PDA

View Full Version : திருப்பிக்கொடு!!poo
19-07-2004, 11:35 AM
என் மனதினைப் பிசையும் மழலைச்செல்வங்களுக்கு சமர்ப்பணம்.

காக்காய்க் கடி கடித்து
காயா பழமா விட்டு
சாதிசாக்கடைகளுக்கு அணைக்கட்டாய்...
நாளைய சமுதாயத்திற்கு படிக்கட்டாய்..

கோர்த்துக்கொண்ட விரல்கள்
வளமான இந்தியாவின் வரைபடம்
வடித்துக்காட்டிய சிற்பிகளாய்....

வந்ததோ சோதனைக்காலம்...
கோலங்கள் பூர்த்தியாகும்முன்னே
புள்ளிகள் கலைந்த கொடூரம்..

ஊதாங்குழலில் சுவாசத்தை
தொலைக்கும் அம்மா...சமையற்கூடத்தில்...
வண்ணமயமான வாழ்க்கையை
எதிர்நோக்கும் அப்பா சாயப்பட்டறையில்...

தினப்படிக்கு அகவிலைப்படி ஏறாதாவென்ற
ஏக்கத்தில்...
வயிறுநிறைய வறட்சிகுறையாதாவென்ற
துக்கத்தில்..

இத்துணை துயரிலும்
தூணாக நிற்பாரென்றே
உன்னை துணையாக்கி
தலைவாரி பூச்சூடி பாடசாலைக்கு...
என்ன பிழைகண்டாய்...
ஏனப்பா பாடைசாலையாக்கி
எமையெல்லாம் சிலையாக்கினாய்?!

கொஞ்சும் மொழியில் சங்கீதம்...
சலங்கையொலி கேட்கவிருந்த
செவிகளில் சங்கொலி...

இறைவா...
எம்மை ஒலி(ளி)யிழந்தவனாக்கிவிட்டு
இசைத்திருக்கலாம் இந்த முகாரி ராகங்களை...

நஞ்சுகலக்காத மனங்கள்...
நாளைய விடியலைத்தேடுகையில்
இன்றைய இரவை நீட்டித்துவிட்டாயே?!!

கருவறை பிரவேசத்தில்
மணவறை மகிழ்ச்சியை மிஞ்சினோம்..
இந்த கல்லறை பயணத்தில்
பிணவறை செல்ல துடித்திடும்
எம் உணர்வுகளுக்கு என்ன பதில்?!!


இறைவா திருப்பிக்கொடு...

தேசத்தின் களைகளை
கலையவந்த எம் கருவிகளை....

நாளைய இருளுக்கு
விளக்கான எம் விடிவெள்ளிகளை...

சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....

மலர்வதற்குள் பறித்துச்சென்ற
எம் மனத்தோட்டத்து மல்லிகைகளை...

திருப்பிக்கொடு...

வேண்டுமெனில்
ஈடாக எனைத்தருகிறேன்...
இணையில்லா செல்வங்களை திருப்பிக்கொடுத்துவிடு....

இருந்தபடி இறந்துகொண்டிருக்க
விருப்பமில்லையெனக்கு!!!

mania
19-07-2004, 11:51 AM
என்ன ஒரு உணர்ச்சிகரமான பாடல்......இல்லை இல்லை உன் மனதில் ஓடும் எண்ணங்கள். அதை வார்த்திகளாய் நீ பரிமாறிய விதம்....கண்ணிலே நீரை வரவழைக்கிறது. இதயம் கனமாகிவிட்டது.........பூ.......உன்னிடம் ஒளிந்துள்ள கவிதை பசியை போக்க இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிதான் நடக்க வேண்டுமா.......
உருக்கத்துடன்
மணியா.............

Mano.G.
19-07-2004, 11:57 AM
இரண்டு சொட்டு கண்ணிர்
கருகி போன இந்த மலர்களுக்கு
அஞசலியாக அதோடு
மறுபடியும்
இதே இரண்டு சொட்டு கண்ணிர்
வராமல் தடுக்க
உங்கள் இறப்பு
பாடமாக எங்களுக்கு உணர்த்த

கவனமுடன் தவறுகள் நடக்கா
வண்ணம் காக்க
செய்திடுவோம் நாளை

கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம்.


மனோ.ஜி

மன்மதன்
19-07-2004, 12:05 PM
சொல்ல வார்த்தை இல்லை.. கனத்த மனத்துடன் படிக்கிறேன்.. வெறும் கவிதையாக தெரியவில்லை.. உள்ளக்குமுறல்.. அனைவரும் வெறுமனே படித்து முடித்துவிட்ட செய்தி.. இன்று பூவின் மனதில் கிளம்பிய பிராத்தனை பொறி..எல்லோர் மனதிலும் பரவ... மணியா சொன்னது போல பூவின் கவிதை பசிக்கு இது தானா நடந்திருக்க வேண்டும்..

ஆழ்ந்த அனுதாபத்துடன்
மன்மதன்

இளசு
20-07-2004, 07:08 AM
:medium-smiley-045:

பாரதி
20-07-2004, 04:13 PM
பார்க்கவும் முடியவில்லை...படிக்கவும் முடியவில்லை...
வாழ்க்கை இவ்வளவுதானா...?
என்ன கொடுமை...

அறிஞர்
21-07-2004, 07:41 AM
இந்த வாழ்க்கைதனை
என்ன சொல்ல.....

ஏங்கி தவிக்கும்
பெற்றோருக்கு
என்ன வார்த்தை...
சொல்லி தேற்றுவது.....

செய்தியை படிக்க படிக்க..... நெஞ்சம் தவிக்கிறது.....

உணர்ச்சிக்குவியலுக்கு நன்றி.. பூ

Nanban
21-07-2004, 04:19 PM
மிக மிக சோகமான நிகழ்வு... மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். அந்த குருவாகக் கருதப்படும் ஆசிரியர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள் - தப்பியோடுவதில். அதுவும் யாரும் அசையக்கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டு. அதை மீற நினைக்காதா - ஆசிரியரின் வார்த்தையே - கட்டளையே தேவ வாக்காக கருதிய குழந்தைகள் - கொடூர மரணத்தை சந்தித்திருக்கின்றனர். பல கேள்விகளை எழுப்பும் சம்பவம்.

ஆசிரியர்களாக யார் வேண்டுமானாலும் வந்துவிட முடியுமா? ஏதோ ஒரு வேலை என்ற அளவில் தான் இந்தப் பணிக்கு வரவேண்டுமா? ஏணியாக நாங்கள் இருக்கிறோம் என்று பல சமயங்களில் சொன்னாலும் - இன்று அதே ஏணிகள் வழியாக புதைகுழிக்குள்ளும் இறக்கி விட முடியும் என்று நிரூபித்து விட்டார்கள்.

சங்கம் வைத்து தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் ஆசிரியர் இயக்கங்கள் சிறிது நேரம் தன் உறுப்பினர்களிடம் மன வலிமையும், தியாக மனப்பான்மையும் தோற்றுவிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டால் நலம் என்றே நினைக்கிறேன்....

நடந்துவிட்ட இந்த சோகத்தில் - ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு இருப்பதாகவே கருதுகிறேன்....

அசன் பசர்
21-07-2004, 04:45 PM
முதலில் கோடிகளை வாங்கிக்கொண்டு கூரைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கொடுத்த அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் செருப்பாலடிக்கனும். ஏதாவது நடந்தபின்தான் முடிவெடுக்கும் வெட்கங்ககெட்ட இந்தியாவில் பிறந்ததற்காக நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

நாளையும் மறுதினமும் இதற்கான இரங்கல் கூட்டம் நடத்தவுள்ளோம் முடிந்தால் கலந்துக்கொள்க

தொடர்புகளுக்கு---
அசன் பசர் 050 5823764

kavitha
22-07-2004, 11:17 AM
- ஆசிரியரின் வார்த்தையே - கட்டளையே தேவ வாக்காக கருதிய குழந்தைகள் - கொடூர மரணத்தை சந்தித்திருக்கின்றனர்

கீழ்படிதலின் கீழே புதைக்கப்பட்ட உண்மை..
கண்ணீர் கரையடைங்காத சோகம்!
தாயின் மடியைச்சுண்ட செய்த அகோரம்!
அத்தனையும் பெண்பிள்ளைகள் என்பது அதைவிட கொடூரம்!

இதற்கு அரச மரத்தடிக் கல்வி எவ்வளவோ மேல்!
பணம் வசூலித்தும் இப்படி பாடாய் படுத்தவேண்டுமா?

இ.இசாக்
05-08-2004, 06:25 PM
என் பூ
மீண்டும் நெஞ்சம் கணக்கிறது
உம் கவிதையால்.

தொடரட்டும்
உம் கவிதை ஆர்வம் (மட்டும்)

சேரன்கயல்
25-08-2004, 05:32 AM
என் இனிய பூ...
நெஞ்சம் கனக்கிறது, அந்த சோகச் சம்பவத்தை நினைக்கும்போதும், உன் கவிதையை படிக்கும்போதும்...