PDA

View Full Version : இது நம் வீடு



kavitha
26-08-2004, 07:57 AM
இது நம் புராதன வீடு!

ஒழுகும் கூரைகளை
சரி செய்வோம்
அழுகும் பிள்ளைகளை
சிரிக்கச் செய்வோம்

தொங்கும் ஒட்டடைகளை
துவட்டி எடுப்போம்
எங்கும் சுத்தமாய்
இருக்கச் செய்வோம்

கோப்புகளை எல்லாம்
தூசு தட்டுவோம்
கலைந்த புத்தகங்களை
அடுக்கி வைப்போம்

கிழிந்த திரைச்சீலைகளை
நீக்கி விடுவோம்
கறை படிந்த தரையை
துடைத்து எறிவோம்

விரிசல் சுவர்களை
இணைத்து வைப்போம்
பழுதை எல்லாம்
புதிது செய்வோம்

இது நாம் புதுப்பித்த வீடு!

நினைவுப் பரிசுகளை
நிமிர்த்தி வைப்போம்
புகைப் படங்களை
மாட்டி வைப்போம்

பூக்களை ஆங்காங்கே
செருகி வைப்போம்
நறுமணம் எங்கும்
பரவச் செய்வோம்

பழையன யாவையும்
பாது காப்போம்
புதியன வற்றிற்கு
அங்கீகாரம் அளிப்போம்

இது தோட்டம் சூழ்ந்த வீடு!

தோட்டமும் இணைந்தது
நம் வீடு!
அனுதின மலர்கள்
தனியே!
சுவை தரும் கனிகள்
தனியே!
மருத்துவ மூலிகைகள்
தனியே!
பருவ காலப் பயிர்கள்
தனியே!
ஒவ்வொன்றும் ஒரு வகை!
அத்தனையும் தரும் உவகை!

இது நம் எழில் வீடு!

மலர்ச் செடிகளை
வாசலில் வைப்போம்

மாவிலைத் தோரணங்கள்
கட்டி வைப்போம்

மரங்கள் அரணாய்
வலுச் சேர்க்கும்

கருவேலமும் வேலியாய்
துணை நிற்கும்

எதுவும் இங்கே
வீண் இல்லை!

இது மைதானம் தாங்கிய வீடு!

இது குழந்தைகளும்
விளையாடும் வீடு!
தெரு நாய்களை
உள்ளே அனுமதியோம்
வாசல்களை பலமாய்
பூட்டி வைப்போம்
ஆபாசச் சுவரொட்டிகளை
கிழித்தெறிவோம்
யாவரிடத்தும் நாகரிகமாய்
நடந்து கொள்வோம்
இது நம் பண்பாடு
பறைச் சாற்றும் வீடு!

இது நம் ஜன நாயக வீடு!

ஆலோசனைகள்
ஆயிரம் அங்கீகரிப்போம்
தீர்வு ஒன்றாய்
தீர்மானிப்போம்

புதுமைகள் பலவாய்
புரிந்திடுவோம்
செம்மையாய் செழுமை
சேர்த்திடுவோம்

குறைகள் கேட்டு
நிவர்த்தி செய்வோம்
நிறைகள் கண்டு
பயன் பெறுவோம்

இது நம் ராஜ்ய வீடு!

ஒரே தலைவனின் கீழ்
ஒற்றுமையாய் வாழும்
இது நம் ராஜ்ய வீடு!

Mano.G.
26-08-2004, 08:25 AM
அருமை தங்கையே அருமை
இந்த கவிதையை நமது மன்றத்துக்கும் பயன்படுத்தலாம்.

மனோ.ஜி

மன்மதன்
26-08-2004, 09:57 AM
நல்ல அறிவுரையாய் ஒரு கவிதை.. பாராட்டுக்கள் கவிதா..

அன்புடன்
மன்மதன்

இளந்தமிழ்ச்செல்வன்
26-08-2004, 10:20 AM
கண்மணி கவிதா பாரதி உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தார்.

அழகாய் சொன்னீர்கள் தோழியே. வாழ்த்துக்கள்

இளசு
26-08-2004, 11:45 PM
இல்லம், பணியிடம், தேசம், உலகம்,
நாம் புழங்கும் இடம் ஒவ்வொன்றுக்கும் பொருந்தும் வேதம் இது..

உருவகங்கள் ஒவ்வொன்றும் அழகு..அருமை..

பாராட்டுகள் கவீ..

kavitha
27-08-2004, 03:27 AM
இந்த கவிதையை நமது மன்றத்துக்கும் பயன் படுத்தலாம்.

மனோ.ஜி
சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள் அண்ணா. இது குறித்த விளக்கத்தை இப்படித்தான் எதிர்பார்த்தேன். நன்றி



நல்ல அறிவுரையாய் ஒரு கவிதை.. பாராட்டுக்கள் கவிதா..

அன்புடன்
மன்மதன்

நன்றி மன்மதன்




கண்மணி கவிதா பாரதி உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தார்.

புரியவில்லையே இ.த. செல்வன்?
உங்கள் கருத்திற்கு நன்றி.




இல்லம், பணியிடம், தேசம், உலகம்,
நாம் புழங்கும் இடம் ஒவ்வொன்றுக்கும் பொருந்தும் வேதம் இது..

உருவகங்கள் ஒவ்வொன்றும் அழகு..அருமை..

ஆமாம் அண்ணா. சில மாதங்களுக்கு முன்பே எழுதிய கவிதை இது. தீட்ட கொஞ்சம் நாளாகி விட்டது. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

Narathar
27-08-2004, 08:20 AM
ஜாதிமல்லி பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
பாரதிதாசன் கவிதையை நினைவு படுத்தியது உங்கள் கவி வரிகள்.
வாழ்த்துக்கள்!!

தஞ்சை தமிழன்
27-08-2004, 08:40 AM
கவி

கவிதை அருமை.

மனிதனின் பண்பை உயரச்செய்யும் கவிதை.

kavitha
01-09-2004, 08:07 AM
அண்ணாச்சிகளுக்கு நன்றி

இக்பால்
01-09-2004, 08:34 AM
எல்லா இடத்திற்கும் ஏற்ற ஒரு நல்ல கவிதை.

நன்றியுடன் பாராட்டுகள் தங்கை.

-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
01-09-2004, 08:38 AM
ஹும்...கவியின்...இன்னுமொரு சீற்றக்கவிதை...
சுத்தம் செய்யவேண்டியிருக்கிறது கவி...நம் வீட்டை...

samuthira
02-09-2004, 06:50 AM
கனவு வீடு.., மெய்ப்பட பிரார்த்தனைகள்..,



ஒரே தலைவனின் கீழ்
ஒற்றுமையாய் வாழும்
இது நம் ராஜ்ய வீடு!

???????????!!!!!!!!!!!!!!! நடந்தால் நலமே...
வாழ்த்துகள் கவி.....

gankrish
02-09-2004, 06:50 AM
வெகு தினம் கழித்து வந்துள்ளேன் இன்று.. கவிதா உங்கள் கவிதை அனைத்தும் அருமை.. அருமை.. வேறு என்ன சொல்ல

Nanban
02-09-2004, 07:56 PM
நீங்கள் கூறிய அனைத்தையுமே சுத்தப்படுத்தி விட முடியும் - ஒவ்வொரு மனிதனும் தன் அகத்தே சுத்தப்படுத்தி விட முடிந்தால்....

நல்ல சிந்தனைகள், கவிதா....

kavitha
03-09-2004, 07:01 AM
சேரன், இக்பால் அண்ணா, சமுத்திரா, கான்கிரீஷ், நண்பன் அனைவரது தத்தம் கருத்திற்கும் நன்றிகள்.



நீங்கள் கூறிய அனித்தையுமே சுத்தப்படுத்தி விட முடியும் - ஒவ்வொரு மனிதனும் தன் அகத்தே சுத்தப்படுத்தி விட முடிந்தால்....







சுத்தம் செய்யவேண்டியிருக்கிறது கவி...நம் வீட்டை...
_________________
நலம் வாழ்க...
சேரன்கயல்...

அடுத்த முயற்சி அது தான் நண்பர்களே. சொல்லாமலும் செய்வோம். சொல்லியும் செய்வோம். நன்றி

Narathar
03-09-2004, 07:12 AM
வெகு தினம் கழித்து வந்துள்ளேன் இன்று.. கவிதா உங்கள் கவிதை அனைத்தும் அருமை.. அருமை.. வேறு என்ன சொல்ல


வாங்க கன்கிரிஷ் நீங்களும் என்னைப்போல் தானா?