PDA

View Full Version : புறநானூற்றுக் கவிதைகள்



இளசு
13-04-2003, 08:59 PM
திஸ்கி, ஒருங்குறி மன்றப் பதிவுகள் இணைக்கப்பட்டது.-அமரன்

புறநானூற்றுக் கவிதைகள்
புது (குறு) வடிவில்


வாழ்க்கை
மூலம் : புலவர் ஓரேர் உழவர்

தப்பியோட ஆசை - சிக்கும்
வாழ்க்கை சேறு காலில்
மான் போல நான்
0

கொடுக்கும் வரை
மூலம்: புலவர் பெரும் பதுமனார்

நேற்றுக் கொடுத்தது செரித்ததும்
மீண்டும் வந்தன
ஆலமரத்திடம் கிளிகள்
0

கருப்புக் கொடி
மூலம்: புலவர் கல்லாடனார்

கருப்புக்கொடி கண்டா போர் நிறுத்தினாய்
ஓ...கணவனை இழந்தவளின்
கலைந்த கூந்தல்

குமரன்
14-04-2003, 02:09 AM
புறநானூற்றுக் கவிதைகள்
இங்கே சிறு ஊற்றுக்களாய்
எளியத் தமிழில்...என்னை போன்ற
பாமரருக்கும் புரியும் மொழியில்...

தமிழ்மன்றத்தின் கோனாருக்கு பாராட்டுக்கள்.

மேலும் அழைத்துச் செல்லுங்கள்,
வருகிறோம் தமிழ்க்கடல் ஆழம் அறிய.

-குமரன்.

sujataa37
14-04-2003, 07:15 AM
அருமை.

என்னைப் போன்ற பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழே பயிலாதவர்களுக்கு பிரமிப்பூட்டும் தொடர்.

புதுக்கவிதை, ஹைக்கூ போன்றவற்றை அன்றே தொட்டுவிட்டார்கள் நமது பண்டையர்.

வழிகாட்டுதலுக்கு நன்றி

சுஜாதா

karikaalan
14-04-2003, 11:14 AM
இளவலே!

புறப்பாடல்களை குறுநூறு ஆக்கும் பணியா? கடினமான முயற்சிதான். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

aren
14-04-2003, 01:05 PM
எப்படி இத்தனை விஷயங்களை இவ்வளவு அழகாக கொடுக்கிறீர்கள். நீங்கள் என்ன நிஜமாகவே தழிம் பண்டிதரா

poo
14-04-2003, 01:25 PM
உங்கள் (புது)முயற்சி அபாரம்.... தொடருங்கள்... இப்படி நிறைய எழுதி புத்தகமாய் போடுங்கள்... புதுமை விரும்பிகள் இனியாவது படிக்கட்டும் புறநானுற்று கவிதைகளை.......

rambal
14-04-2003, 05:21 PM
தமிழின் பண்மையில் இலக்கணத்தில்
தொய்ந்து போயிருக்கும்
புறநானூறை
தமிழின் இளமையில்
இருக்கும் புதுக்கவிதை வடிவில்
கொடுக்க முயலும் உங்கள் முயற்சி
பாராட்டுக்குரியது..

முடிந்தால்
"செங்கால் நாரை தூது.."
கொஞ்சம் அகநானூறு வாசம் அடிக்கும்
"சிறுகோட்டுப்பெரும்பழம் தூங்கியாங்கிவள்"
ஆகியவைகளை எனக்காக மாற்றித் தரமுடியுமா?
ஏனெனில் இவைகள் என்னுடைய
all time favourites...

இளசு
15-04-2003, 11:46 PM
அவன் மட்டுமா
மூலம் : புலவர் கபிலர்

மண்ணைக் காப்பவன் என்று பாரியை
மட்டும் புகழ்வது ஏன்....?
மழையும் செய்யும் அது !
0
மகன் எங்கே
மூலம் : புலவர் காவற்பெண்டு

"புலி போர்க்களத்தில் - அது
குடிருந்த மலைக்குகை மட்டுமே வீட்டில்".
உண்மையான புரட்சித்தாய்.

madhuraikumaran
16-04-2003, 12:13 AM
வஞ்சப் புகழ்ச்சியணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு முதற்செய்யுள் ! தமிழ் மண்ணின் வீரத்தைப்பறை சாற்றும் இரண்டாவது !

அதை ஹைகூ பாணியில் கலக்கலாச் சொன்ன இளசுக்கு பாராட்டுகளும் நன்றியும் !!!

இளசு
16-04-2003, 07:02 AM
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்
குமரன்
சுஜாதா
அண்ணன்
அன்புள்ள ஆரென்
தம்பி பூ
இளவல் ராம்

அனைவருக்கும் என் நன்றிகள்...

poo
16-04-2003, 03:27 PM
உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்!!

rambal
16-04-2003, 05:27 PM
குறும்பாக்கள் அருமை..
தொடரட்டும் உங்கள் பணி..
நான் கேட்டது என்னவாயிற்று?

lavanya
17-04-2003, 10:24 AM
இதை தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது...புதிய முயற்சி... தமிழுக்கு இது ஒரு நல்ல அங்கீகாரம். எளிமை இன்னும் நிறைய பேரைக் கவரும்
தொடருங்கள்... சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்

இளசு
18-04-2003, 03:41 PM
வறுமையில் செம்மை
மூலம் : புலவர் மதுரைக்குமரனார்

வரகுச்சோற்றோடு வயிற்றை நிரப்பும்
கீரை இன்று குறைகிறதே.....
"மான் மேய்ந்து ஓய்ந்த மீதி"

0

வறுமை சொல்ல நாணம்
மூலம்: புலவர் ஆவுர் மூங்கில்கிழார்

வறுமையா யார் சொன்னது
செம்பட்டு மறைக்குமே என் மனைவி மேனி
நாணமே ஆடை

0

படைத்தவன் கணக்கு
மூலம்: புலவர் நன்கணியார்

ஒரு வீட்டில் சாவு மேளம்
மறு வீட்டில் மண மேளம்
இடம் மாறும் கூந்தல் பூ

poo
18-04-2003, 03:56 PM
புதுமைகளை புகுத்தி புகுந்து விளையாடும் புலவரே... தொடரட்டும் உங்கள் பணி!!!

rambal
18-04-2003, 07:04 PM
புறநானுறை இப்படி எழுதலாமா?
எழுதலாம்.. சொல்கிறது உங்கள் எழுத்து..
பாராட்டுக்கள்.. தொடருங்கள்..

இளசு
18-04-2003, 08:18 PM
சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்

நன்றி தீட்சண்யா
கற்றுக்கொடுத்தவருக்கே காணிக்கை!

இளசு
18-04-2003, 08:26 PM
மனம் கவர்ந்த மதுரைக்குமரன்
என் தம்பி பூ
இளவல் ராம்

உங்களுக்கு மூத்த அண்ணனின் நன்றிகள்....

குமரன்
18-04-2003, 11:40 PM
மேலும் மூன்று முத்துக்கள்...
முத்துக்கு(வி)ளிப்பு இ*ன்னும் தொடரும்
என்ற நம்பிக்கையில்...

முடிந்தால் மூலக்கவிதையும் பதிவு செய்ய (கேட்பது அதிகம்தான்....) ஒரு பனிவான வேண்டுகோள்...


-குமரன்.

lavanya
18-04-2003, 11:55 PM
தித்திப்பாய் உள்ளது உங்கள் முத்துக்கள்
நீர் இன்னும் முத்துக்களாய் தொடர்ந்து கொட்டுங்கள்

gans5001
19-04-2003, 01:29 AM
முடிந்தால் மூலக்கவிதையும் பதிவு செய்ய பனிவான வேண்டுகோள்...
-குமரன்.

நானும் கூட அதையே விரும்புகிறேன். கவிதையின் சுவை இன்னமும் கூடும்

madhuraikumaran
21-04-2003, 05:21 AM
மூலம் : புலவர் மதுரைக்குமரனார்

நம்ம பெயரில் ஒரு புறநானூற்றுக் கவிஞரா?.... இது வரை அறிந்திராதது. தகவலுக்கு நன்றி இளையவரே !!!
உங்கள் மொழிபெயர்ப்புகள்(?!!) அருமை !!! மற்ற நண்பர்கள் கூறுவது போல் மூலக் கவிதையும் கொடுத்தால் இன்னும் சுவைபட இருக்கும் !

Narathar
21-04-2003, 06:57 AM
நாரதப்புலவர் கவிதை உம் கண்ணில் படவில்லையா?

இளசு
09-05-2003, 09:06 PM
அன்பாலே நீ அடங்கு.....!


பாடியவர் : புலவர் ஔவையார்

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே ! மற்று அதன்
துன்னரும் கடாஅம் போல
இன்னாய் பெரும, நின் ஒன்னா தோர்க்கே....!


ஊருணியில்
ஊர்ச்சிறுவர்
விளையாடிக் கழுவிவிட
வெண்தந்தம் காட்டுமே

அந்த
அன்பு நேர யானையைப் போல்....
எங்களுக்கு இனியவன் நீ........

எதிரியாய் எண்ணி
மோத வந்தவர்க்கு
நெருங்கவும் முடியாத
மதயானையும் நீ !

முத்து
09-05-2003, 10:38 PM
அருமை !! ஆகா ! எத்தனை அருமையான பாடல் , நன்றி , இளசு !

karikaalan
10-05-2003, 01:14 PM
எளியோர்க்கு எளியோனாய்
பகைவனுக்கு எமனாய்
இருப்பவனே தலைவன்!

அருமையான பாடல். கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் இளவலுக்கு.

===கரிகாலன்

தஞ்சை தமிழன்
10-05-2003, 02:08 PM
பழைய பாடல்களின் மகத்துவத்தை மறந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ் சமுதாயத்தினை எழுப்பி இந்த பாடலை நினைவு படுத்தும் இளசுவுக்கு எனது நன்றி.

poo
10-05-2003, 04:00 PM
உங்களைப்போல ஒருவர் இப்படி தெளிவா சொன்னாத்தானே............

மிக்க நன்றி அண்ணா!!!

suma
10-05-2003, 10:52 PM
அண்ணா உமது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

rambal
11-05-2003, 03:39 PM
சங்ககாலம் மன்றத்தில் வாழ்கிறது.. வாழ வகை செய்யும் அண்ணனுக்குப் பாராட்டுக்கள்..

இளசு
28-06-2003, 11:12 PM
வாழ்த்திய உடன்பிறப்புகளை வாழ்த்தி நன்றி சொல்லி தொடர்கிறேன்...

வணிகமா.... வாழும் வழியா?

பாடியவர் - புலவர் முடமோசியார்

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே....

'இப்பிறவியில் தானம் விற்பேன்...
மறுபிறவிக்கு புண்ணியம் வாங்கி ' -- எனும்
தர்மக்கடை வியாபாரியா என் மன்னன்?

"நல்லவர் சென்ற வழி இது " என
நம் வரலாறு சொன்னது கைநீட்டி...
ஆதலால் அவ்வழி சென்ற மன்னன்
அன்றாடம் தருகிறான் கைநீட்டி...

lavanya
29-06-2003, 12:02 AM
சத்தமே இல்லாமல் ஒரு புதிய புரட்சி நடந்து வருகிறது இந்த தளத்தில்...
அதுவும் குறிப்பாக இது போன்ற படைப்புகளில்....
தமிழுக்கு நீங்கள் செய்யும் இந்த அரிய தொண்டுக்கு
என் வந்தனங்கள்.....

இது போன்ற பதிவுகள் காலம் உள்ளவரை நீடித்து நிற்க வாழ்த்துக்கள்

இளசு
29-06-2003, 12:09 AM
நன்றி லாவண்யா
உங்களைப்போன்றவர்களின்
ஊக்கமே
இப்பதிவின்
ஊற்றுக்கண்....

இ.இசாக்
14-07-2003, 06:04 PM
நல்ல முயற்சி இளசு
சிறப்பான வார்த்தையாடல்..
வாழ்த்துக்கள். தொடருங்கள்.
கவிஞர் அறிவுமதி அவர்கள் கூட
புறநானூறு உரை எழுதிக்கொண்டுள்ளார்.
விரைவில் வரும் என நினைக்கிறேன்

இ.இசாக்
20-07-2003, 05:31 PM
வாழ்த்துக்கள் அய்யா
தொடருங்கள்

முத்து
21-07-2003, 12:12 AM
நன்றி அண்ணா ... தங்கள் பணியைத் மீண்டும் தொடருங்கள்...

இளசு
21-07-2003, 10:07 PM
நன்றி நண்பர்-கவிஞர் இசாக் அவர்களே...
நன்றி தம்பி முத்துவுக்கு...
(தம்பியின் புது அவதாரம்.... அருமை கண்ணு படும்..
சுத்திப்போடச்சொல்லுங்க.. :D )

இளசு
23-07-2003, 08:43 PM
கவிஞர் அறிவுமதி அவர்கள்
புறநானூறு உரை எழுதிக்கொண்டுள்ளார்.


உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
என் மனங்கவர் கவிஞர் இசாக் அவர்களே..

கவிஞர் அறிவுமதி போன்றவர்கள்
தமிழ்க்கடல் கடக்க
பாலம் கட்டும் படைவீரர்கள்!
நான் அணில் போல..
ஆர்வம் மிகுதி.... ஆனால்
ஆற்றல் சொற்பம்!

இ.இசாக்
24-07-2003, 05:15 AM
இல்லை..இல்லை
இளசு அவர்களின் திறமையில் நம்பிக்கையுண்டு.
புதிய முயற்சி புதிய யுக்தி எல்லாம் உங்களிடமுள்ளது

இளசு
05-09-2003, 05:45 PM
இன்னும் யாருண்டு?
பாடியவர் : புலவர் கபிலர்

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன் றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே;

முன்னூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு;
முன்னூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்.

யாமும் பாரியும் உளமே!
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே!


எதிர்நிற்கும் மூவேந்தர் படைகள் ஒன்றுகூடி வந்தாலும்
எங்கள் பறம்பு நாட்டை வெல்ல முடியாது எந்நாளும்..

நாட்டுக்குள் இருந்தது வளமான முன்னூறு ஊர்...
பாட்டுக்குப் பரிசாக அத்தனையும் கொடுத்தோம் பார்..

நானுண்டு, பாரியுண்டு
நகராக் குன்றும் உண்டு.
பாடி அதையும் பரிசாக
பெற்றுப் போக யாருண்டு?

poo
05-09-2003, 08:32 PM
இது பலமா.. பலவீனமா...

பாட்டுக்கு நான் அடிமைபோல.. அண்ணன் இளசுவின் புது(ற)நானூற்று விளக்கங்களுக்கும்!!

பாராட்டுக்கள் அண்ணா.. பரண்மீதிருந்து பரண்மீதிருந்து இறக்கியாயிற்று இனி பக்கங்கள் நீளட்டும்... படையுங்கள் படையெடுங்கள் புறநானூற்றுப் படையெடுங்கள்!!

puppy
05-09-2003, 09:00 PM
பள்ளிக்கூட காலங்களில் ஒரு பாடமாக படித்தபோது
அனைத்து பாடல்களையும் என்றைக்காவது ஒரு நாள்
படிக்கவேண்டும் என்ற என்னுடைய ஆசையை
தெரிந்து கொண்டு
அதற்காக அழகாக பாடலோடு விளக்கமும் கொடுத்து வரும்
உங்களது உயரிய பண்புக்கு அன்புக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
தொடருங்கள் உங்களின் பயணத்தை......

அன்புடன்
பப்பி

இளசு
06-09-2003, 11:55 PM
எப்போதும் என்னைத் தூக்கிப்பிடிக்கும் தம்பி பூவுக்கும்
மிகப்பெரிய ஊக்கம் கொடுத்த பப்பி அவர்களுக்கும் நன்றி..

தொடருவேன் உங்கள் ஆதரவுடன்...

karikaalan
07-09-2003, 04:50 AM
இளவல்ஜி!

இப்பாடல் பலவற்றை சொல்லாமல் சொல்கிறது. அறத்தால் உயர்ந்து இருப்பவனிடம், என்னத்தை ஜெயித்துவிடமுடியும்!

வாழ்த்துக்கள். தொடருங்கள் சேவையை.

===கரிகாலன்

இ.இசாக்
07-09-2003, 05:32 AM
புறநானூறு தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிசம்
இதை பயன்படும் படி அழகாக செதுக்குகிற அண்ணன் இளசு அவர்களுக்கு பாராட்டுக்கள்

சேரன்கயல்
07-09-2003, 10:48 AM
இனிய இளசு...
இதோ சற்று நேரத்திற்கு முன்னர்தான் இந்த பதிவைப் பார்க்கும் பாக்கியத்தைக் கண்கள் பெற்றன...
பள்ளியில் தமிழாசிரியர் சொன்னபோது விளங்காததெல்லாம் கொம்பெடுக்காமல் இனிய எளிய சொல்லெடுத்து நீங்கள் சொல்ல மண்டைக்குள் ஏறி மனதுக்குள் நிறைகின்றன...
புறநானூற்றை புதிதாய் குறும்பாவாய் வடித்தமையும், பாடலை எழுதி அதன் பொருளை அழகாய் விளக்கியிருப்பதும்...அருமை...ஆற்றல் கண்டு வியக்கிறேன்...
இந்த முயற்சி சூடு பிடித்து புத்தகமாய் வரவேண்டும்...இன்னும் கொஞ்சம் ருசிகரமாய் (கமெண்ட் எல்லாம் இணைத்து) எழுதி புத்தகமாய் வெளியிட்டால்...இளைய தலைமுறைக்கு எளிதில் தமிழை படிப்பிக்கலாம்...இன்னும் இலக்கியத்தை வேம்பென்றொதுங்குபவர்களுக்கும் இவற்றை சேர்பிக்கலாம்...
அறிவியலை சுலபமாக்குவதுபோல இலக்கியத்தையும் சுலபமாய் புரிந்து கொள்ளச் செய்தல்...பயனாளிகளை அதிகமாக்கும் என்பதே எனது கருத்தும், ஆதங்கமும்...

இளசு
22-09-2003, 04:01 PM
அழகாய் ஒரு வரியில்
பாடலின் முழுப்பொருளைச் சொன்ன அண்ணல்

தட்டிக்கொடுத்த இளவல் இசாக்

என் தகுதிக்கு மீறிப் புகழும் இளவல் சேரன்கயல்

இன்னும் ஆதரவு தரும் அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி கூறி
எளியவனின் முயற்சி தொடர்கிறது.....

இளசு
22-09-2003, 04:01 PM
பேகன் - ஒரு (விதத்தில்) மடையன்!
(பாடியவர் - புலவர் பரணர்)

ஆறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது
படை மடம் படான் - பிறர்
படைமயக் குறினே.

ஆறென்ன குளமென்ன -
அங்கேயும் கொட்டும்..
அகண்ட வயல்வெளியா -
அங்கேயும் பொழியும்..
சேர்ந்தும் தேறாத உப்பு நிலமா -
உவந்து அதற்கும் ஊட்டும்...

இடம் பார்த்துக் கொடுக்காமல்
எல்லார்க்கும் கொடுக்கும்
வள்ளல் மழை போல
எங்கள் பேகன்...!

கொடையில் மட்டுமே மடையன்!
இடம் பார்த்து போரிடும்
படையறிவிலோ தலைவன்!

சேரன்கயல்
22-09-2003, 04:22 PM
"நான் ஒரு மடையன்" என்றத் தலைப்பில் ஒரு பதிவு...

இங்கே...மயிலுக்கு போர்வை தந்த
பேகன் - ஒரு (விதத்தில்) மடையன்!
(பாடியவர் - புலவர் பரணர்)
...என்ற தலைப்பில் ஒரு புறநானூற்றுப் பாடல் பதிவு...

இதைப் பாருங்கள் இளசு...இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்...உங்களை தகுதிக்கு மீறியெல்லாம் புகழ்ந்துவிடவில்லை...

என் தகுதிக்கு மீறிப் புகழும் இளவல் சேரன்கயல்

...உள்ளதை சொன்னேன்...உணர்ந்ததைச் சொன்னேன்...அது புகழ்சிக்காக மட்டுமே அல்ல..

தொடரட்டும் உங்களின் பதிவுகள்...
பேகனைப் போல் மன்றத்து மயில்களுக்கு (அன்புப்)போர்வை தந்து மகிழ்ச்சியூட்டுங்கள்....

இளசு
22-09-2003, 04:27 PM
அன்பு சேரனுக்கு
அவன் பேகன்
நான் பேக்கன்! :p

puppy
22-09-2003, 04:29 PM
வணக்கம் பேக்கன்..நல்லா இருக்கு கூப்பிட :)

சேரன்கயல்
22-09-2003, 04:29 PM
பேகனை கொஞ்சம் செல்லமாக அழுத்திச் சொன்னதாக எடுத்துகொள்கிறேன்...

இளசு
22-09-2003, 04:38 PM
வணக்கம் பேக்கன்..நல்லா இருக்கு கூப்பிட:)
அய்யய்யோ பப்பி அவர்களே...
நீங்க அப்படி எடுத்துகிட்டீகளா?
பரணர் பாடியதை சுட்டவன் நான்...
Baker... தன்னடக்கத்தில் பேக்கன்..

நீங்க கூப்பிட்டா எந்த அர்த்தமாயிருந்தாலும்
நல்லாத்தானிருக்கும்.


பேகனை கொஞ்சம் செல்லமாக அழுத்திச் சொன்னதாக எடுத்துகொள்கிறேன்...

ரொம்ப்ப்ப்ப அழுத்திடாதீக சேரன்..
நான் அப்பளத்தை அபளம் என்றுதான் சொல்லுவேன்..:D

இ.இசாக்
22-09-2003, 04:50 PM
அண்ணன் இளசுவும்
வள்ளல் மழைதான்.......
ஆம்
இலக்கிய பொக்கிசத்தை எல்லோருக்குமாக
அள்ளி..அள்ளி தருகிறாரே!
வாழ்க வள்ளல் இளசு அண்ணா!

இளசு
22-09-2003, 05:25 PM
நன்றி இளவலுக்கு
ஓயாமல் நீங்கள் பெய்யும் மழையைவிடவா?

poo
23-09-2003, 04:44 PM
சுழன்று சுழன்று பதிக்கும் உங்கள் திறன்கண்டு வியக்கிறேன்.. மீண்டும்!!

இளசு
11-10-2003, 04:31 PM
பூவுக்கு நன்றி சொல்லிப் பதிக்கிறேன்..


உன்னை விட அவனே....

புலவர் வெண்ணிக்குயத்தியார்
மன்னன் கரிகால் சோழனை
அரசவாகைத் திணைத்துறையில் பாடியது

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்; நின்னினும் நல்லன் அன்றே,

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிக்க புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந்தானே!!

*******

கரிய யானைப்படை கொண்ட
கரிகால் வளவனே!
காற்றை வென்று
கடலலை சமாளித்து
கப்பல் விட்டவர்
வம்சம் நீ!

எதிரியிடம் சென்று
ஆற்றல் கொண்டு
வென்று நின்றவன் நீ!
உன்னிலும் நல்லவர் யாருண்டு?
ம்ம்ம்ம்....

கலகலப்பாய் ஓர் ஊர்
வெண்ணி அதன் பேர்.
அங்கே ஒரு போர்.
உன்னிடம் -
புறப்புண் பெற்று வெட்கி
வடக்கிருந்து
ஓயாப் புகழுடன்
உயிர் விட்டவன்??????

poo
11-10-2003, 04:39 PM
மீண்டுமொரு நன்றியினை எதிர்ப்பாராமல் அண்ணனை பாராட்டி கடனைச் செய்கிறேன்!!

puppy
11-10-2003, 04:41 PM
சுழன்று சுழன்று.....சரியாக சொன்னீங்க பூ.......

சுழன்று சுழன்று பதிக்கும் உங்கள் திறன்கண்டு வியக்கிறேன்.. மீண்டும்!!

Emperor
12-10-2003, 07:17 AM
அருமையான புறநானூற்றுக் கவிதைகளை அழகாக தொகுத்து எங்களுக்கு விருந்தளிக்கு எம் சொந்தம் இளசு அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை

வாழ்க நிம் தொண்டு

இளசு
12-10-2003, 07:20 AM
பாராட்டிய தம்பி பூவுக்கும் எங்கள் பப்பிக்கும் நன்றி..
எம் சொந்தம் எம்ப்பரரே
இந்தத் தொடரே உங்களின் பாரதியார், குறுந்தொகை தொடர்களின்
அருமை கண்டு வந்த பாதிப்பு.
இதற்கான எந்தப் பாராட்டும் உங்களைத்தான் சாரும்.

முத்து
12-10-2003, 02:18 PM
அருமை இளசு அண்ணா ...
நன்றிகள் ... மேலும் .. ஒரு சந்தேகம் ...
இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியா என்ன..?
வடக்கிருந்து உயிர்விட்ட மன்னன் யார் ..?

இளசு
12-10-2003, 05:09 PM
பாராட்டுக்கு நன்றி முத்து
மன்னன் பெயர் தெரியவில்லை.
பறந்தலை?

அரசவாகை திணை இது.
இகழ்வது போல் உண்மையில் புறமுதுகிடும் அளவுக்கு
ஓடச் செய்த வளவனைப் புகழ்வதே புலவரின் நோக்கம்.
வஞ்சப்புகழ்ச்சிக்கு எதிர்.
(உச்சநட்சத்திரம் பாடலும் இவ்வகையே.)

Emperor
14-10-2003, 06:01 AM
எம் சொந்தம் எம்ப்பரரே
இந்தத் தொடரே உங்களின் பாரதியார், குறுந்தொகை தொடர்களின்
அருமை கண்டு வந்த பாதிப்பு.
இதற்கான எந்தப் பாராட்டும் உங்களைத்தான் சாரும்.

:confused: என்ன சித்தப்பு இப்படி சொல்லிட்டீங்க?
உங்களை போன்ற சான்றோர்களின் ஆசி, ஊக்கம் மற்றும் பாராட்டுகளால் தான் என்னால் இதையெல்லாம் இங்கே கொடுக்க முடிந்தது.

நீங்கள் ஒரு ஞானி நான் உங்கள் சிஷ்யன்.

இக்பால்
14-10-2003, 01:03 PM
ரொம்ப காலங்களுக்கு பாடத்தில் படித்த சில...

படிக்காத பல ....தொடரும் அண்ணாவுக்கு நன்றி.

-அன்புடன் இளவல்.

இளசு
15-10-2003, 11:13 PM
இளவல் இக்பாலுக்கு நன்றி,

சொந்தமே
சமரசமாயிடுவோம்..
நாம ரெண்டு பேரும்
பரஸ்பர
குரு - சிஷ்யன் !!
:Dபரமார்த்த குரு- சிஷ்யன் அல்ல :D
( சுமா வராங்க..உஷார்!!!)

இக்பால்
16-10-2003, 04:28 AM
:)

இளசு
17-10-2003, 03:45 PM
வெட்டவில்லை, விசிறினாய்!
முரசுக்கட்டிலில் துஞ்சிய புலவர் மோசி கீரனார்

மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப்
பாடாண்திணையில் பாடிய பிரபலப் பாடல்!

(பெயரின் சூட்சுமம்..
பொறை - பொறுமை..! காத்தல்!!)


மாசற விசித்த வார்புறு வன்பின்
மைபடு மருங்கல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொல்ங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேடகை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரை முகந்து அன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபாற் பகுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூம் சாலும், நற்றமிழ் முழுதும் அறிதல்;

அதனொடும் அமையாது அணுக வந்து, நின்
மதனுடை முழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசியோயே! வியலிடம் கமழ
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்!
வலம்படு குருசில்! நீ ஈங்கு இது செயலே!!

******************************************
வார் கட்டி உறுதியாய் - பக்கங்கள்
பளபளக்கும் கருமையாய்
மயிலிறகால், மணிகளால்
அழகான நகைகளால்
கொடி கட்டி அலங்கரித்தும்
குருதிப்பசி கொண்ட பெரு முரசம்
நீராடி வரப் போன நேரம்.....

எண்ணெய் நுரைபோல
மென்மை மலர்கள் தூவிய
அதன் கட்டிலில் படுத்துவிட்டேன்...

இரண்டு துண்டாய்
என்னை உன் வாள்
வெட்டி இருக்க வேண்டும்..
விட்டு விட்டாய்!
இது ஒன்றே போதும் - உன்
இதயப் பெருமை அறிய...!

அத்தோடு விட்டாயா?
அருகில் வந்து
பெருந்தோள் உயர்த்தி
சில்லென விசிறினாய்..!!

'இவ்வுலகில் புகழ் இல்லாதவர்க்கு
அவ்வுலகில் இடம் இல்லை' எனும்
பொய்யாமொழியை
மெய்ப்பிக்கச் செய்தாய் !!

முத்து
17-10-2003, 05:24 PM
அருமை அண்ணா ...
பள்ளியில் படித்த கதை ...
பாடலை இங்கு வந்துதான் படிக்கிறேன் ...
மிக்க நன்றி .. தொடரட்டும் உங்கள் பணி ....

இளசு
17-10-2003, 09:39 PM
நன்றி முத்து..
நானும் பள்ளிக்காலத்துக்குப் பிறகு இன்றுதான்......................!

poo
31-10-2003, 06:26 PM
வருங்காலத்தில் மகளுக்கு (எளிதாய்) இதை சொல்ல..

என் மகள் அன்று...

" நைஸ்.. பெரியநைனா.. அவரை நான் பாக்கனுமே!!!"

இளசு
31-10-2003, 09:51 PM
நம் வாரிசுகளும் மன்றத்தில் பதிக்கும் காலம் கண்ணுக்குத் தெரிகிறது பூ...

"பெரியப்பா ஆரம்பித்த தலைப்பு" என உன் வாரிசு முன்னுரை கூறும்
காட்சி மனக்கணினியில் கண்டு இப்போதே எனக்குள் பூரிப்பூ!

சேரன்கயல்
02-11-2003, 06:06 AM
வாரிசுகள் பதிக்கும் காலத்தில் தமிழ்மன்றம் ஒரு இணைய தமிழ்களஞ்சியமாக அமைந்துவிடும் என்பது...இந்த புறநானூறு போன்ற அற்புதமான பதிவுகளைக் கண்டால் நம்மால் கணிக்கமுடிகிறது...

தன் படுக்கையில் படுத்த புலவனுக்கு துயில்கலைக்காமல் மன்னன்
விசிறியும் விட்டது , மனிதாபிமானச் செயல் என்றாலும்...மன்னனின் தமி மீதான பற்றையே கூறுகிறது...
(இப்போ அப்படியெல்லாம் நடக்குமா?? சுட்டுட மாட்டாங்களா கறுப்பு பூனைகள்....)

இளசு
02-11-2003, 01:43 PM
இந்தப் பாராட்டு மொழிகள் இன்னும் உழைக்கத் தூண்டுகின்றன..
நன்றி இளவல் சேரன்கயல்...

இளசு
22-11-2003, 11:21 PM
நெல்லிக்கனி தந்த அதியனே

புலவர் ஔவையார்
மன்னன் அதியமானை
பாடாண்திணையில் வாழ்த்திய சிறப்பான பாடல்.

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்கொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்!
போர் அடு திறவின் பொலந்தார் அஞ்சி !!
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல,
மன்னுக பெரும நீயே; தொல்நிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே !

*********************************************************************************************

வன்மையான வாள் ஏந்தி, பகைவர்
களம் புகுந்து வென்ற
கழல் அணிந்த வன்கை உடையவனே..
அதியர் தலைவனே....
உன் திறம் கண்டு பயந்தான் பகைவனே..

சிவன் நெற்றியில் அணிந்ததோ
பால் வண்ண நிலவுத் துண்டை..
ஆலகால விஷம் அடக்கி அவனுக்கு
நீலவண்ணத் தொண்டை...

ஈசனைப்போல் பெரியவனே நீ வாழ்க..

பழம்பெரும் குன்றத்தில்
அரிதான உயரத்தில்
சிறுஇலையுடன் காய்த்த
இனிக்கும் நெல்லிக்கனியில்
உள்ள பயனை உள்ளபடி சொல்லாமல்
உன் உள்ளத்துள் ஒளித்துவைத்து
என்னை வாழவைக்க தந்தவனே...

ஈசனைப்போல் பெரியவனே நீ வாழ்க!

முத்து
23-11-2003, 01:20 AM
அதியமான் ஈந்த
நெல்லிக்கனி கதையைக்
கேள்விப்பட்டதுண்டு ...
கவிதையைப் படிக்கும் பேறு இன்றுதான் பெற்றேன்..
நன்றிகள் இளசு அண்ணா ....

இளசு
24-11-2003, 06:10 PM
நன்றி தம்பி முத்துக்கு

ஒரு புறநானூறு பாடலால் மனம் ஆறவில்லை..
இன்னும் நனையப்போகிறேன்..

முத்து
24-11-2003, 06:17 PM
அண்ணா ..
உண்மையில்
நீங்கள் நனையப் போவதில்லை ...
எங்களை நனைக்கப்போகிறீர்கள் ... :D

பொதிகை
29-11-2003, 12:38 AM
புறநானூற்றுக் கவிதைகளை அழகாக தொகுத்து
வழங்கும் இளசு அவர்களுக்கு நன்றி.

தமிழர்களின முதுபெரும் நூல் புறநானூறு
சங்க கால தமிழகத்தின் திசைகளை, நிலப் பரப்புகளை
தெளிவாக காட்டும் புறநானூற்று பாடலில் ஒரு துளி இது..

காரிகிழார் புலவர் பாண்டிய மண்ணனை பாடிய பாடல் இது

"வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
தேனஅ துரகழு குமரியின் தெற்கும்
குனா அது கரையொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளத்தினட குடக்கும்"

பனிதங்கிய நெடிய இமயமலையினது வடக்கில் உள்ள பகுதிகள் வடக்கு திசையாகவும்
பறுள்ளி று என்ற குமரி ற்றின் தெற்கே உள்ள பகுதிகள் தெற்கு திசையாகவும்
சாகர்கள் நிரம்பிய (ஐவா,சுமத்ரா) நாடுகள் உள்ள பகுதிகள் கிழக்கு திசையாகவும்
பழைய கடல் (அரபிக் கடல்) மேற்கு திசையாகவும்

-- இருந்தன என குறிப்பிடுகிறார் புலவர்.

உங்கள்
பொதிகை

இளசு
01-12-2003, 06:35 PM
இப்பதிவில் என்னோடு கரம் கோர்த்த
அன்பு நண்பர் பொதிகைக்கு
என் நன்றியும் பாராட்டும்..
++++++++++++++++++++++
மீண்டும் புலவர் ஔவையார்
மீண்டும் மன்னன் அதியமானை
வாகைத் திணையில் வாழ்த்திப்பாடிய
பாடல்.

போற்றுமின் மறவீர்..! சாற்றுதும் நும்மை !!
ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்
தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராத்து அன்ன என் (ஐ)
நுண்பல் கருமம் நினையாது
இளையவன் என்று இகழின்
பெறல் அரிது ஆடே..!!!

போற்றத்தக்க வீரர்களே!
சொல்கிறேன் கேளுங்கள்...
ஊர்ச்சிறுவர்கள் விளையாட்டில்
கலங்கி இருக்கும்
முழங்கால் அளவு சிற்றோடையிலே
யானையை வெல்லும் முதலை...

இதேபோல
எம் மன்னனின்
நுண்ணிய செயல்திறம் அறியாது
"இளையவன்"தானே என்று
இகழ்ச்சியோடு வந்தால்
வெல்வது மிகக் கடினம்..!!




இந்தக் "குறியீடுகளை " விளக்கம் கூறாமலே
(ஒன்றே முக்கால் வரிகளுக்குள் சொற்களைச் செதுக்கி
வெண்பா தளைக்குள் பூட்ட வேண்டிய அவசியத்தால்)
வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

சொல்ல வந்ததை நேரிடையாகச் சொல்லாமல் விட்டு
உவமைக் குறியீடுகளோடு நிறுத்திவிடும் இம்முறைக்கு
பிறிது மொழிதல் என்று பெயர்.

ஆனால் " இடன் அறிதல்" என்னும் அதிகாரத்தலைப்பு
வாசகனை சரியான பாதையில் அழைத்துச் செல்லும்
பணியைச் செவ்வனே செய்துவிடுகிறது.

poo
01-12-2003, 06:47 PM
காலத்துக்கேற்ற பதிவு...

பிறிது மொழிதல் - படிக்கும்போது கேள்விப்பட்டிருக்கிறேன்..

அதிகாரத் தலைப்பு கொடுத்த அதிகாரத்தில்தான் வள்ளுவர் அப்படி அடிகளுக்குள் அடைத்திருக்கிறார் என நினைக்கிறேன்!

இடைவெளி அதிகமில்லாமல் தொடர வேண்டுகிறேன்...

இதுபோன்றவைகளை படிக்கும்போது பள்ளிகால நினைவுகளோடு பசுமையான தமிழாசிரியர்களும் வந்து தங்கிப் போகிறார்கள்.. மனங்களில்...

உங்கள் தயவால் என் ஆசான்களுக்கு மனநிறுத்தத்தில் நிழல்தரும் குடையாய் ... நன்றிகளோடு அண்ணனின் அடுத்த பதிவை எதிர்நோக்கி....

முத்து
01-12-2003, 08:18 PM
இளசு அண்ணா ....
புறநானூற்றுக் கவிதையுடன்
வள்ளுவரின் குறியீட்டுக் கவிதையையும்
கொடுத்தமைக்கு நன்றிகள் .... அருமை ... :D

இளசு
02-12-2003, 11:47 PM
தம்பிகளுக்கு நன்றி..
பொதிகை அவர்களின் துணையோடு தொடர்வேன்.

இளசு
03-01-2004, 10:47 PM
யான் பெற்ற துன்பம்..

பாடியவர் : நக்கண்ணையார்
பாடப்பெற்றவர் : சோழன் நற்பெருகிள்ளி
திணை : கைக்கிளை


அடி புனை தொடுக்கழல் மையணல் காளைக்கு, என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே!
அடுதோள் முயங்கல் அவை நாணுவலே!
என் போல் பெரு விதுப்புறுக! என்றும்
ஒரு பாற்படாஅது ஆகி
இருபாற்பட்ட இம்மையல் ஊரே

காலில் கழல் அணிந்தவன்
கரு'மை'யாய் தாடி வளர்ந்தவன்
இளங்காளைக்கு ஏங்கி
என் வளையல் விழுந்தது நழுவி
வஞ்சி வாழ்கிறேன் தாய்க்கு அஞ்சி

அவன் தோளோடு சேர ஆசை
அவையோரை எண்ணி வெட்கம்

இந்த என் நடுக்கம்
எந்த பக்கமும் நில்லாது
இருதலையாய் அலையும்
இந்த ஊரே அடையட்டும்

karikaalan
04-01-2004, 10:27 AM
இளவல்ஜி

இதுபோன்ற துன்பங்கள் இருப்பவர் மிகச்சிலரே! அடுத்தவரும் அடைய வேண்டும் என நினைப்பதால்தான் இலக்கியமாகிவிட்டது இது. நன்றிகள்.

===கரிகாலன்

இளசு
21-01-2004, 12:01 AM
அண்ணலுக்கு நன்றி சொல்லி அடுத்த பதிவு..

மக்கள் எவ்வழியோ...

பாடியவர் : புலவர் ஔவையார்
பொதுவியல் திணை.

நாடா கொன்றோ ..காடா கொன்றோ
அவலா கொன்றோ.. மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை...; வாழிய நிலனே!

நாடென்ன காடென்ன
மேடென்ன தரையென்ன
எவ்வளவு நல்ல குடிமக்களோ
அவ்வளவு நன்றாய் வாழும் உலகு!

puppy
21-01-2004, 12:34 AM
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே...அப்படி தானே.......

இளசு
16-02-2004, 09:58 PM
புறநானூற்றுக் கவிதைகள்...

என்ன வேகம்!

பாடல்: புலவர் சாத்தந்தையார்

சோழன் கோப்பெருநற்கிள்ளியின் போர் புரியும் வேகத்தை
வர்ணிக்க வந்த புலவர்
இக்கால ஒளி ஓவியர் போல்
இடம், காட்சி, பின்புலம், ஆடை அணிகலனோடு
ஓர் அரச வாகைக் கவிதை ஓவியம் உவமை வர்ணத்தில் தீட்டுகிறார்...


------------------------------
சாறு தலைக் கொண்டெனப் பெண் ஈற்று உற்றென
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ....

ஊர்கொளவந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகைப் போரே !


-----------------------------------------------------

(அவனுக்கு அவசரம்...)
திருவிழா வரப்போகிறது
மனைவிக்கு பிரசவம் விரைவில்..
மழைக்கால சூரியன் மறைந்து
மங்கும் வெளிச்சம்..
கட்டில் பின்னும் எளியவனின்
கையில் உள்ள ஊசிக்குத்தான்
எத்தனை வேகம்..!
(அவனுக்கு அவசரம்!)


அந்த...
ஊசியை விட விரைவானது
ஊர் பிடிக்க வந்த எதிரியோடு
பூமாலை அணிந்த இவன்
புரிந்த போர்!

sara
17-02-2004, 01:35 AM
வேகத்திற்கு வேறு எதையும் உதாரணம் காட்டாது, ஒரு தொழிலாளியின் வேலை முனைப்பை காட்டியிருப்பது கண்டு வியக்கிறேன்.

பிரசவத்திற்கு காத்திருக்கும் மனைவி, வரப்போகும் திருவிழா.. ஒரு தொழிலாளி 'கொஞ்சம் காசு வேணுமே' என்ற கவலையோடு எவ்வளவு விரைவாக வேலை செய்வான். அவனுக்கு இருட்டும் ஒரு பொருட்டில்லை. பொருத்தமான உவமானம். அரசனையும், ஆண்டியையும் ஒப்பிட்டு, பாராட்டுதல் மட்டும் குறிக்கோளாக பாட்டெழுதாமல் கண்ட காட்சியை விளக்கும் ஹைகூவாக்கியிருப்பது மிகச்சிறப்பு.

இதை இங்கு தந்த இளசுவிற்கு நன்றிகள்!

முத்து
17-02-2004, 02:06 AM
அருமையான காட்சி ...
அழகான முரண்பாடு..

கட்டில் பின்னுதல் - போர்
ஊசி - வாள்
அரசன் - ஆண்டி

நன்றிகள் பல ..
இளசு அண்ணனுக்கு.

இளசு
24-02-2004, 10:36 PM
சரா, முத்து - நன்றிகள்..


மழலைக் கவிஞை!!!???

புலவர் ஔவையார்
அதியன் நெடுமான் அஞ்சியை
பாடாண்திணையில் வாழ்த்திப் பாடியது

யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா
பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை
என் வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்து
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.!


****************************

யாழின் இனிமை இல்லை
காலம் தப்பா தாளம் இல்லை
அர்த்தமாய் ஒன்றும் இல்லை

ஆனாலும் அப்பாவுக்கு
வாங்கி வந்த வரமாய் இனிக்கும்
தம் குழந்தைகளின் மழலை..

என் பேச்சை நீ சிலாகிப்பதும் அப்படியே..

பகைவர் கோட்டைச் சுவர்த்தடைகள்
பற்பல தகர்த்தெரிந்த நெடுமான் அஞ்சி..
உன் கருணை அப்படி!

இளசு
23-03-2004, 10:03 PM
அன்றொரு நாள் இதே நிலவில்...

புலவர் : பாரியின் மகள்கள்

நாட்டையும் தந்தையையும் பறிகொடுத்து, பரிதவித்து
கபிலரின் அரவணைப்பில் இருந்த பொழுதில்
முல்லைக்குத்தேர் கொடுத்த வள்ளலின் செல்வங்கள்
வருந்தி "கையறு நிலை@ துறையில் கலங்கிப்பாடிய பாடல்...

இழப்புகளில் வரவு சில உண்டு...
கடினமாகும் மனது ஒரு வரவு..
துன்பியல் இன்பம் சொட்டும் படைப்புகள் மறு வரவு...

படியுங்கள்......

அற்றைத்திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையேன்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே

அந்நாளில் இதே வெண்ணிலவில்
அப்பா இருந்தார், என் மலைநாடும் எம் வசம்...
இப்போதோ இதே வெண்ணிலவில்
வெற்றி முரசு கொட்டிய வேந்தர்கள்
குன்றை அடைந்தனர்...
என் தந்தையும் இலையென்று செய்தனர்..

sara
02-04-2004, 08:23 PM
பார்த்த அடையாளமே இல்லாமல் இருந்தாலும், பதிவுகளை புதுப்பித்துக் கொண்டிருக்கிறீர்களே.. உங்களுக்கு ஒரு சபாஷ்! தொடருங்கள்.

அன்றொரு நாள் இதே நிலவில் - இந்த பாடலுக்கு கவிஞரின் இம்ப்ரெஸன் இந்த புறநானுறோ? அப்படியே பொருந்துகிறது.

இளசு
07-04-2004, 08:22 PM
நன்றி சரா.......

புறநானூற்றுக் கவிதைகள்...

பரிசு தா - எனக்கல்ல.... அவளுக்கு


புலவர் கபிலர் வள்ளல் பேகனை நோக்கி
பெருந்திணையில் பாடிய பாடல்...

---------------------------------------------------------------------------

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாம் ஈத்த கெடா நல்லிசைக்
கடா யானைக் கலிமான் பேக..!

பசித்தும் வாரேம்..! பாரமும் இலமே..!
களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி
அறம் செய் தீமோ அருள் வெய்யோய்! என

இது யாம் இரந்த பரிசில்; அது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே...!!


மயிலுக்குக் குளிரும் எனக் கருணையால்
போர்வை ஈந்த அழியா நற்புகழும்
யானை, குதிரை சேனைகளும் உடைய
பேகனே....

நாங்கள் வந்தது ----
பசியால் அன்று.... வேறு
சுமையால் அன்று..
களாப்பழம் போல் கருத்து சிறுத்த யாழ் எடுத்து
நல்லிசையால் கேட்பவர் இசைய இசைத்து
அறம் செய்யும் அருளாளன் உன்னிடம்

இரந்தது இந்தப் பரிசைத்தான்... அது
இரவோடு இரவாக
மணித்தேர் ஏறிச் சென்று - (பிரிவுத்)
துன்பத்தில் வாழும் உன்
துணைவியின் துயர் துடைப்பாய்..

kavitha
10-04-2004, 08:43 AM
இளசு அண்ணா, நல்ல பாடல்கள் விளக்கங்களுடன்..
அது சரி! மயிலுக்கு போர்வை தந்தவன் மையலவளை கவனிக்கவில்லையா?
ஆச்சரியம் தான்!

இளசு
14-04-2004, 11:32 PM
நன்றி கவிதா...


போர்க்களம் புகுந்துவிட்டால்...

"வாளெடுத்து வீசும்போதும்'
வஞ்சி உந்தன் ஞாபகம்"

என்று கொஞ்சிப்பாடும் தளபதி அல்லன் போலும் நம் பேகன்...


கபிலர் போல இன்னும் இருவர் இதே பாணியில்
"பரிசு வேண்டாம், இரவே உன் மனைவியிடம் போ"
என விரட்டி இருக்கிறார்கள்...


(சி.த: அப்பதான் நிறய்ய கொடுப்பானோ என்னவோ...)

kavitha
15-04-2004, 03:32 AM
(சி.த: அப்பதான் நிறய்ய கொடுப்பானோ என்னவோ...)
ஹஹாஹா!

kavitha
30-04-2004, 09:26 AM
ஆனாலும் அப்பாவுக்கு
வாங்கி வந்த வரமாய் இனிக்கும்
தம் குழந்தைகளின் மழலை..

என் பேச்சை நீ சிலாகிப்பதும் அப்படியே..

பாடலை ரசிப்பதில் தந்தையாக!
அறிவுரை ஏற்பதில் சேயாக!
தாயின் தாயான அதியமானை வணங்காமல் இருக்கமுடியவில்லை!
அந்தகாலத்தில் பிறக்காமல் போய்விட்டோமே என்றும்கூட தோன்றுகிறது!

kavitha
30-04-2004, 09:32 AM
இப்பதிவை தொடருங்கள் இளசு அண்ணா!

இளசு
02-06-2004, 08:09 PM
நன்றி கவிதா..

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பண்டை வழக்கங்களைச் சினந்து பாடிய பாடல்..

திசைகள் இதழில் மதிப்புக்குரிய அன்பு மாலன் அவர்கள்
இன்றைய பாணியில் (மார்ச் 2004)
மறுபடைப்பு செய்திருக்கிறார்கள்...

சி.த:
அம்பலம் இதழில்
கூட சுஜாதா அருமையா புறநானூற்றுப்பாடல்களை
விளக்கி எளிமையா இனிமையா தராருண்ணே...

பெ.த: சீக்கிரமா சந்தா கட்டி அம்பலச்சரக்கைச் சுட்டு
மன்றத்தில் என் பேரில் குடுத்து பாராட்டு வாங்கப்போறேன் பாரு...

இளசு
27-06-2004, 11:42 PM
புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப்பா..
இயற்றியவர் : பெருந்தேவனார்
பாடல் நாயகன் : சிவபெருமான்..
__________________________________

கண்ணிகார் நறுங்கொன்றை -காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை...
ஊர்தி வால் வெள்ளேறே - சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...

மறைநவில் அந்தணர் நுவலுவும் படுமே..!
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று - அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்..
பிறை நுதல் வண்ணம் ஆகின்று - அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே..!

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய..!
நீர் அறவறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தத் தோற்கே..!
____________________________________________

அவன் -
தலையில் முடிந்தது
மணக்கும் கொன்றைப்பூ...
மாலையாய் மார்பில்
மாட்டியதும் அதே கொன்றைப்பூ..

அவன் -
வாகனமும் வெள்ளை எருது..
சீரும் சிறப்புமான கொடியிலும் அதே எருது..

அவன் -
கழுத்துக் கறையையும்
வழுத்திப்பாடுவார் அந்தணர்..!
பெண்மை பாதி உருவம் ஆனவன்.
பெண்ணைத் தன்னுள் அடக்கி மறைத்து
பின் தோன்றும் மாய உருவக்காரன்..

நிலாவின் ஒரு துண்டு - அவன்
நெற்றியில் உண்டு .. அதை
விலாவாரியாய்ப் பாராட்ட
பல கந்தர்வர் உண்டு..!

அவன் -
எல்லா உயிர்க்கும் காவலன் - நீர்
இல்லாமல் போகாத கமண்டலம் கொண்டவன்..

அவன் -
அரிய தவம் செய்வதன் அடையாளம்..
தரை வரை புரண்டு பொலியும் சடையாகும்.

அவன் - சிவன் !

இளசு
25-07-2004, 09:49 AM
யார் அவளோ..? ஏன் அழுதனளோ?...
புலவர் கபிலர் வள்ளல் பேகனை நோக்கி
பெருந்திணையில் பாடியது...


மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல்கண் மாறிய உவகையர், சாரல்
புனைத்திணை அயிலும் நாட.! சினப் போர்க்
கைவள் ஈகைக் கடு மான் பேக..!!

யார் கொல் அளியள் தானே; நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இறங்கும் அருவி
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி , வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்..
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல் இணைவதுபோல் அழுதனள் பெரிதே..!!!


-----------------------------------------------------------


மலை உரசும் வானத்துக்கு
பூசைப் பொருள் படைத்து
மழை தந்து வாழவை என
மகேசனைத் துதித்து
மனசுப்படி மழை வந்ததால்
மகிழ்ச்சியில் குதித்து
புனைத்தினையை உண்டு
மலைவாசிகள் களிக்கும் நாடனே..!

கோபப் போரிலும்
ஈகைச் செயலிலும்
கைவன்மை மிக்க பேகனே..!!


அது யார் அவள்? ஏன்
அழுதாள் அவள்??

நேற்று என் சொந்தமெல்லாம்
வேகாத வெயிலில் வெந்து,
தாளாத பசியில் நொந்து,

முரசொலி போல் முழங்கி
மலை இறங்கிய அருவி'
சலசலத்து பாயும் சிற்றூர் வந்து....

ஒரு வீட்டு வாசல் நின்று
உன்னையும் உன் மலையையும்
வாழ்த்திப் பாடினோம் சிந்து..!

(அதைக்கேட்டு)
தாளாமல் வந்த கண்ணீர்
நில்லாமல் பெருகிப் பெருகி
மாராப்பு நனைய நனைய
நாராசப் புல்லாங்குழல் போல்
பேராவேசமாய் அழுதாளே...!

அது யார் அவள்? ஏன்
அழுதாள் அவள்??

kavitha
30-07-2004, 11:42 AM
அண்ணா.. வெகு தாமதமாக கவனித்தேன்... சுட்டிகளுக்கு மிக்க நன்றி!


பெ.த: சீக்கிரமா சந்தா கட்டி அம்பலச்சரக்கைச் சுட்டு
மன்றத்தில் என் பேரில் குடுத்து பாராட்டு வாங்கப்போறேன் பாரு...
எங்களுக்கும் கொண்டாட்டம் தான்!

இளந்தமிழ்ச்செல்வன்
30-07-2004, 08:27 PM
அருமையான பதிவுகள் நன்றி இளசு அவர்களே.

இளசு
11-03-2007, 07:39 PM
புறநானூற்றுக் கவிதைகள்

1


ஆட்சியாளரும் மக்களும்...

திணை - பொதுத்திணை

துறை - பொருண்மொழிக்காஞ்சி

பாடியவர் - புலவர் மோசிகீரனார்
(முரசுக்கட்டிலில் உறங்கினாரே.. அவரேதான்)

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே!
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே!

--------------------------------------------


நெல்லாலும் நீராலும் உலக மக்கள் உயிர்
நல்லபடி நிலைப்பதில்லை! -பலமுள்ள
மன்னன் உயிராய் இருக்க நிலைக்கும் உலகம்
என்னும் உண்மை அறிவது அவனது கடமை!

pradeepkt
12-03-2007, 12:22 PM
அண்ணா,
கவிதை வரிகள் புறநானூற்று வரிகளோடு அவ்வளவு ஒற்றுமை!
வரிசையாக உங்கள் பஞ்ச் வரிகளோடு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி
12-03-2007, 12:48 PM
அழகாக இருக்கிறது...விளக்கம் அருமை
நன்றி...திருக்குறளில் படிக்க ஆரம்பித்த
சின்ன வயதில் இருந்தே அப்படி பழகிவிட்டது...

பாரதி
12-03-2007, 06:45 PM
படிக்காத காப்பியங்களை கண் முன்பு கொண்டு வந்து, பொழிப்புரையும் தரும் அண்ணனுக்கு நன்றி.

தொடரட்டும் உங்கள் தமிழ்தொண்டு.

அமரன்
12-03-2007, 06:51 PM
புறநானூறா? அப்படின்னா? இப்படிக் கேட்போர் பலருளர். அப்படி இருக்கின்றது நிலமை. அதை மாற்றும் முயற்சியை ஆரம்பித்துள்ள அண்ணனுக்குச் செல்லத்தம்பியின் பாராட்டுகள்.

leomohan
12-03-2007, 07:49 PM
அப்படியே விளக்கவுரை அளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

paarthiban
13-03-2007, 12:11 PM
இளசு சார் தமிழ் சேவைக்கு பாராட்டுகள். தொஅட்ருங்கள்.

இளசு
13-03-2007, 08:41 PM
பிரதீப், மொக்கச்சாமி, பாரதி, நக்கீரன், மோகன், பார்த்திபன்
-உங்களுக்கு என் நன்றி..

--------------------------

மோகன்,

எளிய தமிழில் கொஞ்சம் கவிதை நடையில்
புறநானூற்றுப்பாடல்களைச் சொல்லும் கடின முயற்சி இது..

முதலில் கருவை எடுத்து
ஹைக்கூ போல தேற்றித் தந்தேன் ( திஸ்கி மன்றத்தில்)

நண்பர்கள் மூலப்பாடலும் கேட்டதால் சேர்த்துத் தந்தேன்..

பொழிப்புரை தேவையில்லாத அளவுக்கு எளிமையாய்
என் விளக்கக்கவிதைகள் அமையும்படி பார்த்துக்கொள்கிறேன்..


இந்தப்பாடல் கொஞ்சம் சுருக்கமாய் எழுதிவிட்டார் மோசிகீரனார்.

எத்தனை வளங்கள் இருந்தாலும் கட்டிக்காக்கும்
மன்னர் (ஆட்சியாளர்) சரியில்லை என்றால்
அந்த நாடு வளமழிந்து போகும் எனச் சொல்கிறார்.

நதிவளங்கள் இருந்தும் நமக்கு நல்லாட்சி இல்லையேல் சுகமில்லை..


----------------------------------------------

முன்பு பதித்த புறநானூற்றுப் பாடல்களையும், புதிதாய் எளிமைப்படுத்துபவற்றையும் தொடர்ந்து இத்திரியில் பதிக்கிறேன்..

ஊக்கப்படுத்துங்கள்..நன்றி..

leomohan
13-03-2007, 08:47 PM
பலே. நன்றி இளசு. இன்னும் தாருங்கள்.

இளசு
13-03-2007, 11:05 PM
நன்றி மோகன்.. உங்கள் ஊக்கம் இருக்க தயக்கமேன்? தொடர்கிறேன்!!
__________________

இளசு
13-03-2007, 11:18 PM
2

யாதும் ஊரே யாவரும் கேளிர்!


திணை : பொதுத்திணை
பாடியவர் :புலவர் கணியன் பூங்குன்றனார்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தந்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம், ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

----------------------------------------
எந்த ஊரும் நம்ம ஊர்
எல்லாருமே சொந்தக்காரர்.
நல்லதோ... கெடுதலோ - அது
அடுத்தவர் பார்த்து தருவதில்லை
வலியும் சுகமும் கூட அப்படித்தான்....
சாவு என்ன புதுசா... இல்லை அச்சம்
உயிர் என்ன வெல்லமா, ரொம்ப துச்சம்!
கோபம் வந்தா கூட வெறுப்பு வரும்...
போகும் போது எது கூட வரும் ?
மின்னல் வெட்டி, மழையாக் கொட்டி
நிலைகொள்ளாமல்
மலையில் உருளும் ஆறு
அதுவே வாழ்க்கைத் தேரு
நாளை என்ன ....?
தெரிஞ்சவன் யாரு?
அதனால்
வலுத்தவன் பார்த்து கூழைக்கும்பிடும் இல்லை!
இளைத்தவன் பார்த்து ஏளனம் - இல்லவே இல்லை

ஆதவா
14-03-2007, 04:23 AM
புறநானூற்றுக் கவிதைகள்

1


நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே!
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்.
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே!




நெல்லாலும் நீராலும் உலக மக்கள் உயிர்
நல்லபடி நிலைப்பதில்லை! -பலமுள்ள
மன்னன் உயிராய் இருக்க நிலைக்கும் உலகம்
என்னும் உண்மை அறிவது அவனது கடமை!


அருமையான யோசனை.. அதிலும் அருமையான வார்த்தை வடிவமைப்பு.. தமிழ் வளர்க்க இதைவிட வேறென்ன செய்யவேண்டும்.. தமிழ் சார்பில் நன்றி தெரிவித்து வணங்குகிறேன் இளசு அண்ணலே!...

எதுகை காட்டி எளிமை பூட்டி புதுக்கவிதை மாட்டி கொடுத்த கவிதை உண்மையில் சொல்ல வார்த்தை இல்லை...



யாதும் ஊரே; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தந்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம், ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

எந்த ஊரும் நம்ம ஊர்
எல்லாருமே சொந்தக்காரர்.
நல்லதோ... கெடுதலோ - அது
அடுத்தவர் பார்த்து தருவதில்லை
வலியும் சுகமும் கூட அப்படித்தான்....
சாவு என்ன புதுசா... இல்லை அச்சம்
உயிர் என்ன வெல்லமா, ரொம்ப துச்சம்!
கோபம் வந்தா கூட வெறுப்பு வரும்...
போகும் போது எது கூட வரும் ?
மின்னல் வெட்டி, மழையாக் கொட்டி
நிலைகொள்ளாமல்
மலையில் உருளும் ஆறு
அதுவே வாழ்க்கைத் தேரு
நாளை என்ன ....?
தெரிஞ்சவன் யாரு?
அதனால்
வலுத்தவன் பார்த்து கூழைக்கும்பிடும் இல்லை!
இளைத்தவன் பார்த்து ஏளனம் - இல்லவே இல்லை

இது ஆசிரியப்பா
புறநானூறுப் பாடலில் முதன்முதலாக அறிந்த பாடல் இது. நன்றாக எளிமை படுத்தி பாடியிருக்கிறது இன்னும் அருமை..

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல்,

இந்த வரிகள் மட்டும் சற்ற்ற்றே ஒருமாதிரி இருக்கிறது..

மலையில் உருளும் ஆற்றில் செல்லும் புணை (மரப்பலகை அல்லது மரத்தாலான ஏதாவது ஒன்று)

சுற்றிகொண்டு இருக்கு உலகத்தில் நாமும் சேர்ந்து ஒரு மனிதனாக சுற்றுகிறோம் ஆக நாம் வலிமையானவனை பார்த்து வியத்தல் வேண்டியதில்லை. அதேபோல இளைத்தவனை பார்த்து இகழ்தலும் வேண்டியதில்லை..



அதிகப்படி தகவல்:
பாடல் பாடியவர் பெயர் இதுவல்ல என்றாலும் அவர் காலத்தில் அந்த பெயர் வழங்கப் பட்டிருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்று சாதி பாராட்டாதவர் தம் பெயரில் அதைக் காட்டவில்லை..

pradeepkt
14-03-2007, 05:29 AM
பாடல் பாடியவர்கள் பெயர்கள் தமிழைப் பொருத்தவரை கொஞ்சம் குழப்பம்தான். ஔவையார்களே பலர் இருந்திருக்கின்றனர். பிற்காலப் புலவர்களில் இப்பிரச்சினை கொஞ்சம் குறைவு.

அண்ணா,
இன்றைய உலகளாவிய "குளோபலைசேஷன்" தத்துவங்களை அன்று எவ்வளவு எளிமையாகச் சொல்லி இருக்கிறார்கள் என்பது உங்கள் விளக்கக் கவிதையில் சட்டென்று புரிகிறது.

ஆதவா,
என் விளக்கம்: மலையில் இருந்து இறங்கும் ஆற்றில் வரும் மரப்பலகை (தெப்பம் என்பது இன்னும் பொருத்தம்) போல வாழ்வின் (விதிப்படி -- இங்கே முறை என்பது விதி -- முறைவழி என்பது விதிப்படி என்று வழங்கும்) போக்கிலேயே உயிர்கள் செல்லும். எனவே எதைக் கண்டும் எவ்விதப் பெருமையோ சிறுமையோ கொள்ளாதீர்!

paarthiban
14-03-2007, 04:33 PM
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
கேட்ட பாட்டுக்கு நல்ல நல்ல விளக்கங்கள். அருமை. நன்றி

ஓவியன்
15-03-2007, 09:41 AM
ஆக்கபூர்வமான ஒரு படைப்பு அண்ணா!
ஆவலுடன் இன்னும் எதிர் பார்கின்றேன்!

gragavan
15-03-2007, 11:04 AM
இந்தப் பதிவை இப்பொழுதுதான் படிக்கிறேன். மிகவும் அருமையான நல்ல முயற்சி. ஒரு புறநாநூற்றுச் செய்யுளை எடுத்துக் கொண்டு புத்தகமே எழுதலாம். அப்படியிருக்க..அதைச் சுருக்கி...ஒரு கவிதை வடிவில் என்பது..மிகச் சிறந்த முயற்சி.

பாரதி
15-03-2007, 01:59 PM
அண்ணா...

யாதும் இணையம்
யாவரும் கேளிர்

என்பதை உறுதி செய்யும் விதமாக உங்கள் கவிதை - கவிதை விளக்கம் அமைந்து இருக்கிறது அண்ணா.

மிக எளிமையாக நன்றாக இருக்கிறது.

உங்களுக்கு என் அன்பு.

இளசு
18-03-2007, 09:19 PM
நன்றி ஆதவா.. பிரதீப்,பார்த்திபன், ஓவியன், ராகவன், பாரதி..


--------------------------------


ஆதவா, பிரதீப்பின் தமிழ் அறிவின் ஆழம் பிரமிக்கவைக்கிறது..

மலையாற்றில் மிதக்கும் தெப்பம் (புணை)
நான் தந்த பொழிப்புரைக் கவிதையில் இல்லை..
அதை - அந்த முக்கிய ஒப்புமையை அழகாய்
சுட்டி விளக்கிய இருவருக்கும் நன்றி..

----------------------------------------------

ஆசையே அலைபோலே
நாமெலாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே..!

வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்..!

இந்தப் பாடல் வரிகளும் இப்போது நினைவாடுகின்றன..

இளசு
18-03-2007, 09:23 PM
இதுபற்றி முதற்பதிவில் மாணவன் அவர்கள் தந்த நல்ல விமர்சனம் இது-
இளசு அவர்களுக்கு: புறநானூறு பாடல்களை புது கவிதைகளாக அர்த்தம் கற்பிக்க முயலுவது நல்ல முயற்ச்சி. ஆனால் இந்த பாடலில் இரு முக்கிய சிந்தனைகள் உங்கள் பாடலுரை வெளி கொண்டு வரவில்லை அல்லது தவறாக கொண்டு வந்துள்ளது.
1. ஊழ்வினை : இது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பாடலின் அடித்தளமாக கொண்டு எல்லோரும் சமம் என்று சொல்லும் மிக சிறந்த மனித நேயப்பாடல் என்பர். (முறைவழிப் படூஉம்)
சூழ்நிலை- நாத்திகர் வாதம். (பிறவி ஊழில் நம்பிக்கையில்லாதவர்கள்) அதாவது ஒரு சூழ்நிலையே ஒருவரை பெரியவராகவும், மற்றொருவரை சிறியவராகவும் காண்பிக்கிறது. இதை உணர்ந்து யாவரையும் நட்புடன் அணுகு (கேளிர்).
2. போகும்போது எது கூட வரும் என்பது உங்களின் சொந்த இடைச்சொருகல்...
இந்த பாடலை அர்த்தம் பண்ண நினைக்கும் சிலர் செய்யும் தவறுகள்...
1. தீதும் நன்றும் பிறர் தர வாரா- என்றால், நாமே நமக்கு தீமையும் நன்மையும் தருகிறோமென்று அர்த்தமில்லை- ஏன் யாவரையும் கேளவேண்டுமென்பதற்கான விளக்கம்.
2. கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் - என்றால், கல் கூட வேகமாக அடித்து செல்லப்படும் ஆற்று வெள்ளத்தில் போய் கொண்டிருக்கும் மிதவை போல , என்று அர்த்தம்.
மனிதநேயத்திற்க்கு ஏதோ ஆங்கில கவிஞர்கள்தாம் நிறைய படைப்புகள் கொடுத்ததாக சொல்லிக்கொள்வர். கணியன் பூங்குன்றனார்- அப்போதே இதை கூறிவிட்டார். இதில் மதவாதம் இல்லை (ஊழ்வினை என்று சிலர் விவாதித்தாலும்). தனி நபர் போற்றுதல் இல்லை. காதல் இல்லை. வீரம் இல்லை.
இந்த பாடலை மன்றத்திற்க்கு தந்து இந்த உயரிய சிந்தனையை மக்களிடையே பரப்பிய இளசு அவர்களுக்கு நன்றி. இது போன்ற விவாதங்கள் எல்லாப்பாடல்களிலும் செய்யலாம்... விவாதமிருந்தால்தான் ஒரு விசயத்தை உணர முடியும்...
உங்கள் கருத்துக்களுக்கு காத்திருக்கும்,
மாணவன்.

-----------------------

என் பதில்:


மதிப்புக்குரிய மாணவன் அவர்களுக்கு
உங்கள் கருத்துக்கு நன்றியும், என் மரியாதையான பாராட்டும்.
அச்சத்தோடு என் பதிவை அன்று பதித்ததன் காரணங்கள் நீங்கள் சொன்னவை..
சொந்த இடைச் செருகல் - சந்தத்துக்காக..
எல்லா சொற்களின் பொருள் தெரியாமல் சில விடுபடல்கள்..
முழுமையான பொருளை விளங்க வைத்தமைக்கு நன்றி..
குறுந்தொகையை எம்பரர் அவர்கள் சொற்சிதைவு இல்லாமல் இலக்கியப்பகுதியில் தருகிறார். நான் ஆர்வக்கோளாறில் சொந்த பாணியில் தருவது
முற்றிலும் ஏற்புடையது அல்ல.. எனினும் முன்பே சொன்னேனே:
ஆசை வெட்கம் அறியாது என...
உங்கள் கருத்துகளை மேலும் தந்து செப்பனிட, செம்மையாக்க
அன்போடும் உரிமையோடும் அழைக்கிறேன்..
உங்கள் தமிழ் அறிவின் ஆழம் எனக்கு இன்னும் கற்றுத்தர விழைகிறேன்..
நீங்கள் மாணவன் பெயரில்..
நான் மாணவன் செயலில்..
மீண்டும் நன்றிகள் நண்பரே

இளசு
18-03-2007, 09:26 PM
...



அதிகப்படி தகவல்:
பாடல் பாடியவர் பெயர் இதுவல்ல என்றாலும் அவர் காலத்தில் அந்த பெயர் வழங்கப் பட்டிருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.. என்று சாதி பாராட்டாதவர் தம் பெயரில் அதைக் காட்டவில்லை..


ஆதவா கருத்தையொட்டி
முன்பு நண்பர் பொன்னியின் செல்வன் தந்த பின்னூட்டம் இது -


இந்த பாடலின் இறுதி வரிகளை கவனித்தீர்களா? பெரியோரை வியப்பது இந்த சமூகத்தில் இயல்பு என்றால், சிறியோரை இகழ்தல் இயல்போ இயல்பு. புகழ்வதைக் காட்டிலும் இகழ்வது ஒரு புள்ளி அதிகமே. ஆகவேதான் கணியன் 'அதனினும்' என்று அங்கு போட்டுள்ளார் என்று கூறலாமா?
இப்பாடல் குறித்து 'சங்கத்தமிழில்' கலைஞர் பின்வருமாறு கூறுகிறார்:
"உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை,
உயிரின் தன்மை, உயரிய வினைகள் - வாழ்வில்
உற்ற துன்பமும் உவகையின்பமும் ஒன்றெனக் கருதுதல்,
உயர்ந்துள்ள செல்வர்க்குப் பணியாமை - வீணில்
உழன்றிடும் சிரியோரை இகழாமை; எனப் பல
வண்ணமிகு மலர்கள் கொண்டு - உயர்
எண்ணங்களைத் தொடுத்தளிக்கும் பெரும்
உள்ளம் காணுகின்றோம் இந்தக் கவிதையினில்; புது
வெள்ளம் போல் இக்கருத்து பரவட்டும் காசினியில்!
ஆனால் ஒன்று;
ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும்
உறவுகொண்டே மனிதகுலம் ஒன்றே எனத் திகழ்வதும்
உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன்கூட
தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே
கணியன் பூங்குன்றன் எனும்
கவிஞனாய் உலவியதைக் கவனமுடன்
எண்ணிப் பார்த்தால் -....."
(சங்கத் தமிழ் - கலைஞர் மு. கருணாநிதி. பக். 8 & 9)
- நாட்டுப் பற்று, பிறந்த மண் பாசம் என்பதெல்லாம் இது தானோ?

இளசு
18-03-2007, 09:38 PM
3

வாடட்டும் என் மாலை..


பாடியவர் - சோழன் நலங்கிள்ளி
திணை - காஞ்சி
துறை - வஞ்சினைக்காஞ்சி


மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்!
இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென்; இந்நிலத்து

ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்
உள்ள்ம் எள்ளிய மடவோன்,தெள்ளிதின்
துஞ்சுபுலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே! மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப்பட்ட

வன்திணி நீள்முனை போலச் சென்று அவண்
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக என் நாரே..!

------------------------------------------


பொறுமையுடன் வந்து என் காலடி பணிந்து
தருவாய் எனப் பிச்சை கேட்டால்
சீருடை முரசையும் அரசையும் தருவேன்!
ஆருயிரையும் தருவேன்..!

ஆற்றலைப் போற்றாமல் என் மனதைத்
தூற்றிய மடையன் -
உறங்கிய புலியைக் காலால்
இடறிய குருடன் -
உயிரோடு திரும்புவது அரிது!!

மூங்கில் முனை வலிமைதான் - யானைக்கால்
தாங்கும் அளவு வலியதா ?
இருக்கும் இடம் சென்று அவனை
வருத்தும் போர் செய்யாவிடில் -
காதலில்லாமல் காசுக்கு வரும் பெண்களின்
மோதலில் வாடட்டும் என் மாலை!

paarthiban
20-03-2007, 11:59 AM
தொடரும் தமிழ்த்தொண்டுக்கு தலை வணங்குகிறேன் இளசு அண்ணலே.
உங்கள் அதி தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.

paarthiban
20-03-2007, 01:01 PM
'சங்கத்தமிழில்' கலைஞர் பின்வருமாறு கூறுகிறார்:
"உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை,
உயிரின் தன்மை, உயரிய வினைகள் - வாழ்வில்
உற்ற துன்பமும் உவகையின்பமும் ஒன்றெனக் கருதுதல்,
உயர்ந்துள்ள செல்வர்க்குப் பணியாமை - வீணில்
உழன்றிடும் சிரியோரை இகழாமை; எனப் பல
வண்ணமிகு மலர்கள் கொண்டு - உயர்
எண்ணங்களைத் தொடுத்தளிக்கும் பெரும்
உள்ளம் காணுகின்றோம் இந்தக் கவிதையினில்; புது
வெள்ளம் போல் இக்கருத்து பரவட்டும் காசினியில்!
ஆனால் ஒன்று;
ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும்
உறவுகொண்டே மனிதகுலம் ஒன்றே எனத் திகழ்வதும்
உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன்கூட
தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே
கணியன் பூங்குன்றன் எனும்
கவிஞனாய் உலவியதைக் கவனமுடன்
எண்ணிப் பார்த்தால் -....."
(சங்கத் தமிழ் - கலைஞர் மு. கருணாநிதி. பக். 8 & 9)
- நாட்டுப் பற்று, பிறந்த மண் பாசம் என்பதெல்லாம் இது தானோ?

முத்தமிழ் அறிஞர் அற்புதமா சொன்னதை இங்கே கொடுததுக்கு மிக்க நன்றி சார்.

இளசு
20-03-2007, 11:58 PM
நன்றி பார்த்திபன்..

உங்கள் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்துகிறது..

(சார், அண்ணல் என்ற அடைமொழிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்..

நன்றி பார்த்திபன்)

mukilan
21-03-2007, 07:13 AM
அண்ணா, அயராத மருத்துவப் பணிக்கிடையேயும், குடும்ப பாரத்துக்கிடையேயும் மன்றத்தில் நீங்கள் ஆற்றும் தமிழ்ப்பணி வியக்கத்தக்கது. சங்ககாலப் பாடல்கள், அறிவியல் கட்டுரைகள், சினிமாத்துணுக்குகள் என நீங்கள் எல்லாத்துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருப்பதைப் பார்க்கையில் ஆங்கில வாக்கியம் ஒன்று நினைவில் வருகிறது." Is a long way to go"

pradeepkt
21-03-2007, 07:36 AM
இந்தக் காலத்து பஞ்ச் ஹீரோக்கள் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் சங்க காலத்துப் புலவர்களிடம்.

அதிலும் இந்த உவமான உவமேயத்தை அவர்கள் கையாளும் விதம் இருக்கிறதே... அருமையிலும் அருமை.
அண்ணா, சும்மாச் சும்மா உங்களைப் பாராட்டி எங்களுக்கே போரடிக்கிறது. என்றைக்கு நாங்கள் தப்பு கண்டுபிடிக்கும் பதிவுகள் போடப் போகிறீர்கள் :D

leomohan
21-03-2007, 08:35 AM
3

பொருந்திய
தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக என் நாரே..!

------------------------------------------

காதலில்லாமல் காசுக்கு வரும் பெண்களின்
மோதலில் வாடட்டும் என் மாலை!

அற்புதம். உங்கள் விளக்கம் இல்லையென்றால் மேலே உள்ள வரிகளுக்கு இது தான் பொருள் என்பதை உணர்வது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

நன்றி

virumaandi
21-03-2007, 11:55 AM
ஆதவா கருத்தையொட்டி
முன்பு நண்பர் பொன்னியின் செல்வன் தந்த பின்னூட்டம் இது -


இந்த பாடலின் இறுதி வரிகளை கவனித்தீர்களா? பெரியோரை வியப்பது இந்த சமூகத்தில் இயல்பு என்றால், சிறியோரை இகழ்தல் இயல்போ இயல்பு. புகழ்வதைக் காட்டிலும் இகழ்வது ஒரு புள்ளி அதிகமே. ஆகவேதான் கணியன் 'அதனினும்' என்று அங்கு போட்டுள்ளார் என்று கூறலாமா?
இப்பாடல் குறித்து 'சங்கத்தமிழில்' கலைஞர் பின்வருமாறு கூறுகிறார்:
"உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை,
உயிரின் தன்மை, உயரிய வினைகள் - வாழ்வில்
உற்ற துன்பமும் உவகையின்பமும் ஒன்றெனக் கருதுதல்,
உயர்ந்துள்ள செல்வர்க்குப் பணியாமை - வீணில்
உழன்றிடும் சிரியோரை இகழாமை; எனப் பல
வண்ணமிகு மலர்கள் கொண்டு - உயர்
எண்ணங்களைத் தொடுத்தளிக்கும் பெரும்
உள்ளம் காணுகின்றோம் இந்தக் கவிதையினில்; புது
வெள்ளம் போல் இக்கருத்து பரவட்டும் காசினியில்!
ஆனால் ஒன்று;
ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும்
உறவுகொண்டே மனிதகுலம் ஒன்றே எனத் திகழ்வதும்
உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன்கூட
தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே
கணியன் பூங்குன்றன் எனும்
கவிஞனாய் உலவியதைக் கவனமுடன்
எண்ணிப் பார்த்தால் -....."
(சங்கத் தமிழ் - கலைஞர் மு. கருணாநிதி. பக். 8 & 9)
- நாட்டுப் பற்று, பிறந்த மண் பாசம் என்பதெல்லாம் இது தானோ?

சங்க தமிழையும் ...கலைஞர் தமிழையும் கலந்து அளித்து..தமிழ் உரம் அனைவருக்கும் ஏற்றும் நண்பருக்கு வாழ்த்துக்கள்

பாரதி
22-03-2007, 06:17 PM
மிகவும் நன்றி அண்ணா.

மேலும் ஒரு வேண்டுகோள் - முடியுமெனில் அரிய சொற்களின் பொருளையும் தர முடியுமா..?

இளசு
25-03-2007, 07:59 PM
நன்றிகள் - பார்த்திபன், முகிலன், பிரதீப், மோகன், விருமாண்டி, பாரதி..

பாரதி - பொருள் தெரியாமல் அங்கங்கே ஒப்பேற்றுகிறேன் என்பது அறிந்ததே.. தெரிந்தவற்றை தர முயல்கிறேன்..
நண்பர்களும் உதவலாம்...

இளசு
25-03-2007, 08:04 PM
4
உச்ச நட்சத்திரம்
--------------------------------------------------------------------------------


பாடியவர் : மதுரைக்குமரனார்
இது அரசவாகை ( இகழ்வதுபோல புகழ்வது-
வஞ்சப்புகழ்ச்சிக்கு எதிர்)
----------------------------------------------

நீயே, அமர் காணின் அமர் கடந்து அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை, கட்கு இன்னாயே!

அவரே, நிற் காணின் புறங் கொடுத்தலின்
ஊறு அறியா மெய் யாக்கை யொடு
கண்ணுக்கு இனியர், செவிக்கு இன்னாரே !

அதனால் நீயும் ஒன்று இனியை,
அவரும் ஒன்று இனியர்!
ஒவ்வா யாவுள மற்றே ! வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி !
நின்னை வியக்கும் இவ் வுலகம்; அது
என்னோ பெரும! உரைத்திசின் எமக்கே!

---------------------------------------------------



நீ
போருக்குப் போனாய்- பல
பேருக்கு எமன் ஆனாய்.
எதிரி வாள் பட்ட வேகம் - உன்
தேகம் எங்கும் காயம்.
ஆதலினால்.....
உன் பெருமை ..... கேட்க இனிப்பு
உருவம் பார்க்க அருவெறுப்பு...

அவரோ.....
உன்னைக் கண்டு - திரும்பி
ஓடிவிட்டார் அன்று.
கண்டதில்லை ஒரு காயம்
அன்றலர்ந்த பூந்தேகம்
ஆதலினால்.....
அவர் உருவம் பார்க்க மிகச் சிறப்பு
செயல் கேட்க வரும் சிரிப்பு

கணக்கென்று பார்த்தால்....
உனக்கும் அவர்க்கும் "ஒரு தகுதி" சிறக்க
ஒவ்வாக் கணக்கும் சமமாய் இருக்க
உன்னை மட்டும் மக்கள் மன்றம்
உச்ச நட்சத்திரம் என்றே போற்ற
குழம்பித்தான் போகிறேன்...
கொஞ்சம் விளக்குவாய் மன்னா...

பாரதி
26-03-2007, 06:10 PM
மிகவும் அருமையான எளிய சொல்லாக்கம் அண்ணா..!

இளசு
27-03-2007, 09:41 PM
நன்றி பாரதி..

இந்த ஊக்கம் என்னை இன்னும் உந்துகிறது...

அறிஞர்
29-03-2007, 03:36 PM
புறநானூறு என்றாலே சற்று தூரம் ஓடிவிடுவேன்.

இங்கு எளிய விளக்கத்துடன் வரிகள் அருமை இளசு..

ஆதவா
29-03-2007, 03:50 PM
ஆஹா!!! இளசு அண்ணா! என்ன இது?.... இப்படி தெளிவாக இதுவரை நான் படித்ததே இல்லல..... வெகு பிரமாதம்

முதலில் புறநானூற்று வரிகள் எனக்கு சற்று புரியவில்லை.. அடுத்து அர்த்தம் படிக்கும்போது.... அடடா!! என்ன ஒரு தெளிவான விளக்கக்கவிதை..............

இது சேரனைப் பார்த்து பாடுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. அரசனின் பெயர் கிள்ளி யோ? ம்ம் தெரியவில்லை.

ஆதவா
29-03-2007, 03:51 PM
புறநானூறு என்றாலே சற்று தூரம் ஓடிவிடுவேன்.

இங்கு எளிய விளக்கத்துடன் வரிகள் அருமை இளசு..


தூரம் ஓடிவிடும் அறிஞரே இங்கே வந்து படித்திருக்கிறார் என்றால் என் சொல்வது இந்த விளக்கக்கவிதையை!!!!!!

paarthiban
01-04-2007, 01:46 PM
இளசு அண்ணாவைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. எனக்கு இதுபோல் யாரும் சொல்லித்தரவில்லை. என்னாலும் இதுபோல் சொல்ல வரவில்லை. வணங்குகிறேன் அண்ணா

இளசு
11-04-2007, 06:10 AM
புறநானூறு என்றாலே சற்று தூரம் ஓடிவிடுவேன்.

இங்கு எளிய விளக்கத்துடன் வரிகள் அருமை இளசு..

இன்று அடுத்த கவிதை.

இன்னும் அதிக தூரம் ஓடிவிடாதீர்கள் அறிஞரே!

இளசு
11-04-2007, 06:12 AM
இப்படி தெளிவாக இதுவரை நான் படித்ததே இல்லல.....

.


எனக்கு இதுபோல் யாரும் சொல்லித்தரவில்லை.

நன்றி தம்பிகளுக்கு..

உங்கள் ஊக்கத்தில் இன்னும் தொடர்வேன்!

இளசு
11-04-2007, 06:15 AM
புறநானூற்றுக்கவிதை -4

எனக்கா இந்நிலைமை!


பாடியவர் - சேரமான் கணைக்கால் இடும்பொறை
பொதுவியல் திணைப்பாடல்..

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்
ஆஅள் அன்று என்று வாளில் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகைஇன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகைத் தானே!

பிறந்த குழந்தை உடன் இறந்தாலும்
இறந்த பிண்டமாகவேப் பிறந்தாலும்
'முழுமை' ஆக்க வாளால் கீறிப் புதைக்கும்
வழமை உடைய இவ்வுலகில்

பிணைக்கப்பட்ட நாயாய்
ஈனப்பட்ட பலவீனனாய்
நட்பற்றவர் கீழடி பணிந்து
வெப்பத்தில் வேகும் வயிறணைக்கக்

கேட்டு நீர் அருந்தும் மானக்
கேட்டுக்கு ஆளானேனே!

paarthiban
11-04-2007, 09:02 AM
புறநானூற்றுக்கவிதை -4

எனக்கா இந்நிலைமை!


பாடியவர் - சேரமான் கணைக்கால் இடும்பொறை
பொதுவியல் திணைப்பாடல்..

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்
ஆஅள் அன்று என்று வாளில் தப்பார்;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகைஇன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகைத் தானே!

பிறந்த குழந்தை உடன் இறந்தாலும்
இறந்த பிண்டமாகவேப் பிறந்தாலும்
'முழுமை' ஆக்க வாளால் கீறிப் புதைக்கும்
வழமை உடைய இவ்வுலகில்

பிணைக்கப்பட்ட நாயாய்
ஈனப்பட்ட பலவீனனாய்
நட்பற்றவர் கீழடி பணிந்து
வெப்பத்தில் வேகும் வயிறணைக்கக்

கேட்டு நீர் அருந்தும் மானக்
கேட்டுக்கு ஆளானேனே!




மீண்டும் அருமையான எளிமையான விளக்கம். அசந்துவிட்டேன் அண்ணா.

pradeepkt
11-04-2007, 09:40 AM
அண்ணா,
சேரமான் கண்டாலே அவர்தம் செய்யுள் செம்மையாய் மக்கட்கு சேர்ந்ததெண்ணி களிபேருவகை அடைவார்.
வாழ்த்துகள்.

இளசு
11-04-2007, 06:04 PM
மீண்டும் அருமையான எளிமையான விளக்கம். அசந்துவிட்டேன் அண்ணா.

நன்றி பார்த்தி...
இத்திரியில் தொடர்ந்து நெய் ஊற்றுவதற்கு..


அண்ணா,
சேரமான் கண்டாலே அவர்தம் செய்யுள் செம்மையாய் மக்கட்கு சேர்ந்ததெண்ணி களிப்பேருவகை அடைவார்.
வாழ்த்துகள்.

இலக்கிய நடையில் மிகையான பாராட்டு பிரதீப்... நன்றி!

பாரதி
11-04-2007, 06:15 PM
அருமை அண்ணா..! வித்தியாசமான முயற்சியின் வெற்றிக்கு கட்டியம் கூறுவது போல இருக்கிறது.

இப்பாடல் வடக்கிருப்பின் போது பாடப்பட்டதா..?

இளசு
11-04-2007, 06:54 PM
நன்றி பாரதி..


இப்பாடல் வடக்கிருப்பின் போது பாடப்பட்டதா..?

ஆம் பாரதி..

மானத்தை உயிரைவிட மேலாய் நாம் மதித்திருந்த காலமது!

leomohan
11-04-2007, 06:59 PM
புறநானூற்றுக்கவிதை -4



கேட்டு நீர் அருந்தும் மானக்
கேட்டுக்கு ஆளானேனே!




அற்புதமான விளக்கம். அருமையான பாடல். நன்றி இளசு.

இளசு
11-04-2007, 07:08 PM
அற்புதமான விளக்கம். அருமையான பாடல். நன்றி இளசு.

நன்றி மோகன்..

உங்கள் பாராட்டு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது..

இளசு
16-04-2007, 12:39 AM
புறநானூற்றுக் கவிதை - 5

என்ன வேகம்!



பாடல்: புலவர் சாத்தந்தையார்

சோழன் கோப்பெருநற்கிள்ளியின் போர் புரியும் வேகத்தை
வர்ணிக்க வந்த புலவர்
இக்கால ஒளி ஓவியர் போல்
இடம், காட்சி, பின்புலம், ஆடை அணிகலனோடு
ஓர் அரச வாகைக் கவிதை ஓவியம் உவமை வர்ணத்தில் தீட்டுகிறார்...

------------------------------
சாறு தலைக் கொண்டெனப் பெண் ஈற்று உற்றென
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ....
ஊர்கொளவந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகைப் போரே !

-----------------------------------------------------
(அவனுக்கு அவசரம்...)
திருவிழா வரப்போகிறது!
மனைவிக்கு பிரசவம் விரைவில்!
மழைக்கால சூரியன் மறைந்து
மங்கும் வெளிச்சம்!
கட்டில் பின்னும் எளியவனின்
கையில் உள்ள ஊசிக்குத்தான்
எத்தனை வேகம்..!
(அவனுக்கு அவசரம்!)

அந்த...
ஊசியை விட விரைவானது
ஊர் பிடிக்க வந்த எதிரியோடு
பூமாலை அணிந்த இவன்
புரிந்த போர்!

paarthiban
17-04-2007, 03:55 PM
அடுத்த வேளை சோத்துக்கு வழி பண்ண உழைப்பவன் அவசரம்.
இதைவிட என்ன உதாரணம் உவமேயம் வேண்டும்? நன்றி அண்ணா.

இளசு
17-04-2007, 08:15 PM
அடுத்த வேளை சோத்துக்கு வழி பண்ண உழைப்பவன் அவசரம்.
.


நன்றி பார்த்தி...

பசி மட்டுமல்ல...
கணவனாய் மனைவியின் பிரசவச் செலவு.. ஆணின் மனப்பசி!
ஊர்க்காரனாய் திருவிழாச் செலவு.. மனிதனின் மானப்பசி!


கோடையாய் இருந்தால் மாலை ஆறுமணி தாண்டியும் பின்னலாம்..
குளிர்காலம்..சூரியன் சீக்கிரமாய் மங்குகிறான்..
இருட்டு நெருங்குகிறது..
பின்னும் பின்னினால் விரல் பின்னப்படலாம்!
விரைவு மட்டுமே அவன் வாழ்வில் தற்காலிக வெளிச்சம் தரும்!

என்ன ஒரு வாழ்க்கைத் தெறிப்பு!

பாரதி
17-04-2007, 08:53 PM
அபாரம் அண்ணா...
அவசரம் என்பதை விட விரைவு என்பது சில இடங்களில் தேவைதான் என்பதை உங்கள் விளக்கம் உணர்த்துகிறது. அடுத்து வரும் சில பல தினங்களில் மன்றம் வந்து உங்கள் கவிதைகளை காண இயலுமா என்ற சந்தேகம் உள்ளது அண்ணா...
தொடருங்கள். தாமதமாக வந்தாலும் விரைந்து ஓரே மூச்சில் படித்து விடுகிறேன்!

ஓவியா
17-04-2007, 09:00 PM
இளசு, வார்த்தையே இல்லை,

உங்கள் விமர்சனங்கள் மிகவும் அருமை.


ஒரு கவிதையை படித்து, யோசித்து, பொருளறிந்து, அதை அப்படியே எழிய தமிழில் பொருள் மாறாமல் மீண்டும் எழுதி தருவது வள்ளவன் செயல்.

நீங்க ரொம்ப அறிவாளிதான் சார். மிக்க நன்றி

pradeepkt
18-04-2007, 05:55 AM
அண்ணா, உயர்வு நவிற்சி அணிக்கு மிக மிகப் பொருத்தமான பாடல், அதை நீங்கள் வடித்த விதம் எளியோருக்குப் புரியும் வண்ணம் இன்னும் சிறப்பு!

இளசு
22-04-2007, 09:39 PM
...
அவசரம் என்பதை விட விரைவு என்பது சில இடங்களில் தேவைதான் என்பதை உங்கள் விளக்கம் உணர்த்துகிறது.


ஆமாம் பாரதி

விரைவின் காரணம் அவசரத்தேவை என்றாலும்
தரமாய் செய்ய திறனர்களால் முடியும்..


.


அடுத்து வரும் சில பல தினங்களில் மன்றம் வந்து உங்கள் கவிதைகளை காண இயலுமா என்ற சந்தேகம் உள்ளது அண்ணா...
தொடருங்கள். தாமதமாக வந்தாலும் விரைந்து ஓரே மூச்சில் படித்து விடுகிறேன்!

விரைவில் உன் கணினித்தொடர்பு இடையூறில்லாமல் அமைய விரும்புகிறேன்.. பாரதி!

நான் நாளை முதல் ஆறுவார விடுப்பில் போவதால்
அதன் பின் தொடர்வேன்...

தொடர் ஊக்கத்துக்கு அண்ணனின் நன்றிகள்...

இளசு
22-04-2007, 09:43 PM
ஒரு கவிதையை படித்து, யோசித்து, பொருளறிந்து, அதை அப்படியே எளிய தமிழில் பொருள் மாறாமல் மீண்டும் எழுதி தருவது வல்லவன் செயல்.



நன்றி ஓவியா

ஏற்கனவே பல (சுஜாதா உட்பட்ட) முன்னோடிகள் புரியும் தமிழில் தந்த பொழிப்புரை படித்து
இன்னும் என்னளவுக்குப் புரிய எளிமைப்படுத்தும் சிறிய முயற்சி இது..
அதற்கு நம் மன்ற சொந்தங்கள் தரும் ஊக்கமே காரணம்..
பொருள் சிதைக்காமல் இருக்க முயன்றாலும், பிழைகள் நேரலாம்.
அதற்கு என் குறையறிவு மட்டுமே காரணம்..

இளசு
22-04-2007, 09:44 PM
உயர்வு நவிற்சி அணிக்கு மிக மிகப் பொருத்தமான பாடல்

இத்தொடருக்கு தொடர் ஊக்கம் தரும் பிரதீப்புக்கு
அண்ணனின் அன்பும் நன்றியும்..

பாரதி
23-04-2007, 01:21 AM
நான் நாளை முதல் ஆறுவார விடுப்பில் போவதால்
அதன் பின் தொடர்வேன்...

நன்றி அண்ணா...

உங்கள் விடுப்பு மகிழ்வானதாக, நிம்மதியானதாக, உபயோகமுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது மன்றத்திற்கு வந்து செல்லுங்கள்.

RRaja
23-04-2007, 04:55 AM
இத்தனை காலம் எப்படிப்பார்க்காமல் போனேன் இந்தப்பதிவை.. மிக எளிமையாகப்புரியும்படி விளக்கியிருக்கிறீர்கள்.

RRaja
23-04-2007, 04:56 AM
ஆகா! நான் வந்த வேளை.. நீங்கள் விடுப்பிலா.. மீண்டும் தொடரும்வரை காத்திருக்கிறேன்.

aflacnerd
23-05-2007, 07:42 PM
சிறந்த விளக்கம். வாழ்துக்கள்.

இளசு
11-07-2007, 05:19 PM
நன்றி அண்ணா...

உங்கள் விடுப்பு மகிழ்வானதாக, நிம்மதியானதாக, உபயோகமுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது மன்றத்திற்கு வந்து செல்லுங்கள்.


ஆகா! நான் வந்த வேளை.. நீங்கள் விடுப்பிலா.. மீண்டும் தொடரும்வரை காத்திருக்கிறேன்.

நன்றி பாரதி.. நன்றி ஆர் ராஜா மற்றும் நண்பர்களே..

விடுப்பு முடிந்து வந்தாச்சு..
தொடரும் பணியைத் தொடர்கிறேன்.. விரைவில்..

உங்கள் ஊக்கமும் வாழ்த்தும் என்றும் வேண்டும்!

ஆதவா
12-07-2007, 05:25 AM
மீண்டும் இந்த பகுதியைத் தொடருங்கள் அண்ணா.

ஓவியா
14-07-2007, 01:44 AM
நானும் ஆவலை உள்ளேன், திரியை தொடருங்கள் இளசு.

ஆமாம், கவிக்சமரில் கோதாவில் குதிப்பேன் என்று சொன்னீர்களே!! என்ன குத்தித்தாகிவிட்டதா??? ஹி ஹி

lolluvathiyar
14-07-2007, 07:37 AM
புறநானூறு, பாடல்களை தந்து அதுக்கு அழகாக விளக்கமும் தந்திருக்கும் தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நன்றி. மேலும் தொடருங்கள்
அதை பற்றி சில வரலாறை நான் தர ஆசைபடுகிறேன்

புறநானூறு சங்க தமிழில் எட்டுதொகை யில் ஒரு பகுதி, 150 புலவர்கள் எழுதிய 400 பாடல்கள் கொண்டது. இதில் ஔவையாரின் பாடல்களும் அடக்கம்

புறநானூறு என்றால் புற வாழ்கையை மையமாக கொண்டு எழுதபட்ட பாடல்கள். அனைத்தும் சேர சோழ் பான்டிய மன்னர்களை போற்றி எழுதபட்டது. போர், அரசியல், செல்வம், புறவாழ்கை இவற்றை போற்றி எழுதபட்டவை.
பாண்டவர்கள் கௌருவர்களுடன் போரிட சேர நாட்டு மன்னன் உதயன் என்பவர் படை அனுப்பியும், உணவு அளித்தும் உதவி புரிந்தான் என்ற ஆதாரம் கூட புறநானூறு பாடலில் இருகிறது.
தொடரட்டும் உங்கள் பனி

இளசு
30-07-2007, 08:13 PM
அனைவருக்கும் நன்றி சொல்லித் தொடர்கிறேன்..

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
புறநானூற்றுக்கவிதை − 6
பாடியவர் : புலவர் பரணர்
பாடப்பெற்றவர் - வையாவிக் கோப்பெரும் பேகன்
பாடாண்திணைப் பாடல்..

பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
யாரீரோ என வினவல் ஆனாக்

கார் என ஒக்கல் கடும்பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே! இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே! என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்,

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே! பிறர்
வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே!−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−


மயிலுக்கே போர்வை தந்த..

'' பாணனாகிய நீவிர் அணிந்த பொன் தாமரையும்
பக்கத்தில் உள்ள உம் விறலி அணிந்த பொன்மாலையும்
ஓரத்தில் நிற்கும் குதிரைத் தேரும்
'இன்னொரு தேசத்து ராஜா இங்குவந்து
இளைப்பாறுகிறாரோ 'என
எண்ண வைக்கிறதே...
எவரோ நீவிர்?'' எனக் கேட்டவனே..கேள்!

உற்றத்துடன் பசியில் உழலும் இரவலனே!
வெற்றிவேல் அண்ணலைக் காணும் முன்னே
உன்னைவிட வாடி இருந்தவர்கள் நாங்கள்..
இன்றைக்கு அந்நிலைமை இல்லை!!
என்றைக்கும் அணியாது என அறிந்தும்

போர்வையை மயிலுக்கு ஈந்த எம் மன்னன்
போர் யானைகள், குதிரைகள் கொண்ட பேகன்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுப்பவன்
அடுத்த பிறவியில் வரும் நன்மைக்காக அன்று..
அடுத்து நிற்பவன் வறுமை பார்த்த
அவன் கை வள்ளல்தன்மையால்!

பாரதி
31-07-2007, 06:04 AM
மஞ்ஞை = மயில்...! இன்று கற்றேன் அண்ணா... கலிமான்..?? அக்காலத்தில் இருந்த கொடைத்தன்மை..அல்லது புலவர்களின் கைவண்மை..? எதுவாக இருப்பினும் புறந்தள்ளி வைத்திருந்த நானூறை அகத்தே ஏற்றும் அண்ணனுக்கு அன்பு.

இளசு
21-04-2011, 10:19 PM
ஆதவா, ஓவியா, வாத்தியார், பாரதி..

ஊக்க மொழிகளுக்கு காலம் தாழ்த்திய நன்றி!

மனம் இளைப்பாற வேண்டும்போதெல்லாம் இலக்கிய நிழல்தான் துணை..

விரைவில் தொடர முயல்கிறேன்.

கீதம்
21-04-2011, 10:36 PM
அருமையான புறநானூற்றுப்பாடல்களுக்கு எளிமையான விளக்கம் தந்து கவி பாடிய பாங்கே என்னை நெடுநல்வாடையை நுகரச் செய்து விளக்கப்பாடல் எழுதவும் வைத்தது. நன்றி பல இளசு அவர்களே.

மீண்டும் புறநானூற்றுப்பாடல்களை உங்கள் வாயிலாய்ச் சுவைக்கக் காத்திருக்கிறோம். தொடர்வேன் என்றதும் துள்ளுகிறது மனம்.