PDA

View Full Version : கவிதைக்காடு.. (சமீபத்திய மன்றக்கவிதைகள்-ஒரு பார்வை)



rambal
21-06-2004, 05:36 PM
கவிதைக்காடு.. (சமீபத்திய மன்றக்கவிதைகள்-ஒரு பார்வை)

முன்னுரை:

கடந்த மூன்று மாதங்களில் பல சிறப்பான கவிதைகள் மன்றத்தில் தனியாகவும் தொகுப்பாகவும்
பதிக்கப்பட்டது. காட்டில் புல் தளைகளை அவசர அவசரமாக மேய்ந்து விட்டு நேரமின்மையால் அதன் முழுச் சுவையையும் அறியாமல்
சென்று விட்டேன். இப்போது உட்கார்ந்து அசை போட்ட பொழுது எனக்குத் தெரிந்த சிறப்புகளை இங்கு
உங்கள் முன் வைக்கப் போகிறேன்.


காடு:

இந்தத் தலைப்பு கொடுத்ததின் காரணம் என்னவெனில், காட்டில் எல்லாவகை அனுபவங்களும் கிடைக்கும்.
உதாரணமாக கண்ணுக்குத் தெரியாத பெயர் புலப்படாத பறவை பாடுவதைக் கேட்டு ரசிக்கலாம்.
கண் முன் விரிந்திருக்கும் உறுதியான மரமும், காற்றில் அதன் கிளைகள் எழுப்பும் சத்தமும் கேட்கலாம்.
விசித்திரமான மலர்கள், பறவைகள், விலங்குகள், அமானுஷ்யமான ஒலிகள்.. விதம் விதமாய்..
ஒவ்வொன்றும் ஒரு விதம்...


இசையை எந்தவொரு வாத்தியத்தாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியாது..
இசை எங்கும் வியாபித்திருக்கிறது.. காற்றில் கலந்திருக்கிறது.. ஆறாம் பூதம் இசை..
எந்தக்கட்டுக்குள்ளும் கொண்டு வரமுடியாதது இசை. புல்லாங்குழலில் வீணையின் இசையை ஒலிக்க முடியாது..
காது கேளாதவனுக்கு இசையின் வடிவம் எப்படியிருக்கும்? ஆனால், அவனால்தான் உண்மையான இசையை
தரிசிக்க முடியும்.. ஈர்ப்புகள் பல இருக்க இசையாய் கரைந்து போனவனின் காதலி இசையாய் இருக்கிறாள்..

அற்புதமான வடிவாக்கம்..

இளசு அண்ணனின் ஈர்ப்பும் - இசையும்..

உள்ளுக்குள் ஓடும்
மெல்லிசை முணுமுணுக்க
என் எடை அழிந்து
என்னில் நான் மிதக்க
என்னையே பார்க்கும் நான்...

ஆம்...
விசையில்லா பொழுதுகளில்
இசையாகவே நான்...


இசையின் பெயர் - நீ!


நிழல்கள்: மன விளிம்புகளின் புகைச்சலின் குறியீடு.. நிறைவேறாத ஆசைகளின் அலைக்கழிப்பில் தடுமாறும் மனதிற்கு ஆறுதல்..
ஒரு வார்த்தை.. பல காட்சிகள். இது ஒரு அருமையான பாதுகாக்கப்படவேண்டிய தொகுப்பு. நண்பன் அருமையாய் செதுக்கிய
கவிதைப்பாக்களில் நான் ரசித்தவைகள்:

இந்தக் கவிதையில் மெலிந்து போயின நிழல்கள். ஒரு காட்சி. இலையுதிர்காலத்தில் மொட்டை மரம். மற்றொரு காட்சி. பிண்ணிப் பிணைகிறது ஹைக்கூவாய்..


நிழல்கள் மெலிந்து போனது -
இலையுதிர் காலத்தில்
மொட்டை மரம்.


பால்யத்தை மீட்டிப் பார்க்கும் கவிதை இது..



விறகு கட்டைகள்
அடுக்கி
துணி போர்த்து
நீயும் நானும்
கட்டிய வீட்டின்
நிழல்
மொட்டை மாடியில்
இன்னமும் இருக்கிறது -
ஒதுங்க ஆள் இல்லாமல்.



மனவிளிம்பின் எல்லையில்லாக் குறியீடாய் இந்தக் கவிதை:


............
.............
எத்தனை
கோணத்தில் திரும்பினாலும்
நிழல்களை மட்டும்
காணமுடியவில்லை

நிழல்களின்
சப்தம் மட்டும்
கேட்டுக் கொண்டே தான்
இருக்கின்றது -
மனதினுள்......



மன்றத்தில் இடியாய் இடித்து எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த தொகுப்பு.. அனைத்துக் கவிதைகளுக்கும் நண்பனின் விமர்சணமும், அண்ணன் இளசுவின்
விமர்சனமும் மகுடமாய் அமைந்த தொகுப்பு.. பலரது கவனத்தை ஈர்த்த தொகுப்பு.. இந்தத் தொகுப்பைப் பற்றி அனைவரும் அக்கு வேறு ஆணிவேறாய்
விமர்சித்துவிட்டாலும்.. அது அசன் பசரின் அழகிய தோழியேதான்.. கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கிறது..

நான் ரசித்த அற்புதமான கவிதைகள்:

இலைகளைப் போலவே துவண்டு கிடன்ஹன நம் நட்பும் எனும் வரிகள் வித்யாசமான செழுமை வாய்ந்த சிந்தனை..

.............
கம்பளிபூச்சிக்கு பயந்து
மரத்தை
வெட்டிவிட்டார்களாம்

துவண்டுகிடந்தன
இலைகளும்
நம் நட்பும்.


வயோதிகத்தில் பழைய நட்புகளை எண்ணிப்பார்ப்பதற்காகவே தோன்றிய நரை.. பழைய நட்பு கருமையாய்.. முடியின் நிறத்தில்
காலம் குறியீடாய் இழைந்தோடியிருக்கிறது. அருமையான வடிவாக்கம்..



நான்
நரைமுடிகளை
மாறி
மாறி
என்னும் போதெல்லாம்
கழிந்தநாட்களின்
நினைவுகள்
கருமையாய்
கிடைக்கின்றன


எங்கும் காணக்கிடைக்கும் அவலம். எத்தனையோ இடங்களில் பார்த்ததுதான். ஆனால், அவலங்களை பார்ப்பதற்கும் அதோடு வாழ்வதற்கும்
இடைவெளி அதிகம். அந்த இடைவெளியைக் குறைத்து ஒரு அவலத்தைச் சொல்லும் கவிதை இது. பொதுவாக தனது கவிதைகளில்
ஒரு மிதமிஞ்சிய அவலத்தோடு ஒரு சிறுகதை ஒன்றையும் மறைத்து எழுதுவது இவரது வழக்கம். போட்டோரியலிஸ்டிக் முறையில்
வந்த இந்தக் கவிதை அவலக் கவிதைகளை விட சற்று வித்யாசமானது. அவலத்தை நேரிடையாக சொல்லிக் கொண்டே செல்கின்ற
கவிதை இறுதியில் சட்டென்று மிகப்பெரிய அவலத்துடன் எதிர்பாராத விதமாய் ஒரு சிறுகதையைப் போல் முடிகிறது?

அது பூ எழுதிய விட்டில் பூச்சிகள்.. வழக்கத்திற்கு மாறான அவலச்சுவை கொண்ட அற்புதமான கவிதை..



மூணுவேளை சோறில்லை...
முகம்கோணவில்லை..இந்த விரதம்தான்
என் தாவணிக்கனவுகளை
தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறது....

இருண்ட வீட்டில் அடைந்திருந்தேன்
கண்கள் கூசின...

விளக்குகள் ஒளிர்கிறது...

விவரம்கேட்டு ஓடினேன்..
விடியலைத்தேடி..விட்டிலானேன்..

கோடிசெலவில் கோடித்துணி..



இவர் ஒரு புதுமையான அணுகுமுறை கொண்ட நவீனத்தில் எழுதி வரும் கவிஞை..
வித்யாசமான உருவகம்.. இதுதான் இவரது கவிதையை மற்றவர்களிடம் இருந்து தனித்து வைக்கிறது..
இவர் ஒரு பெரிய பெண் கவிஞையாக வருவதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.. அவர் கவிதா...

<span style='color:blue'>
....
ஆறவிட்ட ரணத்தின்
அடித்தளத்தை
சொறிந்துபார்த்து
உயிரோடிருப்பதை
உறுதி செய்துகொள்கிறாய்!

எழுதி வையுங்கள்
என் கல்லறையில்...

"உயிரோடிருக்கும்போதே
உணர்வுகளோடு
புதைக்கப்பட்டவள்" என்று!

</span>

இரண்டு வரிகள் ஆனாலும் அதில் ஒரு ஒழுங்கு நயம்.. தாளம்... கொஞ்சம் குறியீடுகளோடு விளையாட்டு.... இவரும் மன்றத்தில் நவீனத்தில் எழுதும்
ஒரு கவிஞர். அவர் ஸ்ரீராம்.


வன்மையாக மிதித்தபோதும்
மென்மையாக முத்தமிடுகின்றன!


புற்களைப் பற்றி இப்படி இரண்டு வரியில் எழுதியிருந்தாலும், இவரது யாருமில்லா ரயில் நிலையமும், யாருமில்லா ரயில்வண்டியும்
சிலாகிப்பிற்குரிய கவிதை.. ஒரு வித்யாசமான அகம் பற்றிய கவிதை.. live with passion.. என்ற தத்துவத்தை முன் வைக்கும் கவிதை..

இறுதியாக ஒரு கவிதை.. அந்தக் கவிதையைப் படித்தவுடன் எழுதியதுதான் பூனையின் பச்சை நிறக் கண்கள்...
ஓர் இரவு ஒருவன் தூங்கவில்லை.. என்ன காரணமாக இருக்கலாம்?
மனத்தை அலைக்கழிக்கும் ஏதோ ஒரு சம்பவம் வந்து போயிருக்கலாம்...
இதைக் கொஞ்சம் விரிவுபடுத்தி சம்பவத்தை ஒரு பூனையின் கண்களில் இருந்து ஆரம்பித்து பல சம்பவங்கள் வந்து போக தூங்காமல் ஆகிறான்...

இப்படி கதை எழுத வைத்த கவிதை நண்பனுடைய நேற்றிரவு..


தூரத்தே தெரியும் சன்னலின்
விளக்கொலியில்
நகரும் ஆண்பெண் நிழல்கள்
என்ன செய்யப் போகின்றன
என்று நேரம் போக்கியிருக்கலாம்.

எது எப்படியிருந்தால் என்ன?
வரும் இன்றைய இரவில்
என்ன செய்வேனென்ற
கவலை இல்லாத பொழுது
நேற்றைய இரவு
ஏன் என்னை இம்சிக்கிறது....?


இப்படியாகக் காடு முழுதும் விதவிதமான கவிதைகள் வளர்ந்து செழித்தோங்கியிருக்கின்றன..
இங்கு நான் குறிப்பிட்டிருப்பது மிக மிகக் குறைவு.. மீண்டும் நேரம் அமைந்தால் மீண்டும் ஒரு அலசல் செய்ய
ஆசையோடு காத்திருக்கும்.....

பாரதி
21-06-2004, 05:49 PM
நீண்ட நாட்களுக்குப் பின் கவிதைப்பக்கத்தில் ராம்...

இவ்வளவு ஈர்ப்பை மனதில் வைத்துக் கொண்டே ஏன் எப்போதோ வரும் வானவில்லைப் போல்...?

சிலாகிப்புடன் கூடிய உங்கள் ரசனையில் - காட்டில் விளைந்தவை கூட தோட்டத்துப் பதியன்களைப் போல் பார்ப்பதாய் ஒரு உணர்வு.

நன்றி ராம். தொடருங்கள் உங்கள் அலசல்களை.

இளசு
21-06-2004, 07:06 PM
மிக மிக அருமை ராம்..

பார்ப்பவர் பார்வை பட்டால்..
பன்மடங்கு அழகு, பொருள் கூடும்..


பார்வைகள் பரவட்டும்...


வாழ்த்தும் பாராட்டும் நன்றியும்...

Nanban
21-06-2004, 07:56 PM
நல்ல விமர்சனங்கள் மிக அரிதாகத் தான் கிடைக்கின்றன....

குறிஞ்சி மலரைப் போல....

வாழ்த்துகள், ராம்...

அன்புடன்

kavitha
22-06-2004, 05:18 AM
முதலில் தாங்கள் இப்பக்கம் வந்ததற்கு நன்றி!
சிறுகதைகளை மட்டும் படித்துவிட்டு இப்பக்கத்திற்கு வருவதில்லையே என்று கொஞ்சம் கோபத்தோடு வந்தவள் நான்.. ஆனால் உங்களை இங்கே ரசிகனாக எதிர்பார்க்கவில்லை.. அதை விட ஆச்சரியம் அதில் என் கவிதை வரிகளும்... மிக்க நன்றி..

மீண்டும் உங்கள் கவிதைகள் வலம் வந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.. மீண்டும் நன்றியுடன்..

rambal
22-06-2004, 05:06 PM
மீண்டும் கவிதை எழுத வருமா என்று தெரியாதபட்சத்தில்..
அடிப்படை ரசனையை மட்டும் வைத்துக் கொண்டு எழுதியது இது..

கவிதைகளில் இருந்து கதைக்கு விரிந்து கதையில் இருந்து
நாவலுக்கு விரிந்து..
இப்பொழுதெல்லாம் குறு நாவல் அளவில் எழுதிவிட்டு அதை சிறுகதையாக
சுருக்கிக் கொண்டிருக்கிறேன்.. திருப்தி ஏற்படும் வரை எழுதிவிட்டு
பின் ஆர அமர உட்கார்ந்து சுருக்கி பின் பதிக்கிறேன்..
பார்வதி பவனமும், முகட்டின் விளிம்பிலும் அப்படி எழுதி பதிந்தவைதான்..

கவிதை எழுதும் பொழுது காட்சிகளை குறுகிய வார்த்தைகளுக்குள்
அடைக்கவேண்டும்.. அந்த உத்தி கை நழுவிப் போய்விட்டதோ என்று
சந்தேகம் எனக்கு.. அதனால்தான் சில காலம் கவிதை எழுதவில்லை..

விரைவில் கவிதை எழுத முயற்சிக்கிறேன்..

நலம் கேட்டு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்..

அசன் பசர்
05-07-2004, 05:29 PM
இத்தனை ஜாம்பவான்களுக்கு
மத்தியில் என் கவிதையையும் கண்டு எழுதியமைக்கு நன்றிகள்.

அப்படியே என் புதுத்தொகுப்பையும் ஒரு கை பார்த்துவிடுங்கள்

Narathar
16-07-2004, 07:03 AM
மன்ற ஆராய்ச்சியளர் பட்டத்தை ராம்பாலுக்கு தரலாம்...................

இளந்தமிழ்ச்செல்வன்
18-07-2004, 06:18 PM
அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். என் போன்று சிறு நேரம் மட்டுமே வருபவரை உங்கள் இந்த பதிவு இன்னும் கூடுதல் நேரம் கிடைக்க ஆவன செய்ய தூண்டுகிறது. நன்றி ராம்

மன்மதன்
19-07-2004, 09:34 AM
அருமையாக அமைந்தது கவிதை விமர்சனம்.. நன்றாக அலசுகிறீர்கள்.. பாராட்டுக்கள்..

அன்புடன்
மன்மதன்