PDA

View Full Version : உனக்குத் தெரியுமா?



kavitha
22-04-2004, 05:09 AM
உனக்கு தெரியுமா?

இரண்டு கண்களும்
புத்தகத்தில் நிலைத்திருக்க
இல்லாத ஒரு கண்ணை
உன்னைச்சுற்றி
ஒப்படைத்திருப்பேன் என்பது
உனக்கு தெரியுமா?

என்னை நானே
விமர்சித்துக்கொண்டிருக்க
நீ கொடுக்கும் ஊக்கத்தில்
சிலிர்த்திருப்பேன் என்பது
உனக்கு தெரியுமா?

வழி எங்கும்
வளி படர்ந்திருக்க
என் சுவாசத்தை மட்டும்
உன்னிடமிருந்து பெறுகிறேன் என்பது
உனக்கு தெரியுமா?

ஊர்க்கதை பேசும்
என் தொலைபேசி
உன் பெயரை
உச்சரிக்காத நாளில்
உயிர்ப்பதில்லை என்பது
உனக்கு தெரியுமா?

கலைந்த விரிப்புகள்
கனவுகளுக்காய்
மடிக்கப்படுகிறது என்பது
உனக்கு தெரியுமா?

திறக்காத பக்கங்கள்
உன் கிறுக்கலுக்காய்
காத்திருக்கின்றன என்பது
உனக்கு தெரியுமா?


மனதை திருடும்கலை
எனக்கு தெரியும்-அதை
தொலைத்து நாளாச்சு என்பதாவது
உனக்கு தெரியுமா?

இக்பால்
22-04-2004, 05:22 AM
உள்ளே....உள்ளே....இருக்கிற என் மனதைத் தொட உங்கள் கவிதை
முயலுகிறது தங்கை. ஏழு கவிதைகளை ஒரு கவிதையாக கொடுத்து
விட்டீர்களே!!! அருமையாக இருக்கிறது.

கவிதை படித்துக் கொண்டே வரும்பொழுது அடடா அதற்குள்
முடிந்து விட்டதே என்ற உணர்வைக் கொடுக்கிறது. ஆகையால்
முடிக்காதீர்கள். கொடுத்துக் கொண்டே இருங்கள் தங்கச்சி.

பாராட்டுகள். :) -அன்புடன் அண்ணா.

kavitha
22-04-2004, 06:37 AM
ஆகையால்
முடிக்காதீர்கள். கொடுத்துக் கொண்டே இருங்கள் தங்கச்சி.
உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் அண்ணா! தொடர்கிறேன்...:)
ஊக்கம்தான் ஆக்கம் தருகிறது!

பாரதி
22-04-2004, 07:14 AM
இத்தனை அழகான கவிதைகளை கவிதா படைக்கப் போகிறார் என்பதுதான் எனக்குத் தெரியுமே...!!

பாராட்டுக்கள் கவிதா.

kavitha
22-04-2004, 07:48 AM
உங்கள் நம்பிக்கைக்கு என் வந்தனங்களும், நன்றிகளும் பாரதி!

karikaalan
22-04-2004, 05:31 PM
கவிதாஜி

இவ்வளவு சொல்லியும் எதிரே உள்ள பேர்வழி விடையேதும் பகரவில்லையா!

ரசித்தேன். தொடருங்கள்.

===கரிகாலன்

Nanban
22-04-2004, 07:16 PM
அருமை கவிதா....

சில கவிதைகளை நான் கடனாக எடுத்துக் கொள்கிறேன் - என் மனைவிக்காக....

வாழ்த்துகள், மேலும் வளர்வதற்கு......

இளசு
22-04-2004, 09:38 PM
மெல்ல மெல்ல கவிதாவின் விசுவரூபம்
இதுதான் சுயரூபம்?

கணிக்க முடியவில்லை முழுரூபம்...


வியந்து மகிழ்ந்து பாராட்டுகிறேன்....

kavitha
23-04-2004, 03:26 AM
karikaalan,

இவ்வளவு சொல்லியும் எதிரே உள்ள பேர்வழி விடையேதும் பகரவில்லையா!
அதுதான் அண்ணா ரகசியமே!
Nanban,


சில கவிதைகளை நான் கடனாக எடுத்துக் கொள்கிறேன் - என் மனைவிக்காக....

கேட்கத்தேவையில்லை நண்பரே!
என்னை பொறுத்தவரை எப்போது வெளியாகிவிட்டதோ
அப்போதே அது வாசிப்பவர்களுடையது ஆகிவிடுகிறது!
அப்படி அவர்களுக்குள் அது நிலைத்து நின்றால்தான்
அது முழுமையான கவிதையாக இருக்க முடியும் என்பது
என் நம்பிக்கை!
அப்படித்தான் உங்கள் கவிதைகளின் பல வரிகள்
என் நெஞ்சில் பசுமரத்தாணியாக...

இளசு,

கணிக்க முடியவில்லை முழுரூபம்...

என்னையே என்னால் கணிக்க முடியவில்லை அண்ணா!
உங்கள் விமர்சனத்தை ரசித்தேன்.....

kavitha
23-04-2004, 06:12 AM
(தொடர்ச்சி...)

நீ இல்லாத சமயங்களில்
உன் சட்டை
நான் அணிந்து
கண்ணாடி களைப்புற்றது
உனக்கு தெரியுமா?

பேசும் அனைவரிடமும்
நேருக்கு நேர்
விழி நோக்கி
அஞ்சாது பேசும் கண்கள்
உன் முகம்
நோக்க மட்டும்
பாறாங்கல் சுமந்தது
உனக்கு தெரியுமா?

நடுக்கூட
மைதானத்தில்
நாற்புறங்கள் விரிந்திருக்க
உன் கண் கோணத்திற்குள்
வளைய வந்தது
உனக்கு தெரியுமா?

கண்களில் உன்னை நிறுத்தி
காதலை நெஞ்சில் இருத்தி
காமத்தை கொஞ்சம் துரத்தி
காலமெல்லாம் காத்திருப்பாள் ஒருத்தி
என்பது உனக்கு தெரியுமா?

(தொடரும்...)

Nanban
23-04-2004, 11:57 AM
கண்களில் உன்னை நிறுத்தி
காதலை நெஞ்சில் இருத்தி
காமத்தை கொஞ்சம் துரத்தி
காலமெல்லாம் காத்திருப்பாள் ஒருத்தி
என்பது உனக்கு தெரியுமா?



பாராட்டுகள்..... கவிதா....

Nanban
23-04-2004, 12:01 PM
நீ இல்லாத சமயங்களில்
உன் சட்டை
நான் அணிந்து
கண்ணாடி களைப்புற்றது
உனக்கு தெரியுமா?


எத்தனை முறை கண்ணாடி நோக்கியிருந்தால், கண்ணாடி களைத்துப் போயிருக்கும்... புதிய கற்பனை, சிந்தனை, சொல்வளம்... புதுக் கவிதைக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் பெற்ற கவிதை இது.... ஆடை மாற்றி உடுத்திப் பார்த்து மகிழும் மனம்.... அதுவும் ஒரு சுகம்.... சிறகடித்துப் பறப்பது கற்பனை மட்டுமல்ல - கவிதையும் தான்... வாழ்த்துகள்....

Nanban
23-04-2004, 12:05 PM
நடுக்கூட
மைதானத்தில்
நாற்புறங்கள் விரிந்திருக்க
உன் கண் கோணத்திற்குள்
வளைய வந்தது
உனக்கு தெரியுமா?


பார்வை படரும் இடமெல்லாம், படர்ந்து, ஒளி சிதறும் நேரத்து ஒளிச்சேர்க்கையில் உயிர்ச்சேர்க்கைக்கு ஏங்கும் மனம்...

காதலை துல்லியமாக வர்ணிக்கும் இந்தக் கவிதை, மனதை கிறங்க வைக்கிறது. வந்துவிட்டேன் என்று சொல்லக் கூடாமல், பார்க்கும் இடமெல்லாம் சென்று நின்று அறிவிக்கும் காதல் தன்னை... எல்லோரும் அனுபவித்த சுகம் தான்.... இன்று மீண்டும் கிளறும் பழைய ஞாபகங்கள்.....

நல்லது கவிதா.... தொடருங்கள்....

kavitha
27-04-2004, 04:35 AM
நன்றி நண்பரே!

தமிழமுதன்
27-04-2004, 08:40 AM
கண்பூத்துக் காத்திருக்கும் காரிகையே...
கலங்குகின்றோம் உன்காதல் மோகம் கண்டு.

பாராட்டுக்கள் கவிதா. நானிங்கு புதியவன்... வாழ்த்த வயதில்லை... (உங்களுக்கு 34 வயதுக்கு மேலென்றால்) வணங்குகிறேன்.

இக்பால்
27-04-2004, 08:57 AM
:)

சேரன்கயல்
27-04-2004, 09:35 AM
காதலை உணர்த்தத் துடிக்கும் வார்த்தைகள்...
அழகான வெளிப்பாடு...வாழ்த்துக்கள் கவிதா...

கவிதா...இன்னும் கொஞ்சம் கவி தா...

kavitha
27-04-2004, 11:32 AM
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...



வணங்குகிறேன்.

வணங்கத்தேவையில்லை தமிழமுதன் அவர்களே! நீங்கள் வாழ்த்தலாம்!

kavitha
27-04-2004, 11:33 AM
தொடர்ச்சி...

சந்திக்கும் நாட்களில் எல்லாம்
அடம்பிடித்து உன்
புத்தகம் கேட்டு
நினைவுப்பரிசுகளாக
என் அலமாரி
நிறைத்து கொண்டது
உனக்கு தெரியுமா?

ஒவ்வொரு வரிகளிலும்
உன் பெயரை
பொருத்தி வைத்து
யாருக்கும் தெரியாமல்
ரசித்து ரசித்து
படிப்பேன் என்பது
உனக்கு தெரியுமா?

செல்லும் இடங்களில் எல்லாம்
உனக்காய்
சிறு சிறு
பொருள்கள் வாங்கி
சொல்லாமல் சேர்த்துவைப்பது
உனக்கு தெரியுமா?

கடல்போல்
காதல் கொண்டு
கண்ணீர் உப்பளம் தாங்கி
அலைகளின்றி நிசப்தமாய்
மூச்சுவிடும் இந்த
கடலின் ஆழம்
உனக்கு தெரியுமா?

தொடரும்..

பரஞ்சோதி
27-04-2004, 01:54 PM
சகோதரி கவிதா, உங்கள் கவிதைத் தொகுப்பு மிகவும் அருமை. நான் மட்டும் படிக்கவில்லை, உங்கள் அண்ணியும் படித்து விட்டு, கவிதாவுக்கு புரியுது, ஏன் உங்கள் மரமண்டைக்கு ஏற மாட்டேங்குது என்று ஒரு குட்டு வைத்து விட்டார். தொடருங்கள் சகோதரி.

Nanban
27-04-2004, 05:22 PM
கடல்போல்
காதல் கொண்டு
கண்ணீர் உப்பளம் தாங்கி
அலைகளின்றி நிசப்தமாய்
மூச்சுவிடும் இந்த
கடலின் ஆழம்
உனக்கு தெரியுமா?


ஒருபோதும்
கரையைத் தாண்டி
எல்லை மீறியதில்லை....

கரையில் மட்டுமே
அலைகள்
தழுவிச் செல்லும்...
எனது கால்களை.

நீ எனது
கால்களில்
வீழ்ந்து கிடக்கும் இடத்தில்
நிற்பது தான்
சௌகரியம் எனக்கு...

ஆழம் புரியாது
காலை விட்டு
வீழ்ந்து போக
அழைப்பதென்ன...?

இளசு
27-04-2004, 09:16 PM
அளப்பரிய அன்பின் ஆழம், அகலம்......
இப்படியும் வெளிப்படுத்திட இயலுமா???

கவிதா வியக்கவைக்கிறார்...

நண்பனின் பார்வைகள்... சிலிர்க்கவைக்கின்றன...

பாரதி
27-04-2004, 11:16 PM
அசத்தல் கவிதா. நண்பனும் வழக்கம் போல்.
பாராட்டுக்கள் இருவருக்கும்.

kavitha
28-04-2004, 03:28 AM
நன்றிகள் அனைவருக்கும்....



ஆழம் புரியாது
காலை விட்டு
வீழ்ந்து போக
அழைப்பதென்ன...?
_________________
நண்பன்


ஆழம் காண்பது அளப்பறிய செயல்....
எல்லோராலும் முடியாது நண்பரே!

மூர்த்தி
28-04-2004, 09:35 AM
எட்ட நின்று கனிவுப் பார்வைப் பார்த்தமைக்கே மீசை குத்துவதாக கவிதை எழுதிய என்னவளோடு வாழ்ந்த பழைய நினைவுகளைத் தூசுதட்டிய அன்புக் கவிதாவுக்கு வாழ்த்துக்கள்.எனக்கு கவித்துவம் வரும்.ஆனால் கவிதைதான் சுட்டுப் போட்டாலும் வரமாட்டேன் என்கிறது.

kavitha
28-04-2004, 11:00 AM
சிறகடித்துப் பறப்பது கற்பனை மட்டுமல்ல - கவிதையும் தான்... வாழ்த்துகள்....

இப்படி ஊக்குவிக்கும் வார்த்தைகள் கூறும் நண்பருக்கும் நன்றி!
மூர்த்தி அவர்களுக்கும் நன்றி!

kavitha
28-04-2004, 11:31 AM
தொடர்ச்சி...

மனக்கண்ணில்
உன்னை நிறுத்திவைத்து
மணிக்கணக்கில்
மைத்தூரிகை ஏந்தி
ஒழுங்காய் வராத
ஓவியத்தை இன்றும்
ஒளித்து வைத்திருப்பது
உனக்கு தெரியுமா?

எவரேனும் உன்பெயர்
அழைத்தாலும்
அடி நெஞ்சில்
மின்னல் வெட்டி
அதை உதட்டோரம்
மெலிதாய் சிதறவிட்டது
உனக்கு தெரியுமா?

கடற்கரையில்
நம் பெயர் எழுதி
வெயில் படாமல்
மணல் வீடு கட்டி
விழுங்க வரும்
அலைகளை
திருப்பி அனுப்பியது
உனக்கு தெரியுமா?

என்றைக்கோ
பிரசாத குங்குமம்
நீ இட்டு போனதற்காய்
இன்றைக்கும் என்
நெற்றியின் உச்சி
குளிராமல் இருப்பது
உனக்கு தெரியுமா?

தொடரும்..

இக்பால்
28-04-2004, 02:34 PM
எட்ட நின்று கனிவுப் பார்வைப் பார்த்தமைக்கே மீசை குத்துவதாக கவிதை எழுதிய என்னவளோடு வாழ்ந்த பழைய நினைவுகளைத் தூசுதட்டிய அன்புக் கவிதாவுக்கு வாழ்த்துக்கள்.எனக்கு கவித்துவம் வரும்.ஆனால் கவிதைதான் சுட்டுப் போட்டாலும் வரமாட்டேன் என்கிறது.

அப்ப...உங்களிடம் யார் கண்ணிலும் படாத அருமையான கவிதைகள்
இருக்கிறது. பொக்கிஷம்தான். எங்களுக்கும் கொடுங்களேன் யாருக்கும்
பிரச்னை வராத பட்சத்தில்.

அதுசரிங்க தம்பி...கவித்துவம் என்றால் என்ன? அந்த அறிவு இருக்கும்பொழுது
ஏன் கவிதை கொடுக்க முடியாது? உண்மையில் தெரியவில்லை.

-அன்புடன் அண்ணா.

இக்பால்
28-04-2004, 02:40 PM
அருமை தங்கை. தொடருங்கள்.

இது மாதிரி நம் வாழ்விலும் நடந்திருக்கிறதே என எண்ண வைக்கும்
கவிதைகள்.

சேரனின் ஆட்டோகிராஃப் உணர்வை உண்டு பண்ணுகிறீர்கள் தங்கை.

அப்படி என்றால் கவிதைக்கு வெற்றிதான் என்கிறீர்களா? அதிலென்ன
சந்தேகம். தொடரட்டும்.

இசாக், அசன்பசர் வந்தால் தங்கையின் கவிதைகளைக் கண்டு மிக
மகிழ்வார்கள். ராம்பாலை ஏனோ வேறு காணோம். தொடரட்டும்.

சாகரன்
28-04-2004, 02:42 PM
மிகவும் அற்புதமாக இருக்கிறது தோழி..!
கண்டிப்பாக சில சிலிர்ப்பூட்டும் ஞாபகத்தையாவது ஏற்படுத்தாமல் போகாது இந்த கவிதைகள்...

Nanban
28-04-2004, 05:58 PM
எவரேனும் உன்பெயர்
அழைத்தாலும்
அடி நெஞ்சில்
மின்னல் வெட்டி
அதை உதட்டோரம்
மெலிதாய் சிதறவிட்டது
உனக்கு தெரியுமா?


அருமையான வரிகள்....

இதைப் படிக்கும்பொழுது, தாமரையின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

வசீகரா....

ஒன்றா, இரண்டா... ஆசைகள்

இந்தப் பாடல்கள் எல்லாம் எதனால், சிறப்பாக அமைந்தன என்று கேட்ட பொழுது, பெண்ணின் மன நிலையை வர்ணிக்கும் இக்கவிதைகளை எழுதியதும் ஒரு பெண் என்பதால் தான் அத்தனை சிறப்பாக வந்திருக்கிறது என்கிறார்கள்....

அது போலத் தான், ஒரு பெண்ணின் மனநிலையை, ஆழத்தை உங்கள் கவிதைகள் கட்டவிழ்க்கின்றன....

பாராட்டுகள்....

மூர்த்தி
29-04-2004, 02:16 AM
அப்ப...உங்களிடம் யார் கண்ணிலும் படாத அருமையான கவிதைகள்
இருக்கிறது. பொக்கிஷம்தான். எங்களுக்கும் கொடுங்களேன் யாருக்கும்
பிரச்னை வராத பட்சத்தில்.

அதுசரிங்க தம்பி...கவித்துவம் என்றால் என்ன? அந்த அறிவு இருக்கும்பொழுது
ஏன் கவிதை கொடுக்க முடியாது? உண்மையில் தெரியவில்லை.

-அன்புடன் அண்ணா.

அன்பு அண்ணலே...அவரே எனக்குச் சொந்தமில்லை.தற்போது மாற்றன் தோட்டத்து மல்லிகை.அவரின் கவிதை மட்டும் எனக்குச் சொந்தமா?அதற்கு நான் அவரின் அனுமதி பெறவேண்டும்.இது நடக்கிற காரியமா?

பனித்துளியின் பாரம் தாங்க முடியாமல் தலைசாயும் புல் கண்டு,நன்கு விளைந்த நெற்கதிர் பாரம் தாளாமல் தலை சாய்வது கண்டு,பேருந்தில் மட்டுமல்ல விமானத்திலும் ஜன்னலோர இருக்கை கேட்கும் என் குழந்தை மனம் கண்டு,பயனிக்கும்போது நம் தோளுக்கருகே தடவிச் செல்லும் வெண்பஞ்சு மேகம் கண்டு,எச்சில் ஒழுக எட்டிப்பார்க்கும் பேருந்து முன்னிருக்கை குழந்தை கண்டு,மாலைநேரத் தென்றல்காற்று கண்டு,கோடைகால மழைகண்டு,தாமே சாப்பிடாமல் குஞ்சுக்கு தன் அலகால் கொத்திச் செல்லும் கோழி கண்டு மனதிற்குள் போராட்டம்.என்னவோ பிசையும்.வார்த்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அருவியாய் வந்து வீழும்.பூக்கள் கை நிறைய.தொடுக்க நாரும் உண்டு.பூக்கட்டத் தெரியாமல் தூர நான்!

சாகரன்
29-04-2004, 11:29 AM
பனித்துளியின் பாரம் தாங்க முடியாமல் தலைசாயும் புல் கண்டு,நன்கு விளைந்த நெற்கதிர் பாரம் தாளாமல் தலை சாய்வது கண்டு,பேருந்தில் மட்டுமல்ல விமானத்திலும் ஜன்னலோர இருக்கை கேட்கும் என் குழந்தை மனம் கண்டு,பயனிக்கும்போது நம் தோளுக்கருகே தடவிச் செல்லும் வெண்பஞ்சு மேகம் கண்டு,எச்சில் ஒழுக எட்டிப்பார்க்கும் பேருந்து முன்னிருக்கை குழந்தை கண்டு,மாலைநேரத் தென்றல் காற்று கண்டு,கோடைகால மழைகண்டு,தாமே சாப்பிடாமல் குஞ்சுக்கு தன் அலகால் கொத்திச் செல்லும் கோழி கண்டு மனதிற்குள் போராட்டம்.என்னவோ பிசையும்.வார்த்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அருவியாய் வந்து வீழும்.பூக்கள் கை நிறைய.தொடுக்க நாரும் உண்டு.பூக்கட்டத் தெரியாமல் தூர நான்!


பூ கட்ட தெரியாவிட்டாலும், இந்த பத்தியே பூ கட்ட தோதான விரல்கள்தான் என்பதை உணர்த்துகின்றனவே தோழரே!

தமிழ்மன்ற கவிஞர்களே.. பூ வும் உண்டு, கட்டுவதற்கான விருப்பமும் உண்டு, நாரும் உண்டு ஆனால் தெரியவில்லை என்றிருக்கும் நண்பர்களுக்காக, பூ கட்ட சொல்லிக்கொடுக்கும் ஒரு பகுதி ஆரம்பிக்கலாமே..!தமிழில் மரபு கவிதைகளை கூட சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்.. ஆனால் புதுக்கவிதை... ??

என்றென்றும் நேசமுடன்,
சாகரன்.

இக்பால்
29-04-2004, 11:36 AM
அன்பு அண்ணலே...அவரே எனக்குச் சொந்தமில்லை.தற்போது மாற்றன் தோட்டத்து மல்லிகை.அவரின் கவிதை மட்டும் எனக்குச் சொந்தமா?அதற்கு நான் அவரின் அனுமதி பெறவேண்டும்.இது நடக்கிற காரியமா?


ம்ஹ்ஹம்... அது நல்லது இல்லை. உங்களுக்கு, உங்களுக்கு உரிமை
உள்ளவர், அனுமதி கொடுக்கும் நண்பர்கள் படைப்புகள் மட்டும் கொடுங்கள்.
மன்றத்தின் விதிமுறைகளும் அப்படித்தான் சொல்கிறது. :)

kavitha
29-04-2004, 11:51 AM
பனித்துளியின்
பாரம் தாங்க முடியாமல்
தலைசாயும் புல் கண்டு
நன்கு விளைந்த
நெற்கதிர் பாரம் தாளாமல்
தலை சாய்வது கண்டு,
பேருந்தில் மட்டுமல்ல
விமானத்திலும்
ஜன்னலோர இருக்கை கேட்கும்
என் குழந்தை மனம் கண்டு,

பயனிக்கும்போது நம்
தோளுக்கருகே
தடவிச் செல்லும் வெண்பஞ்சு மேகம் கண்டு,

எச்சில் ஒழுக
எட்டிப்பார்க்கும்
பேருந்து முன்னிருக்கை குழந்தை கண்டு,
மாலைநேரத் தென்றல் காற்று கண்டு,
கோடைகால மழைகண்டு,

தாமே சாப்பிடாமல்
குஞ்சுக்கு
தன் அலகால்
கொத்திச் செல்லும்
கோழி கண்டு

மனதிற்குள் போராட்டம்.என்னவோ பிசையும்.

வார்த்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்

அருவியாய் வந்து வீழும்.
பூக்கள் கை நிறைய.
தொடுக்க நாரும் உண்டு.
பூக்கட்டத் தெரியாமல் தூர நான்!

இவ்வளவு நேசத்தையும் நெகிழ்வுகளையும் வைத்துக்கொண்டு எப்படி ஐயா உம்மால் சும்மா இருக்க முடிகிறது?

kavitha
29-04-2004, 11:59 AM
இதைப் படிக்கும் பொழுது, தாமரையின் கவிதை வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

நானும் நினைத்ததுண்டு நண்பரே! நான் நினைப்பதையெல்லாம் அவர் எப்படி தெரிந்து கொண்டாரென்று...
சமீபத்தில் அவரின் பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்க்கும் முன் அவர் பெயரை பார்த்துவிட்டு இன்று எப்படியும் அவரை பார்த்து
விடவேண்டும் என்று தாமதமாக பணிக்கு சென்றேன்.. எனக்கும் மிகப்பிடித்த பாடலாசிரியர்
(அவரின் கவிதைகளை இன்னும் படிக்க வாய்க்கவில்லை)

kavitha
29-04-2004, 12:01 PM
சேரனின் ஆட்டோகிராஃப் உணர்வை உண்டு பண்ணுகிறீர்கள் தங்கை.

நன்றி அண்ணா

:)

kavitha
29-04-2004, 12:09 PM
கண்டிப்பாக சில சிலிர்ப்பூட்டும் ஞாபகத்தையாவது ஏற்படுத்தாமல் போகாது இந்த கவிதைகள்...

நன்றி சாகரன்! :)

இக்பால்
29-04-2004, 12:17 PM
மூர்த்தி தம்பி... உனக்குத் தெரியுமா எனக் கேட்டுக் கொண்டிருந்த
என் தங்கையின் விரல்களை கண்டு கண்டு என காண வைத்து
விட்டீர்கள். உங்களுக்கா கவிதை எழுதத் தெரியவில்லை.

சாகரன்
29-04-2004, 11:50 PM
மூர்த்தி,

நீங்க குணா கமல் மாதிரி "கவிதை, கவிதை"னு சொல்றதா ஒரு கனவு வந்ததே.. உண்மைதானா ?

மூர்த்தி
30-04-2004, 12:55 AM
உண்மைதான் அன்பு சாகரரே...

kavitha
26-05-2004, 04:51 AM
தொடர்ச்சி...

காணாமல் மறைந்திருந்து
உன் தவிப்பினை
மிக ரசித்து
'திடும்' என முன் நின்று
சடுதியில் முகம்மலரவைத்தது
உனக்கு தெரியுமா?

எதிர்பாரா வேளையில்
எதிர் நின்ற
உனைக்கண்டு
தோள்களில் மாலையாக
வேண்டுமென்று
இரு கைகளும்
பின்னிக்கொண்டது
உனக்கு தெரியுமா?

துளியாய் துளியாய்
மழை தூற
கைக்குவளையில்
நிறைத்து பிடித்து
உன் கண்ணாடி
முகம் காண
கண்ணாடி பிடித்தேனே
உனக்கு தெரியுமா?

gans5001
26-05-2004, 07:43 AM
என் சுவாசத்தை மட்டும்
உன்னிடமிருந்து பெறுகிறேன் என்பது
உனக்கு தெரியுமா?

மொத்தக் கவிதைக்கும் இந்த வரிகளே முத்தாய்ப்பு.. வாழ்த்துக்கள்

பரஞ்சோதி
26-05-2004, 07:47 AM
ஆகா அருமையாக செல்கிறது சகோதரி.

எனக்கு மட்டும் கவிதை எழுத தெரிந்திருந்தால் என் முதல் காதல் செத்திருக்காது. ம்.. என்ன செய்வது எல்லாம் விதி..

kavitha
26-05-2004, 09:15 AM
கன்ஸ், பரம்ஸ் அண்ணா... இருவருக்கும் நன்றிகள்!


எனக்கு மட்டும் கவிதை எழுத தெரிந்திருந்தால் என் முதல் காதல் செத்திருக்காது. ம் என்ன செய்வது எல்லாம் விதி..


என்ன அண்ணா! புதுக்கதை சொல்கிறீர்கள்..
கவிதைக்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை அண்ணா... காதலுக்கும் கவிதைக்கும் தான் சம்பந்தமுள்ளது.
இப்படி ஒரு பொன்னான துணைவி கிடைக்க தான் அந்தக்காதல்(!) (அது காதல் தானா?) செத்திருக்கக்கூடும்.உங்களுக்கு அமைந்தது நல்லவிதிதான்!

மன்மதன்
26-05-2004, 09:56 AM
ஆகா அருமையாக செல்கிறது சகோதரி.

எனக்கு மட்டும் கவிதை எழுத தெரிந்திருந்தால் என் முதல் காதல் செத்திருக்காது. ம் என்ன செய்வது எல்லாம் விதி..

:wub: :wub: :wub:

சேரன்கயல்
27-05-2004, 05:16 AM
இப்படி ஒரு பொன்னான துணைவி கிடைக்க தான் அந்தக்காதல்(!) (அது காதல் தானா?) செத்திருக்கக்கூடும்.உங்களுக்கு அமைந்தது நல்லவிதி தான்!
_________________
கவி.


"யாருக்கு மாப்பிள்ளை யாரோ"

"யாரோ...யார் யாரோ...யாரோடு யாரோ"

யாரோடு யாரென்ற கேள்வி...விதி வந்து விடை சொல்லுமா"

மன்மதன்
27-05-2004, 05:38 AM
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று..

சேரன்கயல்
27-05-2004, 06:31 AM
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று..


மனது மயங்கியென்ன...உனக்கும் வாழ்வு வரும்...

இளசு
30-05-2004, 11:17 PM
தென்றலாய் வருடிச்செல்லும் வரிகள்..

பாராட்டுகள் கவீ... தொடரவும்..

kavitha
31-05-2004, 04:52 AM
நன்றி அண்ணா! விரைவில் தொடர்கிறேன்.

mythili
01-06-2004, 09:27 AM
கவிதா என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மனம் பாரமாக இருக்கிறது, மனதிற்கு இதமாக கவிதை கிடைகுமா என்று வந்த எனக்கோ, எந்த கவிதையை படிப்பது என்ற அளவிற்கு கவிதைகள். மிக ரசித்தேன். ஒவ்வொரு வரியும் மனதில் ரீங்காரமாக ஒலிக்கிறது.

தொடருங்கள் கவி. காத்திருக்கிறேன்.

அன்புடன்,
மைதிலி

இக்பால்
01-06-2004, 09:54 AM
இதுவரை கொடுத்ததெல்லாம் நீங்கள் கொடுத்ததால் தெரிந்து விட்டது
தங்கை...இன்னும் தெரிந்து கொள்ள ஆசை. அழகாக போகிறது.
தொடருங்கள்.... -அன்புடன் அண்ணா.

kavitha
01-06-2004, 10:18 AM
மனம் பாரமாக இருக்கிறது, மனதிற்கு இதமாக கவிதை கிடைகுமா என்று வந்த எனக்கோ, எந்த கவிதையை படிப்பது என்ற அளவிற்கு கவிதைகள். மிக ரசித்தேன். ஒவ்வொரு வரியும் மனதில் ரீங்காரமாக ஒலிக்கிறது.

தொடருங்கள் கவி. காத்திருக்கிறேன்.
உங்கள் மன பாரத்தை என் கவிதை போக்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மைதிலி!


இன்னும் தெரிந்து கொள்ள ஆசை. அழகாக போகிறது.
தொடருங்கள்.... -அன்புடன் அண்ணா.
கொடுக்கிறேன் அண்ணா!உங்கள் ஊக்கத்திற்கு பிறகு தானே இந்த துருவ நட்சத்திரம் "வால் நட்சத்திரம்" ஆனது! :)

mythili
01-06-2004, 10:25 AM
மனம் பாரமாக இருக்கிறது, மனதிற்கு இதமாக கவிதை கிடைகுமா என்று வந்த எனக்கோ, எந்த கவிதையை படிப்பது என்ற அளவிற்கு கவிதைகள். மிக ரசித்தேன். ஒவ்வொரு வரியும் மனதில் ரீங்காரமாக ஒலிக்கிறது.

தொடருங்கள் கவி. காத்திருக்கிறேன்.
உங்கள் மன பாரத்தை என் கவிதை போக்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மைதிலி!


இன்னும் தெரிந்து கொள்ள ஆசை. அழகாக போகிறது.
தொடருங்கள்.... -அன்புடன் அண்ணா.
கொடுக்கிறேன் அண்ணா!உங்கள் ஊக்கத்திற்கு பிறகு தானே இந்த துருவ நட்சத்திரம் "வால் நட்சத்திரம்" ஆனது!

கவி, நட்சத்திரமா இல்லை சந்திரனானு அப்பறம் பாத்துக்கலாம்,
"வால் நட்சத்திரமோ" இல்லையோ "சரியான வால்" தான் நீங்கள்

அன்புடன்,
மைதிலி

kavitha
01-06-2004, 10:27 AM
தொடர்ச்சி...

நாள் முழுவதும்
சீண்டி சீண்டி பேசிவிட்டு
நீ செல்லும் தருவாயில்
உன் உள்மனது மட்டும்
கேட்கும்படி ஓர்
ஒற்றை முத்தம்
வேண்டியது
உனக்கு தெரியுமா?


உடலெங்கும்
பரவுமாம் ரத்தம்
ஒரு நிமிடத்தில்!
உன் கதிர்வீச்சு
பார்வை மட்டும்
கணப்பொழுதில்
பாய்ந்தது
உனக்கு தெரியுமா?

காணும் காட்சியோடு
என்னையும் சேர்த்து
நீ மறந்து போனாலும்
நிதம் விழி சிந்தும்
ஒற்றைத்தூறல் என்
காதலின் சாட்சியாகும்
என்பது
உனக்கு தெரியுமா?


தொடரும்..

kavitha
01-06-2004, 10:29 AM
கவி, நட்சத்திரமா இல்லை சந்திரனானு அப்பறம் பாத்துக்கலாம்,
"வால் நட்சத்திரமோ" இல்லையோ "சரியான வால்" தான் நீங்கள்

அன்புடன்,
மைதிலி
அது எப்படி மைதிலி உங்களுக்கு தெரிந்தது? பாம்பின் கா(வா)ல் பாம்பறியுமோ?

mythili
01-06-2004, 10:34 AM
அருமை கவிதா, இப்போது தான் கேட்டேன் எப்போது கிடைக்கும் என்று. கிடைத்து விட்டது, இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.

"நீ செல்லும் தருவாயில்
உன் உள்மனது மட்டும்
கேட்கும்படி ஓர்
ஒற்றை முத்தம்
வேண்டியது
உனக்கு தெரியுமா?"

ரசித்து வாசித்த வரிகள் கவி.


அன்புடன்,.
மைதிலி.

mythili
01-06-2004, 10:36 AM
கவி, நட்சத்திரமா இல்லை சந்திரனானு அப்பறம் பாத்துக்கலாம்,
"வால் நட்சத்திரமோ" இல்லையோ "சரியான வால்" தான் நீங்கள்

அன்புடன்,
மைதிலி
அது எப்படி மைதிலி உங்களுக்கு தெரிந்தது? பாம்பின் கா(வா)ல் பாம்பறியுமோ?

நெருப்பு சுடும் என்று யாராவது சொன்னால் தெரியாதா என்ன, அதற்கு தொட்டு தான் பார்க்க வேண்டுமா என்ன? அது போல தான் நீங்கள் "வால்-அதிலும் ரெட்டை" வால் என்று சொல்வதற்கு நான் வாலாக இருக்க வேண்டாமே ?

அன்புடன்,
மைதிலி

அறிஞர்
01-06-2004, 10:36 AM
(தொடர்ச்சி...)
நாள் முழுவதும்
சீண்டி சீண்டி பேசிவிட்டு
நீ செல்லும் தருவாயில்
உன் உள்மனது மட்டும்
கேட்கும்படி ஓர்
ஒற்றை முத்தம்
வேண்டியது
உனக்கு தெரியுமா?
தொடரும்..

அருமையான வரிகள்.. கவி.. ரசித்தேன்....

kavitha
01-06-2004, 11:04 AM
என் குறும்பை ரசித்த மைதிலிக்கும்,பாராட்டிய அறிஞருக்கும் நன்றிகள்.. :)

பரஞ்சோதி
01-06-2004, 04:58 PM
மீண்டும் கவிதையை, மழையை பொழியத் தொடங்கிய சகோதரிக்கு பாராட்டுகள். சொன்னதை செய்யும் சகோதரிக்கு நன்றி..

kavitha
02-06-2004, 04:21 AM
வாசித்து ஊக்கமூட்டும் உங்களுக்கும் என் நன்றிகள் அண்ணா!:)

kavitha
05-07-2004, 11:35 AM
சதுரங்க ஆட்டத்தில்
கில்லாடி நீ!
ஆட்டத்தில் மடக்கும்போது
உன்
இதழ் திறவாத புன்னகையில்
என்
இதயத்தை நழுவவிட்டது
உனக்கு தெரியுமா?

நிதம் நிதம் விவாதங்கள்
நீட்டித்தே முழங்கினாலும்
அலட்சியப்பார்வையொன்றை
அனாயசமாய் அவிழ்த்தது
உனக்கு தெரியுமா?

நீ செய்யும் குறும்புகளில்
நீளும் என் கைகளோடு
மனதையும் சேர்த்து
கட்டிவைத்தது
உனக்கு தெரியுமா?

பாரதி
05-07-2004, 04:06 PM
தெரியுமா என்ற வினாவில்தான் எத்தனை விசயங்கள்...! நன்றாக இருக்கிறது. தொடருங்கள் கவி.

kavitha
09-07-2004, 12:09 PM
நன்றி பாரதி

இ.இசாக்
05-08-2004, 06:21 PM
கவிதா அவர்களே..
கலக்கியிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்.
தொடருங்கள்.. காத்திருக்கிறோம் வாசிக்க.

ஊன்றி படித்துவிட்டு பிறகு
விரிவாக எழுதுகிறேன்.

kavitha
06-08-2004, 07:40 AM
ஊன்றி படித்துவிட்டு பிறகு
விரிவாக எழுதுகிறேன்.
காத்திருக்கிறேன் அண்ணா. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

mythili
06-08-2004, 08:39 AM
நீ செய்யும் குறும்புகளில்
நீளும் என் கைகளோடு
மனதையும் சேர்த்து
கட்டிவைத்தது
உனக்கு தெரியுமா?


ரசித்து, 2 முறை படித்த வரிகள் கவி.

இந்தக் கவிதையை தொடர்டா. கத்திருக்கிறேன்,

அன்புடன்,
மைதிலி

Mathu
06-08-2004, 09:21 AM
இன்று தான் படித்தேன் அத்தனையையும் ஒரே மூச்சில்..!
இப்போ நானும் 18ல்..! :
மறந்துவிட்ட பசுமையான நினையுகளை மீண்டும் மீண்டும்
நினைவூட்டும் வரிகள், அத்தனையும் அம்சமாய்......
வாழ்த்துகள் கவி, தொடரட்டும் கவிமழை.