PDA

View Full Version : புதிதாய் பிறக்கப் போகும் உலகம்...........



Nanban
12-06-2004, 07:03 PM
எதிர்நீச்சல் போட்டே வாழ்ந்தவன்
இயற்கையிடமும்
தன் போராட்டம் தொடங்கினான்.

மின்சாரம் வசப்பட்டதும்
கையாளும் ஞானம் வந்ததும்
பிறந்தது -
இந்த இயற்கையை எதிர்க்கும்
மனித மூர்க்கம்...

எந்திர சுழற்சி
வேதியியல் வாயுக்கள்
பிடிபட்டது சில விதிகள்...

ஒரு சக்தியை மற்றதாக மாற்றும்
விதிகள் அறிந்ததும்
இயற்கையை
ஏறுமாறாக சுழற்றும் ஆனந்தத்தில்
மறந்து போனான் -
ஒரு வினைக்கு எதிர்வினை ஒன்றும்
கட்டுப்பாடற்று வெளியாகுமென்று...

விஞ்ஞானம்
வசதிகளின் சில வாசல்களை
திறந்த பொழுது
அழிவுகளின் வாசல்களிலும்
சில தாழ்ப்பாள்கள் தானே நீங்கியது.

ஓசோன் வளையங்களின்
ஓட்டைகள் வழியே
ஓங்காரமாய் நுழைந்த கதிர்களை
பார்க்க முடிந்தது மனித சருமத்தில்
விழுந்த ஓட்டைகளால் தான்...

தட்பவெட்ப நிலைகள் தகர்ந்த பொழுது
பூட்டிய கட்டிடங்கள் சில குளிர்ந்தது -
திறந்த மொத்த உலகும் சூடேறியது.

பனித்துருவங்கள் சிலிர்த்து உருக
கடல் மட்டங்கள் கரைகளை விழுங்க
திசை மாறிய மழைப் பொழிவும்
முறை தவறிய கடற்புயல்களும்
மனித நாகரீகங்களின்
எல்லைகளை அழுத்துகிறது
பிய்ந்து போகும் அளவுக்கு...

ஒரு அழிவின் முடிவில்
மற்றதன் தொடக்கமாம்...

இருக்கலாம்...

மீண்டும் ஏர் பூட்டி
கால்நடை எச்சமிட்டு
பகலில் உழைத்து
இரவில் உறங்கி
காலத்துக்கேற்ற உடையுடுத்தி
மனிதன் வாழ்வான் -
புதிதாய் ஒரு உலகம் பிறந்தால். . .


விஞ்ஞான வீச்சரிவாளை
இன்னும் நன்றாகத் தீட்டிக் கொள்
மூன்றாம் தர ஏழைகள் உண்டு
கூர் பார்க்க.

இல்லாத ஆபத்துகளை அழிப்பதாக
வீசியெறி உன் விஞ்ஞான வீச்சரிவாளை -
இந்த உலகம் அழியட்டும்.....

புதிதாய் ஒரு உலகம்
புதிதாய் ஒரு மனித இனத்திற்கு
தன் பாதுகாப்பு கவசங்களுடன் பிறக்க...

இளசு
12-06-2004, 09:06 PM
படித்தவுடன் எழுதிய பதிலை பதிக்க 15 முறை முயன்றது நான்தான் நண்பன்..
இது பதிவாகிறதா என சோதனையோட்டம் முதலில்....

இளசு
12-06-2004, 09:14 PM
அப்பாடா... பதிவாகிவிட்டது..

அந்த கருத்தின் முதல் வேகம் இப்போ மிஸ்ஸிங்..
முடிந்தவரை இங்கே


பீரங்கி கடைய குதிரைகள் இழுத்த இயந்திரம் வெப்பமாக
"குதிரைச் சக்தி@ வெப்பமாதலைக் கண்டறிந்த ராம்ஸ்போர்டும்

பின்னமாய்த் தன்வசம் ஒப்படைக்கப்பட்ட
சின்ன நீராவி இயந்திரத்தை
இன்னும் மேம்படுத்தி..

ஆழ்சுரங்க அடியில் இருந்து
கரி, உலோகம் சுமந்து
வேர்வை ஆவியான தோழர்களை
நீர் ஆவி கொடுத்து விசிறிவிட்ட ஜேம்ஸ் வாட்டும்..

சக்தி மாற்றம் இத்தனை தூரம் பாயும்
என எதிர்பார்த்திருப்பார்களா???

மனிதனுக்கும் அவன் பாரம் பகிர்ந்த
மிருக நண்பர்களுக்கும்
ஆசுவாசம் தந்த ஆரம்பம்..

இன்று பேராசையாய், சுகவாச போதையாய்
சோம்பல் வளர்க்கும் செவிலியாய்...

நிறைய தூரம் வந்துவிட்டோம்..
நீங்கள் சொன்ன
வட்டத்தின் தொடக்கம்
எப்போதும் வரலாம்..!


உங்களால் மட்டும் படைக்கக்கூடிய கரு இது..
உங்களால் ரசனை வளர்ப்பவனின் சொந்தக் கருத்து இது..

பாராட்டுகள் நண்பன்..

பாரதி
13-06-2004, 01:32 AM
மீண்டும் வேண்டும் நமது பூமி...
நன்றாகவே கூறி இருக்கிறீர்கள் நண்பரே.
பாராட்டுக்கள்.

இக்பால்
13-06-2004, 05:31 AM
ஆரம்ப நிலையை விட்டு வெகுதூரம் வந்து விட்ட நாம்...
வட்டமாக கற்பனை செய்து மீண்டும் ஆரம்பம் பார்க்கும் ஆசை.
ஆனால் நம் பாதை நேர்கோடு அல்லவா?!

நன்றி நண்பன் அவர்களுக்கும், இளசு அவர்களுக்கும். :)

-அன்புடன் இக்பால்.

anbu
13-06-2004, 05:54 AM
ஆரம்ப நிலையை விட்டு வெகுதூரம் வந்து விட்ட நாம்...
வட்டமாக கற்பனை செய்து மீண்டும் ஆரம்பம் பார்க்கும் ஆசை.
ஆனால் நம் பாதை நேர்கோடு அல்லவா?!

நன்றி நண்பன் அவர்களுக்கும், இளசு அவர்களுக்கும். :)

-அன்புடன் இக்பால்.

நம் பாதை நேர்கோடு என்றாலும் உருண்டையான பூமியில்தானே சென்றுகொண்டிருக்கிறோம் இக்பால் அண்ணா... அதனால் மறுபடியும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுவோம் அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை...

சிறந்த கவிதை பாராட்டுக்கள் நண்பன் மற்றும் இளசு அவர்களே....

இக்பால்
13-06-2004, 11:43 AM
நம் பாதை நேர்கோடு என்றாலும் உருண்டையான பூமியில்தானே சென்றுகொண்டிருக்கிறோம் இக்பால் அண்ணா... அதனால் மறுபடியும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுவோம் அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை...

தம்பி அன்பு, நான் வாழ்க்கையைப் பற்றி சொன்னேன்.
நீங்கள் சொல்வது நடையைப் பற்றி என நினைக்கிறேன்.
எதுவாக இருந்தாலும் எனக்கு உடன்பாடுதான்.
-அன்புடன் அண்ணா.

சாகரன்
13-06-2004, 02:42 PM
புதியதாக ஒரு உலகம், நம்மை விட்டுவிட்டுச்சென்றுவிட்ட(துரத்தப்பட்ட) அந்த இயற்கையின் இனிமையோடு திரும்பக் கிடைக்காதா என்ற கனவு எனக்கும் இருந்ததுண்டு...

இன்றே கவிதைகளில் மட்டுமே இயற்கையை ரசிக்க முடிகிறது...
இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கை எப்படியோ...

kavitha
14-06-2004, 04:45 AM
இன்றே கவிதைகளில் மட்டுமே இயற்கையை ரசிக்க முடிகிறது...
இன்னும் அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கை எப்படியோ...
_________________
- சாகரன்

அந்தக்கவலை வேண்டாம் சாகரன்.. வாழ்க்கையின் கடைசி காலத்தை மீண்டும் தாய்மண்ணுடன் முடிப்பது என்று என்னைப்போல் சிலரும் (எனக்குத்தெரிந்து) உள்ளனர்.. தாய்க்கு சோறுபோடாதவன் பிச்சை எடுப்பவனுக்கு சமம்!

நல்ல கவிதை நண்பரே!
இது போன்ற விழிப்புணர்ச்சி கவிதைகள் தாங்கள் படைப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து தாருங்கள்.

kavitha
14-06-2004, 04:52 AM
விஞ்ஞான வீச்சரிவாளை
இன்னும் நன்றாகத் தீட்டிக் கொள்
மூன்றாம் தர ஏழைகள் உண்டு
கூர் பார்க்க.
மேற்கே உண்மை நிலை இது தானே!

இல்லாத ஆபத்துகளை அழிப்பதாக
வீசியெறி உன் விஞ்ஞான வீச்சரிவாளை -
இந்த உலகம் அழியட்டும்.....

அவற்றை நோக்கிய ஏளன வார்த்தைகளாய் நான் காண்கிறேன்.
புதிதாய் ஒரு உலகம்
புதிதாய் ஒரு மனித இனத்திற்கு
தன் பாதுகாப்பு கவசங்களுடன் பிறக்க...
ஆமாம் ஆயுதங்கள் அதற்கு மட்டும் இருக்கட்டும்!

கவிதா

Nanban
14-06-2004, 07:36 PM
நண்பர்களின் கருத்துகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றன. மனிதன், தான் இயற்கையை வெற்றி கொண்டதாக இறுமாந்து நிற்கும் காலமிது. ஆனால், இயற்கை ஒவ்வொரு முறையும் மனிதனை வெற்றிகொண்டு அவனுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டே தான் இருக்கிறது. கவிதையை எழுத இரண்டு விஷயங்கள் தூண்டுதலாக இருந்தது. ஒன்று, சமீபத்தில் பார்த்த விருமாண்டி திரைப்படம். அதிலே கமல் பேசிய இயற்கை விவசாயம்... மற்றொன்று, அசன் பசர் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது, சராசரி விஷயங்கள் அல்லாமல், கவனத்தைக் கவரும் விதமாக சில கவிதைகள் எழுத வேண்டும் என்ற வேண்டுகோள். கவிதைக்குக் கிடைத்த வரவேற்பு ஊக்கம் தருவதாக இருக்கிறது. என்னைப் போலவே இயறகையைக் காக்க வேண்டும் என்ற அவா உடைய நண்பர்களைச் சந்திக்க மனம் மகிழ்கிறது. கருத்தளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.....

அக்னி
01-06-2007, 09:45 PM
விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் போகும் பாதை ஆக்கமா? அழிவா?

உண்மையே கவிதையாக, தட்டுகின்றது...
மனிதர் உணர்வார்களா?

கவிதையும், பின்னூட்டங்களும், முக்கியமாக பென்ஸ் அவர்களின் பின்னூட்டமும் அருமை...

kavitha
06-05-2008, 10:55 AM
நண்பனின் சிறப்பான கவிதைகளில் இதுவும் ஒன்று. மேலெழுப்பியவர்களுக்கு நன்றி.


கவிதையும், பின்னூட்டங்களும், முக்கியமாக பென்ஸ் அவர்களின் பின்னூட்டமும் அருமை...
__________________
~அக்னி
அக்னி அவர்களே, இங்கே பென்ஸ் -ன் பின்னூட்டத்தை காணமுடியவில்லையே ??