PDA

View Full Version : தென்னவன் தீதிலன்



gragavan
06-10-2004, 06:26 AM
தென்னவன் தீதிலன்

"யோவ்! இன்சுபெக்டரு! வெளங்குவயாய்யா நீ. என்னத்தப் படிச்சி போலீசு வேலைக்கு வந்த? காசு குடுத்து வந்தியா? குத்தவாளிய கண்டுபிடிக்காம ஒரு தப்புஞ் செய்யாதவகள பிடிச்சி வெச்சிருக்கியே! என்னோட வகுத்தெரிச்சல் ஒன்னச் சும்மா விடாது. மாரியாத்தாவுக்கு கூளு ஊத்திருக்கேன். என் வாயில விழாத. உனக்கு நல்லதில்ல! வீட்டுக்கும் நல்லதில்ல!" போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தாள் சண்முகத்தாய். உள்ளே அவளது கணவன் பெருமாளைச் சந்தேகத்தில் பிடித்து வந்து முட்டிக்கு முட்டி தட்டிக் கொண்டிருந்தது போலீஸ். பெரிய திருட்டு. பெருமாள் மேல் சந்தேகம். பெரிய இடத்து பிரஷர். அதான் இந்த விசாரணை. வேறு வழி! மாசாமாசம் கவர் வருகிறதே.

ராத்திரி இழுத்து வரப்பட்ட பெருமாளைத் தேடி விடியற்காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாள் சண்முகத்தாய். அவளுக்குத் துணைக்கு காலனியிலுள்ள உறவுக்காரப் பெண்கள். எல்லாம் ஒன்று விட்ட அக்கா தங்கைகளும் மச்சினிகளும். கூக்குரலில் தொடர்ந்தது சண்முகத்தாயின் ஓலம். மெலிந்த அவள் உடம்பின் மேல் சேலை விலகியிருப்பதையும் பொருட்படுத்தாது கதறிக் கொண்டிருந்தாள். வாசலில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளும் அவள் வாயில் விழாமல் தப்பிவில்லை.

"அய்யா! பியூன் போலீசு, வாசல்லயே நிக்கியே. உள்ள போய் என்ன ஆச்சுன்னு பாக்கக் கூடாதா? சோறு வாங்கிக் குடுத்தியா? சம்பளம் கொடுக்குல்ல கெவருமெண்டு. வெச்சி வெச்சி திங்கியே! செமிக்குமா? வயித்தால போகும். ஒமட்டி ஒமட்டிக் கக்கவ. நீ உள்ள போயி பாக்கியா? நாம் போவட்டுமா?" திமிறிக்கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழையப் பார்த்தாள் சண்முகத்தாய். கூட வந்த பெண்கள் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.

"நல்லா பிடிங்கம்மா! இங்க வந்து கும்மரிச்சம் போட்டா ஆச்சா? தப்புப் செஞ்சா விட்டுருவாங்களா? அதான் வாங்கு வாங்குன்னு வாங்குறாங்க. இங்க கத்துறதுக்கு முன்னால புருசனக்கு புத்தி சொல்லீருக்கனும். அத விட்டுட்டு..."

கான்ஸ்டபிள் சொன்னது சண்முகத்தாயை இன்னும் உசுப்பி விட்டது. "என்னது? எம்புருசனுக்கு புத்தி சொல்லவா! நல்லாச் சொன்னீகய்யா! பியூனு போலிசு வேலை பாக்குற ஒனக்கு என்ன பேச்சு! ஒங்க இன்சுபெக்டருகிட்ட போயி புத்தி சொல்லு. கூரு கெட்ட போலீசு. தோலாந்துருத்தி. தேவாங்கு."

சற்றே ஒல்லியாக இருந்த அந்த கான்ஸ்டபிளுக்குக் ஆத்திரம் வந்தது. கையிலிருந்த லட்டியைச் சுழற்றிக்கொண்டு விரட்ட வந்தார். அவர் அடிக்க வரும் முன்னமே வந்திருந்த பெண்கள் அனைவரும் ஓலமிட்டார்கள். "ஐயோ! இப்படி பொம்பளைகளப் போட்டு அடிக்காகளே! கேக்க ஆளில்லியா!" அவர்களின் கூக்குரலில் கொஞ்சம் பயந்து போன கான்ஸ்டபிள் தயங்கினார். அந்நேரம் ஸ்டேஷனுக்குள்ளிருந்து மற்றொரு கான்ஸ்டபிள் பெருமாளைக் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார். சண்முகத்தாயைக் கூப்பிட்டு "இந்தாம்மா! ஒம் புருசன கூட்டிக்கிட்டு போ. ஒம் புருசன் தப்புப் பண்ணலன்னு இன்ஸ்பெக்டரு முடிவு செஞ்சிட்டாரு. வீட்டுக்குப் போயி நல்லாச் சமச்சுப் போடு."

பெருமாளைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தாள் சண்முகத்தாய். நல்ல அடி. எல்லாம் உள்காயம். எங்கு தொட்டாலும் வலியால் முனகினான் பெருமாள். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கீழேயிருந்த புழுதி மண்ணை வாரி வீசினாள். "பெரிய இன்சுபெக்டரு, கண்டுபிடிச்சிட்டாரய்யா! குத்தமே செய்யாத எம்புருசன அடிச்சியே, பாவி, நீ ஒரு போலீசா? உனக்கு காக்கிச் சட்ட ஒரு கேடா? தொப்பி வேற. கோமாளி அலங்காரம் மாதிரி. புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு போறியே ஜீப்பு. அதுதான இப்பத் தேவ. டயரு பஞ்சராகி நடு ரோட்டுல நிக்கனும். நல்ல போலீசு நம்ம ஊருப் போலீசு. த்தூ" காறித் துப்பிளாள்.

ஒரு வழியாய் வீட்டிற்கு அழைத்து வந்து படுக்க வைத்து உப்பு வறுத்து ஒத்தடம் கொடுத்தாள். உள்காயத்திற்கு இதமாய் கொழம்புக்கு வைக்க பக்கத்து வீட்டு செவ்வந்தியிடம் கருவாடு கடன் கேட்டாள். "ஏ செவ்வந்தி! நெத்திலி கெடக்கா? கொஞ்சங் கொடேன். கொழம்பு வெச்சா மேலுக்கு ஆகுமே."

இருந்த கொஞ்ச நெத்திலியைக் காகிதத்தில் சுற்றித் தந்தாள் செவ்வந்தி. "அடி பலமா சம்முகம்? அந்தப் போலீசுக்காரப் பாவி நல்லா நச்சிருக்காம் போல. வெளங்குவானா அவன்."

மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் சண்முகத்தாயி. "போலீச வையாத. அவுக மேல ஒரு தப்புமில்ல. இந்தாளு தெனமும் என்ன போட்டு சாத்துறதுக்கும் வையுறதுக்கும், அண்ணந் தம்பி இல்லாதவ எனக்காக எங்கப்பா வந்து கேட்டிருக்கனும். அவரு கேக்கல. பாவம் பெரிய மனுசன் வாயப் பொத்திக்கிட்டி அழுகத்தாஞ் செஞ்சாரு. ஆனா பாரு. இன்னக்கி பெறாத தகப்பம் போல போலீசு கேட்டிருக்கு. முட்டியப் பேத்து விட்டுருக்கு. இனிமே கையும் காலுஞ் சும்மாயிருக்குமில்ல." கருவாடை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் சண்முகத்தாய்.

தென்னவன் தீதிலன்; நானவன் தன் மகள்;
-சிலப்பதிகாரத்தில் தனக்குக் கோயில் எடுத்த சேர மன்னனிடம் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கண்ணகி சொன்னது. வஞ்சிக் காண்டம். "தென்புலமாளும் பாண்டியன் குற்றமற்றவன். நான் அவனுக்கு மகளைப் போற்றவள்."

கோ.இராகவன்

பாரதி
07-10-2004, 03:11 AM
அட..... என்ன ஒரு பார்வை...!! பல பெண்களின் மனவோட்டமாக இருக்கும் எண்ணத்தை உங்கள் பார்வை வெளிக்கொணர்ந்திருக்கிறது. சுவையான வழக்குமொழியில் சிறப்பாக தந்திருக்கிறீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பரே...

gragavan
07-10-2004, 08:00 AM
நன்றி பாரதி. சிலப்பதிகார வரிகளின் தாக்கம்தான் இந்தக் கதை. உங்கள் பாராட்டு ஊக்கமளிப்பதாக உள்ளது.

அன்புடன்,
கோ.இராகவன்

pradeepkt
07-10-2004, 10:18 AM
நன்று...
வேறு வார்த்தை தேவை இல்லை..
தலைப்பையும், பாதிக் கதையையும் படித்தவுடனே முடிவு என்னவென்று தெரிந்து விட்டதே!!!
சூப்பர்!!!

அன்புடன்,
பிரதீப்

இளந்தமிழ்ச்செல்வன்
07-10-2004, 11:12 PM
அருமை கோ.இராகவன். ஒரு சிறு கருவை மையப்படுத்தி அழகாய் எதார்த்தமாய் ஒரு சிறுகதை. வாழ்த்துக்கள்

ஓவியன்
21-01-2008, 04:15 PM
சிலப்பதிகாரக் கருவை இராகவன் அண்ணாவின் கைவண்ணத்தில் பேச்சுத் தமிழிலே பார்த்தமை அழகோ அழகு...

பாராட்டுக்கள் அண்ணா, பிரதீப் அண்ணா கூறியது போன்று சூப்பர்...!! :)

மயூ
22-01-2008, 01:37 AM
வட்டார பேச்சு வழக்கு கலக்கலாக இருந்தது... கடைசிப் பந்தி புரியவில்லை!!!
நன்றி!

இளசு
29-01-2008, 06:10 AM
உங்களால் மட்டுமே முடியும் ராகவன்..

தோலாந்துருத்தி தேவாங்கு..
அடிக்குமுன்னே அலறும் பெண்கள்
மேலுக்கு ஆகும் நெத்திலி..

மண் மணக்கிறது கதையெங்கும்!

காவியக் கரு - குறிப்பாய் அகலிகை - கவிதைகளாய், கதைகளாய்க் கண்டதுண்டு!

இது ஒரு வித்தியாச இலக்கிய முயற்சி. வெற்றி கண்டமைக்கு வாழ்த்துகள்!


( கோவலன் கதையில் ஒரு துண்டை நானும் நவீனச் சிறுகதையாக
மனதில் பல மாதங்களாக அசைபோட்டு வருகிறேன்..
தென்னவன் தீதிலன் என்னையும் எழுதத் தூண்டுகிறான்..)