PDA

View Full Version : இன்னும் எத்தனை நாட்கள்?!!



poo
04-09-2004, 06:48 AM
இன்னும் எத்தனை நாட்கள்?!!


இலக்கில்லா பயணம்....

இனம்காக்க கருவியெடுத்து...
இன்னோர் இனத்தில் களையெடுப்பு!!?....

பிணங்களின்மேல் சப்பனமிட்டு
கொக்கரிப்பதுதான் கொள்கைப்பிடிப்பா?!!
உன் கொள்கைகள்
கொலைக்களங்களில்தான் குறிப்பிலேற்றப்படுமா?!

உன்னால் உருவாகும்
இ(கொ)லையுதிர்காலங்களால்
வேதனைகள்...வேர்களுக்கல்ல.....

நியதிகள் மறந்து..
நிழல்களில் வாழ்ந்து...
நீதிகள் வென்ற வரலாறுண்டா?!!

ஆட்கொல்லி நோய்க்கெல்லாம்
ஆராய்ச்சிகள்...நிறுத்துங்கள்...
முதலில்...
இந்த தீவிரவா(வியா)திகளுக்கு?!!

மனங்கள் மரத்துப்போனால்
கரங்களும்....
கடவுளே விதிகளை திருத்தி...வீதியில் நிறுத்து...

கல்விக்களத்தில் கருவிகள்...
தோகை நெஞ்சில் தோட்டாக்கள்...
பனிப்பூக்களை தொட்டுப்பார்த்திருக்கிறாயா...

பணயக்கைதிகளை சிறைபிடிக்கும்முன்
எங்கே பணயம் வைத்தீர்கள்...உங்கள் மனங்களை?!!..

பால்குடிக்கும் பிஞ்சுகளில்
குருதி உறிஞ்சிய அட்டைப்பூச்சிகளே.....
மலிவுவிலையில் கிடைப்பது
மனித உயிர்கள்தானென
உம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?

மதம்பிடித்த யானை...
மற்றோர் யானையை கொல்வதில்லை...
ஆறறிவு மனிதன்....???!!!

ஆதிவாசிகளெல்லாம்
மாமிசம் தின்பதில்லை...
நகரவாசிகள் கழுகுகளாய்
மாறிவிட்டபின்...

இன்னும் எத்தனை நாட்கள்....
பிணம்தின்னும் சாஸ்திரங்களும்..
கொலைசெய்யும் கொள்கைகளும்.....

சேரன்கயல்
04-09-2004, 06:58 AM
பூ...
நெஞ்சில் குமுறும் எண்ணங்கள் இங்கே செந்நிற வார்த்தைகளாய்...
மனிதனாய் இருக்கும் எவருக்குமே இக்கோபம் எழுவது இயல்பு...
கொள்கை என்ற வார்த்தைப் போதையில் இப்படியான கொடுஞ்செயல்கள்...
காடுகள் கொள்ளாமல் இன்னும் எத்தனைச் சாவுகளோ...

kavitha
04-09-2004, 07:34 AM
நல்லா கேளுங்க பூ...
200 குழந்தைகள்.
விடாமல் குண்டு மழை.. துடிதுடிக்க குழந்தைகள். பதறி ஓடும் பெற்றோர்கள். மிகக்கொடுமையாக இருந்தது.

இ.இசாக்
04-09-2004, 11:32 AM
பூ வின்
வருத்தத்தில் நானும் பங்கேற்கிறேன்.

இளசு
05-09-2004, 06:33 AM
பூ,
மீண்டும் உணர்ச்சிகளை வடித்து உன் படைப்பு..

இரண்டு நாளாய் பெரும் மன உளைச்சல்.. இச்சம்பவத்தால்..

ரஷ்யா என ஒரு பெரியவன்..
செஷன்யா என்ற சின்னவன்..
பலம் குறைந்தவன், தோல்வியை அடிக்கடி சந்திப்பவன் போகும் பாதை இதுதான்..
ஒருபக்கம்.
பேச்சுவார்த்தை..
ஒப்பந்தங்கள்
இடைக்கால அரசுகள்
ஓரளவு சுயாட்சி
பொமை ஆட்சியாளர்கள்..
மறுபக்கம்..
முறையான போர்,
இராணுவக் கேந்திரங்களின் மேல் கொரில்லாத் தாக்குதல்
அரசுச் சின்னங்கள் மேல் திடீர்த் தாக்குதல்
முடிவில்லை.. முடியவில்லை..
வெறி...
உலகம் என் பிரச்னையைக் கவனிக்கவில்லை..
வன்முறைப்பாதை வழுக்குப்பாதை..
இடைக்கால ஆட்சியில் அமர்ந்த சொந்தக்காரனைக் கொல்..
அரங்கத்தில் காட்சி பார்த்த அப்பாவிகளை பணயமாக்கு
தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதிகளால் ரஷ்ய விமானங்களை வீழ்த்து..

இன்னும் கவனிக்கவில்லை.. தீர்வு இல்லை..
அடுத்து...

ஆண்டு தொடங்கவந்த பள்ளிக்குழந்தைகளை............
எங்கே தொடக்கம்...?
எங்கே இன்று இவ்வகைத் திருப்பம்?
அப்பா அம்மா பிடிக்கவில்லை என்று இரு இடங்களில் தமிழகத்தில்
சிறு குழந்தைகளை கொள்ளியால் வாயில் சுட்டும் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியும் வக்கிரம் காட்டிய இரு சம்பவங்கள் அண்மையில் ..
ஒரு நெருப்பை பாதுகாப்பாய் வைக்காத தவறால்..
94 மலர்கள் கருகிய வெப்பம் ஆறுமுன்னே..
சே... என்ன பேரரசுகள்..தனியாட்சி.. உரிமைக்குரல்..
இனப்போராட்டம்.. அதற்கு தூரதேசத்தில் இருந்து உதவ வரும் பாசம்...
அடப்பாவிகளா..
உங்களுக்கும் குழந்தைகள் இருக்குமே..
பிஞ்சுகளை ஜன்னலில் கவசமாக்கி
பின்னால் இருந்து சுட்டு வாங்கிய
சுதந்தரத்தை, தனிநாட்டை
இரத்தக்கறையோடு
உங்கள் குழந்தைகளுக்கு பரிசாய் தரப்போகிறீர்களா?

உங்களை இந்தளவுக்கு இறக்கிவிட்ட
ரஷ்யாவின் பேராட்சிதான் இறந்த மலர்களை மீண்டும் பூக்கவைக்கும்
வல்லமை வாய்ந்ததா..

போங்கடா நீங்களும் போராட்டங்களும்..
soft target எனப்படும் பாதுகாப்பற்ற, எதிர்க்க வாய்ப்பில்லாத இடம் பார்த்து அடிக்கும் எந்த குழுவும்,
மனித வகை அல்ல..

மன்மதன்
05-09-2004, 08:59 AM
மதம்பிடித்த யானை...
மற்றோர் யானையை கொல்வதில்லை...
ஆறறிவு மனிதன்....???!!!
நெற்றிப்பொட்டில் அடிப்பது மாதிரி கேள்வி கேட்ட பூவின் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.. :traurig001::traurig001:

அன்புடன்
மன்மதன்

Nanban
11-09-2004, 08:22 PM
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்

முன்னம் -
பக்கத்து நாடுகள்
விழுங்கி
யூனியன் ஆகி
சமத்துவம் வளர்த்தது.

ரொட்டித் துண்டுகளின்
வினியோக வரிசையில்
உணவிற்கு
உரிமைகள்
பண்டபரிமாற்றம்.

உண்பதற்குத்
திறக்கும் வாயைக்கூட
அளந்தே திறக்க வேண்டும்.
ரகசிய உளவாளிகள்
நாடெங்கும் உண்டு.

மீறித் திமிறும்
குரல்கள்
சைபீரியப்
பனிப்பாலையில்
உறைய வைக்கப்பட்டு விடும்.

தேவாலய
மணிக்கூண்டுகள் ஊனமானது.
மசூதியின்
அழைப்போசை ஊமையானது.

அடக்கி ஒடுக்கப்பட்ட
நம்பிக்கைகள்
ஆங்கோர் அக்னிக்குஞ்சாய்
மனத்திடை
மறைந்து கணன்றது.

வேடிக்கை காட்சிகள்
விண்ணிலும், மண்ணிலும்
தொடர்ந்தன.

நிலவைத் தொட்ட
ஆசை அடங்குமுன்னே
ஆ·ப்கன் அணங்குகளின் மீதும்
செங்கரம் நீண்டது.

பிணம் தின்னும்
கழுகுகளும் களம் புகுந்தது -
பனிப்போரின்
ஆடுகளமாக
ஆ·ப்கன் ஆகிப்போனதே.

முரட்டுப் பத்தான்கள்
முஜாஹிதீன்கள் ஆனார்கள்
முனைந்து நடத்திய
யுத்தத்தில்
மூக்குடைபட்டுப் போனது
வல்லரசுவும்.

ஆயுதம்;
மனோதிடம் -
எந்த நாட்டையும்
உலுக்கிவிடலாம்
ஆஃப்கனில் உருவானதே

வளர்த்த
இரு நாடுகளும்
கூவிகூவிஅழைக்கிறது
அனைத்து நாடுகளையும் -
அடக்கிவிடுவோம்
தீவிரவாதத்தை.

வினையின்
எதிர்வினை
என்றறியாமலே
மக்கள் போராட்டங்கள்
தீவிரவாதமாயின.

சிறு குழுக்கள்
குண்டு போட்டால்
தீவிரவாதம்;
பெரும் நாடுகள்
மனிதனை
அம்மணமாக்கினால்
விசாரணை யுக்தி.

பயங்கரவாதம்
அடக்க
சேனைகள்
தேடித்துழாவின
கன்னிகளின்
கர்ப்பக் குழிகளை.

வீசிய குண்டுகளில்
மலர்களின் மகரந்தம்
சாம்பல் துகள்களாக -
மலராத மொட்டுகளில்
புதைக்கப்பட்டது
ஆணவ விந்தணுக்கள்.

யுத்தத்தில்
கொடியது -
எதிரியின்
பண்பாட்டுச் சின்னங்களை
சிதைத்து விடுதல் -
எத்தனை
உயரம் போனாலும்
யுத்ததந்திரம் மட்டும்
ஆதிகால
வாசனையைத் தான்
முகரும்.

பண்பாட்டுச் சின்னங்கள் -
வணங்கும் தலங்கள்;
இசைக்கும் இசை;
உண்ணும் உணவு;
நாற்றங்காலில் பயிராகும்
குழந்தைகள் -
இத்துடன்
பெண்ணின் புனிதம்.

கட்டுக்கோப்பான
சீருடைகள்
எதிரியின் பெண்களை
ருசிக்கையிலே
குருடாகிப் போன
அரசுகள்
பாண்டவர் காலம் தொட்டு
இராக் வரையிலும் உண்டு...

‘யுத்தங்களை
எடுத்துச் செல்
எதிரியின் மண்ணிற்கு -
நம் பெண்கள்
நம் குழந்தைகள்
நம் வீடுகள்
அழியாதிருக்க...’

அவரவர் நியாயம்
அவரவர்க்கு...

‘ஒரு கன்னத்தில்
அடித்தால்
இரு மடங்கு பலத்துடன்
மறு கன்னத்தில்
அடித்து விடு’
தீவிர வாதிகள்
புது வேதம் ஓதினார்கள்.

புது வேதம்
புரியாதவர்கள்
எதிர்வினைக்கு
தொடர்வினையாக,
மயக்க மருந்துகளின்
வலுவில்
மறந்து விட்டனர் -
சமரசம்
பேசுவதெப்படி என்பதை!

குரல்வளையைத்
திருகியே
பழகிய தலைமை
புஜ வலிமைக் காட்டியே
காரியம் சாதிக்க
நினைக்கிறது.

யார், எவரையும் விட
பாடம் கற்பதில்,
உருமாறிக் கொள்வதில்,
புது இடத்திற்கு
இணங்கிப் போவதில்,
தீவிரவாதிகளின் வேகம்
வியப்பானது -
வேகத்தைக் கணிக்க
அரசு எந்திரத்திடம்
மனம் இல்லை -
மனிதம் இல்லை.

அன்று
நீ என்னை
அடித்தாய் -
இன்று
உன்னை
நான் அடித்து விட்டேன்
தொடரும்
தீவிரவாதம்
அரசு அமைப்பிலிருந்தும்
போராடும் குழுக்களிலிருந்தும்...

யுத்தவாதிகளே...!
எதை வேண்டுமானாலும்
அழியுங்கள் -
எத்தனை முறை
வேண்டுமானாலும்
அழியுங்கள்
அல்லது
அழிந்தொழியுங்கள்

போராடுங்கள் -
உங்களை ஒத்த
வயதுடைய
வீரர்களோடு.

உங்கள் யுத்தம்
குழந்தைகளோடும்
குழந்தைகள் துயிலும்
கர்ப்பப் பைகளோடும்
மட்டும் வேண்டாம்...

Narathar
23-09-2004, 07:48 AM
யுத்தங்கள் தொடர்கிறது
கடத்தல்கள் தொடர்கிறது
கொலைகள் தொடர்கிறது
சமாதானம் மட்டுமேன் ஓடி ஒழிந்து கொண்டது?