PDA

View Full Version : வரமாய் வந்தவளே!!



poo
12-04-2004, 11:48 AM
அங்குமிங்குமாய்
அலைந்துகொண்டிருந்தென்னை
அடைத்துவைத்தாய்..
அடைகாத்த சுகத்தை அனுபவிக்கவைத்தாய்..

பாசப்போர்வைக்குள் சுருட்டிக்கொண்டு
உன் சுவாசத்தில் வாசம்பிடிக்கச்செய்து
உண்மை உறக்கத்தை வரவழைத்தாய்..

ப்ரியங்களை பரிமாற
மொழியேதுமில்லையென
உன் மௌன பாஷையினால் புரியவைத்தாய்..

சிரிப்பும்-அழுகையும்
எதிரும்-புதிருமல்லவென உறைக்கச்செய்தாய்..

ஸ்பரிசங்களை
சுவாசிக்க கற்றுக்கொடுத்தாய்...
பேதமில்லா நேசத்தை போதித்தாய்..

உன் புரியாத மொழிகளை
காற்றில் வடித்துவைக்கும்
கவிதைகளாய் கற்பனையில் சிலிர்க்கச்செய்தாய்..

அந்திநேர அமைதியில்...தென்றலின் தழுவலில்..
உன் கவிதைவரிகள் ஞாபகக்குளத்தில்
வளையங்களாய் வலம்வருவதையெண்ணி
வசந்தமே உன் பெயர் குழந்தை-யாவென
கூச்சலிட்டு......
கீச்சென.. என்னை கிண்டலடித்து
பறந்துபோகும் மாலைப்பறவைகளை
மனதினுள் ரசித்தபடி...

உன்னை மடிதனில் சுகமாய் படுக்கவைக்க...
உன் விரல்தனில் செல்லமாய் சொடுக்கெடுக்க...
உன் பாதங்களில் இதமாய் இதழ்பதிக்க...

இல்லம் விரைகிறேன்.. மீண்டும்..மீண்டும்..

வேதனைப்புயலில் சுழல்கையில்
உன் வெட்கப்புன்னகை வழியே
வேண்டிய வரத்தை அளித்த ஆண்டவனை
மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்..
புதையலேதும் வேண்டாம்.. இப்புன்னகைவிடுத்தென..
மீண்டும் ...மீண்டும்..

எனதருமை மகளே..
உனக்காகவே உயிர்வாழ்கிறேன்...

உன்னை ஈன்றவளும்
எனக்குள் புதைந்து இதுபோல்
புலம்புவதை புரிகிறாய்தானே?!!

முத்து
12-04-2004, 11:53 AM
பூ ...
அசத்தல் ... அருமை ..
யதார்த்தத்தில் , உணர்வுகளில் நனைந்து
வெளியே வரும் வார்த்தைகளின் வலிமை இதுதான் ...

இக்பால்
12-04-2004, 01:20 PM
இப்பவும் அலையலாம். ஆனால் ஒன்று.
அவரையும் தூக்கிக் கொண்டு. போங்கள்.
எல்லா இடமும் எடுத்துச் செல்லுங்கள்.
எல்லாவற்றையும் சொல்லித் தாருங்கள்.
கவிதைக்குப் பாராட்டுக்கள்.
-அன்புடன் அண்ணா.

Nanban
12-04-2004, 07:03 PM
ப்ரியங்களை பரிமாற
மொழியேதுமில்லையென
உன் மௌன பாஷையினால் புரியவைத்தாய்..
அருமையான வரிகள்......

கடைசி வரியில் கலங்கடித்து விட்டீர்கள்....

ஆனாலும், நீண்ட நெடிய இடைவெளிக்கு அப்புறம் வந்து கவிதை தந்தமைக்கு நன்றி.....

பாரதி
12-04-2004, 11:53 PM
வரம் பெற்ற, வரம் தந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சரமாய் கோர்த்திருக்கும் பூவிற்கு பாராட்டுக்கள்.

சேரன்கயல்
13-04-2004, 09:29 AM
உணர்வுகளை,உண்மைகளை அழகாய் பதியவைத்த என் இனிய பூ...
தொண்டை அடைத்துக்கொள்கிறது மறுபடி வாசித்தால்...
துடுப்பற்ற கலமாய் எங்கோ அலைந்துகொண்டிருக்கும் மனதில் எண்ணக் குவியலை வலைவீசி பிடிக்கும் அந்த பிஞ்சுப் புன்னகையில் ஒரு புது உலகம், புது ஒளி, புது நம்பிக்கை பிறக்கத்தான் செய்கிறது...
தந்தையாய் நின்று கண்கள் பனிக்கிறேன்...

மன்மதன்
13-04-2004, 12:41 PM
நிதர்சன உண்மையின் மறுபதிவு உங்கள் கவிதை.. அற்புதம்.

இளசு
13-04-2004, 09:30 PM
பாசச்சங்கிலியின் முன்னோக்கிய கணு
பலமான பிணைப்பு...
இயற்கையின் அமைப்பு..

படைத்த விதம் அருமை பூ

அப்பாவாகிட்ட ஒரு மகன் சொன்னது இது----

முன்பெல்லாம் தொலைபேசுவது
அம்மா பொழியும் பாசம் கேட்க
இப்போதோ
அவர்கள் பேத்தி புராணம் பாடக் கேட்க.