PDA

View Full Version : சுட்ட கவிதை!



kavitha
11-06-2004, 12:04 PM
வெற்றியின் ரகசியம்

எல்லா வெற்றிகளும்
முதலில் சிறியதாகவே தொடங்கும்.
சந்தேகமெனில் சொல்லிப்பார் -
'வெற்றியின்' முதலெழுத்து குறிலே!

- பூத்தவன்
நன்றி: இராமகிருஷ்ண விஜயம்


இந்தக்கவிதையை படித்தவுடன் சொலேர் என யாரோ அடித்தார் போல் இருந்தது.. நான் புத்தகத்திலிருந்து "சுட்டு" வந்ததாலும், இது என்னை சுட்டதாலும் 'சுட்ட கவிதை' என பெயர் வைத்திருக்கிறேன்.
நீங்களும் உங்களை சுட்டவைகளை இங்கு பரிமாறலாமே!

பாரதி
11-06-2004, 04:30 PM
அருமை கவிதா. இங்கே தந்தமைக்கு நன்றி. முன்பு அண்ணனும் இதே போல அளித்திருக்கிறார்.

நெடுந்தொலைவு பயணமும் சிறு காலடி வைப்பதில் ஆரம்பிக்கிறது - எங்கோ படித்தது.

Nanban
11-06-2004, 07:43 PM
சுட்ட கவிதைகளுக்குத் தனி இடமுண்டு....

என்றாலும் கவிதா - சொந்தக் கவிதைகளையே இங்கு தாருங்கள்....

நாம் வளரும் நாற்றங்காலில், ஆலமரங்களின் கிளைகளுக்கு பதியனிட வேண்டாமே....

thamarai
11-06-2004, 09:43 PM
நாம் வளரும் நாற்றங்காலில், ஆலமரங்களின் கிளைகளுக்கு பதியனிட வேண்டாமே....
.......

சாகரன்
12-06-2004, 01:26 AM
நாம் வளரும் நாற்றங்காலில், ஆலமரங்களின் கிளைகளுக்கு பதியனிட வேண்டாமே....

சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று ஒளவை பாட்டியிடம் கேட்ட முருகன் சொன்ன விளக்கம், சுட்ட பழத்தில் சுவை அதிகம்...பழுத்து விழுந்த பழங்கள் அல்லவா?

பழம் கொடுக்கும் மரங்களாக இங்கு பலர் இருந்தாலும், பழம் பறித்தோ அல்லது பொறுக்கி எடுத்தோ சுவைக்கும் பாமரர்களாகவும் பலர் உண்டு....

மனதைச் சுடும் எந்த பழங்களானாலும் விரும்பி வரவேற்கும்..... நான்.

இருந்தாலும் மன்ற கவிஞர்கள் சொல்கிறீர்கள்... விலகி நிற்க விருப்பம் வருகிறது....



நான் புத்தகத்திலிருந்து "சுட்டு" வந்ததாலும், இது என்னை சுட்டதாலும் 'சுட்ட கவிதை' என பெயர் வைத்திருக்கிறேன்.


கவிதா,
மிகவும் நல்ல பதிவு, பற்பல இடங்களில் படித்து மனதை சில வினாடி பிடித்துக் கலக்கும் கவிதைகள்... காலப்போக்கில மறந்துவிட நேரிடலாம்... இந்த பதிவில் அதை பதித்தால்... நமக்கு ஏற்பட்ட பாதிப்பும் தாக்கமும் வேறு சிலருக்காவது ஏற்பட நேரிட்டால், அது வெற்றிதான்.

இதை இலக்கியங்கள்/புத்தகங்கள் பக்கம் எடுத்துச்செல்ல ஒரு ஆலோசனை....மற்றபடி உங்கள் விருப்பம்...

kavitha
12-06-2004, 03:48 AM
சுட்ட கவிதைகளுக்குத் தனி இடமுண்டு....

என்றாலும் கவிதா - சொந்தக் கவிதைகளையே இங்கு தாருங்கள்....

நாம் வளரும் நாற்றங்காலில், ஆலமரங்களின் கிளைகளுக்கு பதியனிட வேண்டாமே....
_________________
நண்பன்



இதை இலக்கியங்கள்/புத்தகங்கள் பக்கம் எடுத்துச்செல்ல ஒரு ஆலோசனை....மற்றபடி உங்கள் விருப்பம்...
_________________
- சாகரன்

நண்பன், சாகரன் ஆலோசனைகள் சரியெனவே படுகிறது.. கண்காணிப்பாளர்களை இதை இலக்கியப்பகுதிக்கு மாற்றும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பரே! நல்லவை எங்கிருந்தாலும் எல்லோரும் அதை அறியவேண்டும், பாராட்ட வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால் தான் நம் மன்றத்திலும் படிக்கமுன்வைத்தேன். நீங்கள் சொன்னபடி இனி இப்பக்கத்தில் என் சொந்த கவிதை மட்டுமே இடம்பெறும்....
தவறுதலுக்கு மன்னிக்கவும்.

பரஞ்சோதி
12-06-2004, 04:28 AM
சகோதரி உங்கள் சுட்ட கவிதை நன்றாக இருக்கிறது.

சுட்டு கொடுப்பது என்றால் எனக்கு மிகவும் எளிதான வேலை. பாராட்டுகள்.

Nanban
12-06-2004, 07:15 PM
சுட்ட கவிதைகளுக்குத் தனி இடமுண்டு....

என்றாலும் கவிதா - சொந்தக் கவிதைகளையே இங்கு தாருங்கள்....

நாம் வளரும் நாற்றங்காலில், ஆலமரங்களின் கிளைகளுக்கு பதியனிட வேண்டாமே....
_________________
நண்பன்



இதை இலக்கியங்கள்/புத்தகங்கள் பக்கம் எடுத்துச்செல்ல ஒரு ஆலோசனை....மற்றபடி உங்கள் விருப்பம்...
_________________
- சாகரன்

நண்பன், சாகரன் ஆலோசனைகள் சரியெனவே படுகிறது.. கண்காணிப்பாளர்களை இதை இலக்கியப்பகுதிக்கு மாற்றும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பரே! நல்லவை எங்கிருந்தாலும் எல்லோரும் அதை அறியவேண்டும், பாராட்ட வேண்டும் என்று நினைப்பவள் நான். அதனால் தான் நம் மன்றத்திலும் படிக்கமுன்வைத்தேன். நீங்கள் சொன்னபடி இனி இப்பக்கத்தில் என் சொந்த கவிதை மட்டுமே இடம்பெறும்....

உங்கள் உயர்ந்த எண்ணம் எனக்குப் புரிகிறது. இலக்கியங்கள், புத்தகங்கள் பக்கத்தில் இந்த மாதிரி படித்த மனதைப் பாதித்த கவிதைகளை அளிக்க இடமுண்டு... நானே அங்கு, இந்த மாதிரி மனதைப் பாதித்த ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து தந்திருக்கிறேன். மன்றத்தின் கவிதை பக்கம், மன்ற கவிஞர்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்.

இளசு
12-06-2004, 11:23 PM
இடம் மாற்றியாகிவிட்டது கவீ..

சேகரம் தொடரட்டும்... வாழ்த்துகள்..

இளசு
13-06-2004, 09:58 PM
பச்சியப்பன் [i](கணையாழி,1998)


பாட்டி வீடு சென்றால்
கால்வாய் ஓரக் குருத்து வாழை இலை
எனக்குத்தான்

இரண்டு மைல்தூரம் நடந்து
குளத்துத் தண்ணீரின்
தாமரை இலை பறித்து வந்துதான்
சோறிடுவாள் அத்தை

சின்ன அக்கா வீட்டுக்கு யார் வந்தாலும்
வீட்டோரத் தேக்குமரத்தின்
கம்பளி அரிக்காத இலையாகப் பார்த்து
இணுக்குவான் முனுசாமி

ஆல இலையைத் தைத்து
எடைக்கல்லை வைத்து அழுத்தி
வைத்திருப்பாள் பெரியம்மா

விறகுக்கு மலை போனால்
பாறையே இலையாகும்
கட்டுச்சோறுக்கு

ஆமணக்கு இலையை முனை திருகி
குவித்து சோறு வாங்கியது
பள்ளிக்கூடத்து நினைவு

பொங்கல் வந்தால் போதும்
மஞ்சள் இலையும் பூசணி இலையும்
மிதிபடும்..


அதெல்லாம் கிடக்கட்டும்
எசமான் தோட்டத்தில்
எத்தனை இலை இருந்தாலும்
எங்க கையைத்தான் நீட்டச் சொல்லும்
எங்க எசமானியம்மா

kavitha
14-06-2004, 03:52 AM
மன்றத்தின் கவிதை பக்கம், மன்ற கவிஞர்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான்.
_________________
நண்பன்
உங்கள் விருப்பம் நிறைவேறிவிட்டது நண்பரே!
----------------------------------------------------------------------------------------------------


இடம் மாற்றியாகிவிட்டது கவீ..

சேகரம் தொடரட்டும்... வாழ்த்துகள்..


மிக்க நன்றி அண்ணா! நீங்கள் தொடர்ந்தமைக்கும் நன்றி!
-----------------------------------------------------------------------------------------------------------


சுட்டு கொடுப்பது என்றால் எனக்கு மிகவும் எளிதான வேலை. பாராட்டுகள்.

கவிஞரின் பெயருடன் சுட்டுத்தாங்கள் அண்ணா!
சுட்ட பழத்திற்காக காத்திருக்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------




எங்க கையைத்தான் நீட்டச் சொல்லும்
எங்க எசமானியம்மா

ஒவ்வொரு பத்தி படிக்கும்போதும் பழைய நினைவுகள் உருண்டோடி வர
இறுதி வரி முள்ளாய் தைத்தது!

kavitha
17-06-2004, 05:43 AM
இது ஒரு காதல் கவிதை... வைரமுத்து என்ற அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பிலிருந்து சுட்டது...
இதன் கடைசி வரிகளே... என்னை சுட்டது.... நீங்களும் படித்து ரசியுங்கள்...

எதார்த்தம்

பீலி கொண்டு
உன்
பெயரெழுதப் போகிறேன்!
பேனாமுள் பட்டு
உன் பெயர்
காயப்பட்டு விடுமோ என்ற
கலக்கம் எனக்கு.

உன் நாணம்
என்னை
மேயச் சொல்கிற வேலியோ?

புன்னகையின் கனத்திலேயே
வாடி விடும்
உன் பூஉதடு
என்
முத்தச் சுமையைத் தாங்க
முடியுமோடீ?

அது கூந்தலா..
இல்லை..
இரவின் ஒரு பகுதி
இன்னும்
விடியாமலே இருக்கிறதா?

என் கனவுகளில்
நீ நடமாடுவதால் தானோ
என்
உறக்கம் மணக்கிறது?

தன்
சுவாசக்காற்றையே
ராகமாக்கிவிடும்
புல்லாங்குழலா நீ?

வா!
நமது
பொன்மாளிகைக்கு
பளிங்குத்தாஜ்மகால்
ஒரு
படிக்கல் ஆகுமா
என்று
பரிசீலிக்கலாம்.

உன் காலடித் தடங்கள்
பாதைகளுக்கு -
உன்
பாதங்கள் கொடுக்கும்
ஒத்தடங்களோ?

உன் சுவடுகளாலேயே
எனக்கொரு
சாலை செய்து கொள்ளட்டுமா?

பேசு!
எனக்கிருப்பதோ
உன்
இசையால் மட்டுமே
தணிகிற தாகம்!
உன்
இதழ்க்கிண்ணங்களில்
நீ நிரப்பி வைத்திருப்பதோ
வெறும் மௌனம்.

பறந்து விடுவோமா?
இந்த
மனிதத் தூசுகள்
நம் கண்களில் விழாமல்..

மேகப்புழுதியில்
நம் பாதம்படாமல்...

உன்
சிற்றாடையில் வானம்
சிக்கினால் உதறிவிட்டு...

விண்மீன்கள் என்ற
விடிவிளக்கு அணையாமல்
மெல்ல மெல்ல மூச்சுவிட்டு...

பறந்து போய்விடுவோமா?
**********************
முடிந்தது!
காதலிக்குக்
கவிதையில் எழுதிய
கடிதத்தை மடித்தான் காதலன்.

பையினுள் சென்றகை
அதன்
மூலைகளிலெல்லாம்
முக்குளித்தது!

"அடடே!
அஞ்சல் உறைக்கு
'அஞ்சு காசு' குறைகிறதே!"

இளசு
18-06-2004, 02:14 AM
மேகவீதியில் மனம்
கோடை தார்ச்சாலையில் பாதம்..

தாஜ்மஹாலே ஒரு படிக்கல்தானாமா????!!!!

காதல் எனும் மயன் சமைத்த அரக்குமாளிகை
நிதர்சன நெருப்பு தீண்டும்வரை...


நன்றி கவிதா...

வைரமுத்துவை இன்னும் அலச விருப்பம்..
பிறகு தொடரலாம்..
இங்கே பார்த்தீர்களா?
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1561

kavitha
18-06-2004, 05:12 AM
வைரமுத்துவை இன்னும் அலச விருப்பம்..
பிறகு தொடரலாம்..
இங்கே பார்த்தீர்களா?

தங்களால் முதன் முதலில் அப்பதிவையும் மீண்டும் தண்ணீர் தேசத்தையும் படிக்க முடிந்தது.. நன்றி.
வைரமுத்துவை அலசுவதா? உங்கள் அளவிற்கு எனக்குத்தெரியாது... ஆனால் என் தோழியின் அளவிற்கு உங்களுக்குத்தெரியுமா என்பது சந்தேகமே! கலைமதி அவரது சொந்த ஊரில் பிறந்தவள்.. அவருக்கு நல்ல நெருங்கிய ரசிகை.. விரைவில் விவரங்களை சேகரித்து உங்களுடன் தொடர்கிறேன்...

kavitha
24-06-2004, 11:09 AM
சுட்டக்கவிதையில் இன்றைய தேர்வு தின்னவரும் புலியையும் அன்பொடு நோக்குக பாடல்...



பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!

1. புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே. (பகைவ)

பகை நடுவினில் என்புரு வானனம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான். (பகைவ)

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ? - நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே! (பகைவ)

உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவோமோ? - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே! (பகைவ)

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே! (பகைவ)

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன் - நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ? - நன்னெஞ்சே! (பகைவ)

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே! (பகைவ)

பாரதி
24-06-2004, 04:15 PM
மிக்க நன்றி கவி.

இளசு
25-06-2004, 10:52 PM
நெஞ்சைத் தொட்ட பாடல்..
அவன் மகாகவி..

நன்றி கவீ..

என் வரைக்கும்

வஞ்சகப்புலியை எதிர்கொண்டு வீழ்த்தும்
நெஞ்சுரம் வேண்டுவேன் பராசக்தியை...

kavitha
26-06-2004, 04:22 AM
வஞ்சகத்தை மட்டும்தானே அண்ணா? :) :) :)

kavitha
29-06-2004, 06:53 AM
நேற்று வரை தூற்றியவர்கள்
நாளை முதல் போற்றுவார்கள்
இன்று அவன் இறந்து விட்டான்

- கழனியூரான்

இக்பால்
29-06-2004, 06:59 AM
எல்லோருக்கும் சுட்ட கவிதை தந்த கவிதா தங்கைக்கும்,
இளசுவுக்கும் நன்றிகள். :)

kavitha
29-06-2004, 08:59 AM
வாசித்தமைக்கு நன்றிகள் அண்ணா.
நீங்களும் தரலாமே!

thamarai
29-06-2004, 07:00 PM
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ? - நன்னெஞ்சே!

பாரதியின் சுட்ட கவி தந்த கவிதாவுக்கு வாழ்த்துக்கள்...

mythili
02-07-2004, 05:10 AM
சுட்ட கவிதைகளில் "பாரதியார் பாடல்கள்" தரலமா?????
என்றக் கேள்விக் குறியுடன்.....

எனக்குப் பிடித்த "பாரதியார் பாடல்" ஒன்றைத் தருகிறேன்.

<u>"மனதில் உறுதி வேண்டும்"</u>

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைத் தொட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரியக் கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.

அன்புடன்,
மைதிலி

kavitha
05-07-2004, 11:00 AM
நன்றி தாமரை... தாங்களும் தரலாமே!
-----------------------------------------------------------------------------------
மைதிலி ... அசத்திட்ட... எனக்கு மிகப்பிடித்த பாட்டு!
"நல்லதோர் வீணை செய்தே" -வும் இதுவும் எனக்குள் போட்டி போடும்!
தொடர்ந்தமைக்கு நன்றி!
---------------------------------------------------------------------------------------------------


எப்போதும் வருவதல்ல கவிதை!
எப்போதோ வருவது கவிதை!
நினைத்த போது வருவதல்ல கவிதை!
இதயம் கனத்த போது வருவது கவிதை!

- 'வார்த்தை சித்தர்' வலம்புரி ஜான்.

kavitha
17-07-2004, 10:44 AM
மம்மி என்றது குழந்தை!
அம்மா என்றது மாடு!

- கவிஞர் பல்லவன்

நன்றி: தென்கச்சி கோ.சுவாமி நாதன் - மஞ்சரி இதழ்

kavitha
16-08-2004, 09:17 AM
கலங்காதிரு பிறையே.
உனக்குள்தான்
பூரணச்சந்திரன்
புதைந்திருக்கிறான்
- மகாகவி * இக்பால்

நன்றி: தண்ணீர் தேசம்- கவிப்பேரரசு வைரமுத்து

மன்மதன்
16-08-2004, 09:21 AM
மகாகவி இக்பால்..??? புரியலையே கவி..

அன்புடன்
மன்மதன்

இ.இசாக்
06-09-2004, 05:45 PM
மகாகவி இக்பால்..??? புரியலையே கவி..
அன்புடன்
மன்மதன்

வெளங்கிடுச்சி...

மன்மதன்
07-09-2004, 04:37 AM
மகாகவி இக்பால்..??? புரியலையே கவி..
அன்புடன்
மன்மதன்

வெளங்கிடுச்சி...

இதுவும் புரியலையே.. ஒருவேளை கவிஞர் மொழியோ?? :roll: :roll: :roll:

அன்புடன்
மன்மதன்

kavitha
29-11-2004, 03:54 AM
முதலில் காலம் கடந்த இப்பதிலுக்கு மன்னிக்கவும்.
மன்மதன்,
இக்பால் என்றொரு மகாகவி இருந்ததாகவும் அவர் இப்படியொரு
தன்னம்பிக்கைத் துளியைத் தெளித்திருப்பதாகவும் "தண்ணீர் தேசத்தில்" வைரமுத்து
குறிப்பிட்டிருக்கிறார். அதாவது கவிதைக்குள் கிடைத்த கவிதை.

அதைத்தான் இங்கே "சுட்டுக் கொண்டு" வந்தேன்.
இப்போதாவது புரிந்ததா?

சகோதரர் இசாக் என்ன சொல்கிறார் என்று எனக்கும் விளங்கல.:)

இளசு
06-12-2004, 07:29 PM
கவிஞர் காசி ஆனந்தன்

லஞ்சம்
வாங்கினேன்
கைது செய்தார்கள்
கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்

kavitha
28-02-2005, 08:52 AM
கவிதைக்கு நன்றி இளசு அண்ணா.
ஆனால் கொடுத்தாலும் கேட்டாலும் தண்டனை தரவேண்டும்.
அப்போது தான் லஞ்சம் ஒழியும்.
--------------------------------------------------------------

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் கவிராத்திரியிலிருந்து சுட்டது:-


பெண்களின் கண்களை
ஏன் மீனுக்கு ஒப்பிடுகிறார்கள்?

அவை
பிடிக்கு முன்பே நழுவிவிடுவதால்



நன்றி : விண் டிவி.

gragavan
28-02-2005, 09:43 AM
Originally posted by kavitha@Feb 28 2005, 02:52 PM
கவிதைக்கு நன்றி இளசு அண்ணா.
ஆனால் கொடுத்தாலும் கேட்டாலும் தண்டனை தரவேண்டும்.
அப்போது தான் லஞ்சம் ஒழியும்.
--------------------------------------------------------------

கவிக்கோ அப்துல் ரஹ்மானின் கவிராத்திரியிலிருந்து சுட்டது:-


பெண்களின் கண்களை
ஏன் மீனுக்கு ஒப்பிடுகிறார்கள்?

அவை
பிடிக்கு முன்பே நழுவிவிடுவதால்



நன்றி : விண் டிவி.
95888

அற்புதம். இருந்தும் நமது இளைஞர்களில் பலர், பெரிய வலையாகப் போட்டுப் பிடித்து விடுகிறார்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

puppy
08-04-2005, 05:50 AM
[/quote]
அற்புதம். இருந்தும் நமது இளைஞர்களில் பலர், பெரிய வலையாகப் போட்டுப் பிடித்து விடுகிறார்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்
[/quote]

இராகவா

என்னைக்கு நம்ம இளைஞர்கள் கண்ணை பார்த்து இருக்காங்க சொல்லுங்க......

babu4780
08-04-2005, 08:55 AM
Originally posted by இளசு@Dec 7 2004, 01:59 AM
கவிஞர் காசி ஆனந்தன்

லஞ்சம்
வாங்கினேன்
கைது செய்தார்கள்
கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்

இதுதான் "ஹைகூ" வோ. சூப்பர்பு...

kavitha
10-04-2005, 01:23 PM
ராகவன் அண்ணாச்சி, பப்பி மற்றும் பாபுவுக்கும் நன்றிகள். நீங்களும் 'சுட்ட' கவிதை தரலாமே!

------------------------------------------

நீ வெறும் வீணைதான்
நான் விரும்புவது
உனக்குள் ஒளிந்திருக்கும்
ராகங்களை...

- கவிக்கோ அப்துல் ரஹ்மான்

----------------------------------------

சுகந்தப்ரீதன்
23-04-2008, 07:41 AM
மன்ற மக்களே நீங்களும் உங்களுக்கு புடிச்ச ஐயிட்டத்தை எல்லாம் இங்கு சுட்டு வைக்கலாமே...??!:mini023:

அனுராகவன்
23-04-2008, 02:06 PM
மன்ற மக்களே நீங்களும் உங்களுக்கு புடிச்சதை ஐயிட்டத்தை எல்லாம் இங்கு சுட்டு வைக்கலாமே...??!:mini023:
சுபிக்கு என் நன்றி...
சுட்ட கவியே இங்கு தருகிறேன்..