PDA

View Full Version : அன்பான தோழிக்கு..Nanban
09-08-2004, 06:57 PM
என் தோழியே
என்ன கோபம் உனக்கு?

எந்தக் கனவிலோ
தன்னை இழந்து
உன்னை மறந்தேனென்று
சொல்லிவிடலாம் தான்.
நீயும்
அந்த கனவுகளில்
ஒன்றாய்
இல்லையென்றால்.

ஒரிரண்டு மின்னஞ்சல்
தவறியதால்
மௌனப் புறக்கணிப்புகள்.

நீ அறியாததா -
மௌனத்திலே
நேசம் வளர்ப்பவன்
நானென்பதை?

சீண்டி விளையாடும்
சிறுபிள்ளை
நட்பல்ல நம்மது -
இந்த மௌனச் சீண்டல்
புதிது தான்;
புரியவில்லை தான்.

என்றாலும் ரசிக்கிறேன்,
உன் கோபத்தை.

இறுதியில்
இந்த கோபம் வடிந்து
வண்டல் தங்கும்
நிலங்களில்
புதிதாக
நட்பைப் பயிரிடுவேன்.


எத்தனை
கூட்டத்தின் நடுவேயும்
என் மீது
ஒரு கண் வைத்திருப்பாய் -
என் மௌனங்களோடு
நான் பேசாமல்
அமர்ந்திருப்பதைக் கண்டு
புன்னகை பூப்பாய் -
நான் நானாக
இருக்கிறேன் என்று.

வாகன தாமத பதற்றமாக
உன் மௌனம்
வருத்துகிறது -
கரை தொடும் சமுத்திரம்
மௌனம் காப்பதில்லையே..?

உன்னைப் பார்த்த
கால இடைவெளி
அடுத்த குறிஞ்சி மலரும்
காலத்தைத் தொடப்போகிறது.

மௌனம் உடை -
நீ
உயிருடன்
உலாவுவதாக
வானலைகளில்
ஒளிபரப்பு -
என் மௌனங்களோடு
நான் நானாக
இருப்பதற்கு.

உயிர்தொடும்
வார்த்தை கொண்டு
கவிதை எழுதலாம் தான் -
எங்கே அனுப்புவேன் அதை?

நட்பாகிய காதலா..
காதலாகிய நட்பா..
குழம்பித் தவிக்கும்
கூட்டத்தில்
உன் இணைப் பிறாவும்
ஒன்றென்பதால்
முகவரி அற்றுப் போன
இந்த நட்பை
நான் என்ன செய்வேன்?

இன்று வளர்ந்து
நிற்கும்
உன் நிழலுக்கு
நீ சொல்லியிருப்பாயா -
உனக்கு ஒரு அன்பான
தோழன் ஒருவன்
உண்டென்று?

அமுதூட்டி வளர்த்திய
அந்தப் பிள்ளை
அறியுமா -
பேசி பேசி அறுக்காத
இந்த நண்பனை?

எப்படி
அறிமுகப் படுத்துவாய்
என்னை?

எந்த உறவாகவும் வேண்டாம் -
நண்பனாகவே
அறிமுகப்படுத்து.

ஒரு குழந்தையோடு
உன் அறிவாற்றல்
ஒத்துப் போகுமாவென
கவலைப்படாதே -
அறிவாற்றல் அற்றுப்போன
காலத்தைத் தான்
தேடி அலைகிறேன்.

மௌனத்தைப்
பேசுபவனிடம்
அறிவின் உச்சமும்
அமைதியாகத் தான்
இருக்கும்.

கடலடி டால்பின்களாய்
மின்னலைகளை
விண்ணெங்கும் இறைக்கிறது
என் மனம் -
பெறுவதற்கு
யாரும் உண்டா என
அறியாமலே..!

ஒரு மின்னஞ்சல்
தவறிய கோபத்தில்
மௌனத்தினுள் ஆழ்ந்தவளே -
எத்தனை மின்னலைகளை
நீ தவறவிட்டாய்..?

மௌனம்
உணர்வுகளைப் பேசாது.
உணர முடிந்தால்
மௌனம்
சொல்லும் செய்திகள்
நட்சத்திரக் கணக்காகும்.

உன்னிடத்தில்
வாங்கிய கடன்
நிறைய உண்டு
திருப்பித் தருவதற்கு -
நீ தந்த நட்பு,
மதிப்பு, மரியாதையுடன்
நீ குழைத்து
தந்த தயிர்சாதமும் தான்.

வாங்கிய கடனின் முதல்
திருப்பப்படாமலே
போய்விடக்கூடாதென்பதால்
உன் மகளிடம் சொல்லிப் போ -
இந்த நண்பனைப் பற்றி;
இந்த நட்பைப் பற்றி;

உணரக் கூடிய
தொலைவில்
நீ உண்டா?

என் மௌனம்
புரியாத தூரத்தில்
நீ.

இறந்து தானே
போயிருப்பாய்?

பரஞ்சோதி
10-08-2004, 12:47 PM
நண்பர் நண்பனே!

நட்பு என்பது அழியாத காவியம். சில நேரங்களில் முடக்கம் வரும், ஆனால் அதுவே முடிவாகிவிடாது.

உங்கள் தோழியின் மவுனம் கலையும்.

thamarai
10-08-2004, 08:20 PM
உன்னைப் பார்த்த
கால இடைவெளி
அடுத்த குறிஞ்சி மலரும்
காலத்தைத் தொடப்போகிறது.

ஓ.... 12 வருடங்களையும் தொடப்போகிறதோ....
வேண்டாம் இந்த மெளனம் நட்புக்கு பகையாக.
மெளனங்கள் விரைவில் கலையட்டும்.

வாழ்த்துக்கள்......

பாலமுருகன்
11-08-2004, 06:32 PM
ரொம்பவும் குழம்பி போயிருக்கீங்க நன்பா....

நட்புக்கும் காதலுக்கும் பெரிய தொலைவு இல்லை.. ஒரு மெல்லிய இழைதான்.. பக்குவமாக கடந்தால் காதல்தான் இல்லையென்றால் வாழ்க்கை "?" இதுதான்..

அடுத்த குறிஞ்சி பூக்கும் வரையில் காத்திருந்தால் தோழி தோழியாக இருப்பார்களா?

நன்றி... உங்கள் கவிதை வரிகளுக்கு

பாலா

Nanban
12-08-2004, 07:47 PM
நன்றிகள் பல நண்பர்கள் பரஞ்சோதி, தாமரை, பாலமுருகன் ஆகியவர்களுக்கு.

நட்பிற்கும் காதலுக்கும் நூலிழை தான் இடைவெளி. உண்மைதான். ஆனால், அதில் குழப்பமில்லை. எது காதல், எது நட்பு என்ற தெளிவு எங்களுக்குள் இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு இருக்கிறதா என்று எப்பொழுதுமே அறிய முற்பட்டதில்லை, நான். அது தேவையற்றதாகவே கருதுகிறேன்.

'நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன்..' என்று ஒரு பாடல் வரி வரும். (தளபதியில், ராக்கம்மா கையைத் தட்டு, பாடலில்..) அது தான் உண்மை. அதனால் தான் சில சமயம் மௌனங்கள் வலிக்கிறது...

நன்றி

அன்புடன்...

பாலமுருகன்
12-08-2004, 09:46 PM
சபாஷ் நண்பா

தொடருங்கள்... உங்கள் நட்பை... கற்பில் சிறந்தவள் கண்ணகி என்பதற்கு சரிசமமாக உங்கள் நட்பு இருக்கட்டும்...

(அறிஞர் அவர்களை ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.. பார்த்த நான் கேட்டதா சொல்லுங்க. அவர் எனக்கு விளக்கம் தர வேண்டியுள்ளது. திருமணத்திற்கு முன் உள்ள தோழி திருமணத்திற்கு பின் உள்ள தோழி....)

நன்றி
பாலா

இளசு
13-08-2004, 05:33 AM
மௌனம்.. நீர்.. நேசம் வளர்க்கும்.
மௌனம் உடை.....
மௌனம் .. அறிவும் அமைதியாகும்..
மௌனம் ..உணர்வுகளைப் பேசாது..

குழம்பிய இணைப்புறாவால்
விழுந்திட்ட இடைவெளியால்..

உருவான உணர்வுகளை - மௌனம் கலைத்து சொன்ன விதம்..

பாராட்டுகள் நண்பன்.

அறிஞர்
13-08-2004, 06:32 AM
அருமை நண்பரே..... அழகாய் வர்ணித்துள்ளீர்.....

(ஹலோ பாலா.... தினமும் மன்றம் வருகிறேன்.. எங்கு உங்களை.. சந்திப்பது...)

பாரதி
14-08-2004, 01:47 AM
அருகில் இருக்கும் போது மெளனம் சொல்லாத விசயங்களே இல்லை. ஆனால் பார்க்காமல் இருக்கும் போதோ எப்போதோ வரும் ஓரிரு சொற்கள் தரும் நிம்மதியும்... வரவில்லையென்றால் வரும் வலியும் மிகவும் அதிகம்தான்.....

kavitha
14-08-2004, 08:16 AM
ஒரு மின்னஞ்சல்
தவறிய கோபத்தில்
மௌனத்தினுள் ஆழ்ந்தவளே -
எத்தனை மின்னலைகளை
நீ தவறவிட்டாய்..?

மௌனம்
உணர்வுகளைப் பேசாது.
உணர முடிந்தால்
மௌனம்
சொல்லும் செய்திகள்
நட்சத்திரக் கணக்காகும்.

மௌனம்
ஆதிகால முதல் மொழி!
ஆளப்படும் இடங்களைக்கொண்டு
ஆழப்படும்.
இதுவும் ஒரு ஆயுதம் தான்.
கண்ணீருக்கு அடுத்து
இம்சிக்கும் இனிய மொழி!
பேசாதிருப்பவனைப் கொட்டவைக்கும்
கொட்டுபவனை ஊமையாக்கும்
இதை உணர்ந்தவர்கள்
உரக்க மாட்டார்கள்.
இதை அறிந்தவர்கள்
வியக்க மாட்டார்கள்.
இதை பேசாதவர்கள்
இருக்க மாட்டார்கள்.

இது
அமைதி அளிக்கும்
ஆனந்த மொழி!எப்படி
அறிமுகப் படுத்துவாய்
என்னை?

எந்த உறவாகவும் வேண்டாம் -
நண்பனாகவே
அறிமுகப்படுத்து.

மிகப்பிடித்த வரிகள் இவை.
என் தோழிகளிடம் கூட இப்படிச் சொன்னதுண்டு.
உறவுப்பெயர் இடவேண்டாம். நம்மைப்போலவே நட்புடன் இருக்கட்டும் என்று
என் மௌனம்
புரியாத தூரத்தில்
நீ.

இறந்து தானே
போயிருப்பாய்?
______________

அவநம்பிக்கை ஏன் நண்பா?
அவள் நம்பிக்கை கொள் நண்பா!

சுகந்தப்ரீதன்
16-06-2008, 04:52 AM
வாழ்க்கை பயணத்தில் முடிவென்று முடங்கும் தருணங்களில் அது வளைவென்று கூறி வாழ்வை வழிநடத்துவது நட்பெனும் நல்ல உறவுதானே நண்பரே..!!

அழகான அர்த்தம் நிறைந்த கவிதை..!!
எனது வாழ்த்தும் பாராட்டும்..!!

இளசு
16-06-2008, 06:44 AM
ஆளப்படும் இடங்களைக்கொண்டு
ஆழப்படும்.

இதுவும் ஒரு ஆயுதம் தான்.

கண்ணீருக்கு அடுத்து
இம்சிக்கும் இனிய மொழி!


இதை உணர்ந்தவர்கள்
உரக்க மாட்டார்கள்.
.
இதை பேசாதவர்கள்
இருக்க மாட்டார்கள்.மௌனம் பற்றிய கவீ-முத்துகள்
ஆழ்மோனத்தில் இருந்தன..
அகழ்ந்தெடுத்து மேற்கொணர்ந்த
சுகந்தனுக்கு நன்றி!

பூமகள்
01-07-2008, 07:02 AM
சற்று முன் தான்..
என் நெடுநாள் தொடர்பறுந்த தோழி...
மின்னஞ்சலில் செல்லமாக கடிந்து கொள்ள...

இங்கே பார்த்தால்..
கோபமான தோழியின்
நெடுநாள் மௌனம்..!!

மௌன சாத
ருசி கண்டவர்..
அடிக்கடி
உண்டு களிப்பர்...

நான் விரும்பும்
அமுதம்..
என் மௌனம்..

அவசரத்துக்கு
வார்த்தைகளுக்கு
போர்வையாக
மௌனம்
அவசியமாக
உடுத்திக் கொள்கிறேன்..

எங்கோ இருக்கும்
என் தோழிக்கு
நான் பேசும்
முதல் வார்த்தை
சுபச்செய்தியோடே
என்ற நோக்கில்..

இன்னும் சில
மௌனங்கள்..
நேரில் கண்டும்..
காணாமல்..

சில சந்தர்ப்பங்களில்
ஒளிந்து கொள்ளும்
வெட்கத்தால் மனம்..

அப்போதெல்லாம்
முகத்தை மறைக்கும்
பூச்சு..
மௌன அரிதாரமே..!

ஒருநாள் நிச்சயம்
மௌனம் பேசும்..
அப்போது
என் நா உன்
வாழ்த்துக்கு
நன்றி பகர்ந்துகொண்டிருக்கும்..!!
--------------------------------------------------
கவிதை அழகு.. அதைவிட அழகு..
இளசு அண்ணா.. கவி அக்கா அவர்களின் பின்னூட்ட முத்துகள்..!
ரசித்தேன்.. வியந்தேன்.. நானும் பங்கு கொண்டு அகமகிழ்கிறேன்.

பாராட்டுகள் நண்பன் அண்ணாவுக்கும்..
பெரியண்ணா மற்றும் கவி அக்காவுக்கும்..!!