PDA

View Full Version : ஒரு பூவின் நினைவு......



Nanban
11-04-2003, 01:09 PM
பரணைக் கிளறிய பொழுது
ஒரு பழைய கணக்குப் புத்தகம்.
தூக்கியெறிந்த பொழுது
தன்னாலே திறந்து நின்றது
நீ தந்த மலரொன்றை
மறைத்து வைத்த பக்கம்.

இருபது வருடம் கழிந்த பின்னும்
மணம் ஒரு நிமிடம்
மயங்க வைத்தது மனதை.
நாசியினாலும் காணமுடிந்தது -
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?

நீயும் நானும் பயணித்த சாலைகள்
பயணற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும், காஷ்மீரையும்
இணைப்பதற்கு.

நீ பூப்பறித்து தந்த தோட்டங்கள்
இன்று வாகனங்களுக்கு
பெட்ரோல் ஊற்றும் நிலையங்களாக
புன்முறுவலாக நிற்கிறது -
நீயும் நானும் வாகனங்களின்றி
எங்கெங்கோ நிற்கிறோம்.

நீ சிலாகித்து பரவசப்பட்ட
இயேசுவின் சிலையோ
மறைந்துவிட்டது -
பலமாடி வணிக வளாகத்தின் பின்னே.

நீ குதூகலித்துப் பார்க்கும்
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் வழியே
பஸ்கள் பயணிப்பதில்லை இப்பொழுது -
மாற்றுப்பாதையில் வழுக்கிக் கொண்டு
விலகிப் போகிறது.
வருடம் முழுக்க
காய்ந்துபோன இலையற்ற
மரம் வெட்டப்பட்டுவிட்டது....

அரசு மருத்துவமனைப் பயணத்தில்
பக்கத்திலிருக்கும் கண்தெரியாத
அம்மா சொல்கிறாள் -
நம்ம திருநெல்வேலி முன்னேறிச்சுடா.
முன்னேறியது நகரம் மட்டும்தானம்மா -
பெருமூச்சுடன் மூடினேன் புத்தகத்தை
நீ தந்த பூவும்
நம் நினைவுகள் போலவே
மெலிந்து கருத்துப் போய்
சருகாகியிருந்தது.

poo
11-04-2003, 03:15 PM
பூவினால் வந்த நினைவு.. சுகமாய் இல்லை.. சோகமாய்!!

பாராட்டுக்கள் நண்பரே!!

karikaalan
11-04-2003, 03:24 PM
நண்பரே, பூவினும் இனிய நினைவுகள் காதலியைப் பற்றி. கவிதை நன்றே. வாழ்த்துக்கள்.

இளசு
11-04-2003, 03:56 PM
ஓவியமாய் ஒரு கவிதை..
என்ன .....பழைய காட்சிகள் வண்ணத்தில்
புதியவை மங்கிய கறுப்பு-வெள்ளையில்

நினைத்த உத்தி அதுதானே நண்பா..
மயங்குகிறேன் உன் கைவண்ணம் கண்டு......

Narathar
21-04-2003, 07:38 AM
பழைய காட்சிகள் வண்ணத்தில்
புதியவை மங்கிய கறுப்பு-வெள்ளையில்

நினைத்த உத்தி அதுதானே நண்பா..
...

இளசுவை சினிமாவுக்குச்செல்ல பரிந்துரை செய்கிறேன்

கவிதையியிலேயே........... காட்சிகாட்டிய அன்பருக்கு நன்றி!

இளசு
21-04-2003, 07:45 AM
பழைய காட்சிகள் வண்ணத்தில்
புதியவை மங்கிய கறுப்பு-வெள்ளையில்

நினைத்த உத்தி அதுதானே நண்பா..
...

இளசுவை சினிமாவுக்குச்செல்ல பரிந்துரை செய்கிறேன்

கவிதையியிலேயே........... காட்சிகாட்டிய அன்பருக்கு நன்றி!

Narathar
21-04-2003, 11:07 AM
[quote]
நேரம் கிடைக்கும்போது சினிமாவுக்கு சென்றுகொண்டுதானே

அந்த நினைப்பிலேயே இருப்பதால்தான் ஒருமுறை அங்கு சென்று மீண்டும் இங்கு வரச்சொன்னேன்!
அது சரி நான் சொன்னதியே நீங்க ஏன் திருப்பிச்சொல்றீங்க??

kavitha
07-04-2004, 08:16 AM
ரவுசுன்னா அது நாரதர் தானோ!

இளசு அண்ணா தாராளமாக சினிமா துறைக்கு போகலாம்!
அவரின் விமர்சனங்களை படிப்பதற்கே மீண்டும் ஒருமுறை
அந்தப்பக்கத்தை புரட்டலாம். தம்பி, தங்கைகளை
ஊக்குவிப்பதில் வல்லவர்.

நண்பரின் பழைய நினைவுக்கவிதை அருமை!
இறுதியில் காய்ந்த கண்ணீர் ஓடிய கன்னத்தை காண முடிகிறது!



முன்னேறியது நகரம் மட்டும்தானம்மா -
பெருமூச்சுடன் மூடினேன் புத்தகத்தை

இக்பால்
07-04-2004, 01:56 PM
ஆம்... பூவின் நினைவு.

kavitha
08-04-2004, 04:00 AM
நம்ம மன்றத்து பூவின் நினைவா அண்ணா? அல்லது..........

இக்பால்
08-04-2004, 07:35 AM
பூ தம்பியின் நினைவுதான் தங்கை.

பரஞ்சோதி
08-04-2004, 03:45 PM
நண்பனின் கவிதை அருமை. நண்பனின் நெல்லையில் மட்டுமா இந்த நிலைமை.

பரஞ்சோதியின் ஊரிலும் இதே நிலை தான், அதே வாடிய பூ என் புத்தகத்திலும். நண்பன் சொல்லி விட்டார் கவிதையாக, நான் எப்படி சொல்லுவேன், அது என் மனத்துள்ளேயே சிறை பட்ட விசயம் அல்லவா.

அறிஞர்
16-02-2007, 08:05 PM
மலரும் நினைவுகளை நினைக்க தூண்டிய பூவின் கவிதை.. அருமை....

பழமையான எண்ணங்கள் என்றுமே மனதை விட்டு அகலாதது.

மனோஜ்
17-02-2007, 06:40 AM
அறிஞரே உங்கள் பழைய நினைவுகளை எங்களுக்கு புதிப்பிப்தற்கு நன்றி
கவிதையும் படித்தோம் பழைய மன்ற நண்பர்களையும் அறிந்து கொன்டேம் மிக்க நன்றி

ஓவியா
17-02-2007, 08:21 PM
பழைய நினைவுகள் எழிமையாய், பசுமையாய்.

அழகான சிந்தனயுடன் கவிதை அருமை.

ரசித்தேன்.

சிறந்த படைப்பாளியை பாராட்டுவதில் ஆனந்தமடைகிறேன்.

மதுரகன்
19-02-2007, 04:46 PM
அரசு மருத்துவமனைப் பயணத்தில்
பக்கத்திலிருக்கும் கண்தெரியாத
அம்மா சொல்கிறாள் -
நம்ம திருநெல்வேலி முன்னேறிச்சுடா.
முன்னேறியது நகரம் மட்டும்தானம்மா -
பெருமூச்சுடன் மூடினேன் புத்தகத்தை
நீ தந்த பூவும்
நம் நினைவுகள் போலவே
மெலிந்து கருத்துப் போய்
சருகாகியிருந்தது.


நிச்சயமாக சொல்கிறேன் என் இதயத்தை கனக்க வைத்துவிட்டது கவிதை..

வாழத்த என்னிடம் வகையில்லை..

ஆதவா
19-02-2007, 06:16 PM
பரணைக் கிளறிய பொழுது
ஒரு பழைய கணக்குப் புத்தகம்.
தூக்கியெறிந்த பொழுது
தன்னாலே திறந்து நின்றது
நீ தந்த மலரொன்றை
மறைத்து வைத்த பக்கம்.

அருமையான தொடக்கம் நண்பன்.. எளிமையானதும் கூட. காட்சிகள் கண்முன்னே விரியவேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட வரிகள் இவை.... பாராட்டுகிறேன்....

இருபது வருடம் கழிந்த பின்னும்
மணம் ஒரு நிமிடம்
மயங்க வைத்தது மனதை.
நாசியினாலும் காணமுடிந்தது -
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?

நாசியினால் நினைவுகள் காண்பது முற்றிலும் புதிய வரிகள்.. வயதான பொழுதிலும் கூட ஆரம்ப கால நினைவுகள் எழும் என்பதற்கு நிச்சயமான ஒரு உதாரணம்

நீயும் நானும் பயணித்த சாலைகள்
பயணற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும், காஷ்மீரையும்
இணைப்பதற்கு.

கொஞ்சம் சமூகக் கருத்துதான்.... ஒரு பாதையின் அழிவு நம்மால் கவனிக்கப் படாமல் போய்விடுகிறது... காதலர்களுக்கு சிறு இலையின் துளிர்ப்பும் கவனிப்புதான்....

நீ பூப்பறித்து தந்த தோட்டங்கள்
இன்று வாகனங்களுக்கு
பெட்ரோல் ஊற்றும் நிலையங்களாக
புன்முறுவலாக நிற்கிறது -
நீயும் நானும் வாகனங்களின்றி
எங்கெங்கோ நிற்கிறோம்.

அன்றைய உலகிலிருந்து இன்றைய உலகிற்கு உண்டான மாற்றங்கள்.. காதலியின் பாதம் பதித்த இடங்கள் பெட்ரோ நிலையங்களாவது காலத்தின் கட்டாயம்.. கடையிரு வரிகள் அருமை

நீ சிலாகித்து பரவசப்பட்ட
இயேசுவின் சிலையோ
மறைந்துவிட்டது -
பலமாடி வணிக வளாகத்தின் பின்னே.

ம்ம்ம்ம்ம்...... ஒரு எளிமையான வரிகளுக்கு எப்படி விளக்கமும் விமர்சனமும் தேவைப்படும்?

நீ குதூகலித்துப் பார்க்கும்
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் வழியே
பஸ்கள் பயணிப்பதில்லை இப்பொழுது -
மாற்றுப்பாதையில் வழுக்கிக் கொண்டு
விலகிப் போகிறது.
வருடம் முழுக்க
காய்ந்துபோன இலையற்ற
மரம் வெட்டப்பட்டுவிட்டது....

மெல்ல கவிதை சமூகத்தின் மாற்றத்தை காதலியின் வழியாகச் சொல்வதாகத் தெரிகிறது.. காலம் என்றுமே நிலையானது அல்ல.. ஓடிக்கொண்டிருக்கும் வினாடியை ஒரு வினாடிகூட திருப்ப முடியாதல்லவா.... நினைவுகளின் நினைவுகள் காலத்தின் மாற்றமாக பயணிக்கிறது.

அரசு மருத்துவமனைப் பயணத்தில்
பக்கத்திலிருக்கும் கண்தெரியாத
அம்மா சொல்கிறாள் -
நம்ம திருநெல்வேலி முன்னேறிச்சுடா.
முன்னேறியது நகரம் மட்டும்தானம்மா -
பெருமூச்சுடன் மூடினேன் புத்தகத்தை
நீ தந்த பூவும்
நம் நினைவுகள் போலவே
மெலிந்து கருத்துப் போய்
சருகாகியிருந்தது

கடைசி வரிகளில் ஒரு டச் இருப்பது அறிகிறேன்.. முந்திய வரிகளை முந்துமாறு எழுதப்பட்டு இருக்கிறது... மிக எளிமையாக ஒரு கவிதைக்கு உதாரணமாக எழுதப்பட்டு இருக்கிறது..

இது காதல் கவிதை அல்ல.. காலத்தின் மாற்றம்... அதை கருத்துப் போன பூவின் நினைவாக சொல்லி இருப்பதுவே அதிக சுவையாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்... உங்கள் புதிய கவிதைகளை நான் எதிர்பார்க்கிறேன்..

ஆதவா

leomohan
19-02-2007, 06:35 PM
அற்புதம் நண்பரே. மேலும் எழுதங்கள்.

ஓவியா
19-02-2007, 07:58 PM
ஆதவாவின் விமர்சனம் பொனில் பதித்த பவளம் போல், கவிதையின் சிறப்பை காட்டுகிறது

நன்றி ஆதவா

ஷீ-நிசி
20-02-2007, 03:29 AM
பழையவர்களின் கவிதைகளும், அதற்கு அன்றைய காலத்தின் பின்னூட்டங்களும்.. ஓஹோ!...

2003-ம் வருட வாக்கில் எழுதிய கவிதை...

இருபது வருடம் கழிந்த பின்னும்
மணம் ஒரு நிமிடம்
மயங்க வைத்தது மனதை.
நாசியினாலும் காணமுடிந்தது -
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?

படிப்பவரின் மனதை ஒரு நிமிடம் புரட்டிப்போடும் வரிகள் இவை.
மிக அழகாக உள்ளது..

ஓவியன்
21-02-2007, 12:45 PM
நீயும் நானும் பயணித்த சாலைகள்
பயணற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும், காஷ்மீரையும்
இணைப்பதற்கு.




யதார்தத்தினது முரண்பாடுகளைத் தெளிவாகச் தொட்டுச் செல்கின்றன உங்கள் வரிகள்!!!

பாராட்டுகள் நண்பரே!!!

ஓவியன்
28-11-2007, 06:25 AM
பரணைக் கிளறிப் பார்த்தால்
பழைய அழகிய
கவிதை இன்றும்
இளமையாய், இனிமையாய்....

ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 06:25 AM
ஒரு பூ மட்டும்தானே

செல்வா
19-12-2007, 07:01 AM
பரணைக் கிளறிய பொழுது

இருபது வருடம் கழிந்த பின்னும்
மணம் ஒரு நிமிடம்
மயங்க வைத்தது மனதை.
நாசியினாலும் காணமுடிந்தது -
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?

நீ பூப்பறித்து தந்த தோட்டங்கள்
இன்று வாகனங்களுக்கு
பெட்ரோல் ஊற்றும் நிலையங்களாக
புன்முறுவலாக நிற்கிறது -
நீயும் நானும் வாகனங்களின்றி
எங்கெங்கோ நிற்கிறோம்.

நம்ம திருநெல்வேலி முன்னேறிச்சுடா.
முன்னேறியது நகரம் மட்டும்தானம்மா



என்னைக் கவர்ந்த பகுதிகள் இவை..... முன் நினைவுகள் வரிசையில் மற்றுமொரு நினைவை விட்டு அகலாக் கவிதை...

ஆதி
19-12-2007, 09:40 AM
காய்ந்தப் பூவில்
காயாத நினைவுகள்..

வாழ்த்துக்கள் நண்பன்..


-ஆதி