PDA

View Full Version : மருத்துவம் : ஆஸ்துமாஇளசு
13-04-2003, 12:01 AM
மருத்துவம் : ஆஸ்துமா

நேற்று காலை அவசரமாய் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன்.

"ஹாய்" ...... மெல்ல பக்கமாய் வந்த காரில் என் நண்பர்.
இறக்கினார் கார் கண்ணாடியை. "வணக்கம் " என்றபடி பார்த்தேன்....
வாயிலே புகையும் சிகரெட்.
அருகே பள்ளி செல்லும் ஆறு வயது மகன்.!!

அவனுக்கு ஆஸ்துமா இருப்பது எனக்குத் தெரியும்..
நெருங்கிய நண்பர் அவர். எனவே உரிமையுடன்
அவர் வாயிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி எறிந்தேன்...

"உங்களால் உங்களின் அழிவை நிறுத்த முடியவில்லை...
உங்கள் சிகரெட்டால் கூடவே உலக மரங்கள் அழிவது போதாதா..
உங்கள் குலக் கொழுந்தும் கருக வேண்டுமா...?"

நண்பரின் கண்களில் அடிபட்ட வலியும், வேதனையும்.
அவர் மகன் முகத்தில் ஆச்சரியமும், சிறு முறுவலும்....

நண்பரிடம் நான் பகிர்ந்துகொண்ட கருத்துகள்
இங்கே மன்றத்தில் உங்களுடனும்......

ஆஸ்துமா என்றால் என்ன?

இது ஒரு பரவலான நோய்.
மூச்சுக்குழாய், அதன் கிளைகள் எதிர்பாராத தருணங்களில்
சாதாரண நிலை (விட்டம்) யில் இருந்து, திடீரென
சுருங்கி விடும் நிலை. மீண்டும் மீண்டும் நாம் அழைக்காமலேயே
வலிய நம் நுரையீரல் வீட்டுக்கு வந்து வந்து போகும் வேண்டாத விருந்தாளி.
அவர் இல்லாத நேரம் வீடு நல்லாகவே இருக்கும்!!

இந்த மாற்றம் சில மணி நேரங்களில்...ஏன் சிலருக்கு
சில நிமிடங்களிலேயே கூட நிகழ்ந்துவிடும்.

மூச்சுக்குழாயின் (Air-ways, Trachea and its branches..--> Bronchi)
அகவணிச் சவ்வு ( Bronchial Mucosa) அழற்சியால்
சிவந்து, வீங்கி, நீர்ச் சளி தேங்கி இந்த விட்டக்குறுகல் நேர்கிறது.

ஏன் வருகிறது ?

இந்த அழற்சிக்கு முக்கியமான தூண்டுதல்கள்:
வீட்டுத் தூசி
போர்வை, தலையணை " அழுக்கு"
இலை, பூ மகரந்தங்கள்
செல்லப்பிராணிகளின் கேசம், காய்ந்த எச்சில்
புகை (அடுப்பு சமையல் அறையிலோ, அப்பாவின் வாயிலோ இருக்கலாம்)
உடற்பயிற்சி
குளிர்க்காற்று
பி.எஸ். வீரப்பா, மதன்பாப் பாணி சிரிப்பு
மனநிலை சோர்வு, தளர்வு ( பிளஸ் 2 தேர்வுகள்...!!!)
இவற்றின் ஒட்டுமொத்த பெயர் : ஒவ்வாதவை (Allergens)

யாருக்கு வரும் ?

எந்த வயதிலும் வரலாம்.
சிறுவயதில் வந்தால், டீன் ஏஜில் குறைந்து மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
உறவினருக்கு இருந்தால், நமக்கு வரும் சாத்தியம் சற்று அதிகம்.

நோய்க்குறிகள் என்ன ?

வறட்டு இருமல்
நார் போல் துப்ப சிரமம் தரும் சிறு சளி
விசில் போல் மூச்சுடன் சப்தம் (Wheezing)
சாதாரணப் பணிகளுக்கே மூச்சு வாங்குதல்
சும்மா இருக்கும்போதே மூச்சு (வெளியே) விட சிரமம்.

(தொடரும்)

aren
13-04-2003, 02:15 AM
அருமையான விஷயங்களை எங்களுக்கு அளிக்கும் இளசுக்கு ஒரு "ஓ" போட வேண்டும்.
தொடருங்கள். எனக்குத் தெரியாத நிறைய விஷயங்களை எனக்குத் தெரியப்படுத்துகிறீர்கள். நன்றிகள் கோடி.

madhuraikumaran
13-04-2003, 07:33 AM
அழகான தமிழில் அருமையாய்ச் சொன்ன இளயவருக்கு கோடி நன்றி !!!
சில கேள்விகள் இளையவரே :
- ஆஸ்த்மா என்பது ஒரு நோயல்ல, குறைபாடு என்கிறார்களே உண்மையா?
- இது ஜீன்களின் வழியாக சந்ததியினருக்குப் பரவுகின்றதா?
- இது ஒரு தொற்று நோயா?
- பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளால் இதைக் குணப்படுத்தி விட முடியுமா?
- ஆஸ்த்மாவிற்கு 'உட்கொள்ளப் படும்' மருந்துகளை விட சுவாசித்தல் மூலம் (puff - inhalers, nebulizers) செலுத்தப்படும் மருந்துகள் மிகச் சரியான பலனளிக்குமா? இதனால் பக்க விளைவுகள் குறைவா?
அனேகமாய் இப்போது ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்த்மா தொல்லை இருப்பதால் இக்கேள்விகளுக்கான விடைகள் எல்லோருக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன். உங்கள் பதிலுக்கு நன்றி !!!

இளசு
13-04-2003, 07:47 AM
ஆஸ்துமா: நிவாரணம் என்ன ?

பொது அறிவுரை:
1) நல்ல குடும்ப மருத்துவரின் ஆலோசனை
2) அவர் பரிந்துரையில், தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரின் அவதானிப்பு
3) புகையில்லா சூழல்

வாகனப் புகையை குறைக்கத்தான் முடியவில்லை.
வாய் விடும் புகை, ஆஸ்துமா நோயாளிகள் அருகில் போகாமல் தவிருங்கள்.
பொதுவாக, Passive Smoking -ன் கேடுகள், குறிப்பாக குழந்தைகள்
பாதிக்கப்படுவது இன்னும் பரவலாக பலரால் அறியப்படவில்லை.
ஒரு அறை / காருக்குள் குழந்தை இருந்தால்... தயவுசெய்து
புகைக்காதீர்கள்/ புகைக்க அனுமதிக்காதீர்கள்.

4) ஆரோக்கியம் தரும், உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி
5) மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்துகளை சரியாகப்
பயன்படுத்துங்கள் - உடல் நலமாய் இருந்தாலும்.

மருந்துகள்: Inhalers __ இன்ஹேலர்ஸ் (மூச்சில் உறிஞ்சுபவை)

1) தீர்ப்பவை = Relievers
வந்துவிட்ட மூச்சுத்திணறலை உடனடியாக கட்டுப்படுத்த/ போக்க.
சுருங்கிய காற்றுக் குழாய்களின் தசைகளை தளர்த்தி
விட்டத்தை அதிகரிக்கிறது.
எப்போதும் (காலாவதியாகாத) மருந்து கைவசம் இருக்கட்டும்.
(எதிர்பாராத விருந்தாளி ஆயிற்றே நம் ஆஸ்துமா...!)
கண்டிப்பாய் வரும் என (பழக்கத்தால்) நீங்கள் கண்டுகொண்ட சூழல்களில்
(விளையாட்டு, குளிர்க்காற்று), அவற்றை எதிர்கொள்ளும் சற்று முன்பே
(முன் ஜாமீன்) இவற்றைப் பயன்படுத்தலாம்.
அடிக்கடி, தினமும் இவை தேவைப்பட்டால், வருமுன் காக்கும் அடுத்த கட்ட
மருந்துகள் தேவை என்று அர்த்தம்.

2) காப்பவை = Preventers

காற்றுக்குழாய் அகவணி அழற்சியைக் கட்டுப்படுத்தி, வீக்கம், சளிநீர் கோர்ப்பதை
மட்டுப்படுத்தும்.
தொடர்ந்து , உடல் நலமாக இருப்பினும் பயன்படுத்த வேண்டும்.
மருந்தளவு கூட்ட, குறைக்க மருத்துவர் ஆலோசனை தேவை.

இதற்கு அடுத்த கட்ட சிகிச்சைகள்:

நெபுலைசர் ( சிறுதுகள்களான "தீர்ப்பவை" ரக மருந்துகளை
வேகமாக ஒரு கருவி மூலம் மூச்சுக்குழாய்க்குள் செலுத்துவது)
ஆக்ஸிஜன்
ஸ்டீராய்டு மாத்திரைகள்
போன்றவை உங்களைப் பரிசோதித்த மருத்துவரின் நேரடி
கண்காணிப்பில் நடக்க வேண்டிய சமாச்சாரங்கள்.

இளசு
13-04-2003, 08:17 AM
(1) ஆஸ்த்மா என்பது ஒரு நோயல்ல, குறைபாடு என்கிறார்களே உண்மையா?
-(2) இது ஜீன்களின் வழியாக சந்ததியினருக்குப் பரவுகின்றதா?
-(3) இது ஒரு தொற்று நோயா?
-(4) பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளால் இதைக் குணப்படுத்தி விட முடியுமா?
-(5) (அ) ஆஸ்த்மாவிற்கு 'உட்கொள்ளப் படும்' மருந்துகளை விட சுவாசித்தல் மூலம் (puff - inhalers, nebulizers) செலுத்தப்படும் மருந்துகள் மிகச் சரியான பலனளிக்குமா?
-(5) (ஆ) இதனால் பக்க விளைவுகள் குறைவா?

உங்கள் ஆர்வமான பதிலுக்கு, (கேள்விகளுக்கு) நன்றி நண்பரே.
ஆரென் கருத்துக்கும் நன்றி.

பதில்கள்:
(1) நோய்தான்.
(2) குறிப்பிட்ட ஜீன் என்று (தற்போதைக்கு)சொல்லமுடியாவிட்டாலும்
மரபு வழி வரும் நோய்தான். அதே சமயம் " எங்க பரம்பரையிலேயே
யாருக்கும் இல்லியே, எனக்கு மட்டும் ஏன்" என்ற வசனமும் பொருந்தும்
பாதி பேருக்கு.
(3) நிச்சயம் இல்லை. ஒதுக்கி வைக்கும் பாவம் செய்யாதீர்கள் யாரும்.
(4) நிச்சயம் நன்மை பயக்கும். குணப்படுத்துமா என்பது தெரியாது.
நம்பிக்கை எதையுமே சாதிக்கும் என்பது என் நம்பிக்கை.
(5) (அ) குறைந்த அளவு மருந்து சரியான இடத்துக்கு போய்ச்சேருவதால்
இவை மாத்திரை, ஊசிகளை விட மேலானவை. ஆனால், சரியாகப்
பயன்படுத்த, அசிரியர், பயிற்சி தேவை.
(5) (ஆ) குறைந்த மருந்தளவால், பக்க விளைவுகள் குறைவே.

aren
13-04-2003, 09:40 AM
அருமையான விளக்கங்கள். தொடருங்கள் இளசு அவர்களே.

இளசு
13-04-2003, 12:43 PM
நண்பர் ஆரென் அவர்களே
உங்கள் கருத்து தரும் ஊக்கம் சொல்லி மாளாது
தொடர்வேன், நீங்கள் தொடர்ந்தால்...
நன்றி.

aren
13-04-2003, 01:08 PM
நிச்சயம் என் விமர்சனங்கள் நல்ல கருத்துக்களுக்கு என்றென்றும் தொடரும். ஆகையால் நீங்கள் தொடருங்கள். படிப்பதற்கு நாங்கள் காத்துக்கிடக்கிறோம்.

madhuraikumaran
13-04-2003, 07:50 PM
என் கேள்விகளுக்கு பொறுமையாய் பதிலளித்ததற்கு மிக்க நன்றி, இளையவரே !

jasmin
28-06-2003, 03:40 PM
நல்ல பயன்வுள்ள கட்டுரை தான். எனது தந்தைக்கும் ஆஸ்த்மா இருக்கிறது.
அவருக்கு அதிகமாக இருந்தது. அதனால் மல்டிமிக்ஸ் என்ற மருந்தை தினமும்
குடிப்பார்கள். அதனால் வயிற்றில் புன், வயிற்று வலி, இரவில் தூக்கம் இல்லை
என பல பிரச்சினை, 5 வருடத்துக்கு முன்பு ஹைதரபாத் (Hyderabad) சென்று
மீன் மருத்துவம் செய்தார்கள் (மூன்று வருடம் தொடர்ந்து) பின்னர் 75%
சரியாகிவிட்டது. தற்போது வருடத்தில் இரண்டு மாதம் மட்டும் தான் மல்டிமிக்ஸ்
என்ற மருந்தை எடுப்பார்கள்.( பனி காலத்தில் மட்டும்) இந்த மருத்துவம் எடுப்பதுக்கு,
முன்பு இந்த மருத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அங்கு சென்றுவந்த பின்னர்
தான் அதன் பலன் தெரிகிறது. இந்த தகவல் சிலருக்கு பயன்படலாம் என்பதுக்காக எழுதினேன்
தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

poo
28-06-2003, 08:21 PM
ஆஸ்துமா.. அவஸ்தைம்மான்னு அலறியவர்களை அறிந்திருக்கிறேன்.
அருமையான விளக்கங்களுடன்கூடிய கட்டுரை.. அண்ணனுக்கு நன்றிகள்.
மீன் மருத்துவம்பற்றி வார இதழொன்றில்கூட படித்தேன். நம்பிக்கைதான் காப்பாற்றுகிறதோ?!!