PDA

View Full Version : ஒற்றை நட்சத்திரம்..



rambal
14-08-2004, 05:55 PM
ஒற்றை நட்சத்திரம்..

பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்படக் காத்துக் கொண்டிருந்தது. மதுரை ரயில் நிலையம் மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. மக்கள் தங்களது கம்பார்ட்மெண்ட்களைத் தேடிக் கண்டிபிடித்து அமர்வதில் மிகவும் அவசரத்துடன் இருந்தனர். அநேகமாக இன்றோடு பிரச்சினைகள் முடிந்துவிடும். இந்த ரயில்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு. தீர்வாய் இருக்கப்போகிற இந்த ரயிலைக் கண்டவுடன் ஏதோ ஒரு கனபரிமாணம் உடலை அழுத்தி அமுக்கிவிடுவது போல் மூச்சு முட்டுகிறது. இன்னும் எனக்குள் அந்த எண்ணங்கள் இருக்கின்றது என்பதற்கு இந்த மாய கனபரிமான அழுத்தம் சாட்சியாக இருக்கிறது. எனக்குள் அந்த எண்ணங்கள். இல்லையெனில், ஏன் ஏதோவொன்று என்னை இப்படி அழுத்த வேண்டும்? ஒரு அடி எடுத்து வைப்பது கூட பிரத்யட்சணப்பட்டு வைக்கவேண்டியிருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து கொண்டே இருக்கிறது. எஸ் 7- ஐ அடைவதற்குள் மூச்சு நின்று விடுமென்று பயம் மனதைக் கவ்வியது.

என் மூச்சு சீராக இல்லை. ஏன் இப்படி தாறுமாறாக மூச்சு வாங்குகிறது? ஒன்றும் புரியவில்லை. எல்லாவற்றையும் மறக்கடிக்க இன்னும் முப்பது நிமிடங்களே இருக்கின்றன. அதன் பிறகு எல்லாம் சகஜ நிலைக்கு வந்துவிடும். வந்து விடுமா? இன்னும் முப்பது நிமிடங்களா?எப்படிக் கழிக்கப் போகிறேன் முப்பது நிமிடங்களை? அடுத்த நிமிடமே முப்பது நிமிடங்கள் என்பது யுகம் கழிவதாய் தோன்ற ஆரம்பித்துவிட்டது. வானத்தில் ஏன் இன்று இன்னும் நட்சத்திரங்களைக் காணவில்லை? நட்சத்திரங்களைக் காணவில்லையா? ஏன் மனம் இப்படி தாறுமாறாய் சிந்திக்கிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாதா? முதலில் ஆறுதலாய் சமாதான வார்த்தைகள் சொல்கிறது. அடுத்த நொடியே அதே வார்த்தைகளை எதிர்ப்புறமாய் நீட்டுகிறது ஒரு கத்தி போலும். சண்டை போடும் மனநிலையில் நான் எப்போதும் இருந்ததில்லை. அப்படியே போட்டாலும் ஜெயிக்கத்தான் முடியுமா?

சமாதானம் தேவை. எனக்கு சமாதானம் தேவை. உரத்துக் கூவ வேண்டும் போல் இருந்தது. கண்கள் அனிச்சை நிகழ்வாய் பார்க்க எஸ் 5 க்கு சமீபத்தில் இருந்தேன். இன்னும் இரண்டே கம்பார்ட்மெண்ட்கள்தான். என்னது இன்னும் இரண்டு கம்பார்ட்மெண்ட்களா? மனமே அடங்கு.. உன் படபடப்பே காட்டிக் கொடுத்து புனிதத்தை அழித்துவிடும். அப்படி என்ன எனக்கு?

குழந்தை ஒன்று வெள்ளை நிற பிராக் அணிந்திருந்தது. பார்ப்பதற்கு குட்டி தேவதை போல் இருந்தது. அது தூணை சுற்றிச்சுற்றி ஓடி வளைய வந்து கொண்டிருந்தது. அப்படியே இருந்திருக்கலாம். அந்தக் குழந்தையோடு சேர்ந்து அந்தக் கம்பத்தை சுற்றிச் சுற்றி ஓடி வரலாமா? மனது ஒரு முறை நினைத்தது. முடியாது. உன்னால் எல்லாவற்றையும் மனதால் மாத்திரமே நினைக்கமுடியும். செயல்படுத்தமுடியாது. இல்லையென்றால் இந்தப் பயணத்திற்கு வழியனுப்ப வந்திருப்பாயா?

இன்னும் என்னென்ன ஆகப்போகின்றதோ? நடப்பது நடக்கட்டும்.. இப்படி மனதை தேற்றிக் கொண்டுதான் கிளம்பினேன். ஆனால், இங்கு வந்த பிறகல்லவா தெரிகிறது மனம் படுத்தும் பாடு. இன்னும் குடிமுழுகிப் போய்விடவில்லை. கடைசி வாய்ப்பு. இப்பொழுது இங்கேயே திரும்பிப் போவிடலாம்.போய்விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்த அடுத்த நொடியே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நிச்சயம் போய்த்தான் ஆகவேண்டும். இதன் பிறகு சந்திக்க முடியாமல் போக வேண்டும் என்று ஆசைப்படுகிற நபரை இறுதியாகப் பார்த்து வழி அனுப்புவதே சிறந்தது.

"டேய் விவேக்.. வந்துட்டியா?" குரல் கேட்ட திசையில் கண்கள் திரும்பின. அங்கு நான் மட்டுமே வந்திருப்பேன் என்ற எனது ஆசைக்கு முடிவு கட்டும் விதமாய் அனைவரும் வந்திருந்தனர்.

"வரமாட்டேன்னு சொன்னே.." இது கார்த்திக். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது. சமாதானம் தேவை.

"எனக்குத் தெரியும் நீ வருவேன்னு.." இது அவள்தான். "இல்லை மிஸ். அது என்னவோ மனசு கேக்கல.."

"சரி சரி.. ரொம்ப புளுகாத. எல்லோரும் செய்றதுக்கு எதிர்த்து பண்ணனுங்றது உன் குணம். அதான் யாருமே வரமாட்டேன்னு சொன்னவுடனே வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்த நீ வந்துட்ட.. முரண்பாடுகளின் தொகுப்புடா நீ.."

"அதையும் நீங்க கரெக்ட்டா தெரிஞ்சு வச்சுகிட்டிருக்குறீங்க.."

"அப்படீன்னா.. வேற யாரும் தெரிஞ்சுக்கலைங்றீயா?"

"அது எதுக்கு மிஸ். மெட்ராஸ்ல எந்தக் காலேஜ்?"

"எத்தனவாட்டி சொல்றது.. பாரதி ஆர்ட்ஸ் காலேஜ்ன்னு.."

"சொன்னீங்களா.. எப்ப?"

"நான் சொன்னப்ப நீ எந்தலோகத்துல இருந்த?"

"சாரி மிஸ்.. மறந்து போச்சு.."

"பாரதிங்றது மறந்து போற பேரா உனக்கு.."

"சரி.. குடிக்க தண்ணி இருக்கா.. வாங்கிட்டு வரட்டா?"

"இருக்கு.. வேண்டாம்.."

அவள் மற்றவர்களோடு பேச ஆரம்பித்துவிட்டாள். எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஏதோ ஒரு பேர்வெல் கூட்டம் போல் அந்த இடம் இருந்தது. எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று தெரியாத புள்ளி வரிசைக் கோலம் போல இவள் மீதான காதல் எங்கு ஆரம்பித்து எங்கு முடியப்போகிறது என்று தெரியவில்லை. காதல்.. பைத்தியக்காரத்தனமான வார்த்தை. வார்த்தைகளுக்கு ஏது மதிப்பு..தமிழில் கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் இதுவும் ஒன்று. இந்த இண்டெலக்சுவல் புத்திய விட்டொழிக்கணும். மனமே இப்படி ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இப்படி சர சரவென்று மேலே பறக்கத்தொடங்கிய பட்டமாய் கிளம்பி விடுகிறாய். உன்னைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் பாடம் எடுக்க வந்த லெக்சரர் மேல் காதல் கொள்வாயா? மீண்டும்.. மீண்டும்.. எனக்குள் கனபரிமாணம் ஒன்று பாரமாய் இறங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரம் நின்றால் கீழே விழுந்து விடும் நிலை. வானத்தில், நிலா மாத்திரம் மேகங்களுக்கு நடுவில் மறைந்து கொண்டு லேசாக எட்டிப்பார்த்தது. நட்சத்திரங்கள் எதுவும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. தட்டுப்படவில்லையா? அல்லது தெரியவில்லையா? ஒரே குழப்பமாக இருந்தது. இதற்கு பெயர் என்னவாக இருக்கும்? வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே வகுப்பெடுக்க வந்த ஒரு லெக்சரர். அவளை வழியனுப்ப ஒரு வகுப்பறையே கிளம்பி வந்திருக்கிறது. இதுதான் அவளது பலம். மற்றவர்களுக்கும் அவளுக்கும் வேறுபாடுகள் இந்தப் புள்ளியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. இதுதான் காதல் ஆரம்பித்த புள்ளியாக இருக்குமோ? தெரியவில்லை.. இருக்கலாம். ஒருவர் பிரிகிறார் என்றவுடன் அவருடன் கழித்த நிமிடங்களில் இருந்து நொடிகள் வரை கணக்குப் போட்டு அசை போட்டுப் பார்த்து ஒரு ஏக்கப் பெருமூச்சுவிட்டு.. இந்த விதிக்குள் இன்று நான்? நினைத்துப்பார்க்கவே கூசுகிறது. எப்படி இது சாத்தியமாயிருக்கமுடியும்? அவள் மேல் எனக்குண்டான ப்ரியை.. ச்சீச்சீ.. ப்ரியை அல்ல.. காதல்.. இல்லை.. கவர்ச்சி.. இல்லை.. ஆமாம்..அதுதான்.. உள்ளங்கையில் நறுக்கென்று ஊசிகுத்தியதும் எட்டிப்பார்க்கும் ரத்தம் கண்டதும் என்ன மனநிலையோ அதே மனநிலை. என்ன இது அபத்தம்.கவர்ச்சியாம்.. கவர்ச்சி.. ஆமாம்.. அதுதான். இல்லையென்றால் 29 வயதிலிருக்கும் அவர்கள் மேல் உனக்கு வந்திருப்பது என்ன காதலா?புடலங்காய்.. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.. வயசுக் கோளாறு.. போதும் நிறுத்து.. வந்த இடத்தில் இந்தத் தகராறு வேண்டாம்.. இல்லை.. இன்றைக்குக் கணக்குத் தீர்த்தாகவேண்டும். முதல் புள்ளியைக் கண்டுபிடித்துவிட்டால் கோலமாய் விரிந்த கதை தெரிந்து விடும். அதுதான் தெரியவில்லை. தெரிந்தால்தான் இத்தனை நேரத்துக்கு விட்டு வைத்திருப்பாயா? உனக்குக் கூடத் தெரியவில்லை என்றால் பின் வேறு யாருக்குத் தெரியும்? மனசாட்சி கொஞ்சம் அடங்கியது.

"விவேக்.. என்ன யோசனை?"

"ஒண்ணுமில்லை மிஸ்."

"நட்சத்திரம் ஒன்னைக்கூடக்காணோம் இன்னிக்கு.. கவனிச்சிருப்பியே.."

"ஆமாம்.. மிஸ்.."

"இன்னும் வானம் பாக்றத விடல நீ.."

"இல்ல மிஸ்.. இன்னிக்கு எதேச்சையாத்தான் பாத்தேன்.."

"சரி பொய் சொல்லாத.. மெட்ராஸ் வந்தா காலேஜ்க்கு வா.."

"சரி மிஸ்.."

"சரி விசில் ஊதுறான்.. பாப்போமா.. பை.. ஸ்டூடண்ட்ஸ்.." -புன்னகைத்துக் கொண்டே ட்ரெயினினுள் ஏறினாள்.

அந்தப் புன்னகைதான்.. அந்தப் புன்னகையேதான். அதுதான்.. அந்தப் புள்ளி.. ட்ரெயின் புகையைக் கக்கிக் கொண்டே மெல்ல பிளாட்பாரத்தை விட்டுக் கிளம்பத் தொடங்கியது. ட்ரெயின் கண்ணை விட்டு அகன்றதும் வானத்தைப் பார்த்தேன்.. இப்போது நிலாவிற்கு அருகில் ஒரு நட்சத்திரம் மட்டும் தெரிந்தது.

பாரதி
14-08-2004, 06:25 PM
மனக்குழப்பங்கள் கூட மனிதனை ஒரு படைப்பாளியாக்க பயன்படும் கருவிதான் போலும்..!

இளசு
16-08-2004, 06:33 AM
ஒன்றோடொன்று மோதும் எண்ண அலைகளை எல்லாம்
சொல்லில் வடிப்பது சுலபமல்ல...
ராமுக்கு அது இயல்பாய் இருக்கிறது..

பாராட்டுகள் ராம்..

kavitha
16-08-2004, 08:49 AM
காதல்.. பைத்தியக்காரத்தனமான வார்த்தை. வார்த்தைகளுக்கு ஏது மதிப்பு..தமிழில் கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளில் இதுவும் ஒன்று. இந்த இண்டெலக்சுவல் புத்திய விட்டொழிக்கணும்.
:) :D :)



அந்தப் புன்னகைதான்.. அந்தப் புன்னகையேதான். அதுதான்.. அந்தப் புள்ளி..


இதில் குழம்ப வேண்டிய அவசியமேயில்லை. ஒரு போட்டோ வாங்கி வைத்திருந்தால் எப்போதும் பார்க்கலாமே!

நான் 7ம் வகுப்பு படித்தபோது தெரசா என்று ஒரு சிஸ்டர் எங்களுக்கு வகுப்பாசிரியையாக இருந்தார்.
அவரிடம் என்னைக் கவர்ந்தது எது என்பதே இன்று வரை என்னால் அனுமானிக்கமுடியவில்லை.
மேக்கப்பே இல்லாத முகத்தில் தோன்றும் மெல்லிய புன்னகையா?
சாதாரண பேச்சில் கூட இனிமையான ராகம் வடிக்கும் குரலா?
அன்பான அக்கறையா?
முக பாவங்களை வைத்தே பாடம் புரியவில்லை என்பதை அனுமானிக்கும் திறனா?
எது?எது? எது??
வகுப்பு மாணவிகள் அனைவருமே அவரின் பின்னால் ஓடும் ரசிகைகள். எனக்கு மட்டும் என் அன்பை கடைசி வரைக்கும் அவரிடம் வெளிப்படுத்தவே தெரியவில்லை.
சர்ச்சிலும் சரி, வகுப்பிலும் சரி. அவரின் பாடலையும், பாடத்தையும் விரும்பி விரும்பி கேட்பேன். அவர் என்னைப்பார்க்காத போது.
பெற்றோரின் வேலையின் நிமித்தம் வேறு ஊருக்குச் செல்ல வேண்டி வந்த போது உடைந்தது எங்கள் தாழ்ப்பாள்.
தலைமை ஆசிரியை முன்பு "ஒரு நல்ல மாணவியை நான் இழக்கிறேன்" என்று அவர் அழ, கோயிலில் "உங்களை விட்டுப்போகிறேன் " என்று நான் அழ இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் பேசிக்கொண்டோம். இப்போதும் என் தோழி அவரைப்பற்றி எனக்கு தொலைபேசியில் தகவல் சொல்வதுண்டு. அவரும் அவளிடம் அடிக்கடி கேட்பதுண்டாம்.
இதன் பெயர் காதலா? ப்ச்ச்..
அன்பிற்கு இங்கே எத்தனை எத்தனை பெயர்கள்??

இக்கதை அவரை நினைவுறுத்தி விட்டது. நன்றி ராம்பால்.

இளசு
16-08-2004, 11:08 PM
கவீயின் நினைவலை.. நனையவைத்தது..

பகிர்ந்தமைக்கு நன்றி..

சொன்ன அழகுக்கு பாராட்டு...

mythili
17-08-2004, 09:50 AM
மனப்போராட்டத்தை, இன்றைய இளைஞர்களின் மன நிலையை தத்ரூபமாக படமெடுத்துக் காட்டியது போல உள்ளது கதை.

அன்புடன்,
மைதிலி

இளந்தமிழ்ச்செல்வன்
17-08-2004, 07:34 PM
மன ஓட்டத்தை எழுத்தில்.... ராம்பால் அவர்களின் இயல்பே அதுதானோ?

அருமை ராம் ஒவ்வொரு வரியும் அருமை.

poo
18-08-2004, 06:00 AM
உள்ளுக்குள் எழும் அலைகளை அருமையாக சொல்லியிருக்கிறாய் ராம்...

படிப்பவர்களையும் உணரச்செய்ததில் வெற்றி...

பாராட்டுக்கள்!

rambal
20-08-2004, 01:39 PM
மனம் திறந்து தனது பால்யத்தை பகிர்ந்து கொண்ட கவிதாவிற்கும்,
விமர்சித்த அனைவருக்கும் என் நன்றிகள்..

Mathu
24-08-2004, 11:13 AM
மன ஓட்டத்தில் பசுமையான பல நினைவுகள் எல்லோருக்கும் உண்டு
அதை உயிரொட்டமான எழுத்துக்களில் வடிப்பதென்றால் இலகுவானதல்ல
அந்த கலை ராமிற்கு இயற்கையாகவே அமைந்துவிட்டது போலும்,
வாழ்த்துக்கள் ராம்.
நிளலுக்கு நியம் தந்த கவிக்கும் நன்றிகள்.

அறிஞர்
02-09-2004, 04:23 AM
நல்ல கதை... இளைஞர்களின் வாலிப ஈர்ப்பு, குழப்பத்தை.. காட்டிய நயம் அருமை...

இத்துடன் கவியின் இளமை எண்ண ஓட்டங்களும் அருமை...

வாழ்த்துக்கள்

Nanban
29-09-2004, 07:09 PM
ராமின் கதை சொல்லும் நேர்த்தி எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், கடைசி வரை, தன் காதலை தெரிவிக்காமலே போய்விட்டதினால், கதையின் ஈர்ப்பு சற்றே குறைந்து விட்டது. கதாபாத்திரம் தானாகச் சொல்லாமல், குறைந்த பட்சம் குறிப்புகளால், உணர்த்தி அதை அந்த பெண்மணியும் அறிந்திருப்பதாக சொல்லியிருக்கலாம்....

(கதையின் கருவையே மாற்றிவிட்டேனோ...

அவர்கள் படத்தில், கமல் கடைசியில் புகைவண்டி நிலையத்தில், சுஜாதாவை வழியனுப்பும் போது சொல்வார் - இந்தக் கடைசி நிமிடத்திலாவது நான் உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும் - இல்லையென்றால், என்னுடைய காதலுக்கு மரியாதை இல்லாது போய்விடும்... என்று கூறி தன் காதலை வெளிப்படுத்துவார். அது ஒரு கவிதையான கிளைமேக்ஸ்... அதிலிருந்து எந்த கதை படித்தாலும், தன் காதலை துணிந்து தான் விரும்பிய பெண்ணிடம் கூறாமல் விடுவது அநாகரீகம் என்றே கருதுகிறேன்...



தலைமை ஆசிரியை முன்பு "ஒரு நல்ல மாணவியை நான் இழக்கிறேன்" என்று அவர் அழ, கோயிலில் "உங்களை விட்டுப்போகிறேன் " என்று நான் அழ இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் பேசிக்கொண்டோம்.


கதையை விட, இது சுவராஸ்யம்.

இத்தகைய காட்சிகளை நானும் கண்டிருக்கிறேன். மாணவிகளிடம் பரிவும் நேசமும் காட்டும் வாத்தியார்களும் (பெண்மணிகள் உட்பட), அதே போல, தங்கள் ஆசிரியரிடம் பேரன்பு கொண்ட மாணவிகளையும்.... இதிலே அந்தப் பெண்களை ஓரக்கண் ஏக்கப்பார்வை பார்க்கும் பசங்க படற அவஸ்தை தான் பெரும் வேடிக்கை. வாத்தியார்ரே அந்த சமயத்தில் வில்லனாகத் தான் தெரிவார்.....

இப்பொழுது கூட, ஒரு புன்னகை வரவழைக்கும் நிகழ்வுகள்.....

rambal
03-10-2004, 12:19 PM
ராமின் கதை சொல்லும் நேர்த்தி எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், கடைசி வரை, தன் காதலை தெரிவிக்காமலே போய்விட்டதினால், கதையின் ஈர்ப்பு சற்றே குறைந்து விட்டது. கதாபாத்திரம் தானாகச் சொல்லாமல், குறைந்த பட்சம் குறிப்புகளால், உணர்த்தி அதை அந்த பெண்மணியும் அறிந்திருப்பதாக சொல்லியிருக்கலாம்....



இது கொஞ்சம் எதார்த்தமான கதை.
படத்தில் வேண்டுமானால் அப்படி நடக்கலாம்..

நிஜத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் கம்மிதான்.

நம்மில் எத்தனை பேர் காதலை வெளிப்படையாக எத்தனை பேரிடம் சொல்லியிருக்கிறோம்..

முதன் முதலில் ஏற்படும் ஈர்ப்பு எப்போதும் மனதிற்குள் இருக்கும் ஒரு சுகமான அவஸ்தைதான்..

இது வயதிற்கு உரிய கட்டாயம்.

இதைத்தான் இதில் சொல்லியிருந்தேன்.

கொஞ்சம் வெளிப்படையாக சொல்வதென்றால்,
இது 90 சதவிகித உண்மைக் கதை.

மற்றபடி தங்களது வெளிப்படையான கருத்திற்கு நன்றி.. (தவறாக எடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்)

விகடன்
02-04-2009, 06:13 AM
அப்பப்ப எமக்கு வரும் சிந்தனைகளும் அதனை அடியோடு தவிடு பொடியாக்கிடும் மாற்று சிந்தனைகளையும் கதையில் சொல்லியிருப்பது அதன் உயிர்ப்பை எடுத்துக்காட்டுகிறது.

"நியூ" திரைக்கதையில் கொஞ்சத்தையும் "ஏகன் திரைக்கதையில் பகுதியையும் எடுத்து திரித்து வைத்ததுபோல ஓர் கதை. இந்தக் கதையின் பிரதிபலிப்பா அவ்விரு திரைக்கதைகளும் !!!

ராம்பாலின் கதைகள் பலதை படிட்திருக்கிறேன். ஆனால் பின்னூட்டமிட இப்போதுதான் காலம் கிடைத்திருக்கிறது.