PDA

View Full Version : ஆறாம் நம்பர் பிளாட்பாரம்....



rambal
14-04-2003, 06:03 PM
ஆறாம் நம்பர் பிளாட்பாரம்....

அது புதுப் பெண்...
காலை பத்து முப்பதுக்கு ஒன்றும்
இரவு எட்டு நாற்பதுக்குமே அதன்
காதலன் வந்து போவான்..

வாடிக்கை கிடைக்காத
வேசி போல் இருப்பாள்...
தனியாக இருப்பாள்...

ஹிக்கின் பாதம்ஸில்
தொங்கவிடப்பட்ட
தினத்தந்தி தலைப்புச் செய்தி கற்பழிப்பை
தலையைத்திருப்பி
படித்துக்கொண்டே
நகருவேன்...

"என்னடா மாப்பிள்ளே இந்தப் பக்கம்"
என் எதிர்ப்படும் கல்லூரி நண்பணிடம்
வராத விருந்தாளியை வரவைத்துவிட்டு
அவனைக் கடப்பேன்...

"சனிக்கிழமை மறக்காமல் எண்ணெய் தேய்த்துக் குளி"
என்று ஒருவர் சீரியஸாக சொல்லிக் கொண்டிருப்பதை
சட்டை செய்யாமல் அவர்களைக் கடந்து செல்வேன்...

"சூடா போலி! போலி!" என்று போலிகளான
அரசியல்வாதிகளையா அல்லது பலகாரத்தையா
என்று குழம்பி அவன் மீது ஒரு பார்வையை
விட்டெறிந்து விட்டு
படியேறுவேன் முதல் பிளாட்பாரத்திலிருந்து..

இரண்டாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்
முத்து நகர் ஒரு மணி நேரம் தாமதாக (வழக்கம் போல்)
வருவதாக மூன்று மொழிகளில்
ஒரு பெண் சொல்லிக் கொண்டிருப்பாள்...

எனக்கு இதன் மீதும் கவனம் இல்லை
எனும் பொருட்டாக வேகமாக
படிதாண்டி போவேன்...

கடைசிப் பிளாட்பாரம் ஆறாம் நம்பர் பிளாட்பாரம்...
எனக்கு அங்குதான் வேலை..
யாருடைய தொந்தரவும் இல்லாமல்
இரண்டு ரூபாய் செலவில் இரண்டு மணி நேரம்
நிம்மதியாக
நானும் அவளும் எங்கள் காதலும்
சந்திக்கும் இடம்....

கடைசியாக போன மாதம்
அவள் இல்லாத பொழுது
போயிருந்தேன்...
அது ஒரு காதலர் பூங்காவாகியிருந்தது...

இளசு
14-04-2003, 09:32 PM
ஒளி ஓவியர் - தங்கர் பச்சான்
கவி ஓவியர் - எங்கள் ராம்.

gankrish
15-04-2003, 05:38 AM
எந்த ஊரின் பிளட்பாரம் No.6. நானும் அங்கு சென்று காண விரும்புகிறேன் அப்பூங்காவை.

rambal
07-04-2004, 03:38 PM
ஒரு வருடம் கழியப் போகும் நிலையில் பழையதை
நினைவு கூற திருப்பிப் பார்த்ததில்..

என்னை நாவல் எழுதும் முயற்சியில் தள்ளுவதற்கு
காரணமாக இருந்த
இந்தக் கவிதை கண்ணில்பட்டது..

இந்தக் கவிதை மட்டும் எழுதாமல் இருந்திருந்தால்?

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை..

எல்லா பெரிய நிகழ்வுகளும் சிறிய கணத்தில்
இருந்துதான் ஆரம்பிக்கின்றன..

அந்த வகையில் இந்தக் கவிதையும் ஒரு சிறிய கணம்..

வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு
ஒரு வருடம் கழித்து நன்றிகள் பல..

காலதாமதத்திற்கு மன்னிக்கவும்..

இக்பால்
07-04-2004, 03:50 PM
அருமையான கவிதை. பாராட்டுக்கள். தொடருங்கள் ராம்பால்.

-அன்புடன் அண்ணா.

பூமகள்
01-06-2008, 09:50 AM
ப்ளாட்பாரத்தை காதலியாக்கி...
புகையிரதத்தை... காதலனாக்கி...

ஆறாம்நம்பர் பிளாட்பாரத்தில்..
அழகிய கவி நாவலை உருவாக்கிய ராம்பால் அண்ணாவுக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!! :)

சூரியன்
01-06-2008, 10:26 AM
அழகான கவிதை ராம் அண்ணா.