PDA

View Full Version : நேற்றிரவு....



Nanban
24-04-2004, 06:36 PM
நேற்றிரவு

நேற்றிரவு
எங்கிருந்தேனென்று
யாருக்குத் தெரியும்?

இருண்ட இரவில்
தூக்கமென்ற மரணம்
என்னைத்
தூக்கிச் சென்றிருக்கலாம்.

மதுக்கடலின் ஆழத்தில்
முங்கிப் போயிருக்கலாம்.

ஏதாவது ஒரு பயணத்தில்
இனம் புரியாத கூவல்களிடையே
சன்னல்களைச் சாத்திக் கொண்டு
புத்தகம் படித்திருக்கலாம்.

தூரத்தே தெரியும் சன்னலின்
விளக்கொலியில்
நகரும் ஆண்பெண் நிழல்கள்
என்ன செய்யப் போகின்றன
என்று நேரம் போக்கியிருக்கலாம்.

எது எப்படியிருந்தால் என்ன?
வரும் இன்றைய இரவில்
என்ன செய்வேனென்ற
கவலை இல்லாத பொழுது
நேற்றைய இரவு
ஏன் என்னை இம்சிக்கிறது....?

இளசு
26-04-2004, 07:46 PM
அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம்...
ஒரு நாள் இரவு உணவு உண்ணாமல்..
விளையாடிய களைப்பில் இரவு ஏழு மணிக்கே உறங்கிவிட்டவன்
காலைதான் கண்விழித்தேன்,,,

அகோரப் பசி (இராப்பட்டினி அல்லவா?)
பல் துலக்கி அவசரம் அவசரமாய் வர
ஆவி பறக்கும் இட்லி, சட்னி, சாம்பார்...

ஊஹூம்.. இரவு தாளித்த குழம்பு எங்கே? மணத்த பொரியல் எங்கே?
முதலில் அது.. பிறகுதான் இது..
அடம் பிடித்தேன்..அழுதேன்...

போய்விட்ட உணவு வேளை...
கடந்துவிட்ட காலம்..
நகர்ந்துவிட்ட நதி..
தடவி அகன்ற தென்றல்...

சில பசிகளைப் பொறுத்தவரை
மனம் இன்னும் குழந்தைதான்....


பாராட்டுகள் நண்பன்....

பாரதி
27-04-2004, 01:22 AM
பாராட்டுக்கள் நண்பரே.

kavitha
27-04-2004, 03:23 AM
ஊஹூம்.. இரவு தாளித்த குழம்பு எங்கே? மணத்த பொரியல் எங்கே?
முதலில் அது.. பிறகுதான் இது..
அடம் பிடித்தேன்..அழுதேன்...


நான்கூட அண்ணா! மருதாணி வைத்து தூங்கிய நாட்களில் இப்படி காலையில் அழுததுண்டு!பழைய நினைவுகளை கிளறிவிட்ட நண்பருக்கு பாராட்டுகள்.

சேரன்கயல்
27-04-2004, 09:40 AM
இழந்ததையே நினைத்து உழலும் இந்த மனதின் விசித்திரப் போக்கு வினோதமானதுதான்...

Nanban
27-04-2004, 05:08 PM
நன்றி நண்பர்கள் - இளசு, பாரதி, கவிதா, சேரன்கயல்....

கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியிருந்தது.. கடந்த காலமும், வரும் காலமும் நமக்குச் சொந்தமானதில்லை. நமக்குரியது, நிகழும் இந்த நிமிடமே... அதை சந்தோஷமாக வைத்துக் கொள்வது தான் மகிழ்ச்சிக்கு சிறந்த வழி என்று சொல்லியிருப்பார்... அந்த வகையில், தான் இந்தக் கவிதையும்... கழிந்து போன காலத்தை நினைந்து வருந்தும் பலரை அறிவேன்... ஏன், சில சமயம் நானே கூட அப்படி நினைத்திருக்கிறேன்... அதுபோல, மிகப் பெரும்பாலான நேரங்களில், எதிர்காலத்தில் எப்படி இருப்பேன் என்ற கற்பனைகளிலும் பயங்களிலும் வாழ்ந்திருக்கிறேன்... இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை முற்றிலுமாக மறந்து விட்டு... இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் மகிழ்ச்சி இருக்கிறது என்று அறிந்தாலும் அதை கொண்டாடுவதை விட மற்றவற்றில் தான் மனம் போகிறது. வருத்தத்திலும், துக்கத்திலும்....

நிகழ்காலத்தில் மனதை நிறுத்துவது மிகக் கடினமான காரியமாகிறது.....

சாகரன்
28-04-2004, 12:35 AM
ஆயினும் நண்பா,
இன்றிரவு வந்துவிட்டால் நேற்றிரவு மறக்கப்படலாம்..

எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் வாழ்க்கையின் பல நேற்றிரவுகளை மறக்கச்செய்கின்றனவோ...

பாராட்டுக்கள் தோழரே!

kavitha
28-04-2004, 11:41 AM
நிகழ்காலத்தில் மனதை நிறுத்துவது மிகக் கடினமான காரியமாகிறது.....


உண்மை தான்!
வாழ்க்கையின் முதல் 25 எதிர்கால கனவுகளிலும் லட்சியங்களிலும்..
இறுதி 25 பழையவைகளை அசைபோட..
இடைப்பட்ட காலத்தில் கூட நிகழ்காலத்தில் லயிக்க இயலாமல்...
மனமுதிர்ச்சிக்கேற்ப இந்த கால அளவு மாறலாம்...
குழந்தை போல் இந்த நிமிடத்தை அனுபவிக்க அதனிடம் கற்று கொள்ளத்தான் வேண்டும்!

இக்பால்
28-04-2004, 11:43 AM
நிகழ்காலத்தில் மனதை நிறுத்துவது மிகக் கடினமான காரியமாகிறது.....

உண்மை தான்!
வாழ்க்கையின் முதல் 25 எதிர்கால கனவுகளிலும் லட்சியங்களிலும்..
இறுதி 25 பழையவைகளை அசைபோட..
இடைப்பட்ட காலத்தில் கூட நிகழ்காலத்தில் லயிக்க இயலாமல்...
மனமுதிர்ச்சிக்கேற்ப இந்த கால அளவு மாறலாம்...
குழந்தை போல் இந்த நிமிடத்தை அனுபவிக்க அதனிடம் கற்று கொள்ளத்தான் வேண்டும்!


நிச்சயமாக?

kavitha
28-04-2004, 12:01 PM
சந்தேகம் ஏன் அண்ணா?

இக்பால்
28-04-2004, 02:08 PM
இல்லைங்க தங்கச்சி... என் மனம் நிகழ்காலத்திலும் சம அளவில்
இலயிக்கிறது. உங்களுக்கு ஏன் அப்படி இலயிக்கவில்லை என்ற
ஆச்சரியத்தில் கேட்டேன். :rolleyes:

Nanban
28-04-2004, 06:03 PM
இல்லைங்க தங்கச்சி... என் மனம் நிகழ்காலத்திலும் சம அளவில்
இலயிக்கிறது. உங்களுக்கு ஏன் அப்படி இலயிக்கவில்லை என்ற
ஆச்சரியத்தில் கேட்டேன். :rolleyes:

எதிபார்ப்புகள் இல்லாத வாழ்க்கை அமைக்கத் தெரிந்து கொண்டால், அவ்வாறு இருக்கலாம். எதிகாலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கும் பொழுது, நேற்றைய நாளைகளில், இழந்து விட்ட தருணங்கள் வலி தராது...

இருக்கிறதை வைத்து வாழ்வோம் என்று முடிவெடுத்து விட்டால், தவிப்பு ஏது, தாகம் ஏது....? சமன்பாடான மனநிலையை அடைந்து விட்ட இக்பாலுக்கு வாழ்த்துகள்......

சாகரன்
28-04-2004, 07:56 PM
எதிகாலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கும் பொழுது, நேற்றைய நாளைகளில், இழந்து விட்ட தருணங்கள் வலி தராது...




வரும் இன்றைய இரவில்
என்ன செய்வேனென்ற
கவலை இல்லாத பொழுது
நேற்றைய இரவு
ஏன் என்னை இம்சிக்கிறது....?



நண்பரே..
இரண்டும் ஒரே விசயம் குறித்த வெவ்வேறு கருத்தா?

Nanban
29-04-2004, 07:27 PM
இல்லை. ஒரே கருத்து தான்.

தேடிக் கொண்டே இருக்கும் நெஞ்சத்தில், நேற்றைய இரவுகள் வலி கொடுத்துக் கொண்டே இருக்கத் தான் செய்யும்.

நேற்றைய நாளைகள் என்று குறிப்பிட்டிருக்கின்றனே - நாளைய இரவு கூட, நேற்றைய இரவாகி விடும் - நாளை மறு நாள். (விசு மாதிரி குழப்புகிறேனோ கொஞ்சம் நிதானமாக வாசித்தால், எல்லாம் சரியாகி விடும்....)

gans5001
11-05-2004, 03:28 PM
எது எப்படியிருந்தால் என்ன?
வரும் இன்றைய இரவில்
என்ன செய்வேனென்ற
கவலை இல்லாத பொழுது
நேற்றைய இரவு
ஏன் என்னை இம்சிக்கிறது....?

தொலைத்தவற்றின் அருமை தொலைந்து போன பின்புதானே தெரிய வருகிறது...

thamarai
11-05-2004, 06:41 PM
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்....

Nanban
11-05-2004, 08:04 PM
நன்றி நண்பர்கள் கண்ஸ்5001, தாமரை ......

அறிஞர்
11-10-2007, 01:45 PM
அருமை நண்பன்..

இறந்த காலத்தை வருத்தப்பட்டு.. நிகழ்கால இன்பத்தை தொலைக்கும் வண்ணம் பலர் இருக்கிறார்கள்...

aren
14-10-2007, 12:31 AM
கவிதை வரிகள் பிரமாதம் நண்பன் அவர்களே.

நீங்கள் மீண்டும் மன்றம் வரவேண்டும். இந்த மாதிரி கவிதைகள் எங்களுக்கு இன்னும் வேண்டும். வருவீர்களா?

நன்றி வணக்கம்
ஆரென்

சுகந்தப்ரீதன்
14-10-2007, 11:41 AM
எழுபத்தி ஐந்து நாள் கழித்து வருவதாய் சொல்லி சென்ற நண்பர் ஏழு மாதங்களாகியும் வர காணோம்..அது ஏனோ..?மீண்டும் அந்த கவி நண்பரை அழைத்து வருமாறு மன்ற நிர்வாகிகளை கேட்டு கொள்கிறேன்...! நினைப்பது நடந்தால் எல்லாம் நலமே..இல்லையா.. நண்பரே..?!

இலக்கியன்
14-10-2007, 05:08 PM
கடந்து சென்றது சென்றதுதான் கடந்ததை நினைத்து கலங்குவதிவிட புதுமை நாடு வீரியத்துடன். மிகவும் நல்ல கரு