PDA

View Full Version : பூனையின் பச்சை நிறக்கண்கள்..rambal
13-05-2004, 05:22 PM
பூனையின் பச்சை நிறக்கண்கள்..

இருளில் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது பூனையின் கண்கள்... பூனையின் பச்சை நிற கண்கள்...
அவளுக்கும் பூனையின் பச்சை நிறக் கண்கள்தான்.. பூனையின் பச்சை நிறக் கண்களை நேருக்கு நேராய் பார்ப்பது
என்பது சாத்தியம் இல்லாத செயல்.. அந்தக் கண்கள் உடலை காகிதமாய் கிழித்து ஊடுருவிச் செல்லும்
பிணத்தின் மூக்கில் நுழையும் சிற்றெறும்புகளைப் போல்.. பின் அடி வயிற்றில் கையை விட்டுத் துளாவும்
சாப்பாட்டை பிசையும் கரம் போல். அந்தக் கண்களை சந்திக்க எனக்கு பயம். பூனையின் பச்சை நிறக் கண்களைப்
பார்ப்பதென்றால் என்னால் முடியாத காரியம்.. ஆனாலும், இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்..

ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு என்னை ஊடுருவிப் பார்க்கின்றன பூனையின் பச்சை நிறக்கண்கள்.
எந்தப் பக்கம் தாவிச் செல்வது என்பது பற்றி எந்தவொரு தீர்மானத்திற்கும் வராமல் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது.
"இன்னும் முடிவு பண்ணலையா?"
"இல்லை.."
"அப்ப ஏன் என்னைக் காதலிச்ச?"
"தெரியலை.."
"வேணுன்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?"
"எனக்கு இஷ்டம் இல்லை.."
"அப்படின்னா உன் வீட்ல பாத்த பொண்ணையே கட்டிக்க வேண்டியதுதான?"
"என்னை வார்த்தையால கொல்லாத.. ப்ளீஸ்"
"ஸீ ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.. இப்படி மதில் மேல் பூனையா நின்னுட்டிருந்தா என்ன அர்த்தம்?"
"அதான் எனக்கும் புரியலை.."
"அப்ப நான் சொன்னமாதிரி ரிஜிஸ்டர் மேரேஜ்.."
"அது முடியாது.."
"அதான் ஏன்?"
"வீட்டை விட்டு வந்து வீட்டுக்குத் தெரியாம கல்யாணம்.. என்னால நினைச்சுப் பாக்கக் கூட முடியாது.."
"அப்படீன்னா என்ன பண்ணலாம்னு சொல்லு.."
...................
...................
"பேசாம என்னை மறந்திடு.."
"ஏன்?"
"உன்னை எங்க வீட்டில பிடிக்கலை.. நிறைய பிரச்சினை.." நான் சொல்லி முடிப்பதற்குள் அவள் கண்கள் கலங்கின..

பூனையின் பச்சை நிறக்கண்கள்..

நாடகம் ஆடி மயக்கப் பார்க்கிறது.. திசைகளைக் குழப்பிவிட்டு ஞாபக அடுக்குகளை சிதைக்கப்பார்க்கிறது. பூனையின் பச்சை நிறக்கண்கள்..

ஜன்னலில் பூனையைக் காணவில்லை.

பூனையின் பச்சை நிறக்கண்கள் மாத்திரம் கண்களின் முன் பிம்பமாய் நின்றுவிட்டது. தண்ணீர் கொண்டு கழுவியும் போகவில்லை.
பார்க்குமிடமெல்லாம் பூனையின் பச்சை நிறக்கண்கள்.

அடுக்குகள் கலைய ஆரம்பித்தன.. தூசி வெளியேறி தும்மல் வந்தது. அடுக்குத் தும்மல் வர ஆரம்பித்தது.
அத்தனைக்கும் காரணம் பூனையின் பச்சை நிறக்கண்கள்..

இப்போது பூனை எங்கிருந்தோ திரும்பி வந்து மீண்டும் ஜன்னல் கம்பியில் அமர்ந்தது. பின், என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்தது.

"ஒரு வேளை உனக்கு என் மேல் பாதர்லி இமேஜாக இருக்கலாம்? இல்லியா?"
"இப்ப இருக்கணும்னு சொல்றீங்களா? இருக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா?"
"இங்க பாரு.. எனக்கு சரியான நேரத்துல மேரேஜ் ஆகியிருந்தா இந்நேரத்துக்கு உன் வயசுல எனக்கு ஒரு பொண்ணு இருந்திருக்கும்.."
"பொண்ணு இருந்திருக்கும்.. ஆனால், இல்லை.. அப்புறம் அதப் பத்தி ஏன் யோசிக்கிறீங்க?"
"முடிவா நீ என்னதான் சொல்ல வற்ற?"
"ஐ லைக் யூ... உங்களுக்கு என்னை பிடிக்கலை?"
பச்சை நிறக் கண்கள் பள பளக்க பூனை கேட்டது..

ஜன்னல் கம்பியில் அமர்ந்திருந்த பூனை என்னை ஒரு முறை பார்த்துவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது..

"நான் ஐ லைக் யூ சொல்லிட்டதால என்னைய என்ன வேண்ணா பண்ணலாம்னு உங்க பிளானா?..
நமக்குள்ள பந்தம் இன்னியோட அத்து போச்சு.. இனி நீங்க யாரோ.. நான் யாரோ.. பை.."

பூனை கோபமாய் வெளியேறியது..
பூனையின் பச்சை நிறக்கண்கள்.. மிருதுவானவை. அழகானவை. ஆபத்தானவை.

அவளுடைய கண்களின் நிறமும் பச்சை நிறக் கண்கள்தான் பூனைக் கண்களைப் போலவே..

ஜன்னலில் இருந்த பூனை இப்போது அமைதியாய் ஜன்னலை விட்டு இறங்கி அடுப்படிப் பக்கம் சென்று விட்டுத் திரும்பியது.

அது சாப்பிடுவதற்கான பொருட்கள் ஏதும் இங்கில்லை என்பது அதற்கெப்படித் தெரியும்?

மீண்டும் ஜன்னல் கம்பியில் ஏறி அமர்ந்து கொண்டு என்னை முறைத்துப் பார்க்க ஆரம்பித்தது.

"இந்த வயசுல உங்க புத்தி ஏன் இப்படி கெட்டுப் போச்சு?"
"ஏய் என்ன நடந்துச்சுன்னு இபடி குதிக்கிற?"
"மகள் வயசுல இருக்கிற பொண்ணோட ஏன் இப்படி சுத்துறீங்க? பாக்றவங்க என்ன நினைப்பாங்க.."
இவளுக்கு இதெல்லாம் யார் சொன்னது? கோபம் தலைக்கேற
"அப்படித்தான் சுத்துவேன்.. உனக்கென்ன?"

அன்று இந்த வீட்டை விட்டுப் போனவள்தான்.. இன்னும் திரும்பி வரவில்லை..

பூனை ஜன்னலில் இருந்து வெளிப்புறம் குதித்து என் கண்களில் இருந்து மறைந்தது.

இளசு
13-05-2004, 10:48 PM
பாராட்டுகள் ராம்..

நான் படித்திராத புதிய யுத்தியில் சொல்லப்பட்ட கதை..

உண்மையில் "பூனை" - நாயகன் தானோ எனக் கேள்வி எழுகிறது எனக்குள்..


சில மாதங்களுக்கு முன் விகடனில் வந்த குட்டிக்கதை ஒன்றும் நினைவாடுகிறது. அதன் கருத்தை இப்படி சொல்லலாம்...

என்னுயிர் அவள்..
இன்று ஏன் புன்னகை வெளிச்சம் வீசவில்லை?
அவள் முகம் திருப்ப
என் வானமே இருண்டதே..
அவளுக்காக உருகும் என் மெழுகு இதயம்..
தெரிந்தும் இப்படி விலக இரும்பா அவள்.?
ஏன் இன்று அப்படி விலகிப் போனாள்..?
ஒரு வேளை.. ஒரு வேளை..
என் மனைவியைச் சந்தித்துவிட்டாளோ?

kalai
14-05-2004, 01:54 AM
நன்றி திரு.ராம்பால்.கதை எழுதுவதிலும் தாங்கள் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க மற்றுமொரு அருமையான படைப்பு.வாழ்த்துக்கள் ராம்.

mythili
14-05-2004, 06:32 AM
சிறிய கதை என்றாலும் ஆழமான கருத்துக்கள், என் மனதை நிகழ்த்தியது.
வாழ்த்துக்கள் , இன்னும் நிறைய படைப்புகள் படைக்க. :)

அன்புடன்,
மைத்திலி

இக்பால்
14-05-2004, 10:41 AM
அடுத்த கதை கேட்டேன். வந்து விட்டது. இருந்தாலும் ஏனோ எனக்குப்
பிடிக்கவில்லை. கதை நன்றாக இல்லை. ஆனால் தொடருங்கள்.

rambal
14-05-2004, 04:06 PM
முதலில் பாராட்டிய அண்ணன், கலை, மைதிலி, மற்றும் இக்பால் அவர்களுக்கு நன்றி...

அண்ணன் சொன்னது போல் கதையின் நாயகன் பூனையாகவும் இருக்கலாம்.

அது பழைய நினைவுகளைக் கிளறி விட்டுச்செல்லும் ஒரு மனசாட்சி..

கதை நன்றாக இல்லை என்று மனம் திறந்து இக்பால் அண்ணன் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.. இந்த மாதிரியான வெளிப்படையான கருத்துக்களை வரவேற்கிறேன்..

இந்தக் கதை வித்யாசமான முயற்சி..

மூன்று கால கட்டத்தில் மூன்று பெண்களிடம் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடே கதை..

பூனையின் கண்களை ஒத்திருக்கும் பச்சை நிறக் கண்களை உடைய பெண்களைக் கண்டால் கதையின் நாயகனுக்குப் பிடிக்கும்.

இதன் விளைவே முதல் காதல்..

அந்தப் பெண் நாயகனுக்காக வீட்டை விட்டு வெளி வர தயாராய் இருந்தும் நாயகனால் ஒன்றும் செய்ய இயலாத நிலை.
இதன் விளைவாக அது முதல் பூனையின் பச்சை நிறக் கண்களுக்காக ஏங்குகிறான். காலம் கடந்து மணம் புரிகிறான்.
அடுத்த காலம் போன காலத்தில் அதே மாதிரி பூனையின் பச்சை நிறக் கண்களுடைய பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவளுக்கு இவன் மேல் பாதர்லி இமேஜாகக் கூட இருக்கலாம்.

ஏதோ ஒன்று.. அவளுக்கு இவனை பிடித்திருப்பதாய் சொல்கிறாள்.
நாயகன் இதை அட்வாண்டேஜ் ஆக எடுத்துக் கொண்டு
தப்பாக அணுக முயலும் பொழுது அவள் இவனை விட்டு விலகுகிறாள்.

இதற்கிடையில் இவன் மனைவிக்கு இந்த விபரங்கள் பற்றி மேலோட்டமாய்
தெரிய வர அவளும் இவனை விட்டு விலகுகிறாள்.

இப்போது தனியாய் இருக்கிறான்...

பூனையின் கண்களைப் பார்ப்பதென்றால் பயம்.. இருந்தாலும் இப்போது தனிமையில் அதைக் காண்கின்றான்..

எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தெரியாத ஒருவன் ஒரு காலகட்டத்தில்
அத்து மீறிய முடிவுகளுக்கு ஆட்பட்டு அதன் விளைவாய்
தனித்து விடப்படுகிறான்.

பூனையின் கண்கள் மனசாட்சி.. பழைய டைரி.. காதலிகளின் பிம்பம்..
முழங்காலை கல்லில் முட்டிக் கொண்டால் ஏற்படும் வலி..

எபடி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..

வாழ்க்கை எப்போதும் காவியத்துவமாய் இருக்காது..

சராசரி வாழ்க்கையின் சிக்கல்களில் சிக்கித் தவித்த சாமான்யன் தான் நாயகன்..

இது என்னுடைய பார்வையில்..

ஒவ்வொருவர் பார்வையிலும் ஏதாவதொன்று வித்யாசமாய் தெரிய வேண்டும்
என்பதற்காகத்தான் பல இடங்களை அப்படி அப்படியே விட்டு விட்டு
வந்திருக்கிறேன்....

அவரவர் விருப்பம் போல் யூகிக்க இடமளித்திருக்கிறேன்..

மற்றபடி ஏதேனும் அதிகப்பிரசங்கித் தனமாய் எழுதியிருந்தால் மன்னிக்கவும்..

பாரதி
14-05-2004, 06:08 PM
என்னவாக இருக்கும் என்று யூகித்து பின்னர் எழுதலாம் என்று இருந்து விட்டேன் ராம். உங்கள் விளக்கத்துக்குப் பின் நன்கு புரிகிறது. உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள் ராம்.

pgk53
16-05-2004, 09:41 AM
நண்பரே, வித்தியாசமான கதை சொல்லும் பாணி.
வாழ்த்துக்கள் ....மேலும் கொடுங்கள்.

மன்மதன்
16-05-2004, 09:51 AM
மிகவும் வித்தியாசமான கோணத்தில் அமைந்த கதை.. முதல் தடவை புரியாவிட்டாலும் ராம்பாலின் விளக்கம் படித்துவிட்டு கதை படிக்கும் போது ரசிக்க முடிந்தது.. தொடர்ந்து எழுதுங்க..

இக்பால்
16-05-2004, 11:40 AM
அப்படி சொல்லுங்க முதலில்.

மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் சந்தித்த மூன்று பூனையின் பச்சை
நிறக் கண்களை ஒத்த கண்கள் கொண்ட பெண்களா? அருமை.

இடையிடையே பூனையின் பச்சை நிறக் கண்கள் எனப் பார்த்தபொழுது
எல்லாம் ஏன் இடையிடையே வருகிறது என யோசித்தேன்.

அருமை ராம்பால் தம்பி. விளக்கத்திற்கு நன்றி.

-அன்புடன் இக்பால் அண்ணா.

gankrish
17-05-2004, 04:49 AM
புரிந்தும் புரியாமலும் ஒரு அழகான சிறுகதை ராம்பால்.

rambal
17-05-2004, 02:02 PM
கதையை பாராட்டிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

அடுத்து ஒரு வித்யாசமான சிறு (பெருங்) கதையுடன் விரைவில்..

அதுவரை..

மன்மதன்
17-05-2004, 02:11 PM
கதை பகுதி களை கட்ட ஆரம்பித்து விட்டது.. வாழ்த்துக்கள்..

kavitha
18-05-2004, 08:53 AM
மூன்று கால கட்டத்தில் மூன்று பெண்களிடம் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடே கதை..


மற்றுமொரு வித்யாச ஆட்டோகிராப்.
பழி பாதகத்திற்கு அஞ்சாதவர்கள் பூனைக்கண் உடையவர்கள் என்று படித்திருக்கிறேன்.
அது உண்மையோ பொய்யோ தெரியாது.
ஆனால் ஏனோ எனக்கு பூனை கண்களை உடையவர்களை கண்டாலே பிடிக்காது. பயம் தான் மேலிடும்!
நாயகனின் குணமும் அப்படியே! ஒவ்வொருவரிடத்திலும் மன்மதர்களாக, ரதிகளாக எந்த வயதிலும் கற்பனை அம்சங்கள் உண்டு!
இங்கே அதை வைத்து கதை எழுதிய ராம்பால் அவர்களுக்கு பாராட்டுகள்.
தனித்து விடப்பட்டதாய் முடித்திருப்பது முத்தாய்ப்பு..ஏனெனில் மதில் தான் இந்த குட்டிச்சுவர் பூனைக்கு இருப்பிடம்.
விளக்கத்திற்கு முன் இருந்த கதையின் கண்ணோட்டம் விளக்கத்திற்கு பிறகு மாறிவிட்டது

அறிஞர்
19-05-2004, 10:15 AM
வித்தியாசமான.. கருத்துடன்.. கலக்குகிறீர்கள்.. ராம்.. வாழ்த்துக்கள்

ஜோஸ்
19-05-2004, 04:46 PM
தங்களது விளக்கத்திற்குப் பிறகு தான் கதை முழுமையாக புரிந்தது. வித்தியாசமாக எழுதப்பட்ட அழகான கதை. வாழ்த்துக்கள்...

rambal
26-05-2004, 03:39 PM
கதையை விமர்சித்த மன்மதன். அறிஞர், கவிதா மற்றும் ஜோஸ்
அவர்களுக்கு என் நன்றிகள்..

பரஞ்சோதி
26-05-2004, 05:22 PM
நண்பர் ராம்பால், நான் ஏற்கனவே படித்துப் பார்த்தேன், புரியவில்லை, அதனால் என் கருத்தை சொல்லவில்லை. உங்கள் விளக்கத்திற்கு பின்பு புரிந்தது. நன்றி. பாராட்டுகள்.