PDA

View Full Version : பருவகாலம்...rambal
10-05-2004, 12:27 PM
பருவகாலம்...

வசந்தகாலத்தையும் கொஞ்சம் பனிக்காலத்தையும் லேசான மழைக்காலத்தையும் கலந்து குழைத்திருக்கும் பருவநிலைக்கு
அவள் பெயர் வைக்கலாம். இளஞ்சூரியன் வெயில் அடிக்கும் பொழுது தூவானமாய் பெய்யும் மழைத்துளி கண்டதும் ஏற்படும் சிலிர்ப்பைப் போல்
அவள் குடை பிடித்துக் கொண்டு நடந்து வந்தாள். அப்போதுதான் அவன் அவளை முதல் முறையாகப் பார்த்தது. அப்போது அவனக்குத் தெரியாது
அவள் யாரென்று. பிறகு அவனது வகுப்பிற்கு வந்த பொழுதுதான் தெரியும் அவள் அவனுடைய வகுப்பிற்கு பாடம் எடுக்க வந்திருக்கும் புதிய ஆசிரியை
என்று. அவள் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் சொன்னது போல் அந்த பருவநிலைக்கு அவள் பொருத்தமாக இருப்பாள்.

அவன் ஒரு விசித்திரப் பிராணி. யாரோடும் சேர்ந்து இருக்க மாட்டான். அவன் எப்போதும் தனிமையில்தான் இருப்பான். அவன் வயதை ஒத்த
நபர்களுடன் விளையாட மாட்டான். ஊருக்கு வெளியில் இருக்கும் ஆற்றங்கரையில் தும்பி பிடித்துக் கொண்டிருப்பான். இல்லையென்றால்
மீன் பிடித்துக் கொண்டிருப்பான். அங்கிருக்கும் பறவைகளோடு பேசிக் கொண்டிருப்பான். அவனது நண்பர்கள் என்று பார்த்தால் இயற்கை மட்டுமே.
அதனால்தான் அவளை இயற்கையின் பருவ நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து திருப்தி கொண்டான்.

நாள் ஆக ஆக அவனுக்கு அவள் மீது ஏதோ ஓர் இனம் தெரியாத பற்றுதல் ஏற்பட்டு மனதினுள் முடிச்சாகி அது இறுகி கெட்டிப் போயிருந்தது.
மாலை வகுப்பில் எல்லோரும் போன பிறகு அவள் பரீட்சைத் தாள்களை திருத்திக் கொண்டிருப்பாள். அவன் அவளை தொந்தரவு செய்யாது
ஒரு ஓரமாக அமர்ந்திருப்பான். அவள் எழுந்ததும் இவனும் எழுந்து கொள்வான். ஓடிச் சென்று அவள் பையை வாங்கிக் கொண்டு அவளுடனே நடந்து
அவள் வீடு வரை செல்வான். அது வரை அமைதியாகவே அந்த ஊர்வலம் நடக்கும். இந்த ஊர்வலம் நடக்க ஆரம்பித்த முதல் நாள்....

"நீ இன்னும் வீட்டுக்கு கிளம்பல?" என்றாள்.
"இல்லை மிஸ். இங்கேயே ஹோம் வொர்க் செஞ்சுட்டு போகலாம்னுதான்..' என்றான்.
இறுதியாக அவள் வேலை முடிந்து கிளம்புகையில் அவன் ஓடிச் சென்று அவள் பையை வாங்கிக் கொண்டான்.
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
அதன் பிறகு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

"உங்க வீட்டில எத்தனை பேர் இருக்கீங்க?"
"நான், அப்பா, அம்மா.." என்றான்..
"உங்க வீட்டில மிஸ்?"..
"யாரும் இல்லை"
"உனக்கு பிரண்ட்ஸ் கிடையாதா?"
"இல்லை.."
"ஏன்?"
"அது என்னவோ ஆத்துல மீன் பிடிக்கிறதுல இருக்கிற சந்தோசம் வேற எதுலயும் இல்லை.."
"ஓ.. உனக்கு மீன் பிடிக்கத் தெரியுமா?"
"ம்.. உங்களுக்கு வேணுன்னா பிடிச்சுக் கொண்டு வரவா?"
"வேண்டாம்.."
இதன் பிறகு வந்த அந்த வார ஞாயிற்றுக் கிழமையில் மீன் பிடித்துக் கொண்டு போய் கொடுத்தான். அதன் பிறகு அவள் அதை சமைத்துத் தர
அவன் சாப்பிட்டான். இப்படியாக போய் கொண்டிருக்கையில் ஒரு நாள்..

"மிஸ். நான் உங்க கூடவே இருந்திடவா?"
"என் கூடவே உன்னால எப்படி இருக்க முடியும்?"
"ஏன் முடியாது.. இன்னிக்கே வந்துற்றேன்.."
"அது நல்லா இருக்காது.. அப்புறம் உன் வீட்டில உன் அப்பா அம்மா எல்லாம் கவலைப்படுவாங்க.."
"கவலைப்படமாட்டாங்க மிஸ்.. எங்க அம்மாவைப் பாத்துக்க அப்பா இருக்காரு. உங்களுக்குத்தான் யாரும் இல்லை.. அதனாலதான்
சொல்றேன்.. நான் உங்க கூடவே இருந்திடுறேன்.."
"அது நல்லா இருக்காது"
"அதான் மிஸ்.. ஏன்னு கேட்கிறேன்.."
"நீ பையன்.."
"மிஸ்.. வேணுன்னா ஒன்னு சொல்லவா? நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. அப்புறம் யாரும் எதுவுமே கேட்கமாட்டாங்க.."
"அது சாத்தியமில்லை.. நான் உனக்கு பாடம் எடுக்கிற மிஸ். நீ என்கிட்ட பாடம் படிக்கிற ஸ்டூடண்ட்."
"அப்படின்னா நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியில வந்திடுறேன்... அப்புறமா.."
"போதும் நிறுத்து.. உனக்கு என்ன ஆச்சுன்னு இப்படி பேசுற?"
கொஞ்ச நேரம் மௌனம் ஆங்காரமாய் சத்தமிட்டுக் கொண்டது. பின் மௌனம் அழ ஆரம்பித்தது. சத்தங்களால் ஆக்ரமிக்கப்பட்டு
மௌனம் சின்னா பின்னமாய் கிழிந்தது.
"அது என்னவோ.. உங்களைப் பாத்ததுல இருந்து உங்க கூடவே இருக்கணும்னு தோணுது.. ராத்திரி கண்ணை மூடினா
என்னென்னவோ வருது."
"இந்த வயசுல உனக்கு அப்படித்தான் இருக்கும்.. சொன்னாக் கேளு.. நீ நல்ல பையன்.. இந்த எண்ணத்தை மாத்திக்க.."
"இல்லை மிஸ். என்னால முடியாது.. நீங்க சொல்ற எதையும் என்னால ஏத்துக்க முடியல.."
"உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்குப் புரியல. சரி நீ வேற ஸ்கூலுக்கு போனாக்கூட உன் வயசு அதே 15. என் வயசு அதே 25.
உனக்கும் எனக்கும் 10 வயசு வித்யாசம். நீயும் நானும் கல்யாணம் பண்ணா பாக்றவங்க என்ன நினைப்பாங்க.."
இதைக் கேட்டவுடன் அவனுக்கு கண்ணீர் எங்கிருந்தோ வந்து அவன் கண்களில் குடி புகுந்து கன்னம் வழியாக தரை இறங்கியது.
அவளை விட தான் சிறியவன்.. பத்து வருடம் பிந்தி பிறந்துவிட்டதற்காக நிராகரிக்கப்படுகிறேன். அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நேராக ஆற்றங்கரைக்கு ஓடினான். புல்லில் மல்லாக்கப்படுத்து நட்சத்திரம் பார்க்க ஆரம்பித்தான். கண்களில் இருந்து கண்ணீர் மாத்திரம் நிற்கவேயில்லை.

அதன் பின் அவன் வழக்கம் போலவே இருந்தான். அவளிடம் பேசவது மட்டும் கிடையாது. மாலை ஆனதும் அவள் பையை எடுத்துக் கொண்டு
அவள் வீடு வரை செல்வதும் ஞாயிற்றுக் கிழமைகளில் அவளுக்காக மீன் மட்டும் பிடித்துக் கொடுப்பதும் அவனது கடமையாக எண்ணி வந்தான்.
ஆனால், முன்போல் அவள் வீட்டில் சாப்பிடுவதோ அவளோடு பேசுவதோ மட்டும் கிடையாது.

தினம் தினம் அமைதி ஊர்வலம் மட்டும் நடந்து கொண்டிருந்தது. இறுதியாக அவனது தந்தைக்கு மாற்றலாகி வேறு ஓர் ஊருக்கு செல்ல வேண்டிய
கட்டாயம் ஏற்பட்ட அன்று அவன் அவளிடம் இறுதியாகப் பேசினான்.

"நான் இப்ப இந்த ஊரை விட்டுப் போறேன் மிஸ். ஆனால், எனக்கு 25 வயசு ஆகும் போது உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்."
"அப்போதும் உனக்கும் எனக்கும் அதே பத்து வயசு வித்யாசம் இருக்கும்.. மனசைக் குழப்பிக்காமல் படிச்சு பெரிய ஆளாகிற வழியைப் பாரு.."
"சரி மிஸ்.. ஆனால், என்னிக்கிருந்தாலும் உங்களைத்தான்...."

வருடங்கள் ஓடோடின..

அவனுக்கு வயது 25 ஆனது. அவன் அவன் மனைவியோடு அதே ஊருக்கு மிஸ்ஸைத் தேடி வந்தான். எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.
யாருக்கும் அவளைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவன் ஆற்றங்கரைக்குச் சென்றான். அங்கு ஒரு ஓரமாக ஒரு சிலுவை நடப்பட்டிருந்தது.
அதன் அருகில் சென்று பார்த்தான். மிஸ்ஸின் பெயரைப் போட்டு தோற்றம் மறைவு எழுதியிருந்தது. அவன் அந்த ஊரை விட்டுச் சென்ற
அதே வருடம் அவள் இறந்து விட்டிருந்தாள்.

"மிஸ் எனக்கும் உங்களுக்கும் இப்ப ஒரே வயசுதான் மிஸ்.. கல்யாணம் பண்ணிக்கலாமா?"
மெல்லமாய் அவன் உதடுகள் முணுமுணுத்தது..
கண்களின் ஓரம் கசிந்திருந்தது..

அப்போது அவனது மனைவி அவனைத் தேடிக் கொண்டு தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள்..

வசந்தகாலத்தையும் கொஞ்சம் பனிக்காலத்தையும் லேசான மழைக்காலத்தையும் கலந்து குழைத்திருக்கும் பருவநிலைக்கு
அவள் பெயர் வைக்கலாம். இளஞ்சூரியன் வெயில் அடிக்கும் பொழுது தூவானமாய் பெய்யும் மழைத்துளி கண்டதும் ஏற்படும் சிலிர்ப்பைப் போல்
அவள் குடை பிடித்துக் கொண்டு நடந்து வந்தாள்............

karikaalan
10-05-2004, 01:03 PM
ராம்பால்ஜி

நீண்ட நாட்களுக்குப் பின் தங்களுடைய சிறுகதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றிகள். சற்று நேரம் ஒன்றினேன்.

'மேரா நாம் ஜோக்கர்' படத்தில் இளம் ராஜ்கபூர், தன்னுடைய ஆசிரியை சிமி க்ரேவாலிடம் கொண்டிருந்த ஒருதலைக் காதல் நினைவுக்கு வந்தது.

===கரிகாலன்

சாகரன்
10-05-2004, 01:07 PM
சில நேரங்களில் வாலிப வயதில் ஏற்படும் இனம் புரியாத இதமான மயக்கத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் சொல்ல முடியாதுதான்....
காலம் எதையும் மறக்கடிக்கலாம்.... காலத்தை வென்று அந்த மயக்கம் இருக்கும் போது சரியோ தவறோ அது காதலாகவே கருதப்படுகிறது...

இத்தனை காலத்திற்குப் பிறகு, மீண்டும் அவன் விரும்பும் விதமாகவே ஒரு தேவதை மனதில் வந்து குடியேறுவதற்கு, அவன் முன்னர் விரும்பிய பெண்ணின் மரணம் மட்டுமே காரணியா? யோசிக்க வேண்டும்....

படித்ததைத் தாண்டியும் யோசிக்க வைக்கும் கதை...

பாராட்டுக்கள் ராம்பால்...

இக்பால்
10-05-2004, 01:28 PM
மழை பெய்து ஓய்ந்து விட்ட அந்த வெளிச்சமில்லாத வானத்தின் அடியில்
கையைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் தங்கி விட்ட தண்ணீரைத்
தாண்டிக் கொண்டு செல்கையில் சில்லென்ற காற்று தழுவி சென்றதைப்
போன்ற ஒரு நடை. பாராட்டுகள் ராம்பால்.

மீண்டும் மீண்டு வந்தமைக்கு நன்றி.

மன்மதன்
10-05-2004, 01:30 PM
பலவற்றை நியாபகப்படுத்தியது உங்க சிறுகதை.. முதல் வரிகள் கடைசி வரிகளாய்... ஹ¥ம்ம்.. ஆழ்ந்த பெருமூச்சு.. அருமையான வருடல்கள்..நல்ல சிறுகதை..

rambal
10-05-2004, 06:49 PM
பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...

பாரதி
11-05-2004, 05:30 PM
அழியாத கோலங்கள் போல ஒரு பாதிப்பு கதையில் தெரிகிறது. பாராட்டுக்கள் ராம்.

thula
11-05-2004, 06:44 PM
சின்ன வயதில் பொம்மை கேட்டு அழுது, அது கிடைக்காமல் ஏங்கி, அதன் நினைவாக வளர்ந்து பிறகு அதை
வாங்கும் வயது வந்த பிறகு, அதன்மீது முன்பிருந்த ஆர்வம் போயிருக்கும். ஆனாலும் இளவயதில் அது கிடைக்காத
ஏக்கம் மரணம் தொடும் தூரம் வரை நெஞ்சின் ஆழத்தில் குடியிருக்கும்.

ராம்பாலின் நாயகனும் இதே போன்ற மன உளைச்சலுக்கு ஆட்பட்டு வளர்கிறான். பிராயம் வந்து திருமணம்
செய்கிறான். தாரம் வந்த பிறகும் "அவள்" நினைவு இழுக்க வளர்ந்த ஊர் தேடி வந்து, "அவளை" கல்லறையில்
சந்திக்கிறான். திரும்பி பார்க்கையில் தாரமே "அவளாக" தெரிகிறது.

இந்த கடைசி வரிகளில்தான் இந்த கதையின் உயிர்மூச்சு இழையோடுகிறது. தாரத்தை அவளாக நினைத்து,
கலங்கிய மனதை சமாதானப்படுத்தி கொள்கிறானா அல்லது தன் மனதில் என்றோ செதுக்கிய காதலி என்ற
சிற்பத்தை "அவளிடம்" அன்றும், மனைவியிடம் இன்றும் காண்கிறானா? ஒரு அழகான திறந்த முடிவு (open end)
வாசகர்களின் மனதுக்குள் ஒரு அலசலை ஏற்படுத்தி விடுகிறது. இதுதான் ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணம்.

கதைக்கருவில் ஒரு நல்ல கதாசிரியரை அடையாளம் காண்கிறேன். இன்னும் வார்த்தைகளிலும், அதன் வீச்சிலும்
கவனம் செலுத்தினால், ஒரு ஐந்து, பத்து ஆண்டுகளில் தமிழில் பெரிய பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்து
கொண்டிருப்பீர்கள் "நான் என்னை பட்டை தீட்டி பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டது தமிழ்மன்றம் என்ற
தளத்தில்தான்" என்று.

- துலா

இளசு
11-05-2004, 10:24 PM
பருவகாலம்....

கடந்த காலம் வசந்த காலத்தை மீண்டும் தருவிக்கும் காலம்..

வாழ்த்துகள் ராம்.. தொடரட்டும் இக்காலம்..

anbu
12-05-2004, 06:33 AM
பருவகாலம்.......

உனக்கு 15 எனக்கு 25 கடைசி வரைக்கும் இந்த வித்தியாசம் இருக்கத்தான் செய்யும் என்று எல்லோர் மனதிலும் ஒரு பன்ஞ்ச் வைத்துவிட்டு கடைசியில் அந்த பத்து வயது வித்தியாசத்தை உங்கள் எழுத்துகளின் புதுமையால் மறையச் செய்து ஆரம்பம் முதல் கடைசிவரை கதைக்கு உயித்துடிப்பை அதிகப்படுத்திவிட்டீர்கள் ராம்பால் அவர்களே. வாழ்த்துக்கள்.

rambal
13-05-2004, 05:20 PM
மனம் திறந்து பாராட்டிய அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல...

தஞ்சை தமிழன்
14-05-2004, 07:54 AM
நீண்ட நாட்களுக்கு பின்னர் ராமின் பதிவு,

கருத்துள்ள கதையுடன், அழகாகவும் எழுதியது சிறப்பு.

பாராட்டுதல்கள்.

இக்பால்
14-05-2004, 10:00 AM
ராம்பால் ... அடுத்த கதை எப்பொழுது வரும்?

kavitha
18-05-2004, 09:22 AM
கதைக்கருவில் ஒரு நல்ல கதாசிரியரை அடையாளம் காண்கிறேன். இன்னும் வார்த்தைகளிலும், அதன் வீச்சிலும்
கவனம் செலுத்தினால், ஒரு ஐந்து, பத்து ஆண்டுகளில் தமிழில் பெரிய பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்து
கொண்டிருப்பீர்கள் "நான் என்னை பட்டை தீட்டி பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டது தமிழ்மன்றம் என்ற
தளத்தில்தான்" என்று.

அந்த நாள் விரைவில் அரங்கேற வாழ்த்துகள்! :)

உளவியல் ரீதியான கதைகளை படைப்பதிலும் கையாள்வதிலும் லாவகம் வேண்டும்! சிறிது பிசகினாலும் கசந்துவிடும்... லாவகமாக கையாண்டு
இருக்கிறீர்! பாராட்டுகள்!!

அறிஞர்
19-05-2004, 09:08 AM
வாழ்த்துக்கள்.. ராம்....

அருமையான, மென்மையான கதை

ஜோஸ்
19-05-2004, 04:41 PM
உயிரோட்டமுள்ள ஒரு கதை.. வாழ்த்துக்கள் நண்பரே...