PDA

View Full Version : சொல்.. (கவிதைத் தொகுப்பு) (விளக்க உரையுடன்)



rambal
15-07-2004, 02:46 PM
சொல்.. (கவிதைத் தொகுப்பு)

ஆதியிலே கனி என்ற
ஒரு சொல்
தீண்டத்தகாததாயிருந்தது..

அது ஆதி மனுஷியினால்
தீண்டப்பட்டு..
ஒரு வாக்கியமாவதையும்
கொஞ்சம் அதீதமாகி
வாசிப்புக்குள் அடங்காத
கதையாகவும் ஆனது..

இது ஒரு ஆதாம் ஏவாள்
பற்றிய கவிதையாயிருக்கும்
என்று நினைத்தால்
அது தவறு..

rambal
15-07-2004, 02:46 PM
டைரிக்குள் பதுக்கி
வைக்கப்பட்ட ரோஜாப்பூ
எனும் வாக்கியமானது
ஒரு ரோஜாச் செடியின்
ஆதி உணர்வை அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது..

பிரியத்திற்குரிய
மனுஷியின் கேசத்தில்
தவழ்ந்து திரிந்த ரோஜா
எனும் வாக்கியமானது
அவள் கேசத்தில் வீசும்
இயற்கையின் நறுமணத்தை
அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது...

பழைய டைரிக்குள்
பதுக்கி வைக்கப்பட்ட
ரோஜா எனும் வாக்கியமானது
இயற்கைக்கு விரோதமானது..

rambal
15-07-2004, 02:46 PM
கவிதையில் இரண்டு
வாக்கியங்களுக்குள்
நடுவில் தூக்கி எரியப்பட்ட
வார்த்தையானது
அவளைப் பற்றியதாக இருந்தது..

அது எரிந்து முடிந்த கணத்தில்
அந்த வார்த்தை அவனைப் பற்றியதாக
மறு பிறப்பெடுத்தது..

அவனைப்பற்றிய வார்த்தையையும்
எரித்து முடித்த பிறகு
அந்த வார்த்தை
அவளைப் பற்றியதாகவும்,
அவனைப் பற்றியதாகவும்
கொண்ட வாக்கியமானது..

அதையும் கொன்று முடித்த பிறகு
திரும்பிப்பார்த்தால்
எழுதி வைத்திருந்த கவிதை
சாம்பலாகியிருந்தது..

அவனும் அவளும் சாம்பலாகிப்
போன பொழுதில்
அவர்களைப் பற்றிய கவிதையும்
சாம்பலாகவே ஆகியிருந்தது..

rambal
15-07-2004, 02:47 PM
ரண்டு வார்த்தைகளுக்கு
இடையில் இருக்கும்
வெற்றிடப் பரப்பு நீ..

வெற்றிடம் என் கண்களுக்கு
தெரிவதில்லை என்ற
கோபம் உனக்கு..

வெற்றிடத்தில் காலவரையற்று
பறந்து கொண்டிருக்கும்
உன்னை
எந்த வெளியில் வைத்து
சந்திப்பதென்று தெரியாத
நிலையில்..

இரண்டு வார்த்தைகளுக்கு
நடுவில் இருக்கும்
வெற்றிடப் பரப்பு நீ..



வார்த்தை எனும் கவர்ச்சிகள் மட்டுமே கண்களுக்குத் தெரிய அந்த வார்த்தைக்கு இடையில் விடப்படும்
இடைவெளியில் அவளது பரிசுத்தமான காதல் இருப்பது தெரிவதில்லை.. அந்த இடைவெளி என்பது
வெண்மை.. பரிசுத்தம்.. இதைப் புரிந்து கொள்ளாததால் அவளுக்கு அவன் மேல் கோபம்..
பரிசுத்தமான அவளது காதலை எப்படிப் புரிந்து கொண்டு கை கொள்வது என்று தெரியாத
குழப்பம் அவனுக்கு.. ஆகையால்தான் அவன் அவளை புறக்கணித்து கவர்ச்சிகளில் திரிய..

அவள் வார்த்தைகளுக்கு நடுவில் இருக்கும் வெற்றிடத்தில் பரிசுத்த அன்புடன் அவனுக்காய்..

rambal
15-07-2004, 02:47 PM
வார்த்தைகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ ஒரு மனநோயாளி
எனும் வாக்கியம் கொண்டு..

நீ எனும் சொல்
உன்னிலிருந்து
ஆரம்பித்த கணமே
அது என்னை வந்தடைந்தது..

நான் எனும் சொல்
நீ எனும் ஒற்றைச் சொல்லால்
சொல்லவொண்ணா
அவதிக்குள்ளாகியது..

நீ எனும் அந்த ஒற்றைச் சொல்
நான் எனும் என் கைவசமிருந்த
சொல்லை தின்று
செரித்த பிறகு..

வார்த்தைகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ ஒரு மனநோயாளி
எனும் வாக்கியம் கொண்டு..

rambal
15-07-2004, 02:47 PM
போர்ஹேவை*
கால மாயவெளிக்குத் தள்ளிய
மணல்பிரதி* என் கைவசம்
இருந்தால்
அதில் இருக்கும்
வார்த்தைகளைக் கொண்டு
வங்கக்கடலில் தலை வைத்து
அரபிக்கடலில்
கால் நீட்டுவேன்..
நடுவிலிருக்கும்
வெளியில்
தத்தளிக்கும் உன் உடல்..



* போர்ஹே: லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். சிறுகதையில் இவருக்கென்று ஓர் இடம் உண்டு.
* மணல்பிரதி: போர்ஹே எழுதிய சிறுகதையின் தலைப்பு..

rambal
15-07-2004, 02:48 PM
சொல் எனும் சொல்லை
சொல்தின்று கொண்டிருந்தது..
இப்படியாக ஆரம்பிக்கும்
வாக்கியம்
நிறைவு பெறுமானால்
அதன் இடைவெளியில்
புகுந்து
காலத்தைக் கடந்து
உன்னை சந்திப்பேன்..

சொல் எனும் சொல்லில்
நான், நீ, பறவை,
ஆகாயம், காற்று, வெளி,
பாழ், தீ...

சொல் எனும் சொல்லில்
அடங்கியிருக்கிறது
நம்மைப் பற்றிய
மதிப்பீடுகளும்,
மதிப்பீடு எனும்
சொல்லில் அடங்கியிருக்கிறது
நம்மைப் பற்றிய
அடுத்தவர் பார்வைகளும்,
பார்வைகளும் எனும்
சொல்லில் அடங்கியிருக்கிறது
நாகரீகமும்,
நாகரீகம் எனும் சொல்லில் அடங்கியிருக்கிறது
காலத்தை கண்ணாடிக்குள்
அடக்கிய திறமையும்,
கண்ணாடி எனும் சொல்லில்
அடங்கியிருக்கிறது
அனைவரின் மனசாட்சியும்,
மனசாட்சி எனும்
சொல்லில் அடங்கியிருக்கிறது
நான், நீ, பறவை,
ஆகாயம், காற்று, வெளி,
பாழ், தீ...

இவைகள்
அத்தனையையும்
சொல் எனும் சொல்லை.....
(முதலில் இருந்து படிக்க)

rambal
15-07-2004, 02:48 PM
ஆதியில்
வடை சுட்டுக்கொண்டிருந்த
பாட்டிக் கதை
நிலவை காட்டிச்
சொல்லப்பட்ட தருணங்களில்
ஒரு எழுத்தாளன்
சொற்களைப் பற்றி
சிந்திக்க ஆரம்பித்த
கணத்தில்
சொற்கள் அவன் எனும்
சொல்லுக்குள் குடி புகுந்த
வேளையில்
இந்தக் கவிதை
ஆரம்பமாகிறது..

rambal
15-07-2004, 02:51 PM
சொல்..

இந்த ஒரு சொல் கொண்டு
ஒரு தொகுப்பு மாதிரி
இல்லாவிட்டாலும்
ஒரு பத்துக் கவிதையாவது எழுத முடியுமா
என்று ஒரு சந்தேகம்..

அதன் விளைவுதான் இந்தத் தொகுப்பு..

இது ஒரு வித்யாசமான வாசிப்பணுவமாக இருக்கும்..

இந்தக் கவிதைகள் அனைத்தும்
ஒரு வகை கணக்குதான்..
புதிர் போல் இருக்கும்.

புதிரை அவிழ்த்து விடையைக் கண்டுபிடித்தால்
பல பரிமாணங்களில் காட்சியளிக்கும்
எனும் சொல்லோடு இந்தப் பின்னுரை
முடிவுக்கு வருகிறது..

rambal
15-07-2004, 04:56 PM
உன்னைப் பற்றிய செய்தி
புராணகாலத்து கல்வெட்டு ஒன்றில்
ஒரு சொல்லால்
பதியப்பட்டிருந்தது..

அந்த ஒரு சொல்லைக் கொண்டு
உன்னை தேடியலைகையில்
உன் ஊர், ஆதி தெய்வம்,
இனம், மொழி, இரவு நேரத்து
அனாதிப் புலம்பல்
என்ற கட்டமைப்புகள்
கொண்ட கூட்டு வாக்கியமாய்
விரிவு கொண்டு
என்னைக் குழப்ப
உன்னைத் தேடியலையக்
காரணமாயிருந்த அந்த
ஆதிச் சொல்
என்னிலிருந்து காணாமல் போயிருந்தது..

அறிஞர்
16-07-2004, 04:18 AM
என்ன ராம்பால்... ஒரேடியாக... அள்ளி கொடுத்து விட்டீர்கள்...

அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள்

Narathar
16-07-2004, 06:58 AM
ராம்பால் நடையென்றாலே அதில் தனிப்பாணியிருக்கும்
அந்த முத்திரை இந்த கவித்தொகுப்பிலும், வாழ்த்துக்கள் ராம்பால்!!
மீண்டும் உங்கள் வரிகளை தமிழ் மன்றில் காண்பதில் மகிழ்ச்சி

rambal
18-07-2004, 10:01 AM
பாராட்டிய நாரதருக்கும், அறிஞருக்கும் என் நன்றிகள்..
இது பற்றிய விளக்கவுரையுடன் விரைவில்..

இக்பால்
18-07-2004, 10:40 AM
நிறைய சிந்திக்க வைக்கும் கவிதை என நினைக்கிறேன். ஆனால் அந்த
அளவுக்கு மூளை வேலை செய்ய மாட்டேன் என்கிறது. ஆகவே தம்பிக்கு
எழுதியதற்கும், விளக்கவுரை தருவேன் என்றதற்கும் நன்றி கூறி காத்து
இருக்கிறேன். -அன்புடன் அண்ணா.

இளசு
19-07-2004, 06:20 AM
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை என்பதை
கண்ணதாசனிடத்திலும்...

எந்த சொல் நம்முடையது.. எங்கிருந்து வந்தது.. எங்கே போவது..?
நாம் அனைவருமே சொல்கடத்திகள் என்பதை உன்னிடத்திலும் கற்றவன் நான்..


இத்தனை புத்துணர்வாய் இத்தனை தந்தமைக்கு பாராட்டுகள் ராம்..

விளக்கவுரைக்காய் காத்திருக்கிறேன்..

rambal
19-07-2004, 03:34 PM
முதல் கவிதை:

விதிகளை மீறாதிருந்தால் மாற்றங்கள் ஏதும் இல்லை..
ஆதியிலே கனி எனும் சொல் என்பது விதிகளைக் குறிக்கிறது..
அதைத் தீண்டாமல் இருக்கும் வரை எல்லோரும் ஆதி மனிதனின் புனிதத்தைக் கொண்டிருக்கிறான்..
கனியைத் தீண்டி விதிமுறைகளை மீறி.. கதை இப்படியாகத்தான் ஆரம்பமாகிறது.. அனுபவங்கள் கிடைக்கிறது..

இது எல்லோருடைய பொதுவான வாழ்க்கையைக் குறிப்பதால் ஆதாம், ஏவாள் பற்றிய கவிதை அல்ல..
உங்களைப் பற்றிய கதைதான் இது..

rambal
19-07-2004, 03:35 PM
இயற்கையின் அழிவுகள் பற்றிய கவிதை இது..

இயற்கையை தனது போக்கில் கை கொள்ளும் மனநிலைதான் பழைய டைரியாகவும் பதுக்கி வைக்கப்பட்ட ரோஜாவுமாக
காட்சியளிக்கிறது.. நாகரீக மோகத்தில் செயற்கையில் எல்லை மீறிய நிகழ்வுகளால் இயற்கை பாதிக்கப்படுகிறது..

Nanban
21-07-2004, 04:44 PM
பல கவிதைகளை ஒரே நேரத்தில் அளித்து திக்கு முக்காட வைத்தமைக்கு நன்றி...

வித்தியாசமான வாசிப்பனுபவமாக இருக்கும் என்று சொல்லியே எழுதி இருக்கிறீர்கள். ஆமாம் - வித்தியாசமான வாசிப்பனுபவம் தான்.

கவிதை வாசிக்கும் பொழுது - கவிதையின் உள்ளே புகாமல், " இதில் எனக்கு பங்கில்லை - ஆனால், நிகழ்ந்தது - அதைச் சொல்லுகிறேன் உங்களுக்கு" என்ற தொனி தெரிகிறது. அதனாலயே மீண்டும் மீண்டும் வாசித்தால் மட்டுமே புரியும்.

கவிதைகளைப் பற்றிய எனது முழுமையான விமர்சனம் - பின்னர்...

kavitha
22-07-2004, 11:21 AM
என்னப்பா... தினம் வந்து பார்த்தாலும் பெரிய தலைகள் எல்லாம் எஸ்கேப்பிடறாங்க... ராம்பால், விளக்கம் எல்லாம் தர என்னிடம் சரக்கில்லை.. அப்படி வந்து எட்டிப்பார்த்திட்டு போறேன்.. (சில சமயம் பல்பு எரியலாம்)

rambal
22-07-2004, 01:33 PM
பாராட்டிய அனைவருக்கும் நன்றி..
நண்பனின் விமர்சணத்திற்குப் பிறகு தொகுப்பு தொடரும்..

rambal
23-07-2004, 07:14 PM
வாழ்க்கை எனும்
ஒற்றைச் சொல்லுக்குள்
ஒரு கதை, ஒரு கவிதை,
ஒரு வாழ்க்கை
இருக்கிறது..

தனக்குள் அனைத்தும்
அடங்கியிருந்தும்
வாழ்க்கை வெறும்
வெற்றுச் சொல்லாகவே
இருக்கிறது..

தனித்து இருக்கும்
ஒற்றைச் சொல்லில்
பலதும் இருக்கிறது..

பலதிருந்தாலும்
இல்லாததாகவே
வெற்றுச் சூழலுக்குள்
தள்ளி தன்னை நோக்கி
தேடவைக்கும்
தனித்துவமும் இருக்கிறது..

எல்லோரிடமிருந்தாலும்
எவராலும்
உணரமுடியாததாகவே
இருக்கிறது..

உள்ளுக்குள்
ஒளிந்து கொண்டு
வெளியில் தேட வைப்பதாகவே
இருக்கிறது..

வாழ்க்கை எனும்
ஒற்றைச் சொல்லுக்குள்
ஒரு கதை, ஒரு கவிதை,
ஒரு வாழ்க்கை
இருக்கிறது..

kavitha
24-07-2004, 09:07 AM
ஒரு கதை, ஒரு கவிதை,
ஒரு வாழ்க்கை
இருக்கிறது..
எனக்கு எல்லாமே ஒரே பொருளாய் தோன்றுகிறது....

Nanban
04-08-2004, 07:26 PM
சொல்.. (கவிதைத் தொகுப்பு)

ஆதியிலே கனி என்ற
ஒரு சொல்
தீண்டத்தகாததாயிருந்தது..

அது ஆதி மனுஷியினால்
தீண்டப்பட்டு..
ஒரு வாக்கியமாவதையும்
கொஞ்சம் அதீதமாகி
வாசிப்புக்குள் அடங்காத
கதையாகவும் னது..

இது ஒரு ஆதாம் ஏவாள்
பற்றிய கவிதையாயிருக்கும்
என்று நினைத்தால்
அது தவறு..
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...


விதி மீறல் என்பது இன்றல்ல; நேற்றல்ல - உலகத்தில் இறைவன் மனிதனை இறக்கி விட்ட நாளிலிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும் காரியம் ஆகும். இந்த விதி மீறல் இல்லையேல், மனிதம் இல்லை. அவனுடைய தீராத வேட்கையும், அழிவும், ஆக்கமும், படைப்புச் சக்தியும் மற்றும் எல்லாமும் அற்றுப் போயிருக்கும். மனிதம், மிருகம் ஆகியிருக்கும். உணவிற்காக வேட்டையாடுதல், இனவிருத்திக்காக உடலுறவு, ஓய்விற்காக உறக்கம், உடல் நலத்திற்காக கழித்தல் என்ற விதிகளுடன் மனிதம் முடிந்து போயிருக்கும்.

எந்த ஒரு காரியத்தின் பின்னும், நல்லது, கெட்டது ஆகிய விளைவுகள் எழத்தான் செய்கிறது.

கெட்டது - சமயங்கள் கற்பிக்கும் விளைவுகள். மன்னிப்பு கேள் - திருந்து. மன்னிப்பு கேட்பதற்கும், அருளுவதற்கும் மதங்கள் உண்டாகின. நடந்த விஷயம் கெட்டது என்ற கோட்பாடுடன் ஒரு ஆப்பிள் தின்ற விஷயம் அணுகப்பட்டது.

நல்லது - சிந்தனையாளர்கள் வழியில் - பரீட்சித்து பார்ப்பதும், புதியவற்றை முயற்சி செய்வதும் தவறாகாது. நிகழ்ந்த விளைவுகள் கெட்டது என்றால், அதை நிவர்த்திக்க வழிகள் தேடி மீண்டும் முயற்சிக்கலாம். ஆனால் முதல் முயற்சிக்கு மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை. முதல் முயற்சி செய்தவன் சந்ததியினர் வாழ்நாள் பந்தமும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படவேண்டியதில்லை என்பதே சிந்தனையாளர்கள் கருத்து.

சிந்திப்பதை விட, மன்னிப்புக் கேட்பது, பலருக்கும் எளிதாக இருந்தது. அதனால், சமயங்கள் பாதுகாப்பானதாக கருதி அதனுள்ளே ஐக்கியமாகி விட்டனர். ஆக மனித இனம் இரண்டு பிரிவாகியது. ஒன்று தான் தவறு செய்ததாக மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பது. மற்றொன்று தான் தவறு செய்யவில்லை - அதனால், செய்யாத தவறுக்கு உருகி, உருகி மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பது. ஆக, இந்த ஆப்பிள் மூலம் நடந்த இந்த விதி மீறல், தாம், ஏவாளின் கதை மட்டுமன்றி - மனித இனத்தின் முழுமைக்குமான கதை ஆயிற்று. ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ அவரவர் விருப்பம் என்ற அளவில் இந்த ஊசாலாடும் போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தால் அனைவரும் ஏதோ ஒரு வகை நிம்மதியை கைகொண்டிருப்பர். ஆனால் அந்த நிம்மதி கிட்டாமல் தொடர்கதை ஆகிப் போனது தான் விபத்து. எல்லோரும் சம்பந்தப்பட்ட விபத்து.

*****************************




டைரிக்குள் பதுக்கி
வைக்கப்பட்ட ரோஜாப்பூ
எனும் வாக்கியமானது
ஒரு ரோஜாச் செடியின்
ஆதி உணர்வை அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது..

பிரியத்திற்குரிய
மனுஷியின் கேசத்தில்
தவழ்ந்து திரிந்த ரோஜா
எனும் வாக்கியமானது
அவள் கேசத்தில் வீசும்
இயற்கையின் நறுமணத்தை
அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது...

பழைய டைரிக்குள்
பதுக்கி வைக்கப்பட்ட
ரோஜா எனும் வாக்கியமானது
இயற்கைக்கு விரோதமானது..
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...

ரோஜா செடி மட்டுமல்ல - எந்த ஒரு பூக்கும் செடிக்கும், கொடிக்கும், மரத்திற்கும் இயல்பானது - பூப்பூப்பது. அதன் ஆதி உணர்வு என்பது பூப்பூக்கும் அதன் இயல்பு.

இயல்பு பிறழ்ந்து இன்பம் அனுபவிக்கத் துடிப்பது மனித இயல்பு. இந்த முரண்பாட்டில் தான் அழிவுகள் நிகழ்கிறது. இயல்பை ஏற்க மறுக்கும் மனித இயல்பு, மலரை - அதன் காம்பு, இலை, முட்கள், தண்டு, வேர் என்று அதன் இயல்போடு பார்க்கத் தெரிவதில்லை. அந்த அழகை பறிக்க வேண்டும் - அந்த மலரின் இயல்புகளை அழித்து, தன் சொந்தமாக்க வேண்டும் என்ற வெறியில் இயங்குகிறோம். அதுவே அழகான பூ ரோஜா என்ற சிறு வாக்கியத்தை அழித்து - ஒரு பெண்ணின் கூந்தலில் பொருத்தி, பின் அப்பெண்ணின் கூந்தல் மணம் இயல்பானதா - இல்லை, மலர்கள் சூடியதால் வந்ததா என்று வாக்கியம், வாக்கியமாக கவிதைகளும், விளக்க உரைகளும் எழுதி இன்பம் துய்க்கிறோம். பின்னர் அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்து தவறி விழுந்த மலரை எடுத்துப் பதுக்கி வைக்கிறோம் - ஒரு அழகிய உறவின் நினைவாக, ஒரு இழந்த காதலின் அடையாளமாக.

ஒரு காதல் கிடைக்கவில்லை என்பதாலேயே அந்த மலர் தண்டனை பெறுகிறது. நசுக்கப்படுகிறது. இது இயற்கைக்கு முரணானது அல்லவா?

*****************


கவிதையில் இரண்டு
வாக்கியங்களுக்குள்
நடுவில் தூக்கி எரியப்பட்ட
வார்த்தையானது
அவளைப் பற்றியதாக இருந்தது..

அது எரிந்து முடிந்த கணத்தில்
அந்த வார்த்தை அவனைப் பற்றியதாக
மறு பிறப்பெடுத்தது..

அவனைப்பற்றிய வார்த்தையையும்
எரித்து முடித்த பிறகு
அந்த வார்த்தை
அவளைப் பற்றியதாகவும்,
அவனைப் பற்றியதாகவும்
கொண்ட வாக்கியமானது..

அதையும் கொன்று முடித்த பிறகு
திரும்பிப்பார்த்தால்
எழுதி வைத்திருந்த கவிதை
சாம்பலாகியிருந்தது..

அவனும் அவளும் சாம்பலாகிப்
போன பொழுதில்
அவர்களைப் பற்றிய கவிதையும்
சாம்பலாகவே கியிருந்தது..
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...

ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு தானே கவிதை? ஒரு கவிதை எழுதும் பொழுது, வாக்கியங்கள் அமைக்கும் பொழுது, அவளைப்பற்றிய கவிதைகள் தான் முதலில் வருகிறது. எல்லா கவிஞனும் அனுபவிக்கும் அந்த உணர்வுகளுக்குத் தான் முதல் இடம். பின்னர் தான் மற்ற அனுபவங்கள், விடயங்கள். அவன் எழுதிய கவிதை எரிந்து போகிறது - அவன் கவிதையாகப் பாவித்த வடிவம் அல்லது உணர்வு. இரங்கல் பாக்கள் அவனின் காதலைப் பற்றியதாகவும் தான் இருக்கிறது.

அவனும் - படைத்தவனும் - ஒரு சமயத்தில் எரிந்து போன பொழுது - அந்தக் கவிதையை வாசித்து இரங்குபவர்களின் அனுபவம் - அவன், அவள் இருவர் பற்றியதாகவும் இருக்கிறது. வாக்கியங்கள் இருவருக்காகவும் எழுகிறது - புதிய கவிதையாக. பழைய கவிதை மக்கிப் போய் மறக்கப் படுகிறது. சாம்பலாகப் போகிறது.

காலம் காலமாக, இந்தக் கவிதைகள் உண்டாவதும், வாசிக்கப்படுவதும், விளக்கப்படுவதுமாகத் தான் இருக்கிறது. புதிய புதிய காதலர்கள் வருவதும் போவதுமாகத் தான் இருக்கின்றனர். எழுதப்படும் கவிதைகள், உணர்வுகளை புதியவை வந்து அழித்து விட்டுப் போகிறது. இது ஒரு முடிவில்லா சக்கரம்.





இரண்டு வார்த்தைகளுக்கு
இடையில் இருக்கும்
வெற்றிடப் பரப்பு நீ..

வெற்றிடம் என் கண்களுக்கு
தெரிவதில்லை என்ற
கோபம் உனக்கு..

வெற்றிடத்தில் காலவரையற்று
பறந்து கொண்டிருக்கும்
உன்னை
எந்த வெளியில் வைத்து
சந்திப்பதென்று தெரியாத
நிலையில்..

இரண்டு வார்த்தைகளுக்கு
நடுவில் இருக்கும்
வெற்றிடப் பரப்பு நீ..



வார்த்தை எனும் கவர்ச்சிகள் மட்டுமே கண்களுக்குத் தெரிய அந்த வார்த்தைக்கு இடையில் விடப்படும்
இடைவெளியில் அவளது பரிசுத்தமான காதல் இருப்பது தெரிவதில்லை.. அந்த இடைவெளி என்பது
வெண்மை.. பரிசுத்தம்.. இதைப் புரிந்து கொள்ளாததால் அவளுக்கு அவன் மேல் கோபம்..
பரிசுத்தமான அவளது காதலை எப்படிப் புரிந்து கொண்டு கை கொள்வது என்று தெரியாத
குழப்பம் அவனுக்கு.. கையால்தான் அவன் அவளை புறக்கணித்து கவர்ச்சிகளில் திரிய..

அவள் வார்த்தைகளுக்கு நடுவில் இருக்கும் வெற்றிடத்தில் பரிசுத்த அன்புடன் அவனுக்காய்..

________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...



இரண்டு வார்த்தைகளுக்கு இடைப்பட்ட வெற்றிடம் - மௌனம். அது பேசாது. மௌனத்தை உணரும் மனம் வேண்டும். சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாமல் விடப்பட்ட வார்த்தகளின் - மௌனத்தின் வலிமை அதிகம்.

எதுவும் எழுதப்படாத பொழுது, அந்த இடம் வெண்மையாகத் தான் இருக்கிறது. இந்த மௌனத்தை - இந்த வெண்மையைப் புரிந்து கொள்ளாமலே, மேலும், மேலும் எழுதி, வெணமையைப் புறக்கணித்து, மௌனத்தை துறந்து - இரைச்சல் காடான வெளிப்புறங்களில் தேடித்திரிபவன் மீது கோபம் வரத்தான் செய்யும் - அவன் அகத்தே குடி கொண்டிருக்கும், மௌனத்தில் இறைஞ்சும் அவளின் (அவனின் - இறைவன் என்று கொண்டால்) அருகாமையை உணராமலே போய் விடுகிறான். எல்லையற்ற பரப்புகளில் இருக்கும் வெற்றிடங்களில், மௌன தேசங்களில் நின்று கூவி, வெற்றிடத்தையும், மௌனத்தையும் தன் இரைச்சலால், கூப்பாட்டால் கலைத்துக் கொண்டே இருக்கும் இவன் கேட்கிறான் - எங்கே சந்திப்பது என்று.?

அவனுக்குத் தெரியுமா? சந்திப்பதற்கு இரைச்சலை நிறுத்த வேண்டும் - உள்முகம் நோக்கித் திரும்ப வேண்டும் என்று? அது இல்லாத பொழுது - வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் மௌனம் காணாது, எழுதிக் கொண்டே போய்க் கொண்டிருக்க வேண்டியது தான்....




வார்த்தைகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ ஒரு மனநோயாளி
எனும் வாக்கியம் கொண்டு..

நீ எனும் சொல்
உன்னிலிருந்து
ரம்பித்த கணமே
அது என்னை வந்தடைந்தது..

நான் எனும் சொல்
நீ எனும் ஒற்றைச் சொல்லால்
சொல்லவொண்ணா
அவதிக்குள்ளாகியது..

நீ எனும் அந்த ஒற்றைச் சொல்
நான் எனும் என் கைவசமிருந்த
சொல்லை தின்று
செரித்த பிறகு..

வார்த்தைகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ ஒரு மனநோயாளி
எனும் வாக்கியம் கொண்டு..
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...

நீ - உனது பெயர் எதுவாக இருந்தாலும் - நீ ஆரம்பமாகியதுமே எனது சொந்தமாகினாய். உன் பெயர் என்ற ஒற்றைச் சொல் என்னை வந்தடைந்ததும் - அது நான் என்ற என்னை - எந்தப் பெயராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் - உயிருடன் உண்ண ஆரம்பித்தது. அவஸ்தையைக் கொடுத்தது. இப்பொழுது - நீ என்ற சொல் வேறு சொற்களுடன் சேர்ந்து வாக்கியமாகியிருக்கக் கூடும் - அர்த்தமுள்ளதா இல்லையா என்பது ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியது. அர்த்தம் இல்லாத பொழுதும் அதை வாக்கியமாகப் பாவித்துப் பிடித்துக் கொண்டிருப்பது - மனநோயின் தாக்கம் தான்.

மனநோயின் தாக்கம் இல்லையென்றால் - நீ என்ற சொல், நான் என்ற சொல்லுடன் இணைந்து முழுமையான வாக்கியமாயிருக்க வேண்டும்.




போர்ஹேவை*
கால மாயவெளிக்குத் தள்ளிய
மணல்பிரதி* என் கைவசம்
இருந்தால்
அதில் இருக்கும்
வார்த்தைகளைக் கொண்டு
வங்கக்கடலில் தலை வைத்து
அரபிக்கடலில்
கால் நீட்டுவேன்..
நடுவிலிருக்கும்
வெளியில்
தத்தளிக்கும் உன் உடல்..



* போர்ஹே: லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். சிறுகதையில் இவருக்கென்று ஓர் இடம் உண்டு.
* மணல்பிரதி: போர்ஹே எழுதிய சிறுகதையின் தலைப்பு..
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...

போர்ஹேவையும் தெரியாது - அவரின் மணல்பிரதியையும் தெரியாது. ஆனால், அவரின் வார்த்தைகள் வலிமையானதாகத் தான் இருக்கும். இல்லையென்றால் ஒரு தொலைதூரத்தை வலுவாக இணைக்காது - தலையையும், காலையும் நீட்டிப் படுக்கும் அளவில் வலுவானதாக இருக்காது.



சொல் எனும் சொல்லை
சொல்தின்று கொண்டிருந்தது..
இப்படியாக ரம்பிக்கும்
வாக்கியம்
நிறைவு பெறுமானால்
அதன் இடைவெளியில்
புகுந்து
காலத்தைக் கடந்து
உன்னை சந்திப்பேன்..

சொல் எனும் சொல்லில்
நான், நீ, பறவை,
காயம், காற்று, வெளி,
பாழ், தீ...

சொல் எனும் சொல்லில்
அடங்கியிருக்கிறது
நம்மைப் பற்றிய
மதிப்பீடுகளும்,
மதிப்பீடு எனும்
சொல்லில் அடங்கியிருக்கிறது
நம்மைப் பற்றிய
அடுத்தவர் பார்வைகளும்,
பார்வைகளும் எனும்
சொல்லில் அடங்கியிருக்கிறது
நாகரீகமும்,
நாகரீகம் எனும் சொல்லில் அடங்கியிருக்கிறது
காலத்தை கண்ணாடிக்குள்
அடக்கிய திறமையும்,
கண்ணாடி எனும் சொல்லில்
அடங்கியிருக்கிறது
அனைவரின் மனசாட்சியும்,
மனசாட்சி எனும்
சொல்லில் அடங்கியிருக்கிறது
நான், நீ, பறவை,
காயம், காற்று, வெளி,
பாழ், தீ...

இவைகள்
அத்தனையையும்
சொல் எனும் சொல்லை.....
(முதலில் இருந்து படிக்க)
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...

சொற்களால் ஆன சிந்தனை, வாழ்க்கை மற்றொருவனின் சொற்களை, வாழ்க்கையைத் தான் அழிக்கிறது. அவை முற்றுப் பெற வேண்டுமானால், அந்த வாக்கியம் முற்றுப் பெற வேண்டும். ஒருவனின் சிந்தனைகள், மற்றவனின் சிந்தனைகளை முற்றிலுமாக அழித்து விட்டு நிற்பது - அல்லது அந்த அழிவு வினைகளில் இறங்குவதை நிறுத்துவது என்ற இரண்டில் தான் அந்த வாக்கியம் முற்றுப் பெறும்.

அதாவது வாழ விடுவது அல்லது அழித்து விடுவது இந்த இரண்டில் மட்டும் தான் அந்த வாக்கியத்தின் முடிவு இருக்கும். அப்படி இருக்குமானால் - கால வெளிகளைக் கடந்து வந்து உன்னை சந்திப்பேன் என்பது உடல் என்ற சுமையை அழித்த பிறகு நிகழக்கூடியது என்ற சிந்தனை. விடுதலை என்பது அழிவிலும் இருக்கத்தான் செய்கிறது. அழிவில் அல்ல என்றால் - வாழவிடு என்னை - உன்னுடன் சேர்ந்து என்பதாகும்.

இந்த சொற்களால் ஆன சிந்தனை தான் மதிப்பீடுகளை உருவாக்குகிறது. நாம் இருப்பதோ இந்த மதிப்பீடுகளில் தான். நம்மைப் பற்றிய மதிப்பீடுகள் இல்லையென்றால் நாம் மனிதர்களாக இருக்க முடியாது. ஒரு பொருளாக இருக்கலாம். ஆனால், பொருளைப் பற்றிய மதிப்பீடுகள் உண்டு. அப்படியானால், நாம் இல்லையென்று தான் அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு வடிவமும், இருத்தலும் வார்த்தைகளில் தான் இருக்கிறது. இன்றைய மதிப்பீடுகள் நாளை மாறலாம் - வார்த்தைகள், அதன் தாக்கத்தால் எழும் சிந்தனைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதால்... ஒரு வட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அல்லது இறுதிப்புள்ளியாக இந்த மதிப்பீடுகள் வளர்ந்தும், சிறுத்தும், பெருகியும், குறுகியும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கலாம். இருக்க வேண்டும். அல்லது நாம் ஒரு தேக்க நிலையை அடைந்து விடுவோம் - நம் உணர்வுகள், மதிப்பீடுகள் எல்லாமே தான்....




வடை சுட்டுக்கொண்டிருந்த
பாட்டிக் கதை
நிலவை காட்டிச்
சொல்லப்பட்ட தருணங்களில்
ஒரு எழுத்தாளன்
சொற்களைப் பற்றி
சிந்திக்க ரம்பித்த
கணத்தில்
சொற்கள் அவன் எனும்
சொல்லுக்குள் குடி புகுந்த
வேளையில்
இந்தக் கவிதை
ரம்பமாகிறது..
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...

சொற்களின் தேவைகள் எப்பொழுது தேவையாகியது? எங்கே ஆரம்பித்தது? எப்படி உருக் கொண்டது? எப்படி வளர்ந்தது? எல்லாமே தேவைகள் தான். தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளத் தேவைப்பட்ட பொழுதும், தன் சிந்தனைகளை அடுத்தவனுக்கு அறிவிக்க வேண்டிய வேளை வந்த பொழுதும், இயற்கையாக தன்னால் எழுப்ப முடிந்த ஒலிகளை வடிவமாக்கிக் கொண்டு வந்தான். ஆரம்பத்தில் ஒரு எளிய மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர், இனம் பல்கிப் பெருகிய பொழுது அதற்கும் கட்டுப்பாடுகள், இலக்கண விதிகள், வரி வடிவங்கள் எல்லாமே வேண்டியதாயிற்று. மொழி சிக்கலானது, சிரமமானது. இலக்கணக் குழுக்களாகப் பிரியத் தொடங்கியது. பல உருவங்களைக் கொண்டது. மொழிகளுக்கும் பெயர்கள் இடப்பட்டன.

இங்கும் விதிமீறல்கள் நடந்தன - கவிதைகளும் உண்டாகின.......




உன்னைப் பற்றிய செய்தி
புராணகாலத்து கல்வெட்டு ஒன்றில்
ஒரு சொல்லால்
பதியப்பட்டிருந்தது..

அந்த ஒரு சொல்லைக் கொண்டு
உன்னை தேடியலைகையில்
உன் ஊர், ஆதி தெய்வம்,
இனம், மொழி, இரவு நேரத்து
அனாதிப் புலம்பல்
என்ற கட்டமைப்புகள்
கொண்ட கூட்டு வாக்கியமாய்
விரிவு கொண்டு
என்னைக் குழப்ப
உன்னைத் தேடியலையக்
காரணமாயிருந்த அந்த
ஆதிச் சொல்
என்னிலிருந்து காணாமல் போயிருந்தது..
_________________
-----------:::ரா:::ம்:::பா:::ல்:::-----------
கனவுகள் வசப்படும்...

செய்தி பெயராக இருந்திருக்கலாம் - அவளைப்பற்றிய குறிப்பாக இருந்திருக்கலாம். ஏதோ ஒன்று - அந்த ஒன்றைக் கொண்டு - இனம் கண்டு கொள்ள தகவல்கள் திரட்டிய பொழுது, திரட்டப்பட்ட தகவல்களில் முழுகி, உருப்படியான ஒரு முடிவெடுக்க சிரத்தை கொண்டிருந்த பொழுது, தொலைத்துவிட்டோம் - அந்த ஒற்றைச் சொல் செய்தியை - குறிப்பை, மேம்போக்கான குப்பைகளை சொறிந்து கொண்டு இருக்கும் பொழுது, ஆழத்தில் இருந்து கருத்துக் குவியலை, பொக்கிஷத்தை விட்டொழித்து - ஆதியில் தேடுதல் வேட்டையில் இறங்கத் தூண்டிய பொருளை விட்டு விட்டு, கனியின் மேற்தோல்களை சுவைத்து அமிர்தம் உண்டானதாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் - எதைத் தேடித் துவங்கினோம் என்ற புரிதலே நம்மிடமிருந்து முற்றிலுமாக அகன்றுப் போய் விட்டது. இப்படியாகத் தான் நாம் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

*****

விதிமீறலில் தொடங்கி, இறைவனைத் தேடி அலையும் கவிதை வரைக்கும் வந்தாகி விட்டது. இதில் இறைவன் என்ற வரிகளின் மீது என் காதலி என்ற சொல்லைப் புகுத்திக் கொண்டாலும், அதனால் பொருள் ஒன்றும் கெட்டுப் போவதில்லை. இறைவனைத் தேடுதல் என்பது என் அளவிலானப் புரிதல். சிலருக்கு அது காதலியாக இருக்கலாம். கவிதையை எழுதியவருக்கோ அது இரண்டுமே இருந்திருக்கலாம் மனதில்.

கவிதையைப் பற்றி சிறு விளக்கங்கள் அவர் கொடுத்திருக்கிறார் - இயற்கைக்கு முரணாக நாம் விளங்குகிறோம் என்பதைச் சாடுவதே இவை என்று. அந்த சாடுதல்கள் மேம்போக்காகவே தென்பட்டுவிடுகின்றன. ஆனால், கவிதையின் அடிநாதமாக, ஒரு சோகம் இழையோடுகிறது. காதலியின் நினைவுகளால் ஆன வலிகள். அவைகளை வெளிப்படையாக வெளியிட்டு விடாமல், இயற்கைக்கு முரண் என்ற குமுறலில் உள்ளடக்கி வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரோஜாப்பூவின் நினைவுகளைப் பத்திரப்படுத்துவது என்பது இயற்கைக்கு முரண் என்றால், இயல்புகளை மீறி செயல்படுவது மனித இயற்கை என்கின்ற பொழுது, யார் எப்படி இயற்கைக்கு முரண்படுகிறார்? மனிதன் தன் இயற்கையைக் கட்டுப்படுத்தி ரோஜாப்பூவை வாழ்ந்து அழிய விடுவது இயற்கையா? அல்லது அது தன் இயல்பான அழிவை அடையும் முன், அதை தன் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை முரணானதா?

மனிதன் தன் இயற்கைக்கு மாறாக வாழ்ந்தால் மட்டுமே, அவன் தன்னைச் சுற்றிய இயற்கையை வாழ விடுவான்!!! அப்படி ஒரு இயல்பு நிலை பிறழ்ந்து வாழ வேண்டுமானால், மனித வளர்ச்சி நின்று போய்விடும், இல்லையா? ஆக, இது உண்மையாக இருக்கும் பொழுதில், இயற்கையை மீறுவது என்பதை விட, தன் அழகுணர்ச்சியும், அந்த அழகுணர்ச்சியை செலுத்தியவரை(ளை) இழந்த சோகமும் தான் கவிதையாகப் பீறிடுகிறது - ரோஜாப்பூ - காதலின் ஒரு சின்னம் தானே? இதுவும் என் அனுமானமே... கவிஞரின் இயல்பான சிந்தனை, நிஜம்மாகவே இயற்கையைச் சாடுவதாகவே இருந்திருக்கலாம் - அந்த சாடும் வார்த்தைகளின் இடையே, காதலைக் கண்டது என் தவறாகக் கூட இருக்கலாம்... அதை கவிதைகளைப்படைத்த ராம்பால் தான் சொல்ல வேண்டும்...? என் அனுமானங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், நான் மகிழ்வேன். இல்லை, நான் அனுமானித்தது உண்மை என்றால், அந்த நினைவுகளில் இருந்து மீண்டு வந்து ஒரு புதிய மனிதனாக வரவேண்டும் என்பதே என் விருப்பமாக, பிரார்த்தனையாக இருக்கும்..!

முதல் கவிதையில் விதிமீறலும், அதன் விளைவாக எழுந்த மனித எழுச்சியும் கண்ணில் பட்ட பொழுது வித்தியாசமான தொடக்கமாக இருக்க முயற்சித்து, பின்னர் அந்த விளைவுகளை காதல் தடத்தில் செலுத்தி கவிதைகள் வந்த பொழுது - சாதாரண காதல் கவிதையாக இல்லாமல், காதலை மனித இயல்புகளோடு, புரிந்து கொள்ள தலைப்பட்டு, அதன் விளைவாகவே எழுந்த கருத்துக் குவியலாகவேப் படுகிறது. ஆனால், இந்த இந்தக் கருத்துக் குவியலைப் படைக்க முற்படும் பொழுது, தன்னை அதிலிருந்து விலக்கிக் கொண்டு, ஒரு பிரசங்கியின் குரல் போல கவிதைகளை முழங்குவது - தன் சொந்த உணர்ச்சிகளுக்குத் திரை போட்டு, மற்றவர்களிடத்திலும் உள்ள இந்த வலியைத் தடவிப் பார்த்து மருந்து போடும் முயற்சியாகத் தான் தெரிகிறது. அடியின் வலி, எல்லோர் மனதிலும் இருக்கிறது. அந்த வலிக்கு மருந்து போடும் முயற்சியில், தன் வலி மறக்க முயற்சித்தலும் தெரிகிறது.


வெற்றிடங்களின் மௌனத்தில் காதலி இருப்பதாக கவிதை. (இங்கு காதலி என்பதை இறைவன் என்ற பதத்தால் மாற்று செய்யலாம்...) காதல் வெற்றிடமா? அது இசையல்லவா? தாள லயம் நிறைந்த நடனமல்லவா? இறைவன் என்றால் கூட, அவனுக்கும் இசை தானே விருப்பமான வழிபாடு? எந்த மதமானாலும், இனிய சந்தங்கள் நிறைந்த மந்திரங்கள், பிரார்த்தனைகள் இவை தானே வழிபாடு? தனக்குக் கிட்டாததினாலும், தன்னால் காண இயலாததினாலுமே, அவை வெற்றிடங்கள் ஆகிவிடுமா? என்றாலும், அது ஒரு வெற்றிடம் தான்!!! வேறு எவருமற்ற அவன், அவள் என்ற எல்லைகளுக்குள் கிடக்கும் வெற்றிடம்... இசை, தாளம், மொழி இவைகளையெல்லாம் தாண்டித் தான் இறுதியாக இறைவனைத் தேடி அலையும் மனிதர்கள் பயணிக்கிறார்கள்! அது இறுதி நிலை. எல்லாம் அனுபவித்து, நிறைவு பெற்று, பின்னர் அனுபவித்த இன்பம் தந்த முழுமையுடன், திருப்தியுடன், எல்லாம் துறந்து இறுதி நிலை தேடுதல் தானே மௌனத்தில் இறைவன்...

காதலும் அப்படித் தான் - கண்ணே, முத்தே, மணியே என்ற கொஞ்சும் மொழிகள் ஒரு கட்டத்தில் நின்றுப் போய், பின்னர் இயல்பான மொழி நடைகளில் வாழ்ந்து, பின்னர் அந்த சொற்றோடர்களும் நின்று போய், சமிக்ஞைகளில் உணர்வுகளைப் பகிர்ந்து, மௌனத்தைப் புரிந்து கொள்ளும் வயதடைந்து அருகருகே ஒருவருக்கொருவராய் இருப்பதே காதலாக வாழ்வதே இன்பமில்லையா? னால், இது காலத்தினால் நிகழக்கூடிய விந்தையல்லவா?

காதலியைக் காணும் முதல் தருணத்தைத் தேடும் ஒருவனுக்கு இது கிட்டுமா? காதலியைக் கண்டு கொள்ளும் முன்னரே, மௌனத்திலும் வெற்றிடத்திலுமாகப் பயணிக்க முடியுமா? அதற்கு சக்தி இருக்குமா? காதலினால் தூண்டப்படும் ஒருவன், அதன் இன்பங்களை காணாமலே அந்த இன்பங்களைத் துறந்து விட்டு, மோன நிலைக்குப் போய்விடமுடியுமா?

காலபரிமாணங்கள் தாண்டிய வெளியில், உன்னைச் சந்திக்கத் துடிக்கிறேன் என்பது யதார்த்தம் மறந்த காதல் அல்லவா? வெற்றிடங்களில் பயணிக்க, உடல் எடை துறக்க வேண்டுமே...? உடல் துறந்த பின்பு, காதல் எங்கிருக்கும்? இதயத்திலா? இதயம் தான் உடலோடு கிடந்து விடுமே? மூளையின் அதிர்வலைகள் கொண்டு பயணிக்கும் பொழுதா? காதலை, அதன் இன்பத்தை மூளையைக் கொண்டா அனுபவிக்க முடியும்? மூளையைக் கொண்டு சிந்திக்கத் தான் முடியும் - காதலை உணர, இதயம் வேண்டும் - இதயம் இயங்க உடல் வேண்டும். ஆக, காதல் என்பது உடலோடு இணைந்து தான் அனுபவிக்க முடியும். இதைப் புரிந்து கொண்டால், காதலைப் புரிந்து கொள்ள முடியும். உடல் மறுத்த தெய்வீக காதல்கள் என்று எதுவுமே கிடையாது. காதலைத் தெய்வீகத் தன்மைக்கு இட்டுச் செல்வது காதலோடு இருப்பது தான் - காலம், காலமாக.

உடலோடும், உணர்வோடும் இணைந்து பயணப்படும் காதல் தான் தெய்வத் தன்மையை அடையும். அதற்கு, இந்த உடலை உடையவள் - இந்த லட்சணங்கள் கொண்ட உடல் தான் தேவை என்று அடம் பிடிப்பது தேவையில்லை.

மௌனத்தில் இறைவனைக் காணத் தேடி அலையும் மனிதர்கள், அங்கு சென்று, எனக்கு இந்தக் கடவுள் தான் வேண்டும், இந்த வடிவமுடைய கடவுள் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை.பரம்பொருள் என்ற ஆதிசக்தி ஒன்றே தான் அவர்களின் தேடுதலின் விடையாக இருக்க முடியும். அது போலத் தான் காதலைத் தேடுவதும் - வடிவம், உடல் இவை எல்லாமே இரண்டாம்பட்சமே - எந்த வடிவத்திலும், உடலிலும் காதலைக் காணமுடியும். அதைத் தேடிக் கண்டு கொள்ளும் சக்தி மட்டுமே மனிதனின் முயற்சி.

நீ - என்ற ஒற்றைச் சொல் வாக்கியத்தை, அவன் / அவள் என்ற வாக்கியத்தினுள் நுழைந்து பாருங்கள் - காதல் எங்கும் இருக்கிறது. ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைபாட்டில் தான் காதல் தோற்கிறது. நீ என்னும் பொழுது - எனக்கு உரியது என்ற உரிமை எழுகிறது. உரிமையினால் ஆதிக்க உணர்வு எழுகிறது. காதல் பின்னே தள்ளேப் படுகிறது. அவன் அவனாகவும், அவள் அவளாகவும் இருக்கும் இயல்பில் தான் காதல் வாழுகிறது. பல முதிர்ந்த தம்பதிகளை அருகிலிருந்து கவனிக்க முடிந்தால், இந்த இயல்பைக் காண முடியும். இந்த நிலையை அடைவதற்கு அவர்கள் வாழ்ந்து வந்த பாதைகளைப் பார்த்தால் - அதில் பல பிணக்குகளைக் காண முடியும். பல வருத்தங்கள் இருந்திருக்கக் கூடும். அதையெல்லாம் கடந்து வந்து தான் அவர்கள் காதலின் முழுமையை அடைகிறார்கள். இந்த நிலைகளையெல்லாம் தொடாமலே, எடுத்ததுமே காதல் மௌனத்தில் தன்னை இனம் காண முடியுமா என்பது கேள்விக்குரியது.

இந்தக் காதல் உணர்வுகளுடன் கூடவே பயணிக்கிறது - மொழி தோன்றிய கதையும், அந்த மொழிகளின் வலுவும். மனிதனுக்குத் தேவையானது மொழி. உணர்வுகளைச் சொல்வதற்கு - சமயத்தில் - காதலையும் கூடத்தான். ஒன்றிலிருந்து மற்றதற்கு இட்டுச் செல்லும் சிந்தனைகள் - மொழி வளத்தின் வன்மையைச் சொல்லும் பொழுது, அந்த மொழியின் கட்டுப்பாடுகளையும், அந்த மொழி தரும் மதிப்பீடுகளையும் சொல்ல வேண்டி வருகிறது.

கவிதையின் தொடக்கத்திலே, சொல்லி விடுகிறார் - இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது என்று. ஆம். நடையும் கருத்துகளும் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. இது மற்றுமொரு கவிதை என்று சொல்லிவிட்டு செல்லாமல், நிறைய சிந்திக்க வைக்கிறது - தர்க்கம் செய்ய வைக்கிறது. வெறும் வார்த்தை தொடுப்பாக இல்லாமல், வார்த்தைகளின் நடுவே நிற்கும் அர்த்தங்களையும், மௌனங்களையும் பேச வைக்கிறது. ஆழ்ந்து வாசிக்கத் தோன்றுகிறது. வார்த்தகளின் தனிப்பட்ட பொருள் அல்லாது அவை ஒன்றோடு ஒன்றாக இணைந்து நிற்கும் பொழுது அவை என்னவாக நிற்கின்றன என்று பார்க்கத் தோன்றுகிறது. அந்த வகையில் வித்தியாசப்படுகிறது.

கருத்திலும் கூட, நிறைய வேறுபாடுகள் - என் புரிதலுக்கும், அவர் மனநிலைக்கும். நிறைய சந்தர்ப்பங்களில், அது ஆன்மீகத் தேடுதலாக இருக்குமோ என்ற மயக்கத்தையும் தருகிறது. அந்த ஆன்மீகத் தேடுதலை, நான் காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டேனோ என்று கூட நினைப்பு எழுகிறது. ஆனால், என் மனநிலையில், நான் எப்பொழுதுமே காதல் வேறு, கடவுள் வேறு என்று புரிந்து கொண்டது கிடையாது. இரண்டுமே ஒன்று தான் என்பது எனது கருத்து. எப்படி கடவுளை நமது உரிமை என்று கொண்டாட முடியாதோ, அது போலவே காதலும் எனக்கு மட்டுமே உரியது என்றும் உரிமை கொண்டாட முடியாது. காதல் என்பது ஒரு சக்தி. அதில் நாம் பங்கு கொள்ள முடியும் - கடவுளின் வழியில் நாம் பங்கு கொள்வது போல. கடவுளை உணர்வதற்கு நமக்கு உடல் வேண்டும். உடல் அற்றுப் போய், உணர்வுகள் மட்டும் விழிப்படைய வேண்டும் என்பது பாத்திரம் இன்றி நீர் எடுத்துச் செல்ல முனைவது போல. காதலும் கூட அப்படித் தான். உடல்கள் மீது லயிப்பில்லாமல், காதலை தெய்வீகமாக்க முனைவது முடியாது என்பது தான் என் கருத்து.

இந்த வகையில், இந்த வெற்றிடங்களில் பயணம் செய்யும் காதல் சாத்தியமா? வெற்றிடங்களில் உணர்வுகள் தழைத்து வளருமா என்பதும் சந்தேகமே. மௌனங்கள் என்பது கூட இந்த வெற்றிடங்களில் ஒரு பொருளே. நான் என்ற நிலையில் தான் இந்த மௌனங்களை உணர முடியும் என்றே நினைக்கிறேன். இந்த பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் தான். ஆனால், அதை நம்மால் உணர முடிவதில்லை. ஆனால், தனிமையான ஒரு இரவில், இரையும் கடல் அலைகளின் கரையில் என்னால் மௌனத்தை உணர முடிகிறது. மௌனம் என்பது ஒரு ஒப்பீடு தான். எத்தனை அமைதி- எத்தனை இரைச்சல் என்ற ஒப்பீடுகளில் தான் நான் மௌனத்தை உணர்கிறேன். வெற்றிடத்தில் அல்ல. அதனால் தான் என்னால் மௌனத்தையும், தனிமையையும் ரசிக்க முடிகிறது.

ராம்பால் எங்குமே மௌனம் என்ற வார்த்தையை சொல்லவில்லை. வெற்றிடம் என்றே சொல்கிறார். யாருமே இல்லாத, நான், நீ, அவன், அவள், அது என்று எதுவுமே இல்லாத வெற்றிடத்தில் பயணிப்பது சாத்தியமாகுமா? ஒருவரை ஒருவர் சந்திப்பது சாத்தியமாகுமா?

ராம்பால் கவிதைகள் எனக்குள் எழுப்பும் பல வினாக்களில் இன்று என் மனம் விவாதித்துக் கொண்டிருப்பது - இது தான் - மௌனம், வெற்றிடம் இரண்டும் ஒன்றா - வேறா? நான் மௌனம் என்ற உணர்வை அதிகம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எந்த பிரயோகத்தில் அவைகளை உபயோகப்படுத்தினேன் என்பதே இன்று தான் சிந்திக்கிறேன்.

சிந்தனையைத் தூண்டிய கவிதைகள் தொடரட்டும் -

நன்றி....

அன்புடன்...

kavitha
14-08-2004, 10:29 AM
வெகு நாளைக்குப்பின் இன்று பொறுமையாக வாசிக்க முடிந்தது.. காலத்திற்கு என் நன்றிகள்
இனி...



அந்த நிம்மதி கிட்டாமல் தொடர்கதை கிப் போனது தான் விபத்து. எல்லோரும் சம்பந்தப்பட்ட விபத்து.



நண்பரே, விபத்து என்பது இங்கே விவாதத்தைக்குறிக்கிறதா? அல்லது வினையைக்குறிக்கிறதா?




ரோஜா செடி மட்டுமல்ல - எந்த ஒரு பூக்கும் செடிக்கும், கொடிக்கும், மரத்திற்கும் இயல்பானது - பூப்பூப்பது. அதன் தி உணர்வு என்பது பூப்பூக்கும் அதன் இயல்பு. இயல்பு பிறழ்ந்து இன்பம் அனுபவிக்கத் துடிப்பது மனித இயல்பு. இந்த முரண்பாட்டில் தான் அழிவுகள் நிகழ்கிறது. இயல்பை ஏற்க மறுக்கும் மனித இயல்பு. மலரை - அதன் காம்பு, இலை, முட்கள், தண்டு, வேர் என்று அதன் இயல்போடு பார்க்கத் தெரிவதில்லை. அந்த அழகை பறிக்க வேண்டும் - அந்த மலரின் இயல்புகளை அழித்து, தன் சொந்தமாக்க வேண்டும் என்ற வெறியில் இயங்குகிறோம். அதுவே அழகான பூ ரோஜா என்ற சிறு வாக்கியத்தை அழித்து - ஒரு பெண்ணின் கூந்தலில் பொருத்தி, பின் அப்பெண்ணின் கூந்தல் மணம் இயல்பானதா - இல்லை, மலர்கள் சூடியதால் வந்ததா என்று வாக்கியம், வாக்கியமாக கவிதைகளும், விளக்க உரைகளும் எழுதி இன்பம் துய்க்கிறோம். பின்னர் அந்தப் பெண்ணின் கூந்தலில் இருந்து தவறி விழுந்த மலரை எடுத்துப் பதுக்கி வைக்கிறோம் - ஒரு அழகிய உறவின் நினைவாக, ஒரு இழந்த காதலின் அடையாளமாக. ஒரு காதல் கிடைக்கவில்லை என்பதாலேயே அந்த மலர் தண்டனை பெறுகிறது. நசுக்கப்படுகிறது. இது இயற்கைக்கு முரணானது அல்லவா?





அருமையான விளக்கம்.





எழுதப்படும் கவிதைகள், உணர்வுகளை புதியவை வந்து அழித்து விட்டுப் போகிறது.

இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அந்தந்த கவிதைகள் அந்தந்த உணர்வுகளை அழிக்கக்கூடும்... அல்லது இழக்கவைக்கக்கூடும். புதியவைகள் அழிப்பது எப்படி சாத்தியம்??




சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாமல் விடப்பட்ட வார்த்தகளின் - மௌனத்தின் வலிமை அதிகம்.
........
........
சந்திப்பதற்கு இரைச்சலை நிறுத்த வேண்டும் - உள்முகம் நோக்கித் திரும்ப வேண்டும் என்று?

மிக அருமை!



- நீ என்ற சொல், நான் என்ற சொல்லுடன் இணைந்து முழுமையான வாக்கியமாயிருக்க வேண்டும்.


ரொம்ப குழப்பிட்டீங்க! இருந்தாலும் என் புரிதலில் இதன் விளக்கம்:

"நீ" என்று நீ உச்சரித்த பொழுதில் அது என்னை நோக்கிச்சொல்லப்பட்டதால் அந்த சொல் என்னை உண்ண ஆரம்பித்தது... அதாவது என்னை இழக்கவைத்தது.
இப்பொழுது அந்த நீ என்ற சொல்லை உச்சரிக்க எனக்கு விருப்பமில்லை.ஏனெனில் நீ என்பதற்கும் நான் என்பதற்கும் தூரமில்லை.




மணல்பிரதி* என் கைவசம்
இருந்தால்
வார்த்தைகளைக் கொண்டு
வங்கக்கடலில் தலை வைத்து
அரபிக்கடலில்
கால் நீட்டுவேன்..


காலவெளியை நிரப்ப
வார்த்தைகளால்
தன்னை
வரிசைப்படுத்திக்கொள்ளும் அழகு
இங்கே மிளிர்கிறது.

அருமை ராம்பால்!



ஒரு வட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அல்லது இறுதிப்புள்ளியாக இந்த மதிப்பீடுகள் வளர்ந்தும், சிறுத்தும், பெருகியும், குறுகியும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கலாம்.


இந்த மதிப்பீடுகளுக்கு 'இடம்' என்ற சொல்லும் ஏதுவாகிவிடுகிறது



ஆரம்பத்தில் ஒரு எளிய மொழியாக இருந்திருக்க வேண்டும். பின்னர், இனம் பல்கிப் பெருகிய பொழுது அதற்கும் கட்டுப்பாடுகள், இலக்கண விதிகள், வரி வடிவங்கள் எல்லாமே வேண்டியதாயிற்று. மொழி சிக்கலானது, சிரமமானது. இலக்கணக் குழுக்களாகப் பிரியத் தொடங்கியது. பல உருவங்களைக் கொண்டது. மொழிகளுக்கும் பெயர்கள் இடப்பட்டன. இங்கும் விதிமீறல்கள் நடந்தன - கவிதைகளும் உண்டாகின.......


ஆமாம்.. இதையெல்லாம் படிக்கும்போது அப்படித்தான் பயமாக உள்ளது



எதைத் தேடித் துவங்கினோம் என்ற புரிதலே நம்மிடமிருந்து முற்றிலுமாக அகன்றுப் போய் விட்டது. இப்படியாகத் தான் நாம் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.


அதானே! உள்ளே இருப்பதை வெளியில் எப்படித்தேடமுடியும்?




அடியின் வலி, எல்லோர் மனதிலும் இருக்கிறது. அந்த வலிக்கு மருந்து போடும் முயற்சியில், தன் வலி மறக்க முயற்சித்தலும் தெரிகிறது.

:)



ஆழ்ந்து வாசிக்கத் தோன்றுகிறது.வார்த்தகளின் தனிப்பட்ட பொருள் அல்லாது அவை ஒன்றோடு ஒன்றாக இணைந்து நிற்கும் பொழுது அவை என்னவாக நிற்கின்றன என்று பார்க்கத் தோன்றுகிறது. அந்த வகையில் வித்தியாசப்படுகிறது.

மிகச்சரி!


தனிமையான ஒரு இரவில், இரையும் கடல் அலைகளின் கரையில் என்னால் மௌனத்தை உணர முடிகிறது. மௌனம் என்பது ஒரு ஒப்பீடு தான். எத்தனை அமைதி- எத்தனை இரைச்சல் என்ற ஒப்பீடுகளில் தான் நான் மௌனத்தை உணர்கிறேன். வெற்றிடத்தில் அல்ல. அதனால் தான் என்னால் மௌனத்தையும், தனிமையையும் ரசிக்க முடிகிறது.
:)

ராம்பால் அவர்கள் இதற்கு என்ன சொல்லப்போகிறார்.. பார்க்கலாம்.

rambal
14-08-2004, 06:16 PM
காலம் கடந்து இன்றுதான் இதைக் கண்டேன்.. அவ்வப்பொழுது தலை காட்டிவிட்டுச் சென்று கொண்டிருந்தேன்.. இந்தப் பக்கம் வரவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்..எழுதிக் கொண்டே இருக்கிறேன்.. சொற்களின் மீதான மயக்கம் இன்னும் தீரவில்லை.
கவிதையாக எழுதியதுக் கொஞ்சம்தான். விமர்சணமாக வந்தது இப்படி பக்கமென்றால்? நிறைய எழுதியிருக்கிறார் நண்பன். விரைவில் இந்தத் தொகுப்பின் பின்புலத்தைச் சொல்கிறேன். அது ஒரு கட்டுரையாக இருக்கும்
என்று நினைக்கிறேன். இன்னும் திட்டமிடவில்லை. இப்போதைக்கு ஒன்று மட்டும்தான் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். அது நண்பனுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். விமர்சணங்கள் மட்டுமே எழுதத்தூண்டும் ஜீவதாது.
நண்பனுக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை அவர் எழுதியிருக்கிறார். அத்தோடு கேள்விகளும் என் முன் வைத்திருக்கிறார். விளக்க முற்படுகிறேன்.. விரைவில்..

Nanban
14-08-2004, 07:10 PM
நன்றி ராம்பால், கவிதா.

கவிதாவின் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால், மீண்டும் இரண்டு நாட்களாக உட்கார்ந்து கொண்டு, நிறைய சிந்தித்து, தட்டச்சு செய்ய வேண்டும்.

ராம்பால் குறிப்பிட்ட கட்டுரை வரவேண்டும் - அப்பொழுது இதை மீண்டும் விவாதிக்கலாம்.

(இப்படியான விவாதங்கள் வந்த பின்பு தான் மனம் கொஞ்சம் அமைதியடைகிறது. நடுவில் கொஞ்சம் தொய்வாக இருந்தது போல் இருந்தது. அதுவே மிக மனச் சோர்வைக் கொடுத்தது. மீண்டும் மன்றமும், கவிதைப் பக்கமும் களை கட்டும் நாளை ஆவலுடன் நோக்கியிருக்கிறேன்...)

அன்புடன்

rambal
15-08-2004, 04:54 PM
பரம்பொருள் என்ற ஆதி சக்தி ஒன்றே தான் அவர்களின் தேடுதலின் விடையாக இருக்க முடியும். அது போலத் தான் காதலைத் தேடுவதும் - வடிவம், உடல் இவை எல்லாமே இரண்டாம்பட்சமே - எந்த வடிவத்திலும், உடலிலும் காதலைக் காணமுடியும். அதைத் தேடிக் கண்டு கொள்ளும் சக்தி மட்டுமே மனிதனின் முயற்சி.




இந்த வகையில், இந்த வெற்றிடங்களில் பயணம் செய்யும் காதல் சாத்தியமா? வெற்றிடங்களில் உணர்வுகள் தழைத்து வளருமா என்பதும் சந்தேகமே. மௌனங்கள் என்பது கூட இந்த வெற்றிடங்களில் ஒரு பொருளே. நான் என்ற நிலையில் தான் இந்த மௌனங்களை உணர முடியும் என்றே நினைக்கிறேன். இந்த பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் தான். ஆனால், அதை நம்மால் உணர முடிவதில்லை. னால், தனிமையான ஒரு இரவில், இரையும் கடல் அலைகளின் கரையில் என்னால் மௌனத்தை உணர முடிகிறது. மௌனம் என்பது ஒரு ஒப்பீடு தான். எத்தனை அமைதி- எத்தனை இரைச்சல் என்ற ஒப்பீடுகளில் தான் நான் மௌனத்தை உணர்கிறேன். வெற்றிடத்தில் அல்ல. அதனால் தான் என்னால் மௌனத்தையும், தனிமையையும் ரசிக்க முடிகிறது.



மேலே இருக்கும் இரண்டு கருத்துக்களும் ஏறக்குறைய ஒரே கருத்தை மையமாகக்கொண்டு குவிந்துள்ளது என்பது என் அனுமானம்.
அது வெளி, இருப்பு இவைகள் பற்றியதாகவே இருக்கிறது. இதற்கு முதலில் ஒரு பொருளின் இருப்பைப் பற்றியும் வெளியைப் பற்றியும் விளக்க வேண்டும்.
பெருவெளியில் ஒரு பொருளின் இருப்பு என்பது அதன் இன்மை என்பதின் மூலமே வடிவம் கொள்கிறது. அது இல்லாத வெளிகளின் பின்புலத்தில் அது தரும்
தோற்றமே அதன் இருப்பு என்றும் இதை விளக்கலாம். ஒரு குறிப்பிட்ட பொருள் தனது வடிவத்திற்கு அப்பாலும் 'இல்லை' என்பதெ அதன் வடிவம் என்றும்
இதைக் கூற முடியும். இந்த இடத்தில் வெளி என்றால் என்ன என்பது மிகவும் சிக்கலுடையதாகிறது. வெளி என்பதே வெற்றிடம் எனக் கொண்டால் - அதன்
உள்ளடங்கிய எல்லையற்ற அனைத்தும் எங்கிருந்து இதனுள் நிரப்பப்பட்டன என்னும் கேள்வி எழுவது இயல்பு. இருப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றை
என அடையாளம் காண்பது சாத்தியம் இல்லை. இந்நிலையில் வெளி என்பது எங்கு தொடங்குகிறது அல்லது எங்கு முடிகிறது என்ற கேள்வியும்மேலும்,
ஒவ்வொன்றும் இருக்க ஒரு ஊடகம் தேவையென்ற நிலையில் வெளியின் ஊடகம் எது என்பதும் முற்றிலும் மர்மமான ஒன்றே.

வெளியில் பொருள் அடங்குவது போல பொருளில் வெளி அடங்கி விடுகிறது. அதாவது - வெளியின் உள் அலகாகிய பொருள்கள் அனைத்தும் வெளியில்
அடங்கிவிடுவது போல வெளி அப்பொருள்களுக்குள் அடங்கியிருக்கிறது. அப்படியெனில், வெளியும் பொருளும் மிகத் துல்லியமாக வேறுபடவில்லை என்பதும்,
இரண்டும் ஒன்றில் ஒன்று, பிரித்தறியமுடியா சிக்கல் வடிவம் கொண்டிருப்பதும் விளக்கமுற்றிருக்கின்றன.

நாம் இங்கு வெளியை பொருள் என்று கொள்ளாமல் பண்பு என்று மட்டுமே வரையறுக்க வேண்டியவர்களாகிறோம். பண்பு அல்லது தன்மை என்பது மட்டுமே
கொண்டியங்கும் வெளி வடிவமற்ற பரிமாணமற்ற ஒன்று என்பது வெளிப்படையானது. அதன் நிறை என்பது இன்மம் (0) என்று குறிப்பிடக்கூடியது. இன்னும் இன்மம்
என்பதற்கும் (0) ஈறிலி (00) என்பதற்கும் இடையிலான தொடர் வினைகளே பிரபஞ்சத்தின் முழுவடிவத்தையும், இயக்கத்தையும் சாத்தியப்படுத்தக் கூடியதாக
அமைகின்றன.

இதன் பிண்ணனியில் மனித வெளிக்கு மையமாய் அமைவது மனிதத்தன்னிலை என்பது. மனிதத் தன்னிலையின் மூலகங்களாக அமைவது மனிதரின் உடல்வெளி மற்றும்
மனிதகாலம் இவற்றின் பல்வேறு பிணைவுக் கூறுகளாகும். நிஜத்தில் மனிதரின் முழு அறிவும் - தன்னால் பிரபஞ்சத்தை அளத்தல் என்பதாகவும் தன்னால்
அளந்தறியப்பட்ட பிரபஞ்ச அலகுகளின் மூலம் தன்னை அளத்தல் என்பதாகவும் பகுக்கப்பட முடியாத முரண் இயக்கத்தைக் கொண்டிருக்கின்றன. மையத்திலிருந்து
விளிம்பு நோக்கிய விலக்கமும் விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிய ஈர்ப்பும் ஒருவிதச் சமநிலையை அடைவது என்பதன் மூலமே பொருட்களின் பருமை
அமைவது போல மனிதத் தன்னிலைக்கும் இவ்வித ஈர்ப்பு விலக்கங்களின் எதிர்ச் சமநிலையே அடிப்படியாக அமைகின்றன்.

இதன் தொடர்ச்சியாக நண்பனின் அடுத்த கேள்விகள்..


மொழி தோன்றிய கதையும், அந்த மொழிகளின் வலுவும். மனிதனுக்குத் தேவையானது மொழி. உணர்வுகளைச் சொல்வதற்கு - சமயத்தில் - காதலையும் கூடத்தான். ஒன்றிலிருந்து மற்றதற்கு இட்டுச் செல்லும் சிந்தனைகள் - மொழி வளத்தின் வன்மையைச் சொல்லும் பொழுது, அந்த மொழியின் கட்டுப்பாடுகளையும், அந்த மொழி தரும் மதிப்பீடுகளையும் சொல்ல வேண்டி வருகிறது.


நாம் மொழி என்று குறிப்பிடுவது ஒலித்துகள்களால் அமைந்த கருத்துப் பரிமாற்ற இயக்க வடிவம் மட்டுமில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
காட்சிப்படிமங்கள், வெப்ப மாறுபாடுகள், ஒளிக்கூறுகள், திட திரவ வாயு நிலைகள் பற்றிய பௌதீக அளவைகள் - இவை பற்றிய தொகுப்புணர்வும் -
இவற்றிற்கிடையிலான அர்த்த உறவுகளும் பிணைந்த உருவகத்திரள்களையே நாம் மொழி என்று குறிப்பிடவேண்டியவர்களாகிறோம். இந்த உருவகத் திரள்களின்
அடுத்த கட்ட வினையே - நம்மால் பரிமாற்ற மொழி என்று அறியப்படும் மொழிச் செயல்பாடு ஆகும். மொழி என்பது மூளைச் செயல்பாடு என்னும் அடைப்படையான
கருதுகோளாகும்.

பின்குறிப்பு:
1. நண்பனின் கருத்துக்களில் ஒருபகுதிக்குத்தான் விளக்கம் கொடுத்துள்ளேன். மற்றவை தொடரும்.
2.ஏற்கனவே நண்பன் கருத்துக்களைப் பதிந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. அதனால் உடனே
பதிந்தாக வேண்டிய நிலை. ஆகவே, எழுதியவரை பதிந்திருக்கிறேன்.

kavitha
16-08-2004, 04:19 AM
கவிதாவின் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால், மீண்டும் இரண்டு நாட்களாக உட்கார்ந்து கொண்டு, நிறைய சிந்தித்து, தட்டச்சு செய்ய வேண்டும்.

உங்கள் விருப்பம் நண்பரே. நேரம் கிடைத்தால் தாருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.



நாம் மொழி என்று குறிப்பிடுவது ஒலித்துகள்களால் அமைந்த கருத்துப் பரிமாற்ற இயக்க வடிவம் மட்டுமில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
காட்சிப்படிமங்கள், வெப்ப மாறுபாடுகள், ஒளிக்கூறுகள், திட திரவ வாயு நிலைகள் பற்றிய பௌதீக அளவைகள் - இவை பற்றிய தொகுப்புணர்வும் -
இவற்றிற்கிடையிலான அர்த்த உறவுகளும் பிணைந்த உருவகத்திரள்களையே நாம் மொழி என்று குறிப்பிடவேண்டியவர்களாகிறோம்.

தயவுசெய்து எடுத்துக்காட்டுடன் விளக்கமுடியுமா?

kavitha
13-06-2008, 09:11 AM
சிரத்தையுடன் தூசு தட்டும் விராடன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இளைய துடிப்பான நம் மன்ற "கவிதைச்சுட்டிகளுக்கு" நல்ல தீனி இப்பதிவு.

ஆதவா, தாமரை, ஆதி, சாம்பவி, யவனிகா, கண்மணி ... கொஞ்சம் துணைக்கு வாங்கப்பா... இப்பதிவை பிரித்து மேய.

கவிதையின் பரிணாம வளர்ச்சியாக பல கட்டங்கள். வாசிக்கத்தூண்டுதல், அழகுணர்வை மிளிரவைத்தல், புரியவைத்தல், வழிகாட்டுதல், ஆராய்தல், புதியவைக்கொணரல் என... இன்னும் அடுத்தக்கட்ட பரிணாமங்களை எட்டக்கூடும் (அல்லது எட்டியிருக்கும், நான் உணர்ந்தவரை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்)

ராம்பால் அவர்களின் கவிதை ஆராய்தல் வகையானது. அணுவிற்கும் அண்டத்திற்குமான ஒப்பீடு அவரது கவிதைகள். இத்தகைய கவிதைகள் வாசிக்கக்கிடைக்காதது ஒருவித ஏக்கத்தினை ஏற்படுத்துகிறது.

மீண்டும் வருவேன் என்ற நண்பனின் பதிவுகளுக்காகவும் கண்கள் காத்துக்கிடக்கின்றன. என்னையுமறியாது ஏக்கப்பெருமூச்சு தவிர்க்க முடியாததாகிறது.

மீட்டெடுக்கும் மன்ற செல்வங்களுக்கு என் மனதார்ந்த பாராட்டுகள்.

ஆதவா
13-06-2008, 10:29 AM
சிரத்தையுடன் தூசு தட்டும் விராடன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இளைய துடிப்பான நம் மன்ற "கவிதைச்சுட்டிகளுக்கு" நல்ல தீனி இப்பதிவு.

ஆதவா, தாமரை, ஆதி, சாம்பவி, யவனிகா, கண்மணி ... கொஞ்சம் துணைக்கு வாங்கப்பா... இப்பதிவை பிரித்து மேய.



முழுவதுமாகப் படித்துவிட்டு மாற்றம் காண்கிறேன்............. :)

kavitha
16-06-2008, 06:18 AM
சரி தம்பி. :)

கா.ரமேஷ்
05-01-2009, 10:11 AM
அழகான கவிதைகள்....! நல்ல வார்த்தை ஜாலங்கள்...!வாழ்த்துக்கள்

கா.ரமேஷ்
19-01-2009, 11:40 AM
:):):)