PDA

View Full Version : ராணித்தேனீயும் வெறுங்கூடும்..



rambal
12-04-2003, 05:55 PM
ராணித்தேனீயும் வெறுங்கூடும்..

நான் வசித்த வீட்டில்
ஒரு தேன்கூடு உண்டு..
பல அற்புத பூக்களும் உண்டு..

தேன்கூட்டில்
ஒரு ராணித்தேனீயும் உண்டு..
அந்த ராணிக்கு தோழியும் உண்டு..

ராணித்தேனீக்கு
சேவகம் செய்ய
ஆயிரமாயிரம் தேனீ உண்டு..

அற்புத பூக்களில்
வழிந்த தேனமுதை
சேவகர்கள் எடுத்துக் கொடுக்க..

அதை ராணித்தேனீயும்
தோழியும் அருந்தி
போதையாக...

தொடர்ந்த இந்த ஆட்டத்தில்
தேன்கூடு
வெறுங்கூடாக
இரைதேடி
கூட்டை விட்டுப் வெளி வந்தாள் ராணி...

தேனெடுத்த பூக்களை
கசக்கிப் பிழிந்து
சாறெடுத்தால் என்ன?
என்று ஒரு உத்தி தோன்ற
தோழியுடன் சேர்ந்து
தேன் கொடுத்த பூக்களை நாசம் செய்தாள்..

எல்லாப் பூக்களும்
நாசம் ஆனதும்
ஒரு சிறு புன்னகை..

அப்போதுதான்
ராணிக்கே தெரிந்தது
தான் குரூர ரத்தத்தாலும்
அகம்பாவ சதைகளாளும் தான்
உருவாக்கப்பட்டவள் என்ற உண்மை..

இந்தக் குரூர விளையாட்டு
பிடித்துப் போக
தொடர்ந்து விளையாடினாள் ராணி..

பூக்கள் மட்டுமல்லாமல்
என் தோட்டத்து
காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை..

சர்வம் நாசம் மயம்...
எல்லாம் அழிக்கப்பட்டு
பிழியப்பட்டு..

ஆடிமுடித்த களைப்பில்
ஓய்வு என்ற பெயரில்
என் தோட்டம் விட்டுப் போனாள்..

நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு
சீர்குலைந்த தோட்டத்தை சரி செய்ய
ஆரம்பித்தேன்..

அப்பொழுதுதான்
தெரிந்தது ராணியும் தோழியும்
ஓய்வெடுக்கப் போகவில்லை..
அருகில் இருந்த பூங்காட்டுக்குள் நுழைந்த விஷயம்...

சரி..
நான் தான் அங்கிருந்து
பூக்களை வாங்கிவந்துவிட்டேனே..
என கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதற்குள்
ராணியும் தோழியும்
திரும்பி வந்தனர்
என் தோட்டக்காரனுக்கு லஞ்சம்
கொடுத்துவிட்டு..

நான் என்ன செய்ய இப்போது?
மீண்டும் வந்த ராணி
உயிருள்ள பூக்களில் இருந்து
உயிரற்ற பொம்மைகள்
வரை விசிறி அடித்து
விளையாட ஆரம்பித்துவிட்டாள்..

இதில்
தோட்டக்காரனைக் குற்றம் சொல்லி
என்ன செய்ய?
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
இந்த உலகில்..

இப்படியாகத்தான்
ராணியும் தோழியும்
வாசம் செய்கின்றனர்
வெறுங்கூட்டில்..

rambal
12-04-2003, 06:23 PM
இந்தக்கவிதைக்கு
தயவுசெய்து யாரும் விளக்கம் கேட்கவேண்டாம்..
தெரிய வேண்டுமானால்
ஒரே ஒரு குறிப்பு தருவேன்..
அதுவும் நீங்கள் கேட்கும்பட்சத்தில்...

poo
12-04-2003, 06:30 PM
ராம்... மிக்க நன்றி... அருமையாய் சொன்னாய்... (ஏதோ புரிந்தவன்போல பிதற்றுகிறேனா?!... நீ சொன்ன கவிதை இப்போதையை நிகழ்வுகளுக்கு அழகாய்....) பாரட்டுக்கள்!!!

இளசு
12-04-2003, 07:55 PM
"பூ"தகியும் வரலாறு(ம்):

பொம்மை மேல் லாரி ஏற்று
பொருட்காட்சியில் வைத்துப் பூட்டு

பூக்கள்தான் புடிச்ச புதிய மிதியடி
போரடிச்சிடுச்சி ஆயிரம் ஜோடி மிதியடி

ஆடிட்டு வந்தால் அதால் அடி
ஆட்டோ அனுப்பி கைகால் ஒடி

"எதிரியைக்" கடிக்கும் வரை ஆணையத்துறை
காரியம் முடிந்ததும் கோவணத் துறை

ஆடு பகை, அதோடு பேசாதே: அறிக்கை
குட்டி உறவு: கூடப் பிறக்காத குறை!

பொன்னைத் தொடாமல் போடுவது சபதம்
பூக்கள் எல்லாம் அழித்தாலும் தீராது விகாரம்

மனநோயா, மமதையா, பழைய வடுவில் வழியும் சீழா
ஆராய்ச்சி பண்ணுங்க, அதுக்குள்ள ஆயிடும் எல்லாமே பாழா!!!

madhuraikumaran
12-04-2003, 08:57 PM
"பூ"தகியும் வரலாறு(ம்) - உம் வார்த்தை விளையாட்டு அபாரம் இளையவரே.
ராம் குறியீட்டுக் கவிதை அருமை. இதற்கு நீர் விளக்கம் கொடுக்கத் தேவையிருக்காது என்றே எண்ணுகிறேன்.
கேள்விகள் மட்டுமே உண்டு இங்கே. விடை தெரியவில்லை.
இராணித்தேனியினால், நன்மைகளும் விளைந்தாலும் தீமைகளின் கணக்கே அதிகம் தெரிகிறது.
பூக்களும் இனி போர்வாளெடுக்க வேண்டும். இராணித்தேனியும் வேண்டாம். வாரிசு வண்டுகளும் வேண்டாம். புதிய பட்டாம் பூச்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்தப் பட்டாம் பூச்சிகளும் "அரிதாரம்" பூசாதவையாயிருத்தல் நலம்.

poo
13-04-2003, 01:08 PM
பூதகியின் வரலாறு சொன்ன அண்ணனுக்கு நன்றி. என் மனக்குமுறல் போலவே உள்ளதண்ணா...

aren
13-04-2003, 01:15 PM
இது தேனீயைப் பற்றியது இல்லை என்று மட்டும் தெரிகிறது. ஆனால் தோழி என்ற வார்த்தையைப் படித்தவுடன் இதன் உள் அர்த்தம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது.

இருந்தாலும் கவிதை அருமையாக வந்திருக்கிறது. பாராட்டுக்கள்.

kavitha
23-02-2004, 03:33 AM
இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
'பூனைக்கு யார் மணி கட்டுவது?'
அரிதாரமில்லா பட்டாம்பூச்சி ஏது?