PDA

View Full Version : ஆயுத எழுத்து....



Nanban
19-06-2004, 07:44 PM
மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் - அந்த சாக்கடையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று மணிரத்னம் தன் வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார்....

கதாநாயகன் - தோள்வலிமை காட்டி, ஆறு குண்டுகள் துளைத்தும் சாகாமல், அமைச்சரை எதிர்த்து யுத்தம் புரிந்து தேர்தலில் வெற்றி பெறுகிறான் என்று காட்டி படத்தை முடித்து விட்டார். எந்த ஒரு நல்ல மாணவனும் இந்தத் தகுதிகளை பெற்றிருக்க மாட்டான் - அல்லது முடியாது.

அரசியல் தூய்மையாகிவிட்டதா, சாக்கடை கழுவப்பட்டு விட்டதா என்பதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது - மாணவன் வெற்றி பெற்றதால், அரசியல் தூய்மையாகி விட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மணிரத்னம் கருதுகிறார் போலும். இதற்கு எந்த முன்னுதாரணத்தை அடிப்படையாகக் கொண்டார் என்று தெரியவில்லை.?

அசாமில் மாணவர்கள் பெரிய வெற்றி பெற்றார்கள் - ஒரு ஐந்தாண்டு காலத்திற்குள், ஊழலில் சிக்கி சீரழிந்து போனார்கள்.... ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று பெரிய அளவில் மாணவர்கள் திமுகவுக்கு தோள் கொடுத்தார்கள் - பின்னர் அதைக் காரணம் கொண்டு அரசியலில் நுழைந்தவர்கள் - காமராஜரையே தோற்கடித்து வெற்றி பெற்றவர்களெல்லாம் பின்னர் அந்த சாக்கடையிலே மூழ்கி, இப்பொழுது எங்காவது ஒரு மூலையில் புழுவாக நெளிந்து கொண்டு இருக்கலாம்... ஆக, மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க மக்கள் தவறுவதில்லை.. ஆனால், சாக்கடையைச் சுத்தம் செய்ய மாணவர்கள் என்ற தகுதி மாத்திரம் பத்தாது. அதற்கு வேறு பல நற்குணங்கள் தேவை...

சூர்யா, மீசை இல்லாமல், மௌனமான ஒரு புன்னகயுடன் வளைய வருகிறார். ஆனால், அத்தனை எடுப்பாக இல்லை. அதுவும், கம்பீரமான போலீஸ் அதிகாரியாக, காக்க, காக்க...வில் பார்த்து விட்டு, இப்பொழுது பார்த்தால் மீண்டும் ஒரு சாக்லெட் பாய் பாத்திரம் செய்து விட வேண்டும் என்ற ஆசையில் போய்விட்டாரோ என்னவோ...

பாய்ஸ் சித்தார்த், நான் தேர்தலில் நிற்கிறேன் என்று முன்வருவது ஓட்டுப் போட வயதில்லாத பையன் தேர்தலில் நிற்கலாமா என்று கேட்க வைக்கும் அளவிற்கு சின்ன பையன் போலிருக்கிறார். அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போவது, பின்னர் போலிஸிடம் புகார் கொடுக்கப் பயந்து ஓடுவது, மீண்டும் மனம் தாளாமல் அடிபட்டவனின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போய் தகவல் சொல்வது என்று ஒரு சராசரி இளைஞன், திடீரென்று வீரம் கொண்டு எழுந்து தேர்தலில், அதுவும் இடைத் தேர்தலில் நிற்பது என்பது நம்பும் படியாக இல்லை.

இந்த இரண்டு ஹீரோக்களின் பலவீனத்தையும் ஈடு கட்டுவது போன்று, மொட்டை மாதவன்... கொஞ்சமும் தடுமாறாமல், தட்,தட் என்று எதிரி, உடன்பிறப்பு, நண்பன் என்று அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவதாகட்டும், அடி, அடி என்று மனைவியை அடித்து நொறுக்கிவிட்டு, பின்னர் பாசத்துடன் கட்டிக் கொள்வதாகட்டும், மனிதர் ஒரு நிஜ ரவுடியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அவருக்கு ஏற்றார் போன்ற ஜோடி, மீரா ஜாஸ்மின்... கருவைக் கலைத்து விட்டு, பதறும் தன் கணவனிடம், ஒரு உயிரைக் கொல்வது எத்தனை கஷ்டமாக இருக்கிறது என்று கேட்கும் கேள்வியில் நன்றாகச் செய்திருக்கிறார்...

நான் பார்த்த தி.வி.சி. யில் பாடல்களே இல்லை... அதுபோல ஒளி-ஒலி பதிவுகளையெல்லாம் விமரிசிக்க முடியாது. அதை யாராவது பெரிய திரையில் பார்த்தவர்கள் செய்து கொள்ளலாம்...

குறிப்பிட்டு சொல்ல வேண்டியது - மணிரத்தினத்தின் கதை சொல்லும் நேர்த்தி... இதிலும் அது தொடர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரம், தங்கள் நோக்கில் கதையைச் சொல்வதும், பின்னர் ஒரு சமயத்தில் கதை சொன்ன அனைத்துப் பாத்திரங்களும் ஒரு புள்ளியில் இணைந்து, பின்னர் கதையை நம்முன் நகர்த்திக் காட்டும் புதிய பாணி.... (விருமாண்டியில் கமல் செய்தது....) சின்ன, சின்ன வசனங்கள்.... வலுக்கட்டாயமான நகைச்சுவை தாதாக்களுக்கு இடங்கொடாமை.... Good, Mr.Manirathanam...கொஞ்சம் அரசியல் பக்கம் போகாமல், தேசபக்தி என்று போரடிக்காமல், அலைபாயுதே மாதிரி ஒரு இனிய காதல் கதையை படமாக்குங்களேன்...... ப்ளீஸ்...நல்ல படம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.....

பாரதி
20-06-2004, 01:32 AM
நல்ல அலசல் நண்பரே... பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி.

மன்மதன்
20-06-2004, 08:25 AM
அருமையான் அலசல்.. இப்படி ஒரு அலசலைப் பார்த்து ரொம்ப நாளாச்சு.. உங்களுக்குள் ஒரு நல்ல விமர்சகன் ஒளிந்திருக்கிறான்.. ஏன் நீங்கள் தியேட்டரில் பார்த்து விட்டு விமர்சனம் எழுதக்கூடாது..

நான் இந்தியில் பார்த்து விட்டு நொந்து விட்டேன்.. ஆயுத எழுத்து சிடி கைக்கு வந்து 10 நாட்களுக்கும் மேலாச்சு.. இன்னும் பார்க்கலை.. பார்க்கவும் தோணலை....

அன்புடன்
மன்மதன்

சாகரன்
20-06-2004, 09:44 AM
எடுத்துக்கொண்ட கரு சிறப்பு.. அவசியம்தான்..
எடுக்கப்பட்ட விதமும் சிறப்பு.. ஆனால் இந்த படத்திற்கு அவசியமில்லாதது...
வித்தியாசமாக எடுக்கப்பட்டதாலேயே கருவின் கவனம் சிதறிப்போகிறது!

இதே வித கருத்தைகொண்டு தமிழ் சினிமாவில் ஏற்கனவே படங்கள் வந்ததுண்டு... உதாரணத்திற்கு "புதிய மன்னர்கள்"..!

மாணவர்கள் ஜெயிப்பதாக முடித்தது சினிமாத்தனம்.. அப்படி இல்லாமல் "இந்த முறை தோற்றாலும் அடுத்த முறை வெல்வோம்" என்ற சூரியாவின் வசனத்துடன் முடித்திருந்தால் ரியாலிடி கொஞ்சமாவது மனதில் பதிந்திருக்கும்...!

மீரா ஜாஸ்மின் நடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி திரிஷா தேவையில்லாத ஒரு சொருகல்...

வெளி நாடு போகும் ஆசையுள்ள சித்தார்த்... தன் கனவுகளை மறந்து தேர்தலில் நிற்பது... மும்பை ரயில் நிலையத்தில் கூட்டத்தில் முன்னால் நிற்பவரை மற்றவர்கள் தள்ளியே ரயில் ஏற்றிவிடுவதைப் போன்றது..! காரணம் தெளிவில்லை.. :-)

மொத்தத்தில் தன் சினிமா knowledge காண்பிப்பதற்காக.. மணிரத்தினம் (அவர் மட்டும் ரசிப்பதற்காக..?!!) எடுத்திருக்கும் படமோ என்று சந்தேகம் வருகிறது..!! :-)

இளசு
20-06-2004, 10:31 PM
நண்பன்,சாகரன்...

இங்கு ஓர் இருவர் அணி...

வித்தியாசமான பார்வை,மதிப்பீடுகளைப் படிக்க
அடிக்கடி இப்படி பாருங்கள்..தாருங்கள்..


சாகரனின் மும்பை ரயில்நிலைய எடுத்துக்காட்டு... நச்! ரசித்தேன்..சிரித்தேன்..

kavitha
26-06-2004, 10:55 AM
.. ஆனால், சாக்கடையைச் சுத்தம் செய்ய மாணவர்கள் என்ற தகுதி மாத்திரம் பத்தாது. அதற்கு வேறு பல நற்குணங்கள் தேவை...

அவை என்னென்ன? என்று நினைக்கிறீர்கள் நண்பரே! :?:



...கொஞ்சம் அரசியல் பக்கம் போகாமல், தேசபக்தி என்று போரடிக்காமல், அலைபாயுதே மாதிரி ஒரு இனிய காதல் கதையை படமாக்குங்களேன்...... ப்ளீஸ்...நல்ல படம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது.....

அட ராமா! தாங்களூமா? சரிதான்! :(



ஆயுத எழுத்து சிடி கைக்கு வந்து 10 நாட்களுக்கும் மேலாச்சு.. இன்னும் பார்க்கலை.. பார்க்கவும் தோணலை....
இங்கேயும் அதே தான் மன்மதன்.. தியேட்டரில் தான் பார்க்கணும் என்றிருக்கிறேன்... அதுவரையிலும் படம் ஓடவேண்டும் :(

விமர்சனம் ஊறுகாய்.... எனினும் நன்றி நண்பரே!

kavitha
26-06-2004, 10:57 AM
ஒரு சிறு வேண்டுகோள் நண்பரே.. ஆயுத எழுத்தல்ல.. ஆய்த எழுத்து...


அன்புடன்,
கவிதா