PDA

View Full Version : பிரபஞ்சம்.......



Nanban
11-04-2003, 01:40 PM
இருளே அஞ்சும் நிசப்தமான
பரப்பொன்றில்
மௌனத்தைக் கிழித்துக் கொண்டு
ஒரு மகாவெடிப்பின்
கரங்கள் நீண்டது எல்லையற்று.
இழுப்பும், இழுவையுமாய்,
விலகியும், விலக்கியும்,
உழன்றும், தெளிந்தும்
உருவங்களை
உருவாக்கியது சிதறியவை.

உஷ்ணமும், புகையும்
தூரதுரமாய் விநாடிக்குள்
விநாடியாய் வீசியெறியப்பட்ட,
ஒரு பிரளயத்தின் முடிவில்
காலமும், தொலைவும்
தேடியலைந்தது உறவை.

கோடிக் கோடி வருடங்களாய்
குளிர்ந்தும், இறுகியும்
பிடித்திழுக்கும் சக்தியும் கொண்டு
கோடுகளால் நிர்ணயிக்கப்படாத
எல்லை விரிவுகளில்
சுழன்று போகும் கோள்கள், எரிகற்கள்.
நட்சத்திரங்கள்
கண்ணடித்து கண்ணடித்து
சிரிக்கின்றன.

ஐன்ஸ்டைன் கண்ட
சார்பியல் வாக்கியத்தை
நானும் கண்டேன் -
கோடி வருடங்களுக்கு முன்,
காதலியே,
பிரபஞ்ச வெளியிலே
உன்னை நான் பார்த்த பொழுதிலே.

karikaalan
11-04-2003, 03:08 PM
காதல் வயப்பட்டால் என்னவெல்லாம் தெரிகிறது பாருங்கள்! தெரிகிறது ஒரு பக்கம்; கண்ணுக்கெதிரே இருந்தும், சில விஷயங்கள் தெரியாது -- காதலின் சக்தி.

நண்பரே, நல்ல கவிதை.

===கரிகாலன்

இளசு
11-04-2003, 05:33 PM
காற்றினில் ஏறி விண்ணையும் சாடினான் புது(வை)மைக் கவிஞன்
பிரபஞ்சத் தேர் ஏறி Big Bang பாட்டு தந்தான் என் நண்பன்...

காதலின் சக்தி கூடிக்கொண்டேதான் போகிறது
கவிதைகளின் சக்தியும் கூடவே..................................!

poo
11-04-2003, 06:06 PM
உங்கள் அனுபவ முதிர்ச்சி தெரிகிறது கவிதையில்...

நன்றி நண்பரே!!!

Narathar
12-04-2003, 05:15 AM
சமூகக்கவி எழுதி
அதை காதல் கவிதையாக்கிவிட்டீர்
நல்ல கவிதை!!

rambal
12-04-2003, 04:57 PM
அருமையான ஊடகம்..
குறியீடுகளின் விளையாட்டில்
மன்னன் நீங்கள்..
அந்த வகையில் இந்தக் கவிதையும்..

பாராட்டுக்கள் நண்பனுக்கு..