PDA

View Full Version : மகுடி ஊதும் பாம்புகள்



kavitha
27-04-2004, 11:41 AM
மகுடி ஊதும் பாம்புகள்

"ஆயிரத்தில் ஒருத்தி"

"அழகான புன்னகை"

"சிந்தை கவரும் வெட்கம்"

"செங்காந்தல் விரல்கள்"

"செஞ்சாந்து பாதம்"

"அன்பிற்கு இனியவள்"

"சுட்டு விழி பார்வை"

"இல்லாத இடை"

"இடை தேடும் ஜடை"

"கொடி மலர் தேகம்"

இப்படி.......

காண இயலுபவைகளுக்கு கவர்ச்சியாய்
காணாதவைகளுக்கு கற்பனையாய்

மகுடி ஊதுமடி பெண்ணே!
இவை 'நல்ல' பாம்புகளல்ல!

உன்
சிந்தை மயங்கச்செய்து
விழுங்க காத்திருக்கும்
மலை விழுங்கிகளடி!

" விழிமின்! விழிமின்!! "

விவேகம் மிக்கவரின்
பொன்மொழியடி!

மகுடி கேட்கும்
கேட்கும் பேதையே!
இதையும் கொஞ்சம் கேளடி!
" விழிமின்! விழிமின்!! "

இக்பால்
27-04-2004, 11:57 AM
எங்கே இருந்து கற்பனை தங்கை? இவ்வளவு நல்ல கவிதைகள்.
அண்ணா அசந்து போய் நிற்கிறேன். பாராட்டுகள்.-அண்ணா.

Nanban
27-04-2004, 04:59 PM
வா....வ்...... வாய் பிளந்து நிற்கிறேன்..... எப்படி பாராட்டுவது என்று தெரியாமல்.....

கவிதா, மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

பரஞ்சோதி
27-04-2004, 05:54 PM
சகோதரி அருமையான கவிதை வரிகள். திருமணம் ஆகிவிட்டால் இன்னமும் நிறைய சொல்வீர்கள். எங்கே என் மனைவி இதை படித்து விழுமின் ஆகிவிடுவாரோ என்று பயப்படுகிறேன்.

இளசு
27-04-2004, 09:09 PM
பாம்பணியில் இருந்தாலும், பாராட்டாமல் இருக்க முடியவில்லை...

kavitha
28-04-2004, 03:31 AM
எதிர்ப்பு வரும் என்று பயந்திருந்தேன்!
இப்படி வரும் என்று எதிர்பார்க்கவில்லை!
கொஞ்சம் வருத்தத்துடன் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்!

இக்பால்
28-04-2004, 04:42 AM
கவிதா தங்கை...கவலை வேண்டாம். தவறாக எழுதும்பொழுது
எதிர்ப்பு வரும். வாதமும் வரும். :)

மூர்த்தி
28-04-2004, 09:30 AM
அன்பின் கவிதா...கவிதைக்குப் பொய்யழகு.சிலர் பெண்ணையே கவிதையாக அல்லவா சொல்கிறார்கள்.அதனால் சிலர் பொய்யுரைத்திருக்கலாம்.நல்லவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.கவி புனைந்த கவிதை நன்று.

தஞ்சை தமிழன்
28-04-2004, 09:35 AM
கவிதாவின் கவிதை அருமை.

ஆனால் இப்படி ஆண்களை வாரி விடுவீர்கள் என் நினைக்கவில்லை.

நாங்கள் சிலவற்றை சாதிப்பதற்காக கூறும் பொய் வார்த்தைகளையெல்லாம் தொகுத்தளித்த சகோதரிக்கு பாராட்டுக்கள்.

நாங்கள் விழுங்கலாம் என் காத்திருக்கும் வேளையில்
விழுங்கப்படுகிறோம் அல்லது விழுங்கப்பட்டோம் என்பதை
உணரும் வேளையில்

யாதொன்றும் செய்ய இயலாமல் போவதை

நினைத்து, நினைத்து,, நினைத்து,,,,,,,,,

kavitha
28-04-2004, 11:11 AM
தவறாக எழுதும்பொழுது
எதிர்ப்பு வரும். வாதமும் வரும்.

அதைத்தான் அண்ணா எதிர்பார்த்தேன்...
ஒருவராவது முன் வருவார் என்று!
கவிதை ஜெயித்தது... என் கருத்து தோற்றது!

kavitha
28-04-2004, 11:13 AM
கவிதையை பாராட்டிய மூர்த்தி, தஞ்சை தமிழன் இருவருக்கும்
என் நன்றிகள்...

இக்பால்
28-04-2004, 11:38 AM
தவறாக எழுதும்பொழுது
எதிர்ப்பு வரும். வாதமும் வரும்.


அதைத்தான் அண்ணா எதிர்பார்த்தேன்...
ஒருவராவது முன் வருவார் என்று!
கவிதை ஜெயித்தது... என் கருத்து தோற்றது!


ஆகையால் தங்கை... நம்மில் பொய்யாகப் புகழுபவர் இல்லை
என நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம். :)

தமிழமுதன்
28-04-2004, 11:53 AM
நேர்மையாக சொல்லப் போனால், இரண்டு முறை படித்ததும்தான் கவிதையே புரிந்தது தோழி (உங்கள் தவறல்ல... என் தமிழறிவு இன்னும் வளர வேண்டும்).

உங்கள் கவிதையில் வருவது போல, நானும் ஓர் மலைப்பாம்புதான் (ஒரு சிறிய வித்தியாசம்; 'உறங்கும் பேதை'களை விழுங்கியதில்லை. 'விழிமின்' கேட்டும், ஆசையில் 'கிறங்கும்' கோதைகளைத்தான்). இனி நல்லபாம்பாகி விட உத்தேசம்.

ஆமாம், பிற்காலத்தில் கவிதைகளாக பொழிந்து தள்ளுவீர்கள் என்பதால்தான் கவிதா என பெயரிட்டார்களோ?

kavitha
28-04-2004, 12:09 PM
நம்மில் பொய்யாகப் புகழுபவர் இல்லை
என நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் பெருமிதம் தான்!
ஆனால் கவிதை எழுதும் முன் இருக்கும் உணர்ச்சி பெருக்கு கவிதை வடித்த பிறகு கொஞ்சம் வடியும்...
இந்த கவிதை எனக்கு மேலும் மேலும் பாரத்தை அளிக்கிறது..... விளங்க வைக்க வார்த்தைகள் இல்லை!
----------------------------------------------------------------------------------------------------
மாறிய தமிழமுதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
'மூளைச்சலவை' செய்பவர்கள் நிறைய பேர் உண்டு; அதை உபயோகப்படுத்தாதவர்களிடமும்....
ஏனெனில் போர்புரியக்கூட எதிரியின் வலிவு நிலை அறிந்து மோதவேண்டும்!
ஆனால் இந்த விசயத்தில் தலைகீழாக கூட நடக்கும்! ஜீரணிக்க முடியாத உண்மை அது தான்!


பிற்காலத்தில் கவிதைகளாக பொழிந்து தள்ளுவீர்கள் என்பதால்தான் கவிதா என பெயரிட்டார்களோ?

தந்தை வைத்தபெயர்... அவருக்கே சமர்ப்பணம்!

இக்பால்
28-04-2004, 12:19 PM
ஆமாம், பிற்காலத்தில் கவிதைகளாக பொழிந்து தள்ளுவீர்கள் என்பதால்தான் கவிதா என பெயரிட்டார்களோ?


அதுதானே!!!!!!

தமிழமுதன்
28-04-2004, 12:24 PM
மாறிய தமிழமுதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
'மூளைச்சலவை' செய்பவர்கள் நிறைய பேர் உண்டு; அதை உபயோகப்படுத்தாதவர்களிடமும்....
ஏனெனில் போர்புரியக்கூட எதிரியின் வலிவு நிலை அறிந்து மோதவேண்டும்!

ஆஹா.. கவுத்து விடாதீர்கள் தோழி. உங்கள் கவிதைக்கு சற்று 'எடை' கூட்டும் முயற்சியிலேயே 'மலைப்பாம்பு' பொய்யை அவிழ்த்து விட்டேன். நான் என்றுமே நல்ல பாம்புதான் (ஹிஹி... இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம்... நிச்சயமாகி விட்டது).

இக்பால்
28-04-2004, 12:29 PM
தமிழமுதன் தம்பிக்கு வாழ்த்துகள். (அண்ணனாக இருப்பாரோ என
குழப்பமாக இருந்தது.)

மன்றத்தில் இது திருமண காலமாக இருக்கிறது. :)

தமிழமுதன்
28-04-2004, 12:38 PM
நீங்கள் படைக்கு அஞ்சவே வேண்டாம் இக்பால் அண்ணா... 'தம்பி'(கள்?) இருக்கிறோம் மன்றத்தில். திருமண வாழ்த்துக்கு நன்றி.

உங்களையும் அழைக்க மனம் விழையத்தான் செய்கிறது. ஆனால், 'சைவ சாப்பாடு' மட்டுமே சாப்பிடும் சமூகத்தைச் சேர்ந்தவன் நான்... வருவீர்களோ என்கிற ஐயம் எழுகிறது.

(மன்னிக்கவும், தமிழமுதன் என்பது நானே சூட்டிக் கொண்ட பெயர். கவிதா சொன்னது போல, தந்தை வைத்த பெயர் வேறு. கண்டுபிடிக்க விருப்பம் உள்ளதா? எனில், 'திரு' என்பதற்கான வடமொழி எழுத்தில் துவங்கும் ஐந்தெழுத்துப் பெயர்).

இக்பால்
28-04-2004, 12:52 PM
சைவமாக இருந்தாலும் பரவாயில்லை. நிறைய வகைகள் இலை மூழுவதும்
வைப்பார்கள் அல்லவா? அது போதும்.

பெயர் பற்றி தனிமடலில் விடை கொடுத்துள்ளேன். சரிங்களா தம்பி?

என் பெயர் இக்பால்தான். :)

தமிழமுதன்
28-04-2004, 01:04 PM
தனிமடல் கண்டு, பதிலும் அனுப்பி விட்டேன் இக்பால் அண்ணா. இலை முழுதும் வைப்பார்கள் கண்டிப்பாக... (என்ன ஒன்று, இலையில் சாப்பிடத் தெரியாமல், பாயாசம் அல்லது ரசம் இலையிலிருந்து வெளியில் ஓடினால், யாம் பொறுப்பல்ல சகோதரரே).

இக்பால்
28-04-2004, 01:09 PM
இல்லைங்க தம்பி. அதெல்லாம் ஓடாமல் பாத்தி கட்டி சாப்பிட தெரியும். :)

என்ன... மணியா அண்ணா ஒரு வாய் சாப்பிடுவதற்குள் நான் ஒரு இலை
முடித்து விடுவேன். அதுதான் கஷ்டம்.

kavitha
29-04-2004, 11:44 AM
முன்வாழ்த்துகள் தோழரே!


இல்லைங்க தம்பி. அதெல்லாம் ஓடாமல் பாத்தி கட்டி சாப்பிட தெரியும்.

என்ன... மணியா அண்ணா ஒரு வாய் சாப்பிடுவதற்குள் நான் ஒரு இலை
முடித்து விடுவேன். அதுதான் கஷ்டம்.

யாரங்கே! முதல் பந்தியில் ஒருவரிசை இடம்பிடித்து வையுங்கள்! நாங்கள் வருகிறோம்!

Nanban
29-04-2004, 07:45 PM
எதிர்ப்பு வரும் என்று பயந்திருந்தேன்!
இப்படி வரும் என்று எதிர்பார்க்கவில்லை!
கொஞ்சம் வருத்தத்துடன் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்!

எதிர்ப்பு வரும் அளவுக்கு கவிதைகள் எழுத வேண்டுமா....?

சல்மா எழுதிய சில கவிதைகளைப் படித்துப் பாருங்கள்....

அப்படியே ரேவதி எழுதிய சில புத்தகங்களையும் படித்துப் பாருங்கள்....

உங்களுக்குத் தெரியுமா....?

நேரப் போக்கிற்காக, இந்திய கவிஞர்கள் எழுதிய கவிதைத் தளங்களைத் தேடிக் கொண்டிருந்தேன் - ஆங்கிலத்தில் எழுதும் கவிஞர்களை... அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும் கவிஞர்களை.... சில தளங்கள் கண்ணில் பட்டது - 'மானவி' ண அல்ல, ன தான். அது இங்கு தடை செய்யப்பட்டு விட்டது. அதுபோல மனுஷி என்றொரு தளம் - அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது. இவை இரண்டும், தெற்காசிய பெண்மணிகளுக்காக, அந்த நாட்டு மகளிரே எழுதும் கவிதைகள். தளம் இயங்குவது அல்லது இயக்கப்படுவது - இந்தியா பெண்களால்.

ஏன் தடை செய்யப்பட்டது தெரியுமா? - சமூக, அரசியல், பொருளாதார, மத கோட்பாடுகளில் வேறுபடுவதால். பெண்கள் எழுதும் கவிதைகள் எப்படி ஒரு அரசை அசைத்துப் பார்க்க முடியும் என்கிறீர்களா... அது தான், கவிதையின் மகிமை... அனல் கக்கும், உரிமைக்குரல், எழுப்பும் எந்த ஒரு கவிதையும், அரசுகளை அசைத்துப் பார்க்கத் தான் செய்யும்...

அழகிய அடிமைகளாக இருங்கள்... அனைத்து வசதிகளும், செய்து தந்து, தங்கக் கூண்டில் வைத்து கொஞ்சி மகிழ்வோம்... அரைகுறை ஆடை உடுத்தி அலைந்து திரியுங்கள்... கண்டுகொள்ள மாட்டோம்... மது உண்டு மகிழுங்கள்... இடையூறு செய்யமாட்டோம் - அடுத்தவரை நீங்கள் தொந்தரவு செய்யாத வரை.... தன்னந்தனியாக இரவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வாருங்கள் - ஒரு துரும்பு கூட உங்கள் மீது படாமல் காப்போம் - ஆனால், உரிமை என்று மட்டும் வம்பு செய்தால், நொறுக்கிடுவோம்... அதுவும் பெண்ணுரிமை என்றால், இன்னும் கடுமையாகிடுவோம்....

உங்கள் கவிதைகள், கிள்ளத் தான் செய்கின்றன - வெல்வெட் கையறை அணிந்து வலிக்காமல்.... சிணுங்குவதற்கும், சீறுவதற்கும் உரிமை கொடுத்து, அதையும் ரசிக்கத் தயாராக இருக்கும், நம் நாட்டவர் இதையெல்லாம் எதிர்க்கப் போவதில்லை.... மாறாக, நீங்கள் வருத்தப் பட்டிருக்க வேண்டும் - கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால்....

kavitha
30-04-2004, 04:17 AM
உங்கள் கவிதைகள், கிள்ளத் தான் செய்கின்றன - வெல்வெட் கையறை அணிந்து வலிக்காமல்....

நன்றி நண்பரே!

எதிரிலே அசடு வழியும் நபரை இனம்காணாமல் இளித்துக்கொண்டிருக்கும் தோழியை இப்படி கிள்ளியதுண்டு!~

என் கவிதையை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கண்டிப்பாக வருத்தப்படுவேன்... அதில் ஐயமில்லை!
இங்கே என் வருத்தம்... மூர்த்தியை போல் "எல்லோரும் அப்படி இல்லை தோழி" என்று விளம்பயிருக்கவேண்டும் என்பது!
உண்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில்.... என்ன செய்ய?

கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைத்தால் நீங்கள் சொன்ன கவிஞைகளின் கவிதைகளையும் படிக்கிறேன்....
இப்போதைக்கு கனிமொழியின் "கருவறை வாசனை" யை தேடிக்கொண்டிருக்கிறேன்.....



தன்னந்தனியாக இரவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வாருங்கள் - ஒரு துரும்பு கூட உங்கள் மீது படாமல் காப்போம் - ஆனால், உரிமை என்று மட்டும் வம்பு செய்தால், நொறுக்கிடுவோம்... அதுவும் பெண்ணுரிமை என்றால், இன்னும் கடுமையாகிடுவோம்....

அது ஏன் நண்பரே? மெய்யாகவே தெரியாமல் தான் கேட்கிறேன்....
கேட்கவோ கொடுக்கவோ இயலுமோ...
கேட்டு தான் பெற வேண்டும் என்றால் அது உரிமை ஆகுமோ?
எல்லைக்கோடுகளை அறியாதவர்கள் அல்லர் நம் பெண்டிர்!

samuthira
30-04-2004, 05:07 AM
மகுடி ஊதுமடி பெண்ணே!
இவை 'நல்ல' பாம்புகளல்ல!

மகுடி கேட்கும்
கேட்கும் பேதையே!
இதையும் கொஞ்சம் கேளடி!


இதில் மகுடி ஊதுவது யார் ??
பாம்பு யார் ?

மகுடி ஊதுவது விஷபாம்பை அடக்க தானே.,

kavitha
30-04-2004, 05:35 AM
இதில் மகுடி ஊதுவது யார் ??
பாம்பு யார் ?

மகுடி ஊதுவதும் பாம்பு தான் சமுத்திரா!

பொய்யான வார்த்தைகள் கூறி பெண்களை ஏமாற்றும்
ஆண்களை குறித்த கவிதை இது!
இங்கே குறிப்பிடுவது அடக்குபவர்களை அல்ல!
விழுங்குபவர்களை..

Nanban
30-04-2004, 04:20 PM
அது ஏன் நண்பரே? மெய்யாகவே தெரியாமல் தான் கேட்கிறேன்....
கேட்கவோ கொடுக்கவோ இயலுமோ...
கேட்டு தான் பெற வேண்டும் என்றால் அது உரிமை ஆகுமோ?
எல்லைக்கோடுகளை அறியாதவர்கள் அல்லர் நம் பெண்டிர்!


அதை யூ.ஏ.இ அரசிடம் தான் கேட்க வேண்டும் - பரம்பரை ஆட்சி செய்யும் இடங்களில், உரிமை எந்த விதத்திலும் தரப்படமாட்டாது - எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால், அது, அரச குடும்பத்திற்கல்லவா ஆபத்து....?

samuthira
03-05-2004, 01:35 PM
பொய்யான வார்த்தைகள் கூறி பெண்களை ஏமாற்றும்
ஆண்களை குறித்த கவிதை இது!
இங்கே குறிப்பிடுவது அடக்குபவர்களை அல்ல!
விழுங்குபவர்களை..


படித்த போதே புரிந்து கொண்டேன் கவி,
இருப்பினும் ஆண்களை சாடுவதை விட்டு ,
அழகால் மயக்கி ஆண்களை அழிக்கும் பெண்களுக்குமாக சேர்த்து படைத்திருப்பின் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது என் பார்வை..,

ஆணினமோ பெண்ணினமோ
பொய்யினம் இருக்குமட்டும்
எதிர் இனம் நடை பிணம் தானே.,

பெண்ணே!
உன்னிடம் இருப்பதை
நீ ஆணிடம் எடுக்க நினைத்தாய்,
எடுக்க நினைத்தால் நீ குனிந்தாய்.,
குனிந்தவரை குட்டிடும் உலகத்தில்
உனை ஆசீர்வதிக்க ஆண்கள்
அவதார புருஷர்கள் அல்ல!
சராரிகளை சரித்திரம் ஆக்கும்
வல்லமைகள் உன்னிடம்
இருப்பினும் - சாமானியர்களை
சர்வாதிகாரிகள் ஆக்கும்
சகிப்பு தன்மை உன் பலகீனம்...
விட்டொழி வீண்பழி
மகுடிகள் பாம்புக்கு தான்
பகுத்தறியும் மனங்களுக்கு அல்ல..

kavitha
04-05-2004, 04:03 AM
ஆணினமோ பெண்ணினமோ
பொய்யினம் இருக்குமட்டும்
எதிர் இனம் நடை பிணம் தானே.,
சரியாக சொன்னீர் சமுத்திரா!

Nanban
05-05-2004, 08:48 PM
சமுத்திராவின் கருத்து முற்றிலும் சரியே...

நல்லதொரு கவிதை தந்து, நல்ல ஒரு ஆரோக்யமான விவாதத்தையும் தொடங்கி வைத்த கவிதாவுக்கும், மற்ற அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுகளும்...

இளசு
05-05-2004, 10:09 PM
சட்டை உரிந்து என் சுயரூபம்
வெட்ட வெளிச்சமாகிவிடும் எனப்பயந்தே
இங்கே வராமல் ஒ(ப)துங்கியிருக்கிறேன்...


தாயிடம், தங்கையிடம், இணையிடம்
சொல்ல முடியா சங்கதிகள் உண்டு...
தோழியிடம், தோழனிடம் சொல்லலாம்..
தங்கை தந்த பதிவென்ற சங்கடம் இங்கு...

இளசு
05-05-2004, 10:20 PM
ஆணினமோ பெண்ணினமோ
பொய்யினம் இருக்குமட்டும்
எதிர் இனம் நடை பிணம் தானே.,

..

200 சதம் ஒத்துக்கொள்கிறேன் நண்பனே...


பொய் சொல்லாமல் காதல் வந்ததில்லை..
உண்மை சொல்லாமல் காதல் வெ(நி)ன்றதில்லை...

kavitha
08-05-2004, 06:28 AM
பொய் சொல்லாமல் காதல் வந்ததில்லை..
உண்மை சொல்லாமல் காதல் வெ(நி)ன்றதில்லை...
ம் ம் ! புரிந்து விட்டது அண்ணா! :)

Nanban
08-05-2004, 03:15 PM
காதலுக்காகப் பொய் சொல்லி, அந்தப் பொய்களை உண்மை என்றெண்ணி, பின்னர் மணமாகியதும், காதலித்த காலத்தில் சொன்ன பொய்களையெல்லாம், உண்மையாக்க வற்புறுத்தும் காதலிகளால் தான், பல ஆண்கள் தூக்கமிழந்து போகின்றனர்... நிலவையும், நட்சத்திரங்களையும் பறித்துத் தருவோம் என்றெல்லாம் சொல்லத் தான் செய்வார்கள். அதற்காக, கல்யாணமானதும், நிலவையும் நட்சத்திரங்களையும் பறித்து வரச் சொன்னால் என்ன செய்ய முடியும்?

(இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, மலையாளத்தில் ஒரு திரைப்படம் கூட வந்தது - மோஹன்லால் நடித்தது. பெயர் ஞாபகம் இல்லை...)

samuthira
09-05-2004, 12:16 PM
காதலுக்காகப் பொய் சொல்லி, அந்தப் பொய்களை உண்மை என்றெண்ணி, பின்னர் மணமாகியதும், காதலித்த காலத்தில் சொன்ன பொய்களையெல்லாம், உண்மையாக்க வற்புறுத்தும் காதலிகளால் தான், பல ஆண்கள் தூக்கமிழந்து போகின்றனர்... நிலவையும், நட்சத்திரங்களையும் பறித்துத் தருவோம் என்றெல்லாம் சொல்லத் தான் செய்வார்கள். அதற்காக, கல்யாணமானதும், நிலவையும் நட்சத்திரங்களையும் பறித்து வரச் சொன்னால் என்ன செய்ய முடியும்?

பொய் சொன்னால் தூக்கம் இழக்கதான் வேண்டும், இதில் பெண்களை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது நண்பனே!

Nanban
09-05-2004, 06:56 PM
அட, அப்படியானால், கவிஞர்கள் எல்லோரும் தூக்கம் கெட்டுத் தான் அலைய வேண்டும்.....

(நான் பதித்த பல பதிவுகளைக் காணுங்கள் - இன்று மட்டுமல்ல, என்றுமே நள்ளிரவைத் தொட்ட நேரங்கள் தான்... அதென்னமோ, உலகே துயிலும் அந்த நேரம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது....)

samuthira
11-05-2004, 02:52 AM
கவிஞர்கள் தூக்கம் கெட்டால் பரவாயில்லை, பதித்தால் பணம் கிட்டலாம், சாமானியர்கள் பொய்யால் மாய்த்து கொள்ள கூடாது.,

நண்பரே நீங்கள் ஆந்தையா? பூனையா? ...

gans5001
11-05-2004, 03:09 PM
உன்
சிந்தை மயங்கச்செய்து
விழுங்க காத்திருக்கும்
மலை விழுங்கிகளடி!

நீங்கள் கூறும் "நல்ல பாம்புகள்" காதல் பாம்புகள் அல்ல.. காமப்பாம்புகள்.. இரையும் காமவசப்பட்டால் மட்டுமே மலை விழுங்குதல் சாத்தியம்..

Nanban
11-05-2004, 08:16 PM
கவிஞர்கள் தூக்கம் கெட்டால் பரவாயில்லை, பதித்தால் பண்ம் கிட்டலாம், சாமானியர்கள் பொய்யால் மாய்த்து கொள்ள கூடாது.,

நண்பரே நீங்கள் ஆந்தையா? பூனையா? ...

இரண்டும் இல்லை... நிலவு... யாரும் விழித்திருந்துப் பார்க்கிறார்களோ இல்லையோ, பொழிவது எனது கடமை... அழகாக எல்லோரும் என்னைப் பற்றி சொல்லலாம் - எனக்கும் அதே தான், உயரத்திலிருந்து, இந்த உலகைக் காணும் பொழுது, இந்த உலகம் எத்தனை அழகாக இருக்கிறது தெரியுமா...? ரசிப்பதற்கு, நீங்களும் நிலவாக மாறவேண்டும்.... (அது சரி, அதென்ன ஆந்தையா, பூனையா...?)

kavitha
17-05-2004, 09:27 AM
நீங்கள் கூறும் "நல்ல பாம்புகள்" காதல் பாம்புகள் அல்ல.. காமப்பாம்புகள்.. இரையும் காமவசப்பட்டால் மட்டுமே மலை விழுங்குதல் சாத்தியம்..
எல்லாமே பாம்புகள் எனும்போது வேறு எப்படி வகைப்படுத்துவது கன்ஸ்?தானாக விழும் இரைகளை ஒன்றும் செய்ய இயலாது! இப்படி கவிதை எழுதி வேண்டுமானால் விழிக்க சொல்லலாம்!
ஏதோ நம்மால் இயன்றது!

sriram
02-06-2004, 11:04 AM
மகுடி-பாம்பு ... நல்ல கவிதை..!
உண்மையை பெண்களுக்கு உணர வைக்கும் கவிதை.
போலி பேச்சுகளில் ஏமாந்து போகாமல் இருக்க எச்சரிக்கை விடும் கவிதை...!
வாழ்த்துக்கள்!

ஆதவா
09-08-2007, 12:23 PM
நீங்கள் கூறும் "நல்ல பாம்புகள்" காதல் பாம்புகள் அல்ல.. காமப்பாம்புகள்.. இரையும் காமவசப்பட்டால் மட்டுமே மலை விழுங்குதல் சாத்தியம்..

நான் எழுத வந்த கருத்தை எழுதிய கன்ஸுக்கு நன்றி...

கவிதை அருமை...