவர் ஒரு பெண் கவிஞர் என்று நினைத்திருந்தேன் !
இனிமையான இசையும், அருமையான பாடல் வரிகளும் ராஜா, சுசீலாவின் குரலால் இன்னும்
மெருகேறிப் போனதால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மயிலிறகால் வருடுவது போல் ஆனந்தம் !

rajeshkrv
01-02-2005, 04:42 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 11

1957

பட்டணம்தான் போகலாமடி பொம்பளே..

படம்: எங்கள் வீட்டு மகாலெட்சுமி
இசை: கே.வி.மகாதேவன்
பாடல்: உடுமலை நாராயணகவி
குரல்கள்:சீர்காழி கோவிந்தராஜன் - சுசீலா

எங்கள் வீட்டு மகாலெட்சுமி - நாகேஸ்வரராவ், சாவித்திரி, தங்கவேலு, ஈ.வி.சரோஜா நடித்திருந்தனர்.

கே.வி.மகாதேவன் - மாமா என திரையுலகத்தினரால் அழைக்கப்படும் இவர் ஒரு இசை மேதை..

உடுமலை நாராயணகவி - இவர் ஒரு உண்மை கவிஞர்.. எவ்வளவு லாவகமாக பட்டணத்தின் அவலங்களை சொல்லியிருக்கிறார் பாருங்கள்

சீர்காழி -சுசீலா அனைத்துப்பாடல்களும் அருமை.. எனக்கு இதுவும் தோப்புக்குள்ளே குயிலுக்குஞ்சு சும்மா சும்மா என்ற பாடலும் மிகவும் பிடிக்கும்

இதில் இருவர் பாடியிருக்கும் விதம் அழகு.. இது ஒரு நாட்டுப்புற சாயலில் அமைந்த பாடல் . சீர்காழியார் தமிழர் அவருக்கு சுலபம் ஆனால் சுசீலா இதை எவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார் பாருங்கள் அபாரம் .. இதுவல்லவோ
தனித்திறன்.


இதே படத்தில் இடம்பெற்ற ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது என்ற பாடலும் பிரபலம்.

கேட்டு கருத்துக்களை தாருங்கள்
இந்த பாடல் பற்றி உங்கள் அலசலையும் தாருங்கள்

http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong262.ram


நன்றி
ராஜ்

சேரன்கயல்
01-02-2005, 06:14 AM
தேன்குரலின் சொந்தக்காரர் சுசீலாம்மாவின் பாடல்களை இங்கே சரமாக்கி கூடுதல் தகவல்களோடு தந்திருக்கும் நண்பர் ராஜேஷிற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்...

கேட்க கேட்க இன்னும் கேட்கத் தூண்டும் பாடல்கள்...

rajeshkrv
09-02-2005, 05:45 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 12

1957
கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே


படம்: மகாதேவி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: ஏ.எம்.ராஜா - சுசீலா

மகாதேவி - மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி இந்த வசனத்தை மறக்க முடியுமா

இந்த திரைப்படம் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு
மிகவும் புகழ் கொடுத்த படம்.

இதில் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும்
எம்.ஜி.ஆர் - சாவித்திரி பாடும் இந்த பாடல்
மிகவும் இனிமையான ஒன்று.

கண்மூடும் வேளையிலே என சுசீலா, ராஜா பாடும் இந்த அழகான பாடல் கேட்கும் ஒவ்வொருவரையும் மயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ராஜா- சுசீலா பாடினால் இலவம் பஞ்சு வருடுவதுபோல் இருக்கும் அது இந்த பாடலிலும் தெரியும்.

கண்ணதாசனின் வரிகளும், மெல்லிசை மன்னர்களின் இசையும் இந்த பாடலுக்கு மேலும்
மெருகூட்டுகிறது.

கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்

http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.4820/
நன்றி
ராஜ்

gragavan
09-02-2005, 07:23 AM
நல்ல பாடல். நேற்றுதான் தொலைக்காட்சியில் பார்த்தேன். எனக்குத் தெரிந்து விசுவநாதன் இசையில் ஏ.எம்.ராஜா பாடியது ஒரு சில பாடல்களே. அதில் இது சிறப்பான ஒன்று. மேலும் பி.சுசீலா பாடும் பொழுது காதலுடன் கொஞ்சிப் பாடுவது போல இருக்கும். நல்ல பாவத்தோடு இருவருமே பாடியிருப்பார்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
16-02-2005, 03:49 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 13

1957

நீல வண்ண கண்ணனே உன் மாயமெல்லாம்

படம்: மல்லிகா
இசை: டி.ஆர்.பாப்பா
பாடல்: மருதகாசி
குரல்கள்: சுசீலா

டி.ஆர்.பாப்பா - ஆரம்பகாலத்தில் சுசிலாவின் குரல் சரியில்லை என்று சொன்னவருக்கு பிடித்த பாடகியாக ஆனார் சுசிலா இதற்கு காரணம் அவரது குரல் வளமே..

டி.ஆர்.பாப்பா - தமிழ் திரையுலகம் மறக்க கூடாத இசையமைப்பாளர்
போட்ட பாடல்கள் அனைத்தும் அருமை
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள், அம்மா என்பது தமிழ் வார்த்தை , என கலக்கியவர்.

இந்த பாடலில் கண்ணனின் குரும்பை எவ்வளவு லாவகமாக சொல்லியிருக்கிறார் மருதகாசி அதை குரலில் குழைவுடன் பாடியுள்ளார் சுசீலா

அருமையான பாடல்

கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்

http://as01.coolgoose.com/music/song.php?id=73020

நன்றி
ராஜ்

gragavan
16-02-2005, 05:53 AM
டி.ஆர்.பாப்பா ஒரு சிறந்த இசைமேதை. அகில இந்திய வானொலி நிலையத்தின் ஆத்தான இசையமைப்பாளர். திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கின்றார். முத்தைத்தரு பத்தித் திருநகை" பாடலை யார் மறக்க முடியும்? "அம்மா என்பது தமிழ் வார்த்தை" பாடலும் சிறந்ததே. சுசீலா அவர்கள் மிகச் சிறப்பாக பாடியிருப்பார்கள்.

நீலவண்ணக் கண்ணனே பாடல் மிகவும் குழைவான அழகுணர்ச்சி மிகுந்த பாடல். பிசுசீலாவின் குரலில் கேட்கும் பொழுது இனிமையாக இருக்கிறது. தென்னகத்து இசையரசியல்லவா அவர்.

அன்புடன்,
கோ.இராகவன்

rajeshkrv
15-03-2005, 08:38 AM
இசைக்குயிலின் இனிய கீதங்கள் - 14மீட்டத வீணை இது மீட்டி வரும் தென்றல்

படம்: தென்றல் வீசும்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: சுசீலா

தென்றல் வீசும் - பி.எஸ்.ரங்கா தயாரிப்பில் கல்யாண்குமார், கிருஷ்ணகுமாரி நடித்த படம்

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்களும் அருமை

பாட்டு பிறந்தவடன் பாட வைத்தாயே - சுசீலாவின் குரலில் அழகான பாடல்
பாடினார் கவிஞர் பாடினார் - டி.எம்.எஸ்-சுசீலா குரல்களில் இனிமையான பாடல்
அழகான மலரே -பீ.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் மிகவும் அழகான பாடல்

ஆயினும் மீட்டாத வீணை இது மீட்டி வரும் தென்றல் மிகச் சிறந்த பாடல்..


கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்

http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong032.ram

நன்றி
ராஜ்

gragavan
16-03-2005, 04:53 AM
மிகவும் அபூர்வமான பாடலிது. தேடிக் கொண்டு வந்து விட்டேரே. படம் அத்தனை பிரபலமாகாததால் இந்தப் பாடல் பலருக்குத் தெரியாமல் போய் விட்டது. இருந்தும் இது இரு நல்ல பாடல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசைக்குயிலின் இனிய கீதங்கள் வரிசையில் இந்தப் பாடலுக்கும் ஒரு சிறப்பான இடமுண்டு.

அன்புடன்,
கோ.இராகவன்