PDA

View Full Version : நண்பன்.............Nanban
25-07-2004, 05:48 PM
நண்பன். . . . .
அவன் -
கொஞ்சம் கொஞ்சமாக
நெருங்கி வருகிறான்
ஒரு நமுட்டுச் சிரிப்புடன்.

ஒரேடியாகத் தொட்டுவிட
ஒரு தயக்கம் - யாருடைய
அனுமதிக்கோ காத்திருக்கும்
பொறுமையில்
நீர்த்தொட்டியின் விளிம்பில்
அமர்ந்திருக்கிறான்.

நீரில் மூழ்கிய செவிகளிலிருந்து
காற்று வெளியேறிய உஷ்ணம்
நீரில் வெடிக்கும் குமிழ்களில் தெரிகிறது.

நாசித் துவாரங்களை
வெளி நிறுத்தி
தலை முழுகி
விழி மலர்த்தி
உலகம் பார்த்த பொழுது
அவனின் மௌனம்
சலனத்துடன் அசைந்தாடுகிறது -
நீர்த்தொட்டியின் விளிம்பில்.

உலகின் அனைத்து ஓசைகளும்
விலகிவிட்டது என்னிடமிருந்து -
நுரையீரலில் முழங்கும் காற்றின்
ஓசை மட்டுமே
எங்கும் வியாபித்திருக்கிறது.

அவன் காத்திருக்கிறான்
பொறுமையுடன் -
நான் குளிப்பதையும்
என் நிர்வாணத்தையும்
பார்த்துக் கொண்டு.

எனக்கும்
அவனின் மௌனத்திற்கும்
உண்டான தூரத்தின்
நிசப்தத்தில்
அவன் பேசுகிறான் -
ஒரு அங்குல தூரத்தில்
காத்திருக்கிறேன் உனக்காக

ஒரு உதறலில் எழுந்து
உடலின் நிர்வாணம் துடைத்து
உடையுடன், உலகின் ஆசைகளையும்
சேர்த்து உடுத்திய பொழுது
மனம் விடை பகர்கிறது -

இன்றில்லை, மரணமே -
இன்னுமொரு நாள் சந்திக்கலாம்

thamarai
25-07-2004, 08:11 PM
நீரில் மூழ்கிய செவிகளிலிருந்து
காற்று வெளியேறிய உஷ்ணம்
நீரில் வெடிக்கும் குமிழ்களில் தெரிகிறது.

அருமையான கற்பனை...
நண்பனாய் வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள் நண்பன்.

இளசு
25-07-2004, 09:41 PM
மரண ஒத்திகைகள் நித்தமும் பலவிதம்.. பலமுறை..

உறக்கம், மயக்கம், முயக்கம் என பலவகை..

நிச்சய நிகழ்வு..

என்று, எப்படி, எங்கு என்பதில் அநிச்சயம்..

அதுதான் சுவாரசியம்..

காலனை காதலனாய் பாடியதைக் கேட்டதுண்டு..

இங்கே காத்திருக்கும் நண்பனாய்...

பாராட்டுகள் நண்பன்..

Narathar
26-07-2004, 08:00 AM
காத்திருக்கும் மரணத்தை நண்பன் கற்பனையில்
நேரில் பார்த்த மகிழ்ச்சி?!!!
இக்கவி வரிகளிள்

பாரதி
26-07-2004, 01:38 PM
எல்லோரையும் நண்பனாய் நினைக்கவும் ஒரு பெரிய மனம் வேண்டும்தான் நண்பரே...!

karikaalan
26-07-2004, 02:29 PM
"நான் கவிஞன்; எனக்கு மரணமில்லை", என்றார் கவியரசர்.

நண்பன்Ji, கவிஞனுக்கு மரணமேது? வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

rambal
26-07-2004, 02:55 PM
"நிர்வாணம்" - இந்த வார்த்தையை சரியான முறையில் பொருள் கொள்ளல் வேண்டும்.
நிர்வாணம் என்பது எல்லாவற்றையும் துறந்து மரணத்தை எதிர்கொள்ளல்..
முற்றும் துறந்து மரணம் என்பதை மகிழ்ச்சியோடு வரவேற்றல்... மரணத்தை அனுபவித்தல்..
இந்த மனநிலைக்கு இந்து மதத்தில் சமாதி என்று பெயர்.. முக்திக்கு ஏழு படிகள் இருக்கின்றன..
அதில் இறுதி நிலை சமாதி.. தம்மத்தில் (புத்தர் போதித்த தம்மம்) இறுதி நிலை
நிர்வாணம்.

அதை நண்பன் தனது வரிகளில் மிளிரவிட்டுள்ளார்.

அவன் காத்திருக்கிறான்
பொறுமையுடன் -
நான் குளிப்பதையும்
என் நிர்வாணத்தையும்
பார்த்துக் கொண்டு.


எனும் வரிகளில் நிர்வாணத்தை அடையும் முயற்சியில் இருப்பவனின் மனநிலை
தெளிவாகிறது. அவன் முழுதாய் நிர்வாணத்தை அடையட்டும் என்பதற்காகக் காத்திருக்கிறான்..
ஆனால், மனம் அவ்வளவு எளிதில் நிர்வாணத்தை எட்டுவதற்கு விடுவதில்லை..

ஒரு உதறலில் எழுந்து
உடலின் நிர்வாணம் துடைத்து
உடையுடன், உலகின் சைகளையும்
சேர்த்து உடுத்திய பொழுது
மனம் விடை பகர்கிறது -


இந்த வரிகள் மூலம் மீண்டும் நிர்வாணத்தைக் களைந்து விட்டு சாதரணமாகின்ற நிகழ்வை
காட்டியிருக்கிறார். அருமையான கவிதை.. நிறைய யோசிக்க வைத்த கவிதை..
பாராட்டுக்கள் நண்பன்..

Nanban
27-07-2004, 06:32 PM
நீரில் மூழ்கிய செவிகளிலிருந்து
காற்று வெளியேறிய உஷ்ணம்
நீரில் வெடிக்கும் குமிழ்களில் தெரிகிறது.

அருமையான கற்பனை...
நண்பனாய் வடித்த கவிதை அருமை.
வாழ்த்துக்கள் நண்பன்.

தலை முங்கி குளிக்கும் பொழுது, இந்த அனுபவம் ஏற்படும். அதிலும், காற்று வெளியேறும் பொழுது, காதினுள் ஏற்படும் குறுகுறுப்பான உணர்வுகள் அலாதியானவை. இவை கற்பனை அல்ல. நித்தம், நித்தம் குளிக்கும் பொழுது ஏற்படும் அனுபவம் தான். (என்ன, ஆறு, குளம் இதெல்லாம் இல்லாத இடத்திலே வாழ்ந்து விட்டதால், எல்லாம் தொட்டிகளில் குளித்த அனுபவம் தான். தொட்டி - bath tub)

நன்றி, தாமரை அவர்களே....

Nanban
27-07-2004, 06:43 PM
மரண ஒத்திகைகள் நித்தமும் பலவிதம்.. பலமுறை..

உறக்கம், மயக்கம், முயக்கம் என பலவகை..

நிச்சய நிகழ்வு..

என்று, எப்படி, எங்கு என்பதில் அநிச்சயம்..

அதுதான் சுவாரசியம்..

காலனை காதலனாய் பாடியதைக் கேட்டதுண்டு..

இங்கே காத்திருக்கும் நண்பனாய்...

பாராட்டுகள் நண்பன்..

நீர்த்தொட்டியில் குளித்த அனுபவம் தான் அது. காந்தியின் சுயசரிதையில், நீர் வைத்தியம் பற்றி எழுதியிருந்தார். நீரிலே மூழ்கி கிடப்பதே சுகானுபவம் தான் என்றிருந்தார். திடீரென்று தோன்றியது, ஏன் நாமும், அந்த மாதிரி ஒரு அனுபவம் பெறக் கூடாது? என்று தான். உடனே தொட்டியில் நீர் நிரப்பி, கொஞ்சம், கொஞ்சமாக அதனுள் மூழ்கிய பொழுது, அது ஒரு சுகமான அனுபவமாகவே இருந்தது. காதுகளில் நீர் நிரம்பி, அத்தனை ஒலிகளும் அடங்கிப் போன பொழுது, மூச்சுக் காற்றே, புயல் போல ஓசை எழுப்பியதைப் போன்ற உணர்வு. பின்னர், கொஞ்சம், கொஞ்சமாக நீரினில் மூழ்கி, விழிகளைத் திறந்த பொழுது, முதலில் கரித்தது. பின்னர் நன்றாகப் பழகிவிட்டது. அப்பொழுது தான், கூரையின் வெண்மை, நிசப்தம் இதெல்லாம் சிந்திக்கத் தூண்டியது - ஒரு இரண்டு நிமிடங்கள் - ஒரு அங்குலம் நீரில் மூழ்கினாலே போதும் - நிச்சயம் மரணம் தான். ஆ!!! மரணம் எத்தனை அருகினில் இருக்கிறது...!

ஏன், இந்த மரணம் எல்லோருக்குமே மிக அருகினிலே தான் இருக்கிறது. எபொழுது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். இத்தனை அருகினிலே இருந்தும், யாரும் அதை உணரவில்லை. அதைப் பற்றி நினைத்தாலே பயப்படுகிறார்கள். ஆசைகளையும் இச்சைகளையும் துறக்க விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். துறந்து விட்டதாக, மேம்போக்காக பேசுபவர்கள் கூட, உடல் நிர்வாணத்தைக் கூட பக்குவமாக கையாள இயலா நிலையில் இருப்பவர்கள் தான்....

நன்றி, இளசு.....

Nanban
27-07-2004, 06:48 PM
காத்திருக்கும் மரணத்தை நண்பன் கற்பனையில்
நேரில் பார்த்த மகிழ்ச்சி?!!!
இக்கவி வரிகளிள்

நேரில் பார்க்க இயலாது. ஏன் உணரக் கூட முடியாது. பார்க்கவோ, உணரவோ முடிகின்ற பட்சத்தில், நம்மை அவன் கவர்ந்து சென்றிருப்பான்.

மேலே எழுதிய வரிகள், ஒரு அனுபவம் தான். ஆழ்ந்த நிசப்தம், அதனால் எழுகின்ற பயம், கற்பனைகள் கலந்த ஒரு சிந்தனை. அவ்வளவு தான்.

மரணத்தை நேரிலே பார்க்கவோ, உணரவோ இன்னும் நிறையப் பக்குவப்பட வேண்டும்.....

நன்றி, நாரதரே.....

Nanban
27-07-2004, 06:54 PM
எல்லோரையும் நண்பனாய் நினைக்கவும் ஒரு பெரிய மனம் வேண்டும்தான் நண்பரே...!

இரத்தமும், சதையுமான நண்பர்களைக் காண்பதென்றால் மகிழ்ச்சி தான். ஆனால், எந்த உருவமும் அற்ற, குரலற்ற, மணமற்ற, தன் வருகையை முன்கூட்டி அறிவித்துக் கொள்ளாத ஒரு நண்பனை எங்கணம் மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியும்...?

எந்தவித உணர்ச்சிகளுமின்றி, ஒரு யதார்த்தமான சிந்தனை.... அத்தனை தான். நண்பன் என்று பெயர் வைத்தது ஒரு முன்னெச்சரிக்கை உணர்வு தான்.... கொஞ்சம் நெருக்கமாக வைத்துக் கொள்வோம் - பின்னாளில் எப்போதாவது தேவைப்படலாம் என்று தான்....

சிந்திப்பதற்கு தடையேதுமில்லை என்றாலும், நிஜத்தில், கொஞ்சம் சலனப்படுத்தவே செய்யும் - இந்த மரணம்....

Nanban
27-07-2004, 06:58 PM
"நான் கவிஞன்; எனக்கு மரணமில்லை", என்றார் கவியரசர்.

நண்பன்Ji, கவிஞனுக்கு மரணமேது? வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

கவியரசர், விட்டுச் சென்ற கவிதைகளும், பாடல்களும் இன்றும் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும். அது போலத் தான் எல்லா கவிஞர்களும்.

இன்னும் சொல்லப் போனால், எல்லா சாதனையாளர்களுமே, அத்தனை மெனக்கெட்டு, சாதனைகளைப் படைப்பதே, காலத்தை வெல்லும் - காலனை வெல்லும் முயற்சிகள் தான். தங்கள் சாதனைகள் மூலம், மரணத்தைக் கடந்தும் தங்கள் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்ற முயற்சிகள், ஆசைகள் தான் சாதனையாளர்களை தூண்டிக் கொண்டே இருக்கிறது.....

நன்றி, கரிகாலன் அவர்களே....

Nanban
27-07-2004, 07:10 PM
"நிர்வாணம்" - இந்த வார்த்தையை சரியான முறையில் பொருள் கொள்ளல் வேண்டும்.
நிர்வாணம் என்பது எல்லாவற்றையும் துறந்து மரணத்தை எதிர்கொள்ளல்..
முற்றும் துறந்து மரணம் என்பதை மகிழ்ச்சியோடு வரவேற்றல்... மரணத்தை அனுபவித்தல்..
இந்த மனநிலைக்கு இந்து மதத்தில் சமாதி என்று பெயர்.. முக்திக்கு ஏழு படிகள் இருக்கின்றன..
அதில் இறுதி நிலை சமாதி.. தம்மத்தில் (புத்தர் போதித்த தம்மம்) இறுதி நிலை
நிர்வாணம்.

அதை நண்பன் தனது வரிகளில் மிளிரவிட்டுள்ளார்.

அவன் காத்திருக்கிறான்
பொறுமையுடன் -
நான் குளிப்பதையும்
என் நிர்வாணத்தையும்
பார்த்துக் கொண்டு.


எனும் வரிகளில் நிர்வாணத்தை அடையும் முயற்சியில் இருப்பவனின் மனநிலை
தெளிவாகிறது. அவன் முழுதாய் நிர்வாணத்தை அடையட்டும் என்பதற்காகக் காத்திருக்கிறான்..
ஆனால், மனம் அவ்வளவு எளிதில் நிர்வாணத்தை எட்டுவதற்கு விடுவதில்லை..

ஒரு உதறலில் எழுந்து
உடலின் நிர்வாணம் துடைத்து
உடையுடன், உலகின் சைகளையும்
சேர்த்து உடுத்திய பொழுது
மனம் விடை பகர்கிறது -


இந்த வரிகள் மூலம் மீண்டும் நிர்வாணத்தைக் களைந்து விட்டு சாதரணமாகின்ற நிகழ்வை
காட்டியிருக்கிறார். அருமையான கவிதை.. நிறைய யோசிக்க வைத்த கவிதை..
பாராட்டுக்கள் நண்பன்..

நன்றி ராம்பால், விரிவான விமர்சனம், மற்றும் விளக்கத்திற்கு....

நிர்வாணம், முக்தி இதெல்லாம் பேசுபவர்கள் மனதளவில் அதை அடைய முயலுவதேயில்லை. அவ்வப்பொழுது, ஆடைகளை உடுத்துக் கொள்கிறார்கள்.

தியானம் போல, பிரார்த்தனை செய்யும் பொழுது, இத்தகைய "துறத்தல்" எண்ணங்கள் எழும். பிரார்த்தனை முடிந்து வெளிவரும் பொழுது, அந்த 'துறத்தல்" எண்ணங்கள் போய், 'துரத்தும்' எண்ணங்கள் எழுந்து விடுகிறது - ஆமாம், ஆசைகள் அவர்களைத் துரத்த, அவர்கள் ஆசைகளைத் துரத்த, ஒரு வட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்தால், இறுதியில், யார், யாரை துரத்துகிறார்கள் என்றே அறிய முடிவதில்லை.

இக்கவிதை பல காலம், பல சிந்தனைகளாக இருந்தவை தான். குளியலறைத் தொட்டியில் நீரில் மூழ்கிக் கிடக்கும் பொழுது, மனதில் ஏற்பட்ட ஒரு அமைதியில், அடங்கிக் கிடந்த சிந்தனைகள் வெளிக் கிளம்பியதனால் ஏற்பட்ட தூண்டுதல் தான் அந்தக் கவிதை. எங்கெங்கு அமைதி நிலவுகிறதோ - அப்பொழுதெல்லாம், மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் வலம் வரத் தான் செய்கின்றன.

இதுவே ஒரு முரண் தான். போர்க்களத்தில், மனிதன் மரணத்தை உணர மறுக்கிறான். எத்தனையோ பேர்களைக் கொன்றால் கூட, அந்த மரணம் உணர்தல் ஏற்படுவதில்லை. ஆனால், அமைதியான நேரத்தில், அந்த உணர்வுகள் தாக்குதல் தொடுக்கின்றது.

வியப்பு தான் - சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் எத்தனையோ உள்ளன....

பரஞ்சோதி
28-07-2004, 07:59 AM
நல்ல கவிதையும், அதன் பின் வந்த விமர்சனங்களும் சிந்திக்க வைக்கின்றன.

kavitha
28-07-2004, 11:42 AM
இன்றில்லை, மரணமே -
இன்னுமொரு நாள் சந்திக்கலாம்
_________________
நண்பன்
ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வரி நினைவுக்கு வருகிறது.
மரணத்தை வாழ்க்கையின் மறுகோடியில் ஏன் விட்டுவைக்கவேண்டும்? நமக்குப்பக்கமாகவே வைத்துக்கொள்வோமே! அப்போது புரியும் மரணம் என்பது எதிலும் உண்டு என்பது.

நெருங்கிய அனுபவம் எனக்கு உண்டு.. கிணற்றில் மூழ்கி பின்பு எழுந்திருக்கிறேன் சகோதரிகளுடன் விளையாடுகையில். இக்கவிதையையும் அத்தகையதொரு பாவத்தில் அனுபவிக்க முடிகிறது. ஆனால் அது எதேச்சையாக நடந்தது.. நண்பருக்கு தைரியம் அதிகம் தான்!

ராம்பால் அவர்களின் விளக்கமும் அருமை.

Nanban
31-07-2004, 07:40 PM
பரஞ்சோதி, கவிதா இருவருக்கும் நன்றிகள்....நண்பருக்கு தைரியம் அதிகம் தான்!


இதிலே தைரியம் என்னவென்று தெரியவில்லை. இந்த விஷயத்தில், எனக்கு இன்னமும் தெளிவில்லை தான். பயம்மா, தைரியமா என்றெல்லாம் இன்னமும் அலசத் தொடங்கவில்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துகளில் எனக்கும் ஈடுபாடு உண்டு.

நன்றி கவிதா.....

kavitha
16-08-2004, 05:18 AM
இதிலே தைரியம் என்னவென்று தெரியவில்லை.
நீரில் இறங்கிய பிறகு குளிர் இருக்காது.அந்த தைரியத்தைத்தான் சொன்னேன் நண்பரே! நன்றி!

Nanban
16-08-2004, 06:41 PM
நீரில் இறங்கிய பிறகு குளிர் இருக்காது.அந்த தைரியத்தைத்தான் சொன்னேன் நண்பரே! நன்றி!

துபாயில் குளிர்ந்த நீர் வேண்டுமென்றால், குளிர்விக்கும் எந்திரம் பொருத்திக் கொண்டால் தான் உண்டு. இல்லையென்றால், கொதிக்க கொதிக்க வென்னீர் தான்....