PDA

View Full Version : பார்வதி பவனம்



rambal
16-06-2004, 03:08 PM
பார்வதி பவனம்

அது ஒரு ஆதி காலத்துக் கட்டிடம். அதன் பலகணிக்கும், முகப்பிற்கும் மேலே வருடம் பொறிக்கப்பட்டிருந்தது.
ஒரு நூறு வருடங்களை விழுங்கிவிட்டு சாசுவதமாய் அந்த பார்வதி பவனம் நின்றுகொண்டிருந்தது. வாசலில் ஒரு பெரியவர் பிணம்
பாடையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் உறவினர்கள் அழுது கொண்டொ அழுவது போன்று பாசாங்கு
செய்து கொண்டோ, முகத்தை கவலையில் வைத்திருப்பது போன்றோ இருந்தார்கள். அந்தப் பெரியவர் அப்படி
ஒன்றும் பிரசித்தமாய் வாழவில்லை என்பது மட்டும் அங்கு கூடியிருபவர்களைக் கண்டால் அனைவருக்கும் தெரியும்.
பெரியவர் இறந்துவிட்டதால் அநேகமாக அந்த வீடு விற்கப்படலாம். அவரின் வாரிசுகளுக்கு அதன் மேல்
அப்படி ஒன்றும் பெரிய ஈடுபாடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அதை விற்றால் எவ்வளவு தேறும்
என்பது மட்டுமே அனைவரின் மறைமுக விருப்பமாகவும் கணக்காகவும் இருந்தது. அவசர உலகின்
பணத் தேடுதல் வேட்டையில் எதையும் பணமாக மட்டுமே பார்த்து பழகிய கண்களுக்கு நூறுவருட கலாச்சாரம்,
பாரம்பரியம் எதுவும் தெரியாது. அதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான ஈடுபாடும் தேவையில்லை.

"பிலேய்.. சாந்தை சரியா பூசுலே.. இந்தபக்க மொத காரவீடுடே இது....க்கும்.." என்று முத்துச்சுவாமிபிள்ளை
வீட்டைக் கட்டும் போது பெருமிதம் கலந்த அதிகாரத் தொணியில் கூறிக்கொண்டிருந்தார்.
"மோலாளி, தேக்கு வந்திருச்சு.." ஆசாரி கூறினார்.
"எப்படிலே இருக்குது தேக்கு.."
"எளைச்சு பாலீசு போட்டுட்டா கை வைக்கவே கூசும் மோலாளி.."
"பின்ன சும்மாவா.. பர்மா தேக்கா கொக்கான்னேன்.."

"என்னடே காரியம் எப்படிடே போயிட்டிருக்கு?" முத்துச்சுவாமிபிள்ளையின் தோழர் சுந்தரலிங்கம் வந்தார்.
"தேக்கு வந்திருக்குலே.. வயசுக்கு வந்த பொண்ணாட்டம் இருக்குடே.."
"காச ஏம்டே கரியாக்குத?"
"பிறவு சும்மாவா? காலகாலமா குடும்பம் விஸ்தரிச்சு அத்தனை பேரும் ஒண்ணா இருக்க வேணாமாடே..
மனிய பின்ன எதுக்குல சம்பாரிக்குதான்? மூணு வேலைக் கஞ்சிய குடிச்சுட்டு நாய் மாரி குட்டி போடுறதுக்குமாலே...
என்னோட வாரிசுங்க இஞ்சன விளையாடி வீடே கலகலன்னு இருக்கணும்ல.. அவிகளுக்குத்தாம்லே இம்புட்டும்.."
"என்னவோடே.. நீ வீடு கட்டுற சேதி ராசபாளையம் வரைக்கும் தெரிஞ்சிருக்குலே.. குமாரசாமி ராசாவுக்கு
அடுத்தபடியா உன்னோட வீடுதாம்லே.."

தொரு வழியாய் பெரியவரை அடக்கம் பண்ணிவிட்டு அவரது மகன்கள் வீடு திரும்பியிருந்தனர்.
எல்லாம் பதினாறு நாள் காரியம் கழித்து வைத்துக் கொள்வதாய் ஒரு மனதாய் பேசி முடிவு எடுக்கப்பட்டது.

"அன்புள்ள மகனுக்கு,
அப்பா எழுதிக்கொள்வது. நலம். நலம் அறிய அவா.
இஞ்சின நம்ம வீட்டுமேல வாங்குன கடன் மீறிப் போச்சு. சப்திக்கு தாக்கல் வந்திருக்கு.
இளையவனுககிட்ட இருந்த எந்த தாக்கலும் இல்லை. இப்ப உன் தாத்தாவோட ஆசையே
உன் கைலதான் இருக்கு. நீ மட்டும் மனசு வைச்சா வீட்டைத் திருப்பிடலாம். பிறவு
காரியங்கள் வழக்கம்போல.. விரைசா தாக்கலைச் சொல்லு..
இப்படிக்கு,
ஆவுடையப்பன்"

"அன்புள்ள அப்பாவுக்கு,
இங்கு யாவரும் நலம். கடிதம் கிடைத்தது. ஞாயமா அந்த வீட்டத் திருப்புறது
என்னோட கடமை. ஒன்னும் கவலை வேண்டாம். நான் அங்கின அடுத்த வாரம் பணத்தோடு வாறேன்.
இப்படிக்கு,
தங்களன்புள்ள..
அருணாச்சலம்."

"வீட்டைத் திருப்பினது மூத்தவந்தான். இருந்தாலும் தாத்தா சொத்து பேரப்பிள்ளைகளுக்குத்தாம்ல சேரும்..." ஒரு பெரியவர் வியாக்கியானம்
செய்து கொண்டிருந்தார்.
"அதெல்லாம் சரி.. உயில இப்படி மூத்தவாளுக்குல்ல எழுதி வைச்சுட்டுப் போயிருக்காரு.." ஒரு மருமகன்
எந்த நேரமும் கோபம் கொள்ளலாம் என்பது போல் பேசினார்.
"உள்ளதுதான.. வீடு ஜப்திக்கு வந்தப்ப அவிகதான திருப்புனாங்க.."
"இருக்கட்டும் மாமா... ஆனா என் பொண்டாட்டி செத்துப் போனவருக்கு பிறக்கலன்னு ஆயிடுமா?"
"அதான.. அப்படின்னா நாங்க மாற்றாந்தாய்க்கா பொறந்தோம்.." தம்பிகளில் ஒருவர் ரோசப்பட்டார்.
"என்னவே பேசுதீக... கூறுகெட்ட மூதிகளா.. வீட்ட மூத்தவன் திருப்பினான். அதான் அவனுக்கே வீடுன்னு
எழுதி வைச்சுட்டு போயிருக்காரு. இதுல மூத்தவனோட முடிவு என்னன்னு தெரியாம ஆளாளுக்கு பேசினா
எப்படிடே..?"
"மூத்தவருக்கு எல்லா வசதியும் இருக்குது.. அவிகளுக்கு இது வந்து ஒன்னும் ஏறப்போறதில்லை.
அவிக விட்டுக் கொடுத்துப் போனா சவுரியமா இருக்கும்.." தம்பிகளில் ஒருவர் சொன்னார்.

"ஆளாளுக்கு அவிக அவிக சவுரியம் பாக்குதீக.. ஒரு மனிய செத்து பாதினாறு நாள் காரிய முடிஞ்ச வீடு
மாரியால்ல இருக்குது.." பெரியவர் சொன்னதும் அங்கு சட்டென்று ஒரு கனத்த மௌனம் நிலவியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மருமகன்களில் ஒருவர்
"எளவு வீடுன்றதுக்காக பொழுதன்னிக்கு அழுதுட்டிருக்க முடியுமா? அதா பெரியவரு போயிட்டாரு..
நடக்குறதப் பத்தித்தான பேசணும்.." என்றார்.
"பிலேய்.. செத்துப் போனவருக்கு மருமவ ஆவுறதுக்கு முன்னமே அவரு உனக்கு தாய் மாமன்.. மனசுல
வைச்சுட்டு பேசுலே.."
"அதெல்லாம் இருக்கு.. செத்துங்கெடுத்தான் சீதக்காதின்ற மாரில்ல இருக்கு.." என்று முனங்கிக் கொண்டே வெளியில் சென்றார் அவர்.

சிறிது நேரத்தில் அருணாச்சலம் வர சபை மீண்டும் கூடியது.

தாத்தா சொத்து பேரய்ங்களுக்குன்னா எங்க மக்கமாருகளுக்குத்தான் போகணும். என் தம்பி, எனக்குக் கூட
அதில உரிமை கிடையாது. எங்க தாத்தா உயிலை எங்க அப்பா பேருல எழுதி வைச்சுட்டு போனாரு. அவரு ஒண்டியா
இருந்ததால பிரச்சினை இல்லை. அவரால முடிஞ்சிதோ முடியலையோ இத்தன நாளு கட்டி காப்பாத்தினாரு.
வீடு அவரோட சொத்து. அத அவரே நினைச்சாலும் எனக்கு எழுதி வைக்கமுடியாது. எனக்க பிள்ளைகளுக்கும், தம்பி பிள்ளைகளுக்கும்,
தங்கச்சி பிள்ளைகளுக்கும்தான் எழுதி வைச்சிருக்கணும். உயிலு கடைசி காலத்துல புத்தி பேதலிச்சு போய் எழுதியிருக்காரு.
அம்புட்டு சொத்தும் பேரபிள்ளைங்களுக்குத்தான். இதுதான் என்னோட முடிவு.. உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க?"
என்று அருணாச்சலம் முடிக்க..

"அதெப்படி.. பேர பசங்கன்னா அம்பிட்டும் ஸ்கூலுக்கும் காலேஜுக்கும்லா போயிட்டிருக்கு.. அதுகள நம்பி
எப்படி கொடுக்கிறது?" மருமகன் கேட்க..
"அப்படின்னா நாமல்ல யாராவது பொறுப்பெடுத்து வீட்ட பாத்துக்கிடலாம். அவிகளுக்கு வயசானதும் அவிக முடிவெடுத்துக்கட்டும்."
"இது சரிப்படாது.. வேணுண்ணா வீட்டை வித்து வற்ற பணத்தை பேரப்பிள்ளைங்களுக்கு பிரிச்சு கொடுத்திடலாம்."
"பிலேய்.. என்ன பேச்சுலா பேசுற? அப்பா செத்து பதினாறு முழுசாக் கழியல.. அதுக்குள்ள அவிக வாழ்ந்த வீட்டை
விக்கிதப் பத்தி பேச்செடுக்குதாவனுக.."
சிறிது நேரத்தில் ஒரே அமளி துமளியாக இறுதியில் ஒரு வருடம் கழிந்து அந்த வீட்டை விற்பதாகவும்
வரும் பணத்தை அத்தனை குடும்பங்களும் சரி சமமாய் பிரித்துக் கொள்வதாகவும் அப்படி இல்லையென்றால்
மூத்தவர் அருணாச்சலம் அத்தனை பேருக்கும் தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டை எடுத்துக் கொள்ளலாம்
என்றும் முடிவெடுக்கப்பட்டது. வேறு பல பிரச்சினைகளில் இருந்த அருணாச்சலத்தால் அப்போது ஒன்றும்
செய்ய இயலவில்லை. இதன் விளைவாய் அந்த வீடு விற்கப்பட்டு பணம் பிரித்துக் கொள்ளப்பட்டது.

"இந்த வீட்டுக்கு இம்பிட்டு வெல தொகையுன்னு எதிர்பார்க்கவேயில்லை." மகன்களில் ஒருவர் சந்தோசத்துடன்
தனது மனையாளிடம் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்.

அடுத்த வாரம் அந்தப் பகுதியில் பார்வதி பவனம் இருந்த இடத்தில் உடை கல் மாத்திரம் நிரம்பியிருந்தது.

பரஞ்சோதி
16-06-2004, 03:18 PM
நண்பர் ராம்பால்,

அருமையான கதை. இது காலகாலம் நடந்துவரும் கதை.

வட்டார மொழியோடு அருமையாக் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆயிரம் கோடி சேர்த்து வைத்தாலும், செத்தப் பின்பு படத்திற்கு பிளாஸ்டிக் பூ மாலை தானே போடுவார்கள், அது தானே அதிக நாட்களுக்கு வரும் என்று நினைப்பவர்கள் தான் வாரிசுகள்.

இது தெரியாத மடப்பயல்கள் தான் சொத்து சேர்க்கிறேன், சொத்து சேர்க்கிறேன், என்று சொத்தை சேர்த்து, கூடவே பாவத்தையும் சேர்க்கிறார்கள்.

அறிவுரை சொல்லும் கதை, எனக்கு எளிதில் புரிந்த கதை. நன்றி நண்பா.

பாரதி
16-06-2004, 04:55 PM
மனிதனுக்கு சந்ததி மேல் இருக்கும் நம்பிக்கையும், சந்ததிகளுக்கு மண் மேல் இருக்கும் நம்பிக்கையும்.... எப்போதும் மாறப்போவதில்லை.... மண் வாசனையுடன் கலந்து கொடுத்திருக்கும் கதைக்கு நன்றிகள் பல ராம்.

thamarai
16-06-2004, 07:50 PM
கதை யதார்த்தமாக அமைந்திருந்தது.
பாராட்டுக்கள்...

இளசு
16-06-2004, 08:21 PM
மாறும் மதிப்பீடுகள்....

வடித்த விதமும், வட்டார மொழியும்..
படைத்த கையைப் பிடித்து குலுக்கச் சொல்கின்றன..

இளவல் ராமுக்கு அண்ணனின் அடிமன வாழ்த்துகள்..


தொடரட்டும் ராம்....

rambal
17-06-2004, 02:33 PM
ஒரு தலைமுறைக் கனவு மூன்று தலைமுறைக்கு மேல் நிலைத்ததில்லை.
பார்வதி பவனம் மட்டுமல்ல.. சித்தாந்தங்களும்தான்..

உதாரணத்திற்கு கம்யூனிசம் அடைந்த நிலையே இந்த பார்வதி பவனமும்
அடைந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு
முன் ஒரு மனிதனின் கனவு அடுத்த தலைமுறையில் சீரழிந்து சின்னாபின்னமாகிறது.
அப்படியெனில் அந்தக் கனவைக் கண்டவனுடைய நிலை?
அவனுடைய கனவின் அர்த்தம்?

கனவு காரியமாகியவுடன் அர்த்தங்கள் அழிந்து போகின்றன.
எல்லாக் கனவுகளும் காரியமான கணமே அழிய ஆரம்பிக்கிறது.
அதனுடைய அர்த்தம் அனர்த்தமாகிறது..

பலநாள் என்னுள் மன்றாடிக்கிடந்த கேள்விக்கு விடையே இந்தக் கதை.


பாராட்டிய அனைவருக்கும் என் தலை சாய்ந்த நன்றிகள்..

தொடர்வேன்...

இளசு
18-06-2004, 01:53 AM
அருமையான கருத்து ராம்..

அன்று தலைவன் என மதிப்பதும்
அடுத்து அவன் சிலையை மிதிப்பதும்...


கண்டு,கற்கவேண்டிய பாடம்...
கதையாய் வடித்த விதத்துக்கு மீண்டும் என் பாராட்டுகள் ராம்..

kavitha
18-06-2004, 04:28 AM
அப்படியெனில் அந்தக் கனவைக் கண்டவனுடைய நிலை?
அவனுடைய கனவின் அர்த்தம்?

கனவுகள் வசப்படும்..அவரவர்க்கு மட்டும்..

நிறைய கேள்விகளை எழுப்பிய கதை.. ராம்பால் அவர்களுக்கு நன்றி!

கொள்கைகளோ, கோரிக்கைகளோ கொண்டு செல்லப்படாதவரை குப்பைகள் தான்.. நன்னீர் ஊற்றிய தென்னை இளநீரைத்தரும்.. கண்ணீரைத்தந்தால் நாம் நன்னீரை ஊற்றவில்லை என்று அர்த்தம்.

rambal
18-06-2004, 05:16 PM
கவிதாவிற்கும், மீண்டும் பாராட்டிய அண்ணனுக்கும்
என் மனம் கனிந்த நன்றிகள்..

அறிஞர்
19-06-2004, 05:12 AM
வாழ்த்துக்கள்.. நண்பரே.. இன்றைய சூழ்நிலையில் பொக்கிஷங்களை.. காப்பவர்கள் சிலரே....

மன்மதன்
19-06-2004, 09:11 AM
அழகான கதை .. நிஜத்தில் நடந்த மாதிரியே... வழக்கு மொழியை அப்படியே கொடுத்தது கதைக்கு உயிர் கொடுத்த மாதிரி.. பாராட்டுக்கள்..

அன்புடன்
மன்மதன்

rambal
22-06-2004, 05:07 PM
கதையை பாராட்டிய அறிஞருக்கும் மன்மதனுக்கும் என் நன்றிகள்..

manjusundar
18-07-2004, 05:25 AM
பேரப் பிள்ளைகளுக்கு என்று வீட்டை பார்த்து பார்த்து கட்டிய பெரியவர், அவர்களுக்கு பாசத்தையும் சிறிது கற்று கொடுத்திருக்கலாம். நமது சந்ததியினர் செல்வசீமான்களாக திகழ வேண்டும் என பலர் நினைத்து பாடுபட்டு சொத்து சேர்த்து வைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படையான நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க மறந்து விடுகிறார்கள். கதையும், மொழி நடையும் அருமை. பாராட்டுக்கள்.

தோழி,
மஞ்சு.

இளந்தமிழ்ச்செல்வன்
18-07-2004, 07:25 AM
சுரீர் என வலித்தது மனது. இன்றைய சூழலையும், மன நிலையையும் தெளிவாய் கூறியுள்ளீர்கள். வலுவாய் வட்டார மொழி.

தொடர்ந்த கருத்துக்களும், பரிமாற்றங்களும் தெளிவாய் ஒன்றை புரிய வைத்தது. நாம் அனைவரும் இந்த விசயத்தை சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளோம் என்பது தான் அது.

அருமையான படைப்பு.