PDA

View Full Version : முற்பகலும், பிற்பகலும்.......Nanban
12-09-2004, 06:05 PM
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்

முன்னம் -
பக்கத்து நாடுகள்
விழுங்கி
யூனியன் ஆகி
சமத்துவம் வளர்த்தது.

ரொட்டித் துண்டுகளின்
வினியோக வரிசையில்
உணவிற்கு
உரிமைகள்
பண்டபரிமாற்றம்.

உண்பதற்குத்
திறக்கும் வாயைக்கூட
அளந்தே திறக்க வேண்டும்.
ரகசிய உளவாளிகள்
நாடெங்கும் உண்டு.

மீறித் திமிறும்
குரல்கள்
சைபீரியப்
பனிப்பாலையில்
உறைய வைக்கப்பட்டு விடும்.

தேவாலய
மணிக்கூண்டுகள் ஊனமானது.
மசூதியின்
அழைப்போசை ஊமையானது.

அடக்கி ஒடுக்கப்பட்ட
நம்பிக்கைகள்
ஆங்கோர் அக்னிக்குஞ்சாய்
மனத்திடை
மறைந்து கணன்றது.

வேடிக்கை காட்சிகள்
விண்ணிலும், மண்ணிலும்
தொடர்ந்தன.
நிலவைத் தொட்ட
ஆசை அடங்குமுன்னே
ஆ�ப்கன் அணங்குகளின் மீதும்
செங்கரம் நீண்டது.

பிணம் தின்னும்
கழுகுகளும் களம் புகுந்தது -
பனிப்போரின்
ஆடுகளமாக
ஆ�ப்கன் ஆகிப்போனதே.

முரட்டுப் பத்தான்கள்
முஜாஹிதீன்கள் னார்கள்
முனைந்து நடத்திய
யுத்தத்தில்
மூக்குடைபட்டுப் போனது
வல்லரசுவும்.

ஆயுதம்;
மனோதிடம் -
எந்த நாட்டையும்
உலுக்கிவிடலாம்
ஆ�ப்கனில் உருவானதே

வளர்த்த
இரு நாடுகளும்
கூவிகூவிஅழைக்கிறது
அனைத்து நாடுகளையும் -
அடக்கிவிடுவோம்
தீவிரவாதத்தை.

வினையின்
எதிர்வினை
என்றறியாமலே
மக்கள் போராட்டங்கள்
தீவிரவாதமாயின.

சிறு குழுக்கள்
குண்டு போட்டால்
தீவிரவாதம்;
பெரும் நாடுகள்
மனிதனை
அம்மணமாக்கினால்
விசாரணை யுக்தி.

பயங்கரவாதம்
அடக்க
சேனைகள்
தேடித்துழாவின
கன்னிகளின்
கர்ப்பக் குழிகளை.

வீசிய குண்டுகளில்
மலர்களின் மகரந்தம்
சாம்பல் துகள்களாக -
மலராத மொட்டுகளில்
புதைக்கப்பட்டது
ஆணவ விந்தணுக்கள்.


யுத்தத்தில்
கொடியது -
எதிரியின்
பண்பாட்டுச் சின்னங்களை
சிதைத்து விடு -
எத்தனை
உயரம் போனாலும்
யுத்ததந்திரம் மட்டும்
ஆதிகால
வாசனையைத் தான்
முகரும்.

பண்பாட்டுச் சின்னங்கள் -
வணங்கும் தலங்கள்;
இசைக்கும் இசை;
உண்ணும் உணவு;
நாற்றங்காலில் பயிராகும்
குழந்தைகள் -
இத்துடன்
பெண்ணின் புனிதம்.

கட்டுக்கோப்பான
சீருடைகள்
எதிரியின் பெண்களை
ருசிக்கையிலே
குருடாகிப் போன
அரசுகள்
பாண்டவர் காலம் தொட்டு
இராக் வரையிலும் உண்டு...

�யுத்தங்களை
எடுத்துச் செல்
எதிரியின் மண்ணிற்கு -
நம் பெண்கள்
நம் குழந்தைகள்
நம் வீடுகள்
அழியாதிருக்க...�

அவரவர் நியாயம்
அவரவர்க்கு...

�ஒரு கன்னத்தில்
அடித்தால்
இரு மடங்கு பலத்துடன்
மறு கன்னத்தில்
அடித்து விடு�
தீவிர வாதிகள்
புது வேதம் ஓதினார்கள்.

புது வேதம்
புரியாதவர்கள்
எதிர்வினைக்கு
தொடர்வினையாக,
மயக்க மருந்துகளின்
வலுவில்
மறந்து விட்டனர் -
சமரசம்
பேசுவதெப்படி என்பதை!

குரல்வளையைத்
திருகியே
பழகிய தலைமை
புஜ வலிமைக் காட்டியே
காரியம் சாதிக்க
நினைக்கிறது.

யார், எவரையும் விட
பாடம் கற்பதில்,
உருமாறிக் கொள்வதில்,
புது இடத்திற்கு
இணங்கிப் போவதில்,
தீவிரவாதிகளின் வேகம்
வியப்பானது -
வேகத்தைக் கணிக்க
அரசு எந்திரத்திடம்
மனம் இல்லை -
மனிதம் இல்லை.

அன்று
நீ என்னை
அடித்தாய் -
இன்று
உன்னை
நான் அடித்து விட்டேன்
தொடரும்
தீவிரவாதம்
அரசு அமைப்பிலிருந்தும்
போராடும் குழுக்களிலிருந்தும்...

யுத்தவாதிகளே...!
எதை வேண்டுமானாலும்
அழியுங்கள் -
எத்தனை முறை
வேண்டுமானாலும்
அழியுங்கள்
அல்லது
அழிந்தொழியுங்கள்


போராடுங்கள் -
உங்களை ஒத்த
வயதுடைய
வீரர்களோடு.

உங்கள் யுத்தம்
குழந்தைகளோடும்
குழந்தைகள் துயிலும்
கர்ப்பப் பைகளோடும்
மட்டும் வேண்டாம்...

kavitha
13-09-2004, 05:43 AM
அபாரம் நண்பரே!
எத்தனை வீரியமான வார்த்தைகள்.
குண்டுகளைக் கொண்டு வார்த்தைகளை வழங்கிவிட்டு
இறுதியில் ஏன் மயிலிறகால் வருடுகிறீர்கள்?

சாட்டையால் சாடிவிட்டு
சமர்ப்பணம் எதற்கு?

வீரர்கள் இறந்தால் மட்டும் துக்கம் இல்லையா?
குழந்தையோ, குழந்தை தாங்கிய பெண்ணோ
இறந்தால் அது அவரவர்களை மட்டுமே பாதிக்கும்.
ஆனால் ஒரு ஆண்மகன் இறந்தால் அவனைச் சார்ந்த
அத்தனையும் பாதிக்கும்.

அந்த பாதிப்பை விட இது ஆயுசுக்குமான பாதிப்பு.
வேண்டாம். வன்முறை எந்த ரூபத்தில் யார் மீது நடந்தாலும் வேண்டாம்.
அவர்கள் என்ன நியாயம் கற்பித்தாலும்
அந்த 'சாத்தான்கள் ஓதும் வேதம்' நமக்கு வேண்டாம்.

Nanban
13-09-2004, 07:25 PM
மிக்க நன்றி கவிதா.....வீரர்கள் இறந்தால் மட்டும் துக்கம் இல்லையா?


யுத்தத்தின் பெயரால், வீரர்கள் மடிவது அநியாயம் தான். ஆனாலும் அது தவிர்க்க முடியாதது. அதே போல, தீவிர வாதமும் தவிர்க்க முடியாதது. ஏனென்றால், தீவிரவாதிகள் பிறப்பதில்லை. காலமும், சூழ்நிலையும், சமூகமும் சேர்ந்து கொண்டுதான் அவனை உருவாக்குகிறது.

சோவியத், ஆகானிஸ்தானத்தை அடக்கி ஆளும் அவா கொண்டு, அந்த நாட்டிற்குள் இறங்கியிராவிட்டால், என்ன ஆகியிருக்கும்? முஸ்லிம் மண்ணை காப்பதாக கூறிக் கொண்டு, முஜாஹிதீன்கள் என்ற போராளிகள் தோன்றியிருக்க மாட்டார்கள். பின்னர் அவர்களைத் தொடர்ந்து தாலிபான்கள் தோன்றியிருக்க மாட்டார்கள். இவர்கள் விட்டுச் சென்ற பின் லேடன் உருவாகியிருக்க மாட்டான்.

அமெரிக்காவிடமிருந்து, வரைமுறையின்றி ஆயுத விநியோகம் நடந்திருக்காது இவர்களுக்கு. ராணுவப் பயிற்சிகள், யுத்த தொழில்னுட்பங்கள் கிடைத்திருக்காது. இதெல்லாம் எதற்காக அமெரிக்கா இவர்களுக்குக் கொடுத்தது? எல்லாம், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற விதி தான்.

இதெல்லாம் இல்லையென்றால், உலகம் அமைதிப் புறாவாக இருந்திருக்குமா? இருந்திருக்காது. இஸ்ரேல், பாலஸ்தீனிய விவகாரம் இன்னும் அனல் பறந்திருக்கும். பாலஸ்தீனிய தீவிரவாதத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் அவர்கள் இத்தனை கொடுரமாக நடந்து கொள்ளவில்லை. ஆள் கடத்திப் பேரம் பேசுவது தான் அவர்களது மிகப் பெரிய தீவிர வாத நடவடிக்கை. பதிலுக்கு இஸ்ரேலும் (அரசாங்கமே..) அவர்கள் ஆட்களைப் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசும். அந்த கால கட்டத்தில், நடந்த மிக கொடூரமான தீவிரவாத செயல், ம்யூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டி ஒன்றில், 23 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டது தான். இதிலும் அமெரிக்காவுக்குப் பங்குண்டு....

மேலும் இந்த அமெரிக்க, ருசிய பனிப்போரில், மிகவும் பாதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா? இந்தியா... ஆம், அதுவரையிலும் காஷ்மீர் ஒழுங்காகத் தான் இருந்தது. ருஷ்ய படைகளை விரட்ட பாக்கிஸ்தான் வழியாக முஜாஹிதீன் போராளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதம் - திருப்பி விடப்பட்டது இந்தியாவை நோக்கி. ஆம் - ருசியா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது - 1981 ற்குப் பிறகு தான். இந்தியாவில் காஸ்மீர் பிரச்னை ஆரம்பித்தது - 85ற்குப் பிறகு தான். POK எனப்படும் பாக். கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீருக்கு, ஆப்கானிஸ்தானோடு எல்லையுண்டு. அடர்ந்த பனி படர்ந்த இமயத்தின் அரவணைப்பில் - வீரப்பன் காடு போல் - அது பின் லேடன் காடாக மாறி விட்டது.

இப்பொழுது புரியும் என நினைக்கிறேன் - உலகில் எங்கெங்கு தீவிர வாதம் தோன்றினாலும் அதில் அமெரிக்காவின் கை இருக்கும். எங்கெங்கு மக்கள் ஆயுதமேந்திப் போராடினாலும் அதில் அமெரிக்காவின் பங்கு இருக்கும். க்யூபா - அங்கும் அமெரிக்கா தன் வில்லத் தனத்தைக் காட்டியதுண்டு. கம்யூனிஸத்தை அழிக்கிறேன் பேர்வழி என்று அட்டகாசம் செய்து கடைசியில் காஸ்றோ, செகுவாரோ என்ற இரு போராட்ட வீரர்களினால் அடிபட்டு அவமானப் பட்டு வெளியேறியது.

அதே போல் வியட்நாம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அமெரிக்காவின் சின்னத் தம்பி பிரிட்டனுக்கும் இந்தப் புத்தி உண்டு. தன் சொந்த வீட்டையே ஒழுங்காக வைத்துக் கொள்ளத்தெரியாத பிரிட்டன், உலகமெங்கும் போய் அமைதி காக்கிறது. ஆம் - IRA எனப்படும் அயர்லாந்து விடுதலை போராளிகள் போராடுவது இந்த பிரிட்டனை எதிர்த்து தான். சொந்த சகோதரர்களுக்கு விடுதலை கொடுக்காத இவர்கள், இராக்கில், குடியரசாட்சியை ஏற்படுத்தத் துடிக்கிறார்கள்.

100 வருட குத்தகைக்கு எடுத்துக் கொண்ட தீவை கண்ணியமாகக் கொடுத்து விட்டார்கள் சீனாவிற்கு - காரணம் பயம். ஆனால், அதே போல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள பாக்லாந்து தீவை அர்ஜெண்டினா கேட்ட பொழுது, யுத்தத்திற்குக் கிளம்பி போய் விட்டார்கள். (இதெப்படின்னா, கோவாவை போர்ச்சுகல் வைத்துக் கொண்டு விடுதலை கிடையாது என்று அடம் பிடித்ததைப் போல.... )

இந்த மேலை நாடுகள் தீவிரவாதம் என்று கூப்பாடு போடுவது சுயநலமே தவிர வேறில்லை. இன்றளவும் தங்கள் கொள்கைகளையோ, எங்கே தவறு நிகழ்ந்தது என்று அலசி ஆராய்ந்து, திருத்திக் கொள்ளும் தன்மையோ இல்லாத வரையிலும் இவர்கள் மேலும் மேலும் தீவிரவாதத்தை வளர்க்கத் தான் போகிறார்களே அன்றி குறைக்கப் போவதில்லை.

எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த நாடுகள் மீது எந்த ஒரு அனுதாபமும் கிடையாது. ஏனென்றால், எந்த தவறும் செய்யாத இந்தியா, இவர்களால் தொல்லை அடைந்தது. அதை சொல்லிய பொழுதெல்லாம், இவர்கள் அலட்சியமாக இருந்தார்கள். இப்பொழுது தான், தங்கள் நாட்டில், தங்கள் மக்களின் உயிர், உடமை, பொருள் என அனைத்தையும் கொடுத்து துன்பம் அனுபவிக்கிறார்கள்.... என்றாலும், இன்னமும் நாம் அனுபவிக்கும் துன்பம் முழுவதுமாக என்னவென்று அவர்கள் உணரவில்லை. அதை உணரும் காலம் வரும் வரையிலும், அவர்கள் தீவிரவாதியிடம் மாட்டிக் கொண்டு அல்லல் படுவதை வேடிக்கை தான் பார்க்க இயலும்.

என்ன, இந்த ருசிய பள்ளி விவகாரத்தில், குழந்தைகள் மாட்டிக் கொண்டது தான் கொடுமை. ஆனால், தீவிரவாதிகளிடம் நைச்சியமாகப் பேசி காரியத்தைச் சாதிக்க தவறிய குற்றம் - ருஷ்யாவுடையது. சென்றமுறை நாடக அரங்கமொன்றில், மயக்க மருந்தை செலுத்தி, தீவிரவாதிகளை மயங்கச் செய்து மீட்டெடுத்தோம் - என்று பெருமை பட்டுக் கொண்ட நாடு. அதை உணர்ந்தே தீவிர வாதிகள் - இந்த முறை நான்கு குழுக்களாகப் பிரிந்து கொண்டனர். சென்ற முறை மாதிரியே இந்த முறையும் சாகசம் நிகழ்த்திக் காட்டலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டது.

மேலும் இந்த முறை முறைப்படியாக பயிற்சி எடுத்துக் கொண்ட, செஷன்யா இனத்தவர் அல்லாத - அரபு தீவிரவாதிகளும் - பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், செஷன்யா பெண்களும் அடங்குவர் - வெறுப்பையே சம்பாதித்து வளர்ந்த இந்த வல்லரசுகள் - என்றுமே நிம்மதியாக இருக்க முடியாது - மக்கள் அன்பை சம்பாதிக்க வரை.

அசன் பசர்
17-09-2004, 07:57 AM
நண்பன்
ஆக்கிரமிப்பு பிசாசுக்கு
அருமையான செருப்படி கொடுத்துவிட்டீங்க...
ஆயுத வியாபாரி புஷ் போன்றவர்களுக்கு
அழிவுகாலம் விரைவில்...
வாழ்க அவன் வளர்த்த தீவிரவாதம்

அறிஞர்
22-09-2004, 09:15 AM
உணர்ச்சிக்குவியல்களும்.. உங்கள் விளக்கமும் அருமை நண்பரே......

மன்மதன்
22-09-2004, 10:38 AM
கவிதையும் , கவிதாவின் கேள்விக்கு விளக்கமும் அருமை...
அன்புடன்
மன்மதன்

தஞ்சை தமிழன்
22-09-2004, 01:11 PM
நண்பனின் கவிதை அருமை.

ஆனால் தீவிரவாதத்துக்கு ஒருக்காலும் ஆதரவு கொடுக்க இயலாது.

நண்பனின் வரலாற்று பக்கங்களை மேலும் பின்னோக்கி புரட்டினால் வேறு பல இருக்கும். அதை பற்றிய சர்ச்சை வேண்டாம் இப்போது.

அடக்கு முறையை எதிர்க்க தீவிரவாதம் ஒருக்காலும் ஒரு தீர்வாக அமையாது. அதை உணர்ந்தால் யாவர்க்கும் நலம்.

பரஞ்சோதி
22-09-2004, 06:50 PM
நண்பனே!

இன்று தான் உங்கள் ஆக்ரோஷமான கவிதையையும் கருத்துகளையும் படித்தேன். நாம் சொல்ல என்ன இருக்கிறது, எல்லாவற்றையும் நீங்களே சொல்லி விட்டீங்களே!

இரத்தம் கொதிக்கிறது, என் கோபத்தை யாரிடம் காட்டுவது, என் ஆற்றலால் யாரை அழிப்பது?

தீவிரவாதம் கூடாது என்று சொல்லி தீவிரவாதிகளை உருவாக்குபவர்களையா?

உங்களுக்காக் போராடுகிறோம் என்று சொல்லி, அப்பாவி மக்களின் உயிரை மயிரினும் கேவலமாக நினைக்கும் மனித விலங்குகளிடத்தா?

Narathar
23-09-2004, 07:33 AM
நண்பா உன் கவிவரியும்
விளக்க உரையும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

Nanban
24-09-2004, 07:27 PM
கவிதைக்கு கருத்து சொன்ன நண்பர்கள் அசன் பசர், அறிஞர், மன்மதன், தஞ்சை தமிழன், பரஞ்சோதி, நாரதர் - அனைவருக்கும் நன்றி.

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே போனால், பலப்பல வஞ்சகங்கள் வெளிப்படத்தான் செய்யும். அத்தனை வஞ்சகங்களையும் நியாயப் படுத்துவது தான் இன்றைய அதிகார மையத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் செய்யத் துடிக்கின்றனர். ஏனென்றால், இந்த வஞ்சகங்களுக்குப் பதில் நீதி கிடைத்து விட்டால், தங்களின் முக்கியத்துவம் அழிந்து போய் விடும் என்ற அச்சம்.... உலகெங்கும் உண்டு.

'தீவிரவாதம் வேண்டாம்' என்று சொல்பவர்கள், இன்றைய போராட்ட இனங்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை கருத்து ரீதியாகக் கூட கேட்கிற அளவிற்கு பொறுமையற்றதினால் தான் இந்த இனங்கள் எழுச்சி பெறுகின்றன.

தீவிரவாதம் வேண்டாம் என்பது போராடும் இனத்தவரைப் பார்த்து மட்டுமே சொல்லப்படுகிறதே தவிர - நிறுவனமாக்கப்பட்ட தீவிரவாதத்தை - institutionalised - அரசுகள் செய்யும் தீவிரவாதத்தை, தீவிரவாதம் என்று கூட அறிந்து கொள்ளாமல் எழுப்பப்படும் கருத்தே - தீவிரவாதம் வேண்டாம் என்ற கூற்று.

தீவிர வாதம் வேண்டாம் என்னும் பொழுது அது இருசாரருக்கும் பொதுவானதே....

தஞ்சை தமிழன்
25-09-2004, 05:19 AM
நிறுவனமாக்கப்பட்ட தீவீரவாதத்துக்கு எதிரான் இந்த உணர்ச்சிமிகு வன்முறை எந்த அளவுக்கு தீர்வை உண்டாக்க போகிறது.

இத்தனை காலமாக வன்முறையால் எந்த பலனும் இல்லாத போது வேறு வழிகளை நாடாமல் இருப்பது ஏன்?

Nanban
26-09-2004, 06:42 PM
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள் - இதுதான் தீவிரவாதத்தின் நோக்கம். அவர்களது தேவை - கவன ஈர்ப்பு.

தங்கள் கருத்துகளை எல்லோரும் நிமிர்ந்து பார்க்க வேண்டும் என்ற பதைபதைப்பு தான். அன்றைய தீவிரவாதிகளை நோக்குங்கள் - பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ்... இவர்களெல்லாம் தீவிரவாதிகளே. பின்னர் அவர்களை இன்று நாம் தியாக புருஷர்களாக சொல்கிறோம். அவர்கள் தீவிரவாதிகள் தான் - பிரிட்டிஷாரின் பார்வையில். நமக்கல்ல.

அதுபோலத் தான் இன்றைய தீவிரவாதிகளும். பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை எந்த ஒரு பாலஸ்தீனியரும் தீவிரவாத அமைப்பு என்று சொல்வதில்லை. ஏனென்றால், அந்த இயக்கம் அவர்களுக்காகப் போராடுகிறது.

க்யூபா போராடித் தான் வென்றது. பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் பார்வையில் பல நாட்களாகத் தீவிரவாதியாகத் தான் இருந்தார் - அவர் தன் மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றிருந்தும்.

ஆப்கானிஸ்தானில் சில வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட அஹமது மஸ்வூது ஒரு தீவிரவாதி தான் - ருஷ்யாவின் பார்வையில். ஆனால், அமெரிக்கர்களுக்கோ அவர் ஒரு ஆதார புருஷன் - கம்யூனிஸத்தை எதிர்த்துப் போராடியதால். ஆப்கானிஸ்தானிலோ அவர் ஒரு ஹீரோ - ருஷியப் படைகளை விரட்டி அடித்து வெற்றி பெற்றதினால்...

பங்களாதேஷில், முஜிபுர் ரஹ்மான் ஒரு தீவிரவாதி பாக்கிஸ்தானிற்கு. ஆனால், அவரும் முக்திவாஹிணியும் பங்களாதேஷிற்கு விடுதலைப் போராட்ட வீரர்கள்.

தீவிரவாதம் எதைப் பெற்றுத் தரும்... கவன ஈர்ப்பு, ராணுவ வலிமை பெருக்குதல். இந்த இரண்டும் இல்லாமல், எந்த ஒரு இனமும் விடுதலை பெறுவதில்லை.

இது தவிர தீவிரவாதத்திற்கு மேலும் ஒரு பக்கமும் உண்டு. அடித்தால், திருப்பி அடிப்பவனைக் கண்டு எல்லோரும் கொஞ்சம் பயப்படத்தான் செய்வார்கள். யோசிப்பார்கள். மக்களின் தேவையும் அது தான். தாங்கள் தாக்கப்படும் பொழுது ஒரு முறை திருப்பித் தாக்கி விட்டால், பின் அதுவே தங்கள் பலமாகி விடும் என்ற நம்பிக்கை தான்....

தஞ்சை தமிழன்
27-09-2004, 06:24 AM
தங்கள் பலம் ஜெயிக்குமென்றால்!!!!!!?????

habib
27-09-2004, 07:39 AM
நண்பன் அவர்களின் உணர்ச்சி மிக்க கவிதைகளும்,தீவிரவாதிகள் என்றால் யார், அவர்கள் எதற்க்காக தீவிரவாதியாகிறார்கள் என்பதற்கான விளக்கங்களும் மிக அருமையாக உள்ளது.

Nanban
03-10-2004, 06:55 PM
நண்பன் அவர்களின் உணர்ச்சி மிக்க கவிதைகளும்,தீவிரவாதிகள் என்றால் யார், அவர்கள் எதற்க்காக தீவிரவாதியாகிறார்கள் என்பதற்கான விளக்கங்களும் மிக அருமையாக உள்ளது.

நன்றி நண்பர் ஹபீப்.....

சுகந்தப்ரீதன்
11-05-2008, 03:01 PM
யுத்தவாதிகளே...!
எதை வேண்டுமானாலும்
அழியுங்கள் -
எத்தனை முறை
வேண்டுமானாலும்
அழியுங்கள்
அல்லது
அழிந்தொழியுங்கள்

போராடுங்கள் -
உங்களை ஒத்த
வயதுடைய
வீரர்களோடு.

உங்கள் யுத்தம்
குழந்தைகளோடும்
குழந்தைகள் துயிலும்
கர்ப்பப் பைகளோடும்
மட்டும் வேண்டாம்...

நெஞ்சை சுடும் நிதர்சன உண்மை...!!

எத்தனைமுறை எடுத்துச்சொன்னாலும் இன்றைக்கும் ஒவ்வொரு யுத்தத்திலும் உலகம் முழுதும் உருக்குலைந்து போவது அப்பாவி குழந்தைகளும் குமரிகளும்தான்..!! இதில் எந்த யுத்தமும் விதிவிலக்கல்ல..!!

அந்தகால புராணங்களிலும் இதிகாசங்களிலும் காணும் யுத்ததர்மங்கள் அத்தனையும் கற்பனையோ என்று எண்ண வைப்பவை இன்றைய யுத்தங்கள் அத்தனையும்... அப்பாவி மக்களை அழிப்பதைக்கூட யுத்ததர்மம் எனக்கூறி மார்தட்டும் மானிட உலகமடா இது..!!

தீவிரவாதம் உருவாவதில்லை..உருவாக்கப்படுகிறது... என்பதை மிக அழகாக கவிதையில் வெளிப்படுத்தியதும் அதை தொடர்ந்து தாங்கள் அளித்த விளக்கங்களும் என்புருவத்தை உயரசெய்து விட்டன என்றால் அது மிகையல்ல நண்பரே..!!

அரசு செய்தால் அது யுத்தமாம்..பாதுகாப்பாம்...!! அதையே ஒரு குழுசெய்தால் தீவிரவாதமாம்...!! அன்பாய் ஆட்டுக்குட்டியை வளர்க்காமல் வம்பாய் புலிக்குட்டியை பிடித்து வளர்த்தால்...ஒருநாள் வம்பு வளர்த்தவனுக்கும் வரத்தானே செய்யும்..?? அதுதான் இன்றைய பெரிய அண்ணனுக்கும் சின்னதம்பிக்கும் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது...!! அதை விரிவாக விளக்கியிருக்கிறீர்கள் நன்றி நண்பரே..!!

ஆதிக்க மனப்பான்மையும்.. அதிகாரவெறியும்.. இன்றைக்கும் உலகம் முழுக்க அப்பாவி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டுதானிருக்கிறது..!! இனி இந்த உலகம் அமைதியாக இருக்கும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் குறைந்துக்கொண்டுதான் வருகிறது எல்லோருக்கும்..!! ஒரிடத்தில் முடிந்துவிட்டதாக எண்ணி மகிழும் அதேவேளையில் வேறொரு இடத்தில் வேர்விட்டு வளர்கிறது இந்த தீவிரவாதம்..!! இதை இனி அத்தனை எளிதில் அழித்துவிட முடியும் என்று தோன்றவில்லை..!! எது எப்படியோ..கண்டிப்பாக வினை விதைத்தவன் வினை அறுப்பான்...இதுமட்டும் உறுதி...!!!

மானிடம் மரிக்கும்போது மனிதனும் மரித்துதானே ஆகவேண்டும்..!! ஆகையால் வாழும்வரை மானிடத்தை போற்றி வளர்ப்போம்.. எதிர்கால தலைமுறையாவது இத்தகைய அச்சங்களிலிருந்து விடுபட்டு அமைதியாய் வாழ வழிப்பிறக்கட்டும்..!!