PDA

View Full Version : படித்தவை (ம.பொ.சி - உரைகள், கட்டுரைகள்)இளசு
03-07-2004, 12:40 PM
படித்தவை (ம.பொ.சி - உரைகள், கட்டுரைகள்)

------------------------------------------------------------------------


நீண்ட நாட்களுக்குப்பின் கொஞ்சம் புத்தகம் வாசிக்க சமயம் வாய்த்தது..

ம.பொ.சிவஞானம் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பு... நூலின் நாயகன் - எட்டயபுரத்தான்...


11-12-62 அன்று பாரதி விழாக் கருத்தரங்கில் ஆற்றிய உரையில் இருந்து

சமயவாதிகள் நடத்தும் கருத்துப்போரில் இரண்டு உத்திகளைக் கையாளுவார்கள்.
ஒன்று - சுபக்கம்;மற்றொன்று - பரபக்கம்.
சுபக்கம் என்பது - தன் மதம் கூறுவது..
பரபக்கம் என்பது - பிறர் மதம் மறுப்பது..

(இதைப் படித்தவுடன் அதிபயங்கர என அடைமொழியுடன் உலாவிய
மத விவாத விற்பன்னர்களும், கல்கியின் பொன்னியின் செல்வனில்
"நாவலோ நாவல்" என விழாக்கூட்டங்களில் கூவி அழைத்து
சொல்லாலும், தேவைப்பட்டால் கைத்தடியாலும் மதவிவாதம் நிகழ்த்திய
நமக்கு மிகவும் பிடித்த முரட்டு வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியானும்
மனதில் வந்து போனார்கள்..)


________________________________________________________

பாலைவனம் என்ற போதும் நம் நாடு..
காடுமலை கூட நம் எல்லைக்கோடு..


நாடோடி படத்தில் கவியரசு வைரவரிகள்..


மேற்கே பாலை ஒரு எல்லை..
ஊச்சியில் வெள்ளி மலை எல்லை..

சீன ஆக்கிரமிப்பு நேரம் -- 1962.
மபொசி அய்யா உரையிலும் அந்த பாதிப்பு..கொதிப்பு..

பாரதிதான் தலைப்பு என்பதால் அவர் உரை இப்படி போகிறது..


கவி பாரதி 40 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார். அப்போதே
இமயம் இந்தியாவுக்குத்தான் எனப் பட்டயம் எழுதி வைத்துவிட்டார்.

-----------------------------------; வானொடு
பேரிமய வெற்புமுதற் பெண்குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி"

இமய வெற்பு நம் பாரதத்தாயின் அங்கம்.
அதை அந்நியன் வெட்டி எடுக்க அனுமதிக்கலாமா?

"தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
நாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ?"

இமயம் தாயின் அங்கம் மட்டுமா? அது வெள்ளி ஆபரணமும் கூட..!
வேறு எதுவும் உலகில் இணையாக முடியாத உயர்ந்த அணிகலன்..!!

"-----------------------------------------; ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு"

அதே பாரதி இமயம் தந்தை என்றும்
இந்தியா மகள் என்றும் பாடியதுண்டு -

"வெண்மை வளர் இமயாசலன் தந்த
விறன் மகளாம் எங்கள் தாய்"

சீனத்து "சூ"வும் "மா"வும் தந்தையிடம் இருந்து
மகளைப் பிரிக்க அனுமதிக்கலாமா?


வடக்கு மக்கள் , மன்னர்கள் இமயத்துடன் உறவுரிமை கொண்டாடியதைவிட
தென்கோடியில் இருந்த மன்னர்கள் தேடிப்போய் உரிமை கொண்டார்களே..

அந்த நிகழ்வுகள் சாற்றும் இமயம் மீது நமக்குள்ள உரிமையை..

கண்ணகி - கோவலன் முதலிரவு அறை முன் ஆரத்தி எடுத்து
புது ஜோடியை தோழியர் வாழ்த்திப் பாடும் பாட்டில்
இளங்கோவடிகள் இப்படிச் சொல்கிறார் ---

"இப்பால் இமயத்து
இருத்திய வாள்வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு
உழையதா..."

என்ன நம் இளங்கோவின் கற்பனை வளம்!

இமயம் சிங்கம்...
பனி படர்ந்த சிகரம் அதன் தலை..
ஆனால் கரிகால் வளவனால் அவனுக்குப் பழக்கமிலாத பனிச்சூழலில்
அந்த சிகரம் வரைச் செல்ல இயலவில்லை..
அதனால் பொன்னிறப் பாறைகளில் புலிக்கொடியை நாட்டி
"இதுவரை சோழநாட்டின் எல்லை" எனக் குறிக்கின்றான்.

இளங்கோ கொடி நடப்பட்ட அந்த இடத்தை இமயசிங்கத்தின்
"பிடரி " என்கிறார்..!

அந்தப் பொன்னிறப் பிடரியில் இருக்கும் புலிக்கொடியை
வெள்ளிமலை எனப்படும் சிகரத்துக்குக் கொண்டுசெல்லும்
வீரர்களைப் பெற்றெடுங்கள் - என மங்கையர் பாடுவது
என்ன ஒரு பொருத்தமான வாழ்த்து!


இன்னோர் இடத்தில் இளங்கோ -
முடிமன்னர் மூவரும்
காத்து ஓம்பும் தெய்வ
வட பேரிமய மலை" -- என்கிறார்...


_________________________________நட்பு நாடி வந்துபோன சூ -யென் -லாய் இன்று எதிரியாய்
நிற்கிறார்.
அறவழி செல்லும் தேசந்தான்..
பஞ்சசீலம் ஒழுகும் தலைவன்தான்..

அதனால் என்ன?

நண்பன் எதிரியாய் மாறி நம் தாயை அங்கம் அறுக்கத்துணிந்தபின்...

அறவழி என்பதே அறுக்க வந்த கைகளை அறுத்தெறிவதல்லவா?

கண்ணன் --- என் அரசன் என்னும் கவிதையில்
பாரதி பாடியது இன்று நேருவுக்கும் பாரத நிலைப்பாட்டுக்கும் பொருந்தும்..


சமாதான காலங்களில் கண்ணன் -


பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்பதல்லால் ஒன்றுஞ் செய்திடான்..

நகை புரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்

கண்ணன் வென்று பகைமை அழிந்து நாம்
கண்ணிற் காண்பது அரிதெனத் தோன்றுமே
எண்ணமிட்டு எண்ணமிட்டுச் சலித்து நாம்
இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே..

படைகள் சேர்த்திடல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண்டாக்கல் எதுவும் புரிந்திடான்..

இடையன், வீரமிலாதவன், அஞ்சினோன்
என்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான்..போர்க்கோலம் பூண்டுவிட்டால் அதே கண்ணன் -

காலம் வந்து கைகூடும் போதிலோர்
கணத்திலே புதிதாக விளங்குவான்!

ஆலகால விடத்தினைப் போலவே
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்

வேரும் வேரடி மண்ணுமில்லாமலே
வெந்துபோகப் பகைமை பொசுக்குவான்..

பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்..


கண்ணன் அரசாளும் பாரதத்தாய்....

அறுபது கோடி தடக்கைகளாலும்
அறங்கள் நடத்துவள் தாய் -தனைச்
செறுவது நாடி வருபவரைத் துகள்
செய்து கிடத்துவள் தாய்...!

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய்.. - அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்..!!


வந்தே மாதரம்...!

kavitha
03-07-2004, 01:04 PM
நல்ல தகவல்... அறிந்துக்கொள்ளத்தந்தமைக்கு நன்றி ... நேரமின்மையால் சேமித்து வைத்துக்கொண்டேன் அண்ணா.. திங்களன்று இது குறித்து சொல்கிறேன். மீண்டும் நன்றியுடன்...

இளசு
03-07-2004, 01:06 PM
காத்திருக்கிறேன் கவீ..

கார்கில், கறுப்பு ஆடுகள் என இக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகள் இவை..

உங்கள் எண்ணம் அறிய ஆவல்... நன்றி..

pgk53
17-07-2004, 03:33 PM
இளசு அவர்களே , தாமதமாக இன்றுதான் தங்களின் இந்த அருமையான பதிவைக் கண்டேன்.
மிக நல்ல பதிவு....வாழ்த்துக்கள்.

இளசு
27-07-2004, 12:47 AM
பிஜிகே அவர்களே

உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..

நன்றி..

kavitha
27-07-2004, 08:52 AM
கார்கில், கறுப்பு ஆடுகள் என இக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகள் இவை..
புரிகிறது அண்ணா. துரியோதனன், கர்ணனையும் நினைவுப்படுத்திவிட்டது!
தேவையான தொகுப்பு.. எனக்கிருந்த சில குழப்பங்களைத்தீர்த்தது.. நன்றி!

விகடன்
19-07-2008, 03:16 PM
ம.பொ.சிவஞானம் அவர்களின் புத்தகத்தை படித்தது மட்டுமின்றி கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அண்ணா..
பல விடயங்களை உள்ளகத்தே கொண்டிருகிறது. ஆறுதலாக இன்னோர் தடவை படித்தால்த்தான் நம்மட மூளைக்கு எட்டும்போல இருக்கிறது :D