PDA

View Full Version : கூன் விழுந்த குமரிகள்kavitha
26-08-2004, 07:59 AM
வரதட்சணை வம்சத்தில்
வந்து விழுந்த
சினைக்குஞ்சுகள் நாங்கள்

கள்ளிப்பால் புகட்டும் காட்டில்
கன்றுப்பால் தாய்ப்பாலானதால்
தப்பிப்பிழைத்தோம் நாங்கள்

சா(ஆ)ண்பிள்ளை வாரிசுக்காய்
வரிசையாய்ப் பிறந்ததால்
கூலிக்கூழ் குடித்தோம் நாங்கள்

அப்பிள்ளை அழகாய் போக
தப்பில்லை அழுக்கானாலும்
அடுப்புக்கரி ஆனோம் நாங்கள்

சுள்ளிக்குச்சி கொண்டாறேன் ஆத்தா
சுல்லென சுடும் வெய்யிலில்
அடுப்பெரிக்க சுட்டோம் நாங்கள்

அஞ்சு நாள் நிதம் போனா
அச்சுவெல்ல உருண்டை தருவாங்களாம்
பள்ளிக்கூடம் பார்த்தோம் நாங்கள்

ஒண்ணே ஒண்ணு! எங்க
கண்ணே கண்ணு!
கருவேப்பிலை கொத்தேனு
தம்பிய கொஞ்சினாங்க..
கெஞ்சவில்லை நாங்கள்

பத்தாப்பு படிச்சா போதும்
படிச்சவன் யாரு இருக்கா?
பொங்கிப்போட படிப்பெதுக்கு?
சீர் செய்ய செலவெதுக்கு?
பொங்கவில்லை நாங்கள்!

கண்ணுக்குள்ளே வச்சிருப்பேன்
கண்மணியே உன்னை நானும்!
கண்ணாளன் சொன்னாலும்

அரைவயறுக் கஞ்சி ஊத்தி
அஞ்சுபவுன் சங்கிலிபோடும்
அப்பன் பார்த்த மாப்பிள்ளை தான்
நிமிர்ந்து பாரோம் நாங்கள்!

சாதிக்கிளை ஒடிச்சி
புங்கம்பூ பூத்தாலும்
ஓடிவரும் ஒருதண்ணி
செம்மண், களிமண்
கலந்தாலும்
நட்புத்தூண்கள்
நாற்புறமும் காத்தாலும்
வீட்டின் கூரை தாங்கி
சுவர்களாய் இருப்போம் நாங்கள்

மூலையில் இருப்போரை
மூளைச்சலவை செய்தாலும்
கோபக்கோஷங்கள் கொண்டு
கொதித்தே எழுந்தாலும்
சுற்றும் உள்ள பூமி
சற்றே உயர்ந்தாலும்
மௌன ஓட்டுக்குள்ளே
மறைந்தே இருப்போம் - நாங்கள்

குனிந்து குனிந்தே
கூன் விழுந்த குமரிகள்.

Mano.G.
26-08-2004, 08:43 AM
அருமை அருமை
அனுபவித்து சொன்ன கவிதை
ஆறுதல் சொல்வதை விடுத்து
செயலில் கட்டுவோமே
நமது பங்கை

மனோ.ஜி

மன்மதன்
26-08-2004, 10:00 AM
கவிதை வரிகளில் ஒரு உள்ளக்குமுறல் இருக்கிறது.. சமுதாய கண்ணோட்டத்தில் அருமையான கவிதை..

அன்புடன்
மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
26-08-2004, 10:03 AM
அற்புதம் கவிதா. தங்குதடையின்றி என்னமாய் ஒரு விளாசல்? உள்ளிருந்து பிரவாகமாய் வருகுது போல....

thamarai
26-08-2004, 06:56 PM
மூலையில் இருப்போரை
மூளைச்சலவை செய்தாலும்
கோபக்கோஷங்கள் கொண்டு
கொதித்தே எழுந்தாலும்
சுற்றும் உள்ள பூமி
சற்றே உயர்ந்தாலும்
மௌன ஓட்டுக்குள்ளே
மறைந்தே இருப்போம் - நாங்கள்

குனிந்து குனிந்தே
கூன் விழுந்த குமரிகள்.

அருமையான கவிவரிகள்.

வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வை கவியாக வடித்தெடுத்த தங்களுக்கு வாழ்த்துக்கள்...

இளசு
26-08-2004, 11:42 PM
புங்கம்பூ, செம்மண்-களிமண்..

என்ன வீச்சு..

பொங்கிய உணர்வால் வந்த வீச்சு இது..

அண்மையில் நேரில் பார்த்து பாதிக்கப்பட்டதாய் எண்ண வைக்கிறது கவீ..


புத்தகச்சுமை..
பூப்பு சுமை..
புகையிலை விரிச்சா போச்சு என்ற சமூகச் சாடல் சுமை..
எத்தனை சுமைகள்..
ஏன் விழாது கூன்..????

கேள்விக்குறிகள் நிமிர்ந்து ஆச்சரியக்குறிகள் அதிகரிக்கும் காலமிது..
இதுபோன்ற சாட்டையடி கிரியா ஊக்கிகள் காலத்தின் தேவை..

மனமார்ந்த பாராட்டுகள் கவீ..

Narathar
27-08-2004, 08:25 AM
சா(ஆ)ண்பிள்ளை வாரிசுக்காய்
வரிசையாய்ப் பிறந்ததால்
கூலிக்கூழ் குடித்தோம் நாங்கள்

அப்பிள்ளை அழகாய் போக
தப்பில்லை அழுக்கானாலும்
அடுப்புக்கரி ஆனோம் நாங்கள்


பெண்களின் உள்ளக்குமுறல்களை
உங்கள் கவி வரிகள் நம் கண் முன் கொணர்ந்தன

தஞ்சை தமிழன்
27-08-2004, 08:34 AM
கவிதாவின் கவிதை,

என் நெஞ்சை துளைத்த கவிதை,

நாம் எத்தனைதான் விதண்டாவதம் பேசினாலும்

இந்த கவிதைக்கு( சாட்டை ) நாம் பதில் இன்று
இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள்
சொல்லத்தான் வேண்டும்.


ஆணும் பெண்ணும் சமம் என்பார்கள்,
அதில் கூட பாருங்கள் ஆணுக்குத்தான் முன்னிரிமை.

சேரன்கயல்
28-08-2004, 04:02 AM
அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் கவிதைகளில் சிக்குண்டுவிடாது...இங்கே நெருப்பாய் தெறிக்கும் வார்த்தைகளில் சமூக சிந்தனைகளை சரமாக்கிய கவி...பெருமிதம் கொள்கிறேன் தோழி...
கண்ணியச் சீற்றம் கண்டு சிலிர்க்கிறேன்...

samuthira
31-08-2004, 06:40 AM
கால மாற்றத்தில் இந்த வஞ்சக செயல்கள் அழிந்து போய் கொண்டிருக்கிறது., இது போன்ற சவுக்கடிகள் இன்னும் வேகத்தில் அழித்து விடட்டும்..,
ஆண் பெண் இரு பாலராய் இருக்கட்டும்
இரு பிரிவாய் இல்லாமல்...

அருமை கவி..,, பக்குவமான வார்த்தைகளில் பளார் என விளசல்கள்...

இக்பால்
31-08-2004, 12:32 PM
தங்கச்சி...கவலைப்பட வைத்து விட்டீர்களே.

கவிதை நல்லதொரு சமுதாயப் பார்வையில் தன் சாட்டையை
வீசுகிறது. தொடருங்கள்.

-அன்புடன் அண்ணா.

kavitha
01-09-2004, 08:00 AM
ஊக்குவித்துப் பாராட்டிய மனோ அண்ணா, சமுதாயக்கண்ணோட்டம் கண்ட மன்மதன், உருண்டோடும் அருவியைத் துருவிப்பார்க்கும் இ.த.செ. :D, வாழ்த்திய தாமரை, எப்போதும் பாராட்டும் அண்ணன் இளசு, எப்போதாவது வரும் நாரதர் அண்ணாச்சி, சாடலில் கூட ஆணை முன் வைத்தாரே என்று அங்கலாய்க்கும் அண்ணன் த.தமிழன், வார்த்தைகளை உண்டு வடிக்கும் விமர்சனத்தார் சேரன், பிரிக்காமல் பரிவு காட்டும் சமுத்திரா, கவலை முகம் காட்டும் அண்ணன் இக்பால்

அனைவரும் எனது தாழ்மையான நன்றிகள்.

கவிதைகளைக் கரு கொண்டு உரு கொடுக்கவேண்டும். இங்கே கவிதைக்கருவே வழிந்தோடி கவிதைப் புனைந்தது. எழுதி முடித்த பின்னர் தான் நானே மீண்டும் வாசித்தேன். உங்களின் ஊக்கமே எனது அடுத்த அடிக்கு உற்சாகம். தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டுகிறேன். நன்றி

இளசு
01-09-2004, 06:11 PM
கண்டேன் திசைகள் இதழில்....

http://www.thisaigal.com/sep04/poem4.html

பாராட்டுகள் கவீ..


நண்பன், இசாக், அசன் எனப் பல களங்கள்/திசைகள் கண்ட
மன்றப்படைப்பாளிகள் பட்டியலில் நீங்களும்..

இது தொடர்ந்து பரவ வாழ்த்துகள் கவீ..

gankrish
02-09-2004, 06:48 AM
கவிதா ... கவிதை அருமை..இன்னும் நம்மூர் கிரம்ங்களில் இது தான் நிலமை. அதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..

kavitha
02-09-2004, 07:55 AM
கண்டேன் திசைகள் இதழில்....
http://www.thisaigal.com/sep04/poem4.html
பாராட்டுகள் கவீ..

உண்மையாகவா அண்ணா? ஹேஏஏஏஏஎ! உங்கள் மூலமாகக்கேட்டறிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நண்பரிடம் தெரிவிக்கவேண்டும். அவர் தந்த ஊக்கத்தால் தான் அனுப்பினேன். பிரசுரத்திற்கு ஏற்றவகையில் என் கவிதை உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அண்ணா.


கவிதா ... கவிதை அருமை..இன்னும் நம்மூர் கிரம்ங்களில் இது தான் நிலமை. அதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்..

ஆமாம் கான்கிரீஷ்; சரியாக சொல்லிவிட்டீர்கள். அதை இன்னும்
பார்க்கவேண்டிய நிலையில் நான் இருப்பதால் வந்த ஆதங்கத்தில் விளைந்த கவிதை.

அறிஞர்
02-09-2004, 09:03 AM
அருமையான கவிதை கவி.... நன்றாக இருந்தது...

முன்பு நான் கவனிக்கவில்லை...... நீங்கள் சுட்டி தந்தவுடன் பார்த்து, படித்து... இரசித்தேன்...

இன்னும் பல படைப்புக்களை படைக்க வாழ்த்துக்கள்

Narathar
03-09-2004, 07:34 AM
கண்டேன் திசைகள் இதழில்....
http://www.thisaigal.com/sep04/poem4.html
பாராட்டுகள் கவீ..


கண்டேன் மட்டுமல்ல கவீ கேட்டேனும் கூட.....................

உங்கள் கவிதையை உங்கள் மற்றும் மன்றப்பெயருடன்
லண்டன் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் (TBC-London)
கற்பகச்சோலை எனும் நிகழ்ச்சியில் ஒலிபரப்பியதை கேட்டேன்

வாழ்த்துக்கள்!

இளசு
03-09-2004, 07:35 AM
மன்றம் என்றால்..?
திசைகளா இல்லை நமது மன்றமா நாரதரே?

இ.இசாக்
03-09-2004, 07:54 AM
வாழ்த்துகள் கவிதா
தொடரட்டும்
மகிழ்கிறேன்

kavitha
03-09-2004, 07:59 AM
அறிஞர் , இசாக் அண்ணாவிற்கும் என் நன்றிகள்


மன்றம் என்றால்..?
திசைகளா இல்லை நமது மன்றமா நாரதரே?
அதே அதே? நம்ம மன்றம் பெயருடன் சொன்னாங்களா அண்ணாச்சி??

தஞ்சை தமிழன்
03-09-2004, 08:37 AM
கவிதாவின் வரிகள் காற்றிலும் பறந்து
திக்கெட்டும் ஒலிக்க வாழ்த்துகிறேன்.

சேரன்கயல்
03-09-2004, 10:59 AM
சபாஷ்...கலக்கல் கவி...
ஐ. பி. சி முந்திடுச்சோ...எனக்கும் இந்த எண்ணமிருந்தது...ஹம்...பரவாயில்லை...கூன்நிமிர்ந்த குமரிகள் வரட்டும்...நான் முந்திவிடுகிறேன்...

poo
04-09-2004, 05:20 AM
விளாசல் கவிதைகளில் கவிதாவுக்கே முதலிடம்...

வார்த்தை வீச்சில் அசந்துபோனேன்...

இன்னும் பல திசைகளில் பயணிக்க வாழ்த்துகிறேன் கவி!!

kavitha
04-09-2004, 07:26 AM
தஞ்சை தமிழன் அண்ணா, சேரன், பூ அனைவருக்கும் நன்றிகூன்'நிமிர்ந்த' குமரிகள் வரட்டும்...நான் முந்திவிடுகிறேன்...

:)

Narathar
07-09-2004, 12:37 PM
அறிஞர் , இசாக் அண்ணாவிற்கும் என் நன்றிகள்


மன்றம் என்றால்..?
திசைகளா இல்லை நமது மன்றமா நாரதரே?
_________________

அதே அதே? நம்ம மன்றம் பெயருடன் சொன்னாங்களா அண்ணாச்சி??

நம் தமிழ் மன்றப்பெயரைத்தான் சொன்னார்கள்.

Narathar
07-09-2004, 12:39 PM
சபாஷ்...கலக்கல் கவி...
ஐ. பி. சி முந்திடுச்சோ...எனக்கும் இந்த எண்ணமிருந்தது...ஹம்...பரவாயில்லை...கூன்நிமிர்ந்த குமரிகள் வரட்டும்...நான் முந்திவிடுகிறேன்...

ஐ பீ சீ அல்ல அன்பரே
டீ பீ சீ தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.

அது சரி நீங்கள் எந்த வானொலியில் வேலை செய்கிறீர்கள்?
ஈ டீ பீ சீ யா?

சேரன்கயல்
07-09-2004, 01:03 PM
ஓஹோ டி.பிசியா...
வேரித்தாஸ் கேள்விப் பட்டதுண்டோ...நாரதர்..???

Nanban
09-09-2004, 07:46 PM
அருமை, அருமை...

எழுந்து நின்று கை தட்டுகிறேன்...

கருத்தெழுதும் முன், திசைகளிலும் இக்கவிதையைப் படித்து விட வேண்டும் என்று ஓடினால், அங்கே எழுத்துரு பிரச்னையால், படித்து விட முடியாமல் போனது....
உண்மையாகவா அண்ணா? ஹேஏஏஏஏஎ! உங்கள் மூலமாகக்கேட்டறிந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நண்பரிடம் தெரிவிக்கவேண்டும். அவர் தந்த ஊக்கத்தால் தான் அனுப்பினேன். பிரசுரத்திற்கு ஏற்றவகையில் என் கவிதை உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அண்ணா.மிக்க ம்கிழ்ச்சி.... இன்னும் நிறைய எழுதுங்கள்... நிறைய வாசியுங்கள்... ஆய்ந்து பாருங்கள். இன்னும் வளர்வீர்கள். வளர வேண்டும் என்ற வாழ்த்துகளுடன்,

அன்புடன்

Narathar
10-09-2004, 09:25 AM
ஓஹோ டி.பிசியா...
வேரித்தாஸ் கேள்விப் பட்டதுண்டோ...நாரதர்..???

நீங்கள் வெரிட்டாஸைப்பற்றி சொன்னதும் தான்
உங்கள் கொடியை கவனித்தேன்......................
அப்போ கயல் வெரீட்டாஸிலிருந்தோ?

சேரன்கயல்
10-09-2004, 12:17 PM
நீங்கள் வெரிட்டாஸைப்பற்றி சொன்னதும் தான்
உங்கள் கொடியை கவனித்தேன்......................
அப்போ கயல் வெரீட்டாஸிலிருந்தோ?
_________________
அன்புடன்
நாரதர்
தமிழை வளர்க்க........ தமிழரோடு தமிழில் உரையாடுங்கள்!!


ஆம் நாரதரே...
கடந்த 41/2 வருடங்களாக வேரித்தாஸில்தான்...இன்னும் 1 1/2 வருடப் பணிக்காலம் இருக்கிறது...அதை சுருக்கிக்கொண்டு ஊர் திரும்பலாம் என்று யோசனை...
(உங்களுக்கு வேரித்தாஸ் அறிமுகமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை...)

Narathar
10-09-2004, 09:30 PM
உங்களுக்கு வேரித்தாஸ் அறிமுகமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கவில்லை..

எனக்கு ஏதோ ஒரு அளவுக்கு தெரியும். உண்மைதான்
ஆனால் நம்மவர்களில் பலர் அந்த வானொலியைப்பற்றி அறிந்திருக்க மாட்டார்கள், எனவே வெரீத்தாஸ் வானொலி பற்றி சிறு விளக்கம் அளிக்கலாமே? இங்கே..................

(அதெப்படி எனக்கு தெரிந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தீர்கள்? )

thempavani
11-09-2004, 10:10 AM
நண்பர் நாரதர் அவர்களே!

வேரித்தாஸ் என்று பொருள்...
உண்மை.. சத்தியம என்ற தாரக மந்திரம் கொண்டு ஆசியக் கண்டத்திலுள்ள மக்களுக்கு இறை நற்செய்தியை , வாழ்வின் மதிப்பீடுகளை.. ஒலியேற்றும் ஒரு கத்தோலிக்க வானொலியே வேரித்தாஸ் வானொலி..

சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து... கடந்த 1969 முதல் ஒலிபரப்பாகிறது... இந்திய மொழிகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது..

நமது தமிழ்ப்பணி பற்றிய விபரங்களை http://www.tamil.rveritas-asia.org என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் நண்பரே...

(சேரன் அவர்களே..... சரியா...... :( )

பரஞ்சோதி
11-09-2004, 12:07 PM
வேரித்தாஸ் தமிழ் சேவைக்கு என் பாராட்டுகள்.

தளத்தை அறிமுகப்படுத்திய சகோதரிக்கு நன்றி.

பாரதி
11-09-2004, 01:36 PM
முன்பே படித்திருந்தாலும் பதில் எழுத இத்தனை தாமதமானதற்கு மிகவும் மன்னிக்கவும் கவி. சமூகத்தில் இருக்கும் அவலங்களை அலசும் விதத்தில் நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள். தொடந்து உங்கள் கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.

கவிதையைத் தொடந்த வானொலி செய்திகளை தந்த நண்பர்களுக்கும் நன்றி.

Narathar
12-09-2004, 08:54 AM
கயலிடம் கேட்டால்
தேம்பாவை பதில் சொல்கிறார்!
நன்றி தேம்பாவை?
அப்போ இருவருமே வெரீத்தாஸா?

சேரன்கயல்
12-09-2004, 10:14 AM
கயலிடம் கேட்டால்
தேம்பாவை பதில் சொல்கிறார்!
நன்றி தேம்பாவை?
அப்போ இருவருமே வெரீத்தாஸா?

ஆம்...நாரதரே...
தேம்பாவும் வேரித்தாஸில் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கிறார்...
வேரித்தாஸ் வானொலி அடிப்படையில் கத்தோலிக்க கிறித்தவ வானொலியாய் இருந்தாலும், சமூக விழுமியங்களை அடியொற்றிய நிகழ்ச்சிகளின் வழியே, மனித மான்புகளை வலியுறுத்தும் அம்சங்களை, தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ்ச் சமுதாய வளர்ச்சி, தமிழர்களின் உரிமைகளுக்காய் குரல் கொடுத்தல் இவற்றை இலக்காக கொண்டு கடந்த மூன்று தசாப்தங்களாக (கிட்டத்தட்ட) பணியாற்றி வருகிறது...
ரபி பெர்னார்ட், ஜெகத் கஸ்பார்(சிம்பொனியில் திருவாசகம்) ஆகியோர் வேரித்தாஸ் தமிழ்ப்பணியில் பணியாற்றிவர்கள்...

இளசு
12-09-2004, 10:22 AM
தசாப்தம் - decade..
கற்றேன் இன்னொரு சொல்.. நன்றி இனிய சேரன்..

தேம்பா, சேரன், நாரதர் - மூவர் அளித்த சேதிகள் அறிந்தேன்.நன்றி..
பாமினி இறக்கியும் படிக்க முடியவில்லை அந்தத் தளத்தை..

சேரன்கயல்
12-09-2004, 10:25 AM
தசாப்தம் - decade..
கற்றேன் இன்னொரு சொல்.. நன்றி இனிய சேரன்..

தேம்பா, சேரன், நாரதர் - மூவர் அளித்த சேதிகள் அறிந்தேன்.நன்றி..
பாமினி இறக்கியும் படிக்க முடியவில்லை அந்தத் தளத்தை..

இனிய இளசு...
தளத்தில் சில குளறூபடிகள் இருப்பதால்தான் நான் இதுவரை மன்றத்தில் சொல்லவில்லை...
தேம்பாவின் கைவண்ணத்தில் உருவானதே இத்தளம்...நம் மன்ற நண்பர்களின் ஆலோசனை, உதவியோடு விரைவில் (????) யூனிகோடில் நிர்மானிக்க திட்டம்...பார்ப்போம்...
தளத்தை தட்டிப் பார்த்த உங்களுக்கு நன்றிகள்...

kavitha
13-09-2004, 07:15 AM
நம் தமிழ் மன்றப்பெயரைத்தான் சொன்னார்கள்.
_________________
அன்புடன்
நாரதர்
தமிழை வளர்க்க........ தமிழரோடு தமிழில் உரையாடுங்கள்!!


நன்றி அண்ணாச்சி. :)

kavitha
13-09-2004, 07:24 AM
மிக்க ம்கிழ்ச்சி.... இன்னும் நிறைய எழுதுங்கள்... நிறைய வாசியுங்கள்... ஆய்ந்து பாருங்கள். இன்னும் வளர்வீர்கள். வளர வேண்டும் என்ற வாழ்த்துகளுடன்,

அன்புடன்
_________________
நண்பன்


நன்றி நண்பரே!முன்பே படித்திருந்தாலும் பதில் எழுத இத்தனை தாமதமானதற்கு மிகவும் மன்னிக்கவும் கவி.

நன்றி பாரதி. (இப்போது தான் எனக்கு நேரம் கிட்டியது பாரதி. எனவே தாமதத்திற்கு மன்னிக்கவும்.)மூன்று தசாப்தங்களாக (கிட்டத்தட்ட) பணியாற்றி வருகிறது...
ரபி பெர்னார்ட், ஜெகத் கஸ்பார்(சிம்பொனியில் திருவாசகம்) ஆகியோர் வேரித்தாஸ் தமிழ்ப்பணியில் பணியாற்றிவர்கள்...

முப்பது ஆண்டுகளாக ( சரியா சேரன்?)
decade என்ற சொல்லை எனது மகளின் மூலம் அறிந்தேன்.
அதன் தமிழ்ப்பதத்தை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.

kavitha
13-09-2004, 07:32 AM
நமது தமிழ்ப்பணி பற்றிய விபரங்களை http://www.tamil.rveritas-asia.org என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் நண்பரே...வேரித்தாஸ் பற்றி மேலும் நிறையத் தெரிந்துக் கொண்டேன். நன்றி தேம்பா.
கவிதையைப் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே தேம்பா? :(பாமினி இறக்கியும் படிக்க முடியவில்லை அந்தத் தளத்தை..

என்னால் படிக்க இயன்றதே அண்ணா. பாமினியை c:\windows\font போல்டரில் ஏற்றிய பிறகு இணையப்பக்கத்தை refresh (F5)செய்துப் பாருங்கள்.

thempavani
13-09-2004, 09:58 AM
ஐயோ கவி கோவிச்சுக்காதீங்க....

தற்போதேல்லாம் மன்றத்தில் எதுவும் பதிக்க நேரமே கிடைப்பதில்லை.... எனவே பொறுத்தறுள்க...

தங்கள் கவிதையின் .. வீச்சு.. நம் இனத்தவரின் உள்ளக்கிடக்கைகள்... அருமையாய் வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்... கவிதையைப் படித்தவுடன்... என் கல்லூரிக் காலங்கள்.. நினைவில் வந்தன....

உண்மையைச் சொன்ன கவி(தை)க்கு என் வாழ்த்துக்கள்.....

பரஞ்சோதி
27-09-2004, 06:29 PM
சகோதரி இன்று தான் இதை பார்க்கிறேன்.

எப்படி பாராட்டுவது என்றுதெரியவில்லை.

சகோதரியின் கவித்திறமை உலகமெங்கும் பரவுவதை கேட்டதும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் பலவகையில் உங்கள் பெயர் நிலைத்தோங்க வாழ்த்துகிறேன்.