PDA

View Full Version : தென்கச்சியாரின் கேள்வி பதில்கள் - பாகம் 2kavitha
09-10-2004, 12:02 PM
101. முன் கோபம் கொண்டோரை எதற்கு ஒப்பிடலாம்?

அவர்களை மாலுமி இல்லாத மரக்கலத்துக்கு ஒப்பிடலாம் என்கிறார் நபிகள் நாயகம். கொந்தளிக்கும் கடலில் சிக்கிக்கொண்ட மரக்கலத்தை விடக்கோபக்காரனின் நிலைமை மோசமானது என்கிறார் அவர். மரக்கலம் அல்லாடும்போது அதைச் சீர்படுத்த மாலுமி இருப்பார். மாலுமி இல்லையென்றால் மரக்கலம் என்னாகும்?

மனித மனம் ஒரு மரக்கலம். அறிவுதான் மாலுமி. கோபம்,அறிவு என்கிற மாலுமியின் கண்களை அவித்து விடும். செவியைச் செவிடாக்கிவிடும். அதனால்தான் கோபக்காரனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது தெரிவதில்லை.

102. வாழ்க்கை என்பது ஒரு தற்காலிக நாடகம் என்று தெரிந்திருந்தும் கூட, பலர் தங்கள் 'ஆட்டத்தைக் குறைத்துக் கொள்வதில்லையே.. ஏன்?

கனவு முடியும் வரையில் நாம் கண்டு கொண்டிருப்பது கனவு என்பது நமக்குப் புரிவதில்லை. விழித்துக்கொண்ட பிறகுதான் விவரம் தெரிய வருகிறது.ஆட்டத்தைக் குறைத்துக்கொள்ளாதவர்கள், ஆடிக்கொண்டிருப்பது நாடகம் என்கிற விழிப்பு நிலைக்கு இன்னும் வராதவர்கள். பெருவாரியானவர்கள் இன்றைக்கு விழித்துக் கொள்வதற்கு முன்பாகவே செத்துப் போய் விடுகிறார்கள்.

103. காதலி, மனைவி என்ன வித்தியாசம்?

தப்பிக்கக்கூடிய பந்தம்!
இது தப்பிக்க முடியாத பந்தம்!
காதல் - உணர்வு பூர்வமாக நடைபெறுகிற செயல். எனவே அந்த சமயத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொடுப்பார்கள்.
"ஒரு நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது காதல்" - என்கிறார் ஜான் பிளாட்சர்.

104. பெண்களைக் கிண்டல் செய்யும்போது சிலர் சிரிக்கிறார்கள்.. சிலர் திட்டுகிறார்கள்.. சிலர் அமைதியாக
இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றி..?

சிரிக்கிறவர்கள்.. புதியவர்கள்
திட்டுகிறவர்கள்.. பெரியவர்கள்
அமைதியாக இருப்பவர்கள்.. ஏற்கனவே அடி வாங்கியவர்கள்.

105. கலையாத ஒப்பனை எது?
இயற்கை செய்து கொண்டிருக்கிற ஒப்பனை என்றைக்கும் கலைவதில்லை! அதனால்தான் அதன்
உண்மையான முகம் ஒரு போதும் புரிவதில்லை!

106. அடக்கம் யார் யாரிடம் எப்படி இருக்கவேண்டும்?

மத்தவங்களை விடுங்க சார்... நம்மளை விட புத்திசாலிகளைப் பார்க்கிறப்போ, நம்மகிட்டே இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பண்பு அது!

107. ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளாரே..?

இது இன்றைய தேவை.. மருத்துவமனைகளே தேவைப்படாத அளவுக்கு மக்களை உருவாக்க வேண்டியது எதிர்காலத்தேவை!

108. மன்னிக்க முடியாதது எது? மன்னிக்கக்கூடியது எது?

வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் விட்டவர்களைக் கூட மன்னிக்கலாம். "வாக்குறுதியா? எப்போது கொடுத்தேன்?" என்று கேட்கிறவர்களை மன்னிக்கவே முடியாது!

109. அ)காதலில் வெற்றி பெறுவது எப்படி?
ஆ)மரணபயத்தை வெல்ல என்ன வழி?
இ)கடவுளை எந்த அளவுக்கு நம்பலாம்?
ஈ) நினைக்கத் தெரிந்த மனத்திற்கு மறக்கத் தெரிவதில்லையே ஏன்?
(கேள்விகளை கேட்டவர் ஒருவரே!)

உங்கள் சூழ்நிலை எனக்குப்புரிகிறது.
உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் ஓரளவுக்குப் பதில் கிடைக்கிற மாதிரி ஒரு கதை சொல்கிறேன்.. கேளுங்கள்!

ஒரு பெரிய செல்வந்தர். அவர் ஒரு போட்டி வைத்தார். "இந்த நீச்சல் குளத்தில் ஏராளமான விஷப்பாம்புகள் எல்லாம் உண்டு!" இதில் யாராவது துணிந்து குதித்து நீந்திக்கரையேறி வந்துவிட்டால்.. 100 ஏக்கர் நிலம் அவருக்குக் கொடுப்பேன். அல்லது 1000 ஆடுகள் கொடுப்பேன்.
அல்லது என் ஒரே மகளை அவருக்கு மணம் செய்து கொடுப்பேன்." ஓர் இளைஞர் அதில் குதித்தார். நீந்தினார். கரையேறி வந்தார். செல்வந்தர் கேட்டார் : " உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன். உனக்கு என்னவேண்டும்? நிலமா?"

"இல்லை"

"ஆடுகளா? "

"இல்லை"

"என் மகளா?"

"இல்லை"

"வேறு என்ன தான் வேண்டும்"

"என்னைப் பாம்புக்குளத்தில் பிடித்துத் தள்ளியவன் யார் என்பது எனக்குத் தெரியவேண்டும்"

110. ராணுவ ஆட்சி வந்தால் ஊழல் ஒழியுமா?

ஒழியாது! ஒளியும்!!

ஒரு ராணுவத்தலைவர் மீது எல்லாரும் குற்றம் சாட்டினார்களாம். 'உங்கள் ஆட்சியில் ஜன நாயகமே இல்லை!' என்று. வெளி உலகத்தை திருப்திபடுத்துவதற்காக அவர் ஒரு தேர்தலை நடத்தினார். வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. அவருடைய ராணுவ வீரர்களே எல்லாச் சீட்டுகளிலும் முத்திரை குத்திப் பெட்டியில் போட்டார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எல்லா வாக்குகளும் அவருக்கே விழுந்து கொண்டிருக்கின்றன! இடையில் ஒரே ஒரு வாக்கு மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு விழுந்தது. உடனே ராணுவத்தலைவர் மகிழ்வோடு
பத்திரிக்கையாளர்களைப் பார்த்தார்: "பார்த்தீர்களா? என்னுடைய நாட்டில் ஜன நாயகம் இல்லை என்றீர்களே.. பாருங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கும் ஓட்டு விழுந்திருக்கிறது!" என்றார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஒரு வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு விழுந்திருந்தது. ராணுவத் தலைவர் தமக்குள்
முணு முணுத்தார்: " திருட்டுப்பயல்! ஒருவனே இரண்டு வாக்குகள் போட்டிருக்கிறான்!"

111. மனித நேயம் எப்படி இருக்க வேண்டும்?

கலைவாணரின் கடைசி நாட்கள்...
மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.
"அண்ணே... என் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கிறேன்!" என்கிற செய்தியோடு ஒருவர் வருகிறார்.
வருகிறவரின் நிலை இவருக்குப் புரியும்.
ஏதாவது கொடுக்க வேண்டுமே என்று யோசிக்கிறார்.
இவர் கையிலும் அப்போது ஏதும் இல்லை.. என்ன செய்வது?
எதிரே இருந்த ஒரு வெள்ளி தம்ளர் கண்ணில் படுகிறது. இதை எடுத்துக் கொடுத்தால்.. மனைவி மதுரம் என்ன நினைப்பாரோ..?
"மதுரம், அங்கே வெளியே என்ன சத்தம்.. யாரு வந்திருக்காங்க பாரு!" என்கிறார்; மதுரம் வெளியே போகிறார்.
இவர் மெதுவாக அந்த தம்ளரை எடுத்து... அவரிடம் கொடுத்து ... "மறைச்சு வச்சுக்கோ.. பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்து!" என்று சொல்லி அனுப்புகிறார்.

க.கமெண்ட்: வலப்பாகம் தருவது இடப்பாகம் அறியக்கூடாது என்பது இது தானோ?

112. மன அமைதிக்கு மார்க்கம் என்ன?

எனக்குத்தெரிந்த மார்க்கம் தூக்கம் ஒன்று தான்.
எல்லாம் தெரிந்தவர்கள் சொல்லுகிற மார்க்கம் சன்மார்க்கம்!
க.கமெண்ட்: ஆனால் அந்தத் தூக்கம் தழுவுவதற்கும் துக்கம் தழுவாமல் இருக்க வேண்டும்!

113. மனிதனின் அழகு எதுவரை?

இன்னொரு மனிதனை மதிக்கற வரையில்!

114. வெளி நாட்டில் வேலை வாய்ப்புத்தேடி நம் இந்திய மக்கள் செல்கிறார்களே! நம் நாட்டில் வேலைக்குப் பஞ்சமா?

வேலைக்குத் தக்க ஊதியத்துக்குத்தான் பஞ்சம்!

115. எது நல்ல இலக்கியம்?

எது எழுதுகிறவனையும் உயர்த்தி.. படிக்கிறவனையும் உயர்த்துகிறதோ... அதுவே நல்ல இலக்கியம்.

116. அறிவாளி என்று பெயர் எடுக்க என்ன வழி?

'வைத்தியரே! முதலில் உமது நோயைக் குணப்படுத்திக் கொள்ளும்!" ('Doctor! Heal thyself first') என்று ஒரு பொன்மொழி உண்டு.. இதைப் புரிந்து கொண்டவர்கள் அறிவாளிகள்.

117. கவலைப் படாமல் காலம் தள்ள முடியுமா?

காலத்தைத் தள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கவலைப் படுகிறார்கள்! காலத்தை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! எனவே காலத்தை தள்ள நினைக்காதீர்கள்.
காலத்தைக் கொள்ள முயலுங்கள்! கவலை விலகிக் கொள்ளும்.

118. இங்கே நடக்கிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?

சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தபோது அங்கே ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்டார்:

"சுவாமி! எங்கள் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று ஏராளமான குற்றங்கள்! உங்கள் நாடு அமைதியாக இருக்கிறதே... இது மாதிரி இல்லையே!"

அதற்கு சுவாமி:
"அதற்காக நான் பெருமைப் படவில்லை.. வெட்கப்படுகிறேன்." "ஏன்?"

"உங்கள் மக்கள் உயிரோடு உலவுகிறார்கள்.. ஆகவே தவறுகளும் செய்கிறார்கள். என் நாட்டு மக்கள் பிரேதங்களாகி விட்டார்கள். அதனால்தான் அங்கே பிரச்சினைகள் இல்லை. என் மக்களும் குற்றங்கள் செய்வதை நான் வரவேற்கிறேன். அப்போது தான் அவர்கள் பிரேதங்கள் அல்ல!"

இன்றைக்கு நான் பிரேதங்கள் அல்ல. எல்லா குற்றங்களும் நடக்கின்றன. தாமச குணத்திலிருந்து ராஜஸ குணத்தை அடைந்திருக்கிறோம். இந்த ராஜச குணாம்சத்தில் சுரக்கும் சக்தியை வரையறைப்படுத்தி, முறைப்படுத்தினால், அழிவிலிருந்து ஆக்க சக்தியாக
மாற்றமுடியும். மனித நேயமாக்க முடியும். ஆன்ம நேயமாக்க முடியும். இதுதான் சாத்விக குணாம்சம் என்பது- என்றார் சுவாமி
ரங்க நாதனந்த மகராஜ்
.
மானுட நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த மூன்று அம்சங்களும் உண்டு. தாமச, ராஜச, சாத்விக அம்சங்கள்.

இந்தியா இப்போது அந்த மூன்றாவது கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

119. 'விவேக சதகம்' படித்ததுண்டா?

'பிள்ளைதான் வயதில்
மூத்தால்
பிதாவின் சொற்
புத்திக் கேளான்.
கள்ளிநற் குழலாள்
மூத்தால்
கணவனைக் கருதிப்
பாராள்!'
என்றெல்லாம் எப்பவோ படித்தது ஞாபகத்துக்கு வருகிறது.

120. செலவைக் கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்களேன்..!

பணம் நமக்குப் பயன்பட வேண்டுமானால் அதைச் செலவு செய்யவேண்டும். எனவே, சம்பாதியுங்கள். செலவு செய்யுங்கள். இப்படிச் செய்கிறவர்கள்தான் வாழத்தெரிந்தவர்கள். சம்பாதிக்க மட்டுமே தெரிந்தவர்கள் அல்லது செலவு செய்ய மட்டுமே தெரிந்தவர்கள் - இவர்கள் வாழத்தெரியாதவர்கள். எது செலவு எது விரயம் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

Money is to be spent and not to be wasted!

க.கமெண்ட்: பணம் மட்டுமல்ல, நீர், உணவு என அத்தியாவசியப்பொருட்கள் யாவுமே..

121. எதை எண்ணிப் பார்க்கவேண்டும்?

இப்போதைய தலைவர்கள் எண்ணிப் பார்க்க அப்போதைய தகவல் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்.
கம்யூனிஸ்ட் தலைவர் தோழர். ப. ஜீவானந்தமும் காந்திஜியும் ஒரு முறை சந்தித்துக் கொண்டார்கள்.

காந்திஜி: உங்களுக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா?

ஜீவா: தாய் நாடு தான் என் சொத்து.

காந்திஜி: இல்லையில்லை.. நீங்கள் தான் தாய் நாட்டின் சொத்து.

122. சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கஞ்சத்தனமா?

சிக்கனம் வேறு. கஞ்சத் தனம் வேறு. தேவையை மட்டும் நிறைவு செய்து கொள்வது சிக்கனம்.

தேவையையும் தேவை இல்லாமல் செய்ய முடியுமா என்று பார்ப்பது கஞ்சத்தனம்.

கடைக்குப்போய்த் தேவைக்குத் தகுந்த மாதிரி ஒரு செருப்பை வாங்குவது சிக்கனம். அதைக் காலில் மாட்டினால் தேய்ந்து போகுமே என்று யோசிப்பது கஞ்சத்தனம்.

க.கமெண்ட்: குழாயில் ஒழுகும் நீரைச் சேமித்து வைப்பது சிக்கனம். குளிக்காமலே இருப்பது கஞ்சத்தனம். )

123. தலைவலிக்கு மருந்து போடலாம். தலைவிதிக்கு மருந்து உண்டா?

டாக்டரை நம்பி மருந்து சாப்பிடுங்கள்.. தலைவலி குணமாகும்.
உங்களை நம்பி உறக்கம் கலையுங்கள்.. தலைவிதி குணமாகும்.
அதாவது - தலைவலிக்கு மருந்து நன்னம்பிக்கை; தலைவிதிக்கு மருந்து தன்னம்பிக்கை.

124. நான் நினைப்பதெல்லாம் தோல்வியில் முடிகிறது..!

கவலைப் படாதீர்கள். அதுமாதிரி எண்ணம் பொதுவாகவே எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடியது தான். அப்படிப்பட்ட சமயம் உங்கள் மனசை ஓரங்கட்டிவிட்டு, அறிவை முன்னால் கொண்டுவந்து நிறுத்துங்கள். முயற்சி திருவினை ஆக்கும். எழுத்தாளர்கள் 'சுபா' (சுரேஷ்-பாலா) இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருந்தார்கள். அதில் எழுதியிருந்த கவிதை வரிகள்..

"உலகமே முடிந்துவிட்டது என்று
கம்பளிப்பூச்சி நினைக்கும் தருணம்..
ஒரு பட்டாம்பூச்சியின் ஆரம்பம்."

125. உண்மையான அன்பு எது?

சொர்க்கம் இருக்கும் இடம் எதுவோ அங்கேதான் உண்மையான அன்பை அடையாளம் காணமுடியும். நபிகள் நாயகம் சொல்கிறார்: 'சொர்க்கம் தாயின் காலடியில் உள்ளது' என்று.
__________________

karikaalan
09-10-2004, 12:41 PM
கவிதாஜி

ஒவ்வொன்றும் கல்கண்டாய், சுக்காய் இனிக்கிறது/உறைக்கிறது. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பரஞ்சோதி
09-10-2004, 12:54 PM
வாங்க சகோதரி, நலம் தானே!

நீங்கள் வராமல் மன்றம் ரொம்பவும் போர் அடிக்குது, ஐவர் அணி ஆட்டம் கண்டுபோய் இருக்கிறது (உங்கள் அணியை காணவில்லை).

வந்தவுடன் மிகப்பெரிய பதிவை கொடுத்தமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி..

kavitha
25-10-2004, 10:37 AM
Quote:
ஒவ்வொன்றும் கல்கண்டாய், சுக்காய் இனிக்கிறது/உறைக்கிறது. வாழ்த்துக்கள்.
===கரிகாலன்

நன்றி அண்ணா.

Quote:
வாங்க சகோதரி, நலம் தானே!
நீங்கள் வராமல் மன்றம் ரொம்பவும் போர் அடிக்குது, ஐவர் அணி ஆட்டம் கண்டுபோய் இருக்கிறது (உங்கள் அணியை காணவில்லை).
வந்தவுடன் மிகப்பெரிய பதிவை கொடுத்தமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி..

நலம் அண்ணா. ஐவரணி (குரு,சீடர்களுடன்)தற்போது எப்படி உள்ளது?

உங்களது "கமெண்ட்" இப்பதிவிற்கு அவசியம். தொடர்ந்து வாசித்து
கருத்துகளை தெரிவியுங்கள்.

-----------------------------------------------------------

126. உள் நாட்டில் எவ்வளவு நல்ல பொருள்கள் கிடைத்தாலும் நம் மக்கள் வெளி நாட்டுப்பொருள்கள் மீது நாட்டம் கொள்வது ஏன்?

அப்படிப்பட்டவர்களை வெளி நாட்டில் கொண்டுபோய் விடுங்கள்... அப்புறம் இந்தியப்பொருள்கள் மீது ஆசைவரும். அருகில் இருந்தால் அருமை தெரியாது. இது மனம் செய்கிற மாயம்.

127. மனித நேயமும், சகோதரத்துவமும், மானுடமும் அழிந்து வருகின்றனவே..?

அப்படித்தோன்றுகிறது உங்களுக்கு! ஆனால் உண்மை என்ன தெரியுமா? அவை இல்லாதவர்கள்தான் அழிந்து போவார்கள். அதாவது வாழத்தெரியாமல் வீணாகிப் போவார்கள்.

128. ஆசிரியர்-மாணவர் உறவு இப்போது எப்படி இருக்கிறது?

அந்தக்காலத்தில் குருகுலமுறை. ஆசிரியர் உட்கார்ந்திருப்பார். மாணவர் நின்று பணிவாகப் பாடம் கேட்பார். இப்போது - மாணவர் உட்கார்ந்திருக்கிறார். ஆசிரியர் நின்று கொண்டு பாடம் நடத்துகிறார்.

129. வெளி நாடு சென்ற அனுபவம் உண்டா?

நமது இராணுவ விமானத்தில் இலங்கைக்குப் போய் வந்திருக்கிறேன்.
என் கூட வந்தவர்கள் யார் தெரியுமா? சுமார் 200 கோழிகள், 50 ஆடுகள், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் மூட்டைகள் இவற்றுடன் நானும், செய்தியாளர்கள் சிலரும்.

130. வாய்ப்பிருந்தும் முன்னேறாமல் இருப்பவர்கள் பற்றி..?

அவர்கள் சோம்பலில் சுகம் காண்கிறவர்கள்.
ஓர் இளைஞன், சாய்வு நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்துக்கிடக்கிறான். அவன் அப்பா கேட்கிறார்.

"ஏம்ப்பா, இப்படி இருந்தா எப்படி, மத்தவங்கமாதிரி சுறுசுறுப்பா இருக்க வேணாமா?"

"மத்தவங்க என்ன பண்றாங்க?"

"வேலைக்கு போய் காசு சம்பாதிச்சு, வீடு கட்டி, சந்தோசமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்காங்க"

"அப்பா, இப்பவே நான் அதைத்தானே செஞ்சிக்கிட்டு இருக்கேன்"

131. வாழ்வில் நாம் யாரை மதிக்க வேண்டும்?

"நீங்களும் உங்கள் பெற்றோரும் காட்டு வழியே போய்க்கொண்டிருக்கிறீர்கள், எதிரில் ஒரு சிங்கம் வருகிறது. அந்த சமயத்தில் தாய் தந்தை இருவரி, யாரை முதலில் காப்பாற்றுவீர்கள்?"

"முதலில் நான் சிங்கத்தின் வாய்க்குள் புகுந்து விடுவேன்.. சிங்கம் என்னைத்தின்பதற்குள் என் தாயும் தந்தையும் தப்பித்து ஓடி விட முடியும்"

கேள்வி கேட்டவர் கோபால கிருஷ்ண கோகலே

132. தன் கணவன் வழுக்கைத் தலையாய் இருப்பதை எண்ணி மனைவி மானசீகமாக வருந்துவதுண்டா?

பல பேர் அப்படி வருந்துவதில்லை.. அந்தத் தலை அப்படி ஆனதற்கே அவர்கள்தாம் காரணம் என்பதால்..!
க.கமெண்ட்: இதெல்லாம் ஒரு சுய பாதுகாப்பு தந்திரமுங்கோ..

133. அவசர, ஆடம்பர உலகில் மனம், வாக்கு ஒன்றுபட என்ன செய்யவேண்டும்?

" நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று ஒரு ஞானியிடம் கேட்டார்கள். "பசி எடுத்தால் சாப்பிடுகிறேன், தூக்கம் வந்தால் தூங்குகிறேன்" என்றார் அவர்.

"இதை எல்லாரும்தானே செய்கிறார்கள்?"

ஞானி சிரித்தார்.

" நீங்கள் சாப்பிடும்போது, நீங்கள் அங்கே இருப்பதில்லை. வேறு எதையோ நினைக்கிறீர்கள். மனம் எங்கோ அலைகிறது. நான் சாப்பிடும்போது.. சாப்பிட மட்டுமே செய்கிறேன். தூங்கும்போது
தூங்க மட்டுமே செய்கிறேன்."

செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம் என்கிறது கீதை.
செய்யும் தொழிலில் ஒன்றிவிடும்போது அது தியானமாகி விடுவதோடு, செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம், எதுவும் இல்லாமல் போய் விடுகிறது.

134. இலட்சியம் என்பது மனிதனுக்குத் தேவை தானா?

நினைப்பது நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அது அவசியம் தான். ஒரு தடவை, சர்ச்சிலைக் காண்பதற்காகப் பத்திரிக்கை நிரூபர் ஒருவர் சென்றார். அறையில் நுழைந்தவரைப் பார்த்து சர்ச்சில் சொன்னார்.

" நீங்கள் பெரும் அதிர்ஷ்டசாலிதான்.. உங்களுக்கு என்னை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் வருவதற்குமுன் ஒன்பது நிருபர்கள் வந்த போது நான் பார்க்க மறுத்துவிட்டேன்"
வந்த நிருபர் சொன்னார், " அதுவும் எனக்குத்தெரியும்; ஏனெனில் முன்னே ஒன்பது முறை முயன்றவனும் நானே தான்"

135. இல்லத்துறையில் இறங்கியதும் நினைவாற்றல் மங்கி விடுவது ஏன்?

அடடே! உங்களுக்கும் கூட அப்படித்தானா? ஆனாலும் ஒரு விஷயம். குடும்பத் தலைவர்களுக்கு நினைவாற்றல் குறைந்து கொண்டே போகிற அதே வேகத்தில் குடும்பத்தலைவிகளின் ஆற்றல் கூடிக்கொண்டே போகிறது.
ஒரு வீட்டுக்குள் நடந்த உரையாடல்..
தலைவன்: " நமக்குக் கல்யாணம் ஆகி நாற்பது வருஷம் ஆச்சு.. இன்னமும் நீ அன்னைக்குப்பார்த்த மாதிரியேதான் இருக்கே!"
தலைவி: "உண்மைதாங்க.. அன்னைக்கு நீங்க எடுத்துக் கொடுத்த பட்டுப் புடவைதான் இது. அதுக்கு அப்புறம் எங்கே எடுத்துக் கொடுத்தீங்க :roll"

136. எளியது எது? வலியது எது?

அடிப்பது சுலபம். அதைப் பொறுத்துக்கொள்வது கடினம்.

137. மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் உங்கள் ரசனையில் முன்னிற்பது எது?

நினைவில் இருப்பது மரபுக் கவிதை, உணர்வில் நிற்பது புதுக்கவிதை.

138. அமரர் கி.வா.ஜ அவர்களின் நூல்களில் தங்களைக் கவர்ந்த நூல் எது?

அவருடைய "கவிபாடலாம்" - படித்துவிட்டுப் பிழையில்லாமல் கவி எழுதக் கற்றுக்கொண்டவன் நான்.

139. நாளை கிடைக்கும் பலாக்கனியை விட இன்று கிடைக்கும் கலாக்கனியே மேல் என்று கூறுகிறார்களே.. விளக்கம் என்ன?

இன்று நான் உங்களுக்கு 100 ரூபாய் தருகிறேன். அல்லது இன்னும் 20 வருடம் கழித்து 500ரூபாய் தருகிறேன் எது வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வீர்கள்?

140. மனைவியின் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்கச் சிறந்த வழி என்ன?

ஒரு நாள் கடவுள் வந்தார்: ஒரு கணவன் - மனைவியைச் சந்தித்தார்.

"உங்கள் இரண்டு பேரில் யாராவது ஒருவர் மட்டும் என்னோடு வரலாம்.. சொர்க்கத்துக்குஅழைத்துச் செல்கிறேன்" என்றார்.

கணவன் முந்திக்கொண்டு, "அப்படியானால் இவளை அழைத்துச் செல்லுங்கள்" என்றான்.

"ஏன்.. உனக்கு சொர்க்கம் வேண்டாமா?" என்று கேட்டார் கடவுள்.

இவன் சொன்னான்: " இவளை நீங்கள் அழைத்துக் கொண்டுபோய்விட்டால் பிறகு இங்கேயே எனக்கு சொர்க்கம் தானே!

karikaalan
25-10-2004, 01:58 PM
கவிதாஜி

126 -- 140 படித்தேன். சொந்தக்காலையே வாருகிறீர்களே! நியாயமா....

==கரிகாலன்

இளசு
26-10-2004, 06:06 AM
வாங்க கவீ...
முதலில் மகிழ்ச்சியான நன்றிகள்.. மீண்டும் வலம் வருவதற்காக..

_____________________________

முதல் 25 க்காக..

அண்ணல் சொல்வதுபோல் பல்சுவை பதில்கள். எல்லாமே நல்சுவை..

முன்கோபம் பற்றிய விளக்கம் அருமை.

ஒழியாது - ஒளியும் - நச்! இராணுவ ஆட்சி வந்தால்தான் சரிப்படும் என்னும் மாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பாம்புக்குளம் - செந்தில் ஒரு சினிமாவில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..

சுபாவின் கவிதை அருமை - சுட்ட கவிதையில் தரலாம்.

ஜான் பிளட்சர் -எத்தனை பெரிய உண்மையை அழகாச் சொல்லிட்டு போயிட்டார்.

அங்கங்கே க.கமெண்ட்டுகள்... சுவை. (இன்னும் அதிகம் தாங்க..)
ஆமாம்..குளிக்காமலே இருப்பது சிக்கனமா..அல்லது கஞ்சத்தனமா?

kavitha
29-11-2004, 09:44 AM
Quote:
கவிதாஜி
126 -- 140 படித்தேன். சொந்தக்காலையே வாருகிறீர்களே! நியாயமா....
==கரிகாலன்

கரிகாலன் அண்ணா.. பலர் வாயைத்திறந்து சொல்லிவிடுகிறார்கள் அவ்வளவே! :லொல்: :லொல்:

Quote:
பாம்புக்குளம் - செந்தில் ஒரு சினிமாவில் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்..

அது என்ன நகைச்சுவை அண்ணா?அங்கங்கே க.கமெண்ட்டுகள்... சுவை. (இன்னும் அதிகம் தாங்க..)

யாரும் படிப்பதில்லையே என்று கொஞ்சம் தொய்வாக இருந்தது. கரிகாலன் அண்ணா மற்றும் உங்களது கருத்துக்களை படித்தபிறகு அக்குறை தீர்ந்தது. இனி புத்துணர்வுடன் எழுதுவேன்; நன்றி சகோதரர்களே.ஆமாம்..குளிக்காமலே இருப்பது சிக்கனமா..அல்லது கஞ்சத்தனமா?

அண்ணா, இதை மன்மதனிடம் அல்லவா கேட்கவேண்டும்! ஹி ஹி ஹி!!

அறிஞர்
25-01-2005, 09:28 AM
உங்க வீட்டுல.. கேட்ட கேள்வியா இது... (மனைவியின் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்கச் சிறந்த வழி என்ன)

சர்ச்சில் உதாரணம் அருமை..... பத்திரிக்கை, மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள்.. இதை நன்கு அறிவர்...

வெளிநாட்டு பயண அனுபவமும் அருமை...

வாழ்த்துக்கள்... கவி.. தொடருங்கள்... இந்த பதிப்பை சரியாக கவனிக்கவில்லை... காலம் தாழ்த்தி படித்தாலும் சுவையே.....

kavitha
25-01-2005, 11:26 AM
நன்றி அறிஞரே! இளசு அண்ணாவை எங்கே காணவில்லை?உங்க வீட்டுல.. கேட்ட கேள்வியா இது... (மனைவியின் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்கச் சிறந்த வழி என்ன)

உஷ்! அதெல்லாம் 'சிதம்பர' ரகசியம்

--------------------------------------------------------------

141. என் மனம் தனிமையை விரும்புகிறது. நாலு பேரோடு நன்றாக உரையாட முடியவில்லை. என்ன காரணம் என்று எனக்கும் புரியவில்லை..?

நீங்கள் வளர்க்கப்பட்ட விதம்தான் இதற்குக் காரணமாக இருக்கமுடியும்.
இன்று முதல் தினமும் இரண்டு பேரிடமாவது வலுக்கட்டாயமாக ஏதாவது பேசுவது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஓரிரு வார்த்தைகள் பேசினால் கூட போதும். ஒரு மாதத்தில் சரியாகிவிடுவீர்கள்.

சின்னவயதில் நான் கூட அப்படித்தான் இருந்தேன். இந்தக் காலத்துக் குழந்தைகள் எல்லாம் நம்மை மாதிரி இல்லை. "குழந்தை வளர்ப்பு" என்ற ஒரு புத்தகத்தை ஒரு குழந்தை படித்துக் கொண்டிருந்ததாம்.
"அதை நீ ஏன் படிக்கிறே?" என்று அப்பா கேட்டாராம். அதற்கு அந்தக் குழந்தை சொன்ன பதில்:

" நீ என்னை சரியா வளர்த்திருக்கியா..ன்னு பார்க்கறதுக்குத்தான்!"

க.கமெண்ட்: உஷார் அப்பாக்களே!

142. தலைக்கனம் இருக்கலாமா.. கூடாதா? எதிலும் ஒரு பந்தா வேண்டும் என்கிறான் என் நண்பன்!

உண்மையிலேயே தலையில் கனம் இருக்குமானால் அதை உள்ளபடியே உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளலாம். அது தன்னம்பிக்கை.
இல்லாததை இருப்பதாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மாதிரி நடந்து கொள்ள முயல்வார்கள் சிலர்.. இது பந்தா!

பார்க்கிறவர்களுக்கு உண்மை நிலை புரிகிறவரைதான் பந்தாபாதுகாப்பாக இருக்கும். அதற்கு பிறகு அது பரிதாப நிலையாகிவிடும்.

க.கமெண்ட்: தன்னம்பிக்கையை (மட்டும்) வளர்த்துக்கலாம்.

143. எல்லோரும் போற்றும்படி வாழ என்ன செய்ய வேண்டும்?
அயர்லாந்து நாட்டின் அதிபர் திவேலரா. அமெரிக்கச் செய்தியாளர் ஒருவர் அவரைச் சந்தித்தார். "ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலும் தலைவர்கள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் மட்டும் மாறாமல் இருக்கிறீர்கள். தொடர்ந்து தலைவராகவே நீடிக்கிறீர்கள். இதன்
ரகசியம் என்ன?

திவேலரா சொன்ன பதில்:
"இதற்காக விசேஷமான அமுதம் எதையும் நான் சாப்பிடுவது இல்லை, நான் தெய்வீக அவதாரமும் இல்லை. மக்களோடு மக்களாகப் பழகும் எளிமை என்னிடம் இருக்கிறது. இதனால் அவர்களது தேவைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மக்களின் விருப்பங்களை நான் தொடர்ந்து நிறைவேற்றுவதால் மக்கள் என்னை விரும்புகிறார்கள். தொடர்ந்து என்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது தான் அந்த ரகசியம்".

க.கமெண்ட்: நம்ம மக்களுக்கு தங்க பஷ்பமும், கனகாபிஷேகமும்
தானே சுலபமான வழி!

144. மனைவி சொல்லுக்குச் கட்டுப்படுவதும் அல்லது மரியாதை அளிப்பது வேறுவேறுதானே?

இன்னமுமா உங்களுக்கு இந்தச் சந்தேகம் தீரவில்லை..? மனைவி, 'நில்!' என்று சொன்னால் நிற்பது என்பது கட்டுப்படுவது!

'உட்கார்!' என்று சொன்னபிறகும் நின்று கொண்டிருப்பது-மரியாதை அளிப்பது!

க.கமெண்ட்: புதிதாகத் திருமணம் ஆனவர் போல... அதான் இந்தச்
சந்தேகமெல்லாம் வருது.

145. கண்ணன் குழல் கொண்டு ஊதின போது கானகத்தில் பசுக்கள் எல்லாம் சுற்றிவந்து படுத்து, செவி ஆட்டாமல் இசையின் வயப்பட்டன என்ற பொருள்படும்படியான பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடலை நினைவுப் படுத்துங்களேன்.

உங்கள் கேள்வியை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்து.. என் நண்பர்
ஒருவரைக் கண்டுபிடித்து அவர் மூலமாக அந்தப் பாடலை நானும் நினைவுப்படுத்திக்கொண்டேன்.
"சிறுவிரல்கள் தடவிப் பரிமாற செங்கண் கோட செய்யவாய் கொப்பளிப்ப
குறுவெயர்ப் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல்கொடு ஊதினபோது
பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவியாட்டக்கில்லாவே.'

க.கமெண்ட்: கரையாத மனமும் உண்டோ...

146. காதல் என்பது எப்போது சுவாரஸ்யம் ஆகிறது?

காதலிக்கப்படும்போது..

க.கமெண்ட்: உதை வாங்கும்போது மற்றவர்கள் சுவாரஸ்யம் அடைவார்கள் என்பது வேறுவிசயம்.

147. நான் என்ற சொல்லுக்கு ஆசை என்ற பொருள் உண்டு. உண்மைதான். ஆனால் வறுமையை யார் ஆசைப்படுவார்கள்? எனவே 'வறுமையின் மேல் ஆசைப்படுதல்' என்பதை பொருத்தமாகத் தெரியவில்லையே?

வறுமையைப் பற்றிக் கூறக்கூடிய ' நல்குரவு!' என்ற அதிகாரத்தில் வரும் 1043ஆம் குறள் இது.

"தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை"

இந்தக்குறளுக்கு உரை எழுதுபவர்கள் "வறுமை என்ற ஆசை நிலை" ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழமையான குடிப்பண்பும் புகழும் கெடும் என்று விளக்குவார்கள். அது வறுமையின்மேல் வரும் ஆசை அல்ல. வறுமையால் ஏற்படுகிற ஆசை. ஒருவன் வறுமை காரணமாக ஒரு பொருள் மீது ஆசை கொண்டு அதைத் திருடிவிடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனுடைய பரம்பரை குடும்ப கௌரவமும் போச்சு! புகழும் போச்சு!

இந்தக் குறளுக்கு யோகி சுத்ததானந்த பாரதியின் ஆங்கில ஆக்கம்:
The craving itch of poverty kills graceful words and ancestry"

க.கமெண்ட்: நமது உரையாசிரியர்கள் ஏன் தெளிவாகச் சொல்லியிருக்கக்கூடாது?!! :roll:

148. குழந்தையைத் தூங்கவைக்கத் தாலாட்டு மட்டும் போதுமா?

போதாது! குழந்தையும் மனது வைக்க வேண்டும்!

க.கமெண்ட்: அம்மா பாட்டு நல்லா இருக்கு.. பாடிட்டே இருக்கட்டும்னு குழந்தை கேட்டுட்டே இருந்தா அம்மா நிலை பரிதாபம் தான்!

149. அறிவு-ஞானம் : என்ன வித்தியாசம்?

நீ யார் என்று தெரிந்து கொள்வது அறிவு!

நான் யார் என்று புரிந்து கொள்வது ஞானம்!

க.கமெண்ட்: யப்பா ஞானம்... புரிந்ததா?

150. பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?

சத்தில்லாமல் இயங்கும்! அதே நேரத்தில் சத்தம் இல்லாமலும் இயங்கும்!

(ஓர் எச்சரிக்கை; இந்தப் பதில் குடும்பத்தலைவிகள் கண்ணில் படாமல்
பார்த்துக்கொள்ளவேண்டியது குடும்பத்தலைவர்களின் பொறுப்பு!)

க.கமெண்ட்: முக்கியமாக திருமதி. தென்கச்சியார் :oops:

பரஞ்சோதி
25-01-2005, 06:04 PM
சகோதரி கேள்வி பதில் 125க்கு அப்புறம் இப்போ தான் படிக்கிறேன்.

மேலும் நீங்க தட்டச்சு செய்யும் அனைத்து கேள்வி பதில்களையும் ஒரு (மின்) புத்தகமாக தொகுத்து நண்பர் இராஜ்குமாருக்கு அனுப்பி வையுங்கள், அவர் புத்தகங்கள் வரிசையில் போடுவார், அனைவரும் பிரிண்ட் எடுக்க வசதியாக இருக்கும்.

தொடரட்டும் உங்கள் பணி.

அறிஞர்
26-01-2005, 08:21 AM
அருமை கவி.. இன்னும் தொடருங்கள்........

150 சூப்பர்..... பெண்ணில்லாத உலகம்

பரம்ஸ் கூறுவதுபோல்..... தொகுத்து அனைவருக்கும் பயன்படும் வகையில் அளிக்கலாம்

மன்மதன்
26-01-2005, 10:38 AM
Originally posted by பரஞ்சோதி@Jan 25 2005, 11:04 PM

சகோதரி கேள்வி பதில் 125க்கு அப்புறம் இப்போ தான் படிக்கிறேன்.

மேலும் நீங்க தட்டச்சு செய்யும் அனைத்து கேள்வி பதில்களையும் ஒரு (மின்) புத்தகமாக தொகுத்து நண்பர் இராஜ்குமாருக்கு அனுப்பி வையுங்கள், அவர் புத்தகங்கள் வரிசையில் போடுவார், அனைவரும் பிரிண்ட் எடுக்க வசதியாக இருக்கும்.

தொடரட்டும் உங்கள் பணி.

சரியா சொன்னிங்க பரம்ஸ்.. நல்லா போகுது இந்த பதிவு..

அன்புடன்
மன்மதன்

பாரதி
28-01-2005, 04:24 PM
சீரிய சேவையை செவ்வனே தொடரும் கவிதாயிணிக்கு நன்றியும் பாராட்டுக்களும். தொடரட்டும்... தொடரட்டும்....

karikaalan
29-01-2005, 10:31 AM
148-க்கு இன்னோர் விடை:

"நீ பாடாமல் இரு; நான் தூங்குகிறேன்".

===கரிகாலன்

பாரதி
29-04-2008, 06:35 AM
தென்கச்சி சுவாமிநாதனின் சுவையான கேள்வி-பதில் தொகுப்பு. உறவுகளின் பார்வைக்காக மேலெழுப்பப்படுகிறது.

kavitha
30-06-2008, 08:19 AM
அடடே! இதை நானே இப்பொழுதுதான் பார்க்கிறேன். பாரதி அவர்களுக்கு நன்றி.
மனதிளைப்பாரும்போதெல்லாம் தென்கச்சி ஐயாவின் புத்தகங்கள் படிப்பதுண்டு. சுவையோடு, நகைச்சுவையையும் தருபவர் அவர். மேலெழுப்பியமைக்கு நன்றி.