PDA

View Full Version : திசை மாறிய பறவைகள்........Nanban
02-09-2004, 08:41 PM
திசை மாறிய பறவைகள்.....

இது எனது எண்ணம் மட்டுமே....

சமீப காலமாக, மன்றத்தின் விமர்சன கண்ணாடியாக விளங்கிய நிழற்பட பதிவுகள், திசை மாறிப் பயணிக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. நிழற்படங்களின் உண்மையான நோக்கங்கள் பின் தள்ளப்பட்டு, மேம்போக்கான குறிப்புகளைக் கொடுத்து, playing to the gallery என்று சொல்வதைப் போல, தங்கள் பதிவுகள் வாசிக்க சுவையாக இருந்தால் மட்டும் போதும் என்று எண்ணிக் கொண்டு, எழுதுவதை போலிருக்கிறது.

புதிதாக வாசிப்பவர்களுக்கு, தள வரைபடம் போல இன்னார், இன்ன இன்ன பக்கங்களில், எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பு கொடுத்து விட்டு, மற்றவை எல்லாம் ஜனரஞ்சகத்தை குறிவைத்து எழுதப் படுகிறது.

எழுத்துகளைப் பற்றிய விமர்சனமோ, கருத்துகளைப் பற்றிய அபிப்பிராயமோ எதுவுமின்றி, என்ன நிழற்படங்கள்? எப்படி ஒரு படைப்பாளன் தன் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும்? எப்படி தன் கருத்துகளை கூர் தீட்டிக் கொள்ள முடியும்?

ஆக்கபூர்வமான கருத்துகள் நிறைந்த அலசலாக இருக்க வேண்டிய நிழற்பட பதிவுகள், ஒரு guide போல மாறிவிட்டது. இதை மீண்டும் அதன் பழைய பாதைக்குத் திருப்ப வேண்டும்.

அதே சமயம், ஜனரஞ்சகமாக வேண்டுபவர்களுக்கென தனியாக ஒரு பதிவும் செய்துவிடலாமே?

நண்பர்களின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்......

அறிஞர்
03-09-2004, 03:09 AM
அருமை நண்பனுக்கு...

நீங்கள்.. கூறும் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்...

நான் நிழற்படம் தயாரிக்க ஆரம்பிக்க முன்...பழைய நிழற்படங்களை நோக்கினேன்.. சில படங்களில் மட்டுமே முழுமையாக அலசியிருக்கிறார்கள். மற்றவற்றில் இன்னார் இந்த பகுதியில் பதித்திருக்கிறார்கள்.. என்றே செல்கிறது. அதில் சுட்டியும் இருக்காது.

தற்போது நண்பர் பரஞ்சோதி... ஒவ்வொரு மாதத்திற்கான.. பதிப்புக்களை தெளிவாக கொடுத்துவிடுகிறார். அதை பார்க்கும்போது... தளத்தை பற்றி தெளிவான எண்ணம் கிடைக்கிறது.

நிழற்படம் தயாரிப்பவர்கள்... எல்லா பகுதிகளையும் படிப்பவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு சில பகுதிகளை விரிவாகவும், மற்ற பகுதிகளை... சுருக்கமாகவும் தருகின்றனர்.

நிழற்படம்-14ற்குஆனால் படிப்பவர்கள்.. இன்பமுடன் படித்து இரசிக்கும் வண்ணம் உள்ளது. இது என் எண்ணம்..... தவறு இருந்தால் மன்னிக்கவும்...
------------------------------------------------------------
எனது கருத்து

இப்பொழுது பதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு தனிப்பட்ட மனிதனால் எல்லா பதிப்புக்களையும் படித்து விட்டு கருத்து கூறுவது அல்லது தொகுத்து வழங்குவது சற்று கடினமான காரியம்.

1. எனவே ஒவ்வொரு மன்றத்திற்கும் ஒரு குழுவை நியமித்து அவர்கள் விமர்சனம் செய்யவேண்டும்.
(எ.கா--- முல்லை மன்றம் - இளசு; மல்லி மன்றம் - நண்பன், மனோஜி, கவிதா, மன்மதன்; ரோஜா மன்றம் - நிதன், பாரதி; கதம்ப மன்றம்- மைதிலி, சேரன், பூ; தாமரை மன்றம்- பரஞ்சோதி, மணியா, அறிஞர்; குறிஞ்சி மன்றம் : அன்பு, நட்சத்திரன், நோவாலியா)

2. மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் 5ந்தேதிக்குள் ஒருவர் எல்லாரிடமிருந்து பெற்று தொகுந்து வழங்கவேண்டும்.

3. இப்படி செய்யும்போது இது பொதுவிமர்சனமாக அமையும்.

4. வேறு யாராவது விரும்பினால் ஜனரஞ்சகமாக் கொடுக்கலாம்.

kavitha
03-09-2004, 07:37 AM
எனது கருத்து

இப்பொழுது பதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு தனிப்பட்ட மனிதனால் எல்லா பதிப்புக்களையும் படித்து விட்டு கருத்து கூறுவது அல்லது தொகுத்து வழங்குவது சற்று கடினமான காரியம்.

1. எனவே ஒவ்வொரு மன்றத்திற்கும் ஒரு குழுவை நியமித்து அவர்கள் விமர்சனம் செய்யவேண்டும்.
(எ.கா--- முல்லை மன்றம் - இளசு; மல்லி மன்றம் - நண்பன், மனோஜி, கவிதா, மன்மதன்; ரோஜா மன்றம் - நிதன், பாரதி; கதம்ப மன்றம்- மைதிலி, சேரன், பூ; தாமரை மன்றம்- பரஞ்சோதி, மணியா, அறிஞர்; குறிஞ்சி மன்றம் : அன்பு, நட்சத்திரன், நோவாலியா)

2. மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் 5ந்தேதிக்குள் ஒருவர் எல்லாரிடமிருந்து பெற்று தொகுந்து வழங்கவேண்டும்.

3. இப்படி செய்யும்போது இது பொதுவிமர்சனமாக அமையும்.

4. வேறு யாராவது விரும்பினால் ஜனரஞ்சகமாக் கொடுக்கலாம்.
_________________

சபாஷ் அறிஞரே!

நண்பரே வருக! உங்கள் வருகை சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க வேறு யாரும் முன்வந்திருக்க மாட்டார்கள்( இது என் எண்ணம்)
அதற்காக உங்களைப்பாராட்டுகிறேன்.

நிழற்படம் தயாரிக்க வேண்டும் என்றாலே ஓடுபவர்கள் மத்தியில் அனைவரையும் படிக்கச் செய்யும்படியும் மன்ற நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டும்படியும் செய்யவேண்டுமாயின் ஜனரஞ்சகமாக இருந்தால் மட்டுமே அது முடியும்.

சினிமாக்களில் கூட அதற்குத்தான் முதலிடம் தந்து தேசிய விருது கூட வழங்குகிறார்கள் (எ.கா) முன்னா பாய் எம்.பி.பி.எஸ். கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.
"கட்டிப்பிடி வைத்தியம் தான் " அந்த டாக்டரின் உபதேசம். (இந்தப் பதிவும் திசை திரும்ப வேண்டாம்.) நிற்க!

' நிழற்படம் ' என்பதின் பொருள் என்ன?
அந்த மாதத்து நிகழ்வுகளை படம் பிடிக்கவேண்டும். அதை ஒவ்வொருவரும் செய்தால் தனித்தனி பாணியில் பார்க்க ரசிக்கும்படியும் இருக்கும். சில மாதங்களாக அப்படிதான் நடந்து கொண்டு உள்ளது.

தவிர விமர்சனங்களை நீங்கள் எதிர்பார்த்தீர்களாயின் அந்தந்தப் பகுதிகளுக்கென்று ஒரு கண்காணிப்பாளர் தான் அதைப் பொறுப்பேற்கவேண்டும். ( பிறர் மீது பொறுப்பைத் திணிப்பதற்காக சொல்லவில்லை ; அப்பொறுப்பை நான் ஏற்கவும் தாயார் .. அதற்கு நான் தகுதியானவாள் என்று ஏற்றுக்கொண்டால்)

ஏற்கனவே இது குறித்து நீங்களும், இளசு அண்ணாவும் 'ஏப்ரல் மாத உரையாடல்' என்ற பதிவில் பேசியிருந்தபோது குறிப்பிட்டுருந்தேன்; எனது நிழற்படத்திலும் வலியுறுத்தியிருந்தேன்.

அதிகமான படைப்புகள் இருக்கும் பட்சத்தில் ஒரே ஒருவரே எல்லாப்பதிவுகளுக்கும் விமர்சனங்களுடன் நிழற்படம் படைக்கவேண்டும் என்பது இயலாத காரியம்.
ஏனெனில் ஒரு ஹைக்கூவிற்கு ஒரு பக்க விமர்சனம் எழுதலாம். அப்படி பார்த்தால் ஒரு மாத படைப்பிற்கு தினம் ஒரு பக்கம் எழுத வேண்டியிருக்கும்.

எனவே ஒவ்வொரு மன்றத்திற்கும் ஒருவர் என்று எடுத்துக்கொண்டால் நடு நிலையான மற்றும் நேர ஒதுக்கீட்டு அடிப்படையில் அருமையான விமர்சனங்களை அளிக்க இயலும்.

அதையும் உங்களைப்போன்ற மூத்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதே பொருத்தமாக இருக்கும். மற்றபடி நிழற்படத்தில் குறிப்பிடுவது என்பது தற்போதைக்கு, படைப்பவரால் மட்டுமல்ல, படிப்பவராலும் இயலாத காரியம்.

kavitha
03-09-2004, 07:44 AM
எழுத்துகளைப் பற்றிய விமர்சனமோ, கருத்துகளைப் பற்றிய அபிப்பிராயமோ எதுவுமின்றி, என்ன நிழற்படங்கள்? எப்படி ஒரு படைப்பாளன் தன் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும்? எப்படி தன் கருத்துகளை கூர் தீட்டிக் கொள்ள முடியும்?

நன்று. எழுத்தாளன் தன்னைக் கூர் தீட்டிக்கொள்ளவேண்டுமாயின் அதை ஆசிரியரின் பார்வையிலிருந்து வேண்டுமானால் தனது தகுதியை எடைபோட்டுக்கொள்ளலாம். சக எழுத்தாளனிடமிருந்து அல்ல. அதற்குத்தான் ஆசிரியர் என்ற ஒருவர் வேண்டும் என்றேன்.
தவறை தவறு என்றும் , சரியை சரி என்றும் நடுவு நிலைமையுடன் வழங்கும் தகுதி அத்தகைய ஆசிரியருக்குத்தான் உண்டு.

தனிப்படைப்புகளில் தான் அவரவர் விமர்சனங்களைப் பெற்று விடுகிறோம். பிறகு நீங்கள் எதை எதிர் பார்க்கிறீர்கள் நண்பன்?

kavitha
03-09-2004, 07:51 AM
ஆக்கபூர்வமான கருத்துகள் நிறைந்த அலசலாக இருக்க வேண்டிய நிழற்பட பதிவுகள், ஒரு guide போல மாறிவிட்டது. இதை மீண்டும் அதன் பழைய பாதைக்குத் திருப்ப வேண்டும்.

அதே சமயம், ஜனரஞ்சகமாக வேண்டுபவர்களுக்கென தனியாக ஒரு பதிவும் செய்துவிடலாமே?

முதல் கருத்தை ஆட்சேபிக்கிறேன் நண்பரே.
நிழற்படம் என்பது எனக்கு guide ஆகத்தான் தோன்றுகிறது.
எப்போது எடுத்துப்பார்த்தாலும் அந்தந்த மாத நிகழ்ச்சிகளை அது காட்டுவதாக இருந்தால் தான் அதன் பெயருக்கும் அதற்கும் பொருத்தமாக இருக்கும்.

விமர்சனங்கள் வேண்டுமாயின் 'கார சாரமாக' தனி உரையாடல்கள் பதிவுகளை ஏற்படுத்திவிட்டுப் போவோமே!

அறிஞர்
03-09-2004, 07:53 AM
எழுத்துகளைப் பற்றிய விமர்சனமோ, கருத்துகளைப் பற்றிய அபிப்பிராயமோ எதுவுமின்றி, என்ன நிழற்படங்கள்? எப்படி ஒரு படைப்பாளன் தன் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும்? எப்படி தன் கருத்துகளை கூர் தீட்டிக் கொள்ள முடியும்?
நன்று. எழுத்தாளன் தன்னைக் கூர் தீட்டிக்கொள்ளவேண்டுமாயின் அதை ஆசிரியரின் பார்வையிலிருந்து வேண்டுமானால் தனது தகுதியை எடைபோட்டுக்கொள்ளலாம். சக எழுத்தாளனிடமிருந்து அல்ல.
தனிப்படைப்புகளில் தான் அவரவர் விமர்சனங்களைப் பெற்று விடுகிறோம். பிறகு நீங்கள் எதை எதிர் பார்க்கிறீர்கள் நண்பன்?

என்னை பொறுத்தவரை.. ஒவ்வொரு பதிப்பிலும் நாம் எழுதும் எண்ணங்களே விமர்சனம்தான்.... அதுவே போதுமானது.. கவி சொல்வது போல் ஒவ்வொரு பகுதிக்கு ஆசிரியர் நியமிக்கலாம்... அது சற்று கடினமான காரியம்தான்....

தஞ்சை தமிழன்
03-09-2004, 09:06 AM
நண்பணின் தொடக்கமும் அதை தொடரும்
பதிவுகளும் ஆலோசிக்க வைப்பவை.

நிழற்படங்கள் அருமையன் ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.
அதில் நண்பண் கோருவதை போல ஒவ்வொரு தலைப்புக்கான விமர்சனங்கள் தேவையில்லை என நினைக்கிறேன். அது அந்த தலைப்பின் சுட்டியில் போனால் தாமாகவே கிடைக்கும்.

அல்லாமல் நிழற்படத்திலேயே விமர்சனம் என்றால் எல்லோரும் மாதம் ஒருமுறை மன்றம் வந்தாலே போதும்தானே?

என்னுடைய எண்ணத்தில் நிழற்படத்தில் கீழ்கண்ட தகவல்களை தரலாம்.
இந்த தலைப்பில் இன்னாருடைய தொடக்கத்தில் இந்த விஷயத்தை பற்றியது.
அதற்கான குறிப்பு
மிகவும் காரசாரமான விமர்சங்களை பெற்றது.
பலருடைய கருத்துக்கள் பதிக்கப்பட்டது.
பாராட்டுதல்களாயிருந்தது.

இப்படி கொடுத்தாலே அந்த பதிவின் தன்மையை அறிந்து பார்க்க விரும்புபவர்கள் பார்த்து படிக்க உதவும்.

இது எனது எண்ணம் மட்டுமே.

ஒருவரே பல தலைப்பில் கவிதைகள் கொடுத்தால் அதனை மொத்தமாக குறிப்பிடலாம்.

Nanban
03-09-2004, 05:44 PM
இன்னமும் நண்பர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.....

அதன்பின் எனது விளக்கம்.

kavitha
04-09-2004, 08:43 AM
கவி சொல்வது போல் ஒவ்வொரு பகுதிக்கு ஆசிரியர் நியமிக்கலாம்... அது சற்று கடினமான காரியம்தான்....

அறிஞரே, ஒவ்வொரு பகுதிக்கும் ஆசிரியர் என்பது இயலாத காரியம் தான்.

என் கருத்து:-
ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களை
கண்காணிப்பாளர்களாக நியமிக்கலாம். (சில மாதங்களுக்கு முன்பு வரை
அப்படித்தான் இருந்தது) அவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் மாதத்தின் முதல்
வாரத்தில் அப்பகுதியில் சிறந்தவையாகக் கருதப்படுபவற்றைத் தேர்ந்தெடுத்து
விமர்சனங்களுடன் த. கண்காணிப்பாளருக்கு அனுப்பலாம்.
தலைமை கண்காணிப்பாளர் (திரு. இளசு) அவற்றைப் பரிசீலித்து தமது
நடு நிலையான விமர்சனத்துடனோ அல்லது ஏற்கனவே பதிக்கப்பட்டிருக்கும்
விமர்சனத்தை மேற்கோள் காட்டியோ படைப்பை ஊக்குவித்தால் நன்றாகவே
இருக்கும். அதே போல் குறைகளையும் சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்ள
ஏதுவாக இருக்கும். அது சொற் பிழைகளாகவும் கூட இருக்கலாம்.

இங்கே ஏற்கனவே நான் (சக எழுத்தாளன் பற்றி) குறிப்பிட்டது வேறு யாரும் குறை கூற
முன்வர மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலே அன்றி யாரையும் புண்படுத்துவதற்காக
அல்ல. பண்பட்ட மூத்தவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டால் மிக நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
இன்னமும் நண்பர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.....
அதன்பின் எனது விளக்கம்.
_________________
நண்பன்
நல்லது நண்பரே. மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை பதிக்க வேண்டுகிறேன்.

சாகரன்
05-09-2004, 02:55 PM
நண்பரின் .... கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.

சமீபகால நிழல்படங்கள் எழுதுபவரின் திறமையை அல்லது எப்படி ஜனரஞ்சகமாக ப்ரசண்ட் செய்யத்தெரியும் என்ற விதத்தில் மட்டுமே செய்யப்படுவதாக ஒரு தோற்றம்.

இன்னும் சொல்லப்போனால், நான் நிழல்படம் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.

பரம்ஸின் பதிவை மட்டுமே பார்ப்பதுண்டு.. அதிலும் ஏதோ குறையும்.. அந்தக் குறையை நிவர்த்தி செய்யத்தான் நிழல்படம் என்று நினைப்பேன்.

இதைவிட, இன்னொரு விதமாக சொல்ல விரும்புகிறேன்.

நிழல்படம் ஒருவர் தயாரித்தால், அவருடைய எண்ணங்களை அல்லது அந்த பதிவு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்ற கருத்துக்களை அங்கே எழுதுவதுதான் சிறப்பானது.
இன்னும் தெளிவாக அவர் கோணத்தில் என்ன நினைக்கிறார் என்பது!

நம் பதிவு பற்றி இந்த மாத நிழல்படத்தயாரிப்பாளர் என்ன எழுதியிருக்கிறார்... பதிவுக்கு கொடுத்த பதில் தாண்டி அந்த குறிப்பிட்ட பதிவினை ஓருவருக்கு நிச்சயம் படிக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணம் என்ன? இப்படித்தான் படைப்பாளிகள் யோசிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

புதிதாக படிப்பவர்க்கோ.. ஒட்டுமொத்தமாக அந்தப் பதிவினைப்பற்றிய அறிமுகம் கிடைக்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், எல்லா பதிவுகளையும் விமர்சிப்பது தேவையில்லை... சில பதிவுகள்... வாழ்த்துக்கள் பதிவுகள். அறிவிப்புகள் போன்றவை தவிர்க்கப்படலாம்... !!!!

இதைத்தாண்டி, எப்படி பிரசண்ட் செய்வது என்பது கொஞ்சமே கொஞ்சம் இருந்தால் போதுமானது என்பதே என் கருத்து...

மன்றத்தின் நிழல் தெரியவேண்டுமே ஒழிய வெளிச்சத்தில் நிழல் கலங்கலாகத் தெரிவதும் இடம் மாறித்தெரிவதும் தவிர்க்கப்படலாம்!

நிழல்பதிவாசிரியரின் பார்வையில் அந்த மாத மன்றத்தினை எப்படி நினைவுபடுத்துகிறார்.. ஒரு மாதம் வராமல் இருக்க நேரும் என்னைப்போன்ற நண்பர்களுக்கு எப்படிச் சொல்கிறார் என்பதைத்தான் நிழல்படத்தில் நான் எதிர்பார்க்கிறேன்.

இதுவும் தனிப்பட்ட கருத்துதான்....


(சாரிங்க... ரொம்ப வேலை இருந்தது. .இப்பத்தான் இந்தப் பக்கம் வந்தேன்... இதை பத்தி முன்னாடியே நான் பேசணும் நினைச்சேனா அதான் சொல்லிட்டேன் - சாகரன்.)

Nanban
08-09-2004, 06:10 PM
நீங்கள்.. கூறும் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்...


நன்றி அறிஞரே....

நான் கூறிய கருத்துகளைத் தவறாக எடுத்துக் கொள்ளாமைக்கு நன்றி. இதை கொஞ்ச நாளாகவே மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அதை எழுதும் பொழுது அந்த மாதத்திய நிழற்படத்தைத் தந்தவர், தன்னைத் தான் குறிப்பிட்டார்களோ என்று எண்ணி மன சஞ்சலப் படுவார்களோ, என்ற அச்சத்திலே இது நாள் வரையிலும் சொல்லாமல் விட்டுவிட்டேன். நல்லவேளையாக, தவறுதலாக எடுத்துக் கொள்ளாததோடு மட்டுமன்றி, கூடுதலாக ஆலோசனைகளும் கொடுத்திருக்கிறீர்கள் என்பது மன நிறைவாக உள்ளது.

இது தளத்து நண்பர்களின் மனப் பக்குவத்தையும், நற்பண்பையும் எடுத்துக் காட்டுகிறது.

மீண்டும் நன்றி....

Nanban
08-09-2004, 06:12 PM
தற்போது நண்பர் பரஞ்சோதி... ஒவ்வொரு மாதத்திற்கான.. பதிப்புக்களை தெளிவாக கொடுத்துவிடுகிறார். அதை பார்க்கும்போது... தளத்தை பற்றி தெளிவான எண்ணம் கிடைக்கிறது.


ஆமாம். மிக அரிய பணி. அதுவே போதுமானது. எதற்காக நிழற்படத்திலும் அதே பணியை மீண்டும் தொடர வேண்டும் என்பதே எனது எண்ணம், கேள்வி.

Nanban
08-09-2004, 06:16 PM
நிழற்படம் தயாரிப்பவர்கள்... எல்லா பகுதிகளையும் படிப்பவர்களாக இருக்கமாட்டார்கள். ஒரு சில பகுதிகளை விரிவாகவும், மற்ற பகுதிகளை... சுருக்கமாகவும் தருகின்றனர்.


மிக்க சரி. நானும் அதையேத் தான் செய்திருக்கிறேன். நான் செய்த பொழுது, கவிதைகளைப் பற்றி மிக விரிவாகவும், மற்ற பகுதிகளைப் பற்றி குறைவாகவும், சில பகுதிகளைப் பற்றி எதுவுமே எழுதாமலும் விட்டிருக்கிறேன்.

ஆனால் எழுதிய வரையிலும், தளத்தின் தரம் எத்தகையது என்று குறிப்பிட்டிருக்கிறேன். எத்தகைய மாற்றங்கள் வேண்டும் என்று கூறியுள்ளேன். ஒரு தனி நபரின் பார்வையில், தளம் எப்படித் தோற்றமளிக்கிறது என்பது தான் நிழற்படத்தின் நோக்கம் என்றே கருதுகிறேன்.

Nanban
08-09-2004, 06:23 PM
நிழற்படம்-14ற்கு பிறகு நீங்கள் குறிப்பிட்ட படி திசைமாறினதோ என்ற எண்ணம். அதில் சில விமர்சனங்களும் உள்ளது. ஒவ்வொரு பதிப்பிற்கும் சுட்டி உள்ளது... ஆனால் படிப்பவர்கள்.. இன்பமுடன் படித்து இரசிக்கும் வண்ணம் உள்ளது. இது என் எண்ணம்..... தவறு இருந்தால் மன்னிக்கவும்...


எங்கு, எப்படி, எப்பொழுது திசை மாறியது என்பதல்ல முக்கியம். அதுபோல், படிப்பதற்கு சுவையாக இருக்கிறது என்பதிலும் எனக்கு மாற்று கருத்துகள் கிடையாது.

சுவையான விவாதங்கள், சுவையான கருத்துகள் என்று சுவையை மட்டும் குறி வைக்கக் கூடாது என்பது தான் எனது வேண்டுகோளே. தளத்தின் நிகழ்வுகளை, அதன் போக்கை, தரத்தை, கூர்மையாக நோக்கி, பாராட்டியும், ஆட்செப்பித்தும், மாற்றங்களுக்கு வழி சொல்லியும் நடத்திச் செல்லும் தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது தான் நிழற்படங்களைத் தொடர்ந்து வாசித்து வரும் என் போன்ற அன்பர்களின் கருத்தாகும். விமர்சனம் என்பதில், பாராட்டுகள், ஆதரவு கருத்துகள், எதிர் கருத்துகள், இடித்துரைத்தல் என்ற எல்லாம் தான் அடங்கும்.

Nanban
08-09-2004, 06:40 PM
எனது கருத்து

இப்பொழுது பதிப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு தனிப்பட்ட மனிதனால் எல்லா பதிப்புக்களையும் படித்து விட்டு கருத்து கூறுவது அல்லது தொகுத்து வழங்குவது சற்று கடினமான காரியம்.


மிகச் சரி.

ஆனாலும், ஒரு தனிப்பட்ட வாசக நண்பரின் பார்வையில் எப்படித் தோற்றமளிக்கிறது என்பதே நிழற்படத்தின் ப்ருஞ்சிறப்பு. ஒரு காட்சியைப் புகைப்படம் எடுக்கும் பொழுது, நீங்கள் எதை 'போகஸ்' செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்கள் படத்தின் கரு, அழகிய மலராக இருக்கலாம். நீங்கள் அதை பதிவு செய்யும் பொழுது, அந்த மலரைத் தாங்கி நிற்கும், செடி கொடிகள், அந்த மலர் பூத்திருக்கும் நிலத்தின் பிண்ணனி, தூரத்தே தெரியும் தொடுவானம், மேகங்கள், மலையின் அப்புறத்தில் வீழ்ந்து கொண்டிருக்கும் சூரியன், என்று எத்தனையோ காட்சிகளைக் கொண்டு வரலாம். அல்லது அந்த மலரின் முகம் மட்டுமே தெரியும் அளவிற்கான படமாகவும் நிறுத்திக் கொள்ளலாம். அது புகைப்படம் எடுப்பவரின் மனநிலையைப் பொறுத்தது.

ஒருவரால் எந்த அளவு முடிகிறதோ, அந்த அளவிற்குச் செய்யலாம். ஆனால், அதில் ஒரு தெளிவு இருக்கும். எடுத்துக் கொள்ளப்பட்ட விமர்சனம் சிறப்பாக அமையும். 'என்னால் முடிவதில்லை; நான் போய் இவர்களையெல்லாம் விமர்சிப்பதா..?' என்றெல்லாம் மனம் மருவ வேண்டியதில்லை. விமர்சிப்பதற்கு தனி தகுதி எல்லாம் தேவையில்லை. மிகப் பெரிய புலமை அவசியமில்லை. 'இந்தாப்பா, இதைப் பற்றி, நான் இன்னது நினைக்கிறேன் - என் அறிவிற்கு எட்டிய வரையிலும்...' - இது தான் மிகச் சிறந்த விமர்சனமாக அமையும்.

மேலும் இது தனிப்பட்ட நபர்களைப் பற்றிய விமர்சனம் கூட அல்ல. தளத்தின் பல நிலைகளிலும் உள்ள பதிவுகளைப் பற்றியது தானே? உதாரண்மாக கவிதைப் பக்கங்களைப் பற்றி எப்படி எழுதலாம்?

' நீண்ட, நீண்ட பக்கங்களில் ஒன்றும் புரியாமல் எழுதுகிறவர்கள் மத்தியில், முத்தத்தாலே பெண்ணே என்ற கவிதை தனித்து நிற்கிறது. எளிமையான புரியும் நடையில், முத்தமொழி நன்றாக செல்கிறது...' இது படிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும்... ஒரு தளத்தில் மட்டுமே இயங்குபவர்களை (மன்றத்தின் உள்ளே இருக்கும் நண்பர்களைத் தான் சொல்கிறேன்..) கூட பிற பக்கங்களுக்கு இழுத்து வரச் செய்யும் சக்தி மிக்கதாக இருக்க வேண்டும் இந்த நிழற்படங்கள்....

Nanban
08-09-2004, 06:51 PM
எனவே ஒவ்வொரு மன்றத்திற்கும் ஒரு குழுவை நியமித்து அவர்கள் விமர்சனம் செய்யவேண்டும்.
(எ.கா--- முல்லை மன்றம் - இளசு; மல்லி மன்றம் - நண்பன், மனோஜி, கவிதா, மன்மதன்; ரோஜா மன்றம் - நிதன், பாரதி; கதம்ப மன்றம்- மைதிலி, சேரன், பூ; தாமரை மன்றம்- பரஞ்சோதி, மணியா, அறிஞர்; குறிஞ்சி மன்றம் : அன்பு, நட்சத்திரன், நோவாலியா)


இப்படிச் செய்தால், நிழற்படத்தின் தனித்துவம் அடிபட்டுப் போய்விடும். கவிதை தளத்தில், இதை நான், ராம்பால் செய்து வந்தோம். இனியும் சமயம் வாய்க்கும் பொழுது செய்வோம். தளம் முழுமைக்கும் சொந்தமான விமர்சனமாக ஒரு தனிநபர் செய்தால் தான் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு முறையும் நிழற்படம் பதிவு செய்ய, ஒவ்வொரு தளத்தில் சிறப்பாக பணியாற்றும் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவே போதும். அவர் சார்ந்த துறையை சிறப்பாகவும், மற்ற துறைகளைப் பற்றிய அவருடைய எண்ணங்களும் பதிவாகும்.

எண்ணிக்கைகள் பற்றிய....

மன்றத்தின் மொத்த பதிவுகள் ஒருவரை மலைக்க வைக்கும். ஆனால், நிழற்படங்கள் அந்த மாதத்திய பதிவுகளை மட்டுமே குறித்து, எழுதப்படப் போகின்றது. ஒரு மாதத்திய பதிவுகள் எத்தனை. நீங்கள் சுட்டியில் குறிப்பிடும் பதிவுகள் தானே? அதற்கு விமர்சனமாக வந்த கருத்துகளை விட்டு விடுங்கள். மூலப்பதிப்பாக வந்த பதிவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. நிறைய சந்தர்ப்பங்களில், மன்றத்தில் வாசிப்பதற்கு எதுவுமே இல்லையோ என்ற பிரமிப்புக் கூட எழுகிறது. அதைக் கூட வாசிக்காமல், சுட்டி கொடுத்து விட்டு, நிழற்பட ரசிகர்களை அம்போ என்று விட்டுவிட்டு போவது கொஞ்சமும் நியாயமல்ல....

Nanban
08-09-2004, 06:54 PM
நண்பரே வருக! உங்கள் வருகை சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க வேறு யாரும் முன்வந்திருக்க மாட்டார்கள்( இது என் எண்ணம்)
அதற்காக உங்களைப்பாராட்டுகிறேன்.


பாராட்டுகளுக்கு நன்றி, கவிதா...

Nanban
08-09-2004, 07:08 PM
நிழற்படம் தயாரிக்க வேண்டும் என்றாலே ஓடுபவர்கள் மத்தியில் அனைவரையும் படிக்கச் செய்யும்படியும் மன்ற நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டும்படியும் செய்யவேண்டுமாயின் ஜனரஞ்சகமாக இருந்தால் மட்டுமே அது முடியும்.


ஜனரஞ்சகத்திற்கோ, சுவையாக சொல்வதற்கோ நான் எதிரியல்ல. ஆனால், மன்றத்தின் நிகழ்வுகளைப் பற்றியோ, அதன் தரத்தைப் பற்றியோ, எந்த ஒரு அபிப்பிராயமும் இல்லாமால், இதை வாசிக்க இங்கே சொடுக்குங்கள் என்பதுடன் நிழற்படத் தயாரிப்பாளாரின் பணி முடிவடையக் கூடாது என்பதே என் வேண்டுகோள். எல்லோரும் செய்யும் அந்த சுவையான உரையாடல்கள் மத்தியில், நீங்கள் கொடுக்கும் சுட்டியில் பொதிந்திருக்கும் செய்திகள் எத்தகையது, சுவையானதா, அறுவையா, தரமானதா, குப்பையா என்றெல்லாம் எடுத்துச் சொல்லும் பொழுது உங்கள் மீது அபிமானமுள்ள பல நண்பர்கள் உடன் விரைந்து சென்று அதை படித்துப் பயன் பெறலாமே? உதாரணத்திற்கு, கூன் விழுந்த குமரிகள் பற்றி நீங்கள் எழுதிய கவிதையை அடுத்த மாதம் நிழற்படம் செய்பவர் ஒரு நீல வண்ண சுட்டியில் கொடுத்து விட்டு போய் விட்டால், அது அந்தக் கவிதைக்கு எந்த விதத்திலும் நியாயம் செய்தததாகுமா? நம் மன்றத்தில் எழுதும் ஒரு கவிஞரின் கவிதை, பிற தளங்களிலும் முத்திரை பதிக்கிறது, வானொலியிலும் ஒலிக்கிறது என்ற பெருமைகளை எல்லாம் குறிப்பிடும் பொழுது தானே, தமிழ் மன்றத்தின் சிறப்பு, அனைவருக்கும் அறிய வரும்? நீங்கள் சொல்லும் ஜனரஞ்சகத்தில், உங்கள் நிழற்படம் வாசிக்கப்படலாம் - ஆனால், தமிழ் மன்றத்தின் பெருமை மிக்க படைப்பை யாரும் சுட்டி சொடுக்கி போய் வாசிப்பார்கள் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஜனரஞ்சக ஆர்வக் கோளாறில் (!?) மன்றத்தின் நியாயமான சாதனைகளை சொல்லப் போவதில்லையா? தோன்றிய ஒரு வருடத்தில், பல திசைகளிலும் தடம் பதிக்கவும், படைப்பவர்களை தேற்றி ஒளிரச் செய்யவும் மன்றம் உதவும் பொழுது அதன் சிறப்புகளையும், தகுதிகளையும், மேலும் ஆக்கம் பெற வழிமுறைகளையும், குறைகளைத் தவிர்க்க வழி செய்வதிலும் துணையாக நிழற்படம் படமெடுக்க வேண்டாமோ?

Nanban
08-09-2004, 07:18 PM
சினிமாக்களில் கூட அதற்குத்தான் முதலிடம் தந்து தேசிய விருது கூட வழங்குகிறார்கள் (எ.கா) முன்னா பாய் எம்.பி.பி.எஸ். கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.
"கட்டிப்பிடி வைத்தியம் தான் " அந்த டாக்டரின் உபதேசம். (இந்தப் பதிவும் திசை திரும்ப வேண்டாம்.) நிற்க!


எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ஒரு விருது வழங்குகிறார்கள் - அதுதான் 'கிரிட்டிக்ஸ் ரிவியூ அவார்ட்' அந்த விருதைத் தான் படைப்பவர்கள் மத்தியில் பெரிதாக மதிக்கிறார்கள். பலரின் இலக்கும் அதுதான்.

'பாப்புலர் அவார்ட்' என்பது பொதுமக்களின் பார்வையில். இன்னும் சில விருதுகள் ஓட்டெடுப்பின் மூலம் கூட தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதெல்லாம் சிலருக்கு விளம்பர உத்திகள். கிடைக்கப் பெற்றவர்களுக்கு ஒரு சிறிய ஊக்கம். இந்த விருது பெற்றவர்களில் எத்தனை பேர் சர்வதேச அளவில் அறியப்பட்டவர்கள்? ஆனால், உள்ளூரிலே முகமில்லாத சில படைப்பாளிகள், சர்வ தேச அளவில் கலக்குகிறார்கள் - எத்தனை பேர் அறிவர்?

(நிற்க - முன்னா பாய் எம்பிபிஎஸ் - ஒரு அருமையான கதையமைப்புள்ள கதை. நகைச்சுவை என்பதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, ஒரு துணுக்குத் தோரணமாக போகாமல், மருத்துவர்களுக்கு ஒரு அருமையான அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அந்தக் 'கட்டிப்பிடி வைத்தியம்...' என்ன, எனக்கு ஒரு கவலைன்னா, இந்தக் கட்டிப்பிடி வைத்தியம் ஒரு எல்லை மீறிவிட்டதென்றால், பிறகு அடிச்சுப்பிடி வைத்தியமாகிடக் கூடாதே என்பது தான்....)

Nanban
08-09-2004, 07:26 PM
தவிர விமர்சனங்களை நீங்கள் எதிர்பார்த்தீர்களாயின் அந்தந்தப் பகுதிகளுக்கென்று ஒரு கண்காணிப்பாளர் தான் அதைப் பொறுப்பேற்கவேண்டும். ( பிறர் மீது பொறுப்பைத் திணிப்பதற்காக சொல்லவில்லை ; அப்பொறுப்பை நான் ஏற்கவும் தாயார் .. அதற்கு நான் தகுதியானவாள் என்று ஏற்றுக்கொண்டால்)


எதிர்பார்க்கும் விமர்சனங்கள் - தனிப்பட்ட பதிவுக்கல்ல. மொத்த தளத்திற்குமானது. இந்த மாதம் கவிதைப் பக்கங்கள் தரமான கவிதைகளை உட்கொண்டதா? விவாதப்பகுதியில், இனிய விவாதங்கள் நடைபெற்றனவா, இல்லை அடிதடி நிகழ்ந்ததா, சினிமா விமர்சனங்கள் உண்மையாக கிடைத்ததா, இல்லை மிகைப்படுத்தப்பட்டதா? என்ற மாதிரி....

ஒருவரே மாதாமாதம் மீண்டும் மீண்டும் செய்தால், பார்வைகள் ஒரு திக்கிலே பயணிக்கும். பலதரப்பட்ட பார்வைகள் வேண்டும். பலதரப்பட்ட மனிதர்கள் ஆர்வமாக செய்யும் பொழுது, புதிய சிந்தனைகள் கொண்ட பார்வையில், நாம் எப்படி பங்களிக்கிறோம் - தளம் எத்தகைய பதிவுகளைப் பெறுகிறது என்ற பார்வையில் பல கோணத்ததாய், விரிவானதாய், வித்தியாசமானதாய் திகழும்....

தனிப்பட்டவர்கள் தங்கள் விமர்சனத் தொகுப்பை தனித் தலைப்பாகக் கொடுப்பதை மன்றம் என்றுமே தடை செய்ததில்லை. என்ன ஒன்று, கவிதைப் பக்கம் மட்டுமே அத்தகைய புதுமைகளையெல்லாம் செய்துள்ளது. மற்ற பக்கங்களில் ஆய்வுகள் குறைவு.... (இதெல்லாம், மன்ற விமர்சன பதிவுகளில் வரவேண்டியது. இப்பொழ்து விமர்சன விவாதத்தின் வழியாக வெளி வந்துள்ளது...)

Nanban
08-09-2004, 07:41 PM
எழுத்தாளன் தன்னைக் கூர் தீட்டிக்கொள்ளவேண்டுமாயின் அதை ஆசிரியரின் பார்வையிலிருந்து வேண்டுமானால் தனது தகுதியை எடைபோட்டுக்கொள்ளலாம். சக எழுத்தாளனிடமிருந்து அல்ல. அதற்குத்தான் ஆசிரியர் என்ற ஒருவர் வேண்டும் என்றேன்.
தவறை தவறு என்றும் , சரியை சரி என்றும் நடுவு நிலைமையுடன் வழங்கும் தகுதி அத்தகைய ஆசிரியருக்குத்தான் உண்டு.

தனிப்படைப்புகளில் தான் அவரவர் விமர்சனங்களைப் பெற்று விடுகிறோம். பிறகு நீங்கள் எதை எதிர் பார்க்கிறீர்கள் நண்பன்?


எடை போட்டு, சீர் தூக்கி, இது நல்லது, இது கெட்டது என்று கூறு போடும் கற்றறிந்த சான்றோர் விமர்சனம் அல்ல எதிர்பார்ப்பது. தன்னைப் போன்ற ஒரு வாசகனிடம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, எந்த தாக்கங்களில் கருத்து வெளிப்பாடு பூரணமடைகிறது அல்லது வெளிப்படாமலே போய்விட்டது என்பதெல்லாம் ஒரு படைப்பவனின் தாகமாக இருக்கும்.

மன்றத்திற்கென சில தகுதிகள் இருக்க வேண்டும்; தரம் இருக்க வேண்டும் - அந்த தகுதிக்கும், தரத்திற்கும் ஏற்ற வகையில் தன்னை உயர்த்திக் கொள்ள முடிகிறதா என்றெல்லாம் தான் ஒருவர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார் - விமர்சனங்களை. தனிப்பட்ட பதிவுக்கல்ல - மன்றத்தின் படைப்பு சக்தியாக குறிப்பிடப்படும் விஷயங்களில் தனது பங்கென்ன என்பது மிக மிக முக்கியமானது என நான் நினக்கிறேன்....

எழுத்தாளன் - சக எழுத்தாளன்....

எனக்குப் புரியாதது... நான் என்றுமே என்னை எழுத்தாளனாக கருதியதில்லை. என்னை ஒரு வாசகனாகத் தான் கருதுகிறேன். எழுதிய கவிதைகளை விட, எழுதிய விமர்சனங்கள் அதிகம். அதுவும் சில சமயங்களில், கவிதையைப் போல பல மடங்கு நீளமான விமர்சங்களை எழுதியிருக்கிறேன். அதுபோல, சில சமயம் கவிதைகளை விட, அந்தக் கவிதைகளுக்கு வரும் சில குறிப்பிடத்தக்கவர்களின் விமர்சனங்களைத் தவறாது வாசித்து வருகிறேன். குறிப்பாக இளசு, மற்றும் நீங்கள்....

இன்னும் சொல்லப்போனால், எழுதுவதை விட வாசிப்பது தான் பிரதானம் என்று எண்ணுகிறேன். எழுத்தாளன் முதலில் வாசகனாக இருக்க வேண்டும் - பின்னர் தான் எழுத்தாளன்.....

Nanban
08-09-2004, 07:48 PM
முதல் கருத்தை ஆட்சேபிக்கிறேன் நண்பரே.
நிழற்படம் என்பது எனக்கு guide ஆகத்தான் தோன்றுகிறது.
எப்போது எடுத்துப்பார்த்தாலும் அந்தந்த மாத நிகழ்ச்சிகளை அது காட்டுவதாக இருந்தால் தான் அதன் பெயருக்கும் அதற்கும் பொருத்தமாக இருக்கும்.


இதை பரஞ்சோதி, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்து வருகிறார். அவருடைய உழைப்பைப் பாராட்டுகிறேன். அதே பணியை மீண்டும் ஒரு முறை எடுத்தாண்டு, நிழற்படமாகத் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. இன்னும் சொல்லப்போனால், அது ஒருவரின் உழைப்பை உறிஞ்சிடுவது போல உணர்கிறேன்.

அதற்குப் பதிலாக, இந்த மாதப் பதிவுகள் அனைத்தையும் பார்க்க விரும்புபவர்கள், பரஞ்சோதியின் .... பதிவில் பார்த்துக் கொள்ளவும் என்று ஒரே ஒரு சுட்டி கொடுத்தால் மட்டுமே போதுமானது. அது, எந்தப் பாராட்டுதல்களும் இன்றி செயலாற்றி வரும் நண்பர் பரஞ்சோதியை ஊக்கப்படுத்தும். நிழற்படங்களின் நீளத்தைக் குறைக்கும். பிற விஷயங்களுக்கு இடங்கொடுக்கும்.

Nanban
08-09-2004, 07:58 PM
அல்லாமல் நிழற்படத்திலேயே விமர்சனம் என்றால் எல்லோரும் மாதம் ஒருமுறை மன்றம் வந்தாலே போதும்தானே?


பத்திரிக்கைகள் வாங்கியதும் - முதல் வேலையாகப் படிப்பது - வாசகர் கடிதங்கள். அதைப் படித்து முடித்து விட்டு, சென்ற வார பத்திரிக்கையை மீண்டும் எடுத்து வைத்துக் கொண்டு, வாசகனின் பார்வையில், கருத்தெழ வைத்த அந்தக் கட்டுரையை, படத்தை, அல்லது நகைச்சுவை துணுக்கை... மீண்டும் ஒரு அலசு அலசுவதில் உள்ள சுகமே அலாதி தான். அது போலத் தான் நிழற்படமும் வேண்டும் என கேட்கிறேன்.

சென்ற மாதம் நடந்த பதிவுகளை இந்த நிழற்படம் இப்படித் தான் விமர்சித்திருக்கிறது. நாம் படித்த பொழுது எழுந்த கருத்தைவிட வேறு கோணத்தில் எழுதியிருக்கிறார்களே - சரி, மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்ப்போம் - இது தான், இப்படி மீண்டும் ஒரு முறை வாசிக்க வைக்கிறதே - அது தான் ஒரு பத்திரிக்கையின் வெற்றி. தவற விட்ட பதிவுகள், வேறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட கருத்துகள் என்று இந்த இரண்டாவது வாசிப்பனுபவம் கிடைக்கச் செய்யும் பத்திரிக்கை, இதழ் இவைகளே வெற்றியை நோக்கிப் பயணிக்கச் செய்யும் வழிகள். அல்லது இந்த ஆர்வம் நாளடைவில் தேய்ந்து போய், வித்தியாச ருசிக்கு, சுவைக்கு வேறிடம் போகவும் வழி வைத்து விடக்கூடாதல்லவா?

வாசகர் விமர்சனங்கள் படித்து விட்டேன் - அதனால், பத்திரிக்கை தேவையில்லை என்பது நடக்குமா?

Nanban
08-09-2004, 08:03 PM
என்னுடைய எண்ணத்தில் நிழற்படத்தில் கீழ்கண்ட தகவல்களை தரலாம்.
இந்த தலைப்பில் இன்னாருடைய தொடக்கத்தில் இந்த விஷயத்தை பற்றியது.
அதற்கான குறிப்பு
மிகவும் காரசாரமான விமர்சங்களை பெற்றது.
பலருடைய கருத்துக்கள் பதிக்கப்பட்டது.
பாராட்டுதல்களாயிருந்தது.


நிழற்படம் - ஒரு தகவல் களஞ்சியமாக நின்று போய் விடக் கூடாது என்பது என் எண்ணம்.

மற்றபடிக்கு எப்படி அமைய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறேன் - மேலே....

Nanban
08-09-2004, 08:10 PM
நிழல்படம் ஒருவர் தயாரித்தால், அவருடைய எண்ணங்களை அல்லது அந்த பதிவு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்ற கருத்துக்களை அங்கே எழுதுவதுதான் சிறப்பானது.
இன்னும் தெளிவாக அவர் கோணத்தில் என்ன நினைக்கிறார் என்பது!

-------
--------
--------
பதிவுக்கு கொடுத்த பதில் தாண்டி அந்த குறிப்பிட்ட பதிவினை ஓருவருக்கு நிச்சயம் படிக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணம் என்ன? இப்படித்தான் படைப்பாளிகள் யோசிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


மிக சரியாக சொன்னீர்கள், சாகரன்....

மிக்க நன்றி....

இன்னமும், மன்றத்தின் மீது அக்கறையும், அதீதப் பற்றுமுள்ள நண்பர்களைக் காணவில்லையே.... வரட்டும்... காத்திருக்கிறோம்...

இளசு
09-09-2004, 12:10 AM
ஆரோக்கியமான இந்த அலசலை ஆரம்பித்த நண்பனுக்கும்,
கருத்துகள் தந்து ஆய்வை ஆழப்படுத்திய அறிஞர், கவிதா, தஞ்சை தமிழன், சாகரனுக்கும்

முதலில் நன்றியும் பாராட்டும்..


இருபக்க கருத்துகளையும் ஆழ்ந்து படித்து வருகிறேன். மற்ற கண்காணிப்பு நண்பர்களின் கூட்டுக்கருத்தையும் சேகரிக்கிறேன்..

இன்னும் பலர் கலந்து கருத்துகள் பதிய வேண்டுகிறேன்.

1) நிழற்படம் , எக்ஸ்ரே ஆக வேண்டுமா என ஒரு எண்ணம். நண்பனின் போட்டோ உதாரணம் நிழற்படங்களே பல தரமாய் அமையலாமே என்று எடுத்துச் சொல்கிறது..

இப்படித்தான் எழுதவேண்டும் என்று நிர்ப்பந்திக்க வேண்டாம்.அதே சமயம்
முன்னர் நிலா, இப்போது நண்பன் சொல்லும் வழிகாட்டல்களை விருப்பமான அளவுக்கு கடைப்பிடிக்க நிழற்பதிவாளர்களை அன்பாய் வேண்டிக்கேட்டுக்கொள்ளலாம்..

பல தேசங்களில், பணி, குடும்பப் பளுக்களுக்கிடையில் தன்னார்வம் ஒன்றினால் மட்டுமே பங்களிப்பவர்கள் நம்மவர்கள். தமிழில் எழுதுவதே மிகவும் ஆனந்தமான வரவேற்கவேண்டிய நிகழ்வு. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில், பார்வையில் படைக்கவே எழுத்துச் சுதந்தரம்..

நியாயமான எதிர்பார்ப்புகளை நண்பன், சாகரன் போன்ற நம் மதிப்புக்குரிய நண்பர்கள் முன்வைக்கும்போது, நிச்சயம் நம் பதிவாளர்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள்..

இவை வழிகாட்டல்கள் மட்டுமே, விதிகள், நிர்ப்பந்தங்கள் அல்ல..
தனித்துவம் காக்கப்படவேண்டும் என்பதில் மாற்றம் வேண்டாம்..
புதிய பாணி, பார்வைகள்தாம் புத்துணர்ச்சி இங்கு..


2)இந்த நேரத்தில் முன்னர் எழுந்த கேள்வி -பதில் பகுதியையும், ஆசிரியர் பொறுப்பு பற்றியும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்..

நண்பன், கவிதா, பரஞ்சோதி, மன்மதன் உள்ளிட்ட சிலர் இணைந்து குழுவாய் கேள்வி -பதில் பகுதி நடத்தலாம் என்பது என் கருத்து..

ஆய்வுகள், ஆலோசனைகள் தொடரட்டும்..

kavitha
13-09-2004, 05:51 AM
மதிப்பிற்குரிய நண்பன், சாகரன் அவர்கள், இளசு அண்ணா இவர்களின் கருத்துகள்
ஏற்றுக்கொள்ளும் விதமாகவே உள்ளன. கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.

இனி நிழற்படம் தயாரிப்பவர்களுக்கு இது மிக உறுதுணையாக அமையும்.
அதற்கு முன் ஒரு முன்னோட்டமாக அப்பணியை நண்பன் அவர்களே எடுத்துச்செய்தால்
மிக சிறப்பாக இருக்கும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
(ஏற்கனவே "பறவைப்பார்வை" தந்திருக்கிறேன் பாருங்கள் என்று சொல்லவேண்டாம் நண்பரே!
அதையும் நான் ஏற்கனவே படித்து விட்டேன். மீண்டும் ஒரு 'புதுப்பொங்கல்' உண்ண விருப்பம்.)

Nanban
15-09-2004, 07:10 PM
இனி நிழற்படம் தயாரிப்பவர்களுக்கு இது மிக உறுதுணையாக அமையும்.
அதற்கு முன் ஒரு முன்னோட்டமாக அப்பணியை நண்பன் அவர்களே எடுத்துச்செய்தால்
மிக சிறப்பாக இருக்கும்.

மீண்டும் ஒருமுறை நிழற்படம் செய்யலாம் என்ற விருப்பம் இருந்தாலும், இப்பொழுது சற்று பணி அதிகம்.

அதனால் இன்னும் ஒரு மாதத்திற்கு மிகப் பெரிய பணியாக எதையும் எடுத்துக் கொள்ள இயலாது.

ஆனால் மீண்டும் ஒரு முறை செய்வேன் - பின்னர் அறிவிக்கிறேன், எப்பொழுது வசதிப்படும் - என்று.....

kavitha
16-09-2004, 03:25 AM
ஆனால் மீண்டும் ஒரு முறை செய்வேன் - பின்னர் அறிவிக்கிறேன், எப்பொழுது வசதிப்படும் - என்று.....
_________________
நண்பன்
விரைவில் உங்கள் நிழற்படம் வரும் என்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி நண்பரே.