PDA

View Full Version : பௌர்ணமி..rambal
29-07-2004, 12:20 PM
பௌர்ணமி..

கடற்கரை. பௌர்ணமியின் ஒளியில் தகித்துக் கொண்டிருந்தது. மீன் வாசம் கலந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. இந்தக்காற்றை வாங்கவும் மக்கள் கும்பல் கும்பலாக குழுமியிருந்தனர்.

"சுண்டல்.. சுண்டல்.." குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

வித விதமான மனிதர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் தங்களது குழுக்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். குழுமனப்பான்மை ஆதி மனிதனின் ரத்தத்தில் ஊறியது போலும். சில விதி விலக்குகளாய் ஓரிருவர் மாத்திரம் தனித் தனியாய் வந்து கடலையும் வானத்தையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குடும்பம் வட்டமாய் அமர்ந்து தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

"சுண்டல்.. சுண்டல்.. பாப்பாவுக்கு வாங்கிக் கொடுங்க சார்.."

அந்தக் குடும்பம் அவனை மிரட்சியுடன் பார்த்தது. சுண்டலைக் கண்டதும் அந்தக் குடும்ப அங்கத்தினரில் ஒருத்தி அநேகமாக 7 வயது இருக்கலாம். அவள் சுண்டல் வேண்டுமென்று அழ ஆரம்பித்தாள். சுண்டலும், பணமும் கை மாறியது.

"சுண்டல். சுண்டல்.." குரல் ஒலித்துக் கொண்டே அங்கிருந்து நகர ஆரம்பித்தது..

படகு மறைவில் காதலனும் காதலியும் அகநானூறு பற்றிய மதிப்பீடுகளில் இறங்கிக் கொண்டிருந்தனர். கூடலும் கூடல் நிமித்தமுமாய் தங்களை மெய் மறந்து கொண்டிருந்த வேளையில் அந்தக் குரல் அங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.

"சுண்டல் வேணுமா சார்?" என்று சுண்டல் விற்கும் பையன் கேட்க..

அகநானூறை கலைத்துப் போட்டுவிட்டதால் ஏற்பட்ட கோபம் அகநானுற்றுத் தலைவனின் கண்களில் தெரிய ஆரம்பித்தது. ஒரு ஏளனப் பார்வையுடன் அகநானூற்றுத் தலைவனையும் தலைவியையும் புறம் தள்ளிவிட்டு அவன் நடக்க ஆரம்பித்தான். அவன் கூடவே அவனது சொற்களும்..

"சுண்டல் சுண்டல்.."

கொஞ்சம் இருட்டாய் இருந்த பகுதியில் ஒரு இளைஞர் கூட்டம் போகமாய் இரு எனும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வரிகளை அப்பழுக்கில்லாமல் அரங்கேற்றிக் கொண்டிருந்தது.

"சுண்டல்.. சுண்டல்.."

"சார்.. சைடிஸ்க்கு சுண்டல் நல்லா இருக்கும் சார்.."

ஜே.கேவின் சிஷ்யர்கள் அரை மனதோடு இரண்டு பொட்டலங்களை வாங்கினார்கள்.

கொஞ்சம் தள்ளி தலையில் அடிக்கப்பட்ட மொட்டையுடன் கையில் மண்கலயத்தோடு ஒரு உருவம் கடலுக்குச் சென்று மண்கலயத்தைக் கடலில் போட்டுவிட்டு திரும்பிப்பாராமல் தனது வண்டியை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தது.

"சுண்டல்.. சுண்டல்.."

மண்கலயத்தைத் தூரப் போட்ட உருவம் ஒரு பொட்டலத்தை வாங்கி பிரித்துச் சாப்பிட்டுக் கொண்டே சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

"இந்தாப்பா சுண்டல்.."
"சுண்டல்.. சுண்டல்.."
"எவ்ளோப்பா?"
"பொட்டலம் 5 ரூவா சார்.."
"அநியாய வெலை சொல்றீயே?"
"ஊருக்கு புதுசா?"
"ஆமாம்.."
"இங்கெல்லா இருக்காத சார்.. இது ஒரு மாரி எடம்.."
"சரி ஒரு பொட்டலம் கொடு.."
அவன் பொட்டலம் கொடுத்ததும்
"எந்த ஊரு உனக்கு?"
"ராம்நாடு பக்கம்.."
"என்ன படிச்ச?"
"மூனாங்கிளாஸ்"
"அப்புறம் இங்க ஏன் வந்த?"
"நானா வரல.. வித்துட்டாங்க.."
"யாரு?"
"என் அப்பா அம்மா.." எந்த வித உணர்சியுமில்லாமல் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனைப் பற்றிய விபரங்களைக் கேட்டவர் இதைக் கேட்டதும் யோசனையில் ஆழ்ந்து இது பற்றிய தத்துவ விசாரங்கள் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்..

"இங்க தனியா உக்காந்து யோசிக்காத சார்.. நான் கெளம்புறேன்.."
"சுண்டல்.. சுண்டல்.."

"பிள்ளைகல்லாம் இங்க வாங்க.. உங்களுக்கு அரசாங்கத்திலேர்ந்து படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம்.." - ஒரு வேனில் இருந்து மைக் ஒலிக்க ஆரம்பித்தது.

"இந்தப் பசங்களையும் படிக்க வைக்கணும்ன்னு கவர்ன்மெண்ட் அக்கரை எடுக்குது பாத்தியா.." ஒருவர் சொல்ல அவருக்கருகில் இருந்தவர் அரசியல் பேசவேண்டாம் எனும் தொனியில் அவரோடு நடந்து கொண்டிருந்தார்.

"பார்ட்டி ஏதாச்சு இருக்கா?" ஒருவன் ஒரு மாதிரி இழுத்துக் கொண்டே சுண்டல்காரனிடம் கேட்டான். கேட்டான் என்று சொல்வதை விட கேட்டாள் என்றும் சொல்லலாம். கேட்டான்(ள்) என்றும் சொல்லலாம். எல்லாம் பம்பாய்க்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து விட்டு உலகின் புராதனத் தொழிலை கருமமே மேற்கொள்ளும் நபர்கள்தான். அவர்களில் இவன்(ள்) ஒன்று.

"அந்தாண்ட ஒருத்தன் தனியா ஒக்காந்துகிட்டு யோசிச்சுகிட்டு இருக்கான்.. பார்ட்டியப் பாத்தா சிக்குற மாரிதான் தோணுது.." "சரி.. நான் பாத்துக்கிறேன்.." அவன்(ள்), அவன் கை காட்டிய திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்(ள்).

"சுண்டல்.. சுண்டல்.."

ஒலிபெருக்கியில் அவனை மாதிரி சிறுவர்களை படிக்க அழைக்கும் ஓசை கேட்க ஆரம்பித்தது. அதைக் கேட்டதும் அவன் ஒரு படகுப் பக்கம் ஓடிச் சென்றான். அங்கு தனது சுண்டல் டப்பாவை மறைவாக வைத்துவிட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான். ஒலி பெருக்கிச் சத்தம் அவனைக் கடந்து வேறு திசையில் சென்று பின் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.

கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.. பௌர்ணமிக்கும் கடலுக்கும் ஒரு ஈர்ப்பு விசை விசேசமென்றால் மனிதர்களுக்கு என்ன விசேசம்? அவர்களும் அன்று வழக்கத்திற்கு அதிகமாகத்தான் கூடுகிறார்கள். ஒருவேளை இந்தப் பௌர்ணமியைப் பற்றி ஒரு வித கவித்துவ அப்ஸெசன் அப்ரோச் ஆகக்கூட இருக்கலாம். தமிழ் சினிமாப் பாடல்களில் காட்டப்படும் பௌர்ணமிகள் ப்ளெட் லைட் என்பது தெரியாமல் இருக்கலாம். இல்லையென்றால் ஒரு மாஸ் ஹிஸ்டீரியாவாக இருக்கலாம். கோவில்களில் கூட்டமாகக் கூடுவதைப் போல்..

அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுண்டல் பொட்டலங்கள் வாங்கப்பட்டன.. அவனும் விற்கும் மும்முரத்தில் அவர்களைக் கவனிக்கவில்லை. அவர்கள் வந்து அவனது சட்டையைப் பற்றி இழுத்து கன்னத்தில் ஒரு அறை விட்டார்கள். இந்தத் தாக்குதலில் நிலை குலைந்தாலும் திடீரென்று நிகழ்ந்ததால் அவன் அழ ஆரம்பித்தான்.
"அழாத.. எங்கேடா பணம்?" இன்னொருத்தன் புடதியில் அடித்தான். சுண்டல் டப்பா மண்ணில் விழுந்து, விழுந்த வேகத்தில் மூடி திறந்து கொஞ்சம் கீழே கொட்டியது..

"முதலாளி இன்னிக்குத் தற்றேன்னாரு.. ராவு வாங்கியதும் கொடுத்திற்றேண்ணா.."

"இன்னிக்கு வரலை.. மவனே ஒன்னைப் பொளந்துட்டேன்.." அவர்கள் அவனை விட்டு விட்டு வேறு ஒரு திசையில் நடந்து சென்றார்கள்.

அவன் மெதுவாகக் குனிந்து சுண்டல் டப்பாவை எடுத்தான். பின் தமிழகராதியில் இருக்கவே முடியாத அத்தனை கெட்ட வார்த்தைகளையும் முனகிக் கொண்டே கீழே மண்ணில் சிதறி இருந்த சுண்டலை ஊதி ஊதி டப்பாவில் போட ஆரம்பித்தான். ஒரு வழியாய் சில நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பினான்.

"சுண்டல்.. சுண்டல்.." மீண்டும் தனது குரலை காற்றில் பதிவு செய்து கடற்கரையெங்கும் பரப்ப ஆரம்பித்தான்..

பௌர்ணமி ஜெகஜோதியாய் வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தது..

மன்மதன்
29-07-2004, 12:23 PM
15 நிமிட மெரினா கடற்கரையில் சுண்டல் பையனின் வாழ்க்கை.. ஒரு குறும்படம் பார்த்த திருப்தி..

அன்புடன்
மன்மதன்

இக்பால்
29-07-2004, 03:47 PM
ஒவ்வொரு வரியிலும் மனதைத் தாக்கும், சிந்திக்கும் வைக்கும் நிகழ்ச்சிகளைக்
கொண்டதாக பல சிறுகதைகளைப் படித்ததைப் போன்ற ஒரே ஒரு சிறுகதை.
பாராட்டுகள் என்றும் தொடரும்....-அன்பு அண்ணா.

இளந்தமிழ்ச்செல்வன்
30-07-2004, 08:09 PM
பலவித சம்பவங்கள் ஒருவரை மையப்படுத்தி. அருமை ராம் வழ்க்கம்போல்

rambal
31-07-2004, 05:04 PM
பௌர்ணமி..
அழகின் உருவகம்.. கவிஞர்களால் அதிகம் கைக் கொள்ளப்பட்ட பாடுபொருள்.
பௌர்ணமி கதை வாழ்வியல் எதார்த்ததை முன் வைக்கிறது..
அவலம் சுண்டல் எனும் சொல்லாக வெளிப்பட்டு காற்றெங்கும் விரவிப் பரவுகிறது..
சுண்டல் இந்த தேசத்தின் அவலம்.. ஓலம்..
ஒரு மரணத்தின் வெளிப்பாடு.. குழந்தையின் அழுகை.. குழந்தையை விற்கும் கொடுமை..
பௌர்ணமியை யாரும் ரசிக்கவில்லை.
பௌர்ணமியும் யாருக்காகவும் வரவில்லை..
தனிமனிதனின் விருப்பு வெறுப்புகள் பொதுவில் அரங்கேறும் இடமாக கடற்கரை..
அதில் பாதிப்பு ஏதும் இல்லாத மன விளிம்பில் இருக்கும் சுண்டல் விற்கும் பையன்..

தொடரும்.....

இளசு
01-08-2004, 07:30 AM
ராம்..

மீண்டும் உன் முத்திரைகள் பதித்த கதை..'

பௌர்ணமி என்ன.. இன்னும் பல நமக்காக வருவதில்லை..
ஆனாலும் தனி மனித ,மனம்
"உலகம் பிறந்தது எனக்காக"
எனப் பாடி மகிழ்வதும்
"உலகே மாயம்" என அழுது மாய்வதும்..

காட்சிகளை ஒரு பார்வையாளனாய் (மட்டும்)
வழங்கும் பாணி...

தொடர்க ராம்.. பாராட்டுகள்.

பாரதி
02-08-2004, 02:30 PM
வாழ்வின் இன்ப துன்பங்களை எளிய கதையின் மூலமாக சொல்லி இருக்கும் பாங்கு, சமூகத்தை பற்றிய பார்வை சிறப்பாகவே இருக்கிறது. நிலவைப் போன்றே பாரபட்சமின்றி எல்லோருக்கும் சமமாய் சிறுவனின் பதில்... பாராட்டுக்கள் ராம்.

rambal
14-08-2004, 05:54 PM
கதையை விமர்சித்த அண்ணனுக்கும் பாரதிக்கும் காலம்தாழ்ந்த நன்றிகள்..

kavitha
13-09-2004, 09:30 AM
மண்கலயத்தை உடைத்துப்போட்டு வருபவரிடம் "இங்கேலாம் நிக்காதே சார்" எனும் அளவிற்கு
மூணாம்கிளாஸ் படித்த பையனின் பௌர்ணமி உள்ளது.
ஒவ்வொரு நிகழ்விலேயும் சம்பவத்தின் உக்கிரத்தை "சுண்டல் சுண்டல்" வாசகம் மூலம்
ஏற்ற இறக்கத்துடன் கதை சொல்லவைத்திருக்கிறது. பாராட்டுகள்.