PDA

View Full Version : முகட்டின் விளிம்பில்...rambal
26-05-2004, 04:41 PM
முகட்டின் விளிம்பில்...

"கோடித்துணி போர்த்தப்பட்ட சடலமாய் முகடு இருந்தது. இரு வார்த்தைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை
மௌனம் ஆக்ரமித்திருப்பது போல் அந்த முகட்டை மௌனம் ஆக்ரமித்திருந்தது. வாத்தியங்களுக்குள் அடங்காத
இசை அங்கு நிரம்பி வழிந்து கொண்டிருந்தது..."

பசி காதை அடைத்து கண்கள் பஞ்சாகி அடி வயிற்றில் சுரக்கும் அமிலம் மிகையாகி தலை சுற்றியது. கீழே விழப் போகும் நேரத்தில்
அருகில் வேப்பமரம் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அதன் பழங்கள் காய்த்துக் கிடந்தது. அவற்றை ஒன்றொன்றாகப் பிடுங்கி
கையில் சேர்த்து வைத்துக் கொண்டான். முதல் பழம் வாய் வைக்க முடியாத அளவிற்குக் கசந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சாப்பிடும்
முதல் பொருள் என்பதால் அது குமட்டியது. வயிறு அந்த உணவை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல் பழத்தை பாதி சாப்பிட்ட நிலையில்
குமட்டி வெளியில் துப்பினான். அதன் பிறகு இரண்டாவது பழம். கொஞ்சம் கசப்பாக இருந்தது. முழுப்பழத்தையும் சாப்பிட்டு விட்டான்.
இப்படியாக கையில் இருந்த அத்தனைப் பழங்களையும் சாப்பிட்டுவிட்டு ஊரணிக்குச் சென்று தண்ணீர் குடித்தான். வாயெல்லாம்
இனித்தது. வயிற்றின் அமிலம் கட்டுக்குள் வந்தது. ஊரணிக்கு அருகில் இருக்கும் கருவேலங்காட்டிற்குள் அவன் சென்றான்.
அங்கிங்கு கருவேல மரங்களோடு கலந்திருந்த கோவைப் பழங்களையும் பறித்து உண்டான்.
வயிற்றுப் பசி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது. அன்றிலிருந்து அடுத்து பத்து வருடங்களுக்கு
இவைகள் தான் அவனுக்கு உணவாக இருந்தன.


"காட்டெருமைகள் தங்களது காலடித் தடங்களை வந்து போனதற்கு அடையாளமாக விட்டுப் போயிருந்தது.
அந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 2300 அடி உயரத்தில் இருந்தது..."

பௌர்ணமி வானத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் பொட்டு வைத்த கறுப்புக் குமரிகளாய் வானமெங்கும்
நிறைந்திருந்தது. வீட்டுத் திண்ணையில் அவன் தூங்கிக் கொண்டிருந்தான். புவீஈர்ப்பு விசைகள் அற்று அதல பாதாளத்தில்
வீழ்ந்து கொண்டிருந்தான். திடீரென்று கைக்கு ஏதோ அகப்பட அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். சிறிது நேரத்தில்
பூமிக்கு மேல் இருந்து ராட்சச கால்கள் அவன் முகத்தை மிதித்தது. அடியில் வலி பொறுக்காமல் உருண்டு விழுந்தான்.
திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தான். அங்கு அவனது அம்மா கையில் விளக்கமாறுடன் நின்று கொண்டிருந்தாள்.
உன்னைக் கொன்னாத்தான் என் பசி அடங்கும் என்று சொல்லிக் கொண்டே அவனை விளக்கமாறால் அடித்தாள்.
காலால் எட்டி உதைத்தாள். முகத்தில் மிதித்தாள். இவன் சுதாரிப்பதற்குள் உடல் நோக அடி வாங்கியிருந்தான்.
வாயில் ரத்தம் கசிந்து உதட்டில்பட்டு உப்புக் கரித்தது. பௌர்ணமிகளில் அவனது அம்மாவின் சித்த நிலை கொஞ்சம் நிறைய மாறிவிடும்.
அதற்குக் காரணமாக இருந்த அவனது மூன்று வயது புகைப்படத்தை அடுத்த நாள் விடிந்ததும் எரிக்க ஆரம்பித்தான்.
அதில் அவன், கையில் பத்து தங்கக் காப்புகளும், பத்து விரல்களில் பத்து மோதிரங்களும். கழுத்தில் விதம் விதமான சங்கிலிகளும்
போட்டுக் கொண்டு அம்மாவின் இடுப்பில் சொகுசாய் அமர்ந்திருந்தான். அவன் அம்மாவின் முகத்தில் பெருமிதக் கலை இருந்தது.
அவள் கோவிலில் இருக்கும் அம்மன் சிலை எழுந்து வந்தது போல் அத்தனை நகைகளுடன் அதில் இருந்தாள். இவர்களுக்கு அருகில்
இவர்கள் இந்த நிலைக்கு காரணமாக இருந்த அவனது அப்பா முகத்தில் மிக மிக சாந்தக் கலையுடன் அமர்ந்திருந்தார்.
அவர் நடத்திய சீட்டுக் கம்பெனியே இவர்களின் இந்த நிலைக்குக் காரணம்.


"முகட்டிற்குச் செல்லும் பாதை மிக கரடு முரடாக இருந்தது. பாதை செங்குத்தாக ஏறிக் கொண்டே இருந்தது. சுற்றிலும்
பைன் மரங்களும் யூகலிப்டஸ் மரங்களும் சீரில்லாமல் வளர்ந்து காட்டை நிறைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று
பாதை செங்குத்தாக இறங்கியது. அது முன்பிருந்ததை விட மிக மிக கரடு முரடாக, பாறைகள் பெயர்ந்து, துருத்திக் கொண்டிருந்தது.."

பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளிவந்து அதில் அவன் மாவட்டத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருந்தான்.
சந்தோச செய்தியைச் சொல்லலாம் என்று வீட்டிற்குச் சென்றான். அங்கு அவனது அப்பா கணக்குப்பிள்ளையின்
உதவியுடன் மரக்காயரிடம் விறகு வெட்டும் வேலையோடு இவன் வரவிற்காகக் காத்திருந்தார். அடுத்த நாள் முதல் அவன்
மரக்காயரிடம் விறகு வெட்டும் வேலைக்குச் சென்றான். முதல் விறகு வெட்ட கோடலியை உயர்த்தி காய்ந்த மரத்தில் இறக்கினான்.
கை விண்ணென்று வலித்து கோடலி கை தவறியது. பின் கொஞ்சம் கொஞ்சமாக வெட்ட ஆரம்பித்தான். மாலை வந்த பொழுது
ஒரு மரத்தின் கால் பாகத்தைக் கூட அவன் வெட்டி முடித்திருக்கவில்லை. இருந்தாலும் மரக்காயர் அன்றைய கூலியாக
ஒரு ரூபாயை அவனிடம் கொடுத்தார். வீட்டிற்குச் சென்று அதை கொடுத்தான். நன்றாக இருட்டியிருந்தது.
ஊரணிக்குச் சென்று கலங்கியிருந்த தண்ணீரைப் பார்த்து உட்கார்ந்தான். கையைப் பார்த்தான். அது காய்க்க ஆரம்பிப்பதற்கான
அறிகுறிகளைக் காட்டிக் கொண்டு சிவந்திருந்தது. உள்ளங்கை வலி எடுத்து உடலெங்கும் விரவி விண் விண் என்று தெரிக்க ஆரம்பித்தது.
முழங்காலுக்குள் முகத்தைப் புதைத்தான். சிறிது நேரத்தில் விசும்பல் எழுந்தது. விசும்பல் அழகையாக மாறியது.

பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் அவன் பள்ளிக் கூட தலைமையாசிரியரின் தயவால் ஸ்காலர்ஷிப்பில் பாலி டெக்னிக் சேர்ந்தான்.
அவனது அப்பா அவனை தலை முழுகினார். குடும்ப நிலை புரியாத பையன் இருப்பதை விட இறந்தே போகலாம் என்று
புலம்பினார். அவன் குடும்பத்தாரின் சாபங்களுக்கிடையில் படித்து முடித்தான்.

படிப்பு முடிந்து தினக்கூலி 7 ரூபாய்க்கு ஈ.பி.யில் போஸ்ட் மரம் நடும் வேலையில் சேர்ந்தான். எலக்ட்ரிகல் படித்துவிட்டு
போஸ்ட் மரம் நட்டுக் கொண்டிருந்தான்.


"மிகவும் செங்குத்தாக ஏறிய பாதை இப்போது அதை விட செங்குத்தாக இறங்கிக் கொண்டிருந்தது. ஓரிடத்தில்
பாதை இரண்டாகப் பிரிந்தது. வலது புறம் செல்லும் பாதை சமதளப் பரப்புடன் காட்டிற்குள் செல்வதற்குறிய அறிகுறிகளுடன்
இருந்தது. இடது புறப்பாதை முகட்டிற்கு செல்வதைப் போல் மீண்டும் செங்குத்தாக ஏறி இருந்தது.. காட்டெருமைகளின் நடமாட்டம்
இருப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் ஏராளமாய் இருந்தது. ஒரு பைன் மரத்தின் பின் புறம் காட்டெருமை கும்பல் ஒன்று
நின்று கொண்டிருந்தது..."

வளைகுடாவின் ஒரு நாட்டில் அவன் தரை இறங்கினான். முதல் நாள் அலுவல் முடிந்து அறைக்குத் திரும்பினான். அவனுடன் இருந்தவர்கள்
இரவு பணிக்குச் சென்று விட்ட பிறகு அவன் தனித்து விடப்பட்டான். இனம் புரியாத கவலை அவனை ஆட்கொண்டது. ஏதேதோ சொற்கள்
அவனை சுற்றிச் சுற்றி அலைபாய்ந்து கொண்டிருந்தன. பாம்பேக்கு ரயில் ஏறும் பொழுது மனைவியின் கண் கலங்கிய சொற்கள், விபரம் புரியாத
இரண்டு குழந்தைகள் பேசிய மழலைச் சொற்கள், சொந்த பந்தங்கள் பேசாமல் மனதிற்குள் பொருமிய சொற்கள், மனைவியின் நகையை அடகு
வைத்த பொழுது அடகுக் கடைக்காரன் சொன்ன சொற்கள், அவனை பாம்பேயில் பிளைட் ஏற்றி விட்ட ஏஜெண்ட் சொன்ன சொற்கள்,
அலுவலகத்தில் ஆப் ஷோர் பிராஜக்ட் அதிகாரி சொன்ன சொற்கள்.. அவன் உள்ளிருந்து வெளிக்கிளம்பி அந்த அறையெங்கும் நடமாடிக் கொண்டிருந்தன.
எந்த சொல்லும் அவனுக்கு ஆதரவை அளிக்கவில்லை. எதற்காக அழுகிறோம் என்றே தெரியாமல் அழ ஆரம்பித்தான். தேம்பித் தேம்பி அழுதான்.
அப்படியே தூங்கியும் போனான்.

விடுப்பில் ஊருக்கு வந்தவனை அவனது கடைசிப் பையன் அவனை மாமா என்று அழைத்தான். மனைவியோடு ஊர் ஊராக சுற்றினான்.
விடுப்பில் வருவதும் போவதுமாய் வருடங்கள் கழிந்து கொண்டிருந்தன.


"செங்குத்தாய் ஏறிய அகண்ட பாதைகள் இப்பொழுது ஒற்றையடிப் பாதையாக மாறியது. வழியெங்கும் முட்புதர்கள்
பாதையை மறைத்துக் கொண்டிருந்தன.."

அடுத்த பத்து வருடங்களுக்குள் உறவுகள் சிக்கலாகிக் கொண்டே இருந்தன. எல்லா உறவும் இவனிடம்
எதிர்பார்த்தன. எல்லோருக்கும் எல்லாம் செய்தும் வெறும் வாயை மென்று கொண்டே இருந்தன. பணம் இல்லாத பொழுதும்
சரி பணம் இருக்கும் போதும் சரி.. உறவுகள் அவனுக்கு அடர்ந்த முள் காடாய் வழியை மறித்துக் கொண்டிருந்தன.

மரணங்கள் அத்தனையும் கடிதங்களில் வந்த பொழுது தனிமையில் அழுதான். அவனது அப்பா, அம்மாவின் மரணங்களும் கூட..


"ஒற்றையடிப்பாதையும் முடிந்து வழிகள் ஏதுமற்று அந்தப் பிராந்தியம் இருந்தது. காட்டெருமைகள்
வந்து போய் உருவாக்கி வைத்திருந்த பாதையல்லாத பாதை மட்டும் இருந்தது. அந்தப் பாதையின் முடிவில்
அந்த முகடு இருந்தது. அதில் ஒரு பாறை மாத்திரம் தொடுக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தது. அதன் மீதிருந்து
பார்த்தால் அந்த பிராந்தியம் முழுதும் தெரியும்.."


விபத்தில் மகன் இறக்க அந்த சோகம் தாங்காது மற்றொரு மகனும் அமெரிக்கா சென்று செட்டிலாகி விட
வயோதிகம் எட்டிப்பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் தாய்நாட்டிற்கு நிரந்தரமாகத் திரும்பினான். அவன் வந்து சேர்ந்த சில நாட்களிலேயே
அவனது மனைவியும் இறந்து விட அவன் ஓடி ஓடிச் சேர்த்த சொத்துக்களை தனிமையில் பூதமாய் அடைகாத்துக் கொண்டிருந்தான்.

"மேகங்களால் அந்த முகடு சூழப்பட்டிருந்தது.. வார்த்தைகளுக்கிடயில் இருக்கும் இடைவெளியில்
சொல்ல முடியாத மௌனம் ஆக்ரமித்திருந்தது. அங்கிருந்து அவன் கால்கள் புவி ஈர்ப்பு விசைகள் அற்று
பறக்கத் தொடங்கியது..."

பரஞ்சோதி
26-05-2004, 05:04 PM
அற்புதம் நண்பர் ராம்பால். நினைத்து பார்த்தால் என்னுடைய வாழ்க்கையே எனக்கு பயமாக தோன்றுகிறது. எத்தனையோ பேரில் வாழ்க்கையை அருமையாக ஒரு சிறுகதையில் சொல்லி விட்டீர்கள். இதற்கு எனக்கு உங்கள் கதையை விமர்சனம் செய்யத் தெரியவில்லை. உண்மையில் நீங்கள் அனைவரும் விரும்பும் ஒருவர் தான்..

பாரதி
26-05-2004, 05:33 PM
அருமை ... ராம் - ஒரு கதையை.... நிகழ்வை தந்ததற்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருப்தியும், முடிவில்லாத சிந்தனையையும் கொடுத்தற்கு.

இளசு
26-05-2004, 11:04 PM
மிகச்சிறப்பாய் வந்திருக்கு ராம்.
முற்றிலும் உன் தனித்துவ பாணியில்..

ஒரு மொத்த வாழ்க்கையையும்.... வடித்த விதம் அருமை.
மாயவெளியா..மலை முகடா....
கடைசியில் கூட்டிக்கழித்தால் வாழ்க்கை என்பதுதான் என்ன?
மயங்குது நெஞ்சம்..

kavitha
27-05-2004, 04:38 AM
வாழத்தானே வாழ்க்கை! வாழாமல் வாழ்ந்தென்ன லாபம் என்று கேட்கவைக்கிறது கதை!
"கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீ தான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அது தான் உனக்கு எஜமானன்"
வைரமுத்து வரிகளை நினைவூட்டுகிறது!
தேவையானது போதும் எனும்போதே சொந்த தொழில் தொடங்கி தம் குடும்பத்தாருடன் தாய் நாட்டில் இருப்பது தான் சிறப்பு!
நல்ல அருமையான கதை!

கரடு முரடான மலைப்பாதை கதை!

rambal
27-05-2004, 05:18 PM
முதலில் பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்..

முகட்டின் விளிம்பில்... இது பெரிய கதையாக ஆரம்பித்து, இருபது அத்யாயங்களாய்
விரிந்து குறு நாவலாகி.. கடைசியாக ஒரு தனி மனிதனின் கதையை சிறு கதையாக்கிவிட்டேன்..
75 சதம் உண்மை சம்பவங்களைக் கொண்ட கதை இது. அநேகமாக நிறைய பேர்
சந்தித்த கதையாகக் கூட இருக்கலாம். ஏதோ ஒன்று பால்யத்தில் கிடைக்காது
போக கிடைக்காத அதற்காக மனம் ஏங்கி அதைக் கைப்பற்றி..

மலை முகடும் அப்படித்தான்..

ஆனால். மலை முகட்டை சில நேரம் ரசிக்கலாம்..
அங்கு குடியிருக்க முடியாது..
அதற்குக்காரணம் அங்கு நிலவும் தனிமை, வெறுமை, மயான அமைதி..

இது போலவேதான் வாழ்வும்..

அப்படி ஒரு வாழ்வுதான் உங்கள் பார்வைக்கு...


இன்னும் சிடுக்குகளுடன்.. அலைபாயும் மனதோடு...
தொடர்வேன்..

அதுவரை..

kavitha
28-05-2004, 04:28 AM
இது பெரிய கதையாக ஆரம்பித்து, இருபது அத்யாயங்களாய்
விரிந்து குறு நாவலாகி.. கடைசியாக ஒரு தனி மனிதனின் கதையை சிறு கதையாக்கிவிட்டேன்..
எனில் பல கரடுமுரடான பக்கங்கள் இங்கே காட்டப்படாமலே போயிருக்குமே!

இக்பால்
04-06-2004, 04:01 PM
ஏனோ தெரியவில்லை. நம் தமிழ்மன்றத்தில் வரும் உறவுகளில் அதிகம்
ஊர், உறவுகளை விட்டு வெளி நாடுகளில் வசிக்கும் மனிதர்களாக இருக்கக்
காண்கிறோம்.

கதையை இந்தப் பக்கத்தில் கொடுத்தது சாலச் சிறந்தது. பரம்ஸ் தம்பி
சொன்னது போல் ஒரு பயம் கொடுக்கும் வாழ்வு.

ஊரில் நடக்கும் மணங்களும், மரணங்களும் கடித்தத்தில்தான் நாம்
பார்க்கிறோம். ஒரு வித்தியாசம். இப்பொழுதெல்லாம் தொலைபேசியில்
பார்க்கிறோம்.

பாராட்டுகள்- வாழ்த்துகள்- நன்றி ராம்பால் தம்பி.

-அன்புடன் அண்ணா.

rambal
04-06-2004, 05:17 PM
விமர்சணங்களுக்கு நன்றி கவிதா அவர்களுக்கும் இக்பால் அண்ணன் அவர்களுக்கும்...

thamarai
04-06-2004, 09:42 PM
முகட்டின் விளிம்பில்... அருமையான கதை.

மலை முகட்டை சில நேரம் ரசிக்கலாம்..
அங்கு குடியிருக்க முடியாது..
அதற்குக்காரணம் அங்கு நிலவும் தனிமை, வெறுமை, மயான அமைதி..

இது போலவேதான் வாழ்வும்..

நடைமுறைவாழ்க்கையோடு ஒன்றிப்போன கதை.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

samuthira
18-06-2004, 01:02 PM
முகட்டின் விளிம்பில்..
முழுமையான கதை...

வாழ்வை சொன்ன விதம் நேர்த்தி., பாராட்டுக்கள் ராம்பால்..

manjusundar
18-07-2004, 11:53 AM
எழுத்து நடை, உவமைகள் எல்லாம் அற்புதம்... ஏன் சோகமான முடிவே பொதுவாக சிறுகதைகளில் அதிகம் காணப்படுகிறது..
உற்சாகமான, படிப்பவர்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம் கதைகள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

தோழி,
மஞ்சு.