PDA

View Full Version : வெள்ளம்........



Nanban
12-04-2003, 02:57 PM
வெள்ளம்........


புகை வளையம் வளையமாக
மேலே மேலே கரைந்து போய்
கூரையை முட்டி முட்டித்
திரும்புகிறது -
கனவுச் சுவற்றில்
உன் நினைவுகளைப் போல.

தூங்க முயற்சித்து முயற்சித்து
கடைசியில்
தூங்காமலே போய்விடுவதைப் போல
விரட்ட முயற்சித்து முயற்சித்து
விரட்டாமலே விட்டுவிட்டேன்
உன் நினைவுகளை.

கை சோர்ந்து
சாண் என்ன, முழம் என்ன
அடித்துப் போ என்னை என
ஆற்று வெள்ளத்தில்
மூழ்கிப் போவோனாக
விட்டு விட்டேன் என்னை.

செத்துப் போய் மிதப்பதாக
நினைத்து
நினைவிழந்து மிதந்தேன்
நினைவலைகளில்.....

வெகுதூரம் போய் தள்ளியது
என்னைத் தள்ளிச் சென்ற
வெள்ளம் - தான் வடிந்த பின்பு.
கரையில் நான் ஏறினேன் -
புகை பிடிக்க விரும்பாதவனாக
முயற்சிக்காமலே
தூங்க முடிந்தவனாக
வெள்ளத்தை துழாய்ந்து
கரையேற சக்தியுள்ளவனாக.

எல்லாம் சரிதான் -
என் கைகடிகாரம் மட்டும் தான்
வெள்ளத்தில் எங்கோ தொலைந்து
போயிருந்தது.

rambal
12-04-2003, 06:00 PM
கால ஓட்டத்தில்
நினைவுகளாவது?
கடிகாரமாவது?
எல்லாம் போய்விடும் ஓர்நாள்..

அருமைத்தெரிவுகள்..
தொடரட்டும் உங்கள் பணி..

இளசு
12-04-2003, 09:01 PM
வாழ்விலே ஓர் இரவு....
நல்ல பதிவு..

lavanya
13-04-2003, 11:16 AM
கொஞ்சம் புரிய முதலில் சிரமமாக இருந்தாலும் அருமையான கவிதை...
பாராட்டுகள் நண்பருக்கு

poo
13-04-2003, 02:12 PM
தினமும் நாம் தொலைப்பது நாட்களை மட்டுமே... நன்றி நண்பரே..