PDA

View Full Version : தென்கச்சியாரின் கேள்வி - பதில்கள் (பாகம்-1)



kavitha
16-08-2004, 10:26 AM
தென்கச்சியாரின் கேள்வி - பதில்கள்

வணக்கம். வெகு நாளாய் தருவதாகச்சொல்லியிருந்த தென்கச்சி சுவாமி நாதன் அவர்களின் கலகலப்பான மற்றும் தகவல்களுடன் கூடிய கேள்வி - பதில் தொகுப்பு இதோ இங்கே தந்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துகளையும், இதுபோல் நிகழ்ந்த சம்பவங்களையும் நினைவு கூருங்கள். நன்றி!

தென்கச்சி சுவாமி நாதன்
தகவல்கள் கேட்டால்
உன்கட்சி என்கட்சி
ஊர்ச்சண்டை ஓயும்;
வன்கட்சி தலைசாய்த்து
வடலூரார் வகுத்தளித்த
மென்கட்சி சன்மார்க்கம்
மேலோங்கி நின்றிடுமே!

1. கால காலங்களுக்கும் அழியாதது எது? புகழா? நற்பண்புகளா?
காலம்தான் அழியாத ஒன்று! காலத்துக்கு உட்பட்ட எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு.
போற்றுகிறவரை புகழ்!
நடந்துகொள்கிறவரை நற்பண்புகள்!

2. மோஹமுத்கரம் என்ற பெயரில் வழக்கத்திலிருக்கும் நூலின் மற்றொரு பெயர் என்ன?
இயற்றியவர் யார்?
மோஹமுத்கரம்: உலகப்பற்றுகளை உடைக்கும் கோடரி. நூலின் பெயர்: பஜகோவிந்தம்,
இயற்றியவர்: ஆதி சங்கரர்.

3. தமிழில் தற்கால நூல்களில் அதிக விற்பனையானது கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' என்கிறார்களே..
உண்மைதானா?
டாக்டர்.மு. வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரை - அதிகம் விற்பனையான தமிழ் நூல் என்று கேள்விப்பட்டேன்.
வானதி திரு நாவுக்கரசு அவர்களை வானொலிக்காக ஒரு முறை பேட்டி கண்டேன்.
தாம் வெளியிட்ட நூல்களிலியே கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' தான் அதிகம் விற்பனையானது
என்று அவர் சொன்னார்.

4. வானொலியில் இதுவரை எத்தனை தகவல்கள் சொல்லியிருப்பீர்கள்?
(2002 வரை) ஏறத்தாழ இரண்டாயிரம்!

5. விஞ்ஞானத் துறையில் இந்தியா அமெரிக்காவிற்கு இணையாக வர வாய்ப்பு உண்டா?
இன்றைக்கும் வெளி நாடுகளில் சாதனை புரியும் பல விஞ்ஞானிகளை நெருங்கி, "உங்க சொந்த ஊர்
எது சார்?" ன்னு கேட்டா, "இந்தியா!"ன்னுதான் சொல்றாங்க! இருக்கவேண்டிய இடத்திலே அவங்க இருக்க முடியாத
ஒரு சூழ் நிலை.. இது ரொம்ப வேதனை!

6. வாழ்க்கையில் எதை உண்மையான வெற்றியாக நினைக்கிறீர்கள்?
படுத்தால் நிம்மதியாய் தூக்கம் வரவேண்டும். அது தான் வாழ்க்கையின் உண்மையான வெற்றி!

7. காதல் பற்றிச் சில வரிகள்...
ஒரு ஆங்கில ஆசிரியர் கிட்டே "அழகான சந்தோசமான வாழ்க்கை எது?"ன்னு கேட்டாங்களாம்.
அவரோட பதில்,
ஓர் ஆங்கில கிராமத்து வீடு
ஒரு ஜப்பானிய மனைவி!
ஒரு சீன சமையல்காரன்!
ஒரு பிரெஞ்சு சின்னவீடு!

8. நீங்கள் எப்போதும் சிரிக்க மாட்டீர்கள், கோபப்படமாட்டீர்கள் என்று என் நண்பன் கூறுகிறான்!
உண்மையாகவா?
தயவு பண்ணி அந்த நண்பரின் விலாசத்தை எனக்குக் கொடுக்கிறீர்களா? அவரைக்கொஞ்சம்
கவனிக்கவேண்டும். :oops:அவர் என்னை ஒரு 'ஜடம்' என்று நாசூக்காக உங்களிடம் கூறியிருக்கிறார்!

9. இதுவரை சொல்லாத நகைச்சுவை ஒன்று சொல்லுங்களேன்


10. பெண்கள் எதற்கெடுத்தாலும் கண்ணீர் வடிப்பது ஏன்?
அதற்கான காரணம் வீட்டுக்கு வீடு மாறுபடும்.. உங்கள் வீட்டு நிலவரத்தை என்னால் யூகிக்க
முடியவில்லை! இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய நண்பர் வெ. இறையன்பு சொன்ன பழமொழி
ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. அவர் சொன்னது:
"பெண்களால்தான் ஆண்களுக்கு நிம்மதி கிடைக்கிறது! பெண்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு
நிம்மதியே தேவைப்பட்டிருக்காது!"
(இறையன்பு சார், இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய இல்லற இடைஞ்சல்களிலிருந்து தப்பித்துக்
கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு! :lol

11. நடிக்கிறவர்கள் நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்களே..!
நடிப்பு என்பதே ஓர் ஏமாற்று வேலைதானே! உண்மையைப்போல் தோன்றுகிற ஒரு பொய் அது! எனவே
நடிக்கிறர்வர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால் அதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

12. உண்மை பேச ஒரு யோசனை சொல்லுங்களேன்..
அது ஒன்றும் பெரிய காரியமில்லை! இப்போது நாம் என்ன பேசுகிறோமோ அதை அப்படியே
நேர்மாறாகப் பேசிப் பழகிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்! இந்தக்காலத்து இளைஞன்
ஒருவன் அரிச்சந்திரன் நாடகம் பார்த்து விட்டு வந்தானாம்.
"அதிலிருந்து என்ன தெரிந்து கொண்டாய் மகனே?" என்று அப்பா கேட்டிருக்கிறார்.
"ஆரம்பத்திலேயே ஒரு பொய் சொல்லியிருந்தால் அவஸ்தையில்லாமல் போயிருக்கும்! என்றானாம்
அந்தப்பையன்.
இன்றைக்கு உண்மைக்கு இருக்கிற மரியாதை இவ்வளவுதான்.

13. தமிழகத்தில் இலக்கியவாசனை குறைந்து போனதற்கு என்ன காரணம்?
அரசியல் வாசனை அதிகமாகப் போனதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

14. ஒரு மனிதன் எப்படி எல்லாம் இருக்கக்கூடாது?
எப்படி இருக்கக்கூடாதோ அப்படிப்பட்ட ஒரு மனிதன் ஒருவனைப் பார்த்துக்கேட்டார் ஒருத்தர்.
" கடவுள் நம்முடைய பாவங்களை மன்னிக்கணும்னா நாம என்ன செய்யணும்? "
இதற்கு அவன் பதில்: " முதல்லே பாவங்களைச் செய்யணும்.. அப்பத்தானே அவராலே மன்னிக்கமுடியும்!!!"

15. நெறிமுறைகளோடு இப்படித்தான் வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இருக்கும் சிலர்,
வாழ்க்கையில் போராட்டங்களையும் எதிர் நீச்சலையும் தொடர்ந்து சந்தித்தாலும் தங்களுடைய நேரான
பாதையில் இருந்து சிறிதும் மாறாமல் அவர்களால் இப்படி இருக்கமுடிகிறது?
பழக்கவழக்கங்கள் ஒட்டியிருப்பவை! சுபாவங்கள்... ஊறிப்போனவை! ஒட்டியிருப்பவற்றை உதறிவிடலாம்!
ஊறிப்போனவற்றை உதறமுடியாது!
ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீர்களே..
தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு தேளை ஒருவர் காப்பாற்ற எண்ணி கையில் எடுக்க, அது அவரை
கையில் கொட்டிவிட்டு துள்ளி மறுபடி தண்ணீரில் விழுந்தது, மறுபடியும் அவர் முயன்றார்.. மறுபடியும் அது
அவ்வாறே கொட்டியது.. இதைக்கண்ட வழிப்போக்கன்,
"ஏங்க... தேள்கொட்டுங்கறது உங்களுக்குத்தெரியாதா? அதுதான் திரும்ப திரும்ப உங்களைக்கொட்டிப்புட்டுத்
தண்ணியிலே விழுதே.. அதைப்போய் மறுபடியும் மறுபடியும் காப்பாத்தணும்னு நினைக்கிறீங்களே..?"
இப்போது அந்தப் பெரியவர் சொல்கிறார்:
"கொட்டுவது என்பது தேளின் சுபாவம், காப்பாற்றுவது என்பது மனித சுபாவம்!
அது தன் கொள்கைப்பிடிப்போடு இருக்கும்போது நான் என் கொள்கைப்பிடிப்போடு இருக்கக்கூடாதா?"

16. உண்மை எப்போது ஊமையாகிறது?
தண்ணீரில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தான் ஒருவன்.
வழியே சென்ற ஒருத்தர் இதைப் பார்த்தார். மயங்கிப்போன அவனைத் தூக்கிக் கரையில் போட்டார். மயக்கம் தெளிந்தது.
"என்னைக் காப்பாற்றியது நீங்கள் தானே!"
"ஆமாம்!" என்று உண்மையைச் சொன்னார்.
"அப்படியானால் என் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லையே...!" என்றான்.
உண்மை ஊமையாகிப்போனது.

17. யாருடைய அன்புக்குக் கட்டுப்படலாம்?
உண்மையான அன்பு யாரையும் கட்டுப்பட வைத்துவிடும்! அது "யாருடைய அன்பு" என்பது
முக்கியம் இல்லை.

18. லஞ்சம் - மாமூல் இரண்டும் ஒன்றா?
இந்தக் காலத்திலே இது கூடத்தெரியாமே.. என்ன சார் நீங்க..
ஒரு தடவை கொடுப்பது லஞ்சம்! ஒவ்வொரு தடவையும் கொடுப்பது மாமூல்.

19. மந்திரிகள் இல்லாமல் மக்கள் உயிர் வாழ முடியாதா?
உங்கள் கேள்வியில் மந்திரிகளும் மக்களும் இடம் மாறியிருக்கிறார்கள்.

20. ஒருவன் தலை நிமிர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்?
வீட்டு வாசற்படிகளை உயரமாக்கிக் கொள்ளவேண்டும். :lol:

21. ஒரு மனிதனின் முன்னேற்றம் தடைப்படுவதற்கு எது காரணம்?
பக்தன் ஒருவன் கடும்தவம் புரிந்தான். கடவுள் அவன் முன்னால் வந்து நின்றார்.
"உனக்கு என்ன வரம் வேண்டுமோ, கேள்!" என்றார்.
"என் சுயமுன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சக்திகளை உன் கையில் இருக்கும்
கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தவேண்டும். அவ்வளவு தான்!" என்றான் பக்தன்.
"அப்படியே செய்கிறேன்" என்றார் கடவுள்.
கொஞ்ச நேரத்தில் கடவுள் கையிலிருந்து ஆயுதம் பக்தனின் மார்பையே வந்து தாக்க
ஆரம்பித்தது... பதறிப்போனான் பக்தன்.
"என்ன பகவானே! என் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிற பகைவனையல்லவா தாக்கச்
சொன்னேன்.. ஏதாவது குறி தவறிப்போச்சா? "
கடவுளின் பதில்:
"பக்தா! நீ கேட்டபடிதான் ஆயுதத்தை வீசினேன். இன்னொருத்தனைத் தாக்க வேண்டும். அழிக்க
வேண்டும் - வீழ்த்தவேண்டும் என்று நினைக்கிற உனது மனம் தான் உனக்குப் பகைவன்.. எதிரி..
எல்லாம்! அதனால் தான் ஆயுதம் உன்னையே வந்து தாக்குகிறது.

22. வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?
முன்னேறத்துடிக்கிற இளைஞர்கள் முன்னேறி விடுவார்கள். அவர்களுக்கு அறிவுரைத் தேவை இல்லை.
முன்னேற மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறவர்களுக்குத்தான் அறிவுரை தேவை! ஆனால் அறிவுரையை
ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்! இதுதான் இடைஞ்சல்!

23. மன நிம்மதிக்கு என்ன வழி?
மனம் அறிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவரையில் அது நிம்மதியாக இருக்க முடியும்! ஆசைப்படுவது
மனம்! ஆசைப்படுவது தவறு என்று உணர்த்துவது அறிவு!

24. அறிவாளி எப்போது முட்டாளாகிறான்? முட்டாள் எப்போது அறிவாளி ஆகிறான்?
அறிவாளி தன்னை அறிவாளி என்று நினைக்கிறபோதெல்லாம் முட்டாள் ஆகிறான்!
முட்டாள் தன்னை முட்டள் என்று உணர்கிறபோதெல்லாம் அறிவாளி ஆகிறான்.

25. இன்றைய சராசரி மனிதன் ஒருவனுக்கு எந்த அளவு 'பொறுமை' தேவைப்படுகிறது?
பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போதே.. பிறக்கப் போகிற பிள்ளைக்குப் பள்ளியில் இடம்
'ரிசர்வ்' செய்து வைக்கிற அளவிற்கு..!

பரஞ்சோதி
16-08-2004, 11:30 AM
சகோதரி, அருமையான தொகுப்பு.

வாழ்த்துகள், தென்கச்சியாரின் ஒவ்வொரு பதிலும் அருமை. பாராட்டுகள்.

பரஞ்சோதி
16-08-2004, 11:34 AM
சகோதரி என் நண்பர் சிறந்த நரகம் எது என்று சொல்வது:-

ஓர் ஆங்கில மனைவி
ஒரு ஜப்பானிய கிராமத்து வீடு
ஒரு சீன சின்ன வீடு
ஒரு பிரெஞ்சு சமையல் காரன்

இளசு
16-08-2004, 11:23 PM
நன்றி கவீ..

சுபாவம்..
முன்னேற்றத்துக்குத் தடையான மனோபாவம்..

முன்னேற்றத்துக்கான அறிவுரை..
சிந்திக்கவைத்தன..

ஆணின் நிம்மதி, தலைநிமிர்ந்து நடப்பது..
சிரிக்கவும் வைத்தன..

தென்கச்சியார் பற்றி சீரங்கத்துக்காரர் பாட்டு மெத்தப் பொருத்தம்..

mythili
17-08-2004, 04:49 AM
தென்கச்சி சுவாமி நாதன் அவர்களின் நகைச்சுவையைத் தொடர்ந்து அவரின் கேள்வி பதிகள் தொகுப்பு அருமை கவி.

நேற்று பதித்து உள்ளாய். ஆனால் நான் இன்று தான் பார்த்தேன்.
தொடர்ந்து பதி கவி.

அன்புடன்,
மைதிலி

பரஞ்சோதி
17-08-2004, 03:22 PM
மைதிலியை தொடர்ந்து கவியிடம் தொடர்ந்து பதிக்க வேண்டுவது, பரம்ஸ்...

பாரதி
17-08-2004, 05:29 PM
நல்ல தொகுப்பு கவி. கேள்வி 9-க்கு பதில் இல்லாதது என்பதுதானா...?

kavitha
18-08-2004, 10:58 AM
இல்லை பாரதி.. அதற்கு ஒரு அருமையான நகைச்சுவை உள்ளது. நான் தான் பதிக்க மறந்துவிட்டேன்.. நாளைத்தருகிறேன்.


மைதிலியை தொடர்ந்து கவியிடம் தொடர்ந்து பதிக்க வேண்டுவது, பரம்ஸ்...
இது தொடர் பதிவு தான் அண்ணா.. உங்கள் விருப்பப்படி தொடரும்.:)

kavitha
24-08-2004, 11:42 AM
9. ஒரு நாள் அதிகாலை நேரம் தூங்கிக்கொண்டிருந்த தன் மகனைப் படுக்கையிலிருந்து எழுப்பினார் அந்த அம்மா.
"எழுந்திரு மகனே! பள்ளிக்கூடம் போக நேரமாச்சு"
முக்கல் முனகலோடு லேசாக கண்திறந்தான் மகன்:
"ம்... எனக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலே....!"
அம்மா: "சரி... ஏன் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கலே? ரெண்டு காரணம் சொல்லு"
மகன்: "அதுவா..... பசங்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை!
வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கவில்லை!
போதுமா!"
அம்மா: "அதெல்லாம் ஒண்ணுமில்லே... எழுந்திரு.. பள்ளிக்கு டயம் ஆச்சு"
மகன்: "சரி. பள்ளிக்கு நான் ஏன் போகணும்ங்கறதுக்கு நீங்க ரெண்டு காரணம் சொல்லுங்க"
அம்மா: " காரணமா! ஒண்ணு.. உனக்கு 52 வயசு ஆச்சு!
ரெண்டு... நீ அந்தப் பள்ளிக்கு பிரின்ஸிபால்!"

க.கமெண்ட்: எனக்கு என் மாணவர்களிடமும் எனது வாத்தியாரிடமும் கேள்வி கேட்பது ரொம்ப பிடிக்கும்.

26. சிரிப்பு என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் கதை.. ஜோக்...?
அண்மையில் ஆனந்த விகடனில் கிரேசி மோகன் அவர்களின் கட்டுரை படித்தேன்.
எதையும் அளவுக்கு மீறி தளர்த்தியாகத் தைத்துவிடும் டெய்லர் ஒருவர். அவரிடம் ஒருவர் 'பேண்ட்' தைத்து
வாங்கிப் போட்டுக் கொள்கிறார். அது எந்த அளவிற்கு லூசாக இருக்கிறது தெரியுமா?
உட்கார்ந்திருக்கிற அவர் எழுந்து நிற்கிறார். ஆனால் 'பேண்ட்' நாற்காலியிலேயே இருக்கிறதாம்! என்ன ஒரு
கற்பனை! :lol: :lol:
' நம்ம ஊர் நரசிம்மராவ்' என்று நண்பர்களிடம் பெயர் வாங்கிய என்னையே வாய் விட்டுச் சிரிக்க வைக்க
கிரேசி மோகனால் மட்டுமே முடியும்!
க.கமெண்ட்: அதனால் தான் வேட்டியிலேயே உலா வருகிறாரா? :lol:

28. கவலையே இல்லாத மனிதன் இருக்கிறானா? இருந்தால் அவனது முகவரி சொல்லவும்.
இருக்கிறான்! அவன் முகவரி இல்லாத மனிதன். அவனுடைய முகவரி தெரிய ஆரம்பித்தால் கவலையும் ஆரம்பம்
என்று அர்த்தம்! எனவே - கவலை இல்லாமல் வாழ நினைக்கிறவர்கள் முகவரி இல்லாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

29. மனம் அடிமையாவது எப்போது?
அறிவு மேலோங்கும் போது மனம் அடிமையாகிறது. அறிவுக்கு மனம் அடிமையாகிவிட்டால் அறிவு சொல்கிறபடி
மனம் கேட்க ஆரம்பித்து விட்டால்... அதுதான் வாழ்வின் மிகப்பெரிய வெற்றி.

30. மனைவியை அடக்குவது எப்படி?
இந்தக்காலத்தில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறதுக்கு உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்! ஒன்று செய்யுங்கள்.
இந்த இதழை உங்கள் மனைவி கண்ணில் படும்படி வையுங்கள். உங்க கேள்வியை அவங்க படிக்கட்டும். அப்புறம் இப்படியெல்லாம்
நீங்க கேக்க மாட்டீங்க!

31. இறை ஞானம் என்பது கல்வி அறிவின் மூலம் கிடைக்கிறதா அல்லது பட்டறிவின் மூலம் கிடைக்கிறதா?
எந்த ஞானமுமே நமக்கு இரண்டு வழிகளிலும் கிடைக்கும். ஆசிரியர் மூலமாகக் கிடைப்பது ஒருவழி.
அனுபவம் மூலமாகக் கிடைப்பது ஒருவழி! அனுபவம் ஓர் ஆசிரியர் தான். கொஞ்சம் வித்தியாசமான ஆசிரியர்.
அது பாடங்களைக் கற்றுத்தந்த பின் பரீட்சை வைப்பதில்லை. பரீட்சைகளின் மூலம் பாடங்களைக்
கற்றுத் தருகிறது.

32. அன்பு எல்லாவற்றையும் சாதிக்குமா?
அன்பு எதையும் சாதிக்கும் என்பதுதான் அதற்குள்ள மகத்துவமே! ஏனென்றால் அதைக் காசு கொடுத்து
வாங்க முடியாது!
கிரேக்க அறிஞர் ஒருத்தர் சொன்னார்: "பணத்தால் நாயை வாங்கலாம்; வாலாட்டுதலை வாங்க முடியாது!"

33. தற்போதுள்ள சூழ் நிலையில் தர்மம் தலைகாக்குமா?
தற்போதுள்ள சூழ் நிலையில்...தர்மம் தலை காப்பதில்லை. தலையைக் காப்பாற்றிக்கொள்ள
தர்மம் செய்யவேண்டியிருக்கிறது.

32. வாழ்க்கையில் பெண்களை என்னென்ன சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்ள முடிகிறது?
உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முயற்சியில் நான் தோல்வியடைந்து விட்டதாகவே எண்ணுகிறேன்.

35. நீங்கள் தோல்வி அடைந்து விட்டதாக எண்ணுவீர்களா?
ஒன்றை இழக்காமல் இன்னொன்றைப்பெற முடியாது. எனவே அப்படி எண்ணுவதில் தவறில்லை.
இன்னொருவர் வெற்றிக்கு நம்முடைய தோல்விதான் காரணம் என்கிறபோது... அதுவும் மகிழ்ச்சிக்குரிய விசயம்தான்.
என்ன சார்... என்னை ஒரு மாதிரியாப் பார்க்கிறீங்க..?

36. இந்தக் காலத்தில் நல்லவனாக மட்டுமல்ல.. கெட்டவனாகவும் நடந்துகொண்டால்தான்
நல்லவனாகப் பெயர் எடுக்கமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதே?
உங்களை மாதிரியே எனக்கும் இது கவலையாகத்தான் இருக்கிறது. என்ன பண்றது?
நல்லவர்கள் அதிகமாக இருந்த பூமிங்க இது..! பய்ஸாஷா.. அப்படின்னு ஒரு ஜைன வியாபாரி
இருந்தார். ஒருதடவை அகமதாபாத் போயிருந்தார். போன இடத்துலே அவருக்குத் திடீர்னு ஒரு
லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டுது. கடைத்தெருவுலே ஒரு வியாபாரிக்கிட்டே கேட்டார்.
"என்ன அடமானம் வைக்கிறீங்க?"ன்னார் அவர். உடனே பய்ஸாஷா தன் மீசையிலிருந்து
ஒரு முடியைப் பறிந்து எடுத்து அந்த வியாபாரிக்கிட்டே கொடுத்தார். அவருக்கு உடனே ஒரு லட்ச
ரூபாய் எடுத்துக்கொடுத்தார். அதே போல் அவரும் சொன்ன தேதியில அவருக்குத்திருப்பித்தந்து
தன்னுடைய மீசையைப்பெற்றுக் கொண்டார். இதை உங்களாலே நம்ப முடிகிறதா?
அன்றைக்கு அது உண்மைச் சம்பவம்! என்ன காரணம்? அந்த நாளிலே... பணத்துக்கு மதிப்புக்
குறைச்சல்! மனுஷனுக்கு மதிப்பு அதிகம்.

37. பரீட்சையில் எல்லோரும் சுலபமாக, குறுக்கு வழியில் தேறவேண்டும் என்று விரும்புகிறார்களே!
அப்படி விரும்பி முயற்சி செய்த பையன் சொன்னான்: "சார்! எனக்கு முன்பெஞ்சுலே
உக்கார்ந்து பரீட்சை எழுதினவனைப் பார்த்து.. அப்படியே வரிக்கு வரி காப்பியடிச்சு எழுதினேன்..
இருந்தாலும் அவன் பாசாயிட்டான்.. நான் ·பெயிலாயிட்டேன் :(!"
" அது எப்படி?"
" அப்புறம் தான் சார் தெரிஞ்சது. விஷயம்.. அவன் படிக்கிறது ஆறாவது.. நான் படிக்கிறது ஏழாவது!"

38. பல ஆண்கள் தங்கள் மனைவியின் மனசை அறிய முடியாமல் அவதிப்படுகிறார்களே!
அறியமுடியாமல் அவதிப்படுகிறவர்களும் உண்டு! அறியமுடிந்ததால் அவதிப்படுகிறவர்களும்
உண்டு.

39. இன்றைய இந்தியாவின் அவசரத் தேவை என்ன?
இந்தியர்களே!

40. இலக்கியம் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை என்கிறாரே கவிஞர் சுரதா?
உடையவரே அப்படிச் சொல்லுகிறார் என்றால் நாம் எப்படி அதை மறுக்க முடியும்!

41. நம் நாட்டில் அங்கிங்கெனதாபடி எங்கும் நிறைந்திருப்பது எது?
மக்கள் கூட்டம்தான்! வேறு என்ன? மக்கள் பெருக்கம்.. எங்கு பார்த்தாலும் க்யூ!
மனம் வெறுத்துப்போய் மலை உச்சிக்குப் போனான் ஒருத்தன் தற்கொலை செய்துகொள்ள...
அங்கே ஒரு குரல் "ஏன்யா! உனக்குக் கண்ணு தெரியலையா? எத்தனைபேர் வரிசையிலே
நிற்கிறோம்... வந்து பின்னாலே நில்லையா! " இன்றைக்கு இது ஜோக். நாளைக்கு..?

42. சிறப்பான வாழ்க்கை எது?
"வாழ்க்கையில் இரண்டு நோக்கங்கள் வேண்டும்" என்கிறார் ஸ்மித்...
"முதலாவது விரும்பியதைப் பெறுவது; இரண்டாவது, பெற்றதை அனுபவிப்பது.
மகாபுத்திசாலிகள் தாம் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள்!."

43. 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!' என்கிறார்களே!
உண்மைதான். ஒரு உண்மைச் சம்பவம் இது. ஓர் அலுவலகத் தலைவர் கடை நிலை
ஊழியரிடம் ஆத்திரத்தோடு கத்தினார்:
"உனக்கு எந்த முட்டாள் வேலைக் கொடுத்தான்?"
அந்த ஊழியர் அமைதியாகப் பதில் சொன்னார்: " நீங்க தான் சார்!"

44. (A) வாழ்க்கையில் வெற்றி-தோல்வி சகஜம் என்கிறார்களே..?
உண்மைதான். அதேவேளையில் 'எதுவெற்றி' 'எது தோல்வி' என்பதைப் புரிந்து
கொள்வதும் கடினம்...
பஸ் ஸ்டாண்டில் ஒருவரைப் பார்த்தேன். ஏற்கனவே ஒரு பஸ்ஸைப் பிடிக்க
முயன்று.. அதுமுடியாமல் போக... தோல்வியால் துவண்டு போயிருந்தார். கொஞ்ச நேரம்
காத்திருந்தார்.
அடுத்த பஸ் வந்தது. ஏறி உட்கார்ந்து கொண்டார்.
"முன்னாடி போன பஸ்லே எனக்கு இடம் கிடைக்காமே போனது என்னோட
அதிர்ஷ்டம்!" என்றார்.
"ஏன்?" என்று கேட்டேன்.
"அதுலே போயிருந்தா மூணு பஸ் மாறி வீட்டுக்குப்போய்ச் சேரணும். இதுலே
போனா நேரா வீட்டு வாசல்லேயே இறங்கிக்குவேன்!" என்றார்.
யோசித்துப்பாருங்கள். சற்று முன்னால் 'தோல்வி' என்று நினைத்த ஒன்று இப்போது
அவருக்கு 'வெற்றி' என்று தோன்றியது! இதைத்தான் தோல்வியின் இன்னொரு பக்கம் வெற்றி
என்கிறார்கள்.
க.கமெண்ட் : நமக்கு அப்படித்தானுங்க.. கிடைச்சா சந்தோசம்.. கிடைக்கலைனா டபுள் சந்தோசம்.

44.(B) எதில் சுகம்?
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சுகம்! எனக்கு எதில் தெரியுமா?
லேசாக மழை தூறிக்கொண்டிருக்க வேண்டும். பச்சை நிலக்கடலையைச் சுட்டுப் பக்கத்தில்
வைத்துக்கொள்ளவேண்டும். படிப்பதற்குக் கையில் ஓர் 'அம்புலிமாமா' வேண்டும் இன்றைக்கும்
எனக்கு இதில்தான் சுகம்
க.கமெண்ட்: அதையும் நம் அன்புக்குரியவர் மடியில் படுத்துக்கொண்டு படிக்கவேண்டும் :lol:

45. அலைந்து திரிந்து காதல் செய்வது ஆண்களா? பெண்களா?
உண்மைக்காதலுக்கு அலைவதும் திரிவதும் அவசியம் இல்லை! காதலுக்காக அலைய
வேண்டியதில்லை! காதலிக்காக அல்லது காதலனுக்காக வேண்டுமானால் அலையலாம். இன்றைக்கு
அதுதான் நடந்து கொண்டிருக்கிறது

46. கணவனை அடக்குவது எப்படி?
இப்படி யோசித்துக்கொண்டிருக்கிற பெண்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய ஒரு தகவல்.
அண்மையில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த கணக்கெடுப்பின்படி மனைவியிடம்
உதைவாங்குவோர் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறதாம்!
க.கமெண்ட்: அய்யோ பாவம் :( :lol:

47. தாங்கள் தியானம் செய்வதுண்டா?
உண்டு.. என் மனைவி என்னிடம் வீட்டுச் செலவிற்கு பணம் கேட்க வந்து எதிரில் நிற்கும்போது.

48. சிலர் தமிழை வளர்க்கிறோம் என்று மார்தட்டிக்கொள்கிறார்களே. அவர்களால் தமிழ் வளர்கிறதா?
இல்லை, அவர்கள் வளர்கிறார்களா?
உண்மையாகத் தமிழை வளர்க்கிறவர்கள் அதற்கு உரமாகிப் போய் விடுகிறார்கள்!
உரங்கள் மார்தட்டிக்கொள்வதில்லை!
க.கமெண்ட் : அதான் நம்ம ராசகுமாரன் அவர்களை அடிக்கடி காணமுடிவதில்லையா?

49. அன்பினால் எல்லாவற்றையும் சாதிக்க முடியுமா?
முடியும்... அதை உண்மையாக புரிந்து கொள்கிற மனிதர்கள் இருந்தால்...

50. நடிகன் ரசிகனுக்கு முகம் காட்ட மறுப்பது.. பத்திரிகை வாசகர்களுக்கு பதில் தர மறுப்பது ஏன்?
ரசிகனுக்காகத்தான் நடிகன்! வாசகனுக்காகத்தான் பத்திரி(க்?)கை அப்படியிருந்தும்
'மறுத்தார்கள்' என்றால் அவர்களுக்கு இருப்பது பொய் முகங்கள் என்பது பொருள்.
க.கமெண்ட்: அப்படியானால் பல புனைபெயர்களில் உலா வருவது....? (கவிதா எஸ்கேப்பாயிடு!)

(... கேள்விகள் இன்னும் கேட்கப்படும்)

இளந்தமிழ்ச்செல்வன்
24-08-2004, 05:30 PM
கவிதா மிக அற்புதமான வேலையை செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

என்ன எஸ்கேப் ஆகிற அவசரத்தில் இரண்டு முறை பதிந்தீரோ? 50-க்கு பிறகு மீண்டும் 9.

இளசு
25-08-2004, 04:34 AM
கவிதா
என்ன எஸ்கேப் ஆகிற அவசரத்தில் இரண்டு முறை பதிந்தீரோ? 50-க்கு பிறகு மீண்டும் 9.

இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது இதசெ.. நன்றி..

கவீ..
இந்த பாகமும் அருமை.

குறிப்பாய்
கவலை இல்லாத மனிதன் (28)
அடிமை மனம் (29)
சிறப்பான வாழ்க்கை (42)
வெற்றி தோல்வி (35& 44 -அ)
அன்பின் ஆற்றல் (49)

அப்புறம்...
அம்புலிமாமா படிக்கும் இடம் ( 44 -ஆ)
தமிழுக்கு உரம்..
க. கமெண்ட்டுகள் மிக இரசித்தேன்..

தென்கச்சி + தங்கச்சி கூட்டணி தொடரட்டும்..

மன்மதன்
25-08-2004, 08:35 AM
அனைத்து கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தது. பொறுமையாக இங்கே கொடுத்த கவிதாவுக்கு பாராட்டுக்கள்..

தென்கச்சியை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.. அவரின் கேள்வி பதிலை நன்றாகவே ரசித்தோம்..

அன்புடன்
மன்மதன்

kavitha
26-08-2004, 07:31 AM
இளந்தமிழ்ச்செல்வன் wrote:
கவிதா
என்ன எஸ்கேப் ஆகிற அவசரத்தில் இரண்டு முறை பதிந்தீரோ? 50-க்கு பிறகு மீண்டும் 9.

இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது இதசெ.. நன்றி..

நன்றி அண்ணா.

kavitha
26-08-2004, 07:31 AM
வாசித்து ரசித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்.

pgk53
26-08-2004, 03:17 PM
சகோதரி கவிதா அவர்களே.......அருமையான தொகுப்பு.நன்றி

kavitha
31-08-2004, 07:24 AM
நன்றி சகோதரரே.

kavitha
31-08-2004, 07:24 AM
51. எது உண்மையானது? எது பொய்யானது?
இந்த உடம்பை 'மெய்' என்கிறோம் - அது பொய்!
'இது நிரந்தரம் இல்லை' என்கிறோம் - அது உண்மை!

52. அறியாமை என்பது என்ன?
உண்மை நிலை புரியாமை தான் அறியாமை!
"ஒவ்வொருவனும் தன்னை அறிஞன் என்று எண்ணிக் கொள்கிறான்; அதனால்தான்
உலகில் இத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்!" என்கிறது ஒரு ஹங்கேரி பழமொழி.

53. நீங்கள் ஓர் இதழ் ஆரம்பித்தால் என்ன?
எனக்குப் பிடிக்காதவர்களிடம், நான் கூட இப்படிச் சொல்வதுண்டு. :lol:

54. ஒரு மனிதனை அடையாளப் படுத்துவது எது?
உண்ணவும் உறங்கவும் பிறந்தவை விலங்குகள்; எண்ணவும் இரங்கவும் பிறந்தவன்
மனிதன்" வாக்கு. இதை அளவுகோலாக வைத்து அடையாளம்
கண்டு கொள்ளுங்கள்.

55. மனிதன் யாருக்கு அதிகமாகப் பயப்படுகின்றான்?
மனிதன் தனக்குத்தான் அதிகமாய்ப் பயப்படுகிறான்.
"அச்சத்தில் இருந்து விடுபடாதவரை மனிதருக்குச் சுதந்திரம் கிடையாது" என்கிறார்
மாலன். (10.08.1995). நமக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?

56. அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள் எல்லோரும் லட்சக்கணக்கில் வருமானவரி
பாக்கி என்று பேப்பரில் பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. ஆனால் ஓர் ஏழை தன் வீட்டின் ஓலையைப் பிரித்துக் கட்ட
முடியாமல் இருந்தால்கூட அவனை வீட்டுவரி கட்ட வைத்து விடுகிறார்கள். உங்கள் கருத்து..?
இப்படி சிந்திக்கிறவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது என் கருத்து. அன்றைக்கே கொத்தமங்கலம் சுப்பு
இதை அழகாகப் பாடியிருக்கிறார்:

" சின்னவங்க தப்பு செஞ்சா ஜெயில்-லே போடுறாங்க..!
பெரியவங்க தப்பு செஞ்சா பேப்பர்-லே போடுறாங்க..!"

57. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம். பணக்காரனின் சிரிப்பில் யாரைக் காணலாம்?
ஏழையைக் காணலாம்.

58. மறுக்க முடியாததது எது? மறைக்க முடியாதது எது? மறக்க முடியாததது எது?
தயாராக இருங்கள்... உங்களைக் கொஞ்சம் குழப்பப் போகிறேன்.
மறக்க முடியாததை மறுக்க முடியாது! மறுக்க முடியாததை மறக்க முடியாது.
மறைக்க முடியாததை மறுக்க முடியாது!

59. ஜன நாயக தத்துவம் ஒன்று கூறுங்களேன்..?
பி.சி. கணேசன் அவர்கள் எழுதியிருந்த அரசியல் கட்டுரை ஒன்றைப் படித்தேன்.
'டேவிட் லோ' என்கிற புகழ்பெற்ற கார்ட்டூன் சித்திரக்காரர் ஜன நாயகத்துக்கு ஒரு
விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார்.
"பத்தை விட பதினொன்று பெரியது என்கிற எளிய கணக்குதான் ஜன நாயகம். பத்துப்
பணக்காரர்கள் செய்கிற முடிவை பதினோர் ஏழைகள் மாற்றிவிட முடியும். இது ஜன நாயகத்தின்
பலம்! பத்துப் புத்திசாலிகள் செய்கிற முடிவை பதினொரு முட்டாள்கள் மாற்றிவிட முடியும்.
இது ஜன நாயகத்தின் பலவீனம்!"
டேவிட் லோவின் இந்த ஜன நாயகக் கணிப்பை நம் அரசியல்வாதிகள் நன்றாகவே
புரிந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் பி.சி. கணேசன்.

"பதினோராவது முட்டள் புத்திசாலி ஆகிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்"
"பதினோராவது ஏழையைப் பணக்காரனுக்குச் சாதகமாக விலைக்கு வாங்கி விடுகிறார்கள்"

" தனி நபர் வழிபாட்டின் மூலம் பெரும்பான்மை மக்களை முட்டாள்களாக வைத்திருக்க
இவர்களால் முடிகிறது!"

60. வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த 'அதிர்ஷ்டம்' என்னவென்று சொல்லமுடியுமா?
இந்த வாழ்க்கையே ஒரு அதிர்ஷ்டம்தான். ஆனாலும் வாழ்க்கையில் ஏகப்பட்ட துரதிர்ஷ்டங்கள்..
அது வேறு விசயம். :roll:

61. ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும் உயிர்ப் பலியிடுதலில் எனக்கு உடன்பாடு இல்லை.
இதுபற்றித் தங்களுடைய கருத்து, என்னவோ?
ஆதியில் மனிதன் அச்சம் காரணமாகவே அந்தச் செயலை ஆரம்பித்தான்.
அதன் பிறகு சிந்திக்கத் தெரிந்த சில(?) பேர் இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளச் சில
மாற்று யோசனைகளைச் சொன்னார்கள். பலியிடுவதற்குப் பதில் தேங்காயை உடையுங்கள். எலுமிச்சம்
பழத்தை அறுத்து வீசுங்கள். பூசணிக்காயைப் போட்டு உடையுங்கள்.. என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
விளைவு..?
இப்போது அவன் அதையும் செய்கிறான்! இதையும் செய்கிறான்! இவனை என்ன செய்தால் தகும்!

62. அடிக்கடி குணங்களை மாற்றிக் கொண்டு வாழ்கிற சில 'ஓணான்' மனிதர்களைப் பற்றி..!
நாய் வாலை ஆட்டிப் பிழைக்கிறது! மனிதன் தலையை ஆட்டிப் பிழைக்கிறான்!
க.கமெண்ட்: கெட்ட குணங்களை மாற்றிக்கொள்வதில் தவறொன்றுமில்லையே!
'தலை' என்றதும் எனக்கு மாமி நியாபகம் தான் வருது... ஹி ஹி ஹி

63. எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாதது எது?
எவ்வளவு காசு கொடுத்தாலும் எதையுமே வாங்க முடியாது.. அந்தக் காசை
அடுத்த தேசத்தில் கொண்டு போய்க்கொடுத்தால்... :lol:

64. மனதில் கவலைகள்.. அல்லல்கள் அதிகம்... ஒரு வழி சொல்லுங்களேன்!
உங்களுக்குத் தேவை மன வலிமை!
மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனவலிமை
உள்ளவர்கள் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்

65. பலமுறை முயற்சி செய்தும் வாழ்க்கையில் முன்னேற முடியாதவர்களைப் பற்றித் தாங்கள்
சொல்ல விரும்புவது என்ன..?
பல்லி விழுந்தால் பலன் என்ன என்று பார்ப்பவர்கள் நாம்.
அந்தப் பல்லி என்ன செய்கிறது என்பதைப் பார்ப்பதில்லை.
சுவரில் இருக்கிற பல்லிஐக் கொஞ்சம் கவனியுங்கள்.
ஒரு பல்லி ஒரு பெரிய கட்டெறும்பைப் பிடிக்கிறது. அந்த எறும்பு நழுவிப் போய்விடாதபடி
அதன்மேலேயே கவனமாக இருக்கிறது.
அந்தச் சமயத்தில் இன்னொரு சிற்றெறும்பு மிகவும் அருகாகப் போய்க் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் பல்லி அதை லட்சியம் பண்ணவில்லை. மனத்தைச் சிதற விடுவதில்லை. எனவே வேண்டியதைப்
பெறுவதில் அது வெற்றிபெறுகிறது.

66. மனைவியை சந்தோசப்படுத்தும் சங்கதி எது?
ஒரு கணவன் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். வழியனுப்ப மனைவி வாசல்வரை வருகிறாள்.
கணவன்: " ஊருக்குப் போனதும் லெட்டர் போடுகிறேன்"
மனைவி: "லெட்டருக்கு என்னங்க அவசரம்.. முதல்ல மணியார்டர் அனுப்புங்க"
உங்கள் கேள்விக்கான பதில் இந்த உரையாடலுக்குள் இருக்கிறது.
க.கமெண்ட் : :oops: உங்கள் மனைவியைத் தன் சொந்தக் காலில் நிற்கச் சொல்லுங்கள். இந்த அளவிற்குச்
சார்ந்திருப்பதே அவர் வேதனைப் படவேண்டிய விசயம்.

67. உங்களுக்குப் பிடித்த பழமொழி எது?
"ஊறுகாயைப் பார்த்த உண்ணாவிரதக்காரன் மாதிரி..!" என்று ஒரு பழமொழி உண்டு.
இது எப்படி இருக்கும் என்று கற்பனையில் யோசித்து அடிக்கடி சிரிப்பது உண்டு.
க.கமெண்ட் : ஆனாலும் குறும்பு ஓவர் தாம் அய்யா உமக்கு!

68. நம் நாட்டில் மனசாட்சிப்படி நடப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என எண்ணுகிறீர்கள்?
முதலில் மனசாட்சி, உள்ளவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்கிறா கணக்கெடுப்பு முடியட்டும்!
அதற்குப் பிறகு, அதன்படி நடப்பவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள் என்கிற கணக்கெடுப்பை நாம் நடத்தலாம்.
க.கமெண்ட் : எல்லா சமயத்திலும் என்றால்... எண்ணிக்கை : 0

69. மனிதனுக்கு மரணபயம் எப்போது வருகிறது?
'உயிர் வாழ வேண்டும்' - என்று நினைக்கிறபோதெல்லாம் அவனுக்கு 'மரணபயம்' உண்டாகிறது.
மரணபயம் நீங்குகிற நேரத்தில் உயிர் வாழ்க்கையும் முடிந்து போய் விடுகிறது.

70. மனிதன் சிந்திக்க ஆரம்பிப்பது எப்போது?
விழுந்த பிறகுதான் எழுந்து வருவது எப்படி என்று சிந்திக்கிறான். அடிவாங்கிய பிறகுதான் 'வாங்காமல்
இருப்பது எப்படி" என்பது பற்றி யோசிக்கிறான்.
நீங்கள் கேள்வி கேட்டபிறகு தான் பதில் சொல்வது எப்படி என்று நான் யோசிக்கிறேன்.

71. இன்று ஒரு தகவல் - எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
தகவலை நான் எங்கே திருடுகிறேன் என்கிற விஷயம் சுலபமாக மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது
என்கிற அசட்டுத் தைரியத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.
க.கமெண்ட் : கன்னிமாரா?

72. விதி - மதி விளக்கம் தருக.
இதற்கு ஜன நாயக அடிப்படையில் விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.. ஓட்டுப் போடுவதற்கு முன் அந்த
'இரண்டாவது வார்த்தை' நம்மை எச்சரிக்க வேண்டியிருக்கிறது.
அது அப்படி செய்யத் தவறிவிடுவதால்.. ஓட்டுப் போட்டதற்குப் பிறகு நாம் அந்த 'முதல் வார்த்தை'யை
அடிக்கடி உச்சரிக்க வேண்டியிருக்கிறது!

73. சினிமா துறைக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில் பலபேர் வருகிறார்களே..?
சினிமா.. ஒரு வித்தியாசமான துறைதான்! வெளியே இருக்கிறவர்கள் எப்படி உள்ளே போவது என்று
தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே இருக்கிறவர்கள் எப்படி வெளியே வருவது என்று தவித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
க.கமெண்ட்: இன்றும் "கலக்கப்போவது யாரு?" -னு கலக்கிக்கிட்டு இருக்கறவங்களப்பார்த்தா அப்படித் தெரியலையே!

74. பேசப்பேச அலுப்பே வந்த போதும், பேச வேண்டும் என்பதற்கு என்ன செய்வீர்கள்?
பேசப்பேச அல்ல.. பேச வேண்டும் என்று சொன்னாலே எனக்கு அலுப்பு வந்துவிடும். ஒரு பழமொழி
உண்டு தெரியுமா?
"பிறர் உன்னைப் பார்க்க வேண்டுமானால் - எழுந்து நில்!
கேட்கவேண்டுமானால் - பேசு!
பாராட்ட வேண்டுமானால் - வாயை மூடு!"


75. ஆணைவிடப் பெண் தான் புத்திசாலி என்கிறேன் நான். சந்தேகம் இருந்தால்
'தி வெல் ஆ·ப் செயிந்த் கீன்' என்ற ஆங்கிலப் பாடலைப் படிக்கவும். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
அந்த ஆங்கிலப் பாடலைத் தேடிப்பிடிக்க எனக்கு நேரம் இல்லை. எனவே
அதற்குப் பதிலாக எங்கள் வீட்டில் பேசிப் பார்த்தேன். அவர்களும் நீங்கள் சொல்வது
தான் சரி என்கிறார்கள் .... ஹி!
க.கமெண்ட்: தற்பெருமை கூடாதுன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க.. அதனால.. டாட்டா...

(...தொடரும்)

பாரதி
31-08-2004, 02:17 PM
வர வர உங்கள் பதிவு எல்லாவற்றையும் கணினியில் சேமிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுவேன் என்று எண்ணுகிறேன். மிக்க நன்றி.

இக்பால்
31-08-2004, 05:12 PM
தங்கையின் பதிவுகள் எல்லாம் ஒரே மூச்சில் படித்து...
கண்களில் பொறி பறக்கிறது. (கோபம் என நினைத்து விட வேண்டாம்).

சிந்தித்து மூளைப் பகுதி சிறிது சூட்டை உணர்கிறது.
கொலஸ்ட்ரல் விளைவோ?

நன்றி தங்கச்சி.(ஆஹா...அது யாரு? மைதிலி தங்கையா?
இருங்க தங்கச்சி...உங்கள் பதிவுகளுக்கும் போகிறேன்.)

அன்புடன் அண்ணா.

பரஞ்சோதி
31-08-2004, 06:07 PM
அருமையான தொகுப்பு சகோதரி.

அத்துடன் க.கமெண்ட் கலக்கல்.

இதுக்கு மேலே என்னுடைய கமெண்ட் தேவையில்லை.



71. இன்று ஒரு தகவல் - எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
தகவலை நான் எங்கே திருடுகிறேன் என்கிற விஷயம் சுலபமாக மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது
என்கிற அசட்டுத் தைரியத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.
க.கமெண்ட் : கன்னிமாரா?

ஒருமுறை ஒரு துணுக்கு எழுத்தாளர் சொன்னது நினைவுக்கு வருது. ஒருவேளை அவர் தான் தென்கச்சியா என்று தெரியவில்லை.

ரொம்பவும் சிரமப்பட்டு புத்தகங்கள் பல படித்து, அதில் இருந்து நல்ல நல்ல துணுக்குகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருக்கிறார். அவற்றில் ஒன்று கூட பதிவாகவில்லையாம், குப்பை தொட்டிக்கே சென்று விட்டது.

இறுதியாக மனசை திடப்படுத்தி(மனைவியின் திட்டு தாங்க முடியாமல்), ஆஸ்திரேலியா கங்காரு மல்லாக்க படுக்காது என்று டுபாக்கூர் துணுக்கு எழுத, அது உண்மையா, பொய்யா என்று கூட சிந்திக்காமல் உடனே பத்திரிக்கையில் பிரசுமாகி, வீட்டிற்கு 10 ரூபாய் மணியார்டர் கூட வந்ததாம். (அதில் 2 ரூபாய் தபால் காரருக்கு போனது தனிக்கதை).

அதிலிருந்து இஷ்டத்திற்கு துணுக்குகள் எழுதி அதிலேயே சாதனை செய்துவிட்டார் அவர்.

அவரது பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அறிஞர்
01-09-2004, 03:36 AM
அருமையான பதிவு.. கவி.... இன்னும் கொடுங்கள்.. பிறகு விளக்கமாக எழுதுகிறேன்

இளசு
01-09-2004, 05:17 AM
ஜனநாயகத்தின் பலம்/பலவீனம்
மறக்க/மறுக்க/ மறைக்க - விசுத்துவம்
ஓணான் மனிதர்கள்..

நிலையில்லை என்பது மட்டுமே நிலையான உண்மை..

அறியாமை, சுதந்தரம்..

பல கருத்துகள் இத்தொகுப்பில் அருமை..

க.க - தூவலால் ருசி இன்னும் கூடுதல்..
(கடைசி கமெண்ட்டை ஒத்துக்கவேண்டியதுதான்...)

பரம்ஸின் கூடுதல் தகவலில் கற்றுக்கொள்ளவேண்டிய சேதி உள்ளது..
கவீயின் இவ்வெற்றித் தொகுப்பு.. தொடரட்டும்.. வாழ்த்துகள்..

kavitha
16-09-2004, 03:20 AM
அனைவருக்கும் நன்றிகளுடன்...

(தொடர்ச்சி..)

76. அன்பு, பாசம், காதல் இவற்றை ஒருமனிதன் யார் யாரிடம் பெறுகிறான்?
பெறுவது என்பது தருவதைப் பொறுத்து அமைவது. எனவே அவற்றை
யார் யாருக்குத் தருகிறானோ அவர்களிடமிருந்தே அவற்றைப் பெறுகிறான்.

77. உண்மையின் முகவரி எது?
உடனடியாக அதை உங்களுக்குத் தெரிவிக்க முடியாத நிலையில்
இருக்கிறேன். தொலைந்து போன விசயங்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க
வேண்டியிருக்கிறது.

78. எதை விளம்பரப்படுத்தக் கூடாது?
கொடுத்ததை விளம்பரப் படுத்தக்கூடாது. தானம் செய்கிறவர்கள் தானம் செய்தோம் என்கிற எண்ணத்தையும் தானம் செய்துவிட வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

79. நம்மால் யோக்கியர்களைத் தேர்ந்தெடுக்கவே முடியவில்லையே...!
நாம் இன்னும் யோக்கியர்களாக மாறவில்லை என்பது பொருள்.
க.கமெண்ட்: நம்மையே நாம் பிரதிபலிக்கிறோம் - யாரோ.

80. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை! வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை.. என்று ஒருவர் பாடினாரே.. அதற்கு என்ன அர்த்தம்?
புத்திசாலித்தனத்துக்கும் வெற்றிக்கும் எப்போதுமே சம்பந்தம் இருந்து
விடுவதில்லை என்று அர்த்தம்.
க. கமெண்ட்: உழைப்பின் பலன் வெற்றி. புத்தியின் பலன் தீர்வு.

81. அறிவு அதிகமாகும் போது பணிவு குறைவது ஏன்?
உண்மையில் அறிவு அதிகமாகும்போதும் பணிவு குறைவதில்லை. அகந்தை
அதிகமாகும் போதுதான் பணிவு குறைகிறது.
க.கமெண்ட்: வல்லவனுக்கும் வல்லவன் உலகினில் எப்போதும் உண்டு. புல்லினும் புள்ளியாய் இருத்தலே நன்று.

82. இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறீர்களா? தமிழன் என்பதில் பெருமைப்படுகிறீர்களா?
தமிழன் என்று சொல்லும்போது தலை நிமிர்கிறது. இந்தியன் என்று சொல்லும்போது
இதயம் விசாலமாகிறது.
க.கமெண்ட்: மனிதன் என்று சொல்லும்போது தேசம் விசாலமாகும்.
தானும் ஒரு உயிர் என்று சொல்லும்போது நேசம் விசாலமாகும்.

83. எதிர்பாராது யாரையாவது பார்த்து சந்தோசப்பட்டிருக்கிறீர்களா?
சென்னையில் அவ்வப்போது அது நிகழும். பஸ் ஸ்டாப்பில் நாம் எதிர்பார்க்கிற
பஸ் வந்து விடுவது... கோடையில் குடி நீர்க் குழாயில் தண்ணீர் விடுவது இப்படி!
க.கமெண்ட்: நேற்று கூட மழை வந்து சந்தோசப்படுத்தியது.

84. விநாயகர் பால் அருந்துகிறார் என்று சொன்னபோது என்ன நினைத்தீர்கள்?
அன்றைக்கு நாம் விநாயகராக இருந்திருக்கக் கூடாதா என்று நினைத்தேன்.
க.கமெண்ட்: பால் கேட்கும் விநாயகர் மழையும் கேட்டால் நன்றாக இருக்கும்.

85. மனிதன் இறப்பைத் தேடுவது வீரமா? விவேகமா?
தானாக வருகிற ஒன்றை நாமாகத் தேடிக் கொண்டிருப்பதில் வீரமும் இல்லை.
விவேகமும் இல்லை.

86. நம் நாட்டைக் காப்பாற்றுவது யார் கையில் இருக்கிறது?
' நம் நாட்டை' என்று ஆரம்பித்து விட்டு யார் கையில் இருக்கிறது' என்று
பரிதாபமாக முடித்திருக்கிறீர்களே.. உங்களை என்ன செய்தால் தகும்?
க.கமெண்ட்: நாட்டில் பெரும்பான்மையோர் இப்படித்தான் அறியாமையில் இருக்கிறார்கள்.

87. ஒரு மனிதனை அடையாளப் படுத்துவது எது?
அவனுக்கு சிரிக்கத் தெரியும்.. நடக்கத் தெரியும்.. நடிக்கவும் தெரியும்.
க.கமெண்ட்: உலகமே நாடக மேடை - சாக்ரடீஸ்

88. கவலைப்படாதவர்கள் உலகில் உண்டா?
மன நோயாளிகள் கவலைப் படுவதில்லை. நாம், ராஜா ஆக வேண்டும் என்று
கவலைப் படுகிறோம். அவர்கள் ஆகிவிட்டதாகவே எண்ணி அதன்படி நடந்து கொள்ள
ஆரம்பிக்கிறார்கள். ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? மன நோயாளிகளுக்கு இதய
நோய் வருவதில்லை.
க.கமெண்ட்: ?????????!!!!!!!!!!

89. நல்ல நண்பனை அடையாளம் கண்டு கொள்வது எப்படி?
கடன் கேளுங்கள். உடனே கொடுத்து விடுகிறவன் நல்ல நண்பன் இல்லை.
ஏன்.. எதற்கு.. என்று கேட்டுவிட்டுக் கொடுக்கிறவனே நல்ல நண்பன்.

90. நான் கதை ஆசிரியனாக தமிழ் எழுத்தாளனாகத் துடிக்கிறேன். தங்களுடைய
பதிலைக் காண விரும்புகிறேன்.
உங்களின் அந்தத் துடிப்பே உங்களுக்குத் தோள் கொடுக்கும். சுற்றி
நடப்பவற்றைக் கவனியுங்கள். அதை நீங்கள் உணர்ந்தபடி சொல்ல முயலுங்கள்.
வெற்றி நிச்சயம்!

91. சில பெண்கள் தனிமையில் வீட்டில் இருக்கும்போது தங்கள் கணவனைப் படாதபாடு
படுத்துவார்கள். ஆனால் வெளியில், பிறர் முன்னிலையில் பயந்தவர்கள் போல அடக்க
ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள். அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நமக்குள் நடப்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டாமே என்று நினைக்கிற
அவர்களின் பெருந்தன்மை பாராட்டுக்கு உரியது; போற்றுதற்கு உரியது!
க.கமெண்ட் : ஹி ஹி ஹி

92. தாங்கள் விரும்பிப் படிக்கும் ஆங்கிலப் புத்தகம் எது? ஏன்?
தற்சமயம் நான் விரும்பிப் படித்துக் கொண்டிருக்கிற ஆங்கிலப் புத்தகம் இது:
Thirukkural with english couplets. ஆமாம். உலகப் பொதுமறையில் ஆங்கில
மொழி பெயர்ப்பு தான் இது.
திருக்குறளை ஆங்கிலத்தில் படிப்பதில் அப்படி என்ன ஆவல்.. என்று
தோன்றுகிறதா உங்களுக்கு? படித்துப் பாருங்கள், தெரியும்!
யோகி சுத்தானந்த பாரதியின் மொழிபெயர்ப்பை, தமிழ்ச் சான்றோர் பேரவை
வெளியிட்டிருக்கிறது. அடடா! என்ன அழகு! எடுத்துக்காட்டாக இரண்டைக்
குறிப்பிடுகிறேன்; பாருங்கள்.

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு."

- 396. As deep you dig the Sand spring flows. As deep you learn
the knowledge grows.

"உடம்பொடு உயிரிடைஎன்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"

- 1123. Love between me and this lady is
like beyond between soul and body.

இப்படியே ஒவ்வொன்றும்!

93. உங்களுக்குப் பிடித்த பழமொழி எது?
"தைரியம் என்றால் உங்கள் இருதயம் நடுங்கக்கூடாது என்பது பொருள் அல்ல;
நடுங்குவது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது; அவ்வளவே!" - செஸ்டர்ன்
க.கமெண்ட்: 'குருதிப்புனலி'ல் நாசரின் கண்களைப்பார்த்து கமல் இந்த வசனத்தைச் சொல்லுவார்.

94. ஒருவன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?
ஆபிரகாம் லிங்கன் ஒரு தடவை ஒரு குறிப்பிட்ட படைப்பிரிவை இன்னோர் இடத்துக்கு
மாற்றும் உத்தரவில் கையெழுத்துப் போட்டார்.
உத்தரவைப் பார்த்தார் போர்த்துறைச் செயலர் ஸ்டான்டன்.
அவருக்கு இது சரியாகப் படவில்லை.
ஜனாதிபதியின் ஆணையை நிறைவேற்ற மறுத்தார். அது மட்டுமல்ல.
'லிங்கன் ஒரு முட்டாள்' என்றும் சொல்லி விட்டார். ஆபிரகாம் லிங்கன் இதைக்
கேள்விப் பட்டார். அவர் கோபப் படவில்லை. "ஸ்டாண்டன் அப்படிச் சொன்னார் என்றால்
அது சரியாகத்தான் இருக்கும்!" என்றார். இவரே நேரில் சென்று அவரைச் சந்தித்தார்.
ஸ்டான்டன் தவறை விளக்கினார். லிங்கன் தம் ஆணையை விலக்கிக் கொண்டார்.
முழு மனிதனை அடையாளம் தெரிகிறதா உங்களுக்கு?
க.கமெண்ட்: முழுமனிதனை அடையாளம் தெரியுதோ இல்லையோ.. தப்பு பண்ணினா ஒத்துக்கணும்னு
நல்லா தெரியுது.

95. தீண்டாமை என்னும் பேய் விரைவில் ஒழியுமா?
இந்தக் கேள்வி நீண்ட நெடுங்காலமாக எல்லோராலும் கேட்கப்பட்டு வருகிற
கேள்வி. இதற்குச் சரியான பதில் ஒன்றைச் சொல்கிறேன். அதைக் கேட்டு விட்டு.. என்ன இது
கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது. என்ன
சரியா...? பதில் இதுதான் :
அரசியல் வாதிகளில் இரண்டே வகையினர் தான் உண்டு. ஒன்று - மோசமானவர்கள்.
மற்றொன்று மிக மோசமானவர்கள்.
க.கமெண்ட் : மன்ற மக்களே.. ஏதேனும் புரிந்தால் சொல்லுங்கள்.. ப்ளீஸ்...

96. ஒரு மனிதன் ஒரு துறையில் சிறப்புற்று விளங்க மிகவும் முக்கியமானது விடாமுயற்சியா?
தன்னம்பிக்கையா? கடின உழைப்பா! இறை நம்பிக்கையா?
தன்னம்பிக்கை தான் மிகவும் முக்கியம். அது இருந்தால் மற்றதெல்லாம் தானாக
வந்து சேரும்! காசி நகர் வீதியிலே விவேகானந்தர் நடந்து போய்க்
கொண்டிருக்கிறார். சில குரங்குகள் அவரைத் துரத்துகின்றன. இவர் ஓட ஆரம்பிக்கிறார்.
அவை மேலும் துரத்துகின்றன. எதிரே வந்த ஒருவர் "ஏன் ஓடுகிறாய்? எதிர்த்து நில்" என்று
குரல் கொடுக்கிறார். விவேகானந்தர் திரும்பி நிற்கிறார். துரத்தி வந்த குரங்குகள் மெல்லப்
பின்வாங்கி ஓடி மறைகின்றன.
க.கமெண்ட் : குரங்குகளுக்கு இது சரிபட்டு வரும். நாய்களுக்கு :?:

97. நீங்கள் நினைத்தும் நடக்காத காரியம் எது?
மறுபடியும் சிறுவனாகி எங்கள் ஊர் கொள்ளிட ஆற்றில் குதித்துக் குட்டிக்கரணம்
போட்டு விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
க.கமெண்ட் : 'நியூ' பட மணிவண்ணனைச் சந்தித்து பேசிப் பாருங்கள் :lol:

98. மனிதனுக்கு எப்போது 'மரணபயம்' உண்டாகிறது?
மவுண்ட் ரோடை கிராஸ் செய்யும்போது.
க.கமெண்ட்: நம்ம ஊரைப் பத்தி இப்படியெல்லாம் சொல்லலாமுங்களா?

99. படித்தவர்கள் கூட சில நேரங்களில் முட்டாள்கள் ஆகிவிடுகிறார்களே?
அறிவைக் கொள்முதல் செய்வதற்குப் படிப்பு உதவும். அதை எப்படிச்
செலவு செய்கிறோம் என்பது நமது சாமர்த்தியத்தைப் பொறுத்தது.
ஒரு பூகோள ஆசிரியர் வீட்டில் ஒரு திருடன் புகுந்து சில பொருள்களைத் தூக்கிக்
கொண்டு வெளியே ஓடி வருகிறான். தெருவுக்கு வந்ததும் அவன் கிழக்குப் பக்கமாக
ஓடுகிறான். அதைப் பார்த்தவுடன் அந்த ஆசிரியர் மேற்குப் பக்கமாக ஓடுகிறார்.
ஏன்? என்று கேட்கிறவர்களுக்கு அவருடைய பதில்: " உலகம்
உருண்டையானது... மேற்கே ஓடினால் அவன் எதிரே வருவான்.. பிடித்து விடலாம்!"
இப்போது கொஞ்சம் யோசித்து பாருங்கள். படிப்பில் குறையில்லை. அதைப்
பயன்படுத்துகிற முறையில்தான் குறை.
க.கமெண்ட்: பாடத்திட்டத்தை மாத்துங்கப்பா..

100. இல்லறம் நல்லறமாவதற்கு ஆண், பெண் இரு சாராரில் யாருடைய ஒத்துழைப்பு
அதிகம் தேவை?
அமெரிக்க உதாரணம் ஒன்று சொல்லுகிறேன். கேளுங்கள். ஒரு பத்திரிக்கையில்
கணவன் கொடுத்த விளம்பரம்:
"இனி, என் மனைவி வாங்கும் எந்தக் கடனுக்கும் நான் பொறுப்பாளி ஆக முடியாது!"
மறு நாள் அதே பத்திரிக்கையில் மனைவியின் அறிவிப்பு:
"என் கடன்களுக்கு யார் பொறுப்பாளியாக இருக்கிறாரோ அவர் தான்
இனி என் கணவர்!"
க.கமெண்ட்: :lachen001: :lachen001: :lachen001:

பரஞ்சோதி
16-09-2004, 05:32 AM
இன்றைய பொழுது இனிதாக செல்ல, சகோதரியின் இந்த பதிவு உதவும். நன்றி சகோதரி.

பாரதி
02-05-2008, 06:50 AM
தென்கச்சி சுவாமிநாதனின் கேள்வி பதில்களை ஒருங்குறியாக்கும் போது மீண்டும் படிக்க முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. உறவுகளின் மீள் பார்வைக்காக மேலெழுப்பப்படுகிறது.

அனுராகவன்
02-05-2008, 06:54 AM
நன்றி உங்களுக்கு ..
நான் பலமுறை வானொலியில் கேட்டிருக்கிறேன்..
இங்கு அருமையாக உள்ளது...

பூமகள்
02-05-2008, 07:40 AM
28. கவலையே இல்லாத மனிதன் இருக்கிறானா? இருந்தால் அவனது முகவரி சொல்லவும்.
இருக்கிறான்! அவன் முகவரி இல்லாத மனிதன். அவனுடைய முகவரி தெரிய ஆரம்பித்தால் கவலையும் ஆரம்பம்
என்று அர்த்தம்! எனவே - கவலை இல்லாமல் வாழ நினைக்கிறவர்கள் முகவரி இல்லாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
உண்மை.. முகவரி தொலைந்து போனால் துன்பம் எப்படி நம்மை வந்து சேரும்???!!

முகவரியற்ற வாழ்க்கையே... அகமகிழ்வுற்ற வாழ்க்கைன்னு தென்கட்சியார் சொன்னது எத்தனை உண்மை..!!

நல்லதொரு பகிர்வு கவீ அக்கா.
தென்கட்சியாரின் பேச்சுக்கு எப்போதுமே ஈர்ப்பு அதிகம். அவரின் சிந்தனையாற்றலையும் ஒவ்வொரு கேள்விக்கும் குட்டிக் கதையோடு அவர் பதில் சொல்லும் அந்த பண்பும்.. புரியாத பலவற்றைப் புரிய வைக்கிறது..!!

அற்புதமான பகிர்வுக்கு பாராட்டுகள் கவீ அக்கா. :)

Keelai Naadaan
02-05-2008, 07:41 AM
மிகவும் ரசித்து படித்தேன். கவிதா மற்றும் பாரதி ஆகியோருக்கு நன்றிகள்.
நிறைகுடம் என்ற வார்த்தைக்கு தகுதியானவர்களில் தென்கச்சியும் ஒருவர்.