PDA

View Full Version : தனி மனித மொழியும் ரகசியப்பாடல்களும்... (தொகுப்பு)rambal
22-10-2004, 03:02 PM
1. கவிதையிடம் சிக்கிய மொழி..

பதுங்கியிருக்கிறது
ஒரு மிருகமாய்..
பாயக் காத்திருக்கிறது
காயப்படுத்தவும்
கடித்துக் குதறவும்..

பசியாயிருக்கும் வேளையில் இவ்வாறெனில்
பசியடங்கிய வேளையிலோ -
அசை போடும்
பல் குத்தும்
கொட்டாவி விடும்..
ஏதேனும் தட்டுப்படுகிறதா
என கண்கள் சுழற்றி ஆராயும்..

கற்பனைகள் உலவுகின்றன
மிருகமாய்..
பாவப்பட்ட மொழி
பலகீனமானது..

rambal
22-10-2004, 03:04 PM
இது ஒரு வகை வித்யாசமான தொகுப்பு..
புதிய விளிம்புகளைத் தொட முயற்சித்திருக்கிறேன்..
இது முடிந்ததும் ஒரு குறு நாவல் தரவிருக்கிறேன்..
மற்றபடி உங்கள் விமர்சணங்களுக்குப் பிறகு..

rambal
22-10-2004, 03:57 PM
நீலத்தில்
இல்லாவிடில்
மஞ்சளில்..

மஞ்சளில்
இல்லாவிடில்
பச்சையில்..

பச்சையில்
இல்லாவிடில்
சிகப்பில்..

சிகப்பில்
இல்லாவிடில்
நீலத்தில்..

மொழியின்
தரத்தை நிர்ணயிக்கின்றன
நிறங்கள்..

எந்த நிறத்திலும்
எழுத இயலாதவனுக்கு
நிறமில்லா வெண்மையோ
அல்லது
நிறங்களின் கூட்டுக்கலவை கருமையோ..

புரியாத ஜனங்கள்
பற்றி இவனுக்கென்ன?

Narathar
22-10-2004, 03:57 PM
ராம்..............
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்: குறுநாவலுக்கு..................

thamarai
23-10-2004, 05:25 PM
அருமையாக இருக்கின்றது.
மேலும் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்....

karikaalan
24-10-2004, 09:32 AM
கவிதை எழுதுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, மொழியைக் கொலை செய்பவர்களை சாடியுள்ளீர்கள். தங்களது சீற்றம் நியாயமே.

மொழிக்குள்ளும் அரசியல் ஆதாயம் தேடி அலைபவர்களையும் சாடுதல் சரியே.

வாழ்த்துக்கள் ராம்பால்ஜி.

===கரிகாலன்

rambal
30-10-2004, 01:55 PM
செம்மொழி..

காலங்காலமாய்
பலவாறாய்க்
கலந்து திரிந்து
காணாமல்
போய்க் கொண்டிருக்கிறது..

நெடுநாட்களுக்கு முன்
வீட்டைப் பிரிந்த பரதேசி
கிளம்பிய இடத்தை மறந்ததைப் போல்
ஆதிப் புனிதத்தை இழந்து
நிற்கிறது..

ராத்திரியில்
ஓடிப்போய்க் காத்திருந்துவிட்டு
காதலன் வராது போக
விடிந்ததும் வீட்டிற்குத் திரும்பி வந்த
மகளுக்குக் கிடைத்த
மரியாதையோடு இருக்கிறது..

சீழ்பிடித்திருக்கையில்
ஜனித்தவனுக்கு
அவன் முதலில்
சொல்லிப் பழகிய
அம்மா எனும் சொல்
நினைவுகளின்
எந்த அடுக்கில்
கலைந்து போனதென்று
தெரியவில்லை..

pradeepkt
31-10-2004, 05:16 PM
ராம்,
உங்கள் வேதனையின் நியாயங்கள் எனக்குப் புரிகின்றன.
அதிலும், தமிழ் மொழி இப்போது, விடிகாலையில் வீடு திரும்பிய மகளைப் போல்தான் இருக்கிறது. வருபவன், செல்பவன் எல்லாம் தமிழை வளர்த்தேன் என்கிறான். உண்மை என்னவாயின் இவர்கள் எல்லாம் தமிழால் வளர்ந்தார்கள், வளர்கிறார்கள், வளர்வார்கள்!!!
தமிழுக்கு இவர்களின் அங்கீகாரம் தேவையில்லை! தமிழ் தானே தோன்றியது, தானாகவே வளர்ந்தது, தன்னாலே சிறந்தது!

தொடரட்டும் உமது திருப்பணி.
அன்புடன்,
பிரதீப்

இளசு
01-11-2004, 07:44 AM
வேதனைக் கொடுப்பவர்க்கும்..
அவ்வேதனையைச் சொல்லி அழுவோர்க்கும்..
அதைக்கண்டு கருத்து வடிப்போர்க்கும் என

எல்லாவற்றுக்குமாய் மொழி ...

மொழி என்ன நீரா..காற்றா..
பிரபஞ்சமா?

புரியாதது அது...

புரிந்துகொள்ள முயலும் ராமின் கேள்விகள்.....

விடைகள்..?

தேடல் தொடரட்டும்..
பாராட்டுகள் ராம்..

பாரதி
02-11-2004, 01:09 AM
மொழியின் அவசியம் தொடர்பு...
தொடர ஆரம்பித்த பின் மொழியே காதல்...
காதல்வயப் பட்டவர்கள் மொழிக்காயங்களை ஆற்ற முனைகிறார்களோ...?

தொடரட்டும் உங்கள் தொகுப்பு ராம்.

Nanban
09-11-2004, 04:55 PM
நிறங்களின் கலவையில் தன்னை இழக்கும் மொழியைப் பற்றிய கவிதை அருமை. ஆமாம், எழுதுபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வண்ணத்தில் தான் எழுதிகிறார்கள். நிறத்தின் வண்ணத்திற்கேற்ப ஊதியமும் கிடைக்கிறது.

தொடரட்டும் உங்கள் ஆவேசக் கவிதைகள்...

rambal
14-11-2004, 02:07 PM
ஆதியிலே ஒரு சொல் இருந்தது..
அது தேவனிடத்திலிருந்தது..

அச்சொல் கை நழுவி
கீழே விழுந்தது..

விழுந்தது பலவாகி
பிரிந்து சென்றது..
பலரிடம் கலந்து சென்றது..

கலந்தவைகள்
திரிந்த போயின..
திரிந்தவைகள்
மறு உற்பத்தியாயின..

புதிய சொற்கள்
பிறந்தது..
அர்த்தமில்லாமல் இருந்தது..

தேவன் தேடிப்பார்த்தார்
தனது ஆதி சொல்லை..

எங்கு தேடியும்
கிடைக்காது போக
மூர்ச்சையாகிப் போனார்...

rambal
14-11-2004, 02:09 PM
தேவாலயங்களில்
நிலவும் பேரமைதியில்
உறைந்து கிடக்கும் சொற்கள்
கொண்டு
எழுதுதல் சாத்தியமா?

அம்மன் கோவிலில்
உச்சி கால வேளையில் முழங்கும்
முரசுவில் இருந்து தெறிக்கும் சொற்கள்
கொண்டுதான்
எழுதுதல் சாத்தியமா?

மனதிற்குள் இருக்கிறது
இன்னும் அணையாமல்
எரியும் நெருப்பு..

நெருப்பை நெருப்பாய்
உமிழாமல்
கவிதையாய் உமிழ
எனக்கொரு மொழி வேண்டும்..

நேற்று பதுக்கி வைக்கப்பட்ட
வார்த்தைகளில்
எஞ்சியிருப்பவை
நாளை தேசிய கீதமாகலாம்..

தேசிய கீதம் எழுத
எனக்கொரு
மொழி மட்டும்தான் வேண்டும்..

அமரன்
24-04-2008, 06:50 AM
நண்பர்களே!!
நீங்கள் சுவைக்கவும், படைத்தவற்றை பரிமாற்றவும்..
மொத்தத்தில் ஜுகல் பந்தியை ருசிக்கும் நோக்கத்தில்..